அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jan 6, 2014

ஈஸா நபி உயிருடன் இருந்தால்?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 333 இல் இறங்குமுகம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

மனிதன் பிறந்தது முதல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே செல்கிறான். ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குப் பின் திரும்பவும் தேய்ந்து கொண்டே வந்து பற்களை இழந்து நடையை இழந்து படுக்கையில் கிடக்கிறான். குழந்தை போன்ற நிலைக்கே வந்து நடக்க முடியாமல், பேச முடியாமல், சிறு குழந்தையைப் போன்று ஆகி விடுகிறான். இது தன இவ்வசனத்தின் (திருக்குர்ஆன் 36:68) கூறப்படுகிறது.

நம் விளக்கம்.

ஈஸா நபி (அலை) கடந்த 2000 ஆண்டுகளாக இறைவன் தன்னளவில் உயர்த்தி உடலோடு அங்கு இருக்கிறார் எனில்,

அவர் குறிப்பிட்ட கட்டத்திற்குப் பின் திரும்பவும் தேய்ந்து கொண்டே வந்து பற்களை இழந்து, நடையை இழந்து, படுக்கையில் இருக்கிறாரா? குழந்தை போன்ற நிலைக்கே வந்து நடக்க முடியாமல், பேச முடியாமல் ஒரு குழந்தை போன்று ஆகிவிடுவாரா?

அப்படி என்றால் மீண்டும் பூமிக்கு வந்து எப்படி சிலுவையை முறிக்கப்போகிறார்? உலகிலுள்ள பன்றிகளைக் கொல்லப் போகிறார்? தஜ்ஜாலைக் கொல்லப் போகிறார்? யாஜுஜ், மாஜுஜ் கூட்டத்தை ஒழிக்கப் போகிறார்? அவர்க்கு இறங்குமுகம் இல்லை, ஏறுமுகம் என்றால் கடந்த 2000 ஆண்டுகளில் எவ்வளவு உயரம், எவ்வளவு பருமன், எவ்வளவு எடை, எவ்வளவு ஆற்றல் கொண்டுள்ளார்! என்று கூற முடியுமா? அவ்வளவு உயரமாக, பருமனாக அவர் கீழே இறங்கி வரும் போது டமாஸ்கஸின் கிழக்கே உள்ள வெள்ளை மினாரா அவரைத் தாங்குமா? என்று கணித்து அதைப் புதுப்பித்துக் கட்டவேண்டும். அவர் எப்படி ஊரிலும், கடைவீதியிலும் நடப்பார் என்று ஒரு தனிப்பாதையை ஏற்பாடு செய்ய வேண்டும். அவர்க்குரிய உணவு, உடை போன்றவைகளை அளவிட்டு, ஏற்பாடு செய்ய வேண்டும். இறங்கு முகமும் இல்லை. ஏறுமுகம் இல்லை அவர் பழைய முகம்தான் என்றால் அது எப்படி? என்று தக்க ஆதாரத்துடன் விளக்க வேண்டும். போகட்டும். அல்லாஹ் எதற்காக இத்தனை ஆண்டுகளாக அவரை இப்படி ஓரிடத்தில் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்! இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு அந்நிலையிலேயே வைக்கப் போகிறான்? பி.ஜே யின் முன்னோர்கள் போய் விட்டார்கள். பி.ஜே யும் போகப் போகிறார். அவருடைய பேரன் பேத்தியாவது ஈஸா நபியைக் காண்பார்களா? கொள்ளுப் பேரன்களோ, எள்ளுப் பேரன்களோ காண்பார்களா?


இஸ்லாத்தில் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி, திருக்குரானைப் பின்பற்றி, முஸ்லிம் உம்மத்தில் பிறந்து வளர்ந்த ஒருவர் அல்லாஹ்வுக்கு கிடைக்கவில்லையா? அந்த ஈஸா நபி வந்து சிலுவையை முறிப்பார் என்றால், இஸ்லாம் மத நல்லிணக்கத்தை உருவாக்கும் மார்க்கமாகுமா? இஸ்லாம் ஒரு இனிய மார்க்கமாகுமா? அவர் கோடானு கோடி பன்றிகளைக் கொன்று குவிப்பார் என்றால், இஸ்லாம் ஜீவ காருன்யத்தைப் போதிக்கும் மார்க்கமாகுமா? பன்றிகளைக் கொல்வதற்கு ஒரு நபி வரவேண்டுமா? பன்றி இனத்தைப் படைத்து இத்தனை ஆண்டுகள் வாழவிட்ட இறைவன் மொத்தமாக அவற்றை ஏன் அழிக்க வேண்டும்? இஸ்லாம் கொலை வெறி கொண்டது என்ற தப்பான எண்ணம் பிறருக்கு ஏற்படாதா? 

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.