அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

May 5, 2014

ஈஸா நபி (அலை) செய்த அற்புதங்களும் பிறர் செய்த அற்புதங்களும்.


அபூ அப்தில்லாஹ் எழுதுகிறார் 

உலகில் நபி (ஸல்) அவர்கள் முதல் வேறு எந்த நபிக்கும், வேறு எந்த மனிதனுக்கும் கொடுக்கப்படாத சில தனிச்சிறப்புகள் ஈஸா(அலை) அவர்கள் பெற்றுள்ளார்கள் என்று திருக்குர்ஆன் சான்று பகருகிறது. ஈஸா(அலை) அவர்கள் தகப்பனின்றி பிறந்தது, பிறந்த உடனே மக்களுடன் பேசியது, அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு குஷ்டரோகிகளையும் கடும் வியாதியஸ்தர்களையும் சுகப்படுத்தியது, இறந்தவர்களை உயிர்பித்தது, இப்படிப்பட்ட தனிச்சிறப்புகளை உடையவர்களாக ஈஸா(அலை) அவர்கள் இருந்தார்கள். (பக்கம் 53) 

நம் பதில்: 

அபூ அப்தில்லாஹ்வுக்கு திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் ஆழிய ஞானம் இல்லை என்பதற்கு இக்கூற்று சிறந்த எடுத்துக்காட்டாகும்.

திருக்குர்ஆன் யஹ்யா நபி அவர்களின் பிறப்பினைப் பற்றி அவரின் தாய் மலடி என்றும், தந்தை வயது முதிர்ந்த, நரை, திரை விழுந்த எலும்புகள் பலவீனமானவர் என்றும் கூறிய பின்னரே தந்தையின்றி ஈஸா நபியின் பிறப்பு பற்றிக் கூறுகிறது. இவ்விரு சம்பவங்களையும் இரு சூராக்களில் (3:41,48; 19:9,21) கூறுகிறது. அபூ அப்தில்லாஹ்வின் கூற்றின்படி, ஈஸா நபி (அலை) அவர்களின் பிறப்பு அற்புதம் எனில், யஹ்யா நபி (அலை) அவர்களின் பிறப்பு அதனினும் அற்புதமாக தெரியவில்லையா? இவ்வாறே இஸ்ஹாக் நபி (அலை) அவர்களின் பிறப்பு பற்றியும் திருக்குர்ஆன் (11:73 ) கூறுகிறது. இவை அபூ அப்தில்லாஹ்வுக்கு தெரியவில்லை போலும். 

ஆதம் நபி (அலை) அவர்கள் தாயும் தந்தையும் இன்றியும், ஹவ்வா (அலை) அவர்கள் ஆதம் நபி (அலை) அவர்களின் விலா எலும்பிலிருந்து பிறந்ததாகவும் அபூ அப்தில்லாஹ் கருதுகிறார். இப்பிறப்புகள் அதிசயமாக இவருக்கு தெரியவில்லையா? பிறந்த உடனே மக்களுடன் பேசியது அதிசயம் என்று எழுதுகிறார். திருக்குர்ஆன் தொட்டிலிலும் நடுப்பருவத்திலும் பேசினார் என்று கூறுகிறது. நடுப்பருவத்தில் ஒருவர் பேசுவது எப்படி அதிசயம் இல்லையோ அப்படியே தொட்டிலிலும் பேசியது அற்புதம் இல்லை என்பது திருக்குர்ஆனின் கருத்து ஆகும். 

புகாரியில் வந்த நபிமொழியிலும் தொட்டிலில் பேசிய மூன்று குழந்தைகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அதில் ஈஸா நபி (அலை) நீங்கலாக மற்ற இரு குழந்தைகளின் பேச்சினை அபூ அப்தில்லாஹ் படித்திருந்தால் இப்படி எழுதியிருக்கமாட்டார் என்பது உறுதி. இன்றைய நாளில் உலகில் பல குழந்தைகளின் பேச்சும், செயலும் இவரது கூற்றைக் பொய்யாக்குகிறதை உலக ஞானம் உள்ளவர் அறிவர்.

அவ்வளவு ஏன் ஈஸா நபி (அலை) பேசுவது இருக்கட்டும். அன்றும் இன்றும் என்றும் பேச இயலாதது பறவையாகும். ஆனால் ஹூத் ஹூத் என்னும் பறவை அக்காலத்து நபியாகிய சுலைமான் நபி (அலை) அவர்கள் அறியாத அரசியல், தவ்ஹீது விஷயங்களை கூறியதாக அபூஅப்தில்லாஹ் நம்போகிறாரே! இதைவிடவா ஈஸா நபி (அலை) பேசியது அதிசயம்? 

ஏன் நபியின் இராணுவம் வருவதை அறிந்து, என்றும் பேசாத எறும்புகள் பேசியதாக திருக்குர்ஆன் கூறுகிறதே அது சரி, சுலைமான் நபிக்கு பறவையின் மொழிதான் தெரியும், எறும்புகள் மொழி எப்படி தெரிந்தது? பறவையும், எறும்பும் ஓரினம் என்று அபூ அப்தில்லாஹ் கூறுவாரா? தஜ்ஜால் ஒருவனைக் கொன்று, பின்னர் அவனை உயிர் பெறச் செய்ததாக அபூ அப்தில்லாஹ் நம்புகிறாரே! 

திருக்குரானில் ஈஸா நபி (அலை) அவர்களின் அற்புதம் பற்றித் தெரிந்து கொள்ள திருக்குரானின் அடிப்படைச் சட்டம் தெரிந்திருக்க வேண்டும். 

எந்த நபியின் அற்புதமும் இயற்கையின் அடிப்படைச் சட்டத்திற்கு உட்பட்டதே. அவ்வாறு செய்வதே இறைவனின் வல்லமைக்கும் ஞானத்திற்கும் எடுத்துக்காட்டாகும். 

திருக்குர்ஆனின் பிற கருத்துக்களுக்கு முரண்படாதபடி நாம் திருக்குர்ஆனின் சான்றுகளுக்கு பொருள் கொடுக்கவேண்டும். 

நபிமார்களின் அற்புதங்கள் அந்தந்த நபிமார்களின் தனித்தன்மைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும். 

எடுத்துக்காட்டாக: 

நபி (ஸல்) அவர்களின் அற்புதம் திருக்குர்ஆன் ஆகும். இது ஒரு நூல் – புத்தகம் ஆகும். உலகில் அன்று முதல் இன்று வரை கோடிக்கணக்கான் நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. பல்வேறு துறைகளுக்கு ஏற்ப பரிசுகளும் அந்த நூல்களுக்கு வழங்கபடுகிறது. எனவே ஒரு நூல் என்பது அற்புதம் இல்லை. உலகில் பலரால் எழுதக்கூடியதே நூல் ஆகும். இவ்வாறு மனிதரால் செய்யக்கூடிய ஒரு செயல் ஒரு நபிக்குரிய அற்புதம் ஆகும் போது, அந்த நூலைப் போல் ஒரு நூலை எவரும் எழுத முடியாது. இந்த நூலில் காணப்படுவதைப் போன்று ஒரு வசனத்தையோ, அல்லது ஒரு அதிகாரத்தையோ, 10 அதிகாரங்களையோ அல்லது இதுபோன்ற ஒரு நூலையோ எழுதி வருமாறு திருக்குர்ஆன் நிராகரிப்பாளர்களிடம் அறைகூவல் விடுகிறது. கடந்த 1500 ஆண்டுகாலமாக எவராலும் இயலவில்லை. இனிமேலும் முடியாது. 

இவ்வாறே இப்ராஹீம் நபி (ஸல்) அவர்களின் தனித்தன்மை, தர்க்க அடிப்படையில் தன் போதனைகளை மக்களுக்கு கூறியது ஆகும். இறைவன் என்றால் பேச வேண்டும்; பேச முடியாதவை இறைவன் இல்லை. அவனை ஏன் வணங்கவேண்டும்? என்ற தர்க்க வாதத்தின் மூலமே சிலை (வணக்கத்தை) உடைத்தார்கள். இதன் அடிப்படையில் பார்க்கும் போது, இன்றைய முஸ்லிம்கள் அல்லாஹ் வஹியை நிறுத்தி விட்டான். அதாவது அவன் இனிமேல் யாருடனும் பேசமாட்டான் என்று நம்புவது, அல்லாஹ்வை சிலையாக பொய்த்தெய்வமாக நம்புவதாகும். 

ஈஸா(அலை) அவர்களின் தனித்தன்மையாவது. அன்னார் உவமை வடிவில் தன் கருத்துக்களைப் போதித்தார்கள். எனவே, அன்னாரின் அற்புதங்களை உவமை வடிவில் கூறியுள்ளான். நோய்களைக் குணப்படுத்தியது, பறவையைப் படைத்தது, குருடர்களைப் பார்க்கச் செய்தது, இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தது அத்தனையும் உவமை வசனங்களாகும். 

சொற்பொருள்தான் கொள்ளவேண்டும் என்று அபூ அப்தில்லாஹ் கூறுவார் என்றால் முஸ்லிம் ஹதீஸில் 57:35 ஐப் படித்துப் பார்த்தால், ஒரு சாதாரண சிறுவன், பிறவிக் குருடனையும், தொழு நோயாளியையும், பிற நோய்களையும் குணப்படுத்தவான் என்றும் அச்சிறுவனைக் கொன்றால் அவன் மீண்டும் உயிர்பெற்று வருவான் என்றும் கூறப்பட்டுள்ளதை அபூ அப்தில்லாஹ் எப்படி நம்புகிறார்? 

ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களைப் பற்றி, உஹ்யில் மௌத்தா பி இஸ்நிஹி (அவன் கட்டளையினால் நான் இறந்தவர்களை உயிர்பிக்கின்றேன் எனவும் (3:50),நீர் உயிரற்றவர்களை என் கட்டளையினால் எழுப்பிய நேரத்தையும் எனவும் (5:11) திருக்குரானில் உள்ள வசனத்திற்கு நேரடியான வெளிப்படையான பொருளைக் கொடுக்கின்றனர். பௌதீகமாக, உடல் அளவில் உயிரூட்டினார் என்று நம்பி இறைவனுக்கு இணை வைக்கின்றனர். ஏனெனில் படைத்தல், மரணிக்கசெய்தல், உயிரூட்டுதல் ஆகிய பண்புகள் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்றும், இணையாக்கப்பட்டவர்களுள் எவராலும் இதனை செய்ய முடியாது என்று இறைவன் திருக்குரானில் திட்டவட்டமாக குறிப்பிடுகின்றான். 

"அல்லாஹ்வே உங்களைப் படைத்தான் அவனே உங்களுக்கு உணவளித்தான். பின்னர் அவன் உங்களை மரணிக்கச் செய்வான். பின்னர் அவன் உங்களை உயிரூட்டுவான் உங்களால் (இறைவனுக்கு) இணையாக்கப்பட்டவர்களில் எவரேனும் இச்செயல்களில் எதையாவது செய்கின்றனரா? அவன் தூய்மையானவன். மேலும் அவர்கள் (இறைவனுக்கு) ஏற்படுத்தும் இணைகளை விட்டும் அவன் மிக்க மேலானவன்." (30:41) 

மக்களால் இறைவனுக்கு இணையாக்கப்பட்டவர்களில் முதல் இடத்தில் இருப்பவர் ஈஸா (அலை) அவர்கள்தான். இணையாக்கப்பட்டவர்களில் எவருமே உயிரூட்டுவதில்லை என்று அல்லாஹ் குறிப்பிடும்போது அது மிக அதிகமாக ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களுக்குதான் பொருந்துகிறது என்பதை எளிதில் புரிந்து கொள்ளமுடியும். 

எனவே திருக்குர்ஆன் 3:50 ல் நான் இறந்தவர்களை உயிர்பிக்கின்றேன் என்று ஈஸா (அலை) அவர்கள் கூறியதாக வந்திருப்பது அவர் பௌதீகமாக இறந்தவர்களை உயிர்பித்தான் என்று பொருள் கொள்ள முடியாது. அது மேற்கண்ட 30:41 வசனத்திற்கு முரணானது. ஈசாவுக்கு இறைத்தன்மையைக் கொடுப்பதாகிவிடும். இந்த வகையில் ஜமாஅத் அல் முஸ்லிமீன் என தம்பட்டம் அடிக்கும் பிரிவினருக்கு கிடைக்கும் பட்டம் முஷ்ரிக் என்றே ஆகிவிடும்! 

இதே சொல்லை ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்காகவும் அல்லாஹ் திருக்குரானில் இவ்வாறு கூறியிருக்கிறான். 

"நம்பிக்கை கொண்டவர்களே! இறைதூதர் உங்களை உயிர்பிப்பதற்க்காக உங்களை அழைத்தால் நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவருக்கும் பதில் அளியுங்கள்." (8:25) 

இவ்வசனத்தில் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களுக்காகவும் உயிர்பித்தல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வசனத்திற்கு எவருமே ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் பௌதீகமான முறையில் இறந்தவர்களை உயிரூட்டி எழுப்பினார்கள் என்று பொருள் கொள்வதில்லை. மாறாக ஆன்மீகமான முறையில் உயிரற்றோருக்குதான் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் உயிர் கொடுத்தார்கள் என்றே விரிவுரையாளர்கள் எழுதியுள்ளனர். 'உங்களுக்கு வாழ்வளிக்கும் காரியத்திற்கு இத்தூதர் உங்களை அலைக்கும் போது அவருக்கு பதிலளியுங்கள்' என P.J யும் மொழியாக்கம் செய்துள்ளார். ஆனால் இதே சொல் ஈஸா(அலை) அவர்களுக்காக வரும் போது மட்டும் உண்மையிலேயே இறந்தவர்களுக்கு உயிரூட்டினார் எனக் கூறி ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களுக்கு இறைத்தன்மையை கொடுத்து கிறிஸ்தவர்களின் தவறான கடவுள் கொள்கைக்கு ஆதரவளிக்கின்றனர். 

இவர்களுக்கு கடைசியாக ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறிய எச்சரிக்கையைக் கூறிக் கொள்கிறேன். 

நஸாராக்கள் ஈஸா நபி (அலை) அவர்களை அளவுக்குமீறிப் புகழ்ந்து வழி கெட்டது போல் அபூ அப்தில்லாஹ் கூட்டமும் அன்னாரை வரம்பு கடந்து புகழ்ந்து வழிகெடவேண்டாம். 

அவர் எம்முடைய அடியாராகவே விளங்கினார். அவருக்கு நாம் அருள் செய்து அவரை இஸ்ராயீலின் மக்களுக்கு ஒரே எடுத்துக்காட்டாக ஆக்கினோம் (43:60) 

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த வசனத்தில் ஈஸா(அலை) அவர்களை அப்து – அடியார் என்று கூறி அன்னார் இறைவனோ இறைப் பண்புகளாகிய உயிர் கொடுத்தால், படைத்தல் போன்றவற்றை செய்யவோ இல்லை என்று மறுக்கின்றான். இறைவன் அப்து – அடியார் என்ற சொல்லை பல நபிமார்களுக்கும் நல்லடியார்களுக்கும் திருக்குர்ஆனில் பயன்படுத்தியுள்ளான். ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் மனிதனாகிய நல்லடியார் – நபியாவார். அவரிடம் அம்மனிதப் நபிகளைப் போன்ற மனிதப் பண்புகளே இருந்தன. படைத்தல், உயிர் கொடுத்தல் போன்ற பண்புகள் உவமை வடிவில் ஏனைய நபிமார்களுக்கு இருந்தது (8:25) போல் அவரிடமும் இருந்தன என்று பதில் தருகின்றான். 

இந்த வசனத்தில் அவர் என் அடியாராக விளங்கினார். அவருக்கு நாம் அருள் செய்து அவரை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு ஓர் உவமையாக (எடுத்துக்காட்டாக) ஆக்கினோம் என்று கூறுகிறான். அதாவது ஈஸா (அலை) அவர்கள் தந்தை இன்றி பிறந்தது, ஒரு நபிக்கு தந்தையாகும் தகுதியை இறைவன் இஸ்ரவேல் மக்களிடம் இருந்து பறித்து விட்டதனைச் சுட்டிக் காட்டுகிறது. 

பின்னர் யூதர்களின் தீய செயல்களால் ஈஸா நபி (அலை) அவர்களுக்குப் பிறகு நுபுவ்வத்தின் அருட்கொடையும் அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டு அது இஸ்மாயீல் (அலை) அவர்களின் வழித்தோன்றல்களுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு ஈஸா(அலை) அவர்கள் தந்தையின்றிப் பிறந்தது இஸ்ராயீல் சமுதாயம் நுபுவ்வத்தின் அருளை முற்றாக இழக்கப் போகிறது என்பதை எடுத்துக்காட்டவே இந்த வசனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.