அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jun 9, 2014

ஆதம் நபி பற்றிய தவறான விளக்கம்


திருக்குர்ஆனுக்கு தவறான விளக்கம் வசனம் எண் 2:38) 

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 15 இல் அனைவரும் வெளியேறுங்கள் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

ஆதம் (அலை) அவரது மனைவி ஆகிய இவரைத்தான் அல்லாஹ் வெளியேற்றினான். அனைவரும் வெளியேறுங்கள் என்று ஏன் திருக்குர்ஆன் 2:38 வசனத்தில் குறிப்பிட வேண்டும்? என்று சிலர் நினைக்கலாம். 

உலகில் அழியும் வரை தோன்றும் அனைவரையும் அவ்விருவரும் தமக்குள் சுமந்திருந்தார்கள். அவர்களிடமிருந்து தோன்ற இருப்பவர்களையும் கருத்தில் கொண்டு இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

நம் விளக்கம்: 

1. ஆதம் நபி செய்த தவறுக்கு ஆதம் நபியும் ஹவ்வாவும் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் கியாமத் வரை உள்ள எல்லாரும் சொர்க்கத்தினை இழந்து விட்டோம் என்று பி.ஜே கருதுகிறார்.. ஆதம் செய்த பாவம் பரம்பரை பரம்பரையாக மனித இனம் முழுவதும் பரவுகிறது. இது பரம்பரை பாவம் ஆகும் என்பது கிறிஸ்தவக் கொள்கையாகும். ஆதம் நபி செய்த தவறுக்காக நாமும் சொர்க்கத்தை இழந்து விட்டோம் என எண்ணுவது பி.ஜே கொண்டுள்ள கிறிஸ்தவக் கொள்கை ஆகும். 

2. பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 189 – இல், ஆதமின் முதுகுகளிலிருந்து என்று மட்டும் கூறினால் அவருடைய நேரடிப் பிள்ளைகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும். ஆதமுடைய மக்களின் முதுகளிலிருந்து என்று கூறினால் ஆதமுடைய நேரடி மக்களையும், அந்த மக்கள் வழியாக தொடர்ந்து வரக்கூடிய அனைத்து மக்களையும் குறிக்கும். எனவே மிகவும் பொருத்தமாகவே இவ்வார்த்தைப் பயன்படுத்தப்பட்டுள்ளது. (திருக்குர்ஆன் 7:172) என்று எழுதுகிறார். 

பி.ஜே யின் இந்த வாதத்தின்படி இங்கு கியாமத் வரை உள்ளவர்கள் அனைவரும் வெளியேறுங்கள் என்ற பொருள் கொடுக்க வேண்டுமென்றால் 2:38 வது வசனத்தில் ஆதமின் சந்ததிகள் அனைவரும் வெளியேறிவிடுங்கள் என்று வந்திருக்க வேண்டும். ஆனால், இங்கு அவ்வாறு வரவில்லை. மாறாக இஹ்பித்து ஜமீஆ என்று மட்டுமே வந்துள்ளது. 

இவ்விடத்தில் ஜமீஆ என்ற சொல் வருவதால் கியாமத் வரை வரும் மனிதர்கள் அனைவரையும் குறிக்கும் என்று கூறுவதாயின் பி.ஜே வகுத்த இலக்கணத்தின்படி இஹ்பித்து ஜமீஆ என்பதுடன் சந்ததிகள் என்ற சொல்லும் வந்திருக்க வேண்டும். அவ்வாறு வராததால் பி.ஜே யின் வாதத்தின்படி பார்த்தல் கூட இங்கு ஆதமுடன் வாழ்ந்த மக்களை மட்டுமே குறிக்கும் என்பது நிரூபணம் ஆகிறது. 

3) நீங்கள் அனைவரும் வெளியேறுங்கள் என்று அல்லாஹ் கூறியிருக்கும் போது அதனை அப்படியே பொருள்கொள்வதுதான் அல்லாஹ்வுடைய வார்த்தைக்கு கொடுக்கும் கண்ணியமாகும். அதனை விட்டுவிட்டு கற்பனையாக சுயவிளக்கம் தருவது அல்லாஹ்வின் வார்த்தைக்கு மீறிய விளக்கமாகும். இதற்கு நபிமொழி ஆதாரம் எதுவும் இருந்தால் பி.ஜே தரும் வரம்புமீறிய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளலாம். 

4) அனைவரும் வெளியேறி விடுங்கள் எனபது வசனமாகும். 2:37 வது வசனத்தில் உங்களுள் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள் என்று இறைவன் கூறுகிறான். இதில் சிலர் மற்றும் சிலர் என்பதினால் சொர்க்கத்தில் பலரைக் கொண்ட ஒரு கூட்டம் இருந்துள்ளது என்பது விளங்க வில்லையா?

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.