அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

May 7, 2014

இமாம் மஹ்தி(அலை) அவர்களின் உண்மைக்கு வானத்தின் சாட்சி


ஹாபிஸ் ஸாலிஹ் முஹம்மத் அலாதீன். (பேராசிரியர், வானவியல், உஸ்மானியா பல்கலைக் கழகம், ஹைதராபாத்.)

குர்ஆனில் இறைவன் கூறுவதாவது,

அவன் (அல்லாஹ்) மறைவானவற்றை அறிந்தவனாவான். அவன் மறைவானவற்றை, தனது தூதர்களில் தான் விரும்புகிறவர்களைத் தவிர வேறு யாருக்கும் வெளிப்படுத்துவதில்லை. (72:27,28 )

மேற்கண்ட வசனத்திலிருந்து, இறைதூதாரர்களுக்கு இறைவனுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதென்றும். இறைவனிடமிருந்து அவர்கள் மறைவான விஷயங்களைப் பற்றிய செய்திகளைப் பெருமளவு தனி அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது.

நமது இன்னுயிரினும் இனிய ஆதிமீகத் தலைவரான ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களுக்கு மிகவும் அதிக அளவில், அல்லாஹ் மறைவானவை தொடர்பாக அறிவுரைகளை அருளியுள்ளான். இறைவனிடமிருந்து வருங்கால நிகழ்ச்சிகள் பற்றிய முன்னறிவிப்பைப் பெற்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் கீழ்வருமாறு கூறியுள்ளார்கள்.

“இறுதி காலத்தில் உலகம் இறைவனை விட்டு அகன்று சென்றுவிடும்பொழுது அதன் நேர்வழிக்காக இறைவன் மஹ்தி, மஸீஹை அனுப்பி, அன்னார் மூலமாக நன்னம்பிக்கையை மக்கள் இதயங்களில் மீண்டும் நிலைநாட்டுவான் அப்பொழுது இஸ்லாத்தில் மறுமலர்ச்சி ஏற்படும்.

மக்கள் வாக்களிக்கப்பட்ட மஸீஹை எளிதாக அறிந்து கொள்வதற்கு, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் ஏராளமான அடையாளங்களைக் கூறியுள்ளார்கள். அவற்றில் ஒன்று ஒரு குறிப்பிட்ட காலத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஏற்படும் கிரகங்கள் பற்றியதாகும்.

ஹஸ்ரத் அலி இப்னு உமரில் பக்தாதி தாருல் குத்னி அவர்கள் மிகவும் மரியாதைக்குரிய முகத்தஸ் ஆவார்கள். ஹஸ்ரத் இமாம் பாக்கிர் முஹம்மது பின் அலி (ரலி) அவர்களின் ரிவாயத்தின்படி, தமது ஸுனன் தாருல் குத்னியில், திருநபி மொழியாக, கீழ்வருமாறு பதிவு செய்துள்ளார்கள்.

நமது மஹ்திக்கு இரு அடையாளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வானமும், பூமியும், தோன்றிய நாளிலிருந்து இந்த அடையாளம் வேறு எந்த இறைத்தூதருக்காகவும் நிகழவில்லை. அது என்னவெனில் மஹ்தியின் காலத்தில் ரமலான் மாதத்தில் சந்திரனுக்கு முதல் இரவில் கிரகணம் ஏற்படும். சூரியனுக்கு நடுநாளில் கிரகணம் ஏற்படும். இந்த அடையாளங்கள் வானமும் பூமியும் தோன்றியதிலிருந்து எந்த இறைதூதருக்காகவும் நிகழவில்லை (ஸுனன் தாருல் குத்னி வால்யூம் 1 பக்கம் 88)

ஸுன்னி, ஷியா இரு வகுப்பார்களில் ஹதீஸ் நூல்களிலும் இந்த ஹதீஸ் காணப்படுகிறது. இந்த ஹதீதுக்கு திருக்குரானும் பலமிக்க ஆதரவு தருகின்றது. இறுதி காலத்தின் அடையாளங்களில் ஒன்றாக இக் கிரகணங்களைத் திருமறை கூறுகிறது.

இறுதி காலம் எப்பொழுது வருமென்று (மனிதன்) கேட்டுக் கொண்டிருக்கின்றான். அச்சமயம் பார்வை தட்டமிழ்ந்துவிடும். சந்திரனுக்கு கிரகணம் ஏற்படும். சூரியனும், சந்திரனும் (கிரகணத்தின் நிலையில்) ஒன்று சேர்க்கப்படும். அப்பொழுது மனிதன் நான் தப்பித்துக் கொள்வதற்கு எங்கு ஓடுவேன் என்று கூறுவான். (திருக்குர்ஆன் 75:7-11)

வரப்போகும் வாக்களிக்கப்பட்ட மஸீஹின் வருகை இறுதி காலத்தில் நடைபெறுமென கூறப்பட்டுள்ளது. உண்மையில் சூரிய சந்திர கிரகணங்களைப் பற்றிய முன்னறிவிப்பின் அடிப்படை திருக்குர்ஆன் வசனங்களில் ஏற்கனவே உள்ளதாகும். அவ்வசனங்களுக்கு விளக்கமாகவும், சாட்சி கூறுவதாகவுமே மேற்கண்ட ஹதீஸ் காணப்படுகிறது. இஸ்லாமிய முறைப்படி ஹிஜிரி மாதம் பிறை கண்ட பிறகு ஆரம்பமாகிறது. ஹிஜிரி கணக்கின்படி சந்திரக் கிரகணத்திற்கு இயற்கையாக குறிப்பிடப்பட்ட நாள் பிறை 13, 14, 15 ஆகிய மூன்று தேதிகளில் ஒன்றும், சூரிய கிரகணத்திற்காக ஏற்படுத்தப்பட்ட நாள் 27, 28, 29 ஆகிய மூன்று தேதிகளில் ஒன்றும் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். இமாம் மஹ்திக்கு சாட்சி கூறும் பொருட்டு நிகழவிருக்கும் சந்திர கிரகணம் ரமலான் மாதத்தில் முதல் கிரகண இரவாகும். சூரிய கிரகணம் அதே மாதத்தில் சூரிய கிரகணத்திற்கு நியமிக்கப்பட்ட நாள்களில் நடுநாள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னும் விளக்கமாகக் கூறவேண்டுமெனின் சந்திரக் கிரகணத்திற்கு முதல் இரவென்றால் பிறை 13ஆம் இரவாகும். அதற்கு பிறை 1 என்று பொருளல்ல. மேலும் ஹதீஸில் கமர் என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. பிறை 3 வரை அதற்கு ‘ஹிலால் என்று அரபி மொழியில் கூறுவார்கள். பிறை 4 லிருந்து கடைசி வரை உள்ள சந்திரனுக்கு கமர் என்று சொல்லப்படுகிறது.

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இம்முன்னறிவிப்பு குறிப்பிட்ட அதே காலத்தில் மிகவும் அற்புதமான முறையில் நிறைவேறியுள்ளது. அஹ்மதிய்யா இயக்கத்தின் தூத ஸ்தாபகர் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் 1891 இல் இறை அறிவிப்பின்படி தாம் வாக்களிக்கப்பட்ட மஹ்தி மஸீஹ் என்று வாதிட்டார்கள். அன்னார் தமது வாதத்தில் உண்மையை நிரூபிக்கும் பொருட்டு ஏராளமான சான்றுகளை எடுத்துக் காட்டியுள்ளார்கள். இருந்தபோதிலும் ஆலிம்கள் எனப்படுவோர் ஹஸ்ரத் இமாம் மஹ்தி (அலை) அவர்களின் வாதங்களை பொய் எனக் கூறி கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்தனர். அச்சமயமே ஹஸ்ரத் இமாம் மஹ்தியின் உண்மைக்கு ஆதாரமாக அல்லாஹ் மேற் கூறப்பட்ட மாபெரும் அடையாளங்களை வானத்தில் நிகழ்த்திக் காட்டினான்.

கி.பி 1894இல் (ஹிஜிரி 1311 இல்) சந்திர கிரகணத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட இரவுகளில் முதல் இரவில் அதாவது ரமலான் மாதம் பிறை 13 இரவிலும் (மார்ச் 21) சூரிய கிரகணம் அதற்காக நியமிக்கப்பட்ட தேதிகளில் நடுவிலுள்ள நாளான ரமலான் 28ஆம் தேதி (ஏப்ரல் 6) சூரிய கிரகணம் நிகழ்ந்ததன. இவ்விரண்டு கிரகணங்களுமே வாக்களிக்கப்பட்ட இமாம் மஹ்தியின் இடமான காதியானில் மிகவும் தெளிவாகத் தென்பட்டது. என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இது நிகழ்ந்த பிறகு, இந்த அதிமகத்தான அடையாளங்கள் ஏற்பட்டதன் மூலம் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய முன்னறிவிப்பு பூர்த்தியாகிவிட்டதென்றும் இப்படிப்பட்ட ஓர் அடையாளம் இதற்கு முன்னர் வேறு எந்த இறைத்தூதருக்காகவும் காட்டப்படவில்லை என்றும் ஹஸ்ரத், இமாம் மஹ்தி (அலை) அவர்கள் எழுதிய ‘நூருல் ஹக்’ (பாகம் 2) எனும் நூலில் எழுதியுள்ளார்கள்.

இதற்கு முன்னரும் ரமலான் மாதத்தில் சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்ப்பட்டனவென்றும் எனவே இதை ஓர் இறைத்தூதருடைய உண்மைக்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ளமுடியாதென்றும் ஆட்சேபனை கூறப்பட்டது. இதுவரை நிகழ்ந்துள்ள சூரிய சந்திர கிரகணங்களின் வரலாற்றை நோக்கும் போது ஒவ்வொரு இருபத்திரண்டு வருடங்களுக்கு ஒருமுறை, உலகில் எங்காவது ஒரு இடத்தில் ஏதாவது ஒரு மாதத்தில் சூரிய சந்திர கிரகணம் ஏற்பட்டதாக தெரியவருகிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட இடத்திலும் ஓர் இறைத்தூதரின் உண்மைக்கு ஆதாரமாக ஏற்கனவே முன்னறிவிப்புச் செய்தபடி சூரிய சந்திர கிரகணங்கள் நடைபெற்றதாக வரலாற்றில் எங்கும் காண முடியாது. அத்துடன் முன்னறிவிப்பின்படி சூரிய சந்திர கிரகணங்கள் நிகழும் போது வாக்களிக்கப்பட்ட இறைதூதர் இருப்பதும் வரலாற்றில் காணமுடியாத ஓர் ஒப்பற்ற சம்பவமாகும். அல்ஹம்துலில்லாஹ்.

ஹஸ்ரத் இமாம் மஹ்தி(அலை) கூறுகிறார்கள்: ‘உண்மையில் ஹஸ்ரத் ஆதம் (அலை) காலத்திலிருந்து இன்று வரை இப்படிப்பட்ட ஒரு முன்னறிவிப்பை யாரும் செய்ததில்லை இந்த முன்னறிவிப்பு நான்கு பகுதிகளைக் கொண்டதாக உள்ளது.

  • சந்திர கிரகணம் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் முதல் இரவில் நடைபெறும். 
  • சூரிய கிரகணம் அதற்கு நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் நடுவிலுள்ள தேதியில் நடைபெறும். 
  • அது ரமலான் மாதத்தில் நிகழும் 
  • அச்சமயம் வாக்களிக்கப்பட்ட இறைதூதர் இருப்பதும், அவர் எதிர்க்கப்படுவதும் நிகழும்.
எனவே இந்த முன்னறிவிப்பை – இதன் மகத்துவத்தை நிராகரிப்பவர்கள் உலகில் நிகழ்ந்த இதற்கு ஒப்பான ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டட்டும்.

ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களுக்கு 1876 யிலிருந்து அவர்கள் இவ்வுலகை விட்டுச் சென்ற 1908 வரை இறைவனிடமிருந்து இல்ஹாம்கள் எனும் இறை அறிவிப்புகள் அருளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 1882 ஆம் ஆண்டு அவர்களுக்கு இறைவன் அருளிய ஓர் மகத்துவமிக்க இல்ஹாம் ‘பராஹீனே அஹ்மதிய்யா’ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது. அதாவது.

‘குல் ஹிந்தி ஷஹாததுன் மினல்லாஹி பஹல் அன்தும் முஹ்மிநூன் குல் ஹிந்தி ஷஹாததுன் மினல்லாஹி பஹல் அன்தும் முஸ்லிமீன்’

நீர் கூறுவீராக! என்னிடம் அல்லாஹ்வின் ஒரு சாட்சியம் உள்ளது. நீங்கள் அதனை நம்புவீர்களா? இல்லையா? மீண்டும் நீர் கூறுவீராக! என்னிடம் அல்லாஹ்வின் ஒரு சாட்சியம் உள்ளது. அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? இல்லையா?

ஹுஸுர் அவர்கள் இதற்கு விளக்கமளிக்கும் போது, இங்கு சாட்சியம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது, சூரிய சந்திர கிரகணங்களைப் பற்றிய அடையாளமே ஆகும் என்று கூறியுள்ளார்கள்.

மேலும் அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு கூறுவதாவது:

“ எனது உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது ஆணையாகக் கூறுகிறேன். எனது சத்தியத்திற்கு சாட்சியமாகவே வானத்தின் இந்த அடையாளத்தை அல்லாஹ் காட்டி இருக்கிறான். ஆலிம்கள் எனப்படுவோர் என்னை தஜ்ஜால் என்றும் பொய்யன் என்றும் காபிர் என்றும் கூறிய அதே நேரத்தில் அல்லாஹ் இந்த அடையாளத்தைப் பிரகடனப்படுத்தினான். இன்றைக்கு இருபது வருடங்களுக்கு முன்பே, இந்த அடையாளத்தைப் பற்றி பராஹீனே அஹ்மதிய்யாவில் நான் கூறியுள்ளேன். ஆதம் (அலை) காலத்திலிருந்து இன்று வரை யாருக்குமே இந்த அடையாளம் தரப்படவில்லை. இது எனது சத்தியத்திற்குச் சாட்சியாக உள்ள அடையாளமாகும் என்று கஹ்பதுல்லாவில் நின்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்ய ஆயத்தமாக இருக்கிறேன். (துஹ்பே கோல்டவியா)

இந்த ஒப்பற்ற அடையாளத்தைக் காட்டியதன் பொருட்டு, அல்லாஹ்வுக்கு நன்றி கூறி ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் தமது அரபிக் கவிதையில் பின்வருமாறு கூறுகிறார்கள். “எனது சகோதரக் ஜமாஅத்தினரே! உங்களுக்கு ஒரு நற்செய்தி! எனது நண்பர்கள் கூட்டத்தினரே உங்களுக்கு அருள் உண்டாவதாக! இறையருள் என்னும ஒளி பிரகடனமாகி உள்ளது. இரு கண் உடையோருக்கு இதற்கான வழி முழுமையாகிவிட்டது. இறைவனின் கட்டளையினால் ரமலான் புனித மாதத்தில் சூரியனும், சந்திரனும் கிரகணத்தின் மூலம் உண்மையை வெளிபடுத்திவிட்டன.

ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் ஓர் நற்செய்தி மிகமிகத் தெளிவாக பிரகடனமாகிவிட்டது’ (நூருல் ஹக் பக்கம்: 2)

ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி ஸுப்ஹானல்லாஹில் அலீம். அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ ஆலா ஆலி முஹம்மதின்,.


0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.