அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

May 2, 2014

கத்முன் நுபுவ்வத் – ஒரு விளக்கம் - 1


திருநபி மொழிகளின் அடிப்படையில் காதமியத்தைப்பற்றிய விளக்கம் 

இனிமேல் இறைதூதர்கள் எவரும் தோன்றமாட்டார்கள் என்பதுதான் இவர்களின் வாதம் ஆனால் இதனை நிரூபிப்பதற்கு திருக்குர்ஆனில் இருந்து சான்றுகளையும் விளக்கங்களையும் தருவதைவிட்டுவிட்டு இவர்கள் ஹதீத்களிடம் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். இவர்கள் குறிப்பிடும் ஹதீஸ்களைப் பார்க்கும்போது இந்த உம்மத்தில் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு பொய்நபித்துவ வாதிகளையும், தாஜ்ஜால்களையும் தவிர வேறுயாரும் தோன்ற மாட்டார் என்றும் இவ்வும்மத்தில் உண்மையான இறைத்தூதர்கள் தோன்றும் பாதை நிரந்தரமாக அடைக்கப்பட்டு பொய்வாதிகளுக்கான பாதை மட்டுமே திறந்துவிடப்பட்டிருக்கிறது என்ற பிரமை நமக்கு ஏற்படும். காதமிய்யத்தைப் பற்றி இப்படிப்பட்ட கருத்துக்கள்தான் மிகுந்த ஆரவாரத்துடன் கூறப்படுகிறது. இதற்காக நபி (ஸல்) அவர்களின் சில ஹதீஸ்கள் அதிகமான அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்படுகின்றன. அவற்றுள் ஒரு ஹதீஸ் இவ்வாறு வருகிறது.

“இந்தச் சமுதாயத்தில் முப்பது பொய்யர்கள் இருப்பார்கள்; அவர்களில் ஒவ்வொருவரும் தான் நபியென்று வாதிப்பார்கள். ஆனால் நான் காதமுன்நபியீன் ஆக இருக்கிறேன். எனக்குப் பிறகு நபியில்லை.”

இந்த ஹதீதுக்கு விளக்கம் கூறி இன்மேல் எந்தவிதமான நபியும் வருவதற்கான வாய்ப்பில்லை என இவர்கள் கூறுகின்றனர். உண்மையிலேயே எம்பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு வழியை அடைக்கிறார்கள் என்றால் அதனைத் திறப்பதற்கான அதிகாரம் எவருக்குமில்லை என்பதை நான் முற்றிலும் ஒப்புக் கொள்கிறேன். நாங்கள் இதைப்பற்றி “ஆமன்னா வஸதக்னா” ( நாங்கள் இதில் நம்பிக்கை கொண்டு உண்மைப்படுத்துகிறோம்) என்று கூறுகிறோம். எம்பெருமானார் (ஸல்) அவர்கள் அடைத்துள்ள ஒரு வாசலைத் திறக்கக்கூடிய ஒருவனை எந்தத் தாயும் பெறவில்லை என்பதை அஹ்மதிய்யா ஜமாத்தின் சார்பில் நான் ஆணித்தரமாகக் கூறிக்கொள்கிறேன். அதுபோன்றே நபி (ஸல்) அவர்கள் தமது கையால் திறந்து தந்திருக்கும் ஒரு வாசலை அடைப்பதற்கான அதிகாரமும் யாருக்கும் கிடையாது! நபி (ஸல்) அவர்கள் எதனை அடைத்திருக்கிரார்களோ அதனைத்திறக்கவோ, எதனை அவர்கள் திறந்து தந்திருக்கிறார்களோ அதனை அடைக்கவோ யாராலும் முடியாது. 

மேலே கூறப்பட்ட ஹதீதைக் கேட்டபின் வாக்களிக்கப்பட்ட மஸிஹைப் பற்றி அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை நாம் கவனிக்கவேண்டும். ஸஹீஹ் முஸ்லிம் (என்னும் ஹதீத்நூலின்) கிதாபுல் பித்தனில் திக்ருத் தஜ்ஜால் என்னும் அத்தியாயத்தில் மஸீஹிப்னு மர்யத்தின் வாக்களிக்கப்பட்ட மஸீஹின்-தோற்றத்தைப்பற்றிக் குறிப்பிடும்போது நபி பெருமானார் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள். 

ஈஸா நபியுல்லாஹ்வும் அவரது ஸஹாபாக்களும் (ரலி) முற்றுகையிடப்படுவார்கள் பின்னர் ஈஸா நபியுல்லாஹ்வும் அவரது ஸஹாபாக்களும் (ரலி) அல்லாஹ்வின் பக்கம் கவனம் செலுத்துவார்கள். 

இந்த நபிமொழியில் மஸீஹைப்பற்றி நான்குமுறை அவர் நபியுல்லாஹ்வாக இருப்பார் என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். அவர் பழைய நபியாக இருந்தார்; இனிமேல் ஸஹாபி எவரும் தோன்றமாட்டார் என்று கூறப்படுமாயின் மேற்கூறப்பட்ட ஹதீதில் அவருடைய சீடர்களை ஸஹாபாக்கள் என்றும், ‘ரலியல்லாஹு அன்ஹும்’ என்றும் ஏன் குறிப்பிடவேண்டும்? இது எம்பெருமானார் (ஸல்) அவர்களுக்குப் பிறகு வரப்போகும் ஒரு நிகழ்ச்சியைத்தான் குறிக்கிறது. 

ஆகவே இவ்வும்மத்தில் எத்தனை பொய்யர்களும் தாஜ்ஜால்களும் வேண்டுமானாலும் தோன்றட்டும்; 30 என்ன! 30 இலட்சம் பேர் வரட்டும். ஆனால் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் வாக்களிக்கப்பட்ட மஸீஹுக்கு வழங்கியிருக்கும் ‘நபியுல்லாஹ்’ என்ற பட்டத்தை எந்தச்சக்தியாலும் அவரிடமிருந்து பறிக்கமுடியாது. 

மேலே கூறப்பட்ட ஹதீதில் ஒருமுறை இருமுறையல்ல; நான்குமுறை வரவிருக்கும் மஸீஹைப்பற்றி அவர் நபியென்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள் உங்களுக்கு ஆற்றலிருந்தால் இந்தப்பட்டத்தை அவரிடமிருந்து பறிக்க முயற்சியுங்கள் உங்களால் இந்த வாசலை எப்படி அடைக்கமுடியும்? 

முப்பது தாஜ்ஜால்களைப்பற்றி, ஸஹீஹ் முஸ்லிமின் விளக்கவுரையான இக்மாலுல் இக்மால் என்னும் நூலில் பின்வருமாறு காணப்படுகிறது. 

“இந்த ஹதீதின் உண்மை உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. ஏனென்றால், நபி பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை தோன்றியுள்ள பொய் நுபுவ்வத் வாதிகளை எண்ணினால், இந்த எண்ணிக்கையை (அதாவது முப்பது) பூர்த்தியாகிவிட்டதை வரலாற்றைப் படிக்கின்றவர்கள் உணர முடியும். (இக்மாலுல் இக்மால் பக்கம் 7 பக்கம் 258)

அஹ்லே ஹதீத் பிரிவின் புகழ்ப் பெற்ற அறிஞரான நவாப் ஸித்தீக் ஹஸன்கான் ஸாஹிப் பின்வருமாறு எழுதுகிறார். 

இந்தச் சமுதாயத்தில் தோன்றும் தாஜ்ஜால்களைப்பற்றி நபிபெருமானார் (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்பு நிறைவேறி எண்ணிக்கை முழுமை பெற்றுவிட்டது. (ஹஜ்ஜுல் கராமா பக்கம் 239)

இதிலிருந்து இனி நுபுவ்வத் வாதம் செய்யும் தஜ்ஜால் (பொய்வாதி) எவனும் தோன்றமாட்டான் என்பது விளங்குகிறது ஏனென்றால் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் தோன்றும் காலம் வந்துவிட்டது; எதிர்பார்க்கப்பட்ட காலம் வந்திருக்கின்றது; பொய் நுபுவ்வத் வாதிகளின் காலம் முடிவடைந்துவிட்டது. இனி உண்மைவாதிதான் தோன்ற வேண்டும் என அஹ்லே ஹதீதின் தலைசிறந்த ஓர் அறிஞரே கூறியுள்ளார். 

முழுமைபெற்ற கட்டிடம்:

பொதுவாக நமது எதிரிகள் அடிக்கடி பின்வரும் ஹதீதை எடுத்துக்காட்டி, இந்த ஹதீதின்படி இவ்வும்மத்தில் எந்த ஒரு நபியும் தோன்றுவதற்கான வாய்ப்பில்லை என்று கூறி வருகின்றனர். 

‘ஹஸ்ரத் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கின்றார்கள். எம்பெருமானார் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். ‘எனக்கும் எனக்கு முன்னர் தோன்றிய நபிமார்களுக்கும் இடையிலுள்ள நிலைமை ஒரு கட்டிடத்திற்கொப்பானதாகும். அதன் அமைப்பு மிகவும் அழகுள்ளதாக இருக்கிறது. ஆனால் அதில் ஒரு செங்களுக்கான இடம் விடப்பட்டிருக்கிறது. மக்கள் இந்தக் கட்டிடத்தைச் சுற்றிப்பார்த்து அதன் அழகைக்கண்டு வியப்படைகின்றனர். ஒரு செங்களுக்கான இடம் ஏன் விட்டு வைக்கப்பட்டிருக்கிறதென மனதிற்குள் கேட்டுக்கொள்கின்றனர். விட்டு வைக்கப்பட்ட அந்த இடத்தை நிரப்புவதற்கான செங்கல்நான்தான். என்மூலம் அந்தக் கட்டிடம் முழுமை பெற்றுவிட்டது. இதன் காரணமாகத்தான் ரஸுல்மார்களின் காதம்மாக ஆக்கப்பட்டிருக்கிறேன். (புகாரி – கிதாபுல் மனாகிப்) 

இன்னொரு ரிவாயத்தில் (அறிவிப்பில்) நான் தான் அந்த செங்கல்; நான் காதமுன்நபியீனாக இருக்கிறேன்’ என்று பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது. 

இந்த ஹதீதை எடுத்துக்காட்டி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமே இறுதியாக வைக்கப்பட்ட செங்கல் என்று கூறியிருக்கிறார்கள். ஆகவே இனிமேல் எந்தவிதமான நபியும் தோன்றமாட்டார்கள் என்று தமது எதிரிகள் கூறுகின்றனர். 

ஸஹீஹ் புஹாரியின் விளக்கவுரையில் இந்த ஹதீதுக்கு விளக்கவுரையில் இந்த ஹதீதுக்கு விளக்கமளிக்கும்போது ஹஸ்ரத் அல்லாமா இப்னு ஹைஜர் அஸ்கலானி பின்வருமாறு கூறுகிறார்கள். 

இந்தக் கட்டிடம் முழுமை பெற்றிருக்கிறது என்பதன் பொருள் முஹம்மதிய ஷரியத் இதற்கு முன்னர் தோன்றிய எல்லா ஷரிஅத்துகளையும் விடப் பூரணமாகவும் முழுமை பெற்றதாகவும் இருக்கிறது என்பதாகும்! (பதஹுல்பாரி பாகம் 2, பக்கம் 380)

பெருமையோடும் அகங்காரத்தோடும் புஹாரியில் காணப்படும் ஹதீதை எடுத்துரைக்கும் இவர்கள் அதன் விளக்கவுரையில் கூறப்பட்டதை ஏன் மறைக்கிறார்கள்? அதனை ஏன் இவர்கள் மக்கள் முன் வைப்பதில்லை? 

பாகிஸ்தான் அரசுவெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படும் நான்கு முக்கிய அறிஞர்களுள் ஒருவரான அல்லாமா இப்னு குல்தூன் இந்த ஹதீஸைப் பற்றி விளக்கிக் கூறுவதாவது, 

“காதமுன் நபிய்யீனுக்கு விளக்கமாக (பெருமானார் (ஸல்) அவர்கள்) ஒரு கட்டிடத்தை நிறைவு செய்யும் ஒரு செங்கல் என மக்கள் கூறுகின்றனர். ஆனால் இதன் பொருள் முழுமையான நபித்துவம் பெற்றவர் என்பதாகும். (முகத்தம இப்னி குல்தூன் பக்கம் 27) 

இங்கு காலத்தால் இறுதியானவர் என்பதல்ல பொருள், முழுமை பெற்ற நபித்துவம் கொண்ட நபி வந்துவிட்டார் என்றுதான் பொருள். இதைவிட அதிகமாக இந்த ஹதீதுக்கு வேறு பொருள் இல்லை.

இன்னொரு ஹதீதின் அடிப்படையிலும் இவர்கள் எதிர்க்கிறார்கள். 

‘ஹஸரத் ஸதிப்னு வக்காஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு ரிவாயத் செய்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸரத் அலி (ரலி) அவர்களிடம் இவ்வாறு கூறினார்கள். ‘என்னிடம் உமக்கு உள்ள இடம் மூஸா நபி (அலை) இடம் ஹாரூன் நபி (அலை) க்குள்ள இடமாகும். ஆனால் எனக்குப் பிறகு நபி இல்லை. 

முஸ்னத் அஹ்மது பின் ஹன்பலின் ரிவாயத்தில் எனக்குப் பிறகு நீர் நபியாக இருக்கமாட்டீர்’ என வந்துள்ளது. (புஹாரி, முஸ்லிம் கிதாபுல்பளாயிஸ், முஸ்னது ஹன்பல்) 

இந்த ஹதீஸைப் பற்றிய விளக்கமாவது அண்ணலார் (ஸல்) அவர்கள் ஒரு போரில் கலந்து கொள்வதற்காகச் செல்லும் முன் ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களைத் தமக்குப் பகரமாக மதீனாவில் இமாமாக நியமித்தார்கள். அலி (ரலி) மிகச் சிறந்த போர் வீரராக இருந்தார்கள். எம்பெருமானார் (ஸல்) அவர்களோடு எல்லா ஜிஹாதுகளிலும் கலந்து கொண்டார்கள். பிற போர் வீரர்களைவிட அவர்களுக்கு உயரிய நிலை இருந்தது. அவர்களைப் பொறுத்தவரையில் இந்தப் போரில் பங்கு கொள்ளாமல் இருப்பது இரண்டுமடங்கு துக்கத்திற்கு காரணமாக இருந்தது. ஒன்று இந்தப் போரில் கலந்து கொள்ளமுடியவில்லையே என்ற வேதனை. இரண்டாவது பெருமானார் (ஸல்) அவர்கள் நம் மீது கொண்ட கோபமும் வெறுப்பும் கொண்ட காரணத்தினால்தான் தம்மை இவ்வாறு பிந்தங்கவைத்து சென்றார்கள் என மக்கள் கூறுவார்களே என்ற வேதனை. எனவே ஹஸ்ரத் அலி (ரலி) அவர்கள் மிகவும் வேதனையோடு அண்ணலார் (ஸல்) அவர்களிடம் சென்று, ‘இறைதூதர் அவர்களே! என்னை நீங்கள் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் தலைவனாக நியமித்து விட்டா செல்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். இதற்க்கு பதிலளிக்கும்போது எம்பெருமானார் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். அலியே நீர் ஏன் வேதனைப்படுகிறீர்? எமக்கும், உமக்கும் இடையேயுள்ள உறவு மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இடையிலுள்ள உறவைப்போன்றதாகும். ஹஸ்ரத் மூஸா (அலை) வெளியே (ஸினா மலைக்குச்) சென்ற போது, தமது பிரதிநிதியாக ஹாரூனை நியமித்து சென்றார்கள். எனக்கும் உமக்கும் இடையேயுள்ள உறவும் இப்படிப்பட்டதேயாகும். ஆனால் ஒரு வேறுபாடு. (ஹாரூன் (அலை) நபியாக இருந்தார்) எனக்குப் பிறகு – அதாவது நான் வெளியே சென்றிருக்கும் காலத்தில் நீர் நபியாக இருக்கமாட்டீர். 

இதுதான் மேலே கூறப்பட்ட ஹதீஸின் விளக்கமாகும். 

ஆனால் இன்றைய ஆலிம்கள், இந்த ஹதீதில் வரும் பஹ்தி (எனக்குப் பிறகு) என்ற சொல்லுக்கு ‘எனக்குப்பிறகு என்றென்றைக்கும்’ என்று பொருள் கொள்கின்றனர். 

ஆனால் இன்றைய முஸ்லிம்கள் அனைவரும் மதித்துப் போற்றிவரும் ஹஸ்ரத் ஷா வலியுல்லாஹ் முஹத்தஸ் தெஹ்லவி இந்த ஹதீஸைப் பற்றி என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம். பாகிஸ்தான் அரசாங்கள் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் இவருடைய பெயரும் மிகச் சிறந்த இஸ்லாமிய சிந்தனையாளர்களில் ஒருவராகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர் கூறுவதாவது. 

“இந்த ஹதீத் ‘தபூக்’ யுத்தத்தின்போது எம்பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஹஸ்ரத் அலியைத் தமது பிரதிநிதியாக – இமாமாக நியமித்ததைக் குறிப்பிடுகின்ற ஒன்றாகும். ஹஸ்ரத் அலியை ஹாரூனுடன் ஒப்பிட்டது. ஹஸ்ரத் மூஸாநபி (அலை) அவர்கள் ஸினாய் மலைக்குச் சென்றபோது அவரைத் தமது பிரதிமளைக்குச் சென்றபோது அவரைத் தமது பிரதிநிதியாக நியமித்ததைக் குறிப்பிடுவதற்காகும். இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள ‘பஹ்தி’ (எனக்குப் பிறகு) என்பதன் பொருள், ‘ஹைரீ’ (என்னைத்தவிர) என்பதாகும். அது காலத்தைக் குறிப்பதல்ல உதாரணமாக, ‘பமன் யஹ்தீஹி மின்பஹ்தில்லாஹி’ என்ற திருவசனத்திலுள்ள ‘பஹ்தில்லாஹ்’ என்பதன் பொருள். ‘அல்லாஹ்வைத்தவிர’ இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள பஹ்தி என்ற சொல் காலத்தைக் குறிப்பதல்ல என்பதற்கு, ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களுக்குப் பிறகு ஹஸ்ரத் ஹாரூன் (அலை) உயிர் வாழவில்லை என்ற சான்றே போதுமானதாகும். (குர்ரத்துல் ஐனைனி) 

ஹஸ்ரத் ஷாவலியுல்லாஹ் ‘பஹ்த’ என்பதற்குத் திருக்குரானிலிருந்தே விளக்கம் அளித்திருக்கிறார்கள். அதாவது, ‘மின்பஹ்தில்லாஹி’ என்பதற்கு, ‘அல்லாஹ்வுக்குப் பிறகு’ என்று பொருள் கொள்ளமுடியாது; ‘அல்லாஹ்வைத் தவிர’ என்று மட்டும்தான் பொருள் கொள்ளமுடியும். இவ்வாறு அல்லாஹ் ‘பஹ்த’ என்பதற்குத் திருக்குர்ஆனில் ‘தவிர’ என்று பொருள் கொடுத்திருக்கிறான். 

மேலும் ஹஸ்ரத் ஷா அவர்கள் மேற்கூறப்பட்ட ஹதீஸை மிகவும் கவனமாகவும் உன்னிப்பாகவும் அலசி ஆராய்ந்து பஹ்தி என்ற சொல்லுக்கு விளக்கமளித்திருக்கிறார்கள். அதாவது இங்கு கூறப்பட்ட ‘பஹ்தி’ என்ற சொல் காலத்தைக் குறிக்கக் கூடியதல்ல என்பதற்கு ஆதாரமாக ஹஸ்ரத் மூஸாவுக்குப்பிறகு ஹஸ்ரத் ஹாரூன் உயிர் வாழவில்லை என்பதைச் சுட்டிக் காட்டி ஹஸ்ரத் அலியைப் பொருத்தவரையில் ‘பஹ்தி’ என்ற சொல் காலத்தைக் குறிப்பதல்ல என்று எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். அதாவது ‘லா நபிய்யபஹ்தி’ என்ற ஹதீதில் கூறப்பட்டுள்ள ‘பஹ்தி’ என்ற சொல் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் (போரிலிருந்து) திரும்பிவருவது வரைக்கும் உள்ளதாகும்; என்றென்றைக்கும் உள்ளதல்ல. மாறாக ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்குமுள்ளதாகும் என்று தெரிகிறது. 

ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களைப்பற்றியுள்ள ஒரு நபிமொழியும் கவனத்திற்குரியதாகும். 

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அருளியதாக ஹஸ்ரத் அக்பா பின் ஆமிர் அவர்கள் தெரிவிக்கிறார்கள். “எனக்கு பிறகு ஒரு நபியின் வருகை தேவைப்படுமாயின், ஹஸ்ரத் உமர் நபியாவார்” இமாம் திர்மிதி இந்த ஹதீதைக் குறிப்பிட்டு ‘ஹாதா ஹதீதுன் ஹஸனுன் கரிபுன்’ என்று எழுத்கிறார் அதாவது இந்த ஹதீது ‘கரீப்’ ஹதீதாக இருக்கிறது. ‘கரீப்’ ஹதீத் என்றால் ஒரேயொரு ராவி (அறிவிப்பாளர்) மட்டுமே கொண்ட ஹதீத் என்று பொருள். இந்த ஹதீதை அறிவித்த ஒரே ஓர் அறிவிப்பாளர் மிஷ்ரா ஹிப்னு ஹாஆன் ஆவார். இவர் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றியும், ஹதீதுகளைப் பற்றி ஆய்வு செய்வோர் இவரைப்பற்றி என்ன கூறுகின்றனர் என்பதைப்பற்றியும் ‘தஹ்தீபுத்தஹ்தீப்’ என்னும் ஆராய்ச்சி நூலில் இவ்வாறு காணப்படுகிறது. 

மிஷ்ர ஹிப்னு ஹாஆன் ஒரு பலவீனமான அறிவிப்பாளர் என்று இப்னுஹையான் கூறுகிறார். ஆகவே அவரைப் பின்பற்றக் கூடாதென்றும் அவர் கூறுகிறார். இப்னுதாவூதும் இதே கருத்தைக் கொண்டிருப்பவர் என்பதுமட்டுமல்லாமல் அவரைக் கடுமையாக கண்டிக்கவும் செய்கிறார். இந்த அறிவிப்பாளர் ஹஸ்ரத் அப்துல்லாஹிப்னு ஸுபைரை முற்றுகையிட்ட ஹஜ்ஜாஜின் படையைச் சார்ந்தவராவார் இந்தப்படையினர் கஹ்பதுல்லாஹ்வை நோக்கிக் கல்லெறிந்தனர். 

மேலே கூறப்பட்ட ஹதீத் வேறுவிதமாகவும் ரிவாயத் செய்யப்பட்டிருக்கிறது. 

‘நான் (நபியாகத்) தோன்றவில்லை என்றால் உமரே! நீர் தோன்றியிருப்பீர்’ (மிர்காத் ஷரஹ்மிஷ்காத் பாகம் 1 பக்கம் 539) 

இதே போன்று இன்னொரு ரிவாயத்தில் ‘உங்களிடம் நான் தொன்றவில்லை என்றால் நிச்சயமாக உமர் உங்களிடம் தோன்றியிருப்பார்.’ (குனூஸுல் ஹக்காயிக் பக்கம் 103) 

என வந்துள்ளது. ஏனென்றால் ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களிடம் நபியாவதற்கு அனைத்துத் தகுதிகளும் இருந்தன, ஆகவே இங்கும் கூறப்படும் ‘பஹ்தி’ என்ற சொல்லுக்கு ‘ஹைரி’ (என்னைத்தவிர, எனக்குப்பதிலாக) என்ற பொருள்தான் கிடைக்கிறது.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.