அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jun 8, 2014

பூமி அசையாதிருக்க நிறுவப்பட்டது மலைகளா? முளைகளா?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 248 இல் முளைகளை நாட்டினோம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

பூமியில் அமைக்கப்பட்டுள்ள மலைகளைப் பற்றி அல்லாஹ் கூறும் போது அதை முளைகளாக நாட்டியிருக்கிறோம் என்று கூறுகிறான். (திருக்குர்ஆன் 15:19, 16:15, 21:31, 27:61, 31:10, 41:10, 50:7, 77:27, 78:7, 79:32) 

நம் விளக்கம்: 

மலை எனும் பொருளைத் தரும் ரவாஸிய எனும் சொல் வருமிடங்களாகிய 15:20, 16:15, 21:31, 27:61, 31:11, 41:11, 50:8, 77:28 ஆகிய வசனங்களில் முளைகள் என்று பி.ஜே மொழியாக்கம் செய்துள்ளார். இது தவறாகும். மேலும் இவ்விடங்களில் முளை எனும் பொருள் தரும் அவதாத் என்னும் சொல் வரவில்லை. இச்சொல் முளை எனும் பொருளில் 38:13, 89:11, 78:8 ஆகிய வசனங்களில் வருகிறது. 

மலைகள் பூமியில் முளைகள் போன்று அமைந்து பூமியைப் பாதுகாத்து அசையாத படி உறுதியாக நிலை நிறுத்தி வருகிறது. ஆனால் ரவாஸிய என்ற இச்சொல்லுக்கு மலைகள் என்றே பொருளாகும். 

ரவாஸி எனும் சொல்லுக்கு, Firm, anchored, fixed, towering, mountaion என்று முஹம்மது மொஹர் அலி தன் தர்ஜுமாவில் பொருள் கூறியுள்ளார். 

மலை எனும் பொருள்படும் ஜபல் எனும் சொல் 78:8 இல் வருகிறது. இங்கு தான் நாம் மலைகளை முளைகளாக அமைத்திருக்கிறோம் என்று அல்லாஹ் கூறுகிறான். ரவாஸி எனும் சொல் வருமிடத்தில் முளை என்று வரவில்லை. 

79:33 இலும் ஜபல் என்ற சொல் தான் மலையைக் குறிக்க வருகிறது. எனவே மலை என்று கூறவேண்டிய 8 இடங்களில் முளை என்று மொழியாக்கம் செய்திருப்பது தவறாகும். 

II திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 22 இல் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார். 

திருக்குர்ஆனில் 2:63, 2:93, 4:154 ஆகிய வசனங்களில் தூர் மலையை அல்லாஹ் உயர்த்தி உடன்படிக்கை எடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. 

நம் விளக்கம்: 

திருக்குர்ஆனில் இந்த 3 வசனங்களிலும் (அதாவது 2:64, 2:94, 4:155) தூரை உயர்த்தி என்றுதான் வருகிறதே தவிர தூர் மலையை உயர்த்தி என்று வரவில்லை. மேலும் பி.ஜே எடுத்துக் காட்டும் 7:171 – இல் தூர் என்று வராமல் ஜபல் என்று வந்து மலையை உயர்த்தி எனும் பொருளில் வந்துள்ளது. எனவே தூர் என்றால் மலை என்று நாம் விளங்கிக் கொள்கிறோம். மேலும் அதிகாரம் 52 இன் பெயர் தூர் என்பதாகும். 52:2 வசனம் தூர் மீது சத்தியமாக என்று வந்து மலை மீது சத்தியமாக என்று பொருள் தருகிறது. எனவே தூர் என்றால் மலை என்று பொருள்படுவதால் தூர் மலை என்று கூறுவது சரியா என்ற கேள்வி எழுகிறது. 

தூர் என்பது ஒரு மலையின் பெயர். எனவே தூர் மலை என்று எழுதுவது சரிதான் என்று கூறினால் இதுவும் தவறுதான். ஏனென்றால் 95:3-4 ஸீனாய் மலை என்று வந்து அந்த தூரின் (மலை) பெயர் ஸீனாய் ஆகும் என்று தெரிகிறது. இந்த வசனத்தில் தூரின் பெயர் ஸீனாய் என்பதால், தூர் என்பது ஒரு மலையின் பெயர் என்பது தவறு என்று தெளிவாகிறது. 23:21 வசனத்திலும் ஸீனாய் என்று வந்துள்ளது காண்க. 

பி.ஜே மேலும் கூறுகிறார்: 

தூர் மலையை உயர்த்தியதாகக் கூறப்படுவதை அதன் நேரடிப் பொருளில்தான் புரிந்து கொள்ளவேண்டும். தூர் மலையை பிடுங்கினோம் என்றும் மேலே மேகம் போல் அது நின்றது என்றும் தங்கள் மீது அது விழுந்து விடுமோ என்று அவர்கள் அஞ்சினார்கள் என்றும் திருக்குர்ஆன் 7:171 வசனத்தில் கூறப்படுவதால் இதற்கு வேறு விதமான விளக்கம் கொடுப்பது தவறாகும். மலையை உயத்துவது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானதே!

நம் விளக்கம்: 

7:171 இல் தூர் மலையை பிடுங்கினோம் என்று விளக்கத்தில் எழுதியுள்ளார். ஆனால் 7:171 வசனத்துக்கு அவர் எழுதியுள்ள பொருளைப் பார்த்தால், மலையை அவர்களுக்கு மேலே மேகத்தைப் போல் நாம் உயர்த்தி .... என்று தான் எழுதியுள்ளார். பிடுங்கினோம் என்று அந்த வசனத்தில் வரவில்லை. முன்பு கூறிய மூன்று வசனங்களிலும் வரவில்லை. பி.ஜே பிடுங்கினோம் என்று கூறியது தவறு என்று தெரிகிறது. ஒருவேளை மலையை உயர்த்தி என்பதனை பிடுங்கிய பின்னர் தான் உயர்த்த முடியும் என்பதால் பிடுங்கினோம் என்று எழுதியுள்ளார் போலும். ரபஅ உயர்த்துதல் என்பது உயிரற்ற பொருள்களுடன் வருமிடத்தில் பி.ஜே கூறியுள்ள பொருளில் வருவதாகத் தெரியவில்லை. உதாரணமாக, 

திருக்குர்ஆனின் 2:128 வசனத்தில் அந்த ஆலயத்தின் அடித்தளத்தை இப்ராஹீம் இஸ்மாயீலும் உயர்த்திய போது என்று வருகிறது அதாவது காபா ஆலயத்திற்கு அடித்தளம் போட்டு பூமியினுள்ளிருந்து பூமிக்கு மேலே பல அடிகள் படிப்படியாக வளர்த்துக் கட்டுகிறார்கள். இதனை உயர்த்திய போது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதனை பி.ஜே அடித்தளத்தை பூமியிலிருந்து பிடுங்கி, பூமிக்கு மேலே அந்திரத்தில் உயர்த்தினார்கள் என்று எழுதுவாரா? இதனைப் போன்று தான் மலையை அவர்களுக்கு மேலே உயத்திய போது என்ற இடத்திலும் அவர்களின் தலைக்கு மேல் மிக மிக உயர்ந்து காணப்படுகிற அந்த மலையின் அடிவாரத்தில் அவர்களை நிறுத்திய போது என்று பொருள் கொள்ள வேண்டும். அந்த மலை அவர்களின் தலைக்கு மேல் மிக உயர்த்து நின்றது என்று பொருள் 41:11 இல், அவன் அதன் (பூமியின்) மேலே உறுதிமிக்க மலைகளை அமைத்தோம் என்று வருமிடத்தில் பூமிக்கு மேலே என்று வருவதால் பூமியில் படாமல் அந்தரத்தில் நிற்குமாறு பூமிக்கு மேலே மலைகளை அமைத்துள்ளான் என்று பி.ஜே கருதுவாரா? 

14:27 வசனத்தில் பிடுங்கப்பட்ட மரம்; பூமியின் மேல் எறியப்பட்ட மரம் என்று பொருள் தரும் படி, பிடுங்குதல் என்ற சொல்லும், பூமியின் மேல் என்ற சொல்லும் வருகிறது. இதற்கு ஒரு மரம் வேரோடு பிடுங்கப்பட்டு பூமியின் மேல் எறியப்பட்டுள்ளது என்று பொருள் கொள்ள வேண்டும். எனவே 7:171 வசனத்திற்கு நேரடிப் பொருள் கொள்வது தவறு. பிடுங்கினோம் என்றும் வரவில்லை. 

மேலும் அந்த 7171 வசனத்தில், தூர் மலையைப் பிடுங்கினோம், அது மேலே மேகம் போல் நின்றது. தங்கள் மீது அது விழுந்து விடுமோ என்று அவர்கள் அஞ்சினார்கள் என்றும் மலையை உயத்துவது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதானதே என்றும் பி.ஜே எழுதியுள்ளார். அந்த மலையும், மலைக்கு மேல் மிதந்து செல்லும் மேகங்களும் காணப்பட்டதால், மேகத்தின் அசைவு மலை அடைவது போலும் விழுந்து விடுவது போலும் காட்சி அளிக்கும். அல்லது குறைந்த ரிக்டர் அளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டு அந்த மலை அசைந்து தம் மேல் விழுவதைப் போல் தோன்றியிருக்கலாம். எனவே மலை பிடுங்கப்பட்டு மக்களின் தலைக்கு மேல் நின்றது என்பதற்கு இடமில்லை. அல்லாஹ் அம்மலையை தூக்குவது மிக எளிது என்றாலும், செய்யாத ஒன்றை அல்லாஹ் செய்தான் என்று கற்பனை செய்யக் கூடாது. ஏனென்றால் தொடர்ந்து அந்த வசனம், உங்களுக்கு நாம் வழங்கியதைப் பலமாகப் பிடியுங்கள். அதில் உள்ளதை எண்ணிப் பாருங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். அதாவது, ஒரு திருடன் கத்தி முனையில் காத்தியம் சாதிப்பதைப் போல், அல்லாஹ்வும் மலையைக் காட்டி மக்களை மிரட்டி தவ்ராத்தைப் பின்பற்றி நடக்கச் செய்தான் என்று எண்ணுவது போலாகும். அல்லாஹ் அப்படி ஒரு செயலைச் செய்வதிலிருந்து தூயவன். நம் அனைவரையும் அப்படி எண்ணுவதிலிருந்தும் அல்லாஹ் காப்பானாக. 

மலைகளில் மறைந்திருக்கும் மர்மம்

1956 ஆம் ஆண்டில் மலைகள் குறித்த மர்மம் ஒன்றை அறிவியல் உலகம் கண்டுபிடித்தது. மலைகளின் கெட்டியான வேர்கள் (Roots) பூமிக்கடியில் உள்ள திரவ மண்டலம் வழியாக, அவர்க்கும் கீழே உள்ள திட மண்டலத்தை அடைகிறது. இந்த வேர்களின் நீளம் பூமிக்கடியில் பல பத்து கி.மீ அளவுக்கு உள்ளது இந்த வேர்கள்தாம், பூமியின் மேல் தட்டை வலுவுடன் தாங்கி நிற்கிறது திரவ மண்டலத்தில் அது மூழ்கிவிடாமல் தடுத்து நிறுத்துகிறது. மிக ஆழமான வேர்களைக் கொண்ட மலைகள் பூமிக்குள் அமிழ்ந்து போவதில்லை. பூமிக்கடியில் திரவ மண்டலத்திற்குக் கீழே உள்ள திட மண்டலம்வரை நங்கூரம் பாய்ச்சி அது நிற்கிறது. இவை ஆம் ஆண்டில் அறிவியல் கண்டுபிடித்த சில உண்மைகள் (ஆதாரம்: அருள்மறை திருக்குர்ஆனும், அறிவியல் கண்டு பிடிப்புகளும், ஆசிரியர்: முஹம்மது கான்பாகவி) 

நம் கேள்வியாவது, மலைகள் பூமியில் பல மைல்கள் ஆழத்தில், பூமியின் அடுக்குகளை இணைத்து பிடித்துள்ளது. அது பிடுங்கும் போது பூமியின் மேற்பரப்பில் மலையின் பரப்பை விட பல மடங்கு பரப்பளவுக்கு மலையைச் சுற்றி பல மைல்கள் ஆழத்திற்கு ஒரு மிகப்பெரும் அதல பாதாள பள்ளம் ஏற்படும். மலை அடிவாரத்தில் உள்ள மக்கள் அதல பாதாளத்தின் அடித்தளத்திற்குச் சென்று சேர்ந்து விடுவார்கள். எங்கே உறுதி மொழி வாங்குவது? இது ஒரு புறம் இருக்கட்டும். இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருந்தால் வரலாற்றில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இதனைப் பற்றி யூத வரலாற்றிலும் ஏனைய வரலாற்றிலும் காணப்படவில்லையே! மலை பிடுங்கப் பட்டால் பூமியிலுள்ள நெருப்புக் குழம்பு போன்ற பல பொருட்கள் அந்தப் பகுதி எங்கும் சிதறி பரவியிருக்கும். அவை என்னென்ன என்று அன்றே புவியியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து பல கருத்துக்களை வெளியிட்டிருப்பார்கள். எப்படி ஏதும் உண்டா? 

இது ஒருபுறம் இருக்கட்டும். இச்செயல் அல்லாஹ்வின் நடைமுறைக்கு மாற்றம் இல்லையா? கட்டாயப்படுத்தி அல்லாஹ் உடன்படிக்கை எடுப்பானா? அப்படி என்றால் அல்லாஹ் அந்த இஸ்ரவேல் சமுதாயத்தில் பல நபிமார்களை அனுப்பி, அவர்கள் அம்மக்கள் ஆட்டிப் படைக்கும் செயலை ஏன் செய்ய வேண்டும்? இந்த வேண்டாத வேலையை இறைவன் ஏன் செய்தான்? 

உலகில் ஆங்காங்கே உள்ள மலைகளை பிடுங்கி, வேதத்தைப் பின்பற்றி மரியாதையாக நடங்கள் என்று உறுதி மொழி வாங்கி விட வேண்டியது தானே? இது அல்லாஹ்வின் நடைமுறை இல்லை. அதாவது வேதத்தை மக்கள் பின்பற்றி நடக்கச் செய்ய அல்லாஹ் இந்த சுன்னத்தைக் கையாண்டதில்லை. 

எனவே, மலையை தலைக்கு மேலே உயர்த்தி என்பது மலையை பிடுங்கி அவர்களது தலைக்கு மேலே உயர்த்தி என்று பொருள் தராது.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.