அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jun 10, 2014

ஹஜ்


பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண்களான 56, 57, 58, 59, 60 ஆகியவற்றின் நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டிய ஹஜ் குறித்து பி.ஜே இவ்வாறு எழுதுகிறார். அவை ஹஜ்ஜின் 3 வகைகள் பற்றிய விளக்கமாகும். 

இதில் ஹஜ்ஜின் மாதங்கள், ஹஜ்ஜின் போது வியாபாரம், தீண்டாமை, இரண்டு நாட்களில் புறப்படுதல் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. மொத்தத்தில் இவை ஹஜ்ஜைப் பற்றிய விளக்கங்களாகும். 

நம் விளக்கம்: 

1) நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் ஹஜ்ஜிற்குச் சென்றார்கள். மக்கத்து குறைஷிகள் அவர்களை ஹஜ் செய்ய விடாது தடுத்து விடுகிறார்கள். ஹுதைபியா உடன்படிக்கையின் போது முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற சொல்லை நீக்கச் சொன்னார்கள். அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது என்று எழுதச் சொல்லி முஹம்மது அல்லாஹ்வின் ரஸுல் இல்லை என்பதுதான் தங்களின் கொள்கையாகும் என்று கூறினார்கள். இவ்வாறே, 

இன்று அனைத்துப் பிரிவுகளும் அஹ்மதிகளுக்கு எதிராக ஹஜ் செய்வதற்கு தடை விதிக்கிறார்கள். காரணம் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) பொய் நபி, எனவே அஹ்மதிகள் ஹஜ் செய்யக் கூடாது என்கின்றனர். 

இதிலிருந்து தடை செய்யப்படுபவர்கள் உண்மையான உம்மத்து என்பதும் தடை செய்பவர்கள் நபியின் பகைவர்கள் என்பதும் விளங்குகிறது அல்லவா? 

2) நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்வதாக கனவு கண்டு, அதன் அடிப்படையில் அந்த வருடம் ஹஜ்ஜுக்குச் செல்கிறார்கள், ஆனால் மக்கத்து மாக்கள் அந்த வருடம் ஹஜ் செய்ய முடியாதபடி திருப்பி அனுப்பி விடுகிறார்கள். ஆனால் அடுத்த வருடம் அந்த ஹஜ் நிறைவேறுகிறது. நபி (ஸல்) அவர்கள் தான் கண்ட கனவுக்கு கொடுத்த விளக்கம் தவறு என்பதால் அன்னாரை பொய் நபி என்று சொல்ல முடியுமா? 

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் கண்ட கனவுகளைக் கூறும் இடங்களில் கனவு என்பதை மறைத்து உண்மை சம்பவம் போல் எழுதி ஓர் உண்மை நபி இப்படிச் சொல்வாரா என்று மறுப்பதால் அவர் பொய் நபி ஆகிவிடுவாரா? நபி (ஸல்) அவர்கள் சம்பவத்திலிருந்து ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் உண்மை நபி என்பது உறுதியாகிறது அன்றோ!

3) மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் ஹஜ்ஜுக்கு தம் வாழ்நாளில் செல்லவில்லை. ஒரு நபி என்றால் ஹஜ் செய்திருக்க வேண்டுமே! இவர் செய்யவில்லையே! எனவே இவர் பொய்யர் என்று எதிரிகள் கூறுகின்றனர். 

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஸக்காத்து கொடுத்ததே இல்லை. காரணம் ஸக்காத்து கொடுக்க வேண்டிய நிபந்தனைக்கு அவர்கள் ஆளாகவில்லை. எனவே அன்னார் ஸகாத்து கொடுக்க வில்லை. நபி (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஒரு தடவை கூட ஸகாத்து கொடுக்காததினால் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபி இல்லை என்று கூற முடியுமா?

இவ்வாறே ஹஜ் செய்ய வேண்டிய நிபந்தனைக்கு ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் உட்படவில்லை. எனவே அன்னார் ஹஜ் செய்யவில்லை. இவ்வாறே ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் நபி என்பது உண்மையாகிறது. 

4) மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் காலத்தில் இந்தியாவில் பிளேக் நோய் பரவியது. எனவே, இந்தியாவிலிருந்து ஹஜ் செய்ய தடை விதிக்கப்பட்டது. 

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் தமக்குரிய அடையாளமாக பிளேக் பரவும் என்று முன்னறிவிப்புச் செய்திருக்கிறார்கள். இமாம் மஹ்தியின் காலத்தில் ஹஜ் செய்ய தடை ஏற்படும் என்ற நபிமொழியும் உண்டு. இவ்விரெண்டுமே அதாவது பிளேக் நோயும், ஹஜ்ஜுக்கு தடையும் அவர்கள் மஹ்தி என்று வாதித்த காலத்தில் நிறைவேறிவிட்டது. இவ்வாறு அவர் உண்மை நபி என்று நிரூபணமாகிறது. 

5) திருக்குர்ஆன் 22:28 வது வசனம். அவர்கள் ஹஜ் செய்ய நடந்தும், நெடுந் தொலைவிலிருந்தும், மெலிந்த ஒட்டகங்களிலும் உம்மிடம் வருவார்கள் என்று கூறுகிறது. 

அவ்வாறு யாரும் இன்று ஒட்டகங்களில் வருவதில்லை. அந்த ஒட்டகங்களை அரபிகள் கைவிட்டு விட்டனர். இவ்வாறு ஒட்டகங்கள் கைவிடப்பட்டு, அந்த இடத்தை நவீன போக்குவரத்து வாகனங்கள் இடம் பிடித்துக் கொண்டன. இவ்வாறு இமாம் மஹ்தியின் காலத்தில் நிகழும் என்ற முன்னறிவிப்பு உள்ளது. பத்து மாத கருவுற்ற பெண் ஒட்டகம் கைவிடப்படும் என்ற வசனமும் அதனையே கூறுகிறது. (திருக்குர்ஆன் 81:5)

6) நபி மொழிக் களைஞ்சியத்தில், மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது, ஏனைய பள்ளிகளில் தொழப்படும் 1000 தொழுகைகளை விட மேலானதாகும். திரு மக்காவிலுள்ள மஸ்ஜிதுல் ஹராம் என்னும் புனித கஆபா பள்ளியில் தொழுவது உலகின் மற்ற பள்ளிகளில் தொழப்படும் ஒரு லட்சம் தொழுகைகளை விட மிக மேலானதாக இருக்கும். (ஆதாரம்: முக்தஸர் அத்தர்ஹீபு வத்தர்ஹீபு, ஹதீஸ் எண் 389 இன் விளக்கவுரை) 

(கஆபா பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட ஒரு லட்சம் மடங்கு மேலானதாகும் என்று அஹ்மதி, இப்னு குஜைமா, இப்னு ஹிப்பான் ஆகியவற்றில் காணப்படுகிறது.) 

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் தம் பள்ளியில் நஜ்ரான் கிறிஸ்தவர்களை அவர்களின் வழிபாட்டு முறையில் ஜபம் செய்ய அனுமதித்துள்ளார்கள். (ஆதாரம்: தப்ஸீர் இப்னு கஸீர் 3:61 வசனத்தின் அடிக்குறிப்பு) முஸ்லிம்களோ, தங்கள் பள்ளியில் காதியானிகள் நுழையக் கூடாது என்ற அறிவிப்பை கயிற்றில் கட்டி தொங்கவிட்டுள்ளார்கள். உங்கள் பள்ளி நபியின் பள்ளியை விட சிறந்ததுமில்லை. கிறிஸ்தவர்களை விடவோ ஏன் உங்களைவிடவோ நாங்கள் குறைந்தவர்களும் இல்லை எனபதை இதன் மூலம் உணருங்கள். அல்லாஹ்வின் பள்ளிக்கு வரத் தடை செய்பவன் அக்கிரமக்காரன் என்று திருக்குர்ஆனில் (2:115) வசனம் கூறுவதை உணருங்கள். 

7) கஆபா பள்ளியில் தொழுவது உங்கள் பள்ளியில் தொழுவதை விட 1,00,000 மடங்கு மேலானதாகும். அங்கு கேட்கப்படும் துஆவும் அவ்வாறே மேலானதாகும். 

நாட் கேட்கிறேன். ஹஜ்ஜுக்குச் செல்லும் நீங்கள் அப்பள்ளியின் கஆபாவில் சென்று அஹ்மதிய்யா ஜமாஅத் உண்மை என்றால், அதை ஏற்றுக் கொள்ளும் பாக்கியத்தை தரும்படியும். அது பொய் என்றால் அதனை அழித்துவிடுமாறும் துஆ கேட்கத் தயாரா? நீங்கள் உண்மையாளர் என்றால் நாங்கள் பொய்யர்கள் என்றால் உங்கள் துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். உலகில் அப்படி செய்ய முன் வருபவர் யாரும் உண்டா? 

8) இறுதி ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள், புனித நகரமாகிய மக்காவையும், புனித ஹஜ் மாதத்தையும், அதன் புனித பத்தாம் நாளைப் போன்றும், ஒவ்வொரு மனிதனின் உயிரும், உடைமையும், மானம் மரியாதையும் புனிதமாகும் என்று கூறினார்கள். ஆனால் புனித நபி (ஸல்) அவர்களின் வாரிசுகள் என்று வாய்கிழிய பேசும் இந்த ஆலிம்கள், அஹ்மதிகளின் உயிர்களையும், உடைமைகளையும், மானம் மரியாதையையும் கொன்றொழித்து வருகிறார்கள். இவர்கள் ஆயிரம் முறை ஹஜ் செய்தாலும் அதன் கூலி இவர்களுக்கு கிடைக்குமா?

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.