ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் தோழர்களில் ஒருவரான ஹஸ்ரத் ஷேக் அப்துல் அஸீஸ் அவர்கள் கீழ்வரும் நிகழ்ச்சி ஒன்றை கூறினார்கள்.
ஹஸ்ரத் இமாம் மஹ்தி(அலை) அவர்களின் தோழரும் ஹாபிஸுமான முதியவர் ஒருவர் இருந்தார். இவர் கண்பார்வையற்றவர். மேலும் வயதானதன் காரணமாக அவருக்கு கேட்கும் சக்தியும் படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது. அவர் ஒருமுறை என்னிடம் இவ்வாறு கூறினார்.
ஒருமுறை நான் ஹக்கீம் குத்புதீன் அவர்களிடம் சென்று எனது காது மந்தமாகி வருவதைத் தெரிவித்தேன். அவர் எனது காதுகள் காய்ந்திருப்பதைக் கண்டு தினமும் பால் அருந்தி வரவேண்டும் என ஆலோசனைக் கூறினார். அதற்க்கு நான் 'இரண்டு வேலை உணவு கூட எனக்கு 'லங்கர் கானா' (இமாம் மஹ்தி (அலை) அவர்களின் விருந்தினர் விடுதி) யில் தான் கிடைக்கிறது, இந்நிலையில் பாலுக்கு நான் எங்கே போவேன்? என்று கூறினேன்.
அப்போது அங்கு ஒருவர் வரும் சப்தம் கேட்டது, 'ஹாபிஸ் சாஹிப் என்ன சொல்கிறார்?' என்று கேட்டார். அதற்க்கு ஹக்கீம் சாஹிப், "இவருக்கு காதில் கோளாறு அதனால் பாலருந்த ஆலோசனை கூறியுள்ளேன். ஆனால் இவரோ பாலுக்கு எங்கே போவது என்கிறார்" என்றார்.
அன்று இரவு ஒரு மனிதர் இருட்டிய பிறகு நான் தங்கியிருக்கும் அறைக்கு வந்து பால் கொண்டு வந்துள்ளதாகக் கூறினார். நான் எனது பாத்திரத்தை தந்த போது ஒரு லிட்டர் அளவு பாலை அதில் ஊற்றி சென்றார். இப்படி அந்த மனிதர் ஏறத்தாழ ஒன்றரை வருடம் எனக்கு பால் கொண்டு வந்து தருகிறார்.
இதனைக் கேட்ட ஷேக் அப்துல் அஸீஸ் அவர்களுக்கு இப்படி தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாது ஹாபிஸ் சாஹிபிற்கு பால் கொண்டு தருவது யார்? என்று கண்டறிய ஆவல் ஏற்பட்டது. அதனால் ஒரு நாள் இருட்டியபிறகு ஹாபிஸ் சாஹிப் தங்கி இருந்த இடத்திற்கு சென்று காத்திருந்தார். அப்போது ஒரு மனிதர் இருட்டில் வந்து ஹாபிஸ் சாஹிபின் அறைக்குள் நுழைந்தார். ஹாபிஸ் சாஹிப் கட்டிலில் அமர்ந்திருந்தார். அந்த மனிதர் பாலைக் கொடுத்துவிட்டு திரும்பினார். அப்போது ஹஸ்ரத் ஷேக் அப்துல் அஸீஸ் அறைக்குள் நுழைந்தார். ஆள்வரும் ஓசையைக் கேட்டு அந்த மனிதர் மூலையில் பதுங்கினார். அங்கு இருட்டாக இருந்ததால் அந்த மனிதர் யார் என்று தெரியவில்லை. உடனே ஹஸ்ரத் ஷேக் அப்துல் அஸீஸ் அவர்கள் "சகோதரரே தாங்கள் யார்?" என்று கேட்டார். வெட்கத்துடன் மெல்லிய குரலில் பதில் வந்தது "நான் ஷேர் அலி" .
ஹஸ்ரத் ஷேக் அப்துல் அஸீஸ் கூறுகிறார்கள் நான் சங்கடத்துக்குள்ளானேன். நான் செய்த காரியம் குறித்து வெட்கப்பட்டேன். ஹஸ்ரத் ஷேர் அலி அவர்கள் காக்க நினைத்த இரகசியத்தை நான் வெளிப்படுத்திவிட்டேன். ஒரு நீண்ட காலம் அவர் முன் செல்வதற்கே நான் வெட்கப்பட்டேன்.
சாதரணமாக ஒரு நற்செயலைச் செய்து விட்டு மக்கள் தம்பட்டம் அடிக்கின்ற இக் காலத்தில் ஒன்றரை ஆண்டு காலமாக ஒரு நற்செயலை செய்திருந்தும் தன்னை வெளிப்படுத்த நினைக்காத ஹஸ்ரத் ஷேர் அலி அவர்கள் உண்மையில் ஒரு மாமனிதர். இத்தகு தோழர்களைதான் ஹஸ்ரத் மஹ்தி (அலை) அவர்கள் கொண்டிருந்தார்கள்.
ஹஸ்ரத் மௌலவி ஷேர் அலி அவர்கள் பின்னாளில் திருக்குரானை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்கள். அதன் பல பதிப்புகள் வெளி வந்துள்ளன. அண்மையில் கூட அவர்களின் மொழியாக்கம் அழகிய முறையில் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது. மேலும் அவர்களின் திருக்குர்ஆனின் iPhone மற்றும் Androidற்கான மென்பொருளை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் :
நாஸிர் அஹ்மத்
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.