அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jul 25, 2014

அந்நஜாத்தின் புரோகிதப் புரட்டு. - 2


இறை தூதர்களில் ஒருவரான ஹஸ்ரத் ஈசா நபி (அலை) அவர்களை அந்-நஜாத் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் ஓய்வு பெற்ற ஒரு மாவட்ட ஆட்சியருக்கு ஒப்பிட்டு (நஜாத் மே 2011 பக்கம் 30) எழுதிய அவலத்தை கண்டித்து அப்துல் ஹமீது காதிர் என்பவர் எழுதிய விமர்சனத்தை அந்நஜாத் ஆகஸ்டு 2011 பக்கம் 20 இல் படித்திருப்பீர்கள். 

வழிகேடர்களின் கொள்கை என திருக்குர்ஆன் வருணித்துக் கூறும் இறுதி நபிக் கொள்கையை நிரூபித்துக் காட்ட திராணியற்ற நிலையில், அந்தப் புரோகிதக் கொள்கையை (40:35) நியாயப்படுத்துவதற்காக, வருகின்ற ஈஸா நபியும் நபிப்பதவியை இழந்து விட்டுதான் வந்து நிற்பார் என்று நாக்கூசாமல் கூறுகின்ற நஜாத் பிரிவினரின் கொள்கை எவ்வளவு வழி கேடானது என்பதை முஸ்லிம்களில் பலர் புரிந்து கொண்டே வருகின்றனர் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். மௌலவி புரோகிதர்களைப் புறக்கணிக்காதவரை முஸ்லிம்களுக்கு எழுச்சியில்லை என மார்தட்டிப் பேசும் நஜாத் பிரிவினரும் ஈஸா நபி (அலை) அவர்கள் விஷயத்தில் மௌலவி புரோகிதர்களைத் தான் பின் பற்றுகின்றார்கள் என்பதை பெரும்பான்மையான முஸ்லிம்கள் தற்போது உணர்ந்து வருகின்றனர். எனவே வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஆகவும், மஹ்தி ஆகவும் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் கூற்று நிறைவேறும் நாள் நெருங்கிவிட்டது. அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

“இன்றிலிருந்து 300 ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்னாலேயே ஈஸா நபியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்களாகட்டும், கிறிஸ்தவர்களாகட்டும் அவர்கள் தமது இந்தப் பொய்யான கொள்கையை கைவிட்டு விடுவார்கள்.” (ரூஹானி கஸாயீன் 20 தொகுதி பக்கம் 67) 

முஸ்லிம்களில் – அதுவும் அபூ அப்தில்லாஹ்வின் ஒப்புதல் வாக்கு மூலப்படி ஒரு காலத்தில் அந்நஜாத் பிரிவில் ஒருத்தராக இருந்த ஒருவராகிய ( நஜாத் ஆகஸ்டு 2011 பக்கம் 21 பார்க்க) அப்துல் ஹமீது காதிர் போன்றோரும். ‘இறை தூதர் ஈஸா நபி (அலை) உயிருடன் உயர்த்தப்படவில்லை: யுக முடிவில் அவர் மீண்டும் இவ்வுலகிற்கு வரமாட்டார். அதற்க்கு குர்ஆன் ஆதாரம் இல்லை..... கிறிஸ்தவர்கள் ஜீஸசை கடவுள் என உயத்துதவற்கு இந்த அபத்தமான கதையை சந்தைப் படுத்தினார்கள் (பார்க்க அந்நஜாத் ஆகஸ்டு 11 பக்கம் 20) என்ற அளவிற்கு புரிந்து கொண்டார்கள் என்றால் இது ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்கள் அன்று சொன்ன வார்த்தை நிறைவேறிவிட்டது என்பதையே நிரூபித்துக் காட்டி விட்டது!

அது மட்டுமல்லாது, அப்துல் ஹமீது காதிர் என்பவர், இஸ்லாத்தில் மிக அதிகமாக போற்றத்தக்க இறை தூதர்களில் ஒருவரான ஈஸா நபி (அலை) அவர்களை, அபூ அப்தில்லாஹ் ஓய்வு பெற்ற ஒரு மாவட்ட ஆட்சியருக்கு ஒப்பிட்டது (பார்க்க அந்நஜாத் மே 2011 பக்கம் 30) அவரது பகுத்தறிவில்லாத சிந்தனைக்கு இன்னுமொரு ஆதாரமாகும் எனவும் அந்நஜாத்தில் விமர்சித்து எழுதியிருப்பது அபூ அப்தில்லாஹ் பாணியில் சொல்லப்போனால், நெற்றிப் பொட்டில் ஓங்கி அறைந்துவிட்டது போல் இருக்கிறதே என்பதையும் நடுநிலையில் சிந்திப்பவர்கள் உணர்ந்துகொண்டனர். அல்ஹ்மதுலில்லாஹ். 

இதற்குப் பதிலளிக்க திராணியற்ற அபூ அப்தில்லாஹ், தமது சுய விளக்கத்தில் ஒரு காலத்தில் ஒரு மாவட்டத்திற்கு கலெக்டர் ஆகப் பதவி வகித்தவர், ஓய்வு பெற்ற பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் அம்மாவட்டத்திற்கு வரும் போது கலெக்டர் என்று சொல்லலாம் எனச் சப்பைக் கட்டு கூறியிருக்கிறார். (அந்நஜாத் ஆகஸ்டு 2011 பக்கம் 32) 

பிற்காலத்தில் தோன்றும் ஈசா (அலை) அவர்களைப் பற்றி ஈசா நபியுல்லாஹ் (அல்லாஹ்வின் நபியாகிய ஈசா) என்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் நான்கு முறை கூறியதாக சஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளதை நாம் எடுத்து வைத்திருக்கிறோம். 

ஆனால் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் இந்த பத்வாவை (மார்க்க தீர்ப்பை) ஏற்றுக் கொள்வதற்கு அபூ அப்தில்லாஹ் தயாரில்லை. மாறாக, அந்தப் பதவி ஒரு ஓய்வு பெற்ற முன்னாள் பதவியைப் போன்றதுதான் என்று ஒரு சுய விளக்கத்தைக் கூறினார். ஹதீஸில் இல்லாத இந்தச் சொந்தக் கைச் சரக்கை அபூ அப்தில்லாஹ் மற்றும் அவரை சார்ந்தோர் கைவிடாத வரை அவர்களும் புரோகித மௌலவிகளைச் சேர்ந்தவராகவே இருப்பார். இந்த வகையில் ‘மௌலவி புரோகிதர்கள் சட்ட விரோதமாக கொல்லைப் புற இடுக்கு வழியாக திருட்டுத்தனமாக புகுந்து கொண்ட திருடனினும் கேடு கெட்ட திருடர்கள்’ (பார்க்க: அந்நஜாத் ஆகஸ்டு 2011 பக்கம் 30) என்று கடுமையாக விமர்சித்து எழுதும் அதே கூட்டத்தில்தான் இவர்களும் இருக்கின்றனர் என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது. 

‘சுய கருத்தை, சுய விளக்கத்தை நாம் கொடுத்தால், அது கால் காசும் பெறாது: அதை அப்பட்டமான குப்பை தொட்டியில் எறியவேண்டியதுதான். (அந்நஜாத் ஆகஸ்டு 2011 பக்கம் 29 பார்க்க) அன்று அபூ அப்தில்லாஹ்வின் கூற்றுப்படியே முன்னால் நபி, ரிடையர்டு நபி போன்ற சுயவிளக்கத்தை குப்பைத் தொட்டியில் எறிவதுதான் ஹஸ்ரத் காத்தமுன்னபியீன் (ஸல்) அவர்கள் மீது பற்று கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டிய வேலையாகும் என்பதை நஜாத் பிரிவினர்களுக்கு நாம் நினைவூட்டிக் கொள்கிறோம். 

அடுத்து தவப்பீ என்ற சொல் திருக்குர்ஆனில் ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களைப் பற்றி இரண்டு இடங்களிலும் (3:56, 5:118) இவை அல்லாத இடங்களிலும் வந்திருப்பதையும் அதில் எந்தவோர் இடத்திலும் உடலோடு தூக்குதல் என்ற பொருள் இருப்பதாக நிரூபிக்கவே முடியாது என்பதையும் நாம் ஜூன் 2011 இல் விளக்கியிருந்தோம். இதே சொல் நபிமார்களில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்காக 3 இடங்களில் (10:47, 13:41, 40:78) ஹஸ்ரத் யூசுப் நபி (அலை) அவர்களுக்காக ஓரிடத்திலும் (12:102) அல்லாஹ் பயன்படுத்தியிருப்பதையும் அங்கெல்லாம் எங்கேயுமே உடலோடு உயர்த்துதல் என்ற பொருள் வரவே இல்லை; அந்த இடங்களிலெல்லாம் நஜாத் பிரிவினர்கூட உடலுடன் உயர்த்துதல் என்ற பொருளைத் தரவில்லை. நபி மொழிகளிலும் தவப்பீ என்ற இந்தச் சொல் உடலுடன் உயர்த்துதல் என்ற நஜாத் பிரிவின் பொருளில் எங்கேயும் வரவில்லை என்பது மட்டுமல்லாது, நாம் கொடுக்கின்ற பொருளாகிய மரணத்தைக் கொடுத்தல் என்ற பொருளில்தான் வந்துள்ளது என்பதையும் நாம் எடுத்து வைத்திருந்தோம். 

3:56 இல் வந்துள்ள முதவப்பீக்க என்பதற்கு முமீத்துக (உமக்கு மௌத்தைத் தருவேன்) என்ற பொருளையே ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கொடுத்திருப்பதையும் (புகாரி தமிழாக்கம் பாகம் 5 பக்கம் 273 காண்க) ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும் தவப்பைத்தனி (5:117) என்பதற்கு நீ எனக்கு மரணத்தைத் தந்தபோது என்ற பொருளிலேயே பயன்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். (புகாரி, கிதாபுத் தப்ஸீர் தப்சீரில் 5:118 காண்க) நாம் விளக்கி எழுதியிருந்தோம். அவையெல்லாம் நஜாத் பிரிவினரின் நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் உரைத்ததனால்தான் அவற்றிக்கு மறுப்பு ஏதும் எழுதத் துணிவில்லாது போயிற்று!

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும், ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கொடுத்திருக்கும் பொருளை எந்த முஸ்லிமாலும் மறுத்துக் கூற முடியாது. அதிலும் நஜாத் பிரிவினர் மறுத்துக் கூறினால். அல்ஹதீஸ் உங்களுக்கு விளங்காது; நாங்களே விளக்குகிறோம் என்று கூறும் மௌலவிகள் நபி (ஸல்) அவர்களை விட நாங்களே விளக்கும் ஆற்றல் மிக்கவர்கள் என அகந்தை பேசுபவர்களே!’ என அந்நஜாத் எழுதிவரும் குற்றச்சாட்டின் கீழ், தாமே வந்துவிடுவார். 

தவப்பா என்பதற்கு மரணிக்கச் செய்தல் என காதியானிகள் பொருள் கொடுப்பது தவறானது என்று அபூ அப்தில்லாஹ் குறிப்பிட்டுள்ளார் என்றால் எவ்வளவு பேதமைத்தனமானது! நம் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் இது காதியானிகள் கொடுத்த பொருளா? அல்லது ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கொடுத்த பொருளா என்பதைக் கூட பிரித்தறியும் பக்குவத்தை இழந்துவிட்டாரா அபூ அப்தில்லாஹ்? கபூரூர் ரஹீமாகிய அல்லாஹ்தான் இவரை மன்னிக்க வேண்டும்!

உண்மையைத் தேடுபவர்களுக்கு நாம் மேலும் பல சான்றுகளைத் தருகிறோம்: 

தவப்பீ என்ற சொல் பொதுவான சொல் வழக்கிலும் மரணத்தைக் கொடுத்தல் என்ற பொருளிலேயே பயன் படுத்தப்படுகிறது. உதாரணமாக, ஜனாஸா துஆவில், ‘வமன் தவப்பைத்தஹு மின்ன பதவப்பாஹு அலல் ஈமான்’ (எங்களில் எவருக்கு நீ மரணத்தைக் கொடுக்கின்றாயோ அவரை நீ ஈமானில் மரணிக்கச் செய்வாயாக) 

ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்; பலம்மா தவப்பிய ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். (பொருள்: ஹஸ்ரத் ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் மரணமடைந்த போது....... (முஹ்தா இமாம் மாலிக் தொகுதி 1 பக்கம் 121) 

ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் கேட்டார்கள்; யாபுனய்யத்து அய்யு யவ்மின் துவப்பியா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் (பொருள்: என் அருமை மகளே! ஹஸ்ரத் ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் எந்த நாளில் மரணித்தார்கள்? (முஸ்னத் அஹ்மது பின் ஹம்பல் தொழுதி 6 பக்கம் 118) 

அல்லாமா ஸம்ஹஷ்ரீ கூறுகிறார்கள்: முதவப்பீக என்பதன் பொருள், இயற்கை மரணத்தை தருவேன் என்பதாகும்.” ( தப்ஸீர் கஷ்ஷாப் தொகுதி 1 பக்கம் 306) 

அல்லதீன யதவப்பாஹும் அய்யமூதூன வ யுக் பழு அர்வாஹுஹும். பொருள்: உங்களில் தவப்பா ஆகின்றவர்கள் – அதாவது மரணிக்கின்றவர்கள், அவர்களின் ரூஹ் கைப்பற்றப்படுகின்றது. (ரூஹுல் பயான் தொகுதி 1 பக்கம் 248) 

அல்லாஹ் எழுவாயாகவும் உயிருள்ள ஒன்று செயப்படுபொருளாகவும் இருக்கின்றபோது தவப்பி என்ற சொல் பயனிலையாக வந்தால் அதற்கு ரூஹை கைப்பற்றுதல் என்ற பொருளை தவிர உடலைக் கைப்பற்றுதல் என்றோ ஒரு போதும் பொருள் வராது. அவ்வாறு திருக்குர்ஆனிலிருந்தோ ஹதீஸிலிருந்தோ எந்தச் சான்றையும் காட்ட இயலாது என்ற சவாலை மீண்டும் நாம் நினைவு படுத்துகிறோம். 

வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மற்றும் மஹ்தியாகத் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் இன்னும் அழுத்தமாக இவ்வாறு கூறுகிறார்கள்: 

“ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நபித்தோழர்களும், ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களும் தவப்பி என்ற இந்த சொல்லை உயிருள்ள ஒன்றிக்காக பயன்படுத்தும் போது எந்தெந்த பொருள்களில் பயன்படுத்தி வந்தனர்? இந்தச் சொல் அந்த நேரத்தில் அன்றாட பழக்க வழக்கங்களில் பல பொருள்களில் பயன்படுத்தப்பட்டு வந்ததா? அல்லது ஆன்மாவை கைப்பற்றுதல், மரணம் என்ற ஒரே பொருளில் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்ததா என்பதை தெரிந்துகொள்வதற்காக இந்த எளியவன் நபிமொழிகளின் பக்கம் திரும்பினேன். இந்த ஆய்வுக்காக எனக்கு அதிகமாக உழைக்க வேண்டியது ஏற்பட்டது. சஹீஹ் புகாரி, சஹீஹ் முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா, அபூதாவூது, நஸாயீ, தாரமீ, முக்தா, ஷரகுஹுல் ஸுன்னா ஆகிய எல்லா ஹதீஸ் நூல்களையும் புரட்டிப் பார்த்தபோது எனக்கு தெரிய வந்தது என்னவென்றால், மிஷ்காத்தை சேர்த்து இந்த எல்லா ஹதீஸ் நூல்களிலும் 346 தடவை பல்வேறு இடங்களில் தவப்பி என்ற இந்தச் சொல் வந்துள்ளது. நான் கணக்கிட்டுப் பார்த்ததில் சில தவப்பி என்ற சொற்கள் விடுபட்டும் இருக்கலாம். ஆயினும் படிப்பதிலும், கண்ணில் படுவதிலும் என ஒரு சொல்லும் வெளியில் இல்லை. மேலும் தவப்பி என்ற அந்த சொற்கள் எந்த அளவுக்கு இந்த (ஹதீஸ்) நூல்களில் வந்துள்ளனவோ அவை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து வெளிப்பட்டவையாக இருந்தாலும் சரி, அல்லது எந்தவொரு நபித்தோழரின் வாயிலிருந்து வெளிப்பட்டவையாக இருந்தாலும் சரி அந்த எல்லா இடங்களிலும் அந்த சொற்கள் மௌத் (மரணம்) மற்றும் ரூஹைக் கைப்பற்றுதல் என்ற பொருளைத் தவிர வேறு எந்த பொருளிலும் வரவில்லை.......எனவே வழிவழியாகக் கையாளப்பட்டு வரும் இதனை மறுக்கின்றவர், மரணம் மற்றும் ரூஹைக் கைப்பற்றுதல் என்ற பொருள் அல்லாத வேறு ஒரு பொருளில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து வெளிவந்துள்ளதாக நிரூபித்துக் காட்டுவது அவர் மீது பொறுப்பு ஆகும்.” (இஸாலேயே அவ்ஹாம் ரூஹானி கஸாயின் தொகுதி 3 பக்கம் 584) 

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் இந்தச் சவாலை இன்று வரை எந்த அல்லாமாவும், முப்தியும், மௌலவியும் நிரூபித்துக் காட்ட முன் வரவில்லை. மழைக்காக மத்ரஸாவையும் நாம் நெருங்கியதில்லைதான் என ஒப்புதல்வாக்குமூலம் கொடுத்த அபூ அப்தில்லாஹ்வாலும் இந்த சவாலை ஏற்க இயலவில்லை என்பதை புரிந்து கொண்டனர். 

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.