அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Showing posts with label அந் நஜாத். Show all posts
Showing posts with label அந் நஜாத். Show all posts

Jul 25, 2014

அந்நஜாத்தின் புரோகிதப் புரட்டு. - 2


இறை தூதர்களில் ஒருவரான ஹஸ்ரத் ஈசா நபி (அலை) அவர்களை அந்-நஜாத் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் ஓய்வு பெற்ற ஒரு மாவட்ட ஆட்சியருக்கு ஒப்பிட்டு (நஜாத் மே 2011 பக்கம் 30) எழுதிய அவலத்தை கண்டித்து அப்துல் ஹமீது காதிர் என்பவர் எழுதிய விமர்சனத்தை அந்நஜாத் ஆகஸ்டு 2011 பக்கம் 20 இல் படித்திருப்பீர்கள். 

வழிகேடர்களின் கொள்கை என திருக்குர்ஆன் வருணித்துக் கூறும் இறுதி நபிக் கொள்கையை நிரூபித்துக் காட்ட திராணியற்ற நிலையில், அந்தப் புரோகிதக் கொள்கையை (40:35) நியாயப்படுத்துவதற்காக, வருகின்ற ஈஸா நபியும் நபிப்பதவியை இழந்து விட்டுதான் வந்து நிற்பார் என்று நாக்கூசாமல் கூறுகின்ற நஜாத் பிரிவினரின் கொள்கை எவ்வளவு வழி கேடானது என்பதை முஸ்லிம்களில் பலர் புரிந்து கொண்டே வருகின்றனர் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். மௌலவி புரோகிதர்களைப் புறக்கணிக்காதவரை முஸ்லிம்களுக்கு எழுச்சியில்லை என மார்தட்டிப் பேசும் நஜாத் பிரிவினரும் ஈஸா நபி (அலை) அவர்கள் விஷயத்தில் மௌலவி புரோகிதர்களைத் தான் பின் பற்றுகின்றார்கள் என்பதை பெரும்பான்மையான முஸ்லிம்கள் தற்போது உணர்ந்து வருகின்றனர். எனவே வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஆகவும், மஹ்தி ஆகவும் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் கூற்று நிறைவேறும் நாள் நெருங்கிவிட்டது. அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

“இன்றிலிருந்து 300 ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்னாலேயே ஈஸா நபியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்களாகட்டும், கிறிஸ்தவர்களாகட்டும் அவர்கள் தமது இந்தப் பொய்யான கொள்கையை கைவிட்டு விடுவார்கள்.” (ரூஹானி கஸாயீன் 20 தொகுதி பக்கம் 67) 

முஸ்லிம்களில் – அதுவும் அபூ அப்தில்லாஹ்வின் ஒப்புதல் வாக்கு மூலப்படி ஒரு காலத்தில் அந்நஜாத் பிரிவில் ஒருத்தராக இருந்த ஒருவராகிய ( நஜாத் ஆகஸ்டு 2011 பக்கம் 21 பார்க்க) அப்துல் ஹமீது காதிர் போன்றோரும். ‘இறை தூதர் ஈஸா நபி (அலை) உயிருடன் உயர்த்தப்படவில்லை: யுக முடிவில் அவர் மீண்டும் இவ்வுலகிற்கு வரமாட்டார். அதற்க்கு குர்ஆன் ஆதாரம் இல்லை..... கிறிஸ்தவர்கள் ஜீஸசை கடவுள் என உயத்துதவற்கு இந்த அபத்தமான கதையை சந்தைப் படுத்தினார்கள் (பார்க்க அந்நஜாத் ஆகஸ்டு 11 பக்கம் 20) என்ற அளவிற்கு புரிந்து கொண்டார்கள் என்றால் இது ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் அன்று சொன்ன வார்த்தை நிறைவேறிவிட்டது என்பதையே நிரூபித்துக் காட்டி விட்டது!

அது மட்டுமல்லாது, அப்துல் ஹமீது காதிர் என்பவர், இஸ்லாத்தில் மிக அதிகமாக போற்றத்தக்க இறை தூதர்களில் ஒருவரான ஈஸா நபி (அலை) அவர்களை, அபூ அப்தில்லாஹ் ஓய்வு பெற்ற ஒரு மாவட்ட ஆட்சியருக்கு ஒப்பிட்டது (பார்க்க அந்நஜாத் மே 2011 பக்கம் 30) அவரது பகுத்தறிவில்லாத சிந்தனைக்கு இன்னுமொரு ஆதாரமாகும் எனவும் அந்நஜாத்தில் விமர்சித்து எழுதியிருப்பது அபூ அப்தில்லாஹ் பாணியில் சொல்லப்போனால், நெற்றிப் பொட்டில் ஓங்கி அறைந்துவிட்டது போல் இருக்கிறதே என்பதையும் நடுநிலையில் சிந்திப்பவர்கள் உணர்ந்துகொண்டனர். அல்ஹ்மதுலில்லாஹ். 

இதற்குப் பதிலளிக்க திராணியற்ற அபூ அப்தில்லாஹ், தமது சுய விளக்கத்தில் ஒரு காலத்தில் ஒரு மாவட்டத்திற்கு கலெக்டர் ஆகப் பதவி வகித்தவர், ஓய்வு பெற்ற பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் அம்மாவட்டத்திற்கு வரும் போது கலெக்டர் என்று சொல்லலாம் எனச் சப்பைக் கட்டு கூறியிருக்கிறார். (அந்நஜாத் ஆகஸ்டு 2011 பக்கம் 32) 

பிற்காலத்தில் தோன்றும் ஈசா (அலை) அவர்களைப் பற்றி ஈசா நபியுல்லாஹ் (அல்லாஹ்வின் நபியாகிய ஈசா) என்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நான்கு முறை கூறியதாக சஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளதை நாம் எடுத்து வைத்திருக்கிறோம். 

ஆனால் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் இந்த பத்வாவை (மார்க்க தீர்ப்பை) ஏற்றுக் கொள்வதற்கு அபூ அப்தில்லாஹ் தயாரில்லை. மாறாக, அந்தப் பதவி ஒரு ஓய்வு பெற்ற முன்னாள் பதவியைப் போன்றதுதான் என்று ஒரு சுய விளக்கத்தைக் கூறினார். ஹதீஸில் இல்லாத இந்தச் சொந்தக் கைச் சரக்கை அபூ அப்தில்லாஹ் மற்றும் அவரை சார்ந்தோர் கைவிடாத வரை அவர்களும் புரோகித மௌலவிகளைச் சேர்ந்தவராகவே இருப்பார். இந்த வகையில் ‘மௌலவி புரோகிதர்கள் சட்ட விரோதமாக கொல்லைப் புற இடுக்கு வழியாக திருட்டுத்தனமாக புகுந்து கொண்ட திருடனினும் கேடு கெட்ட திருடர்கள்’ (பார்க்க: அந்நஜாத் ஆகஸ்டு 2011 பக்கம் 30) என்று கடுமையாக விமர்சித்து எழுதும் அதே கூட்டத்தில்தான் இவர்களும் இருக்கின்றனர் என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது. 

‘சுய கருத்தை, சுய விளக்கத்தை நாம் கொடுத்தால், அது கால் காசும் பெறாது: அதை அப்பட்டமான குப்பை தொட்டியில் எறியவேண்டியதுதான். (அந்நஜாத் ஆகஸ்டு 2011 பக்கம் 29 பார்க்க) அன்று அபூ அப்தில்லாஹ்வின் கூற்றுப்படியே முன்னால் நபி, ரிடையர்டு நபி போன்ற சுயவிளக்கத்தை குப்பைத் தொட்டியில் எறிவதுதான் ஹஸ்ரத் காத்தமுன்னபியீன் (ஸல்) அவர்கள் மீது பற்று கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டிய வேலையாகும் என்பதை நஜாத் பிரிவினர்களுக்கு நாம் நினைவூட்டிக் கொள்கிறோம். 

அடுத்து தவப்பீ என்ற சொல் திருக்குர்ஆனில் ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களைப் பற்றி இரண்டு இடங்களிலும் (3:56, 5:118) இவை அல்லாத இடங்களிலும் வந்திருப்பதையும் அதில் எந்தவோர் இடத்திலும் உடலோடு தூக்குதல் என்ற பொருள் இருப்பதாக நிரூபிக்கவே முடியாது என்பதையும் நாம் ஜூன் 2011 இல் விளக்கியிருந்தோம். இதே சொல் நபிமார்களில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்காக 3 இடங்களில் (10:47, 13:41, 40:78) ஹஸ்ரத் யூசுப் நபி (அலை) அவர்களுக்காக ஓரிடத்திலும் (12:102) அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதையும் அங்கெல்லாம் எங்கேயுமே உடலோடு உயர்த்துதல் என்ற பொருள் வரவே இல்லை; அந்த இடங்களிலெல்லாம் நஜாத் பிரிவினர்கூட உடலுடன் உயர்த்துதல் என்ற பொருளைத் தரவில்லை. நபி மொழிகளிலும் தவப்பீ என்ற இந்தச் சொல் உடலுடன் உயர்த்துதல் என்ற நஜாத் பிரிவின் பொருளில் எங்கேயும் வரவில்லை என்பது மட்டுமல்லாது, நாம் கொடுக்கின்ற பொருளாகிய மரணத்தைக் கொடுத்தல் என்ற பொருளில்தான் வந்துள்ளது என்பதையும் நாம் எடுத்து வைத்திருந்தோம். 

3:56 இல் வந்துள்ள முதவப்பீக்க என்பதற்கு முமீத்துக (உமக்கு மௌத்தைத் தருவேன்) என்ற பொருளையே ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கொடுத்திருப்பதையும் (புகாரி தமிழாக்கம் பாகம் 5 பக்கம் 273 காண்க) ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும் தவப்பைத்தனி (5:117) என்பதற்கு நீ எனக்கு மரணத்தைத் தந்தபோது என்ற பொருளிலேயே பயன்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். (புகாரி, கிதாபுத் தப்ஸீர் தப்சீரில் 5:118 காண்க) நாம் விளக்கி எழுதியிருந்தோம். அவையெல்லாம் நஜாத் பிரிவினரின் நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் உரைத்ததனால்தான் அவற்றிக்கு மறுப்பு ஏதும் எழுதத் துணிவில்லாது போயிற்று!

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும், ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கொடுத்திருக்கும் பொருளை எந்த முஸ்லிமாலும் மறுத்துக் கூற முடியாது. அதிலும் நஜாத் பிரிவினர் மறுத்துக் கூறினால். அல்ஹதீஸ் உங்களுக்கு விளங்காது; நாங்களே விளக்குகிறோம் என்று கூறும் மௌலவிகள் நபி (ஸல்) அவர்களை விட நாங்களே விளக்கும் ஆற்றல் மிக்கவர்கள் என அகந்தை பேசுபவர்களே!’ என அந்நஜாத் எழுதிவரும் குற்றச்சாட்டின் கீழ், தாமே வந்துவிடுவார். 

தவப்பா என்பதற்கு மரணிக்கச் செய்தல் என காதியானிகள் பொருள் கொடுப்பது தவறானது என்று அபூ அப்தில்லாஹ் குறிப்பிட்டுள்ளார் என்றால் எவ்வளவு பேதமைத்தனமானது! நம் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் இது காதியானிகள் கொடுத்த பொருளா? அல்லது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கொடுத்த பொருளா என்பதைக் கூட பிரித்தறியும் பக்குவத்தை இழந்துவிட்டாரா அபூ அப்தில்லாஹ்? கபூரூர் ரஹீமாகிய அல்லாஹ்தான் இவரை மன்னிக்க வேண்டும்!

உண்மையைத் தேடுபவர்களுக்கு நாம் மேலும் பல சான்றுகளைத் தருகிறோம்: 

தவப்பீ என்ற சொல் பொதுவான சொல் வழக்கிலும் மரணத்தைக் கொடுத்தல் என்ற பொருளிலேயே பயன் படுத்தப்படுகிறது. உதாரணமாக, ஜனாஸா துஆவில், ‘வமன் தவப்பைத்தஹு மின்ன பதவப்பாஹு அலல் ஈமான்’ (எங்களில் எவருக்கு நீ மரணத்தைக் கொடுக்கின்றாயோ அவரை நீ ஈமானில் மரணிக்கச் செய்வாயாக) 

ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்; பலம்மா தவப்பிய ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். (பொருள்: ஹஸ்ரத் ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் மரணமடைந்த போது....... (முஹ்தா இமாம் மாலிக் தொகுதி 1 பக்கம் 121) 

ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் கேட்டார்கள்; யாபுனய்யத்து அய்யு யவ்மின் துவப்பியா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (பொருள்: என் அருமை மகளே! ஹஸ்ரத் ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் எந்த நாளில் மரணித்தார்கள்? (முஸ்னத் அஹ்மது பின் ஹம்பல் தொழுதி 6 பக்கம் 118) 

அல்லாமா ஸம்ஹஷ்ரீ கூறுகிறார்கள்: முதவப்பீக என்பதன் பொருள், இயற்கை மரணத்தை தருவேன் என்பதாகும்.” ( தப்ஸீர் கஷ்ஷாப் தொகுதி 1 பக்கம் 306) 

அல்லதீன யதவப்பாஹும் அய்யமூதூன வ யுக் பழு அர்வாஹுஹும். பொருள்: உங்களில் தவப்பா ஆகின்றவர்கள் – அதாவது மரணிக்கின்றவர்கள், அவர்களின் ரூஹ் கைப்பற்றப்படுகின்றது. (ரூஹுல் பயான் தொகுதி 1 பக்கம் 248) 

அல்லாஹ் எழுவாயாகவும் உயிருள்ள ஒன்று செயப்படுபொருளாகவும் இருக்கின்றபோது தவப்பி என்ற சொல் பயனிலையாக வந்தால் அதற்கு ரூஹை கைப்பற்றுதல் என்ற பொருளை தவிர உடலைக் கைப்பற்றுதல் என்றோ ஒரு போதும் பொருள் வராது. அவ்வாறு திருக்குர்ஆனிலிருந்தோ ஹதீஸிலிருந்தோ எந்தச் சான்றையும் காட்ட இயலாது என்ற சவாலை மீண்டும் நாம் நினைவு படுத்துகிறோம். 

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் மஹ்தியாகத் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் இன்னும் அழுத்தமாக இவ்வாறு கூறுகிறார்கள்: 

“ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நபித்தோழர்களும், ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும் தவப்பி என்ற இந்த சொல்லை உயிருள்ள ஒன்றிக்காக பயன்படுத்தும் போது எந்தெந்த பொருள்களில் பயன்படுத்தி வந்தனர்? இந்தச் சொல் அந்த நேரத்தில் அன்றாட பழக்க வழக்கங்களில் பல பொருள்களில் பயன்படுத்தப்பட்டு வந்ததா? அல்லது ஆன்மாவை கைப்பற்றுதல், மரணம் என்ற ஒரே பொருளில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்ததா என்பதை தெரிந்துகொள்வதற்காக இந்த எளியவன் நபிமொழிகளின் பக்கம் திரும்பினேன். இந்த ஆய்வுக்காக எனக்கு அதிகமாக உழைக்க வேண்டியது ஏற்பட்டது. சஹீஹ் புகாரி, சஹீஹ் முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, அபூதாவூது, நஸாயீ, தாரமீ, முக்தா, ஷரகுஹுல் ஸுன்னா ஆகிய எல்லா ஹதீஸ் நூல்களையும் புரட்டிப் பார்த்தபோது எனக்கு தெரிய வந்தது என்னவென்றால், மிஷ்காத்தை சேர்த்து இந்த எல்லா ஹதீஸ் நூல்களிலும் 346 தடவை பல்வேறு இடங்களில் தவப்பி என்ற இந்தச் சொல் வந்துள்ளது. நான் கணக்கிட்டுப் பார்த்ததில் சில தவப்பி என்ற சொற்கள் விடுபட்டும் இருக்கலாம். ஆயினும் படிப்பதிலும், கண்ணில் படுவதிலும் என ஒரு சொல்லும் வெளியில் இல்லை. மேலும் தவப்பி என்ற அந்த சொற்கள் எந்த அளவுக்கு இந்த (ஹதீஸ்) நூல்களில் வந்துள்ளனவோ அவை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து வெளிப்பட்டவையாக இருந்தாலும் சரி, அல்லது எந்தவொரு நபித்தோழரின் வாயிலிருந்து வெளிப்பட்டவையாக இருந்தாலும் சரி அந்த எல்லா இடங்களிலும் அந்த சொற்கள் மௌத் (மரணம்) மற்றும் ரூஹைக் கைப்பற்றுதல் என்ற பொருளைத் தவிர வேறு எந்த பொருளிலும் வரவில்லை.......எனவே வழிவழியாகக் கையாளப்பட்டு வரும் இதனை மறுக்கின்றவர், மரணம் மற்றும் ரூஹைக் கைப்பற்றுதல் என்ற பொருள் அல்லாத வேறு ஒரு பொருளில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து வெளிவந்துள்ளதாக நிரூபித்துக் காட்டுவது அவர் மீது பொறுப்பு ஆகும்.” (இஸாலேயே அவ்ஹாம் ரூஹானி கஸாயின் தொகுதி 3 பக்கம் 584) 

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் இந்தச் சவாலை இன்று வரை எந்த அல்லாமாவும், முப்தியும், மௌலவியும் நிரூபித்துக் காட்ட முன் வரவில்லை. மழைக்காக மத்ரஸாவையும் நாம் நெருங்கியதில்லைதான் என ஒப்புதல்வாக்குமூலம் கொடுத்த அபூ அப்தில்லாஹ்வாலும் இந்த சவாலை ஏற்க இயலவில்லை என்பதை புரிந்து கொண்டனர். 

Read more »

Jul 3, 2014

நஜாத் ஆசிரியரின் கேள்வி.


ஈஸா (அலை) அவர்கள் 120 வயது வரை வாழ்ந்ததாக கூறுகிறீர்கள். அவரது காலத்திலேயே பவுல் என்பவன் கிறிஸ்தவ உலகில் திரியேகத்துவத்தை உண்டாக்கியதாகக் கூறப்படுகிறது. இவற்றைப் பற்றி ஈஸா (அலை) அவர்களுக்குத் தெரியாமல் போனதா? திரியேகத்துவக் கொள்கை ஆரம்பமாகும் போது ஈஸா (அலை) அவர்கள் எங்கிருந்தார்கள்? (அபூ அப்தில்லாஹ் – கிறிஸ்டியானி நகரம் 

நம் பதில்: 

ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் 120 வயது வரை வாழ்ந்ததாக அஹ்மதிகள் கூறவில்லை. ‘நிச்சயமாக ஈசப்னு மர்யம் 120 வது வரை வாழ்ந்தார்கள்’ என்று ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஹாகிம்; ஹஜ்ஜுல் கிராமா பக்கம் 428; மவாஹிபுல் லதுன்யா பாகம் 1 பக்கம் 42; பதுஹுல் பயான் அடிக்குறிப்பு தொகுதி 2, பக்கம் 246 ஆகியவை காண்க) 

திருக்குர்ஆன் வசனத்திற்கு இணக்கமான இக்கூற்றை அஹ்மதிகள் ஏற்றுக் கொள்கிறார்கள். இதனை ஏற்றுக் கொள்வதில் திருக்குர்ஆனின் எந்த வசனமும் தடையாக இல்லை. 

‘நீ எனக்கு கட்டளையிட்டபடி என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என்பதையே நான் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களுடன் இருந்த காலம் வரை, அவர்களுக்கு நான் சாட்சியாக இருந்தேன். ஆனால் நீ எனக்கு மரணத்தைத் தந்த பின்னர் நீயே அவர்களை கண்காணித்தவனாக இருந்தாய். மேலும் நீயே எல்லாவற்றிற்கும் சாட்சியாளனாக இருக்கிறாய். என்று ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களின் வாக்குமூலம் திருக்குர்ஆனில் (5:118 இல்) உள்ளது. 

இங்கு ‘நான் அவர்களுடன் இருந்த காலம் வரை.’ என்ற வார்த்தை கவனிக்கத்ததக்கது. ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் கிறிஸ்தவர்களுடன் இருக்கும் காலத்தில் அவர்களிடம் ‘ஷிர்க்’ உருவாகவில்லை என்பதையும், கிறிஸ்தவர்களிடம் ‘ஷிர்க்’ உருவான காலத்தில் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் அந்தக் கிறிஸ்தவக் கூட்டத்தில் இருந்ததில்லை என்பதையும் இனி இந்த வாக்குமூலம் கொடுக்கின்ற மறுமை நாள்வரை இணை வைக்கும் அவர்களை அவர் சந்தித்ததில்லை என்பதையும் இந்த திருக்குர்ஆன் வசனம் தெளிவாக உணர்த்துகிறது. 

திருக்குர்ஆனின் இந்தத் தெளிவான தகவலுக்குப் பிறகு, பவுல் அவரது காலத்திலேயே திரித்துவத்தை உண்டாக்கியதாகக் கூறப்படும் கூற்றை நம்மால் ஏற்க முடியாது. அப்படியே ஏற்றுக் கொண்டாலும். நான் ‘அவர்களுடன்’ இருந்த காலம் வரை, அவர்களிடத்தில் இணைவைத்தல் உருவாகவில்லை. என்ற கருத்தைத் தெரிவிக்கும் திருக்குர்ஆனின்மேற்கண்ட கூற்றுக்கு முரண்படாத வகையில் நாம் பொருள் கொள்ளவேண்டும். 

அதாவது ஹஸ்ரத் ஈஸா(அலை) எந்த மக்கள் மத்தியில் இருந்து வந்தார்களோ, அவர்களில் எவரும் அவரது காலத்தில் இணை வைக்கவில்லை. அதற்கு ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களே சாட்சியாக இருந்தார்கள். ஆனால் அவர்களை தம் மற்ற கோத்திரத்தாரையும் தேடித் தூதுச் செய்தியை எட்ட வைப்பதற்காக வேறு நாடுகளுக்கு வெகுதூரம் சென்றுவிட்ட பிறகு அன்னாரைவிட்டு தொலைவிலிருந்த மற்ற மக்கள் சீர்கெட்டு போயிருக்கலாம். அவ்வாறு சீர்கெட்டு போனது பற்றி ஈஸா(அலை) அவர்களுக்கு தம் மரணம்வரை தெரியாமலிருந்திருக்கலாம். மேலும் அன்னார், அவர்களுடன் இல்லாதபோது தடம்புரண்டு போன அந்த மக்களை அவர் மறுமைநாள் வரை இனி சந்திக்கப் போவதில்லை என்ற நுட்பமான கருத்தைத்தான் மேற்காணும் இறைவசனம் நமக்கு அறிவுறுத்துகிறது. 

எனவே ஹஸ்ரத், ஈஸா(அலை) அவர்கள் உயிருடன் இன்றுவரை இருக்கிறார்கள் என்ற மூட நம்பிக்கையை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும், அவர் மறுமைநாள் வரை இவ்வுலகிற்குத் திரும்பி வரமுடியாது. ஏனெனில், அவர் அப்படி திரும்பிவந்தால் அன்னாரையே வணங்கும் கிறிஸ்தவர்களைக் கண்கூடாக காண்பார். பிறகு நான் ‘அவர்களுடன்’ இருந்த காலம் வரை நான் சாட்சியாக இருக்கிறேன் என்ற திருவசனம் பொய் என்றாகிவிடும். (அல்லாஹ் காப்பானாக) ஆகவே, அதே ஈசா(அலை) இனி ஒருகாலமும் திரும்பி வரப்போவதில்லை.
Read more »

May 17, 2014

அந் நஜாத் ஏட்டின் சிந்தனைக்கு - எம். பஷாரத் அஹ்மது.


அந்நஜாத் ஏட்டின் டிசம்பர் மாத இதழில் 18 ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

“அல் குர்ஆனின் எந்த வசனத்தில் எந்த சமூகம் செய்த தவறு சுட்டிக் காட்டப்பட்டிருந்தாலும் அந்த தவறை முஸ்லிம்களும் கண்டிப்பாகச் செய்யக்கூடாது; மீறிச் செய்தால் அந்த சமூகத்தினர் அடைந்த தண்டனையை இவர்களும் அடைய வேண்டிவரும் என்பதே சரியாகும்.

உதாரணமாக அல்குர்ஆன் 7:81 இல் “மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள். நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராக இருக்கின்றீர்கள்” என்று கடுமையாக எச்சரித்துள்ளான் அல்லாஹ்.

இந்த 7:81 இறைவாக்கை ஓதிக் காட்டி முஸ்லிம்கள் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடக்கூடாது என எச்சரித்தால், அதை மறுத்து இந்த 7:81 வசனம் லூத் (அலை) அவர்களின் கௌமுகள்(சமூகம்) பற்றி இறங்கிய வசனம், இதைப் போய் முஸ்லிம்களாகிய எங்களிடம் ஓதிக் காட்டி இந்த தவறை நாங்கள் செய்யக் கூடாது என எச்சரிப்பது என்ன நியாயம்? என்று கேட்பார்களா? புரோகித மௌலவிகள் ஒருகால் இப்படியும் வாதிடலாம்......

என்று எழுதியுள்ளார்.

உண்மையில் திருக்குர்ஆனின் எந்த வசனத்தில் எந்தச் சமூகம் செய்த தவறு சுட்டிக் காட்டப்பட்டிருந்தாலும் அந்தத் தவறை முஸ்லிம்களும் கண்டிப்பாகச் செய்யக்கூடாது. மீறிச் செய்தால் அந்தச் சமூகத்தினர் அடைந்த தண்டனையை இவர்களும் அடைய வேண்டி வரும் என்று குறிப்பிடப்பட்டிருப்பது சரியானதே! தெளிவான கருத்தே!

இப்போது எமது கேள்வி என்னவென்றால் திருக்குர்ஆனில் அல்மூமின் அதிகாரத்தில் 34 வது வசனம்.

"இதற்க்கு முன்னர் யூசுப் தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். ஆனால் அவர் உங்களிடம் கொண்டு வந்தது குறித்து நீங்கள் சந்தேகத்தில் இருந்தீர்கள். அவர் மரணமடைந்தபோது, அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒருபோதும் அனுப்பமாட்டான் என்று நீங்கள் கூறினீர்கள். "இவ்வாறே அல்லாஹ் வரம்புமீறுபவர்களையும், (இறை அடையாளங்களில்) சந்தேகம் கொள்பவர்களையும் வழிகேடர்கள் என்று தீர்மானித்து விடுகின்றான்". ( 40:35 )

"(வழி கேடர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் தொடர்பாக (அல்லாஹ்விடமிருந்து) தங்களிடம் வந்த எந்தச் சான்றுமின்றி வாக்குவாதம் செய்கின்றனர். இது அல்லாஹ்விடமும் நம்பிக்கை கொண்டவர்களிடமும் மிக வெறுக்கத்தக்கதாகும். இவ்வாறே ஆணவமும், அகங்காரமும் கொண்ட ஒவ்வொரு உள்ளத்திலும் அல்லாஹ் முத்திரைடுகின்றான்". (40:36 )

இந்த வசனத்தில் ஹஸ்ரத் யூஸுப்(அலை) அவர்களின் சமுதாயத்தினர், யூஸுப் நபி மரணமடைந்தபோது, அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒரு போதும் அனுப்பமாட்டான் என்று கூறியதாகச் சுட்டிக்காட்டி அவ்வாறு கூறுபவர்களை வழிதவறியவர்கள் என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது: இது ஒரு படிப்பினை.

அந்நஜாத் ஏட்டில் குறிப்பிட்டபடி “திருக்குரானில் எந்த சமூகம் செய்த தவறு சுட்டிக் காட்டப்பட்டிருந்தாலும் அந்தத் தவறை முஸ்லிம்களும் கண்டிப்பாகச் செய்யக்கூடாது.” அதாவது யூஸுப் நபியின் சமுதாயம் “அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒரு போதும் அனுப்பமாட்டான்” என்று கூறியது தவறு என்று மேற்சொன்ன திருக்குர்ஆன் வசனம் கூறுகிறது. இந்தத் தவறை அந்நஜாத் உட்பட முஸ்லிம்கள் பலர் செய்கின்றனரே! ஒரு சமுதாயம் செய்த தவறை முஸ்லிம்கள் கண்டிப்பாக செய்யக் கூடாது என அந்நஜாத் ஏடே குறிப்பிட்டுவிட்டு அவர்களே இந்தத் தவறை செய்யலாமா! யூசுப் நபியின் சமுதாயம் கூறியது போல், முஸ்லிம்களும் எந்தத் தூதரையும் அல்லாஹ் இனி ஒருபோதும் அனுப்ப மாட்டான் என்று கூறுவது திருக்குர்ஆன் கூற்றின்படி தவரல்லவா! அந்நஜாத்தின் உபதேசம் ஊருக்கு மட்டும்தானா! அவர்களுக்கு இல்லையா??

இவ்வாறு எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒருபோதும் அனுப்பமாட்டான் என்று கூறுபவர்களை வழி தவறியவர்கள் என்று மேற் சொன்ன திருக்குர்ஆன் வசனம் கூறுகிற போது அவ்வாறு கூறி, (அதாவது நபிக்கு பின் இனியொரு நபியை இறைவன் அனுப்பமாட்டான் என்று கூறி) மேற்சொன்ன நிலைக்கு ஆளாக வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறுவது தவறு என்பதை அந்நஜாத் உணரட்டும்.

மேற்சொன்ன திருக்குர்ஆன் வசனம் (40:34) முஸ்லிம்களுக்குப் பொருந்தாது என்று அந்நஜாத் கூறுமேயானால் அவர்கள் எழுதியதற்கு அவர்களே முரண்படுகிறார்கள் என்றே பொருள். அந்நஜாத் சிந்திக்கட்டும்; தெளிவு பெறட்டும்.
Read more »

May 5, 2014

ஈஸா நபி (அலை) செய்த அற்புதங்களும் பிறர் செய்த அற்புதங்களும்.


அபூ அப்தில்லாஹ் எழுதுகிறார் 

உலகில் நபி (ஸல்) அவர்கள் முதல் வேறு எந்த நபிக்கும், வேறு எந்த மனிதனுக்கும் கொடுக்கப்படாத சில தனிச்சிறப்புகள் ஈஸா(அலை) அவர்கள் பெற்றுள்ளார்கள் என்று திருக்குர்ஆன் சான்று பகருகிறது. ஈஸா(அலை) அவர்கள் தகப்பனின்றி பிறந்தது, பிறந்த உடனே மக்களுடன் பேசியது, அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு குஷ்டரோகிகளையும் கடும் வியாதியஸ்தர்களையும் சுகப்படுத்தியது, இறந்தவர்களை உயிர்பித்தது, இப்படிப்பட்ட தனிச்சிறப்புகளை உடையவர்களாக ஈஸா(அலை) அவர்கள் இருந்தார்கள். (பக்கம் 53) 

நம் பதில்: 

அபூ அப்தில்லாஹ்வுக்கு திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் ஆழிய ஞானம் இல்லை என்பதற்கு இக்கூற்று சிறந்த எடுத்துக்காட்டாகும்.

திருக்குர்ஆன் யஹ்யா நபி அவர்களின் பிறப்பினைப் பற்றி அவரின் தாய் மலடி என்றும், தந்தை வயது முதிர்ந்த, நரை, திரை விழுந்த எலும்புகள் பலவீனமானவர் என்றும் கூறிய பின்னரே தந்தையின்றி ஈஸா நபியின் பிறப்பு பற்றிக் கூறுகிறது. இவ்விரு சம்பவங்களையும் இரு சூராக்களில் (3:41,48; 19:9,21) கூறுகிறது. அபூ அப்தில்லாஹ்வின் கூற்றின்படி, ஈஸா நபி (அலை) அவர்களின் பிறப்பு அற்புதம் எனில், யஹ்யா நபி (அலை) அவர்களின் பிறப்பு அதனினும் அற்புதமாக தெரியவில்லையா? இவ்வாறே இஸ்ஹாக் நபி (அலை) அவர்களின் பிறப்பு பற்றியும் திருக்குர்ஆன் (11:73 ) கூறுகிறது. இவை அபூ அப்தில்லாஹ்வுக்கு தெரியவில்லை போலும். 

ஆதம் நபி (அலை) அவர்கள் தாயும் தந்தையும் இன்றியும், ஹவ்வா (அலை) அவர்கள் ஆதம் நபி (அலை) அவர்களின் விலா எலும்பிலிருந்து பிறந்ததாகவும் அபூ அப்தில்லாஹ் கருதுகிறார். இப்பிறப்புகள் அதிசயமாக இவருக்கு தெரியவில்லையா? பிறந்த உடனே மக்களுடன் பேசியது அதிசயம் என்று எழுதுகிறார். திருக்குர்ஆன் தொட்டிலிலும் நடுப்பருவத்திலும் பேசினார் என்று கூறுகிறது. நடுப்பருவத்தில் ஒருவர் பேசுவது எப்படி அதிசயம் இல்லையோ அப்படியே தொட்டிலிலும் பேசியது அற்புதம் இல்லை என்பது திருக்குர்ஆனின் கருத்து ஆகும். 

புகாரியில் வந்த நபிமொழியிலும் தொட்டிலில் பேசிய மூன்று குழந்தைகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அதில் ஈஸா நபி (அலை) நீங்கலாக மற்ற இரு குழந்தைகளின் பேச்சினை அபூ அப்தில்லாஹ் படித்திருந்தால் இப்படி எழுதியிருக்கமாட்டார் என்பது உறுதி. இன்றைய நாளில் உலகில் பல குழந்தைகளின் பேச்சும், செயலும் இவரது கூற்றைக் பொய்யாக்குகிறதை உலக ஞானம் உள்ளவர் அறிவர்.

அவ்வளவு ஏன் ஈஸா நபி (அலை) பேசுவது இருக்கட்டும். அன்றும் இன்றும் என்றும் பேச இயலாதது பறவையாகும். ஆனால் ஹூத் ஹூத் என்னும் பறவை அக்காலத்து நபியாகிய சுலைமான் நபி (அலை) அவர்கள் அறியாத அரசியல், தவ்ஹீது விஷயங்களை கூறியதாக அபூஅப்தில்லாஹ் நம்போகிறாரே! இதைவிடவா ஈஸா நபி (அலை) பேசியது அதிசயம்? 

ஏன் நபியின் இராணுவம் வருவதை அறிந்து, என்றும் பேசாத எறும்புகள் பேசியதாக திருக்குர்ஆன் கூறுகிறதே அது சரி, சுலைமான் நபிக்கு பறவையின் மொழிதான் தெரியும், எறும்புகள் மொழி எப்படி தெரிந்தது? பறவையும், எறும்பும் ஓரினம் என்று அபூ அப்தில்லாஹ் கூறுவாரா? தஜ்ஜால் ஒருவனைக் கொன்று, பின்னர் அவனை உயிர் பெறச் செய்ததாக அபூ அப்தில்லாஹ் நம்புகிறாரே! 

திருக்குரானில் ஈஸா நபி (அலை) அவர்களின் அற்புதம் பற்றித் தெரிந்து கொள்ள திருக்குரானின் அடிப்படைச் சட்டம் தெரிந்திருக்க வேண்டும். 

எந்த நபியின் அற்புதமும் இயற்கையின் அடிப்படைச் சட்டத்திற்கு உட்பட்டதே. அவ்வாறு செய்வதே இறைவனின் வல்லமைக்கும் ஞானத்திற்கும் எடுத்துக்காட்டாகும். 

திருக்குர்ஆனின் பிற கருத்துக்களுக்கு முரண்படாதபடி நாம் திருக்குர்ஆனின் சான்றுகளுக்கு பொருள் கொடுக்கவேண்டும். 

நபிமார்களின் அற்புதங்கள் அந்தந்த நபிமார்களின் தனித்தன்மைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும். 

எடுத்துக்காட்டாக: 

நபி (ஸல்) அவர்களின் அற்புதம் திருக்குர்ஆன் ஆகும். இது ஒரு நூல் – புத்தகம் ஆகும். உலகில் அன்று முதல் இன்று வரை கோடிக்கணக்கான் நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. பல்வேறு துறைகளுக்கு ஏற்ப பரிசுகளும் அந்த நூல்களுக்கு வழங்கபடுகிறது. எனவே ஒரு நூல் என்பது அற்புதம் இல்லை. உலகில் பலரால் எழுதக்கூடியதே நூல் ஆகும். இவ்வாறு மனிதரால் செய்யக்கூடிய ஒரு செயல் ஒரு நபிக்குரிய அற்புதம் ஆகும் போது, அந்த நூலைப் போல் ஒரு நூலை எவரும் எழுத முடியாது. இந்த நூலில் காணப்படுவதைப் போன்று ஒரு வசனத்தையோ, அல்லது ஒரு அதிகாரத்தையோ, 10 அதிகாரங்களையோ அல்லது இதுபோன்ற ஒரு நூலையோ எழுதி வருமாறு திருக்குர்ஆன் நிராகரிப்பாளர்களிடம் அறைகூவல் விடுகிறது. கடந்த 1500 ஆண்டுகாலமாக எவராலும் இயலவில்லை. இனிமேலும் முடியாது. 

இவ்வாறே இப்ராஹீம் நபி (ஸல்) அவர்களின் தனித்தன்மை, தர்க்க அடிப்படையில் தன் போதனைகளை மக்களுக்கு கூறியது ஆகும். இறைவன் என்றால் பேச வேண்டும்; பேச முடியாதவை இறைவன் இல்லை. அவனை ஏன் வணங்கவேண்டும்? என்ற தர்க்க வாதத்தின் மூலமே சிலை (வணக்கத்தை) உடைத்தார்கள். இதன் அடிப்படையில் பார்க்கும் போது, இன்றைய முஸ்லிம்கள் அல்லாஹ் வஹியை நிறுத்தி விட்டான். அதாவது அவன் இனிமேல் யாருடனும் பேசமாட்டான் என்று நம்புவது, அல்லாஹ்வை சிலையாக பொய்த்தெய்வமாக நம்புவதாகும். 

ஈஸா(அலை) அவர்களின் தனித்தன்மையாவது. அன்னார் உவமை வடிவில் தன் கருத்துக்களைப் போதித்தார்கள். எனவே, அன்னாரின் அற்புதங்களை உவமை வடிவில் கூறியுள்ளான். நோய்களைக் குணப்படுத்தியது, பறவையைப் படைத்தது, குருடர்களைப் பார்க்கச் செய்தது, இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தது அத்தனையும் உவமை வசனங்களாகும். 

சொற்பொருள்தான் கொள்ளவேண்டும் என்று அபூ அப்தில்லாஹ் கூறுவார் என்றால் முஸ்லிம் ஹதீஸில் 57:35 ஐப் படித்துப் பார்த்தால், ஒரு சாதாரண சிறுவன், பிறவிக் குருடனையும், தொழு நோயாளியையும், பிற நோய்களையும் குணப்படுத்தவான் என்றும் அச்சிறுவனைக் கொன்றால் அவன் மீண்டும் உயிர்பெற்று வருவான் என்றும் கூறப்பட்டுள்ளதை அபூ அப்தில்லாஹ் எப்படி நம்புகிறார்? 

ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களைப் பற்றி, உஹ்யில் மௌத்தா பி இஸ்நிஹி (அவன் கட்டளையினால் நான் இறந்தவர்களை உயிர்பிக்கின்றேன் எனவும் (3:50),நீர் உயிரற்றவர்களை என் கட்டளையினால் எழுப்பிய நேரத்தையும் எனவும் (5:11) திருக்குரானில் உள்ள வசனத்திற்கு நேரடியான வெளிப்படையான பொருளைக் கொடுக்கின்றனர். பௌதீகமாக, உடல் அளவில் உயிரூட்டினார் என்று நம்பி இறைவனுக்கு இணை வைக்கின்றனர். ஏனெனில் படைத்தல், மரணிக்கசெய்தல், உயிரூட்டுதல் ஆகிய பண்புகள் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்றும், இணையாக்கப்பட்டவர்களுள் எவராலும் இதனை செய்ய முடியாது என்று இறைவன் திருக்குரானில் திட்டவட்டமாக குறிப்பிடுகின்றான். 

"அல்லாஹ்வே உங்களைப் படைத்தான் அவனே உங்களுக்கு உணவளித்தான். பின்னர் அவன் உங்களை மரணிக்கச் செய்வான். பின்னர் அவன் உங்களை உயிரூட்டுவான் உங்களால் (இறைவனுக்கு) இணையாக்கப்பட்டவர்களில் எவரேனும் இச்செயல்களில் எதையாவது செய்கின்றனரா? அவன் தூய்மையானவன். மேலும் அவர்கள் (இறைவனுக்கு) ஏற்படுத்தும் இணைகளை விட்டும் அவன் மிக்க மேலானவன்." (30:41) 

மக்களால் இறைவனுக்கு இணையாக்கப்பட்டவர்களில் முதல் இடத்தில் இருப்பவர் ஈஸா (அலை) அவர்கள்தான். இணையாக்கப்பட்டவர்களில் எவருமே உயிரூட்டுவதில்லை என்று அல்லாஹ் குறிப்பிடும்போது அது மிக அதிகமாக ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களுக்குதான் பொருந்துகிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ளமுடியும். 

எனவே திருக்குர்ஆன் 3:50 ல் நான் இறந்தவர்களை உயிர்பிக்கின்றேன் என்று ஈஸா (அலை) அவர்கள் கூறியதாக வந்திருப்பது அவர் பௌதீகமாக இறந்தவர்களை உயிர்பித்தான் என்று பொருள் கொள்ள முடியாது. அது மேற்கண்ட 30:41 வசனத்திற்கு முரணானது. ஈசாவுக்கு இறைத்தன்மையைக் கொடுப்பதாகிவிடும். இந்த வகையில் ஜமாஅத் அல் முஸ்லிமீன் என தம்பட்டம் அடிக்கும் பிரிவினருக்கு கிடைக்கும் பட்டம் முஷ்ரிக் என்றே ஆகிவிடும்! 

இதே சொல்லை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்காகவும் அல்லாஹ் திருக்குரானில் இவ்வாறு கூறியிருக்கிறான். 

"நம்பிக்கை கொண்டவர்களே! இறைதூதர் உங்களை உயிர்பிப்பதற்க்காக உங்களை அழைத்தால் நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவருக்கும் பதில் அளியுங்கள்." (8:25) 

இவ்வசனத்தில் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களுக்காகவும் உயிர்பித்தல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வசனத்திற்கு எவருமே ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் பௌதீகமான முறையில் இறந்தவர்களை உயிரூட்டி எழுப்பினார்கள் என்று பொருள் கொள்வதில்லை. மாறாக ஆன்மீகமான முறையில் உயிரற்றோருக்குதான் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் உயிர் கொடுத்தார்கள் என்றே விரிவுரையாளர்கள் எழுதியுள்ளனர். 'உங்களுக்கு வாழ்வளிக்கும் காரியத்திற்கு இத்தூதர் உங்களை அலைக்கும் போது அவருக்கு பதிலளியுங்கள்' என P.J யும் மொழியாக்கம் செய்துள்ளார். ஆனால் இதே சொல் ஈஸா(அலை) அவர்களுக்காக வரும் போது மட்டும் உண்மையிலேயே இறந்தவர்களுக்கு உயிரூட்டினார் எனக் கூறி ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களுக்கு இறைத்தன்மையை கொடுத்து கிறிஸ்தவர்களின் தவறான கடவுள் கொள்கைக்கு ஆதரவளிக்கின்றனர். 

இவர்களுக்கு கடைசியாக ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறிய எச்சரிக்கையைக் கூறிக் கொள்கிறேன். 

நஸாராக்கள் ஈஸா நபி (அலை) அவர்களை அளவுக்குமீறிப் புகழ்ந்து வழி கெட்டது போல் அபூ அப்தில்லாஹ் கூட்டமும் அன்னாரை வரம்பு கடந்து புகழ்ந்து வழிகெடவேண்டாம். 

அவர் எம்முடைய அடியாராகவே விளங்கினார். அவருக்கு நாம் அருள் செய்து அவரை இஸ்ராயீலின் மக்களுக்கு ஒரே எடுத்துக்காட்டாக ஆக்கினோம் (43:60) 

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த வசனத்தில் ஈஸா(அலை) அவர்களை அப்து – அடியார் என்று கூறி அன்னார் இறைவனோ இறைப் பண்புகளாகிய உயிர் கொடுத்தால், படைத்தல் போன்றவற்றை செய்யவோ இல்லை என்று மறுக்கின்றான். இறைவன் அப்து – அடியார் என்ற சொல்லை பல நபிமார்களுக்கும் நல்லடியார்களுக்கும் திருக்குர்ஆனில் பயன்படுத்தியுள்ளான். ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் மனிதனாகிய நல்லடியார் – நபியாவார். அவரிடம் அம்மனிதப் நபிகளைப் போன்ற மனிதப் பண்புகளே இருந்தன. படைத்தல், உயிர் கொடுத்தல் போன்ற பண்புகள் உவமை வடிவில் ஏனைய நபிமார்களுக்கு இருந்தது (8:25) போல் அவரிடமும் இருந்தன என்று பதில் தருகின்றான். 

இந்த வசனத்தில் அவர் என் அடியாராக விளங்கினார். அவருக்கு நாம் அருள் செய்து அவரை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு ஓர் உவமையாக (எடுத்துக்காட்டாக) ஆக்கினோம் என்று கூறுகிறான். அதாவது ஈஸா (அலை) அவர்கள் தந்தை இன்றி பிறந்தது, ஒரு நபிக்கு தந்தையாகும் தகுதியை இறைவன் இஸ்ரவேல் மக்களிடம் இருந்து பறித்து விட்டதனைச் சுட்டிக் காட்டுகிறது. 

பின்னர் யூதர்களின் தீய செயல்களால் ஈஸா நபி (அலை) அவர்களுக்குப் பிறகு நுபுவ்வத்தின் அருட்கொடையும் அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டு அது இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு ஈஸா(அலை) அவர்கள் தந்தையின்றிப் பிறந்தது இஸ்ராயீல் சமுதாயம் நுபுவ்வத்தின் அருளை முற்றாக இழக்கப் போகிறது என்பதை எடுத்துக்காட்டவே இந்த வசனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Read more »

May 2, 2014

இமாம் மஹ்தி (அலை) அவர்களின் முபாஹலா தோல்வி அடைந்ததா? – நஜாத் ஆசிரியருக்கு பதில்.


நஜாத் ஆசிரியரின் கேள்வி:

எந்த முகத்தோடு இந்தக் காதியானி மிர்ஸா தாஹிர் முபாஹலாவுக்கு அழைக்கிறாரோ நாம் அறியோம். ஒருவேளை அவரது பாட்டனார் மிர்ஸா குலாம் 15-4-1907 இல் மௌலவி சனாவுல்லாஹ் அமிர்தஸரி அவர்களுடன் முபாஹலா செய்து அந்த பிராத்தனையின் விளைவாக காலராவினால் 26-5-1908 மரணமடைந்ததை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறார் போலும். 

நம் பதில்:

யாரோ ஒரு அண்டப்புளுகன் எழுதி வைத்துவிட்டுப் போனதை இந்த ஆகாசப் புளுகர் இப்போது எடுத்து எழுதியிருக்கிறார். 

“லஹ்ன துல்லாஹி அலல் காதிபீன்” பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக. 

இவருடைய மேற்கண்ட கூற்று முற்றிலும் உண்மையென இவர் நம்புகிறாரென்றால். அவை பொய்யாக இருந்தால் இறைவனின் சாபம் தம்மீது இறங்கட்டும் என இவர் கூறட்டும்! இவர் தன்மான முள்ளவராக இருந்தால் இதனை இவர் தமது எட்டில் வெளியிடட்டும். 

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் தனது காலத்தில் வாழ்ந்திருந்த உண்மையின் எதிரிகளுக்கும் தம்மீது வீண் அவதூறுகளை சுமத்திக் கொண்டிருந்தவர்களுக்கும் முபாஹலாவிற்கான அழைப்பு விடுத்தார்கள். என்பது உண்மையே! அந்த முபாஹலாவை ஏற்று அறிக்கை வெளியிட்ட குலாம் தஸ்தகிர் மௌலவி இஸ்மாயீல் (அலிகட்) மற்றும் பல ஆலிம்சாக்களும் இறைவனின் கோபத்திற்கு இலக்காகி இறந்து போயினர். மௌலவி ஸனாவுல்லாஹ் இந்த ‘முபாஹலாவை’ ஏற்றிருப்பதாக முதலில் தமது ‘அஹ்லே ஹதீஸ்’ ஏட்டில் 29-3-1907 இல் அறிவிப்பு செய்திருந்த போதிலும் பின்னர் தடுமாறி 26-4-1907 இல் அதிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதற்கு அவர் கூறியிருந்த காரணம் இதுதான்:- 

“பொய்யர்களும் குழப்பக்காரர்களுக்கும் இறைவன் நீண்ட ஆயுளைக் கொடுக்கின்றான். அதனால் மிர்ஸா சாஹிப் நீண்டநாள் வாழ்வார். நான் அவருக்கு முன் மரணமடைவேன். அதனால் இந்த சவாலை நான் ஏற்கத் தயாரில்லை!’

“எனக்கும் உங்களுக்குமிடையில்தான் இந்த எதிர்ப்பு நடந்துவருகிறது. நான் மரணித்துவிட்டால் எனது மரணத்தினால் மக்களுக்கு என்ன பலன் ஏற்படப் போகிறது .............. உங்களுடைய இந்த அழைப்பை ஏற்க எனக்குச் சம்மதமில்லை” (அஹ்லே ஹதீஸ் 26-4-1907) 

இதற்குப் பிறகும் மௌலவி, ஸனாவுல்லாஹ் தனது பிரசுரங்களில், முபாஹலாவை தான் ஏற்காததை வெளிப்படுத்தி கீழ்வருமாறு அறிக்கை விடுத்திருந்தார்:-

நான் தங்களைப்போல் நபியோ ரெஸுலோ அல்ல. எனக்கு இல்ஹாம் வருவதில்லை. ஆகவே இப்படிப்பட்ட முபாஹலா (எதிர்ப்புப் போட்டி) களுக்கு நான் தயாரில்லை. ( இல்ஹாமதே மிர்ஸா பக்கம் 85) 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உண்மையாளராக இருந்தும் முஸைலமாவுக்கு முன்னதாகவே மரணமடைந்துவிட்டார்கள் (முரக்கயே காதியானி பக்கம் 9) 

இவற்றிலிருந்து மௌலவி ஸனாவுல்லாஹ் ஒரு பித்தலாட்டக்காரர் என்பதும் அவர் முபாஹலாவை ஏற்கவில்லை என்பதும் புலனாகும். 

இது குறித்து ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் இவ்வாறு கூறியிருந்தார்கள். 

‘பொய்யன் உண்மையாளருடைய வாழ்நாளில் மரணமடைவான் என நாம் கூறவில்லை. மாறாக முபாஹலா செய்பவர்களிலேயே பொய் கூறுபவர் உண்மையாளரின் வாழ்வில் மரணிப்பார் என்றே நாம் கூருயிருந்தோம். இது முபாஹலாவிற்கு மட்டுமே பொருந்தும். நபிபெருமானார் (ஸல்) அவர்களின் எதிரிகள் அனைவரும் அவர்களுடைய வாழ்நாளில் மரணமடைந்தார்களா? இல்லையே. ஆனால் முபாஹலா செய்தால் உண்மையாளரின் சத்தியத்தை நிரூபிக்க இறைவன் பொய்யனை மரணிக்கச் செய்வான். எனவே என்னோடு முபாஹலா செய்யாத என் எதிரிகள் எனது மரணத்திற்குப் பின்னரும் வாழ்ந்திருப்பார்கள் (அல் ஹகம் 10-10-1907)

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் 26-5-1908 இல் இறைவனடி சேர்ந்தார்கள். பொய்யரான மௌலவி சனாவுல்லாஹ். ‘பொய்யனும் குழப்பக்காரனும் நீண்ட காலம் வாழ்வான்’ என்ற அவரது கூற்றுப்படி நீண்ட நாள் வாழ்ந்திருந்தார். அப்படி அவரை வாழச் செய்து அவர் ஒரு படுபொய்யர், குழப்பக்காரர் என்பதை அல்லாஹ் உலகுக்கு எடுத்துக் காட்டினான். இதுவே உண்மை. 

நஜாத் ஆசிரியர் கூறும் மௌலவி ஸனாவுல்லாஹ், டாக்டர் அப்துல் ஹக்கீம், அப்துல்லாஹ் ஆத்தம் இவர்களின் சந்ததிகள் இன்று பஞ்சாபில் வாழ்கிறார்களா? இறைவனின் வல்லமைமிகு கரம் இவர்களை முற்றாகத் துடைத்துவிட்டது. ‘இன்ன ஷானியக ஹுவல் அப்தர்’ – உமது எதிரிகளே சந்ததியற்றவர் – என்பதைப் போன்று இவர்களின் பெயர் சொல்லக் கூட இன்று அங்கு ஆளில்லை. 

ஆனால் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) வாழ்ந்திருந்த காதியானில் இன்றும் அவர்களின் சந்ததிகள் வாழ்கின்றனர். இந்தியா பாகிஸ்தான் பிரிவு மற்றும் இன்ன பல களேபரங்கள் அப்பகுதியில் நடந்திருந்தும் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் பெயரும் ஜமாத்தும் இங்கு நிலைநின்று வருகிறது. அதுமட்டுமன்று அவர்களின் சந்ததிகள் இன்று பல்வேறு உலகநாடுகளில் சிறப்பாக வாழ்கின்றனர். மேலும் அவர்களின் மறைவிற்குப் பிறகு நூறாண்டுகள் கழிந்தும் அவர்களுடைய பேரர் அவர்களுடைய சார்பில் ஜமாத்தின் இன்றைய எதிரிகளுக்கு முபாஹலா அழைப்பு விடுக்கிறார்.

நஜாத் ஆசிரியர் கூறும் ‘உண்மையாளர்களை’ அழித்துவிட்டு அவர் யாரை பொய்யர்கள் என்று கூறுகிறாரோ அவர்களை அல்லாஹ் மேலோங்கச் செய்துவிட்டானா? என்ன அபத்தமான வாதம் இது! சிந்திக்கின்றவர்கள் நிச்சயமாக இதனை உணரவே செய்வர்.
Read more »

Apr 29, 2014

ஈஸா நபி (அலை) அவர்களின் மரணமும் நஜாத் ஏட்டின் மூடநம்பிக்கையும் – 3


“ஈஸா (அலை) அவர்கள் மரணிக்கவில்லை ஆயினும் மரணிப்பவர்களே” என்ற நஜாத் ஆசிரியரின் மூட நம்பிக்கை அடிப்படையற்றது என்பதை கீழ்வரும் திருக்குர்ஆன் வசனம் தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டுகிறது: 

“என்னையும் எனது தாயாரையும் அல்லாஹ்விற்குப் பகரமாக இரு தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள்” என மர்யமின் மகனான ஈஸாவே நீர் மக்களிடம் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும்போது அவர் இவ்வாறு பதிலளிப்பார். நீ தூயவன், எனக்கு உரிமையில்லாத என்னால் ஒருபோதும் கூற முடியாது. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக நீ அதனை அறிந்திருப்பாய் எனது உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய். மேலும் உனது உள்ளத்தில் உள்ளதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக மறைவானவற்றை அறிகின்ற்றவன் நீ ஒருவனே. 

“எனது இறைவனும் உங்களின் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என எனக்குக் கூற நீ கட்டளையிட்டதையல்லாமல் வேறெதனையும் நான் கூறவில்லை. மேலும் நான் அவர்களோடு இருந்தவரை அவர்களுக்கு நான் ஒரு சாட்சியாவேன். ஆனால் நீ என்னை மரணிக்கச் செய்த பிறகு நீயே அவர்களைக் கண்காணிப்பவனாவாய். மேலும் நீயே அனைத்தையும் கவனிப்பவனாவாய்! (5:117,118) 

‘ஒட்டக் கூத்தருக்கு இரட்டைத் தாழ்பாள் என்று கூறப்படுவது போன்று இந்த வசனம் நஜாத் ஆசிரியரின் இரண்டு கூற்றுகளையும் அடியோடு தகர்த்து விடுகிறது. இந்த வசனம் ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்பதையும் அவர்கள் திரும்ப வரபோவதில்லை என்பதையும் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாக்கிவிடுகின்றது. “நீ என்னை மரணிக்கச் செய்தபின்” என்ற சொற்றொடர், ஈஸா நபியின் சமுதாயம் இறைவனுக்கு இணைவைப்பதற்கு முன்பே அதாவது ஈஸா நபியையும் அவர்களுடைய தாயாரையும் இரு தெய்வங்களாக எடுத்துக் கொளவதற்கு முன்பே ஈஸா நபி மரணித்துவிட்டார்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. 

நபி பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பே ஈஸா நபியின் சமுதாயம் இணை வைத்தலில் இறங்கிவிட்டது என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. எனவே நபி பெருமானார் (ஸல்) அவர்கள் தோன்றுவதற்கு முன்னரே ஈஸா(அலை) அவர்கள் மரணித்துப் போனார்கள் என்றே சொல்லவேண்டும். 

அடுத்து ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் இவ்வுலகிற்கு வருவார்கள் என்ற கருத்தும் மிகத் தவறானது என்பதும் மேற்கண்ட வசனத்திலிருந்து புலனாகிறது. அவர்கள் அவ்வாறு வருவதாயிருந்தால் அவர்களுடைய சமுதாயம் இறைவனுக்கு இணை வைப்பதையும், அவர்களையும் அவர்களுடைய தாயாரையும் கத்தோலிக்கர்களும் மற்றவர்களும் வணங்கிவருவதையும் அவர்கள் காண்பார்கள். அதன் பிறகு அவர்களால் அது குறித்து தனக்குத் தெரியாது என்று இறைவனிடம் எவ்வாறு கூறமுடியும்? மேற்கண்ட இறைவசனத்திலோ அவர்கள் அந்தச் சமுதாயத்தினரோடு இருந்தவரை அவர்கள் இணைவைத்தலில் ஈடுபடவில்லை என்று கூறுவதாக வருகிறது. எனவே, ஈஸா நபியின் சமுதாயம் இணைவைத்தலில் ஈடுபடுவதற்கு முன்பே ஈஸா நபி மரணித்துபோனார்கள் அவர்கள் திரும்பி வரப்போவதில்லை என்பதை உணரலாம். 

ஈஸா நபி உயிருடன் இருக்கிறார்கள் என எப்படியாவது எடுத்துக் காட்டவேண்டும் எண்ணமுள்ளவர்கள் இந்தத் திருமறை வசனத்திலுள்ள ‘பலம்மா தவபைத்தனி’ என்ற சொற்றொடருக்கு நீ என்னை மரணிக்கச் செய்த பின் எனப் பொருள் தருவதற்குப் பகரமாக வெகு தந்திரமாக, நீ என்னை (உடலுடன்) கைப்பற்றியபின்’ என்று பொருள் கூறுவார்கள். இந்த தவப்பி என்ற சொல்லுக்கு மரணிக்க செய்தல் அல்லது ரூஹை அதாவது உயிரைக் கைப்பற்றுதல் என்ற பொருளைத் தவிர வேறு பொருள் இல்லை என்பதை நாம் ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ளோம். 

இது தொடர்பாக ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள். 

உலகில் அரபு நாடு உருவாகி அங்கு அரபி மொழி வழக்கில் வந்த நாள் முதல் இதுவரை வந்த எந்த உரையிலிருந்து அது புதிதாக இருந்தாலும் பழையதாக இருந்தாலும் ‘தவப்பி’ என்ற சொல்லுக்கு உடலைக் கவர்தல் என்ற பொருள் தரப்பட்டிருந்த ஓர் உதாரணத்தை யாராலும் காட்டமுடியாது. மாறாக, தவப்பி என்பது இறைவன் மனிதனுக்கு இழைக்கின்ற செயலாக கூறப்பட்ட இடங்களிலெல்லாம் அதற்கு மரணிக்கச் செய்தல் உயிரைக் கவர்கள் என்ற அர்த்தங்களே தரப்படுகின்றன. உடலைக் கவர்தல் என்ற அர்த்தம் எங்கும் காணப்படவில்லை. எந்த அகராதியிலும் நாம் தரும் அர்த்தத்திற்கு மாற்றமான அர்த்தம் தரப்படவில்லை. 

எவராவது, திருக்குரானிலிருந்தோ அல்லது நபி மொழிகளிலிருந்தோ அல்லது அரபி மொழிக் கவிதை மற்றும் இலக்கியம் ஆகியவற்றிலிருந்தோ மேற்கண்ட சொல்லுக்கு மரணிக்கச் செய்தல், உயிரைக் கவர்தல் என்பதைத் தவிர வேறு பொருள் உண்டு என்பதற்கு உதாரணம் காட்டினால் அவருக்கு எனது சொத்தில் ஒரு பகுதியை விற்று ஆயிரம் ரூபாய் தருவேன் என இறைவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். (இஸாலே ஔஹாம் – பக்கம் 603) 

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் இந்த சவாலை அவர்களின் காலத்திலோ அல்லது அதன் பிறகோ யாரும் ஏற்கவில்லை. இதிலிருந்து இந்த ஆலிம்சாக்கள் உண்மையை மறைத்து இட்டுக்கட்டிப் பொருள் கூறுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். 

இந்த “பலம்மா தவபைத்தனி’ – நீ என்னை மரணிக்கச் செய்தபின்” என்ற சொல்லை அண்ணல் நபிபெருமானார் (ஸல்) அவர்கள் நாம் கூறும் அர்த்தத்திலேயே பயன்படுத்தியுள்ளார்கள். அதுவும் மேற்கண்ட ஆயத்தைக் குறிப்பிட்டே கூறியுள்ளார்கள். புஹாரி ஷரீபில் இவ்வாறு காணப்படுகிறது:-

இறுதி நாளில் நான் (நபி பெருமானார் (ஸல்) அவர்கள்) ஹவ்ல் கவ்ஸரில் நிற்கும்போது சிலர் என் முன் காணப்படுவார்கள் அவர்களை மலக்குகள் நரகத்தின் பக்கம் இழுத்துச் செல்லப்படுவார்கள். அவர்களைப் பார்த்து நான் உஸைஹாபி, உஸைஹாபி (இவர்கள் என் தோழர்கள்) என்று உரத்த குரலில் கூறுவேன். அப்போது, இவர்கள் உங்களுடைய காலத்திற்குப் பிறகு என்ன செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. இவர்கள் இஸ்லாத்தைக் கைவிட்டுவிட்டார்கள் என்று என்னிடம் கூறப்படும். அதற்கு நான் இறைவனின் அந்த நல்லடியாரான ஈஸா நபி கூறியிருந்ததைப் போல, நான் அவர்களுடன் இருந்த காலம் வரை அவர்களுக்கு சாட்சியாக இருந்தேன், ஆனால் (பலம்மா தவப்பைத்தனி) நீ என்னை மரணிக்கச் செய்தபின் நீயே அவர்களைக் கண்காணிக்கின்றவனாக இருந்தாய் என்று கூறுவேன். (புஹாரி, கிதாபுத் தப்ஸீர்) 

“பலம்மா தவபைத்தனி” என்ற சொற்றொடருக்கு நீ என்னை மரணிக்கச் செய்தபின் என்ற பொருளைத் தவிர வேறு பொருள் இல்லை. இதை நபி பெருமானார் (ஸல்) அவர்களே தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். இதனைப் படித்தப்பிறகும் ஒருவர் அந்த சொற்றொடருக்கு வேறு அர்த்தம் இருப்பதாகக் கூறுவாரேயானால் அவர் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் தந்துள்ள விளக்கத்தை மறுக்கின்றவர் ஆகிறார். எனவே அவருடன் தொடர்ந்து விவாதம் செய்வதில் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. 

இப்படி, பல்வேறு கோணங்களில் ஈஸா நபியின் மரணம் திருக்குரானால் உறுதி செய்யப்படுகிறது. இந் நிலையில் ‘நஜாத்’ ஆசிரியரைப் போன்றவர்களுக்கு குட்டையைக் குழப்புவதை தவிர வேறு வழியில்லை! ஈஸா நபி உயிருடன் உள்ளார் எனபதற்கு திருக்குர்ஆனிலிருந்து ஆதாரம் தருவதற்குப் பகரமாக அர்த்தமற்ற சில கேள்விகளை எழுப்புவதன் மூலம் வாசகர்களைத் திசை திருப்பவே அவர் முயன்றிருக்கிறார். “ஹஸரத் ஈஸா நபி (அலை) சிலுவைச் சம்பவத்திற்குப் பிறகு காஷ்மீருக்கு ஓட வேண்டிய அவசியமென்ன? நபி கோழையாவார்களா? என்று அவர் கேட்கிறார். 

திருக்குர்ஆன் கூறும் நபிமார்களின் வரலாற்றினை படித்திருந்தால் அல்லது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றையாவது படித்திருந்தால் அதுபோன்ற அபத்தமான கேள்வியை நஜாத் ஆசிரியர் கேட்டிருக்கவேமாட்டார். பொதுவாக சொந்த நாட்டை துறந்து வேறு இடத்திற்கு ஹிஜ்ரத் செய்வது நபிமார்களின் நடைமுறையாகவே இருந்திருக்கிறது. எதிரிகள், அவர்களின் அநியாயச் செயல்களில் எல்லை மீறிப் போகும்போது அல்லது நபிமார்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகும்போது அந்த நபிமார்கள் இடம் பெயர்ந்து சென்றிருக்கின்றனர். இது அறிவுடமையே தவிர கோழைத்தனம் அன்று ஏனெனில் அந்த நபிமார்கள் உயிர்வாழ்ந்திருந்தால் தான் இறைவன் அவர்கள் மீது சுமத்திய பொறுப்புகளை நிறைவேற்றிடமுடியும். 

இந்தப் பொது விதிக்கு நபிபெருமானார் (ஸல்) அவர்கள் கூட உட்பட்டவர்களாகவே இருந்தார்கள். மக்காவின் ‘காபிர்’கள் நபி பெருமானார் (ஸல்) அவர்களைக் கொலை செய்துவிட திட்டமிட்டு அவர்களுடைய வீட்டைச் சுற்றி வளைத்துக் கொண்ட போது அவர்கள் இரவோடிரவாக மதீனாவுக்கு ‘ஹிஜ்ரத்’ செய்யவில்லையா? 

நஜாத் ஆசிரியரைக் கேட்க்கிறோம், இஸ்ரவேலர்களுக்கு இறை தூதராக வந்த ஈஸா நபியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போது இறைவன் அவர்களை வானத்திற்கு உயர்த்திக் காப்பாற்றியதாகக் கூறுகின்றீர்களே. அதே நிலை, அகில உலகிற்கும் அருட் கொடையாக வந்த அண்ணல் நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டபோது இறைவன் அவர்களை வானத்திற்கு உயர்த்தவில்லையே ஏன்? ஈஸா நபியை நேசித்த அளவுக்கு இறைவன் நபி பெருமானாரை நேசிக்கவில்லையா? அல்லது கிருஸ்தவர்கள் கூறுவது போன்று ஈஸா நபி (நவூதுபில்லாஹ்) இறைவனின் நேச குமாரன் என்பதுவும் உங்களின் எண்ணமா? 

ஏனைய நபிமார்களுக்கு ஆபத்து வந்த நேரத்தில் அவர்களை இந்த பூமியிலேயே காப்பாற்றிய இறைவன் ஈஸா நபியை மட்டும் வானத்திற்கு உயர்த்திக் காப்பாற்ற வேண்டிய அவசியமென்ன? வானத்திற்கு உயர்த்த இறைவனுக்கு வல்லமையில்லையா? என்று கேட்பவர்களிடம் கேட்கிறோம், ஏன், பூமியிலேயே அவர்களைக் காப்பாற்றக்கூடிய வல்லமை இறைவனுக்கு இல்லையா? தவ்ர் குகையில் மறைந்திருந்த நபி பெருமானார் (ஸல்) அவர்களையும் ஹஸரத் அபூபக்கர் (ரலி) அவர்களையும் ஓர் அற்பப் பிராணியான சிலந்தியைக் கொண்டு எதிரிகளிடம் பிடிபடாது இறைவன் காப்பாற்றினான். இத்தகைய வல்லமை மிகுந்த இறைவன் ஈஸா(அலை) அவர்களைக் காப்பாற்ற அவன் வகுத்துள்ள நியதிகளை தவிடு பொடியாக்கி வானத்திற்கு உயர்த்தியிருப்பானா? நிச்சயமாக அவன் அவ்வாறு செய்யவில்லை! மாறாக, ஏனைய நபிமார்களைப் போல் ஈஸா நபியையும் இப்பூமியிலே காப்பாற்றினான். இது குறித்து இறைவனே கூறுவதைப் பாருங்கள்:- 

“மேலும் நாம் மரியமின் மகனையும் அவரது தாயாரையும் ஓர் அடையாளமாக்கினோம். நீரூற்றுகளுள்ள மலைப்பாங்கான ஒரு இடத்தில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தோம்” (23:51) 

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்தில் ஈஸா(அலை) அவர்களுக்கு அடைக்கலம் தரப்பட்ட இடம் பற்றி, 

ரப்வ – மலைப் பிரதேசம் 

மயீன் – நீரருவி நீரூற்று நிரம்பிய இடம். 

தாது ‘கரார்’ – மக்கள் வசிக்குமிடம் என்றெல்லாம் கூறப்பட்டிருக்கிறது. இந்த வர்ணனைகள் காஷ்மீருக்குப் பொருந்துமா? வானத்திற்கு பொருந்துமா? 

அடுத்து, ஈஸா நபி (அலை) அவர்கள் ‘ஹிஜ்ரத்’ சென்றதாக அதாவது தமது சொந்த நாட்டைத் துறந்து சென்றதாக நபிபெருமானார் (ஸல்) அவர்களே அறிவித்துள்ளார்கள். அவர்கள் கூறியிருப்பதை பாருங்கள். 

அல்லாஹ் ஹஸ்ரத் ஈஸா நபி அவர்களுக்கு (இவ்வாறு) வஹி அறிவித்தான், “ஈஸாவே நீர் மற்றவர்களால் அறிந்து கொள்ளப்படாமலும் துன்புருத்துதளுக்கு இலக்காகாமலும் இருக்க இந்த இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு ‘ஹிஜ்ரத்’ செய்வீராக” (கன்ஸுல் உம்மால்) 

இவற்றிலிருந்து ஈஸா நபி (அலை) அவர்கள் சிலுவை சம்பவத்திற்குப் பிறகு தமது நாட்டைத் துறந்து சென்றார்கள் என்ற முடிவிற்கே நாம் வரவேண்டும். 

ஈஸா நபி (அலை) அவர்கள் தமது சொந்த நாட்டைத் துறந்து நெடும்பயணம் ஒன்றை மேற்கொண்டு அக்காலத்தில் கீழத்தேய நாடுகளில் பரவலாக வசித்துவந்த இஸ்ரவேல் இன மக்களுக்கு இறைத்தூதை எட்டவைத்து, இறுதியாக காஷ்மீர் வந்தடைந்தார்கள், அங்கெ தமது 120 ஆவது வயதில் இறையடி சேர்ந்தார்கள் என்பதையெல்லாம் இறையறிவிப்பின் அடிப்படையிலும் ஹஸரத் அஹ்மத் (அலை) அவர்கள் தமது மஸீஹ் ஹிந்துஸ்தான் மேய்ன் (தமிழில் இந்தியாவில் இயேசு) என்ற நூலில் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக்கூறியுள்ளார்கள். அதுமட்டுமல்ல, ஈஸா (அலை) அவர்கள் இந்தியா வந்தார்கள் என்பதற்கான சான்றுகள் உள்ளன என முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் மற்றும் நல்லரிஞர்களும்கூட கூறியுள்ளார்கள். 

இவற்றை மறுக்க இயலாத நிலையில் நஜாத் ஆசிரியர், சிலுவையில் அடிக்கப்பட்டவர் வேறொருவர். அவரே “காஷ்மீருக்கும் ஓடிப் போயிருக்கலாம். பின்னர் மாண்டிருக்கலாம். அவர்களின் கல்லறை காஷ்மீரில் இருப்பதாக எழுதியிருக்கலாம்” என்று வரைந்துள்ளார். இவற்றிலிருந்து இந்தச் சம்பவங்களலெல்லாம் உண்மை, ஆனால் ஆள்தான் வேறு என நஜாத் ஆசிரியர் கூறுவதாகவே நாம் கொள்ளவேண்டும். அதாவது ஈஸா நபியை கொல்ல முயற்சித்த யூதர்கள் மட்டுமல்ல கிருஸ்தவர்களும் பல்வேறு இனங்களைச் சார்ந்த வரலாற்றாசிரியர்களும் முஸ்லிம் நல்லரிஞர்களும் கூட ஏமாந்து போனார்கள் தாம் மட்டும்தான் அது உண்மையான ஈஸா அல்ல அது வேறொரு நபர் என்று கண்டு பிடித்துள்ளதாக நஜாத் ஆசிரியர் கூற விழைகிறார். அப்படியானால் அதற்க்கான ஆதாரத்தை தரட்டும்! ஓர் “அற்புதகரமான ஆராய்ச்சியாளரை” உலகம் கண்டுகொள்ளட்டும். 

ஆனால் இறைவசனங்களுக்கெதிராக, நபிமொழிக்கெதிராக யாராலும் எந்த சான்றையும் காட்ட இயலாது! ஏனெனில் அது உண்மையே உருவானவை. “உண்மைக்கு எதிராக யூகங்கள் எந்தப் பயனும் அளிக்காது” (10:37) என்பதற்கேற்ப உண்மையின் முன்னால் எந்தப் பொய்யும், யூகமும், கற்பனையும் நிற்கயியலாது.
Read more »

Apr 16, 2014

திருக்குரானின் 5:75, 3:145 வசனங்களுக்கு அபூ அப்தில்லாஹ் தரும் தவறான விளக்கம்


அபூ அப்தில்லாஹ் ஆதாரம் எண் 3, 4

அபூ அப்தில்லாஹ் தன் நூலின் பக்கம் 22 முதல் 25 வரை, ஈஸா(அலை) அவர்கள் மரணிக்கவில்லை; இனிமேல் மரணிப்பார் என்பதற்கு ஆதாரமாக 5:75, 3:144 வசனங்களை விளக்கியுள்ளார். 

“முஹம்மது தூதரேயன்றி (வேறு) அல்லர். இவருக்கு முன்னரும் தூதர்கள் பலர் சென்று விட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவீர்களா?” (திருக்குர்ஆன் 3:144) மேலும் மர்யம் உடைய குமாரர் மஸீஹ் இறைத் தூதரேயன்றி (வேறு) அல்லர். இவருக்கு முன்பும் தூதர் பலர் சென்று விட்டார்கள். இவருடைய தாயார் மிக்க உண்மையானவர். இவ்விருவரும் உணவு உண்பவர்களாகவே இருந்தனர்.” (திருக்குர்ஆன் 5:75) 

அபூ அப்தில்லாஹ் தனது நூலில் பக்கம் 25இல் கடைசி பத்தியில் அப்படியாயின் அதன் பொருள் என்ன? 5:75 வசனம் இறங்கும் போது ஈஸா(அலை) மரணமடைந்துவிடவில்லை, பின்னர் மரணமெய்துபவர்களாக இருக்கிறார்கள். 3:144 வசனம் இறங்கி சுமார் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் நபி (ஸல்) அவர்களின் வபாத் சம்பவித்தது போல், 5:75 வசனம் இறங்கி, இதுவரை மரணமடையாத நிலையில் இருக்கும் ஈஸா(அலை) அவர்கள், உலகம் அழியும் முன் பூமிக்கு இறங்கி வந்து, வாழ்ந்து திண்ணமாக மடிந்து அடக்கப்படுவார்கள் என்பது உறுதியாகிறது என்று எழுதியுள்ளார். 

நம் பதில்: 

மேற்சொன்ன 2 வசனங்களுக்கும் அபூ அப்தில்லாஹ் தவறாகப் பொருள் கூறியுள்ளார். அதாவது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மரணித்த வேளையில் அன்னார் மரணிக்கவில்லை என ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்களும், நபித்தோழர்களுள் ஒரு பகுதியினரும் நம்பினார். அச்சமயம் ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் வந்து திருக்குர்ஆனின் 3:145 வசனத்தை ஓதிக் காட்டினார்கள். இதில் முஹம்மது ஒரு தூதர் என்று கூறி, முஹம்மது நபி இறந்துவிட்டார் என்று கூறப்படவில்லை. மாறாக அன்னாருக்கு முன்னர் தோன்றிய தூதர்கள்தான் இறந்துவிட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று எடுத்துக் காட்ட, ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் முஹம்மது ஒரு தூதரே. அவருக்கு முன்னர் வந்த தூதர்கள் இறந்துவிட்டனர் என்று கூறி முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று நிரூபித்தார். அன்னார் இறக்கவில்லை. என்று உறுதியாக நம்பிக்கொண்டு இருந்த உமர்(ரலி) அவர்களும் பிற நபித்தோழர்களும், அன்னார் இறந்துவிட்டார்கள் என்றும் ஏற்றுக் கொண்டனர். 

அதாவது, முஹம்மது (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று அந்த வசனத்தில் கூறப்படவில்லை. மாறாக அன்னார் ஒரு தூதர் என்றுதான் கூறப்பட்டுள்ளது. அத்துடன் அவருக்கு முன்னர் வந்த தூதர்கள்தான் இறந்துவிட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. 

இவ்வாறு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று வெளிப்படையாக கூறாத இந்த வசனம் (3:145) அன்னார் இறந்துவிட்டார்கள் என்று பொருள் தந்து நபித்தோழர்களுக்கிடையே ஒன்றுபட்ட கருத்தைக் கொண்டு வந்துவிட்டது. இந்த அளவுகோலை நாம் 5:75 ஆம் வசனமாகிய ஈஸா(அலை) ஒரு தூதரேயன்றி வேறில்லை. அவர்களுக்கு முன்னர் வந்த தூதர்கள் இறந்துவிட்டனர் என்பதற்கும் பொருத்தினால் நமக்கிடையே நிலவும் கருத்துவேறுபாடும் நீங்கும். 3:145 வசனத்திற்கு நபித்தோழர்கள் எல்லோரும் அன்று பொருள் கொண்டதுபோல், 5:75 வசனத்திற்கும் பொருள் கொண்டால், ஈஸா நபி (அலை) அவர்களும் இறந்துவிட்டார் என்பது தெளிவாகும். 

மேலும் 5:76, 3:145 ஆகிய வசனங்களில் அவர்களுக்கு முன்னர் உள்ள எல்லா தூதர்களும் சென்றுவிட்டனர் என்று பொருள் கொள்ளவேண்டுமேயொழிய அவருக்கு முன்னர் தூதர்கள் பலர் சென்றுவிட்டார்கள் என்று பொருள் கொள்ளக்கூடாது. அவருக்கு முன்னர் உள்ள எல்லா தூதர்களும் சென்று விட்டனர் என்று பொருள் கொண்டால்தான் ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களுக்கும் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களுக்கும் மரணம் உண்டு என்பது உறுதியாகும். மாறாக அவருக்கு முன்னர் தூதர்கள் பலர் சென்றுவிட்டனர் என்று பொருள் கொடுத்தால், முன்னர் உள்ள தூதர்களில் சிலர் செல்லவில்லை என்று பொருள் கொள்ளவேண்டியதுவரும். அப்படியாயின் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மற்றும் ஈஸா(அலை) ஆகியோர் மரணிக்கவும் மரணிக்காமல் இருக்கவும் (அதாவது இனிமேலும் மரணிக்காமல் இருக்கவும்) வாய்ப்பு ஏற்படுகிறது. 

இதனைப் புரிந்து கொள்வதற்காக ஓர் உதாரணத்தை இங்கே காட்ட விரும்புகிறேன். முஹம்மது ஒரு தூதரேயன்றி வேறல்லர். அவருக்கு முன்னர் வந்த தூதர்கள் பலர் ஆண்களாக இருந்ததனர். இவ்வாறு திருக்குரானில் இல்லைஎன்றாலும் இதை ஒரு வாதத்திற்காக எடுத்துக் கொண்டால் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன்னர் சில பெண்களும் தூதர்களாக இருந்தனர் என்றுதான் பொருள் கொள்ளமுடியும். ஆனால் முகம்மது ஒரு தூதரேயன்றி வேறல்லர், அவருக்கு முன்னர் வந்த எல்லா தூதர்களும் ஆண்களாக இருந்தனர் என்று வந்தால் மட்டுமே, ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன்னர் உள்ள எல்லா தூதர்களும் ஆண்கள்தான் என்று பொருள் கொள்ள முடியும். 

திருக்குர்ஆன் 5:76 வசனத்திற்கு அபூ அப்தில்லாஹ்வின் கற்பனை விளக்கத்திற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆனால் இவ்வசனத்தில் ஈஸா நபி மரணித்துவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், அதற்கு முன்னால் உள்ள வசனங்கள் அமைந்துள்ளன. 

திருக்குரானில் 5:73 இல், நிச்சயமாக மர்யமின் மகன் அல்லாஹ்தான் எனக் கூறுகிறவர்கள் திட்டவட்டமாக நிராகரிப்பவர்கள் ஆவர். மேலும் திருக்குர்ஆன் 5:74 இல் நிச்சயமாக, அல்லாஹ் மூவருள் ஒருவன் (பிதா, சுதன், பரிசுத்த ஆவி) என்று கூறியவர்கள் நிராகரித்துவிட்டனர். 

இவ்விரு வசனங்களிலும் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களை அல்லாஹ் என்றும் அல்லாஹ்வின் மகன் (சுதன்) என்றும் மக்கள் கூறியதை குப்ர் என்று அல்லாஹ் கண்டிக்கின்றான். 

மேலும் இவ்விருவசனங்களையும் தொடர்ந்து 5:76 இல் “மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரேயன்றி வேறில்லை. நிச்சயமாக அவருக்கு முன்னாலுள்ள தூதர்கள் மரணமடைந்து விட்டனர். அவருடைய தாயார் நேர்மையான பெண்ணாக இருந்தார். அவர்கள் இருவரும் உணவு உண்டு வந்தனர்” என அல்லாஹ் கூறுகின்றான். 

முதலில் 5:73, 74 வசனங்களில் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் கடவுள் என்றும் கடவுள் குமாரன் என்றும் மக்கள் நம்புவதை மறுத்து, அதாவது அவர் கடவுளோ அல்லது கடவுளின் குமாரரோ இல்லை என்று நிரூபிக்க அதற்கான நான்கு காரணங்களை 5:76 வசனத்தில் அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான். அதாவது, 
  • அவர் ஒரு தூதர் மட்டுமே. எனவே அவர் கடவுள் இல்லை. 
  • அவருக்கு முன்னர் வந்த தூதர்களைப் போல் ஈஸாவும் இறந்துவிட்டார். இறந்தவர் கடவுளாக இருக்க முடியாது. கடவுளுக்கு இறப்பு இல்லை. எனவே அவர் கடவுள் இல்லை.
  • அவர் மர்யத்தின் மகனாவார். எனவே அவர் கடவுள் குமாரர் அல்ல. மேலும் கடவுளுக்குப் பிறப்பு இல்லை. ஒரு பெண்ணுக்கு பிறந்தவர் கடவுளும் இல்லை. 
  • ஈஸா (அலை) அவர்களும் அவரின் தாயாரும் உணவு உண்டனர். எனவே அவர் கடவுள் இல்லை. காரணம் கடவுளுக்கு உணவு தேவை இல்லை. உணவின் தேவைக்கு உட்பட்டவர் கடவுளும் இல்லை. 
இவ்வாறு 5:76 வசனத்தில் ஈஸா(அலை) கடவுள் இல்லை என்பதை விளக்குவதற்கு நான்கு கருத்துக்களைக் கூறிய இறைவன் அதில் ஒன்றாக் ஈஸாவின் மரணத்தையும் குறிப்பிடுகின்றான். 

இவ்வாறு ஒவ்வொன்றையும் காரண காரியத்துடன் கூறும் திருக்குரானுடைய அழகையும் ஆழிய ஞானத்தையும் சிந்தித்துப் பார்க்காமல் முல்லாக்களைப் பின்பற்றி வெறும் கற்பனை கிஸ்ஸாக்களை ஈஸா நபியின் பெயரில் அவிழ்த்துவிட்டுள்ளார் அபூ அப்தில்லாஹ். பரிதாபம்!

5:76 வசனத்தில் கூறப்பட்டுள்ள நான்கு கருத்துக்களில் இரண்டாவது கருத்தாகிய, எல்லா தூதர்களையும் போல ஈஸாவும் மரணித்துவிட்டார் என்று தெளிவாகக் கூறியிருந்தும், அபூ அப்தில்லாஹ் அவர்கள் இனிமேல் தான் ஈஸா நபி (அலை) மரணிப்பார் என்று எழுதியிருப்பது மிகவும் பரிதாபத்திற்குரிய விஷயமாகும். 

திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் நிலவி வந்த இதுபோன்ற தவறான கருத்துக்களை திருக்குர்ஆன் மறுத்து உண்மையை நிலைநாட்டி உள்ளது. கிறித்தவர்கள் மர்யத்தின் மகனான ஈஸா(அலை) அவர்களை கடவுள் என்றும் கடவுள் குமாரன் என்றும் கூறி வந்தனர். இதனை மேற்சொன்ன திருக்குர்ஆன் வசனம் மறுக்கிறது. ஈஸா(அலை) இனிமேல்தான் மரணிப்பார் என்றால், அவர் கடவுள் இல்லை என்ற வாதம் எடுபடாது. ஈஸா நபி (அலை) மரணித்த பிறகே இந்த வாதம் முழுமையாகும். தௌஹீதுவாதி என்று தன்னைக் கூறிக் கொள்ளும் அபூ அப்தில்லாஹ் தௌஹீதை வலியுறுத்தும் இந்த இறைவாக்கை மறுக்கின்றார். 

திருக்குர்ஆன் தோன்றும் போது ஏறக்குறைய 600 ஆண்டுகளும், இன்று ஏறக்குறைய 2000 ஆண்டுகளும் ஆகிவிட்டது. ஒரு மனித தூதர் 2000 ஆண்டுகளாக இன்னும் உயிரோடு இருக்கிறார் என்றால் அவர் அவர் கடவுள்தான் ஏனென்றல் “ நபியே உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் மிக நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லை. நீர் இறந்து அவர்கள் உயிரோடு இருப்பதா” (21:35) என்ற வசனத்தின்படி எந்த மனிதருக்கும் நீண்ட ஆயுள் இல்லை என்பதும் ஈஸா(அலை) ஒரு மனிதர். எனவே அவரும் நபி (ஸல்) காலத்தில் உயிரோடு இல்லை என்பதும் தெளிவாகிறது.

அபூ அப்தில்லாஹ் தனது நூலில் 24 வது பக்கத்தில் 5:76 இறை வசனம் மூலம் ஈஸா(அலை) அவர்களின் மரணம் குறித்து அன்றும் மக்களிடையே சந்தேகம் நிலவியது, ஈஸா (அலை) அவர்கள் மரணிக்காமல் தூல உடலுடன் அல்லாஹ்வின் அளவில் உயர்த்தப்பட்டுள்ளதால் அவர்கள் மரணமற்றவரா? மரணமற்றவராயின் அல்லாஹ்வுக்கு இணையாகுமே என காதியானிகள் இன்று கூறுவது போலவே அன்றும் சிலர் வினவி இருக்கலாம் என்று எழுதியுள்ளார். (பக்கம் 24), மேலும் (3:144) இந்த இறைவசனம் இறங்கியவுடன் குறைஷி குப்பார்கள், இன்று காதியானிகள் ஈஸா(அலை) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று 5:75 வசனத்திற்கு பொருள் கொள்வது போல் 3:144 வசனத்திற்கு பொருள் கொண்டு முஹம்மது (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கவே, அவர்கள் உஹது யுத்தக்களத்தில் மாண்டு விட்டார்கள் என்ற வதந்தியைப் பரப்பினார்கள், ஆனால் பின்னர் குறைஷிக் காபிர்களும் தெள்ளத் தெளிவாக 3:144 வசனத்திற்கு பொருள் கொண்டு முஹம்மது (ஸல்) அவர்கள் இறந்துவிடவில்லை, இனிதான் இறப்பார்கள் என்ற உண்மையை உணர்ந்து கொண்டார்கள்.... (பக்கம் 25) மேலும் 5:75 வசனம் இறங்கி இதுவரை மரணமடையாத நிலையிலிருக்கும் ஈஸா(அலை) அவர்கள் உலகம் அழியும் முன் பூமிக்கு இறங்கி வந்து வாழ்ந்து திண்ணமாக மடிந்து அடைக்கப்படுவார்கள் என்பது உறுதியாகிறது, அதன் பின்னரும் ஈஸா (அலை) அவர்கள் மீது கொண்ட பாசம், பற்று காரணமாக தம் நிலைமாறி மக்கள் ஈஸா(அலை) அவர்கள் மரிக்கவில்லை என்றும், முன்பு போல் திரும்பவும் வருவார்கள் என்றும் கூறத் தலைப்படுவார்கள், அத்தருணத்தில் இந்த வசனம் ஓதிக்காட்டப்படும்; ஈஸா(அலை) அவர்களின் மரணம் உறுதி செய்யப்படும், பக்கம் (25, 26)

நம் பதில்: 

கடந்தகால, எதிர்கால ஞானம் அபூ அப்தில்லாஹ்வுக்கு எப்படி கிடைத்தது? மேலே சொல்லப்பட்ட கற்பனை நயம் செறிந்த கதைகளுக்கு ஹதீது சான்றுகள் இருப்பின் தருமாறு அபூ அப்தில்லாஹ்விடம் வேண்டுகிறேன். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் சொல்லாத ஒன்றை இட்டுக்கட்டிச் சொல்வது வழிகேடேயன்றி வேறில்லை. 

திருக்குர்ஆன் 3:145 வசனம் பற்றிய விளக்கம்: 

முஹம்மது தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன் தோன்றிய எல்லாத் தூதர்களும் மரணமடைந்துவிட்டனர். எனவே அவர் மரணமடைந்துவிட்டாலோ கொலை செய்யப்பட்டாலோ நீங்கள் உங்கள் குதிகால்களில் திரும்பிச் சென்று விடுவீர்களா? (3:145) 

முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன் தோன்றிய எல்லா தூதர்களும் மரணித்திருந்தால் மட்டுமே இந்த வசனத்தில் இவ்வாறு கூற முடியும். அவ்வாறு அனைவரும் மரணித்திருந்தால் தான் முஹம்மது (ஸல்) அவர்களின் மரணமும் உறுதி என்று பொருள் கொள்ளமுடியும். மேலும் இவ்வசனத்தில் வரும் அவர் மரணித்துவிட்டாலோ கொல்லப்பட்டுவிட்டாலோ நீங்கள் உங்கள் குதிகால்களில் திரும்பிச் சென்று விடுவீர்களா என்ற பகுதி அன்னார் போரில் கொல்லப்பட்டு விட்டார் என்று வதந்தி பரவியதன் காரணமாக பலர் நிலைகுலைந்து மனம் தடுமாறி விட்டனர் என்பதையும், திரும்பிச் செல்லத் தொடங்கினர் என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இறக்கமாட்டார்கள் என்று எண்ணியிருந்தனர். என்பதனையும் தெளிவாக்குகிறது. எனவே எல்லாம் அறிந்த அல்லாஹ் திருக்குர்ஆன் 3:145 வசனத்தை இறக்கினான். 

இந்த வசனத்தின் மூலம் முஹம்மது ஒரு மனிதர் ஆவார். அவர் இறக்காமல் இருக்க கடவுள் அல்லர். முஹம்மதுக்கு முன்னர் தோன்றிய எல்லா தூதர்களும் இறந்துவிட்டனர். அவர்களுள் யாராவது ஒருவர் இறக்காமல் இன்று உயிரோடு இருந்தால்தானே இவரும் இறக்காமல் இருக்க முடியும். முஹம்மதுக்கு முன்னர் வந்த எல்லா தூதர்களும் இறந்ததுபோல் இவரும் இறப்பார் என்ற கருத்தை தெரிவிக்கிறது. இவ்வாறு இந்த வசனம் ஈஸா நபி (அலை) அவர்களின் மரணத்தை உறுதி செய்துவிடுகிறது. 

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இவ்வசனம் இறங்கி 9 வருடங்களுக்குப் பின் மரணம் அடைகிறார்கள். அப்போது அன்னார் மரணிக்கவில்லை என்று சிலர் கருதினர். ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மரணிக்கவில்லை என்றும் அன்னார் மூஸா(அலை) அவர்கள் 40 நாள்கள் தமது சமுதாயத்தைப் பிரிந்து இறைவனைக் காண்பதற்குச் சென்றதைப் போன்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும் தற்காலிகமாக நம்மை விட்டுப் பிரிந்திருக்கிறார்கள். மீண்டும் வந்து அன்னார் இறந்துவிட்டதாகக் கூறிய முனாபிக்குகளைத் தண்டிப்பார் என்றும் கூறிக் கொண்டேயிருந்தார்கள். 

இதிலிருந்து நபித்தோழர்கள் மத்தியில் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்கள் இறக்காமல் இறைவன் அளவில் உயர்த்தப்பட்டார்கள் என்ற தவறான நம்பிக்கை இருக்கவில்லை என்று தெளிவாகிறது. அப்படி இருந்திருந்தால் அவர்கள் ஈஸா(அலை) அவர்களைப் பற்றிதான் கூறியிருப்பார்கள். அவ்வாறு ஈஸா(அலை) அவர்களைப் பற்றி கூறாமல் மூஸா(அலை) அவர்களின் சம்பவத்தைக் கூறி இருப்பதனால் நபித்தோழர்கள் ஈஸா(அலை) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் இருந்தார்கள் என்று உறுதியாகிறது. 

பின்னர் ஹஸ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்கள் வந்து ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் முகத்தைப் பார்த்து முத்தமிட்டு 3:145 வசனத்தை ஓதினார்கள். இங்கே ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள், முஹம்மது ஒரு தூதரேயன்றி வேறல்லர். அவருக்கு முன்னர் தோன்றிய எல்லா தூதர்களும் மரணித்து விட்டனர் என்ற வசனத்தை ஓதி, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்பதை உறுதி செய்தார்கள். 

மேலும் யார் முகம்மதை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும்; அந்த முஹம்மது இறந்துவிட்டார் என்றும் ஹஸ்ரத் அபூபக்கர் (ரயில்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, எண். 4454) இதிலிருந்து இறந்துபோன முஹம்மது (ஸல்) அவர்களை இறக்கவில்லை என்று கருதினாலோ, அல்லது அபூ அப்தில்லாஹ்வின் கற்பனையைப் போன்று இனிமேல்தான் இறப்பார் என்று கருதினாலோ அது முஹம்மது (ஸல்) அவர்களை வணங்குவதற்கு ஒப்பாகும் என்றுதான் ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள். இதன்படி ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்ட ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் இறக்கவில்லை; ஆயினும் இறப்பவர்களே என்று கூறுவதன் மூலம் அபூ அப்தில்லாஹ் ஈஸா நபி (அலை) அவர்கள் இறக்கவில்லை; ஆயினும் இறப்பவர்களே என்று கூறுவதன் மூலம் அபூ அப்தில்லாஹ் ஈஸா(அலை) அவர்களை வணங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.
Read more »

Apr 12, 2014

நபி கோழையாவார்களா? - அபூ அப்தில்லாஹ்விற்கு பதில்



அபூ அப்தில்லாஹ் 14 வது பக்கத்தில் எழுதுகிறார்

காதியானிகள் சொல்வதுபோல் உண்மையான ஈஸா(அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட்டிருந்து இறக்கப்பட்டிருந்தால்,

  • அந்நிலையில் அவர்களை விட்டுவிட்டு அவர்களின் சீடர்கள் பிரிந்து சென்றிப்பார்களா?
  • ஈன்றெடுத்த தாயும், தன் உண்மை சீடர்களும் அறியாமல் ஈஸா(அலை) காஷ்மீருக்கு ஓடி ஒளிந்துகொண்டார்களா?
  • பெற்ற தாயையும், உற்ற சீடர்களையும் மறந்து தனக்குற்ற நபித்துவப் பணியையும் புறக்கணித்து ஒன்றல்ல, இரண்டல்ல நூற்றியிருபது வயது வரை வாழ்ந்திருப்பார்களா?
  • ஈஸா(அலை) உண்மை இறைத்தூதர், மிர்ஸா குலாம் அஹ்மதைப் போல் போலி நபி அல்ல சிந்திக்க வேண்டுகிறோம். 
  • காஷ்மீருக்கு ஓட வேண்டிய அவசியமென்ன 
  • நபி கோழையாவார்களா?

நம் பதில்

அபூ அப்தில்லாஹ்விற்கு திருக்குர்ஆன் ஞானமும் நபிமார்களின் வரலாறும் அறவே தெரியவில்லை என்பதை பக்கம் 14 ல் உள்ள அவரது கேள்விகள் அம்பலப்படுத்துகின்றன. 

திருக்குர்ஆன் 5:22-25 வசனங்களில் மூஸா (அலை) தன் சமுதாயத்தை நோக்கி, என் சமுதாயமே! அல்லாஹ் உங்களுக்கு விதித்துள்ள புனித பூமியில் நுழையுங்கள். மேலும் புற முதுகு காட்டாதீர்கள் என்று கூற,

அதற்கு அவர்கள் மூஸாவே! கொடிய ஆற்றல் மிக்கவர்கள் அதில் இருக்கின்றார்கள் அவர்கள் அதில் இருக்கின்றவரை நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். எனவே நீரும் உமது இறைவனும் சென்று அவர்களுடன் போரிடுங்கள். நாங்கள் இங்கேயே உட்கார்ந்திருப்போம் என்று கூறினார்கள். 

மூஸா நபி (அலை) அவர்களின் சீடர்களின் நிலையைப் பாருங்கள்! திருக்குர்ஆன் 23:51 வது வசனத்தில். 

நாம் மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அடையாளமாக்கினோம். அவ்விருவருக்கும் தங்குவதற்கு ஏற்றதும் நீரூற்றுகளைக் கொண்டதுமான ஓர் உயர்ந்த இடத்தில் தஞ்சம் – அடையாளம் அளித்தோம். 

ஆவைனாஹுமா – இச்சொல் திருக்குர்ஆனில் ஈமானையும் உயிரையும் காக்க ஹிஜ்ரத் செய்து வேறொரு இடத்தில் தஞ்சம் புகுதல் எனும் பொருளில் வருவதைக் காணலாம். குகையில் இளைஞர்கள் அடைக்கலம் புகுந்ததையும், முஸ்லிம்கள் மதீனாவில் அடைக்கலம் புகுந்ததையும் திருக்குர்ஆன் கூறுகிறபோது இச்சொல்லையே பயன்படுத்துகிறது. 

எனவே, ஈஸா நபி(அலை) அவர்களும், மர்யம்(அலை) அவர்களும் அல்லாஹ்வின் கட்டளைப்படி காஷ்மீரில் அடைக்கலம் புகுந்தனர் என்பது தெளிவாகிறது. 

திருக்குர்ஆன் 8:6, 9:40 ஆகிய வசனங்களில் நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு (ஹிஜ்ரத்) செய்கிறார் என்று வருகிறது. அபூ அப்தில்லாஹ் நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன? என்றும் நபி கோழையாவார்களா? என்றும் எண்ணுவாரா? 

திருக்குர்ஆன் 21:88 இல் மீனுடையவர் (யூனுஸ் நபி) கோபித்துக் கொண்டு சமுதாயத்தை விட்டு விட்டு கப்பலில் ஏறிச்செல்கிறார். எனவே அவர் நபியில்லை என்று அபூ அப்தில்லாஹ் கருதுவாரா? 

திருக்குர்ஆன் 27:11 இல் மூஸா நபி(அலை) தன் கைத்தடியைப் பாம்பெனக் கண்டு பின்வாங்கிச் செல்கிறார். இறைவன் மூஸாவே! நீர் அஞ்சவேண்டாம் எனக் கூறினான். திருக்குர்ஆன் 20:67-68 இல் சூனியக்காரர்களின் கயிறுகளும், கம்புகளும் மூஸா நபியின் கண்களுக்குப் பாம்பாகக் காட்சியளிக்கிறது. மூஸா நபி (அலை) தன் மனதிற்குள் அச்சத்தை உணர்ந்தார் என்று வருவதால், அபூ அப்தில்லாஹ் மூஸா நபியை கோழை என்றும் நபியில்லை என்றும் நம்புவாரா?
Read more »

Feb 3, 2014

அல்லாஹ் பெரிய சதிகாரனா? அபூஅப்தில்லாஹ்விற்கு பதில்


இன்னும் (ஈஸாவைக் கொல்ல) அவர்கள் திட்டமிட்டுச் சதி செய்தார்கள், அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான் (3:54) (அபூ அப்தில்லாஹ் நூல் பக்கம் 18)

யூதர்கள் ஈஸா(அலை) அவர்களைப் பிடித்து சிலுவையில் அறைந்து  கொன்றுவிட எண்ணினர். இது யூதர்கள் செய்த சதி, அல்லாஹ்வோ ஈஸா (அலை) அவர்களை யூதர்கள் பிடிக்க விடாது தன்னளவில் உயர்த்திக் காப்பாற்றி விட்டான். யூதர்கள் வேறொரு யூதனைப் பிடித்து சிலுவையில் அறைந்து கொன்று விட்டனர். இவ்வாறு யூதர்களின் சதியை அல்லாஹ் முறியடித்துவிட்டான். எனவே அல்லாஹ் சதிகாரர்களுக்கு எல்லாம் மிகப் பெரிய சதிகாரன். (அபூ அப்தில்லாஹ் எழுதிய நூல் : பக்கம் 18-20)

நம் பதில்:

1. யூதர்கள் ஈஸா (அலை) அவர்களைப் பிடித்து சிலுவையில் அறைந்து கொல்ல எண்ணினர். இதுவே யூதர்கள் செய்ய நினைத்த சதி, அல்லாஹ்வோ திட்டமிடுபவர்களுக்கு எல்லாம் மிகப்பெரிய திட்டமிடுபவன். எனவே யூதர்களின் தீய திட்டத்தை முறியடித்து ஈஸா (அலை) அவர்களை சிலுவையிலிருந்து காப்பாற்றி காணாமல் போன பத்து கோத்திரமாகிய இஸ்ரவேலர்க்ளைத் தேடிச் சென்று அவர்களை நேர்வழிப்படுத்த ஹிஜ்ரத் செய்ய வைத்தான். இறுதியாக இந்தியா வந்து அங்கு காஷ்மீரில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு தப்லீக் செய்து அவர்களுடன் வாழ்ந்து இயற்கை மரணத்தை அடையச் செய்தான். இது அல்லாஹ்வின் திட்டமாகும்.
இவ்வாறு யூதர்களின் சதி தோல்வி கண்டது. அல்லாஹ்வின் திட்டம் முழுமையாக நிறைவேறியது.

2. அபூஅப்தில்லாஹ் திருக்குர்ஆன் 3:54 வசனத்திற்கு தந்திருக்கும் பொருளில் அல்லாஹ்வை மிகப்பெரும் சதிகாரன் ஆக்கி விட்டார். (நவூதுபில்லாஹ்)
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் பிள்ளைகளுக்கு அழகிய பெயர்களை சூட்டுமாறு கூறியுள்ளார்கள். அல்லாஹ்வை அழகிய பயர்களால் அழைக்குமாறு திருக்குர்ஆன் கூறுகிறது. இப்படி இருக்க அப்தில்லாஹ் அல்லாஹ்வுக்கு வழங்கியுள்ள பெயரைப் பார்க்கும் போது அவரே தன் நூலில் பக்கம் 19 இல் அல்லாஹ்வின் மகத்துவத்தையும் கண்ணியத்தையும் உணராத ஈனர்களின் சிந்தையே அல்லாமல் ஈமான் உடையவர்களின் சிந்தை இத்தரம் இழிவுடையதாக இருக்க முடியுமா? அன்று எழுதிய வசனம் அவருக்கே (அபூ அப்தில்லாஹ்வுக்கே) சரியாக பொருந்துவதனை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

இந்த வசனத்தில் ம(க்)கர் எனும் அரபிச் சொல் வந்துள்ளது. இதற்கு சதி, சூழ்ச்சி என்ற பொருளும் திட்டம் என்ற பொருளும் உண்டு. திட்டம் நல்ல திட்டம், தீய திட்டம் என இரு வகைப்படும். யூதர்கள் இறைவனுக்கும் அவனது நபிக்கும் எதிராகச் செயல்பட்டனர். எனவே அதனைச் சதி, சூழ்ச்சி என்று கூறலாம். ஆனால் அல்லாஹ்வோ இஸ்ரவேலர் சமுதாயத்தின் நலனுக்காக ஒரு நபியை அனுப்பியுள்ளான். அதனை சதி என்று கூற, அபூ அப்தில்லாஹ்வுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ் சதி செய்தான் என்று எழுதும் இவர்கள் எந்த அளவுக்கு ஞன சூனியங்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஒரு சொல் அல்லாஹ்வுக்கு வரும்போது அவன் தகுதிக்கேற்ப ஒரு பொருளும், அச்சொல் நபிக்கும் வருபோது அவர்கள் தகுதிக்கேற்ப பொருளும் பிறருக்கு வரும் போது அவர்கள் தகுதிக்கு ஏற்ப பொருளும் கொள்ளவேண்டும் என்ற சாதாரண விஷயம் கூட அபூ அப்தில்லாஹ்வுக்கு தெரியவில்லை!

இவர்களின் அறபி மொழியறிவு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். "சதிகாரர்களுகெல்லாம் சதிகாரன் என்று அல்லாஹ் தன்னையே குறிப்பிடுகின்றான். (பக்கம் 20) திருக்குரானில் அல்லாஹ் தன்னைக்குறித்து பெரிய சதிகாரன் என்று கூருகின்றானாம். ஆல இம்ரான் அதிகாரத்தின் 55 ஆம் வசனத்திற்கு இவர் கொடுத்துள்ள பொருள் இது. இந்த ஆயத்தின் அர்த்தத்தையே அனர்த்தமாக்கியிருக்கிறார்.

'வ மகரு வமகரல்லாஹு வல்லாஹு ஹைருல் மாஹிரீன்'

என்பதன் பொருள், " அவர்கள் (சதித்) திட்டம் போடுகிறார்கள். அல்லாஹ்வும் (அதனை முறியடிக்க) திட்டம் போடுகிறான். ஆனால் திட்டமிடுபவர்களில் மிகச் சிறந்தவன் அல்லாஹ்வே ஆகும் "என்பதே!

இது போன்ற ஆயத்துகளுக்கு பொருள் தருவதில் பல திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்கள் கூட தவறே செய்திருக்கின்றனர். அல்-பக்கரா அதிகாரத்தின் 15,16 திருவசனங்களில் காணப்படும் "இன்னமா நஹ்னு முஸ்தஹ்சிவூன், அல்லாஹு யஸ்தஹ்சிவூபிஹீம்" என்றிருப்பதற்கு, 'நாங்கள் பரிகாசம் பண்ணுகிறோம் அல்லாஹ்வும் அவர்களை பரிகாசம் பண்ணுகிறான் என்று மொழி பெயர்த்துள்ளனர். அதாவது நயவஞ்சகர்கள், நம்பிக்கையாளர்களை பரிகாசம் பண்ணுகிறார்களாம் அதற்காக அல்லாஹ் அந்த நயவஞ்சகர்களை பரிகாசம் செய்கிறானாம். எப்படி இருக்கிறது கதை! யாரேனும் பரிகாசம் செய்தால் அவர்களைத் திருப்பி பரிகாசம் செய்வதற்கு அல்லாஹ் என்ன சிறுபிள்ளையா? (நவூதுபில்லாஹ்) ஒரு செயலுக்குரிய தண்டனையாக அந்த செயலையே குறிப்பிடுவது அரபி மொழி வழக்காகும். 2:195, 42:41 ஆகிய ஆயத்துகளில் இவ்வாறே வந்துள்ளது. அதனால் மேற்கண்ட திருவசனத்திலுள்ள, "அல்லாஹு யஸ்தஹ்சிவூ பிஹிம்" என்பதற்கு அல்லாஹ் அவர்களின் பரிகாசத்திற்கு தண்டனை வழங்குவான் என்றே பொருள் தரவேண்டும்.

இப்படி அறபி மொழியின் மொழி வழக்குகளை அறியாத இந்த ஆலிம்சாக்கள் சில ஆயத்துகளுக்குத் தவறான அர்த்தம் செய்துவிடுவதுண்டு. அதன் காரணமாக விபரீதமான கருத்துக்கள் உருவானால் அதை சமாளிக்க தங்களின் கற்பனை வளத்தைப் பயன் படுத்தி கதைகளைப் புனைந்து விடுவர்.

இப்படி புனையப்பட்ட கதையே "ஈசா நபியின் வானுலகப் பயணம்." 

மேலும் இன்னொரு கோணத்தில் அவ்வசனத்திற்கு யூதர்கள் சதி செய்தனர். அல்லாஹ் அந்த சதிக்குரிய தண்டனையைக் கொடுத்தான் என்று எழுதியிருந்தால் கூட அதனை ஒப்புக் கொள்ளலாம். அவ்வாறு கூறாமல் அபூ அப்தில்லாஹ் அவர்கள் அல்லாஹ்வை மிகப்பெரிய சதிகாரனாக்கியதிளிருந்து அபூ அப்தில்லாஹ்வுக்கு அரபி மொழி வழக்கோ, மொழி அறிவோ இல்லை என்பது புலனாகிறது. 
Read more »

Jan 27, 2014

அகக்கண்ணும் புறக்கண்ணும்



பக்கம் 58 இல் அபூ அப்தில்லாஹ், மிஹ்ராஜில் நபி (ஸல்) அவர்கள், ஈஸா (அலை) அவர்களைக் கண்களால் கண்டது மிர்ஸா குலாமால் ஊர்ஜிதம் செய்யப்படுகிறது. கண்களால் பார்ப்பதென்றால் தூல உடலுடன் தான் நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜுக்குச் சென்றிருக்கவேண்டும். கனவுக் காட்சியைக் கண்களால் கண்டதாக எந்த அறிவீனனும் சொல்லமாட்டான் என்று எழுதியுள்ளார். 

நம் பதில்: 

1) யூஸுப் நபி அவர்கள், பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் நான் கண்டேன். அவை எனக்கு ஸஜ்தா செய்யக் கண்டேன். என்றும் சிறைக் கைதிகளும் மதுரசம் பிழியக் கண்டேன் என்றும், தலையில் ரொட்டியைச் சுமந்திருக்க அதைப் பறவை சாப்பிடக் கண்டேன் என்றும், எகிப்திய அரசனும் கொளுத்த ஏழு மாடுகளை மெலிந்த ஏழு மாடுகள் தின்பதையும், பசுமையான ஏழு கதிர்களையும் காய்ந்த ஏழு கதிர்களையும் கண்டதாகவும் (12 வது அதிகாரம்) காண்கிறோம், அவர்கள் எக்கண்களால் கண்டனர்? அக்கண்கள் கண்ட காட்சிக்கு தூல உடல் இருந்ததா? 

2) திருக்குர்ஆன் 37:103 இல் என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பதுபோல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய்? என்பதைச் சிந்தித்து கூறு என்று (இப்ராஹீம் நபி இஸ்மாயீல் நபியிடம்) கேட்டார். 
என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிட்டதைச் செய்யுங்கள்.... என்று பதிலளித்தார். 

இறைவன் தன் கட்டளையைக் கனவின் மூலம் ஒரு நபிக்குக் காட்ட அதனை அவர் காண்கிறார். அதன்படி செயல்படுகிறார் என்றால் எந்தக் கண்களால் அவர்கள் கண்டார்கள்? 

அப்படிஎன்றால் அபூ அப்தில்லாஹ்வின் கூற்றின்படி, ஹஸ்ரத் இப்ராஹீம் நபி (அலை), ஹஸ்ரத் யூசுப் நபி (அலை), ஹஸ்ரத் இஸ்மாயீல் நபி (அலை) போன்றோரை அறிவீனன் என்று அபூஅப்தில்லாஹ் கருதுகிறாரா? கண்களால் கண்டேன் என்று சொன்னால் அதற்கு புறக்கண் தான் என்று நம்புவதும் பேசுவதும் அகக்கண் குருடர்களின் அறிவீனமான பேச்சாகும். 
Read more »

Dec 30, 2013

அபூ அப்தில்லாஹ்வின் அறிவீனம்


அபூ அப்தில்லாஹ் தன் நூல் பக்கம் 37 இல் “ஒரு மனிதனின் உயிர் உறக்கத்தின் நிலையில் கைப்பற்றபட்டாலும் அவனை சுற்றி நடைபெருபவைகளை அவன் அறியமாட்டான். இந்நிலையில் அவன் அவைகளின் நிமித்தம் குற்றம் சாட்டப்படவும் மாட்டான். இந்த அடிப்படையிலேயே ஈஸா (அலை) அவர்கள் 5:117 வசனத்தில் என்னைக் கைப்பற்றிய பின், உலகில் இல்லாத காலத்தில் அவர்கள் செய்தவைகளை நான் அறியேன், நீயே நன்கறிந்தவனாக இருக்கிறாய் என்று கூறுகிறார்கள். எனவே 5:117 வசனத்தை ஆதாரமாக காட்டி ஈஸா (அலை) அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று காதியானிகள் கூறுவது அறிவீனமாகும்” என்று எழுதியுள்ளார். 

நம் பதில்:-

இவ்வாறு அபூ அப்தில்லாஹ் போன்றவர்கள் எழுதுவார்கள் என்று தெரிந்துதான் எல்லாம் அறிந்த அல்லாஹ் அதற்கு இடம் வைக்காமல் நபி (ஸல்) அவர்கள் மூலம் 5:117,118 வது வசனத்திற்கு ஒரு விளக்கத்தையும் கொடுத்துள்ளான் போலும். அந்த நபி மொழியின் படி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தன் மக்கள் மத்தியில் வாழ்ந்தகாலம், பின்னர் அங்கிருந்து ரூஹ் மட்டும் கைப்பற்றபடுதல், பின்னர் தன் மரணத்திற்குப் பிறகு தன் தோழர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியாத மறுமை வாழ்வு ஆகியவை தனக்கு நடந்தது போன்று ஈஸா நபிக்கும் நடந்தது என்று நபி (ஸல்) அவர்கள் உறுதியாகக் கூறியுள்ளார்கள்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ ، أَخْبَرَنَا سُفْيَانُ ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ النُّعْمَانِ ، قَالَ : حَدَّثَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ ، عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ :
إِنَّكُمْ مَحْشُورُونَ حُفَاةً عُرَاةً غُرْلًا ، ثُمَّ قَرَأَ كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ سورة الأنبياء آية 104 وَأَوَّلُ مَنْ يُكْسَى يَوْمَ الْقِيَامَةِ إِبْرَاهِيمُ ، وَإِنَّ أُنَاسًا مِنْ أَصْحَابِي يُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ فَأَقُولُ : أَصْحَابِي ، أَصْحَابِي ، فَيَقُولُ : إِنَّهُمْ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ فَأَقُولُ كَمَا ، قَالَ : الْعَبْدُ الصَّالِحُ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي إِلَى قَوْلِهِ الْعَزِيزُ الْحَكِيمُ سورة المائدة آية 117 - 118 

ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:- நியாயத் தீர்ப்பு நாளில் என் உம்மத்தாரிலிருந்து சிலர் நரகத்தின்பால் இழுத்துச் செல்லப்படுவார்கள். அப்போது நான் என் இறைவனே இவர்கள் என் அருமைத் தோழர்கள் எனக் கூறுவேன். இதரிக்கு என்னிடம் உமக்குப் பிறகு இவர்கள் புதுமையாக என்ன செய்தார்கள் என்று நீர் அறிய மாட்டீர். என்று கூறப்படும். அப்பொழுது நான் அந்த நல்லடியார் (ஈசா நபி) கூறியது போல் நான் அவர்களோடு இருந்த காலம் வரை அவர்களுக்கு சாட்சியாக இருந்தேன். ஆனால் நீ என்னை மரணிக்கச் செய்த பிறகு நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய் என்று கூறுவேன். அப்பொழுது நீர் இவர்களை விட்டு பிரிந்ததிலிருந்து இவர்கள் மார்க்கத்தை விட்டு திரும்பி போனார்கள் என்று கூறப்படும்." ( புகாரி கிதாபுத் தப்ஸீர் 3349)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இத்திருமொழியில் அந்த நல்லடியார் கூறியது போன்று என்று ஈசா நபியை சுட்டிக்காட்டி, அவர்கள் குர் ஆனின் எந்த சொற்களை உபயோகித்திருக்கிறார்களோ அதே சொல்லான 'வகுன்து அலைஹிம் ஷஹீதன் மாதும் துஃபீஹிம் பலம்ம தவஃப்பைத்தனீகுன்த அன்தர்ரகீப அலைஹிம், அதாவது அவர்களோடு இருந்த காலம் வரை அவர்களுக்கு சாட்சியாக இருந்தேன் ஆனால் நீ என்னை மரணிக்க செய்தபின் நீயே அவர்களின் கண்காணிப்பாளனாக இருந்தாய் என்று கூறியிருக்கிறார்கள். திருக்குரானில் ஈசா நபி (அலை) அவர்கள் கூறிய இந்த சொற்களில் ஒரு எழுத்துக் கூட மாற்றம் இல்லாத சொல்லாக ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மறுமையில் கூறுகிறார்கள். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பலம்ம தவஃபைத்தனீ என்று உபயோகித்த சொல்லிற்கு நீ என்னை மரணிக்க செய்தபின் என்று சரியான பொருள் கொடுத்திருக்கும் போது, ஈசா (அலை) அவர்கள் கூறும் அதே சொல்லான பலம்ம தவஃபைத்தனீ என்ற சொல்லுக்கு 'நீ என்னை ( உடலோடு வானத்திற்கு) கைப்பற்றிய பின்.' என்று விளக்கம் கொடுப்பது என்ன நியாயத்தில் இருக்கிறது.

நபி (ஸல்) அவர்களுக்காக கொடுக்கப்பட்ட சரியான பொருளாகிய 'நீ என்னை மரணிக்க செய்தபின்' என்ற பொருளையே ஈசா(அலை) அவர்களுக்கும் கொடுத்து இந்த பூமியில் ஈசா நபி இறந்துவிட்டார்கள் என்றும், அவர்கள் இறந்த பின் அவர்களைப் பின்பற்றிய மக்கள் அவர்களை இறைவனாகவும், இறைவனின் குமாரனாகவும் வணங்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் உறுதியான நம்பிக்கைக் கொண்டு திருக்குரானுக்கு எதிரான நம்பிக்கையினால் ஏற்படும் குற்றத்திலிருந்து விலகிக் கொள்ளவேண்டும்

5:117,118 வசனத்தில் (தற்காலிக மரணமாகிய) தூக்கம், இரவு என்ற சொற்கள் இடம் பெறவில்லை. மேலும் நபி (ஸல்) அவர்களைப் போன்று ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களும் மீனும் இவ்வுலகிற்கு வரமாட்டார் என்றும் அந்த நபி மொழி உணர்த்துகிறது. அதுமட்டுமல்ல, ஈஸா நபி (அலை) உயிரோடு உயர்த்தப்பட்ட பிறகு மீண்டும் வருவார் என்றும் உலகில் அவர் இல்லாத காலத்தில் நடந்தவைகளை அவர் அறியமாட்டார் என்பதும் தவறு ஏனென்றால் அபூ அப்தில்லாஹ்வின் தவறான கருத்துப்படி அந்த ஈஸா மீண்டும் உலகில் வரும்போது அவரையும் அவரது தாயரையும் கிருஸ்தவர்கள் வணங்கிக் கொண்டிருப்பதை தெரிந்து கொண்டு மரணித்து மீண்டும் மறுமையில் இறைவனை சந்திக்கின்றபோது என்னை உயர்த்திய பிறகு நடந்தவைகளை நான் அறியவில்லை. ஆனால் மீண்டும் உலகிற்கு சென்ற பிறகு கிருஸ்தவர்கள் என்னையும் என் தாயாரையும் வணங்கிக் கொண்டிருந்ததை நான் கண்டேன் என்றுதான் கூறவேண்டும். அப்படிக் கூறாததனால் அவர் மீண்டும் வரப்போவதில்லை என்பது தெளிவாகிறது.
Read more »