திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 327 இல் ஜின்களுக்கு மறைவானவை தெரியாது என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்:
ஸுலைமான் நபிக்குப் பயந்து கொண்டு பைத்துல் முகத்தஸை கட்டும் பணியில் ஜின்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். (குர்ஆன் 34:14)
ஸுலைமான் நபி நின்ற நிலையிலேயே இறந்து விட்டார் ஆனாலும் கைத்தடியை ஊன்றிக் கொண்டிருந்ததால் அவர் கீழே விழாமல் அப்படியே நின்றார். பிறகு கைத்தடியை கரையான்கள் அரித்த போது, அவரது உடல் கீழே விழுந்தது. அவர் விழுந்த பிறகுதான் ஸுலைமான் நபி ஏற்கனவே இறந்துவிட்டார் என்ற செய்தி ஜின்களுக்குத் தெரிகிறது.
தங்களுக்கு அருகில் நின்று கொண்டிருக்கும் ஸுலைமான் நபி உயிருடன் இருக்கிறாரா? மரணித்து விட்டாரா? என்பதைக் கூட ஜின்களால் கண்டு பிடிக்க இயலவில்லை.
நம் விளக்கம்:
ஸுலைமான் நபி (அலை) அவர்கள் பைத்துல் முகத்தஸை ஜின்களைக் கொண்டு கட்டும்பணி – அச்சமயம் நின்ற நிலையில் மரணித்தல் – கீழே விழாமல் அப்படியே நிற்றல் – கைத்தடியை கரையான்கள் அரித்தல் – அவர் கீழே விழுதல் ஆகியவை திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் இல்லாத கட்டுக் கதைகள் இப்படிப்பட்ட கற்பனை வளம் செறிந்த கட்டுக் கதையை பி.ஜே எங்கிருந்து பெற்றார்? ஆதாரம் தரமுடியுமா?
பி.ஜே தன் திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 237 இல், ஜின்களுக்கு கண்மூடித் திறப்பதற்குள்ளும், இருந்த இடத்திலிருந்து எழுவதற்குள்ளும் ஒரு நாட்டிற்குள் இருக்கும் சிம்மாசனத்தை மற்றொரு நாட்டில் கொண்டு வந்து வைக்கக் கூடிய ஆற்றல் இருந்தது என்றும் எழுதுகிறார், அப்படி என்றால்,
1) ஒரு மனிதர் உயிருடன் இருக்கும் போது அவருடைய உடல் நிலையும், தூங்கும் போதோ, மரணித்த பின்னோ காணப்படும் உடல் நிலையும் பார்த்தாலே தெரியுமே! தூங்கும் போது தலை சாய்ந்தோ, கழுத்து தொங்கியோ காணப்படும். இந்த அற்ப அறிவு கூடவா ஜின்களுக்கு இல்லாமல் போய்விட்டது?
2) பைத்துல் முகத்தஸை ஜின்கள் ஓரிரு நாள்களில் கட்டி முடிக்க வேண்டியதுதானே! ஏன் கட்டி முடிக்கவில்லை? எத்தனை மாதங்கள், வருடங்கள் ஆயின என்பதற்கு பி.ஜே நபிமொழி ஆதாரம் காட்டுவாரா?
3) ஸுலைமான் நபி நின்ற நிலையிலேயே இறந்து விட்டார் ஆனாலும் கைத்தடியை ஊன்றிக் கொண்டிருந்ததால் அவர் கீழே விழாமல் அப்படியே நின்றார் என்றால்,
ஒரு மன்னரும் நபியுமாகிய அவருக்கு ஆன்மீக, அரசியல், இல்லறம், சுய வேலைகள் இவை எதுவும் இல்லையா? அதையெல்லாம் கவனிக்காமல் பல நாட்களாக, பல வாரங்களாக, இந்தக் கட்டிடப் பணியைத் தான் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாரா? இதற்கு வேறு பணியாளர்கள் யாரும் இல்லையா? மந்திரிகளும் மனைவி மக்களும், பிறரும் அவரைத் தேடி வரவில்லையா?
4) இறந்து பன்னாட்களாகியும் மன்னர் வரவில்லையே என்பதை யாரும் கவனிக்கவில்லையா? மன்னரும் மற்ற பணிகள் எதையும் கவனிக்கவில்லை. மன்னரையும் யாரும் கவனிக்கவில்லை என்று பி.ஜே நம்புகிறாரா?
5) ஒரு மனிதனின் ரூஹ் பிரியும் போது, அவர் எப்படிப்பட்ட பலசாலியாக இருந்தாலும் கீழே விழாமல் கைத்தடியை ஊன்றிக் கொண்டு நிற்க முடியும் என்று அறிவும் அனுபவமும் கொண்ட ஒரு மனிதன் நம்ப முடியுமா? முடியும் என்றால், அதனை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துக் காட்ட முடியுமா?
6) ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கே 63 வயதில் மரண வேளையில் இரு கால்களையும் தரையில் ஊன்றி நடக்க முடியவில்லை என்றால் இத்தனைக்கும் அவர்கள் இரு மனிதர்களின் தோள்களில் தம் இரு கைகளையும் ஊன்றிக் கொண்டிருந்தார்கள் என்றால், சுலைமான் நபி எப்படி உயிர் பிரியும் போது கைத்தடியால் ஊன்றிக் கொண்டு நிற்க முடியும்?
7) சில அல்லது பல நாட்களாக ஒரு மனித நபி, இறை வழிபாட்டுக்காக, இயற்கை தேவைகளுக்காக, இல்லறப் பணிகளுக்காக, அரசியல் பணிகளுக்காகக்ச் செல்லாமல் இருப்பதை ஜின்களுக்கு கண்கள் இருந்தும் கவனிக்கவில்லையா? அவை கருத்துக் குருடாக இருந்தனவா? அல்லது அவை அனைத்தும் குருட்டு ஜின்களா?
8) தங்களுக்கு அருகில் நின்று கொண்டிருக்கிற ஸுலைமான் உயிருடன் இருக்கிறாரா? மரணித்து விட்டாரா என்பதைக் கூட ஜின்களால் கண்டுபிடிக்க இயலவில்லை என்றால்,
அந்த ஜின்கள் வானம் சென்று, அதைத் தீண்டியிருக்கமுடியும், ஒட்டுக் கேட்பதற்காக அங்கே பல இடங்களில் அமர்ந்திருக்க முடியும் என்பது சரியா? (ஆதாரம்: 72:8-9 பி.ஜே தமிழாக்கம்). கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர், வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா?
9) சுலைமான் நபிக்கு பயந்து கொண்டு பைத்துல் முகத்தஸைக் கட்டும் பணியில் ஜின்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தன என்று பி.ஜே எழுதியுள்ளார். அப்படி என்றால், சுலைமான் நபி ஒரு கொடிய சர்வாதிகாரியா? அவர் ஜின்களை ஈவு இரக்கமின்றி ஜின்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை கொத்தடிமைகளாக நடத்திக் கொண்டிருந்தாரா? இஸ்ரவேல் மக்களை பிர்அவ்ன் கொத்தடிமைகளாக நடைத்தியது போல் ஸுலைமான் நபி நடத்தினாரா? பி.ஜே யின் கற்பனை கதை, ஒரு நபியை, நீதியான ஆட்சி நடத்திய இறக்க குணம் கொண்ட ஒரு அரசரை கொடுங்கோலனாக படம் பிடித்துக் காட்டுகிறது.
10) கைத்தடியை ஊன்றிக் கொண்டிருந்தார். கைத்தடியைக் குறிக்க அரபி மொழியில் பல சொற்கள் இருக்கலாம். அதை நான் மறுக்கவில்லை. ஆனால், கைத்தடி என்றாலே குர்ஆன், நபிமொழி வரலாறு தெரிந்த மக்களும் பாமர மக்களும் கூட அஸா என்று கூறுவார். மூஸா நபியின் அஸா அவர்களின் நினைவுக்கு வரும். சுலைமான் நபியின் கைத்தடியைக் குறிக்க அஸா என்று வராமல் மின்சஅத் என்ற சொல் வந்துள்ளதே ஏன்? ஆடு மாடு மேய்ப்பவர்களின் கையில் கைத்தடி இருக்கும். சுலைமான் நபியின் கையில் கைத்தடி எதற்கு? கைத்தடியை ஊன்றிக் நடக்கும் அளவுக்கு அவர் வலிமையின்றி இருந்தாரா? அப்படி எனில் கட்டிடப் பணியை அவர் ஏன் கவனிக்க வந்தார்? வேறு ஆட்கள் அப்பணிக்கு நியமிக்கவில்லையா?
கரையான்கள் கைத்தடியை அரித்து தின்று விட்டது என்பதில் திருக்குர்ஆனில் மூல பாடத்தில் தாபத்துல் அர்ல் – பூமியிலுள்ள பூச்சி என்றுதான் வருகிறது. மனிதன் உட்பட பூமியில் ஊர்ந்து செல்லும் அனைத்து உயிர்களையும் அது குறிக்கும். கரையான்களைக் குறிக்க அரபி மொழியில் வேறு சொல்லே இல்லையா? ஸுலைமான் நபியின் கைத்தடியை, அரண்மனையில் அரித்துத் தின்ற கரையான்கள், ஒருவரின் உடலையும் உணவையும் எப்படித் தின்னாமல் விட்டு வைத்திருக்கும்? (திருக்குர்ஆன் 2:260)
கைத்தடி என்பது இந்த இடத்தில் செங்கோலைக் குறிக்கும் என்பதனை கீழ்க்கண்ட ஹதீஸிலிருந்து நாம் விளங்குகிறோம்.
ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கஹ்தான் குலத்திலிருந்து ஒரு மனிதர் மக்களைத் தம் கைத்தடியால் ஓட்டிச் செல்பவராகத் தோன்றாதவரை உலக முடிவு நாள் வராது. (ஆதாரம்: புகாரி 3517)
அதாவது இதில் கைத்தடி செங்கோலையும் ஓட்டிச் செல்லுதல் ஆட்சி செய்தலையும் குறிக்கும் எனவே சுலைமான் நபியின் ஆட்சியை சீரழிக்கக் கூடிய ஒருவர் ஆட்சிப் பொறுப்புக்கு வரவிருக்கிறான் என்பதை இது சுட்டிக் காட்டுகிறது.
இதிலிருந்து பி.ஜே திருக்குர்ஆனிலும் ஹதீஸிலும் கூறப்படாத கட்டுக்கதையைக் கூறி திருக்குர்ஆன் வசனத்திற்கு தவறான விளக்கம் தருகிறார் என்பது தெரிகிறது;
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.