பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 428 - இல் குற்றவாளிகளின் இல்லம் என்பது எது? எனும் தலைப்பில் (ஒன்பதாம் பதிப்பில்) எழுதுவதாவது,
மூஸா நபியும் அவரது சமுதாயத்தினரும் பிர்அவ்னுக்கு அஞ்சி வீடு வாசல்களைத் துறந்து ஓட்டம் பிடித்தனர். அல்லாஹ்வின் அருளால் அவர்கள் காப்பாற்றப்பட்டு, எதிரிகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டனர். கடல் கடந்து ஊரை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் எகிப்து செல்வார்கள்....
எதிரிகள் வசித்த ஊரை வீடுகளை உங்களுக்கு நான் காட்டுவேன். அங்கே உங்களைச் சேர்ப்பேன்...
7:137; 17:103-104; 44:23,28; 26:57-59 வசனங்களில் அவர்கள் மீண்டும் எகிப்தில் குடியேறியதாகத் திருக்குர்ஆன் கூறுவது இக்கருத்தை வலுப்படுத்துகிறது.
நம் விளக்கம்:
1) ஒரு சமூகம் ஒரு நாட்டில் நீண்ட காலமாக வாழ்ந்து வருகிறது. அவரது சந்ததிகள் அந்த மண்ணிலே பிறந்து, வளர்ந்து, வாழ்கிறார்கள் என்றால் அவர்கள் நிர்பந்தத்தின் காரணமாகவும், இறைகட்டளையின் பேரிலும் வெளியேறினாலும், என் வீடு, என் நாடு, என்ற ஏக்கம் பிரிவின் தாக்கமும் இருக்கத்தான் செய்யும், எனவே அவர்களை அவர்களின் நாட்டுக்கு திரும்பவும் கொண்டு வருவேன் என்றும் உங்கள் இல்லங்களில் உங்களை வாழ வைப்பேன் என்றும் கூறுவதுதான் பொருத்தமாகும்.
பி.ஜே எழுதியிருப்பது போல், எதிரிகள் வசித்த ஊரை வீடுகளை உங்களுக்கு நான் காட்டுவேன் – என்று எழுதியிருப்பது சரியன்று.
2) மூஸா நபியும் அவரது சமுதாயமும் மீண்டும் எகிப்துக்குத் திரும்பினார்கள் என்று திருக்குர்ஆன், நபிமொழி, வரலாற்றின் அடிப்படையில் நிரூபிக்க முடியாது. பி.ஜே எடுத்துக்கட்டும் வசனங்கள் அவ்வாறு கூறவில்லை.
பலவீனர்களாகக் கருதப்பட்டு வந்த சமுதாயத்தை நாம் பாக்கியம் செய்த பூமியின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு உரிமையாளர்களாக ஆக்கினோம். இஸ்ராயீலின் அழகிய வாக்கு அவர்கள் விசயத்தில் முழுமையாக நிறைவேறியது. பிர்அவ்னும் அவனது சமுதாயத்தினரும் தயாரித்தவற்றையும், அவர்கள் உயரமாக எழுப்பியவற்றையும் அடியோடு அழித்தோம் (7:138) என்றுதான் வருகிறது.
இவ்வசனத்தில் இஸ்ரவேலர்கள் பாக்கியம் செய்த பூமிக்கு என்று தான் வருகிறதே தவிர எகிப்து என்றோ, அவர்கள் வாழ்ந்து வெளியேறிய இடத்திற்கு என்றோ வரவில்லை.
திருக்குர்ஆன் 21:72; 17:1 இல் பாக்கியம் பெற்ற பூமியாக பைத்துல் முகத்தஸை நாம் ஆக்கியுள்ளோம் என்றும், 5:22 இல் மூஸா நபி, ‘என் சமுதாயத்தினரே! அல்லாஹ் உங்களுக்கு விதித்துள்ள புனித பூமியில் நுழையுங்கள்’ என்று தன் சமூகத்தை நோக்கி கூறியிருப்பதும், புனித பூமி என்பது எகிப்து இல்லை என்று காட்டுகிறது.
மேலும் பிர்அவனும் அவனது சமுதாயமும் தயாரித்தவற்றையும், உயரமாக எழுப்பியவற்றையும் அடியோடு அழித்து விட்டதாக அல்லாஹ் கூறுகிறான். எனவே குற்றவாளிகளின் இல்லம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
திருக்குர்ஆன் 17:104 வது வசனத்தில்,
இப்பூமியில் வாசியுங்கள், மறுமை பற்றிய வாக்கு நிறைவேறும் போது உங்களை ஒருசேரக் கொண்டு வருவோம் என்றும் இதன் பின்னர் இஸ்ரவேல் மக்களிடம் கூறினோம் என்று வருகிறது.
இதில் மறுமையின் வாக்குறுதி வரும் போது அவர்கள் வாழ்ந்த, பாக்கியம் செய்த பூமியில், அனைவரையும் ஒருசேரக் கொண்டு வருவோம் என்றுதான் வருகிறது, இதிலும் எகிப்து என்று வரவில்லை.
அடுத்து 44:25-28 வசனங்கள்,
அவர்கள் எத்தனையோ சோலைகளையும், ஊற்றுகளையும் பயிர்களையும் மதிப்புமிக்க இடங்களையும் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்த சொகுசுகளையும் விட்டுச் சென்றனர்.
இப்படித்தான் வேறு சமுதாயத்தினரை அதற்கு உரிமையாளர்களாக ஆக்கினோம்.
இதிலும் இஸ்ரவேலர்கள் விட்டுச் சென்றவற்றுக்கு, இஸ்ரவேல் அல்லாத வேறு சமுதாயம் உரிமையாளர்களாக ஆக்கப்பட்டது என்றுதான் வருகிறது.
திருக்குர்ஆன் 26:57-58
“தோட்டங்கள், நீரூற்றுகள், பொக்கிஷங்கள் மற்றும் மதிப்புமிக்க தங்குமிடங்களை விட்டும் அவர்களை வெளியேற்றினோம். இப்படித்தான் இஸ்ரவேலின் மக்களை அவற்றிற்கு வாரிசுகளாக ஆக்கினோம்.”
இந்த வசனத்திலும் ‘அவற்றுக்கு’ – என்பது எகிப்தில் உள்ளவற்றைக் குறிக்காது. மாறாக அவை போன்றவற்றுக்கு இஸ்ரவேலர்கள் வாரிசுகள் ஆனார்கள் என்றே பொருள்படும்.
வரலாற்றிலும் ஆதாரமில்லை.
மூஸா நபியும் அவரது சமுதாயமும் மீண்டும் எகிப்தில் குடியேறினார்களா?
எத்தனையோ நூற்றாண்டுகளாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஊர் ஊராகத் தப்பித்து ஓடிக்கொண்டிருந்தவர்கள் யூதர்கள். இதிகாச காலங்களில் அவர்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள், புராண காலங்களில் அவர்கள் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தார்கள். சரித்திர காலம் வந்த போதும், வாழ வழியில்லாமல் தான் ஓடிக் கொண்டிருந்தார்கள். பின்னால் நவீன உலகம் உருவான பிறகும் அவர்களது ஓட்டம் ஓயவில்லை. சொந்தமாக ஒரு துண்டு நிலம் இல்லாமல் எல்லா தேசங்களிலிருந்தும் அடித்துத் துரத்தப்பட்டவர்கள் அவர்கள்....
.........காலம் காலமாக வதை பட்டே மடிந்தவர்கள் இல்தான் இஸ்ரவேல் என்ற தேசத்தைத் தமக்காக உருவாக்கிக் கொண்டு வந்து, வாழவே ஆரம்பித்தார்கள். (ஆதாரம்: நிலமெல்லாம் ரத்தம் – எனும் நூல், பக்கம் 21-22 ஆசிரியர் பா. ராகவன்.)
மொத்தத்தில்,
· இஸ்ரவேல் மக்கள், பாக்கியம் பெற்ற பூமிக்கு உரிமையாளர்களாக ஆக்கப்பட்டனர்; எகிப்துக்கு அன்று.
· அந்த பாக்கியம் பெற்ற பூமியில் யூதர்கள் எல்லோரும் ஒன்று சேர்க்கப்படுவார்கள் என்றுதான் வருகிறது; எகிப்தில் அன்று.
· எகிப்திலுள்ள இடங்களுக்கு வேறு ஒரு சமுதாயத்தினர் உரிமையாளர்களாக ஆக்கப்பட்டனர்; இஸ்ரவேலர்கள் அன்று.
· இஸ்ரவேலர்களோ பாக்கியம் பெற்ற நாட்டில் தோட்டங்கள், நிரூற்றுகள், பொக்கிஷங்கள், மதிப்புமிக்க தங்குமிடங்களுக்கு உரிமையாளர்களாக ஆக்கப்பட்ட்டனர்.
இவற்றைத் தொகுத்துப் பார்த்தால் மூஸா நபியும் அவருடன் சென்ற இஸ்ரவேலர் சமுதாயமும், எகிப்துக்கு திரும்பி வந்தனர் என்பது திருக்குர்ஆன், நபிமொழிக்கு மட்டும் இல்லாமல் வரலாற்றுக்கும் மாறுபட்ட சம்பவம் என்று அறிகிறோம்.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.