திருக்குர்ஆன் விளக்க அட்டவணை 443 இல் ஸாபியீன்கள் யார்? எனும் தலைப்பில் பி.ஜே., (11-வது பதிப்பு)
இவ்வசனங்களில் (2:62; 5:69; 22:17) ஸாபியீன்கள் என்ற பிரிவினர் பற்றி கூறப்பட்டுள்ளது.
ஹதீஸ்களை ஆராயும்போது ஸாபியீன்கள் என்போர் இறைத் தூதர்கள் அனுப்பப்படாத போதும் தங்களின் சிந்தனையைப் பயன்படுத்தி ஒரே கடவுள் கொள்கையை விளங்கிக் கொண்டவர்கள் என்பது தெரிய வருகிறது. ஏக இறைவனை விளங்கிக் கொண்டவர்கள் என்பது தெரிய வருகிறது. ஏக இறைவனை விளங்கி அவனுக்கு இணை கற்பிக்காத சமுதாயமே ஸாபியீன்கள் என்று கருதுவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது என்று எழுதியுள்ளார்.
நம் விளக்கம்:
பி.ஜே எடுத்துக் காட்டிய திருக்குர்ஆன் வசனங்களில் (2:63;5:70;22:18)
- நம்பிக்கை கொண்டோர்
- யூதர்கள்
- கிறித்தவர்கள்
- ஸாபியீன்கள் என்ற நான்கு கூட்டத்தினர் கூறப்பட்டுள்ளனர்.
இவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி நல்லறம் செய்து நற்கூலி பெறுபவர்கள் அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை; கவலைப்படவும் மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது முதல் கூட்டத்தினர்.
திருக்குர்ஆனையும் நபி (ஸல்) அவர்களையும் நம்பிய முஸ்லிம் கூட்டத்தினர்.
தவ்ராத்தையும் மூஸா நபி முதல் ஈஸா நபி வரை அதனைப் பின்பற்றி வாழ்ந்த யூத கிறித்தவர்கள்.
எனவே ஸாபியீன்களும் எதோ ஒரு வேதத்தையும் அதைக் கொண்டு வந்த நபியையும் பின்பற்றி வந்த ஒரு சமூகம் என்பது விளங்குகிறது.
இக்கூட்டத்தினரின் பொதுப் பண்புதான் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி நல்லறம் செய்வதும் நற்கூலி பெறுவதும் கவலையும் அச்சமும் இன்றி வாழ்வது ஆகும்.
பி.ஜே எடுத்துக் காட்டியுள்ள ஹதீஸ்களை ஆராய்வோம். புகாரி 344: நபி (ஸல்) அவர்கள் ஸாபியீ என்று அழைக்கப்பட்டுள்ளார்கள். புகாரி 3522இல், நபித்தோழர் அபூதர் (ரலி) அவர்கள் ஸாபியீ என்று அழைக்கப்பட்டுள்ளார். புகாரி 4339, 7189 ஹதீஸ்களில், இஸ்லாத்தின் எதிரிகளுடன் நடந்தபோரில் அவர்கள் சரணடைந்து நாங்கள் ஸாபியீ ஆகிவிட்டோம் என்று கூறுகின்றனர்.
மேலே கூறப்பட்டுள்ளவற்றைத் தொகுத்துப் பார்த்தால், ஒரு வேதம் கொண்டு வந்த நபி ஸாபியீ என்று அழைக்கப்படுகிறார்.
ஒரு வேதம் கொண்டு வந்த நபியை ஏற்றுக் கொண்ட ஒரு நபித்தோழர் ஸாபியீ என்று அழைக்கப்படுகிறார்.
அந்த வேதத்தையும் அந்த நபியையும் நம்பாத மக்கள் போரில் சரணடைந்து போது நாங்கள் ஸாபியீ ஆகிவிட்டோம். அதாவது உங்களின் புதிய மார்க்கத்தையும் அதன் கொள்கைகளையும் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறுகின்றனர். எனவே ஒரு நபியை அவர் கொண்டு வந்த வேதத்தையும் நம்பியவர்கள் ஸாபியீன்கள் என்று தெரிகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்படும் முன் கற்சிலையை வணங்க மறுத்து ஏக இறைவனை மட்டும் நம்பிய சமுதாயத்தினர் இருந்தனர். வணக்க வழிபாட்டு முறைகளைத்தான் இவர்களால் அறிந்து கொள்ள முடியாது. அதை இறை தூதர்கள் வழியாகத்தான் அறிய இயலும், இதைத் தவிர மற்ற விசயங்களில் ஒழுங்காக நடந்த சமுதாயமே ஸாபியீன்கள் என்று பி.ஜே கூறுகிறார்.
நான் கேட்கிறேன்: இந்த மக்களைப் பற்றி அக்கால மக்கள் அவர்களை ஸாபியீன்கள் என்று அழைத்ததாக சான்று உண்டா? இருந்தால் பி.ஜே எடுத்துக்காட்ட வேண்டும்.
மேலும் ஸாபியீன்கள் அடையாளமாகத் திருக்குர்ஆன் கூறுவது.
அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புவதும், அதற்கேற்ப நல்ல செயல்கள் செய்வதும் ஆகும். இந்த நற்செயல் ஒரு நபியின் மூலமே வேதத்தின் வழியாகக் கிடைக்கிறது. எனவே அத்தகு நற்செயல்களும் நற்கூலியும் கிடைக்காத மக்களை ஸாபியீன்கள் என்று அழைப்பது தவறாகும்.
பி.ஜே கூறுகிறார்: “இன்றைக்கும் இறைத் தூதர்களின் போதனைகள் சென்றடையாத சமுதாயம் இருக்கலா. அவர்கள் ஸாபியீன்களாக வாழ்வதற்கு இறைவன் வழங்கிய அறிவே போதுமானதாகும்” பி.ஜே யின் இக்கருத்தும் சரியன்று.
இன்றைய முஸ்லிம் உலகில், ஓர் இறை மறையும், ஓர் இறைதூதரின் நடைமுறையும் இருந்தும், வழிகேட்டு தௌஹீதுக்கு மாற்றமாக நடக்கும் மக்களுடன் மதிப்பிட்டால், அவர்களின் அறிவு மட்டும் போதும் என்று ஏற்க முடியுமா? எனவே பகுத்தறிவு மூலம் ஓரிறையை நம்புபவர்களை ஸாபியீன்கள் என்று கூற முடியாது.
மொத்தத்தில் ஸாபியீன்கள் என்போர் திருக்குர்ஆனில் கூறப்படாத உலகில் வந்த எதோ ஒரு வேதத்தையும் அதனைக் கொண்டு வந்த நபியையும் பின்பற்றி, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் ஈமான் கொண்டு, அதற்கேற்ப நற்செயல்கள் செய்து நற்கூலியாக சொர்க்கத்தை அடையும் பிற சமூகங்கள் அனைத்தையும் குறிக்கும்.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.