அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jun 2, 2014

வாரிசுரிமைச் சட்டமும் மரண சாசனமும் (நாசிக், மன்சூக் திருக்குர்ஆனில் இல்லை)


(மாற்றிய வசனங்கள் 4:11,12; 4:178

மாற்றப்பட்ட வசனங்கள் 2:180, 2:240) 

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 45 இல் மரண சாசனம் என்ற தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

வாரிசுரிமை சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் மரண சாசனம் செய்வது கடமையாக்கப்பட்டிருந்தது. (திருக்குர்ஆன் 2:180, 2:240) 

பின்னர் எந்தெந்த உறவினர்க்கு எவ்வளவு சொத்துக்கள் கிடைக்கும் என்ற சட்டம் (4:11-12, 4:176) அருளப்பட்டபின் மரண சாசனம் எழுதுவது கடமை இல்லை என்று ஆகிவிட்டது. 

மரண சாசனம் செய்யும் கடமைதான் நீக்கப்பட்டுள்ளது. ஒருவர் விரும்பினால் தமது சொத்துக்களை குறித்து மரண சாசனம் செய்வதற்கு அனுமதி உள்ளது. 

திருக்குர்ஆன் 4:11-12 வசனங்களில் பாகப் பிரிவினை பிரிப்பதற்கு முன் மரண சாசனத்தை நிறைவேற்ற வேண்டும் என்று குறிபிடப்படுவதிலிருந்து இதனை அறியலாம். 

நம் விளக்கம்: 

அவர் குறிப்பிட்ட வசனங்கள் பி.ஜே யின் மொழியாக்கத்தின் படி கீழ்வருமாறு உள்ளது: 

உங்களில் ஒருவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அவருக்கு மரணம் நெருங்கும் போது பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும் சிறந்த முறையில் மரண சாசனம் செய்வது கடமையாக்கப்பட்டுள்ளது. (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை. (2:280) 

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் ஒரு வருடம் வரை அவர்கள் வெளியேற்றப்படாது, வசதிகள் வழங்கப்படவேண்டும். என மரண சாசனம் செய்யவேண்டும். தங்கள் விசயத்தில் நல்ல முடிவை மேற்கொண்டு அவர்களாக வெளியேறினால் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (2:240) 

இரண்டு பெண்களின் பாகம்.... (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் நிறைவேற்றிய பின்னரே... இது அல்லாஹ் விதித்த கடமை. (4:11) 

உங்கள் மனைவியருக்கு குழந்தை..... செய்யப்பட்ட மரண சாசனம் மற்றும் கடனுக்குப் பிறகே பாகம் பிரிக்கப்பட வேண்டும்.... இது அல்லாஹ்வின் கட்டளை.....(4:12) 

கலாலா பற்றி (முஹம்மதே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு... நீங்கள் வழி தவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன். (4:176) 

1) ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள், 4:12-13 வசனம் இறங்கும் போது வசனத்தை குறிப்பிட்டு கடமை தான் நீக்கப்பட்டுள்ளது; ஆனால் அனுமதி உள்ளது என்று கூறவில்லை. திருக்குர்ஆனில் ஒரு வசனம் முற்றிலுமாக நீக்கப்பட்டாலோ அல்லது பி.ஜே சொல்வது போல் மரண சாசனம் செய்யும் கடமை தான் நீக்கப்பட்டுள்ளது, ஒருவர் விரும்பினால் அந்த சொத்துக்களைக் குறித்து மரண சாசனம் செய்வதற்கு அனுமதி உள்ளது என்றிருந்தாலோ அது குறித்து நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள். அவ்வாறு கூறவில்லை. எனவே, பிறர் எவரும் அது பற்றிக் கூறுவதற்கு உரிமையோ, தகுதியோ, இல்லை. ஒரு சில நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியிருக்கிறார்கள் என்று எடுத்துக் காட்டினாலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஏன் என்றால் திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் இது திருக்குர்ஆனின் வசனம் தானா என்று நன்கு விசாரிக்கப்பட்டு, அதற்குரிய ஆதாரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தொகுக்கப்பட்டது. எனவே திருக்குர்ஆனின் ஒரு வசனம் கூறுகின்ற ஒரு சட்டம் பற்றி அனைத்து நபித்தோழர்களின் ஏக மனதான கருத்து இருந்தால் மட்டுமே நீக்கப்பட்ட வசனம் என்று ஏற்றுக் கொள்ளவேண்டும். 

2) ஒருவருக்கு மரணம் நெருங்கும் போது – என்றால் இந்த வசனத்துக்கு முன்பின் வசனங்களில் வந்துள்ளது போல் போரின் போது என்று பொருள்படும். அல்லது ஒரு விபத்தின் போது என்றோ, எதிர்பாராத நோயினாலோ எதிர்பாராத இடத்தில் வந்து மரணம் நெருங்கும் போது அவர் கூறும் இறுதி விருப்பம் என்று பொருள் கொண்டால் அப்போது வஸிய்யத் செய்வது கடமையாகி விடுமே தவிர அது நீக்கப்பட்டதாகாது. எப்படி என்றால் அவர் தான் வாங்கிய கடன், தன்னிடம் கடன் வாங்கியவர்கள், தான் செய்யும் தானதருமம் பற்றியும் அந்த வஸிய்யதில் கூறுவது கட்டாயக் கடமையாகும். 

3) 2:181 வசனம் பி.ஜே கூறுவது போல ஏதோ ஒரு வகையில் நீக்கப்படுகிறது என்றால் 4:12,13 வசனத்தில் இது கடமையில்லை. ஆனால் அனுமதி உள்ளது என்று கூறப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு அந்த வசனத்தில் கூறப்படவில்லை. 

4) 4:12 வசனத்தில், பாகப்பிரிவினை பற்றிக் கூறிய பின்னர் (இவையாவும்) அவர் செய்த மரண சாசனந்த்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே (நிறைவேற்ற வேண்டும்) என்றும் (இது) அல்லாஹ் விதித்த கடமை என்றும் அல்லாஹ் கூறுகிறான். 

4:12 வசனத்தில் அபாகப்பிரிவினை யார் யாருக்கு எவ்வளவு என்று கூறிய பின்னர்.... செய்யப்பட்ட மரண சாசனம் (வஸிய்யத்) மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). (இவையனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் செய்யப்பட வேண்டும். இது அல்லாஹ்வின் கட்டளை என்று அல்லாஹ் கூறுகிறான். (இது பி.ஜே யின் மொழிபெயர்ப்பாகும்) 

இந்த இரு வசனங்களிலும் வஸிய்யத் – மரண சாசனம் கடைமை என்றுதான் கூறுகிறது. அனுமதி என்று கூறவில்லை. மேலும் மரண சாசனத்தை நிறைவேற்றிய பின்னர் தான் பாகப் பிரிவினை செய்ய வேண்டும் (4:12-13) என்று கூறுவதிலிருந்து மரண சாசனம் வசனம் நீக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.

5) 2:180 வது வசனத்தில், உங்களில் ஒருவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அவருக்கு மரணம் நெருங்கும்போது போற்றோருக்குக்காகவும் உறவினருக்காகவும் சிறந்த முறையில் மரண சாசனம் செய்வது கடமையாக்கபப்ட்டுள்ளது. (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை என்று இறைவன் கூறுகிறான். 

· இந்த வசனத்தில் மனைவி மக்களைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை.

· பெற்றோரும் உறவினரும் மட்டும் கூறப்பட்டுள்ளனர்.

ஏன், நான் முன்பே கூறியது போல் போருக்கு செல்பவர்களுள் பெரும்பாலார் மணமுடிக்காத இளைஞர்கள். அவர்கள் வெற்றியோ, வீர மரணமோ அடையலாம். வீர் மரணம் அடைந்தால் அவர்களுடைய பெருஞ்செல்வம் பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் பிரிவினை சட்டத்தின்படி பிரித்துக் கொடுக்கவேண்டும். 

எனவே இவ்வசனம் பாகப்பிரிவினைக்குரிய கட்டளைகளினால் எவ்வகையிலும் ரத்துச் செய்யப்படவில்லை. இரண்டு சூழ்நிலைகளிலும் இத்தகு வஸிய்யதிற்கான கட்டாயம் ஏற்படுகின்றது. அவற்றுள் ஒன்று, இவ்வசனத்தில் கூறப்பெற்றது போன்று அதிகமான செல்வம் இருத்தலாகும். மற்றொன்று இவ்வசனத்திற்கு முன்னுள்ள வசனங்களிலிருந்து தெரிகின்ற (போர்ச்) சூழ்நிலையாகும். அதாவது இவ்வசனத்திற்கு முன்னுள்ள 155, 181 ஆகிய இரு வசனங்களிலும் போர் குறித்துக் கூறப்பெற்றுள்ளது. இவ்வசனதிற்குப் பின்னுள்ள 191 வது வசனத்திலும் இதனை அடுத்துள்ள வசனங்களிலும் போர் குறித்தே கூறப்பெற்றுள்ளது. எனவே, இங்கு போருக்குரிய கட்டளைகளைக் குறித்தும், இதற்கு நிகரான மற்ற நிலைகளைக் குறித்தும் கூறபெற்றுள்ளது. பொதுவாக போரில் வாலிபர்களே பங்கேற்கின்றனர். இவர்களுக்குப் பிள்ளைகள் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அவர்கள் சிறு குழந்தைகளாகவே இருப்பர். எனவேதான் பிள்ளைகள் குறித்துக் கூறாமல் பெற்றோர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும், வஸிய்யத் செய்யுமாறு கட்டளையிடப்பட்டுள்ளது. அதிகமான செல்வத்தைப் பெற்ற ஒருவர், (போர்க்களம் போன்ற) ஆபத்தான் இடத்தை நோக்கிச் செல்லும் போது, தமது உறவினர்களிடம், எனது மரணத்திற்குப் பிறகு நியாயமான முறையில் எனது செல்வம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்று வஸிய்யத்துச் செய்து விடுதல் வேண்டும். (ஆதாரம்: அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் தர்ஜுமா, 2:181 வசனத்தின் அடிக்குறிப்பு எண் 74)

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.