அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jun 4, 2014

விபச்சாரமும், வெட்கக்கேடான செயலும். - (நாசிக், மன்சூக் திருக்குர்ஆனில் இல்லை.)


மாற்றிய வசனம் 24:2, மாற்றப்பட்ட வசனம் 4:15) 

பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

விபச்சாரம் செய்த பெண்களை மரணிக்கும் வரை வீட்டுக்காவலில் வையுங்கள் எனக் கூறும் வசனம் (4:15) அல்லாஹ் வேறு வழியைக் காட்டும் வரை தான் செல்லும் எனவும் கூறுகிறது. பின்னர் 24:2 வசனத்தில் வழியை இறைவன் காட்டினான். 

விபச்சாரம் செய்யும் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தண்டிக்கப்பட வேண்டும். கற்பு நெறி இருபாலாருக்கும் பொதுவானது. எனவே விபச்சாரம் செய்யும் நபர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இருவருக்கும் சமமான தண்டனை வழங்குமாறு கூறும் 24:2 வசனம் அருளப்பட்டவுடன் இச்சட்டம் மாற்றப்பட்டுவிட்டது. 

நம் விளக்கம்: 

4:16 வது வசனம் இவ்வாறு வருகிறது: 

உங்கள் பெண்களுள், வெளிப்படையான ஏதாவதொரு வெறுக்கத்தக்க செயலைச் செய்பவளுக்கெதிராக உங்களுள் நான்கு சாட்சிகளை அழைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அவர்கள் சாட்சியம் கூறினால், அவர்களுக்கு (அதாவது அந்தப் பெண்களை) மரணம் வரும் வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு (வேறு) ஏதாவதொரு வழியை ஏற்படுத்தும் வரை நீங்கள் அவர்களை (உங்கள்) வீடுகளில் தடுத்து வையுங்கள். 

24:2 வது வசனம் இவ்வாறு வருகிறது: 

விபச்சாரம் செய்பவள், விபச்சாரம் செய்பவன் ஆகிய (இருவர் மீதும் அக்குற்றச்சாட்டு நிரூபணமாகி விட்டால்) இருவருள் ஒவ்வொருவருக்கும் நீங்கள் நூறு கசையடி கொடுங்கள்....

திருக்குர்ஆனில் 4:15 வசனத்தின் சட்டத்தை பின்னர் வந்த 24:2 வசனத்தின் சட்டம் மாற்றி விட்டது என்று பி.ஜே கூறுகிறார். இதற்கு அவர் காட்டும் ஆதாரம் 4:15 வசனத்தின் அல்லாஹ் வேறு வழியைக் காட்டும் வரை தான் இச்சட்டம் செல்லும் என கூறுகிறது. பின்னர் 24:2 வசனத்தில் வேறு வழியை இறைவன் காட்டி விட்டதால் மாற்றபப்ட்டுவிட்டது என்று கூறுகிறார். 

1. இவருக்கு தெரிந்த இந்த ஆதாரம் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் போய் விட்டதா? அவர்கள் 24:2 வசனம் இறங்கும் போது 4:15 வசனத்தைக் காட்டி இது இதனை மாற்றிவிட்டது என்றும் 4:15 வசனத்தில் சொன்ன வேறு வழியை 24:2 வசனத்தில் காட்டி, முந்திய வசனத்தை இறைவன் ரத்து செய்து விட்டான் என்றும் கூறியதாக பி.ஜே நிரூபிக்க முடியுமா? 

2. 4:15,16 வசனங்களில் வெறுக்கத்தக்க, வெட்கக்கேடான செயல் என்றுதான் அல்லாஹ் கூறுகிறான். ஆனால் வசனங்களில் விபச்சாரம் என்று கூறுகிறான். 

3. வெட்கங்கெட்ட செயலுக்கும் (4:15) விபச்சாரத்துக்கும் (24:2) 4 சாட்சிகளைக் கேட்கும் சட்டம், தண்டனையைப் பொறுத்த அளவில் முன்னதற்கு 100 சவுக்கடி இல்லையே ஏன்? விபச்சாரத்திற்கு 100 சவுக்கடி கொடுப்பது ஏன்? இவ்விரண்டும் ஒன்றல்ல என்பதால் தான். 

விபச்சாரம் வெட்கக் கேடான செயல்தான். ஆனால் வெட்கக் கேடான செயல்கள் எல்லாம் விபச்சாரம் ஆகிவிடுமா? வெட்கக் கேடான செயல்கள் எல்லாம் விபச்சாரம் என்று பி.ஜே கருதினால் திருக்குர்ஆனில் வெட்கக் கேடான செயல் என்று வருமிடங்களில் விபச்சாரம் என்று பொருள் கொள்வாரா? விபச்சாரம் என்பது, ஒரு ஆண், தன் மனைவி அல்லாத வேறு ஒரு பெண்ணுடனோ, ஒரு பெண், தன் கணவன் அல்லாத மற்றவனுடனோ கொள்ளும் உடலுறவை மட்டும் குறிக்கும். ஆனால் வெட்கக் கேடான செயல் என்பது, விபச்சாரத்தையும் இன்னும் விரிவாகப் பல பொருள்களையும் தரும். எனவே இரண்டும் ஒன்றல்ல. 

ஒரு பெண் ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் விதத்தில் வெளியில் நடமாடுவதாக வைத்துக் கொள்வோம். இது வெட்கக் கேடான செயலா? விபச்சாரனமா? இன்று பெண்கள் கையில்லாத சட்டையும், குட்டைப்பாவாடையும் உடுத்திக் கொண்டு உலா வருவது வெட்கக் கேடான செயலா? விபச்சாரமா? இவ்வாறு விபச்சாரம் இல்லாத அதற்குக் குறைவான செயல்கள் எல்லாம் வெட்கக்கேடான செயல்களில் அடங்கும். 

திருக்குர்ஆன் 29:46 இல் தொழுகை வெட்கக் கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும் என்று வருகிறது. இதில் வெட்கக் கேடு என்பது விரிவான பொருள்களை தரும். விபச்சாரம் என்று பொருள் கொண்டால் விரிவான அந்த பொருள் விபச்சாரம் என்ற ஒன்று என்று சுருங்கி விடுகிறது. திருக்குர்ஆன் 53:32 வசனம் வெட்கக் கேடானவற்றிலிருந்து விலகுங்கள் என பற்பல வெட்கக் கேடுகளை கூறுகிறது. இதில் விபச்சாரம் என்று பொருள் கொண்டால், அந்த விரிவான பொருள் ஒன்று என்ற அளவில் சுருங்கி விடுகிறது. 

7:29 - அவர்கள் வெட்கக் கேடானதை செய்யும் போது எங்கள் முன்னோர்களை இப்படித்தான் செய்யக் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்கு கட்டளையிட்டான் என்று கூறுகின்றனர். 

இதில் வெட்கக் கேட்டுக்கு விபச்சாரம் என்று பொருள் கொள்ள முடியுமா? 33:31 நபியின் மனைவியரே! உங்களில் யாரேனும் மேலான நம்பிக்கைக்கு மாற்றமான வெட்கக் கேடானதைச் செய்தால் அவருக்கு இருமடங்கு தண்டனை வழங்கப்படும். இது விபச்சாரம் ஆகுமா? 

7:81 இல் லூத் நபி உலகில் உங்களுக்கு முன் யாரும் செய்திராத வெட்கக் கேடான காரியத்தையா செய்கிறீர்கள் என்று தன் சமுதாயத்திடம் கேட்டார். இதில் வெட்கக் கேடு என்பது ஓரினப் புணர்ச்சியைக் (ஆணும் ஆணும்) குறிக்கும். இதை விபச்சாரம் என்று பி.ஜே கருதுகிறாரா? 

இதே சம்பவம் 29:29 வந்து ஆண்களின் ஓரினப் புணர்ச்சியைக் குறிக்கிறது. திருக்குர்ஆன் 65:2 இல், அவர்கள் (தலாக் கூறப்பட்ட பெண்கள்) பகிரங்கமாக ஒரு அருவருக்கத்தக்க செயலைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள். அவர்களும் தாமாகவும் வெளியேற வேண்டாம் என்று வருகிறது. 

திருக்குர்ஆன் 4:15 வது வசனம், மானக் கேடான செயலை செய்த பெண்களை மரணிக்கும் வரை வீட்டுக்காவலில் வையுங்கள் என்று வருகிறது. 65:2 வசனம் தலாக் கொடுக்கப்பட்ட பெண்கள் மானக்கேடான செயலை செய்தால் வீட்டை விட்டு வெளியேற்றுங்கள் என்று வருகிறது. ஒரே செயல் அதாவது வெட்கக் கேடான செயலைத் தான் இரு இடங்களிலும் பெண்கள் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஓரிடத்தில் 4:15 இல் வெளியேற்ற வேண்டாம் எனவும் 65:2 வெளியேற்றவும் என்றும் வருவது ஏன்? அவ்விரு இடங்களிலும் வெட்கக் கேடு என்று பொருள் கூறப்பட்டிருப்பதற்கு பி.ஜே விபச்சாரம் என்று பொருள் கொள்கிறார் என்றால் அல்லாஹ் இப்படி வெவ்வேறு தீர்ப்பை கூறுவது ஏன்? 

அடுத்து 4:15-16 வசனங்களில், 

உங்கள் பெண்களில் வெளிப்படையான வெறுக்கத்தக்க செயலைச் செய்பவர்களுக்கு எதிராக 4 பேர் சாட்சி கூறினால் மரணம் வரும் வரை அல்லது அல்லாஹ் வேறு வழியை ஏற்படுத்தும் வரை நீங்கள் அவர்களை (உங்கள்) வீடுகளில் தடுத்து வையுங்கள் என்றும் உங்களுள் இரண்டு ஆண்கள் வெறுக்கத்தக்க செயலைச் செய்தால் நீங்கள் அவ்விருவரையும் துன்புருத்துங்கள், அவ்விருவரும் பாவமன்னிப்புக் கோரி திருந்தி விடுவார்களாயின் அவ்விருவரிடமும் கண்டும் காணாதது போன்று நடந்து கொள்ளுங்கள் என்றும் வருகிறது. 

1. இரண்டிலும் வெறுக்கத்தக்க செயல் என்றுதான் வருகிறது. விபச்சாரம் என்று அல்லாஹ் கூறவில்லை. எனவே இது விபச்சாரம் இல்லை என்றும் சமுதாயத்திற்கும், அமைதிக்கும் தீங்கு செய்யும் செயல் என்றும் விபச்சாரத்திற்கு குறைந்த ஒழுக்கக் கேடான வெறுக்கத்தக்க செயல் என்றும் தெரிகிறது. 

2. வெறுக்கத்தக்க செயலுக்கு பெண்களுக்கு சாட்சிகள் தேவை. சுதந்திரமாக அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறத் தடை என்ற தண்டனை வரையறை செய்யப்பட்டுள்ளது. 

3. ஆண்கள் இருவர் வெறுக்கத்தக்க செயலைச் செய்தால் அவர்களைத் துன்புறுத்த வேண்டும். அவர்கள் பாவ மன்னிப்பு கோரி திர்ந்தினால் விட்டுவிட வேண்டும் என்று இதிலும் தண்டனை வரையறை செய்யப்பட்டுள்ளது. 

4. உங்கள் பெண்கள் என்றும் இரண்டு ஆண்கள் என்றும் அச்செயல் பிரித்து கூரபப்ட்டுள்ளது. 

5. வெட்கம் கெட்ட ஒரு செயலுக்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு வேறு தண்டனை கூறப்பட்டுள்ளது. 

6. பெண்ணுக்கு மரணம் வரும் வரை அல்லது அல்லாஹ் வேறு வழியைக் காட்டும் வரை என்று கூறி, ஆணுக்கு அப்படி ஏதும் கூறாதது ஏன்? 

ஆனால், 24:3-4 வசனங்களில் 

1. விபச்சாரம் என்று அச்சொல் கூறப்பட்டுள்ளது. 

2. விபச்சாரி விபச்சாரனுடனோ, இணை வைப்பவனுடனோ உடலுறவு கொள்வாள் என்றும் விபச்சாரன் விபச்சாரியுடனோ, இணை வைப்பவனுடனோ உடலுறவு கொள்வான் என்றும் அச்சொல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 

3. 100 சவுக்கடி என்று ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே தண்டனை கூறப்பட்டுள்ளது. 

4. இத்தண்டனையை நம்பிக்கை கொண்டவர்களின் முன்னிலையில் நிறைவேற்ற வேண்டும். 

5. தண்டனையை நிறைவேற்றுவதில் இறக்கம் காட்டக் கூடாது. என்றும் தண்டனை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 

4:15 வது வசனம்
24:3,4 வது வசனம்
1.வெட்கக் கேடான செயல்
1.விபச்சாரம்
2.உங்கள் பெண்கள் என்றும், இரு ஆண்கள் என்றும் தனித்தனியே வருகிறது.
2.பெண்ணும் ஆணும் உடலுறவு கொள்ளுதல்
3.வீட்டை விட்டு வெளியேறத் தடை, துன்புறுத்துதல், பாவமன்னிப்பு
3.100 சவுக்கடி
4.4 சாட்சிகள் வேண்டும் என்று மட்டும் வருகிறது. 100 சவுக்கடி இல்லை.
4.4 சாட்சிகளை கொண்டு வராவிட்டால் அவ்வாறு அவதூறு கூறியவர்களுக்கு 80 சவுக்கடி.
5.இருவேறு தண்டனை
5.இருவருக்கும் ஒரே தண்டனை
6.உடலுறவு பற்றிக் கூறப்படவில்லை
6.உடலுறவு கொள்ளுதல் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, 4:15-16 வது வசனம் 24:2-3 வசனம் ஆகிய இவ்விரு வசனங்களிலும் சொல்லப்பட்டவை இருவேறு விசயங்கள் என்பதால் முந்தைய சட்டத்தை பிந்திய சட்டம் நீக்கி விட்டது என்று கூறுவதற்கில்லை.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.