அபூ அப்தில்லாஹ் 14 வது பக்கத்தில் எழுதுகிறார்
காதியானிகள் சொல்வதுபோல் உண்மையான ஈஸா(அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட்டிருந்து இறக்கப்பட்டிருந்தால்,
- அந்நிலையில் அவர்களை விட்டுவிட்டு அவர்களின் சீடர்கள் பிரிந்து சென்றிப்பார்களா?
- ஈன்றெடுத்த தாயும், தன் உண்மை சீடர்களும் அறியாமல் ஈஸா(அலை) காஷ்மீருக்கு ஓடி ஒளிந்துகொண்டார்களா?
- பெற்ற தாயையும், உற்ற சீடர்களையும் மறந்து தனக்குற்ற நபித்துவப் பணியையும் புறக்கணித்து ஒன்றல்ல, இரண்டல்ல நூற்றியிருபது வயது வரை வாழ்ந்திருப்பார்களா?
- ஈஸா(அலை) உண்மை இறைத்தூதர், மிர்ஸா குலாம் அஹ்மதைப் போல் போலி நபி அல்ல சிந்திக்க வேண்டுகிறோம்.
- காஷ்மீருக்கு ஓட வேண்டிய அவசியமென்ன
- நபி கோழையாவார்களா?
நம் பதில்
அபூ அப்தில்லாஹ்விற்கு திருக்குர்ஆன் ஞானமும் நபிமார்களின் வரலாறும் அறவே தெரியவில்லை என்பதை பக்கம் 14 ல் உள்ள அவரது கேள்விகள் அம்பலப்படுத்துகின்றன.
திருக்குர்ஆன் 5:22-25 வசனங்களில் மூஸா (அலை) தன் சமுதாயத்தை நோக்கி, என் சமுதாயமே! அல்லாஹ் உங்களுக்கு விதித்துள்ள புனித பூமியில் நுழையுங்கள். மேலும் புற முதுகு காட்டாதீர்கள் என்று கூற,
அதற்கு அவர்கள் மூஸாவே! கொடிய ஆற்றல் மிக்கவர்கள் அதில் இருக்கின்றார்கள் அவர்கள் அதில் இருக்கின்றவரை நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். எனவே நீரும் உமது இறைவனும் சென்று அவர்களுடன் போரிடுங்கள். நாங்கள் இங்கேயே உட்கார்ந்திருப்போம் என்று கூறினார்கள்.
மூஸா நபி (அலை) அவர்களின் சீடர்களின் நிலையைப் பாருங்கள்! திருக்குர்ஆன் 23:51 வது வசனத்தில்.
நாம் மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அடையாளமாக்கினோம். அவ்விருவருக்கும் தங்குவதற்கு ஏற்றதும் நீரூற்றுகளைக் கொண்டதுமான ஓர் உயர்ந்த இடத்தில் தஞ்சம் – அடையாளம் அளித்தோம்.
ஆவைனாஹுமா – இச்சொல் திருக்குர்ஆனில் ஈமானையும் உயிரையும் காக்க ஹிஜ்ரத் செய்து வேறொரு இடத்தில் தஞ்சம் புகுதல் எனும் பொருளில் வருவதைக் காணலாம். குகையில் இளைஞர்கள் அடைக்கலம் புகுந்ததையும், முஸ்லிம்கள் மதீனாவில் அடைக்கலம் புகுந்ததையும் திருக்குர்ஆன் கூறுகிறபோது இச்சொல்லையே பயன்படுத்துகிறது.
எனவே, ஈஸா நபி(அலை) அவர்களும், மர்யம்(அலை) அவர்களும் அல்லாஹ்வின் கட்டளைப்படி காஷ்மீரில் அடைக்கலம் புகுந்தனர் என்பது தெளிவாகிறது.
திருக்குர்ஆன் 8:6, 9:40 ஆகிய வசனங்களில் நபி(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு (ஹிஜ்ரத்) செய்கிறார் என்று வருகிறது. அபூ அப்தில்லாஹ் நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன? என்றும் நபி கோழையாவார்களா? என்றும் எண்ணுவாரா?
திருக்குர்ஆன் 21:88 இல் மீனுடையவர் (யூனுஸ் நபி) கோபித்துக் கொண்டு சமுதாயத்தை விட்டு விட்டு கப்பலில் ஏறிச்செல்கிறார். எனவே அவர் நபியில்லை என்று அபூ அப்தில்லாஹ் கருதுவாரா?
திருக்குர்ஆன் 27:11 இல் மூஸா நபி(அலை) தன் கைத்தடியைப் பாம்பெனக் கண்டு பின்வாங்கிச் செல்கிறார். இறைவன் மூஸாவே! நீர் அஞ்சவேண்டாம் எனக் கூறினான். திருக்குர்ஆன் 20:67-68 இல் சூனியக்காரர்களின் கயிறுகளும், கம்புகளும் மூஸா நபியின் கண்களுக்குப் பாம்பாகக் காட்சியளிக்கிறது. மூஸா நபி (அலை) தன் மனதிற்குள் அச்சத்தை உணர்ந்தார் என்று வருவதால், அபூ அப்தில்லாஹ் மூஸா நபியை கோழை என்றும் நபியில்லை என்றும் நம்புவாரா?
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.