திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 41-இல் இறந்த பின்னர் உயிருடன் இருப்போர் எனும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:
ஈஸா நபியவர்கள் இவ்வுலகில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்கள்.
நம் விளக்கம்:
பி.ஜே யின் திருமறையின் தோற்றுவாய் எனும் நூலிலும் அந்த அற்புதங்களைப் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளார்.
1. தந்தையின்றி பிறந்தது.
2. தொட்டிலில் பேசியது.
3. பறவைகளைப் படைத்தது.
4. இறந்தவரை உயிர்ப்பித்தது.
5. பிறவிக் குருட்டையும்
6. குஷ்டத்தையும் நீக்கியது.
இக்கருத்துகள் திருக்குர்ஆனின் 5:110, 3:46, 3:47, 3:49 ஆகிய வசனங்களில் வருகின்றன.
படைத்தல், உயிர் கொடுத்தல் என்று இறைவனுக்கு மட்டும் உரிய செயல்கள் ஈஸா நபிக்கும் வருகிறது. அதற்கு பொருள் கொடுக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியவற்றை பி.ஜே போன்றோர் கருத்தில் கொள்ளவில்லை.
ஒரு சொல்லை அல்லாஹ்வுக்கு பயன்படுத்தும் போது அவனது தகுதிக்கும் அந்தஸ்துக்கும் ஏற்றவாறு பொருள் கொடுக்க வேண்டும். அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு அச்சொல்லைப் பயன்படுத்தும் போது இறைவனின் தகுதியைக் குறைத்து விடாதபடியோ நபியின் தகுதியை அளவுக்கு மீறி உயர்த்தி விடாதபடியோ பொருள் கொடுக்க வேண்டும் என்ற சாதாரணமான உண்மையைக் கூட பி.ஜே உணரவில்லை. இதனால் அவர் அல்லாஹ்வின் தகுதிக்கு ஈஸா நபியின் தகுதியை உயத்தி விட்டார். எப்படி,
மக்களே உங்களிடம் கூறப்படுகின்ற உவமையைக் கவனமாகக் கேளுங்கள். நீங்கள் அல்லாஹ்வையன்றி எவர்களை அழைக்கின்றீர்களோ அவர்களால் ஒரு ஈயைக் கூடப் படைக்க முடியாது. அதற்காக அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தாலும் சரியே, இது மட்டுமின்றி, ஓர் ஈ அவர்களிடமிருந்து ஒரு பொருளைப் பறித்துச் சென்றால், அவர்களால் அதனிடமிருந்து அதனை(க்கூட) விடுவிக்க முடியாது. அழைப்போரும் அழைக்கப்படுவோரும் மிகப் பலவீனமானவர்களேயாவர்.
அவர்கள் அல்லாஹ்வை (அவனது பண்புகளை) கண்ணியப்படுத்த வேண்டியவாறு கண்ணியப்படுத்தவில்லை. நிச்சயமாக அல்லாஹ் மிக்க வல்லமையுள்ளவனும் மிகைத்தவனும் ஆவான். (திருக்குர்ஆன் 22: 74-75) பி.ஜே யின் தமிழாக்கம்.
ஒருவரை அழைத்து பிராத்தனை செய்ய வேண்டுமானால் அதற்குரிய ஒரு தகுதியை இவ்வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். படைப்பாற்றல் எவனிடம் உள்ளதோ அவன் மட்டுமே பிராத்தனை செய்யப்பட தகுதியுடையவன், இறைவனை விட்டு விட்டு பிராத்திக்கப் படுபவர்கள் நபிமார்களாயினும், இறைநேசர்களாயினும் அவர்கள் எவருமே ஓர் ஈயைக் கூட படைத்ததில்லை. படைக்க இயலாது. எனவே, அல்லாஹ் பறவைகளைப் படைத்ததைப் போன்று ஈஸா நபி பறவையைப் படைக்கவில்லை என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவரிடம் பறவையைப் படைக்கும் ஆற்றல் உள்ளதால் அவரிடம் பிராத்தனை செய்யலாம் என்று ஏற்க வேண்டும். பி.ஜே எதனை ஏற்கப் போகிறார்?
22:75 - இல் அல்லாஹ் கூறுகின்றான். அவர்கள் அல்லாஹ்வை (அவனது பண்புகளை) கண்ணியப்படுத்த வேண்டியவாறு கண்ணியப்படுத்தவில்லை. அதாவது ஈஸா நபிக்கும் அல்லாஹ்வைப் போல் படைப்பாற்றல் இருக்கின்றது என்று நம்புவதன் மூலம் அல்லாஹ்வின் கண்ணியத்தை ஈஸா நபிக்கு கொடுத்து அல்லாஹ்வின் கண்ணியத்தை குறைத்து விட்டார்கள்.
இதிலிருந்து நாம் தெரிவது என்னவென்றால், படைத்தல் பண்பு அல்லாஹ்வுக்கு வரும் போது அவனுடைய கண்ணியத்துக்கும் தகுதிக்கும் ஏற்ப பொருள் கொடுக்க வேண்டும். அப்பண்பு ஒரு நபிக்கு வரும் போது ஒரு மனித நபி என்ற அளவில் களிமண் போன்ற மனிதர்களை பச்சை நிறப் பறவைகள் போன்று சொர்க்கத்தில் பறந்து திரிபவர்களாக மாற்றுபவர் என்று நம்பவேண்டும்.
அடுத்து திருக்குர்ஆன் 16:20-21 வது வசனத்தில் அவர்கள் அல்லாஹ்வையன்றி எவர்களை அழைக்கின்றார்களோ அவர்களால் (பொய்க்கடவுள்களால்) எதனையும் படைக்க முடியாது. மேலும் அவர்களோ (இறைவனால்) படைக்கப்பட்டவர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். இன்று கிறித்துவ மக்களால் கடவுள் என்று அழைக்கப்படும் ஈஸா நபி எதனையும் படைக்க முடியாது என்று கூறும்போது அவர் பறவையைப் படைத்தார் என்று நம்புவது சரியா?
அப்படி நம்பினால், ஈஸா நபி இறைவனால் படைக்கப்பட்டவர் என்றால் அவரால் பறவையை படைக்க முடியாது என்று நம்பவேண்டும். பறவையை படைத்தார் எனில் இறைவனால் படைக்கப்பட்டவர் அல்லர் என்று நம்ப வேண்டும். பி.ஜே எதனை நம்ப போகிறார்?
(பொய்க்) கடவுளர் எதனையும் படைத்ததில்லை. அவர்களோ படைக்கப் படுகின்றனர். (திருக்குர்ஆன் 16:17 ). பி.ஜே யின் தமிழாக்கம்.
இவ்வசனத்தில் அல்லாஹ்வால் படைக்கப்பட்டவர்கள் எதனையும் படைக்க முடியாது என்ற கருத்து கூறப்பட்டுள்ளது.
இது அல்லாஹ்வின் படைப்பாகும். எனவே, நீங்கள் அவனையன்றி மற்றவர்கள் எதனைப் படைத்துள்ளனர் என்பதை எனக்குக் காட்டுங்கள். (திருக்குர்ஆன் 31:12)
(பொய்த் தெய்வங்கள்) அவை பூமியில் படைத்திருப்பதை நீங்கள் எனக்குக் காட்டுங்கள். (35:40; 46:5 )
அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்தவன். வேறுயாரும் எதனையும் படைத்ததில்லை. என்றால், ஈஸா நபி பறவையைப் படைத்திருக்கிறார் என்று நம்புபவர்கள் அல்லாஹ்விடம் ஈஸா நபி படைத்த பறவையைக் கொண்டு காட்டுவார்களா?
முதன் முறையாகப் படைத்து அதனையும் திரும்பவும் செய்கின்ற எவராவது இணை வைப்பவர்களுள் இருக்கின்றனரா? முதன் முறையாகப் படைத்து அதனைத் திரும்பவும் செய்கின்றவன் அல்லாஹ் (மட்டும்) தான் (10:35 )
எதோ ஒரு பறவையை முதலில் படைத்தவர் ஈஸா நபி தான் என்று இவர்கள் ஈஸா நபியை இறைவன் முன் நிறுத்தப் போகிறார்களா?
அவன் படைத்ததைப் போன்று அவை (பொய்க் கடவுள்கள்) படைத்ததன் காரணமாகவா அவற்றை அவர்கள் அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கிக் கொண்டனர்? எனவே (தான் இரு) படைப்புகளும் அவர்களுக்கு ஒன்று போல் தெரிகிறதோ? (திருக்குர்ஆன் 13:17)
ஈஸா நபி பறவையைப் படைத்தார் என்று நம்பும் பி.ஜே ஈஸா நபியை அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கிக் கொள்கிறார். மேலும் ஈஸா நபி படைத்த பறவையையும் அல்லாஹ் படைத்த பறவைகளும் ஒன்று போல் அவர்களுக்குத் தெரிகிறது என்று இந்த வசனத்தின் மூலம் விளங்கிக் கொள்கிறோம்.
அல்லாஹ்வே உங்களைப் படைத்தவன். பின்னர் அவனே உங்களுக்கு உணவு அளித்தான். பின்னர் அவன் உங்களை மரணிக்கச் செய்தான். பின்னர் அவன் உங்களை உயிர் பெறச் செய்வான். உங்களால் இறைவனுக்கு இணையாக்கப்பட்டவர்களுள் எவரேனும் இச்செயல்களில் எதையாவது செய்கின்றனரா? அவன் தூயவனும் மேலும் அவர்கள் (அவனுக்கு) ஏற்படுத்தும் இணைகளை விட்டும் அவன் மிக்க மேலானவன். (திருக்குர்ஆன் 30:41)
ஈஸா நபி பறவையைப் படைத்துள்ளார். இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்துள்ளார். எனவே இரண்டு செயல்களைச் செய்துள்ளார் என்று நம்பும் பி.ஜே இறைவனின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? அப்படி நம்பினால் அவர் இறைவனுக்கு இணை வைத்தவரும் அல்லாஹ்வின் தூய்மைக்கும் அல்லாஹ்வின் மேன்மைத் தன்மைக்கும் களங்கம் கற்பித்தவரும் ஆவார்.
அப்படி என்றால், ஈஸா நபி களி மண்ணால் பறவையைப் படைத்துள்ளார் என்று திருக்குர்ஆன் 2 இடங்களில் கூறுகிறதே? என்ற கேள்வி எழும்.
அல்லாஹ் உலகில் உள்ள பறவைகள் முதல் ஈஸா நபி போன்ற மனிதர்கள் வரை அனைத்துப் படைப்புகளையும் படைத்தது போன்று ஈஸா நபி படைக்கவில்லை. மாறாக ஒரு மனித நபி களிமண் போன்ற மனிதர்களை மனிதனாக மாற்றி பிறகு அவனை மனிதப் புனிதனாக்கி ஆத்மீக வானில் பறந்து திரியும் பறவை போல் மாற்றினார் என்று பொருள்.
உயிர் கொடுத்தல்
அல்லாஹ் மட்டுமே இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கிறான். அவனைத் தவிர வேறு யாரும் இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்க முடியாது. இதுவே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.
1. ஈஸா நபி இறந்தவர்க்கு உயிர் கொடுத்தார் என்று திருக்குர்ஆனில் வருகிறதே என்றால் இறந்தவர்கள் மீண்டும் இந்த உலகிற்கு வர முடியாது என்று ஏறக்குறைய 16 இடங்களில் வருகிறது. இதில் ஒன்று 23:100 வசனம். இந்த வசனத்தைப் பற்றி பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 298 இல்.
உயிர்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை எனும் தலைப்பில் எழுதியுள்ளார். அதில், ஒருவர் மரணித்துவிட்டால் அவருக்கும் இந்த உலகத்திற்கும் இடையில் எந்த விதமான தொடர்பும் கிடையாது. அவர்களுக்குப் பின்னால் புலனுக்குத் தெரியாத மிகப் பெரிய திரை போடப்பட்டு விடுகிறது என்று இந்த வசனம் (திருக்குர்ஆன் 23:100) கூறுகிறது என்று எழுதியுள்ளார்.
பி.ஜே உண்மையில் இவ்வாறு நம்புகிறார் என்றால் ஈஸா நபி உயிர் பெறச் செய்த அந்த ரூஹ் அந்தத் திரையைத் தாண்டி எப்படி வந்தது?
மலக்குல் மவ்த் – ரூஹைப் பறித்துச் செல்வார். ஆனால் பறித்த உயிரை திரையைக் கிழித்துக் கொண்டு எந்த மலைக்கு அந்த ரூஹைக் கொண்டு வந்து அந்த சடலத்தில் புகுத்தினார்? மலக்குல் மவ்த் போன்று மலக்குல் ஹயாத் பற்றி திருக்குரானிலோ நபிமொழியிலோ இல்லையே ஏன்?
2. பேய் பிசாசு உண்டா எனும் தலைப்பில் பி.ஜே எழுதியுள்ள நூலில் இறந்து போன உயிர்கள் மீண்டும் இந்த உலகிற்கு வருவதில்லை என்பதற்கு பி.ஜே காட்டும் திருக்குர்ஆன், நபிமொழி ஆதாரங்கள் ஊருக்குத் தான் உபதேசமா? அந்நூலில் பி.ஜே எடுத்து வைக்கும் ஆதாரங்கள் ஈஸா நபி இறந்தவர்க்கு உயிர் கொடுக்கவில்லை என்பதற்குப் பொருந்தாதா?
3. திருக்குர்ஆன் 8:25 வசனத்தில், நபி (ஸல்) உயிர் கொடுப்பதற்காக உங்களை அழைக்கும் போது அவர்க்குப் பதிலளியுங்கள் என்று வருகிறதே, நபி (ஸல்) அவர்கள் இறந்தவர்க்கு உயிர் கொடுத்தார் என்று பி.ஜே ஏற்றுக் கொள்வாரா? ஈஸா நபியுடனும் நபி (ஸல்) அவர்களுடனும் உயிர் கொடுத்தல் எனும் ஒரே சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
4. என் இறைவன் உயிர் கொடுப்பவன். மரணிக்க செய்பவன் என்று இப்ராஹீம் நபி அவர்கள் கூறியபோது நானும் உயிர் கொடுப்பேன்: மரணிக்க செய்வேன் என்று அவன் (இறைமறுப்பாளன்) கூறினான் என்று வருகிறது. (திருக்குர்ஆன் 2:259)
இப்ராஹீம் நபியுடன் வாதிட்ட இறைமறுப்பாளனுக்கும் அல்லாஹ்வைப் போல் இறந்தவனுக்கு உயிர் கொடுக்கும் ஆற்றல் உள்ளது என்று பி.ஜே ஏற்றுக் கொள்வாரா?
5. தஜ்ஜால் இறந்தவரை உயிர்பிப்பான். ஆனால் மற்றொரு தடவை அவனால் இதைச் செய்ய முடியாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டனர் என்று பி.ஜே திருமறையின் தோற்றுவாய் எனும் நூலில் அவ்லியாக்களின் அற்புதங்கள் எனும் தலைப்பில் எழுதியுள்ளார்.
முழுக்க முழுக்க இறைத்தன்மை பெற்றவர்களாக மற்றவர்களை எண்ணுவது மாத்திரம் இணை வைத்தல் அன்று, மாறாக இறைவனது தன்மையில் ஏதேனும் ஒரு தன்மை இறைவனுக்கு இருப்பது போல மற்றவர்களுக்கும் இருப்பதாக எண்ணுவதும் இணை வைத்தலாகும். ஷிர்க்கின் இந்த இலக்கணத்தை பி.ஜே திருமறையின் தோற்றுவாய் எனும் நூலில் பரிந்துரையை வேண்டுவது குற்றமா எனும் தலைப்பில் எழுதியுள்ளார். இதன் அடிப்படையில் தஜ்ஜால் அல்லாஹ்வின் ஒரு பண்பாகிய உயிர் கொடுத்தல் எனும் பண்பை, ஒரே ஒரு முறை செய்ததாக பி.ஜே நம்புகிறார். இது இணை வைத்தல் இல்லையா? இணை வைத்தல் எனும் கொடிய விஷத்தை ஒருவன் ஒரே ஒரு முறை சாப்பிட்டால் அவன் சாக மாட்டான் என பி.ஜே நம்புகிறாரா?
6. பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 24 இல் கொலையாளியைக் கண்டு பிடித்தல் எனும் தலைப்பில் 2:72 வசனத்திற்கு விளக்கமாக, மூஸா நபியவர்கள் இறந்தவனை மாட்டின் ஒரு பகுதியால் அடித்து அவனை உயிர் பெறச் செய்திருப்பதாக நம்புகிறார். ஆனால் மூஸா நபியின் மீது அவரது சமுதாயம் ஹரூன் நபியைக் கொன்றதாக பழி சுமத்திய போது மூஸா நபி, தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க மாட்டின் ஒரு பகுதியால் ஹாரூன் நபியின் உடலில் அடித்து உயிர் பெறச் செய்யவில்லையே ஏன்? (பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 394 காண்க)
7. மேலே கூறியவற்றை தொகுத்துப் பார்க்கும் போது,
1) அல்லாஹ்வுக்கு மட்டுமே இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் ஆற்றல் உள்ளது. வேறு எவர்க்கும் இல்லை.
2) இறந்த உயிர்கள் மீண்டும் திரும்பி இந்த உலகத்திற்கு வராது என்ற கருத்தை நிரூபிக்கும் திருக்குர்ஆன், நபிமொழி சான்று பற்பல உள்ளன. இது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் ஈஸா நபி , நபி (ஸல்) மூஸா நபி, இறை மறுப்பாளன், தஜ்ஜால் ஆகியோர் இறந்தவருக்கு உயிர் கொடுத்துள்ளார் என்ற தவறான நம்பிக்கை காணப்படுகிறது. அப்படியெனில், திருக்குர்ஆனில் முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன என்று பி.ஜே நம்புகிறாரா?
8. அல்லாஹ் இறந்தவர்க்கு உயிர் கொடுத்து எழுப்புவது கியாமத் நாளில்தான், அதற்கு முன் உயிர் கொடுப்பதில்லை, ஆனால் ஈஸா நபி (அலை) உடனே உயிர் கொடுத்து எழுப்பியதாக பி.ஜே நம்புகிறார். அப்படி எனில் ஈஸா நபியை அவர் அல்லாஹ்வை விட அதிகமாக உயர்த்தியிருப்பதாக தெரிகிறது (நவூதுபில்லாஹ்)
9. திருக்குர்ஆனில் இரண்டு வகை வசனங்கள் உள்ளன. ஒன்று அடிப்படை வசனங்கள். இரண்டு உவமை வடிவிலான வசனங்கள்.
அல்லாஹ் ஒருவனே: அவனே அனைத்தையும் படைப்பவன்: அவன் அனைத்தையும் மரணிக்கச் செய்பவன்: அவனே இறந்தவர்களை உயிர்பிப்பவன், இவை திருக்குர்ஆனின் அடிப்படை வசனங்களாகும்.
ஈஸா நபி படைத்தார்; உயிர் கொடுத்தார்; குருடர்களை குணப்படுத்தினார்; தொழு நோயாளிகளை குணப்படுத்தினார் என்பவை உவமை வடிவிலானவை. இவற்றிற்கு, அடிப்படை வசனங்களுக்கு முரண்படாத வகையில் பொருள் கொடுக்க வேண்டும். உதாரணமாக, ஈஸா நபி இறந்த பிறகு மறுமையில் அவர்க்கு உயிர் கொடுத்து எழுப்புபவன் அல்லாஹ்வே, ஆனால் ஈஸா, நபி என்ற அடிப்படையில் அவரது சமுதாய மக்கள் ஆன்மீக மரணம் அடைந்து கிடந்த போது அம்மக்களுக்கு ஆத்மீக உயிர் கொடுத்து எழுப்பியவர் ஈஸா நபி என்று அதற்குப் பொருள் கொடுக்க வேண்டும். ஈமான் இல்லாதவர்கள் இறந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு ஈமானை கொடுப்பது உயிர் ஊட்டுவதாகும்.
இக்கருத்தை திருக்குர்ஆன் 6:123 வசனம் விளக்குகிறது. ஒருவன் (நிராகரிப்பினால்) மரணித்தவனாக இருந்த பிறகு (நேர்வழியின் மூலம்) அவனை நாம் உயிர்ப்பித்து அவனுக்கு (ஈமான் எனும்) ஒளியை நாம் கொடுத்து அதன் மூலம் மனிதர்களிடையே நடக்கிற அவன் (குப்ர் எனும்) இருள்களில் (சிக்கி) இருந்து அவற்றை விட்டும் வெளியேற முடியாதவனைப் போல் ஆவானா?
10. ஈஸா நபியின் சிறப்பு எதுவென்றால் அவர் உவமை வடிவில் தான் தூதுச் செய்தியை மக்களுக்கு ஊட்டினார். எனவே அவர் பற்றிய இந்த செய்திகளும் உவமை வடிவில் கூறப்பட்டுள்ளன.
11. அல்லாஹ்வுக்கும் உவமை கூறாதீர்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது ( )
இதற்கு பி.ஜே அல்லாஹ்வைப் பற்றி கூறுவதென்றால் வக்கீல், நீதிபதி, அதிகாரி என்றெல்லாம் உதாரணம் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். ஆல்லாஹ்வைப் போல் எதுவும் இல்லாததால் எதையும் உதாரணம் காட்டிப் பேசலாகாது என அல்லாஹ் சொல்லித் தருகிறான் என்று திருமறையின் தோற்றுவாய் எனும் நூலில், உதாரணங்கள் ஆதாரங்களாகுமா? எனும் தலைப்பில் எழுதியுள்ளார்.
அல்லாஹ் தனக்கு உவமை கூறாதீர்கள் எனக் கூறியது வக்கீல், நீதிபதி என்று கூறும் உவமைகள் அல்ல. ஈஸா நபி இறந்தவர்க்கு அல்லாஹ்வை போல் உயிர் கொடுத்தார் என்று கூறுவது தான் அல்லாஹ்வுக்கு, ஈஸா நபியை உவமை கூறுவதாகும். எனவே அவனைப் போல் எதுவுமில்லை. (திருக்குர்ஆன் 42:11) என்றும் அவனுக்கு நிகராக எவனுமில்லை (112:4) என்றும் திருக்குர்ஆன் கூறுவதால் ஈஸா நபி இறந்தவர்க்கு அல்லாஹ்வைப் போல் உயிர் கொடுத்தார் என்று கூறுவது அல்லாஹ்வுக்கு உவமை கூறுவதாகும். அதாவது ஈஸா நபி அல்லாஹ்வைப் போல அவனுக்கு நிகராக உள்ளார் என்று நம்புவதாகும்.
குருடர்களையும் நோயாளிகளையும் குணப்படுத்துதல்:
இவையும் உவமை வடிவில் கூறப்பட்டவையாகும். ஈஸா நபி புறக்கண் குருடர்களையும், உடல் நோயாளிகளையும் குணப்படுத்த வரவில்லை. அவர் அகக் குருடர்களையும் அறிவுக் குருடர்களையும் ஆத்மீக நோயாளிகளையுமே குணப்படுத்த வந்தார். உலகில் வந்த அனைத்து நபிமார்களும் இந்தப் பணியைச் செய்யத்தான் வந்தனர். திருக்குர்ஆனில் புறக்கண் குருடர்களைப் பற்றி பொதுவாக சில இடங்களில் வருகிறது. (அவை 25:74, 6:105, 47:24, 41:18 ஆகிய வசனங்களாகும்.)
1) உங்கள் வீடுகளிலோ சாப்பிடுவது நோயாளியின் மீதும் குற்றமில்லை. ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ தனித்தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. (திருக்குர்ஆன் 24:62)
இந்த வசனங்களில் சில வீடுகளைக் குறிப்பிட்டு இவர்களின் வீடுகளில் நோயாளி, குருடர், ஊனமுற்றவர்கள் சாப்பிடுவது குற்றமில்லை என்று கூறப்பட்டுள்ளது.
2) போருக்குச் செல்லாமல் இருப்பது குருடர் மீதும் குற்றமில்லை. நொண்டியின் மீதும் குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. (திருக்குர்ஆன் 48:18)
3) தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக அவர் முகம் சுளித்து புறக்கணித்து விட்டார். (80:1-2)
இந்த இடங்களில் மட்டுமே புறக்கண் குருடர்களைப் பற்றி வந்துள்ளன. ஏனைய எல்லா இடங்களிலும் அகக்கண் குருடர்களைப் பற்றியே வந்துள்ளன. இத்தகு கருத்துக் குருடர்களை குணப்படுத்தவே ஈஸா நபி வந்தார்கள். ஏன் எல்லா நபிமார்களும் வந்துள்ளனர். (2:19, 2:172, 10:44, 27:82, 30:54, 43:21, 22:47, 5:72, 6:105, 17:98, 25:74) இவ்வாறே உடல் நோயாளிகளைப் பற்றியும் சில வசனங்களில் (24:62, 48:18, 9:91, 73:21, 26:81, 2:185-186, 2:196, 4:44,107, 5:7 ) வந்துள்ளன. நான் நோயாளியாக இருக்கின்றேன் (37:39) என இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் கூறினார்கள். இவை உடல் நோயாளிகளைப் பற்றி வரும் இடங்களாகும். ஏனைய இடங்களில் ஆத்மீக நோய்களைக் குறித்தே வருகிறது. ஈஸா நபி குணப்படுத்திய நோய் ஆத்மீக நோய் ஆகும். ஏனென்றால் உடல் நோய்களைக் குணப்படுத்த உலகில் பல மருத்துவர்களும், மருந்துகளும் உள்ளன. ஆனால் இறைவனுடன் தொடர்புடைய ஆத்மீக நோய்களைக் குணப்படுத்தவே நபிமார்களை அல்லாஹ் அனுப்புகின்றான்.
(உள்ளத்தின் நோயைப் பற்றி திருக்குரானில் 2:11, 5:53, 8:50, 9:125, 22:54, 24:51, 33:13, 33:33, 33:61, 47:21, 47:30, 74:32, 24:6 26:81, 48:18, 2:185-186,196; 4:44,103; 5:7, 9:91, 73:21 போன்ற வசனங்களில் கூறப்பட்டுள்ளன.)
2:19,172; 10:44, 27:82, 30:54, 43:41, 17:98, 25:74, 6:105, 5:72, 22:47, 47:24, 41:18 போன்ற வசனங்களில் ஆத்மீகக் குருடர்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளன. ஒரு வாதத்திற்காக அவை உடல் நோய்கள் என்று வைத்துக் கொண்டால்,
முஸ்லிம் ஹதீஸ் எண் 5735:
ஒரு சாதாரண சிறுவன் குருடர்களைக் குணப்படுத்துகின்றான். தொழு நோயாளிகளையும் பிற நோய்களையும் குணப்படுத்துகின்றான். தன்னை மலையிலிருந்து உருட்டிக் கொள்வதற்கு அனுப்பட்ட அரச வீரர்களை மலையை குலுங்க வைத்து தப்புகிறான். தன்னைப் படகில் ஏற்றி கடலில் எறிந்து கொல்ல வந்த வீரர்களை மறக்களைத்திளிருந்து விழ வைத்து தப்புகிறான் என்று அந்த நபிமொழி கூறுகிறது. எனவே ஒரு சாதாரண சிறுவனும். துஆவினால் அந்த அற்புதங்களைச் செய்துள்ளான். எனவே ஈசா நபி மட்டும் செய்தார் என்பதற்கு இடமில்லை.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.