அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jul 4, 2014

யூசுப் நபி பற்றிய தவறான விளக்கம்


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 236 இல் யூஸுபுக்கு தந்திரத்தைக் கொடுத்தோம் காரியம் சாதிக்க தந்திரம் செய்யலாமா? என்னும் தலைப்பில் பி.ஜே 9 வது பதிப்பில் இவ்வாறு எழுதுகிறார்: 

யூசுப் நபியவர்கள் தமது சகோதரரை தம்முடனே வைத்துக் கொள்வதற்காக அவர் மீது திருட்டுப் பட்டம் சுமத்தி. அதையே காரணம் காட்டி, பிடித்து வைத்துக் கொண்டதாக இவ்வசனம் (12:76) கூறுகிறது. 

இதை யூசுப் நபி, தன்னிச்சையாகச் செய்தார் என்று கருத முடியாது. ஏனெனில், இந்தத் தந்திரத்தை நாமே அவருக்குக் கற்றுக் கொடுத்தோம் என்று இதே வசனத்தின் தொடர்ச்சியாக அல்லாஹ் கூறுகிறான். 

இறைவனே இந்தத் தந்திரத்தைக் கற்றுக் கொடுத்திருப்பதால் இந்த நிகழ்ச்சியில் எந்தக் கருத்து அடங்கியுள்ளதோ அது போன்ற நிலையில் நாமும் தந்திரத்தைக் கையாளலாம். 

இச்சம்பவத்தில், திருடாத ஒருவர் மீது திருட்டுப் பழி சும்மத்தப்பட்டாலும், பழி சுமத்தி அவரை இழிவுபடுத்துவது இதன் நோக்கமல்ல! பழி சுமத்தப்பட்டவருக்கு சிறந்த ஏற்பாட்டைச் செய்து கொடுப்பதே இதன் நோக்கம். 

யூசுப் நபியின் தந்தை வழிச் சகோதரர்கள் பஞ்சத்தில், உணவு கேட்டு வருகிறார்கள். அவர்களுடன் வந்திருந்த தமது இளைய சகோதரர் அங்கிருந்து கஷ்டப்படுவதை விடத் தம்முடன் இருப்பதுதான் நல்லது என்று கருதி இந்தத் தந்திரத்தைக் கையாண்டார்கள். 

இதை விட முக்கியமாக இங்கு கவனிக்க வேண்டியத் அம்சம். தம் சகோதரர் மீது திருட்டுப் பழி சுமத்துவதற்கு முன்னால் அவரைத் தனியாக அழைத்து, இந்தத் தந்திரத்தை கையாளப் போகிறேன் என்று உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறி, அந்தச் சகோதரரும் ஒத்துக் கொண்ட நிலையில்தான் யூசுப் நபி இதைச் செய்தார்கள். 

இது போன்ற சூழ்நிலைகளில், இந்த நெறிமுறைகளைக் கவனத்தில் கொண்டு தந்திரத்தைக் கையாளலாம். 

நம் விளக்கம். மேலே கூறியவற்றில், முதலாவதாக, 

1) அல்லாஹ்தான் இந்த தந்திரத்தைக் கற்றுக் கொடுத்தான் என்று அல்லாஹ்வின் மீது பழியும். 

2) யூசுப் நபியும் அவரது சகோதரரும் திட்டமிட்டு நாடகமாடினர் என்ற பழியும். 

3) இவ்வாறு ஒரு நாட்டின் சட்டத்தைத் தன்னலத்திற்க்காகப் பயன்படுத்திக் கொண்டனர் என்ற பழிச் சொல்லும்,

4) நாமும் இது போன்ற செயல்களைச் செய்யலாம் என்று இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாத்தில் இல்லாத ஒரு இலவச அனுமதியும் பி.ஜே நமக்குத் தந்துள்ளார். 

5) இதன் மூலம் பி.ஜே யின் வெளி உலக்குக்கு தெரியாத ஒரு முகம், படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து அல்லாஹ்தான் நம் எல்லோரையும் காப்பாற்ற வேண்டும். 

யூசுப் நபியின் சகோதரர்கள், பாத்திரம் பிடிபட்ட சகோதரருக்குப் பதிலாக தங்களுள் ஒருவரைப் பிடித்து வைத்துக் கொள்ளும் படி வேண்டினர். யூசுப் நபியை நன்மை செய்பவராகக் காண்கின்றனர். ஆனால் அவரோ யார் பிடிபட்டாரோ அவரைத் தவிர மற்றவரைப் பிடித்து வைத்துக் கொள்வதை விட்டும் அல்லாஹ்விடமும் பாதுகாப்பு தேடுவதாகவும், அவ்வாறு செய்தால் அநீதி இழைத்தவர்கள் ஆவோம் என்று மறுத்து விடுகிறார். (திருக்குர்ஆன் 12:79-80) 

யூசுப் நபியின் இந்த பதில், 

1) அல்லாஹ் இது போன்ற செயல்களை விரும்ப மாட்டான் என்றும், 

2) தானும் இதுபோன்ற செயலைச் செய்யத தயாராக இல்லை என்றும். 

3) இத்தகு செயல் அநீதியாகும் என்றும் தெரிவிக்கிறது. இதிலிருந்து யூசுப் நபிக்கும் அச்செயலுக்கும் சம்பந்தமில்லை என்று தெளிவாகிறது. 

இரண்டாவதாக, அல்லாஹ் திருக்குர்ஆன் 12:77 இல், 

1) யூசுப் நபியை மறதியாகவோ, கவனக் குறைவாகவோ அந்த பாத்திரத்தைத் தம்பியின் தானிய மூட்டையில் வைக்க வைத்ததும். 

2) அதனால் அவரது தம்பி பிடிபட்டு யூசுப் நபியுடன் தங்க நேர்ந்ததும் இறைவன் யூசுப் நபிக்காகச் செய்த திட்டம் ஆகும். யூசுப் நபி தானே செய்த செயல் அன்று. 

மூன்றாவதாக, யூசுப் நபி திருட்டுப் பழியை தன் தம்பியின் மீது போடும் தந்திரத்தைத் தம்பியிடம் சொல்லி அவர் ஒத்துக் கொண்ட பின்னர் தான் செய்ததாக ஒரு அபாண்டத்தை பி.ஜே அவ்விருவர் மீதும் போடுகிறார். நபிமார்கள் மோசடி செய்ய மாட்டார்கள் எனத் திருக்குர்ஆன் (3:147) கூறுகிறது. எனவே, யூசுப் நபி இத்தகு செயலைச் செய்யவில்லை. 

திருக்குர்ஆனிலிருந்தோ, நபிமொழியிலிருந்தோ இதற்கு ஆதாரம் உண்டா? அல்லாது பி.ஜே க்கு வஹி ஏதும் வந்ததா? 

திருக்குர்ஆன் 12:69 வது வசனத்திற்கு பி.ஜெயின் தமிழாக்கம்: 

அவர்கள் யூசுபிடம் சென்றபோது அவர் தமது சகோதரரை (தனியாக) அரவணைத்து நான்தான் உனது சகோதரன். அவர்கள் செய்தவற்றைப் பற்றிக் கவலைப்படாதே! எனக் கூறினார் என்று வருகிறது. 

சகோதரர்கள் இருவரும் சந்தித்துப் பேசியது இது தான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அல்லாஹ் கூறாதவற்றை சுயமாகக் கற்பனை செய்து கொண்டு அல்லாஹ்வின் பெயரில் பி.ஜே இட்டுக்கட்டிக் கூறுகிறார். 

நான்காவதாக, திருக்குர்ஆன் 12:67-68 வசனத்தில் யாக்கூப் நபி தம் பிள்ளைகளை ஒரே வாசல் வழியாக ஊரில் நுழையாதீர்கள் என்பதற்கு, பொருள்கள் விநியோகிக்கப்படும் இடங்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பலர் ஒன்று திரண்டு பெற முயற்சிக்கும் பொழுது மற்றவர்கள் அதை வெறுப்புடன் பார்க்கும் நிலைமை ஏற்படும், இது போன்ற நிலைமையைத் தவிர்ப்பதற்காகவே யாகூப் நபி அவர்கள், ஒரு வாசல் வழியாக செல்ல வேண்டாம். பிரிந்து பிரிந்து செல்லுங்கள் எனக் கூறியிருக்க வேண்டும் என்று எழுதியுள்ளார். (திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 235) 

இது தவறாகும். யூசுப் நபி தம் சகோதரரை வரவழைக்க எடுத்த முயற்சிகளின் காரணமாக அவருடைய சகோதரர்கள் தம் தந்தையிடம் யூசுப் நபியின் சகோதரரை தம்முடன் அழைத்துச் செல்ல வேண்டினர். இந்த நடவடிக்கைகள் காரணமாக யாகூப் நபியின் உள்ளுணர்வில், யூசுப் நபி அங்கிருக்கக்கூடும் என்ற எண்ணம் எழுந்தது. அங்கிருந்தால் யூசுப் நபி தன் சகோதரனைத் தனித்துச் சந்திக்க வேண்டும் என்றுதான் ஒரே வாசல் வழியாக எல்லாரும் செல்லாதீர்கள் என்று கூறியுள்ளார். 

ஐந்தாவதாக, யார் பிடிபட்டாரோ, அவருக்குப் பதிலாக அவருடைய சகோதரர்களுள் ஒருவர் தன்னை வைத்துக் கொண்டு, அவரை விட்டு விடும்படிக் கேட்டதற்கு யூசுப் நபி மறுத்து விடுகிறார். மேலும் அவ்வாறு செய்வதிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறார். அச்செயல் அநீதி என்றும் அவர் கூறுகிறார். அப்படி என்றால், அல்லாஹ் ஈஸா நபியை தன்னளவில் உயர்த்திக் கொண்டு அவருக்குப் பதில் வேறொருவரைச் சிலுவையில் அறையச் செய்தான் என்று பி.ஜே போன்றோர்கள் நம்புகின்றனர். அதனை வாய்கிழிய பேசித் திரிகின்றனரே, இவர்கள் இச்செயலை அநீதி என்று ஏன் தெரிந்து கொள்ளமுடியவில்லை? 

ஆறாவதாக, திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 265 இல் பி.ஜே மற்றவர்கள் செய்த பாவங்களுக்காக அந்தப் பாவத்தில் சம்பந்தமில்லாத ஒருவரைப் பலி கொடுப்பது என்பது இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரானது என்று எழுதியுள்ளார். 

ஈஸா நபிக்குப் பதிலாக ஆள் மாறாட்டம் செய்யப்பட்டு, வேறொருவர் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார் என்று பி.ஜே போன்றோர் நம்புகின்றனர். இதனை இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரானது என்று ஏன் அறிந்து கொள்ளமுடியவில்லை? 

ஏழாவதாக, இது போன்ற சூழ்நிலையில் இந்த நெறிமுறைகளைக் கவனத்தில் கொண்டு தந்திரத்தை கையாளலாம் என்று அநீதிக்கும், பாவத்திற்கும் பி,ஜே மார்க்கத்தீர்ப்பு ஒன்றை வழங்குகிறார். இவரது சொல்லுக்குத் தலையையும், விரல்களையும் ஆட்டும் கூட்டத்தினர் வழிகெடுத்து நரகத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறார் போலும். (அல்லாஹ் காப்பானாக) 

இல்லாத ஒன்றை இருப்பதாக நம்பிக்கொண்டு தவறான மார்க்கத் தீர்ப்பு வழங்கி, சமுதாயத்தை வழிகெடுக்கும் இவர்களிடமிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக, ஆமீன்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.