ஆரம்ப காலம் முதலாகவே உண்மையின் எதிரிகள், பொய்யின் நண்பர்கள், இறைவன் புறமிருந்து தோன்றும் எல்லா இறைதூதர்களுக்கும், மார்க்க சீர்திருத்தவாதிகளான முஜத்திதுமார்களுக்கும் எதிராகப் பொய், வஞ்சகம், முதலியவைகளின் அடிப்படையில் அவர்களை எதிர்த்தும், துன்புறுத்தியும் வந்துள்ளனர். அவர்களுக்கு எதிராக மக்களிடையே தப்பெண்ணங்களையும் பொய்ப் பிரச்சாரங்களையும் கட்டவிழ்த்துவிட்டு மக்கள் அவர்களை ஒப்புக்கொள்வதிலிருந்தும் தடை செய்து கொண்டிருந்தார்கள் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது. பார்க்க (திருக்குர்ஆன் 4:61, 7:46)
எல்லா இறைத்தூதர்களுக்கும் எதிராக ஒரேவிதமான ஆட்சேபனைகள் கூறப்பட்டு வந்துள்ளன என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.
“(நபியே) உமக்குமுன் தோன்றிய எல்லா நபிமார்களுக்கும் எதிராகவும் கூறப்பட்ட ஆட்சேபனைகள் உம்மீதும் கூறப்பட்டும். (41:44)
இறைவனாலும், திருநபி (ஸல்) அவர்களாலும் முன்னறிவிக்கப்பட்டு இக்காலத்தில் தோன்றியிருக்கும் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களுக்கு எதிராகவும் பொய், ஏமாற்று இவற்றின் அடிப்படையில் இதே போன்று ஆட்சேபனைகளும், குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டு வருகின்றன.
இஸ்லாத்தின் கொடிய எதிரியாகிய சுவாமி தயானந்த சரஸ்வதி தமது ‘சத்தியார்த்தப் பிரகாஷ்’ என்ற நூலின் 14 வது அத்தியாயத்தில் திருக்குரானின் பல வசனங்களை முன்னும், பின்னும் நீக்கியும், வெவ்வேறு அத்தியாயங்களில் உள்ள வெவ்வேறு வசனங்களை எடுத்து முன்னும் பின்னும் நீக்கி ஒன்றாக சேர்த்து ஏராளமான ஆட்சேபனைகளையும், பொய்க் குற்றச்சாட்டுகளும் செய்துள்ளார். இதே வழியைத்தான் தயானந்த சரஸ்வதியின் வாரிசுகளான ஆலிம்கள், சிறிதளவேனும் இறையச்சமும், இறை பக்தியுமில்லாமல் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களுக்கு எதிராகவும் கடைப்பிடித்து வருகின்றனர்.
அண்மையில் ஒரு சகோதரர் எனக்கு எழுதிய கடிதத்தில், “முஸ்லிம் சீர்திருத்தம்” (ஆசிரியர் – முஹம்மது அப்துல்காதிர் – தென்காசி) என்ற புத்தகத்தில் மிர்ஸா குலாம் அஹ்மதைப் பற்றி எழுதப்பட்டுள்ளதாகக் கூறி அதற்க்கு விளக்கம் தருமாறு கேட்டுள்ளார்.
அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து ஆட்சேபனைகளும், சுவாமி தயானந்த சரஸ்வதி திருக்குர்ஆனின் வெவ்வேறு அத்தியாயங்களில் இருந்து வசனங்களை ஒன்றாகச் சேர்த்து, இஸ்லாத்திற்கும், திரு நபி (ஸல்) அவர்களுக்கும் எதிராக செய்துள்ள ஆட்சேபனைகளைப் போன்றே இருக்கின்றன.
மேற்கண்ட அந்த புத்தகத்தில் 190-191 ஆம் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.
“காதியானி மிர்ஸாஜி கூறுகிறார், உங்களது நபியைவிடவும் நான் அந்தஸ்தில் உயர்ந்தவன். அவருக்கு அற்புதங்கள் மூவாயிரம் எனக்கோ மூன்று இலட்சம்” மேலும் இருபது இலட்சம் வரையுண்டு (ஹகீகத்துல் வஹி பக்கம்:46, பராஹீனே அஹ்மதியா பாகம்:5, பக்கம்:128, துஹ்பே கோல்டவியா பக்கம்:63)
ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களால் எழுதப்பட்ட இந்த நூல்களை, ‘முஸ்லிம் சீர்திருத்தம்’ ஆசிரியர் கண்ணால்கூட பார்த்திருக்கமாட்டார் என்று உறுதியாகக் கூறமுடியும். ஏனென்றால் அந்த நூல்களில் அவ்வாறு எழுதப்படவே இல்லை.
உங்களது நபியை விடவும் நான் அந்தஸ்தில் உயர்த்தவன் என்று ஹஸ்ரத் அஹமது (அலை) அவர்கள் எந்த நூலிலும் கூறவில்லை. ஹஸ்ரத் அஹமத் (அலை) அவர்கள் முஸ்லிம்களிடம் “உங்கள் நபி” என்ற வார்த்தையை எவ்வாறு பயன்படுத்தவார்கள். இது தயானந்த சரஸ்வதியின் நேரடி வாரிசான தென்காசியாரின் உளறலேயாகும். அவருக்கு எங்கள் பதில் பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபமும், கோபமும் உண்டாவதாக’ என்ற இறைவசனமேயாகும்.
மேலும் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் ஹஸ்ரத் முஹம்மது நபி(ஸல்) அவர்களை விட தான் அந்தஸ்தில் உயர்ந்தவன் என்று எங்கும், எதிலும் கூறவில்லை. இதுவும் தென்காசியாரின் பொய் குற்றச்சாட்டாகும்.
ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் உர்து, பார்ஸி, அரபி, ஆகிய மொழிகளில் என்பதிற்கு மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்கள் அவை அனைத்திலும் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை புகழ்ந்து எழுதியுள்ளார்கள். இத்தகைய புகழ்ச்சியைப் படிக்கும் எந்த ஒரு மனிதனாலும் இத்தகைய அபாண்டமான பொய்யைக் கூற முடியாது. அவ்வாறு கூறியிருக்கும் தென்காசியாரோ அவரைப் போன்றோரோ இறைவனின் சாபத்திலிருந்து தப்பமுடியாது.
ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் இவ்வாறு எழுதியுள்ளார்கள்.
“ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் எல்லா இறைதூதர்களைவிடவும் சிறந்தவரும் உயர்ந்தவரும் காதமுன்னபியீனும் இதுவரை வந்த, இறுதி நாள் வரை வரைப்போகும் எல்லா மனிதர்களைவிடவும் அந்தஸ்திலும், மகத்துவத்திலும் உயர்ந்தவராவார்கள். (ஆயினாயே கமாலாத்தே இஸ்லாம்)
“எல்லா ஆன்மீக பிரகாசங்களின் உறைவிடமான எங்களது தலைவர் ஹஸ்ரத் முஹம்மத் நபி (ஸல்) அவர்களே ஆவார்கள். அந்தப் பிரகாசத்தில் நான் அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறேன். நான் அந்த பிரகாசத்திலிருந்து புறப்பட்ட ஒரு கதிர் மட்டுமே உண்மையில் முழுப் பிரகாசனமும் அவர்களே. நான் எம்மாத்திரம்.!
எல்லா நபிமார்களைக் காட்டிலும் சிறப்பானவரே! உங்கள் மூலமாகத்தான் நாங்கள் சிறந்த சமுதாயமாக ஆகியிருக்கிறோம். உங்களது காலடிகளைப் பின்பற்றிதான் நாங்கள் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். (துர்ரே ஸமீன்)
எனது உயிரும் எனது இதயமும் திருநபி (ஸல்) அவர்களுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டிருக்கின்றன. எனது உடல் நபி (ஸல்) அவர்களின் வீட்டுவாசலுக்கு அர்ப்பணம். நான் மக்களுக்காக வெளிப்படுத்திய இந்த நீரூற்று எனக்கு சொந்தமில்லை. கரை காணாத கடலாக இருக்கும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட சில துளிகளேயாகும் (துர்ரே ஸமீன்)
“ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுடைய தகுதியையும், மகத்துவத்தையும் மக்களால் கணிக்கவே முடியாது. அவருடைய எளிய தாசனாகிய ஒருவர் இக்காலத்தில் மஸீஹாக தோன்றியிருக்கிறார் என்றால் அந்த ஆத்மீக குருவின் தகுதியும் மகிமையும் எத்தனை உயர்ந்தது.”
நாம் எல்லாவற்றையும் நபி (ஸல்) அவர்களிடமிருந்துதான் பெற்றுக் கொண்டோம். இறைவா! நீயே இதற்கு சாட்சியாக இருக்கின்றாய்! எங்களுக்கு உண்மையைக் காட்டித்தந்த பூரணச் சந்திரன் எங்கள் தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களே! (துர்ரே ஸமீன்)
இறைவன் தன்னுடன் உரையாடும் சிறப்பினை எனக்கு வழங்கியிருக்கிறான். ஆனால் இந்த சிறப்பு எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்றியதன் காரணமாகத்தான் கிடைத்துள்ளது. நான் நபி (ஸல்) அவர்களின் உம்மத்தாக இல்லாமலும் அவர்களைப் பின்பற்றாமலும் இருந்திருந்தால் உலகில் உள்ள அனைத்து மலைகளின் அளவுக்கு எனது நற்செயல்கள் இருந்திருந்தாலும் இறைவனுடன் உரையாடும் சிறப்பு ஒருபோதும் கிடைத்திருக்காது. ஏனென்றால் தற்போது முஹம்மதிய நுபுவத்தை தவிர எல்லா நுபுவத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. ஷரியத்துடைய நபி எவருமே இனி வரமாட்டார். ஷரிஅத்தில்லாத நபி வரலாம். ஆனால் அவர் முதலில் நபி (ஸல்) அவர்களின் உம்மத்தியாக இருக்கவேண்டும். இதன் அடிப்படையில் நான் உம்மத்தியாகவும் நபியாகவும் இருக்கின்றேன். (தஜல்லியத்தே இலாஹிய்யா பக்கம் 24, 25)
மேலும் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுடைய ஏராளமான நூல்களில் தமக்கும் திருநபி (ஸல்) அவர்களுக்குமிடையிலுள்ள உறவை விளக்கமான முறையில் எடுத்துரைத்துள்ளார்கள். உண்மை இவ்வாறிருக்க ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் முஸ்லிம்களைப் பார்த்து “உங்களது நபியை விட நான் அந்தஸ்தில் உயர்ந்தவன்” என்று கூறியுள்ளதாக கூறுவது தென்காசியாரின் பிதற்றலே அன்றி வேறில்லை.
பாமர முஸ்லிம்களை ஏமாற்றி அஹ்மதிய்யா ஜமாத்தைப் பற்றியும் அதன் தூய ஸ்தாபகரைப் பற்றியும் அவர்களுக்கிடையில் வெறுப்பையும் துவேஷத்தையும் உண்டாக்கவேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இத்தகையதொரு அபாண்டமான குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.
அடுத்து பொய்யாசிரியர் தென்காசியார் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுடைய நூல்களிலிருந்து இரண்டு வசனங்களை எடுத்து முன்னும் பின்னும் நீக்கிவிட்டு, இல்லாததை சேர்த்தும் முஹம்மது நபிக்கு அற்புதங்கள் மூவாயிரம் எனக்கோ மூன்று இலட்சம் என்று கூறியதாக எழுதியுள்ளார்.
சுவாமி தயானந்த சரஸ்வதி தந்து சத்தியார்த்தப் பிரகாஷ் எனும் நூலில் இதே வழியைத்தான் கையாண்டிருக்கிறார். திருக்குர்ஆனிலுள்ள, “நீங்கள் உண்ணுங்கள் பருகுங்கள் ஆனால் வரம்பை மீறாதீர்கள். (7:32) “நீங்கள் சுய உணர்வற்றவராக இருக்கும் நிலையில் தொழுகையின் பக்கம் அணுகாதீர்கள். (4:44) என்ற வெவ்வேறு வசனங்களை எடுத்து, “தின்னுங்கள் குடியுங்கள் தொழுகையை அணுகாதீர்கள் (7:32, 4:44) என்று திருக்குரானில் கூறியிருப்பதாக தயானந்த சரஸ்வதி எழுதியுள்ளார்.
சுவாமி தயானந்த சரஸ்வதி போன்றே தென்காசியாரும். ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களுக்கு எதிராக மக்களை தூண்டி ஏமாற்ற நினைக்கிறார்.
இனி ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் கூறியுள்ளவற்றை காண்போம்:-
தென்காசியார் எடுத்து வைக்கும் பக்கத்தில் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்:
எனக்கு துணையாகவும் சாதகமாகவும், எனக்கு பல அடையாளங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றான். இன்றைய நாள் வரை அதாவது 1906 ஜூலை 16 ஆம் தேதி வரை அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் நான் இறைவன் மீது ஆணையிட்டு கூறுகிறேன். அந்த அடையாளங்கள் (நிஷான்) மூன்று இலட்சத்திற்கு மேல் இருக்கும். எனது இந்த ஆணையின் மீது எவருக்காவது நம்பிக்கை இல்லையானால் நான் அதற்குள்ள சான்றுகளைத் தர இருக்கிறேன்.” ( ஹகீக்கத்துல் வஹி பக்கம் - 67)
மேலும் அதே நூலில் ஏராளமான மறுக்க முடியாத அடையாளங்களை எடுத்துரைத்திருந்தார்கள்.
துஹ்பே கோல்டவியா எனும் மற்றொரு நூலில் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மூவாயிரம் அற்புதங்கள் (முஹ்ஜிஸாக்கள்) கிடைத்திருந்தன என்று கூறியதை இவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இரண்டு புத்தகங்களில் குறிப்பிட்டதை ஒன்றாக சேர்த்து மக்களை ஏமாற்ற முற்பட்டிருக்கிறார்.
தமது உண்மைக்கு ஆதாரமாக 3 லட்சம் அடையாளங்கள் (நிஷான்) தரப்பட்டிருகின்றன என்று குறிப்பிட்ட ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் வேறொரு நூலில் கூறுகிறார்கள் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய அற்புதங்கள் நாலா புறமிருந்தும் ஒளிவீசிக்கொண்டிருக்கின்றன. அந்த அற்புதங்கள் எப்படி மறைந்து போகும். சஹாபா பெருமக்களுக்கு முன்னால் வெளிப்பட்ட அற்புதங்கள் (முஹ்ஜிஸாக்கள்) 3000 க்கும் மேலாக இருக்கின்றன. அந்தந்த நேரங்களில் பூர்த்தியான முன்னறிவிப்புகள் பத்தாயிரத்திற்கும் மேலாக இருக்கின்றன. இவைகளைத் தவிர திருக்குரானில் இருந்து வெளியாகும் ஏராளமான அற்புதங்களும், பிற வசனங்களும் முன்னறிவிப்புகளும் நம்முடைய காலத்திலும் பூர்த்தியாகிக் கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு அற்புதமும் (முஹ்ஜிஸாத்தும்) ஏராளமான அடையாளங்களை(நிஷான்) கொண்டது. அற்புதம், அடையாளம் இரண்டிற்கும் வேறுபாடு தெரியாமல் குழம்பி போயிருக்கிறார் தென்காசியார்.
ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் கூருகிறார்கள்:
“எந்த அளவில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு முஹ்ஜிஸாத்துகள் (அற்புதங்கள்) கிடைத்திருக்கின்றனவோ அந்த அளவிற்கு எந்த நபிக்கும் முஹ்ஜிஸாத்துகள் எனும் அற்புதங்கள் கிடைக்கவில்லை. முற்கால நபிமார்களுடைய முஹ்ஜிஸாத்துகள் அவர்களுடைய மரணத்துடன் முடிவு பெற்றுவிட்டன. ஆனால் நமது நபி ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முஹ்ஜிஸாத்துக்கள் இதுவரை வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இறுதி நாள் வரை வெளிப்பட்டு கொண்டே இருக்கும் (ஹக்கீக்கத்துல் வஹி பக்கம்: 35)
எனக்கு சாதகமாக வெளியான அற்புதங்களும் உண்மையில் நபி (ஸல்) அவர்களுடைய அற்புதங்களேயாகும். (ஹகீகத்துல் வஹி பக்கம் 35)
இங்கு ஒரு உண்மையைக் கூற விரும்புகிறேன். பொய் சரக்குகளை அவிழ்த்துவிடும் தென்காசியார் என்பவர் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் எழுதிய 80 க்கும் அதிகமான நூல்களில் ஒரு நூலைக் கூட படிக்கவோ, பார்க்கவோ இல்லாமல் அஹ்மதிய்யா ஜமாத்திற்கு எதிராக எழுதப்பட்ட காதியானி மத்ஹப் போன்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட பொய்க்குற்றச்சாட்டுகளைத்தான் காப்பியடித்து எழுதியிருக்கிறார்.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.