திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 23 இல் சனிக்கிழமை என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:
சனிக்கிழமை முழுவதும் மீன் பிடிக்கும் தொழில் செய்யக்கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதை அவர்கள் மீறியதால்தான் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மாற்றப்பட்டனர்.
நம் விளக்கம்:
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது உம்மத்தில் சிதறுண்ட அமைதியிழந்த ஒரு காலம் வரும். அப்போது அவர்கள் தமது ஆலிம்களிடம் நேர்வழிக்கான நம்பிக்கையுடன் செல்வார்கள். அப்போது அவர்கள் அந்த ஆலிம்களை குரங்குகளாகவும் பன்றிகளாகவும் காண்பார்கள். (கன்ஸுல் உம்மால், பாகம் 7, பக்கம் 190)
இந்த ஹதீஸின் படி இக்காலத்திலுள்ள ஆலிம்கள் பன்றி, குரங்குகளாக உருவத்தால் காணப்படுகின்றார்களா? அல்லது பன்றியின் குணமும், குரங்கின் குணமும் கொண்டவர்களாக இருக்கின்றார்களா? பி.ஜே எதை நம்புகிறார்?
ஒரு மனித இனத்தின் ஒரு பகுதி, குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மாற்றப்படுவதற்கு உருமாற்றம் என்று பெயர். அல்லாஹ் அந்த உருமாற்றம் என்ற சொல்லை ஏன் எடுத்தாளவில்லை?
ஓர் ஊரைச் சேர்ந்தவர்கள் அல்லது ஒரு பகுதி மக்கள் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மாறிவிட்டதாக வைத்துக் கொள்வோம். இது பற்றிய செய்தி ஊரெங்கும் பரவி, வரலாற்றில் இடம் பெற்றிருக்கும். அப்படி ஏதாவது வரலாற்று சான்று உள்ளதா?
எல்லா மொழிகளிலும் இவை போன்ற சொல் வழக்குகள் உள்ளன. தமிழில் குரங்கு, பன்றி, மாடு, நாய், சிறுத்தை, சிங்கம், புலி, எருமை என்றெல்லாம் மனிதர்கள் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் எல்லாம் அந்தந்த விலங்குகளாக பறவைகளாக உருவத்தால் மாறிவிட்டனர் என்பதற்காக அழைக்கப்படுவதில்லை. மாறாக ஏதோ ஒரு ஒற்றுமை அந்த மனிதனுக்கும் அவன் அழைக்கப்படும் பெயர்க்காகவும் அந்தப் பெயரை வைத்திருக்கலாம். இது போன்றுதான் அல்லாஹ் அந்த இஸ்ரவேலர்களை பன்றி குரங்கு என்று குணப் பொருத்தம் காரணமாக வைத்திருக்கிறான். இல்லை என்றால் உருமாற்றம் என்ற சொல்லை அல்லாஹ் எடுத்தாண்டிருப்பான்.
திருக்குர்ஆன் 2:66 வது வசனத்திற்கு முஜாஹித் (ரக) அவர்கள் கூறியதாவது, அவர்களின் உள்ளங்கள் தாம் குரங்குகளாக மாற்றப்பட்டனவே ஒழிய அவர்களின் உருவம் அவ்வாறு மாற்றப்படவில்லை. இது அல்லாஹ் கூறியுள்ள ஒரு குறியீடு தான். இதற்கு எடுத்துக்காட்டாக, ஏடுகளை சுமக்கின்ற கழுதையைப் போன்று (62:6) என்ற வசனத்தைக் குறிப்பிடலாம். (ஆதாரம்: தப்ஸீர் இப்னு கஸீர் 2:65 வது வசனத்தின் விளக்கவுரை)
திருக்குர்ஆன் மனிதர்களை சைத்தான் என்றும், 17:28 வது வசனத்தில் வீண் விரயம் செய்பவனை சைத்தானின் சகோதரன் என்றும், புறக்கண் உள்ளவர்களை குருடர்கள் என்றும் காது கேட்கக் கூடியவர்களை செவிடர்கள் என்றும், வாய் பேசுபவர்களை ஊமைகள் என்றும் அழைக்கிறது. அவர்கள் சைத்தானின் குணம் கொண்ட மனிதர்களாகவும் கருத்துக் குருடர்களாகவும் உள்ளனர் என்பதை பி.ஜே ஏற்றுக் கொண்டுள்ளார். ( காண்க திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 390,5). இவர் மனிதனே இல்லை. இவர் கண்ணியமான வானவர் தவிர வேறு இல்லை என்றனர். (ஆதாரம் திருக்குர்ஆன் 12:32). இவ்வாறு யூசுப் நபி மலக்கு என்று அழைக்கப்படுகிறார். எனவே, இவர்களும் பன்றிக் குணம், குரங்குக் குணம் கொண்டவர்கள் என்பதால் அவர்களை பன்றி குரங்கு என்று அல்லாஹ் அழைத்துள்ளான். சொத்துப் பாகப்பிரிவினை சம்பந்தமாக உமர் (ரலி) அவர்களது காலத்தில் தாய் மற்றும் தந்தை வழி உடன்பிறப்புகள் உமர் (ரலி) அவர்களிடம், இறை நம்பிக்கையாளரின் தலைவரே! எங்கள் தந்தை ஒரு கழுதை (விவரமில்லாதவர்) நாங்கள் ஒரே தாய் மக்கள் இல்லையா? எங்களையும் கவனியுங்கள் என்று கூறினார்கள் (பைஹகீ ஹாக்கிம், தப்ஸீர் இப்னு கஸீர் 4:12 வசனத்தின் விளக்கம்)
ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள் இமாமாக நின்று தொழும் சமயம் அபூ லுலுஆ பைரோஸ் என்பவன் பிச்சுவாக் கத்தியால் குத்தி விடுகிறான். உமர் (ரலி) அவர்கள்! என்னை, நாய் குத்தி தின்று விட்டது என்று கத்தியால் குத்தியவனை நாய் என்று கூறினார்கள். (புஹாரி எண் 3700)
மனிதனை அல்லாஹ் உயர்ந்த தோற்றத்தில் குணத்தில் படைத்தான். அவன் தன் செயலால் தன்னை இழிந்தவனாக மாற்றிக் கொள்கிறான். அப்போது அவனின் செயல் குணத்திற்கு ஏற்ப அவனை நாய் என்று அழைக்கிறான். திருக்குர்ஆன் 7:176 வசனம் இதனைக் கூறுகிறது. பி.ஜே அவன் நாயாக மாறிவிட்டான் என்று கருதுவாரா? அவனுக்குரிய உதாரணம் நாய் என்று அல்லாஹ் உதாரணம் என்ற சொல்லைக் கூறியிருப்பதால் அவன் நாயாக மாறவில்லை என்று பி.ஜே கூறுவது என்றால் பன்றி குரங்கு என்று உருமாற்றம் செய்யப்பட்டனர் என்றும் அல்லாஹ் கூறவில்லை. என்பதை பி.ஜே அறியவேண்டும்.
ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் உஹது மலையைப் பற்றி “இது நம்மை நேசிக்கிறது. அதனை நாம் நேசிக்கிறோம். இது சுவனத்தின் வாயில்களில் ஒரு வாயில் மீது அமைந்துள்ளது” என்று கூறியுள்ளார்கள். இது பற்றி கத்தாபி கூறுகின்றார்கள், இதன் கருத்து மதீனா வாசிகள் நம்மை நேசிக்கிறார்கள். நாம் அவர்களை நேசிக்கிறோம் என்பதாகும். இதற்கு சான்று ஊரைக் கேளுங்கள்” (திருக்குர்ஆன் 12:82) என்று அல்லாஹ் திருக்குரானில் கூறுகிறான். அதன் கருத்து ஊர் வாசிகளை கேளுங்கள் என்பதாகும். (ஆதாரம் இப்னு கஸீர் அல் அஸ்கலானி தொகுத்த, முக்தஸர் – நபிமொழிக் களஞ்சியம் பாகம் 1, பக்கம் 379)
மேலே காட்டிய எடுத்துக்காட்டுகளில் உஹது மலை என்பது மதீனா வாசிகளையும் ஊர் வாசிகளையும் குறிக்க வருகிறது.
எனவே குரங்கு பன்றி என்பதால் குரங்குகளாகவும் பன்றியாகவும் மனிதன் மாறுவதில்லை.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.