அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Apr 29, 2014

ஈஸா நபி (அலை) அவர்களின் மரணமும் நஜாத் ஏட்டின் மூடநம்பிக்கையும் – 3


“ஈஸா (அலை) அவர்கள் மரணிக்கவில்லை ஆயினும் மரணிப்பவர்களே” என்ற நஜாத் ஆசிரியரின் மூட நம்பிக்கை அடிப்படையற்றது என்பதை கீழ்வரும் திருக்குர்ஆன் வசனம் தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டுகிறது: 

“என்னையும் எனது தாயாரையும் அல்லாஹ்விற்குப் பகரமாக இரு தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள்” என மர்யமின் மகனான ஈஸாவே நீர் மக்களிடம் கூறினீரா? என்று அல்லாஹ் கேட்கும்போது அவர் இவ்வாறு பதிலளிப்பார். நீ தூயவன், எனக்கு உரிமையில்லாத என்னால் ஒருபோதும் கூற முடியாது. நான் அவ்வாறு கூறியிருந்தால் நிச்சயமாக நீ அதனை அறிந்திருப்பாய் எனது உள்ளத்தில் உள்ளதை நீ அறிவாய். மேலும் உனது உள்ளத்தில் உள்ளதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக மறைவானவற்றை அறிகின்ற்றவன் நீ ஒருவனே. 

“எனது இறைவனும் உங்களின் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என எனக்குக் கூற நீ கட்டளையிட்டதையல்லாமல் வேறெதனையும் நான் கூறவில்லை. மேலும் நான் அவர்களோடு இருந்தவரை அவர்களுக்கு நான் ஒரு சாட்சியாவேன். ஆனால் நீ என்னை மரணிக்கச் செய்த பிறகு நீயே அவர்களைக் கண்காணிப்பவனாவாய். மேலும் நீயே அனைத்தையும் கவனிப்பவனாவாய்! (5:117,118) 

‘ஒட்டக் கூத்தருக்கு இரட்டைத் தாழ்பாள் என்று கூறப்படுவது போன்று இந்த வசனம் நஜாத் ஆசிரியரின் இரண்டு கூற்றுகளையும் அடியோடு தகர்த்து விடுகிறது. இந்த வசனம் ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்பதையும் அவர்கள் திரும்ப வரபோவதில்லை என்பதையும் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாக்கிவிடுகின்றது. “நீ என்னை மரணிக்கச் செய்தபின்” என்ற சொற்றொடர், ஈஸா நபியின் சமுதாயம் இறைவனுக்கு இணைவைப்பதற்கு முன்பே அதாவது ஈஸா நபியையும் அவர்களுடைய தாயாரையும் இரு தெய்வங்களாக எடுத்துக் கொளவதற்கு முன்பே ஈஸா நபி மரணித்துவிட்டார்கள் என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. 

நபி பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்பே ஈஸா நபியின் சமுதாயம் இணை வைத்தலில் இறங்கிவிட்டது என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. எனவே நபி பெருமானார் (ஸல்) அவர்கள் தோன்றுவதற்கு முன்னரே ஈஸா(அலை) அவர்கள் மரணித்துப் போனார்கள் என்றே சொல்லவேண்டும். 

அடுத்து ஈஸா (அலை) அவர்கள் மீண்டும் இவ்வுலகிற்கு வருவார்கள் என்ற கருத்தும் மிகத் தவறானது என்பதும் மேற்கண்ட வசனத்திலிருந்து புலனாகிறது. அவர்கள் அவ்வாறு வருவதாயிருந்தால் அவர்களுடைய சமுதாயம் இறைவனுக்கு இணை வைப்பதையும், அவர்களையும் அவர்களுடைய தாயாரையும் கத்தோலிக்கர்களும் மற்றவர்களும் வணங்கிவருவதையும் அவர்கள் காண்பார்கள். அதன் பிறகு அவர்களால் அது குறித்து தனக்குத் தெரியாது என்று இறைவனிடம் எவ்வாறு கூறமுடியும்? மேற்கண்ட இறைவசனத்திலோ அவர்கள் அந்தச் சமுதாயத்தினரோடு இருந்தவரை அவர்கள் இணைவைத்தலில் ஈடுபடவில்லை என்று கூறுவதாக வருகிறது. எனவே, ஈஸா நபியின் சமுதாயம் இணைவைத்தலில் ஈடுபடுவதற்கு முன்பே ஈஸா நபி மரணித்துபோனார்கள் அவர்கள் திரும்பி வரப்போவதில்லை என்பதை உணரலாம். 

ஈஸா நபி உயிருடன் இருக்கிறார்கள் என எப்படியாவது எடுத்துக் காட்டவேண்டும் எண்ணமுள்ளவர்கள் இந்தத் திருமறை வசனத்திலுள்ள ‘பலம்மா தவபைத்தனி’ என்ற சொற்றொடருக்கு நீ என்னை மரணிக்கச் செய்த பின் எனப் பொருள் தருவதற்குப் பகரமாக வெகு தந்திரமாக, நீ என்னை (உடலுடன்) கைப்பற்றியபின்’ என்று பொருள் கூறுவார்கள். இந்த தவப்பி என்ற சொல்லுக்கு மரணிக்க செய்தல் அல்லது ரூஹை அதாவது உயிரைக் கைப்பற்றுதல் என்ற பொருளைத் தவிர வேறு பொருள் இல்லை என்பதை நாம் ஏற்கனவே எடுத்துக் காட்டியுள்ளோம். 

இது தொடர்பாக ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள். 

உலகில் அரபு நாடு உருவாகி அங்கு அரபி மொழி வழக்கில் வந்த நாள் முதல் இதுவரை வந்த எந்த உரையிலிருந்து அது புதிதாக இருந்தாலும் பழையதாக இருந்தாலும் ‘தவப்பி’ என்ற சொல்லுக்கு உடலைக் கவர்தல் என்ற பொருள் தரப்பட்டிருந்த ஓர் உதாரணத்தை யாராலும் காட்டமுடியாது. மாறாக, தவப்பி என்பது இறைவன் மனிதனுக்கு இழைக்கின்ற செயலாக கூறப்பட்ட இடங்களிலெல்லாம் அதற்கு மரணிக்கச் செய்தல் உயிரைக் கவர்கள் என்ற அர்த்தங்களே தரப்படுகின்றன. உடலைக் கவர்தல் என்ற அர்த்தம் எங்கும் காணப்படவில்லை. எந்த அகராதியிலும் நாம் தரும் அர்த்தத்திற்கு மாற்றமான அர்த்தம் தரப்படவில்லை. 

எவராவது, திருக்குரானிலிருந்தோ அல்லது நபி மொழிகளிலிருந்தோ அல்லது அரபி மொழிக் கவிதை மற்றும் இலக்கியம் ஆகியவற்றிலிருந்தோ மேற்கண்ட சொல்லுக்கு மரணிக்கச் செய்தல், உயிரைக் கவர்தல் என்பதைத் தவிர வேறு பொருள் உண்டு என்பதற்கு உதாரணம் காட்டினால் அவருக்கு எனது சொத்தில் ஒரு பகுதியை விற்று ஆயிரம் ரூபாய் தருவேன் என இறைவன் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். (இஸாலே ஔஹாம் – பக்கம் 603) 

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் இந்த சவாலை அவர்களின் காலத்திலோ அல்லது அதன் பிறகோ யாரும் ஏற்கவில்லை. இதிலிருந்து இந்த ஆலிம்சாக்கள் உண்மையை மறைத்து இட்டுக்கட்டிப் பொருள் கூறுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். 

இந்த “பலம்மா தவபைத்தனி’ – நீ என்னை மரணிக்கச் செய்தபின்” என்ற சொல்லை அண்ணல் நபிபெருமானார் (ஸல்) அவர்கள் நாம் கூறும் அர்த்தத்திலேயே பயன்படுத்தியுள்ளார்கள். அதுவும் மேற்கண்ட ஆயத்தைக் குறிப்பிட்டே கூறியுள்ளார்கள். புஹாரி ஷரீபில் இவ்வாறு காணப்படுகிறது:-

இறுதி நாளில் நான் (நபி பெருமானார் (ஸல்) அவர்கள்) ஹவ்ல் கவ்ஸரில் நிற்கும்போது சிலர் என் முன் காணப்படுவார்கள் அவர்களை மலக்குகள் நரகத்தின் பக்கம் இழுத்துச் செல்லப்படுவார்கள். அவர்களைப் பார்த்து நான் உஸைஹாபி, உஸைஹாபி (இவர்கள் என் தோழர்கள்) என்று உரத்த குரலில் கூறுவேன். அப்போது, இவர்கள் உங்களுடைய காலத்திற்குப் பிறகு என்ன செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. இவர்கள் இஸ்லாத்தைக் கைவிட்டுவிட்டார்கள் என்று என்னிடம் கூறப்படும். அதற்கு நான் இறைவனின் அந்த நல்லடியாரான ஈஸா நபி கூறியிருந்ததைப் போல, நான் அவர்களுடன் இருந்த காலம் வரை அவர்களுக்கு சாட்சியாக இருந்தேன், ஆனால் (பலம்மா தவப்பைத்தனி) நீ என்னை மரணிக்கச் செய்தபின் நீயே அவர்களைக் கண்காணிக்கின்றவனாக இருந்தாய் என்று கூறுவேன். (புஹாரி, கிதாபுத் தப்ஸீர்) 

“பலம்மா தவபைத்தனி” என்ற சொற்றொடருக்கு நீ என்னை மரணிக்கச் செய்தபின் என்ற பொருளைத் தவிர வேறு பொருள் இல்லை. இதை நபி பெருமானார் (ஸல்) அவர்களே தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். இதனைப் படித்தப்பிறகும் ஒருவர் அந்த சொற்றொடருக்கு வேறு அர்த்தம் இருப்பதாகக் கூறுவாரேயானால் அவர் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் தந்துள்ள விளக்கத்தை மறுக்கின்றவர் ஆகிறார். எனவே அவருடன் தொடர்ந்து விவாதம் செய்வதில் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. 

இப்படி, பல்வேறு கோணங்களில் ஈஸா நபியின் மரணம் திருக்குரானால் உறுதி செய்யப்படுகிறது. இந் நிலையில் ‘நஜாத்’ ஆசிரியரைப் போன்றவர்களுக்கு குட்டையைக் குழப்புவதை தவிர வேறு வழியில்லை! ஈஸா நபி உயிருடன் உள்ளார் எனபதற்கு திருக்குர்ஆனிலிருந்து ஆதாரம் தருவதற்குப் பகரமாக அர்த்தமற்ற சில கேள்விகளை எழுப்புவதன் மூலம் வாசகர்களைத் திசை திருப்பவே அவர் முயன்றிருக்கிறார். “ஹஸரத் ஈஸா நபி (அலை) சிலுவைச் சம்பவத்திற்குப் பிறகு காஷ்மீருக்கு ஓட வேண்டிய அவசியமென்ன? நபி கோழையாவார்களா? என்று அவர் கேட்கிறார். 

திருக்குர்ஆன் கூறும் நபிமார்களின் வரலாற்றினை படித்திருந்தால் அல்லது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றையாவது படித்திருந்தால் அதுபோன்ற அபத்தமான கேள்வியை நஜாத் ஆசிரியர் கேட்டிருக்கவேமாட்டார். பொதுவாக சொந்த நாட்டை துறந்து வேறு இடத்திற்கு ஹிஜ்ரத் செய்வது நபிமார்களின் நடைமுறையாகவே இருந்திருக்கிறது. எதிரிகள், அவர்களின் அநியாயச் செயல்களில் எல்லை மீறிப் போகும்போது அல்லது நபிமார்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகும்போது அந்த நபிமார்கள் இடம் பெயர்ந்து சென்றிருக்கின்றனர். இது அறிவுடமையே தவிர கோழைத்தனம் அன்று ஏனெனில் அந்த நபிமார்கள் உயிர்வாழ்ந்திருந்தால் தான் இறைவன் அவர்கள் மீது சுமத்திய பொறுப்புகளை நிறைவேற்றிடமுடியும். 

இந்தப் பொது விதிக்கு நபிபெருமானார் (ஸல்) அவர்கள் கூட உட்பட்டவர்களாகவே இருந்தார்கள். மக்காவின் ‘காபிர்’கள் நபி பெருமானார் (ஸல்) அவர்களைக் கொலை செய்துவிட திட்டமிட்டு அவர்களுடைய வீட்டைச் சுற்றி வளைத்துக் கொண்ட போது அவர்கள் இரவோடிரவாக மதீனாவுக்கு ‘ஹிஜ்ரத்’ செய்யவில்லையா? 

நஜாத் ஆசிரியரைக் கேட்க்கிறோம், இஸ்ரவேலர்களுக்கு இறை தூதராக வந்த ஈஸா நபியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்ட போது இறைவன் அவர்களை வானத்திற்கு உயர்த்திக் காப்பாற்றியதாகக் கூறுகின்றீர்களே. அதே நிலை, அகில உலகிற்கும் அருட் கொடையாக வந்த அண்ணல் நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டபோது இறைவன் அவர்களை வானத்திற்கு உயர்த்தவில்லையே ஏன்? ஈஸா நபியை நேசித்த அளவுக்கு இறைவன் நபி பெருமானாரை நேசிக்கவில்லையா? அல்லது கிருஸ்தவர்கள் கூறுவது போன்று ஈஸா நபி (நவூதுபில்லாஹ்) இறைவனின் நேச குமாரன் என்பதுவும் உங்களின் எண்ணமா? 

ஏனைய நபிமார்களுக்கு ஆபத்து வந்த நேரத்தில் அவர்களை இந்த பூமியிலேயே காப்பாற்றிய இறைவன் ஈஸா நபியை மட்டும் வானத்திற்கு உயர்த்திக் காப்பாற்ற வேண்டிய அவசியமென்ன? வானத்திற்கு உயர்த்த இறைவனுக்கு வல்லமையில்லையா? என்று கேட்பவர்களிடம் கேட்கிறோம், ஏன், பூமியிலேயே அவர்களைக் காப்பாற்றக்கூடிய வல்லமை இறைவனுக்கு இல்லையா? தவ்ர் குகையில் மறைந்திருந்த நபி பெருமானார் (ஸல்) அவர்களையும் ஹஸரத் அபூபக்கர் (ரலி) அவர்களையும் ஓர் அற்பப் பிராணியான சிலந்தியைக் கொண்டு எதிரிகளிடம் பிடிபடாது இறைவன் காப்பாற்றினான். இத்தகைய வல்லமை மிகுந்த இறைவன் ஈஸா(அலை) அவர்களைக் காப்பாற்ற அவன் வகுத்துள்ள நியதிகளை தவிடு பொடியாக்கி வானத்திற்கு உயர்த்தியிருப்பானா? நிச்சயமாக அவன் அவ்வாறு செய்யவில்லை! மாறாக, ஏனைய நபிமார்களைப் போல் ஈஸா நபியையும் இப்பூமியிலே காப்பாற்றினான். இது குறித்து இறைவனே கூறுவதைப் பாருங்கள்:- 

“மேலும் நாம் மரியமின் மகனையும் அவரது தாயாரையும் ஓர் அடையாளமாக்கினோம். நீரூற்றுகளுள்ள மலைப்பாங்கான ஒரு இடத்தில் அவர்களுக்கு அடைக்கலம் தந்தோம்” (23:51) 

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்தில் ஈஸா(அலை) அவர்களுக்கு அடைக்கலம் தரப்பட்ட இடம் பற்றி, 

ரப்வ – மலைப் பிரதேசம் 

மயீன் – நீரருவி நீரூற்று நிரம்பிய இடம். 

தாது ‘கரார்’ – மக்கள் வசிக்குமிடம் என்றெல்லாம் கூறப்பட்டிருக்கிறது. இந்த வர்ணனைகள் காஷ்மீருக்குப் பொருந்துமா? வானத்திற்கு பொருந்துமா? 

அடுத்து, ஈஸா நபி (அலை) அவர்கள் ‘ஹிஜ்ரத்’ சென்றதாக அதாவது தமது சொந்த நாட்டைத் துறந்து சென்றதாக நபிபெருமானார் (ஸல்) அவர்களே அறிவித்துள்ளார்கள். அவர்கள் கூறியிருப்பதை பாருங்கள். 

அல்லாஹ் ஹஸ்ரத் ஈஸா நபி அவர்களுக்கு (இவ்வாறு) வஹி அறிவித்தான், “ஈஸாவே நீர் மற்றவர்களால் அறிந்து கொள்ளப்படாமலும் துன்புருத்துதளுக்கு இலக்காகாமலும் இருக்க இந்த இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு ‘ஹிஜ்ரத்’ செய்வீராக” (கன்ஸுல் உம்மால்) 

இவற்றிலிருந்து ஈஸா நபி (அலை) அவர்கள் சிலுவை சம்பவத்திற்குப் பிறகு தமது நாட்டைத் துறந்து சென்றார்கள் என்ற முடிவிற்கே நாம் வரவேண்டும். 

ஈஸா நபி (அலை) அவர்கள் தமது சொந்த நாட்டைத் துறந்து நெடும்பயணம் ஒன்றை மேற்கொண்டு அக்காலத்தில் கீழத்தேய நாடுகளில் பரவலாக வசித்துவந்த இஸ்ரவேல் இன மக்களுக்கு இறைத்தூதை எட்டவைத்து, இறுதியாக காஷ்மீர் வந்தடைந்தார்கள், அங்கெ தமது 120 ஆவது வயதில் இறையடி சேர்ந்தார்கள் என்பதையெல்லாம் இறையறிவிப்பின் அடிப்படையிலும் ஹஸரத் அஹ்மத் (அலை) அவர்கள் தமது மஸீஹ் ஹிந்துஸ்தான் மேய்ன் (தமிழில் இந்தியாவில் இயேசு) என்ற நூலில் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக்கூறியுள்ளார்கள். அதுமட்டுமல்ல, ஈஸா (அலை) அவர்கள் இந்தியா வந்தார்கள் என்பதற்கான சான்றுகள் உள்ளன என முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் மற்றும் நல்லரிஞர்களும்கூட கூறியுள்ளார்கள். 

இவற்றை மறுக்க இயலாத நிலையில் நஜாத் ஆசிரியர், சிலுவையில் அடிக்கப்பட்டவர் வேறொருவர். அவரே “காஷ்மீருக்கும் ஓடிப் போயிருக்கலாம். பின்னர் மாண்டிருக்கலாம். அவர்களின் கல்லறை காஷ்மீரில் இருப்பதாக எழுதியிருக்கலாம்” என்று வரைந்துள்ளார். இவற்றிலிருந்து இந்தச் சம்பவங்களலெல்லாம் உண்மை, ஆனால் ஆள்தான் வேறு என நஜாத் ஆசிரியர் கூறுவதாகவே நாம் கொள்ளவேண்டும். அதாவது ஈஸா நபியை கொல்ல முயற்சித்த யூதர்கள் மட்டுமல்ல கிருஸ்தவர்களும் பல்வேறு இனங்களைச் சார்ந்த வரலாற்றாசிரியர்களும் முஸ்லிம் நல்லரிஞர்களும் கூட ஏமாந்து போனார்கள் தாம் மட்டும்தான் அது உண்மையான ஈஸா அல்ல அது வேறொரு நபர் என்று கண்டு பிடித்துள்ளதாக நஜாத் ஆசிரியர் கூற விழைகிறார். அப்படியானால் அதற்க்கான ஆதாரத்தை தரட்டும்! ஓர் “அற்புதகரமான ஆராய்ச்சியாளரை” உலகம் கண்டுகொள்ளட்டும். 

ஆனால் இறைவசனங்களுக்கெதிராக, நபிமொழிக்கெதிராக யாராலும் எந்த சான்றையும் காட்ட இயலாது! ஏனெனில் அது உண்மையே உருவானவை. “உண்மைக்கு எதிராக யூகங்கள் எந்தப் பயனும் அளிக்காது” (10:37) என்பதற்கேற்ப உண்மையின் முன்னால் எந்தப் பொய்யும், யூகமும், கற்பனையும் நிற்கயியலாது.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.