அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Showing posts with label நாஸிக் மன்சூக். Show all posts
Showing posts with label நாஸிக் மன்சூக். Show all posts

Jun 28, 2014

நோன்பு பற்றி தவறான விளக்கம். (நாஸிக், மன்சூக் திருக்குரானில் இல்லை)


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 47 இல் நோன்பை விட்டு விடுவதற்குப் பரிகாரம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்: 

ஆரம்பத்தில் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நோன்பு நோற்கச் சக்தி உடையோர் நோன்பு நோற்கலாம்: அல்லது ஒரு நோன்புக்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவு அளிக்கலாம் என்ற சலுகை இருந்தது அதுதான் இவ்வசனத்தில் (திருக்குர்ஆன் 2:184) கூறப்பட்டுள்ளது. 

ரமலான் மாதத்தை அடைபவர் நோன்பு நோற்க வேண்டும் என்ற கட்டளை வந்த பின், சக்தி பெற்றவர் நோன்புதான் நோற்க வேண்டும் என்ற புதுச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்தச் சட்டம் அடுத்த வசனத்தில் (2:185) கூறப்பட்டுள்ளது. (நூல்: புகாரி 4507) 

நம் விளக்கம்.

இவர் எடுத்துக் காட்டும் திருமறை வசனத்திற்கு இவர் கொடுத்துள்ள பொருளே தவறானது. இவரின் அரபி மொழி அறிவு இவ்வளவுதான் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார். அல்லதீன யுத்தீகூனஹு என்பதன் பொருள் “நோன்பிற்கான சக்தியற்றவர் மீது” என்பதாகும். யுத்தீகூன என்ற வினை பாபெ இஃப்ஆல் ஆகும். இதன் ஒரு விசேஷம் அது ‘ஸலப்’ உடைய பொருள் தருகின்றதென்பதாகும். இந்தச் சட்டத்தின் படி இவர் குறிப்பிடும் வ அல்லதீன யுத்தீகூனஹு பித்யது தஆமிமிஸ்கீன் என்ற வசனத்திற்கு நோன்பிருக்க சக்தியற்றவர் ஒருவருக்கு பித்யாவாக உணவளிக்க வேண்டும் என்பதாகும். பி.ஜே ஏற்கனவே இது பற்றி கூறும்போது ‘யுதீகூன’ என்ற சொல் திருக்குர்ஆனில் இவர் குறிப்பிடும் அர்த்தத்திலேயே ஏனைய இடங்களில் (!) காணப்படுவதாக (!!) எழுதியிருந்தார் அந்த இடங்களை கூறினால் நன்றாக இருக்கும்! 

1) திருக்குர்ஆன் 2:186 வது வசனத்தின் சட்டம் 2:185 வசனத்தின் சட்டத்தை மாற்றிவிட்டது என்றால், இவ்வளவு முக்கியமான நோன்பு பற்றிய சட்ட மாற்றம் பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார் என்று பி.ஜே ஆதாரம் காட்ட முடியுமா?

2) 4505 வது ஹதீது 4507 வது ஹதீஸை மாற்றுகிறதா? 

4505 வது ஹதீது: 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (2:184) வது இறை வசனத்தை ஓதி இது சட்டம் மாற்றப்பட்ட வசனம் அன்று: நோன்பு நோற்க இயலாத தள்ளாத முதியவரையும், தள்ளாத வயதுடைய பெண்ணையும் இது குறிக்கும். அவர்கள் ஒவ்வொரு நாளுக்கு பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கட்டும் என்று சொன்னார்கள். 

இது பற்றிய அடிக்குறிப்பில், 

நோன்பு நோற்கச் சக்தியில்லாமல் சிரமப்படுகிறவர்கள் ஒரு நோன்பிற்கு ஓர் ஏழை வீதம் உணவளித்திட வேண்டும். இது நோன்பே நோற்க இயலாத அளவிற்குத் தள்ளாத வயதில் உள்ள முதியோருக்குரிய சட்டமாகும். இச்சட்டம் இன்னும் நீடிக்கிறது. மாற்றப்படவில்லை. இது, அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) முதலானோரின் கருத்தாகும். (புகாரி : 5 அடிக்குறிப்பு 43). இமாம் புகாரி (ரஹ்) அவர்களின் கருத்தும் இதுவே ஆகும். 

அடுத்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் இச்சட்டம் நீடிக்கிறது: மாற்றப்படவில்லை என்றே கூறுகின்றார்கள் (தப்ஸீர் இப்னு கஸீர், பதஹுல் பாரி) 

இதன் மூலம் 2:186 வது வசனத்தின் சட்டம் 2:185 வது வசனத்தின் சட்டத்தை மாற்றவில்லை என்பது நிரூபணமாகிறது.
Read more »

Jun 5, 2014

நாஸிக் மன்சூக்


திருக்குரானில் நாஸிக் மன்சூக் 

பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 30 இல், இறைவசனம் மாற்றப்படுதல் என்னும் தலைப்பில் இவ்வாறு எழுதுகிறார்: 

இறைவன் அருளிய வசனத்தை இறைவன் ஏன் மாற்ற வேண்டும்? அவனுக்குத் தான் அனைத்தும் தெரியுமே? மாற்றுவதற்கு அவசியம் ஏற்படாத வகையில் சரியாகக் கூறி விட வேண்டியது தானே? என்று இவ்வசனங்களை வாசிக்கும் சிலர் நினைக்கலாம். 

இது இறைவனின் அறியாமையைக் குறிக்காது. அவனது அளவற்ற அறிவையே குறிக்கும் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். 

வரலாறுகளிலும் வாக்குக் கொடுப்பதிலும் தான் முன் சொன்னதை மாற்றிக் கொள்ளக் கூடாது. சட்டதிட்டங்களைப் போடும் போது இருக்கின்ற சூழ்நிலைக்கு ஏற்பத்தான் சட்டம் போட வேண்டும். சூழ்நிலை மாறிய பின் சட்டத்தை மாற்றாவிட்டால்தான் அறியாமை ஆகும். 

நெருக்கடியான நேரத்தில் அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும். நெருக்கடி நீங்கியதும் ஊரடங்கை விளக்கிக் கொள்ளும். ஏற்கனவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அதையே தொடர்வதும் அறிவுடையமையாகாது அல்லது நெருக்கடியான நேரம் வரும் போதும் ஊரடங்கு போடா மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதும் விவேகமல்ல. 

ஒரு தாய் இரண்டு வயதுப் பாலகனுக்குச் சில உணவுகளை மறுப்பாள். சாப்பிடக் கூடாது எனத் தடுப்பாள். அதே குழந்தை 10 வயதை அடையும் போது முன்பு தடுத்த உணவை உண்ணுமாறு கூறுவாள். இவ்வாறு கூறும் நிலை ஏற்படும் என்பது அவளுக்கு ஏற்கனவே தெரியும். இங்கு குழந்தையின் நிலை தான் மாறியதே தவிர தாயின் அறிவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 

மக்காவில் வாழ்வதே பெரும் பிரச்சனையாக இருக்கும் போது திருடினால் கையை வெட்டுங்கள் எனக் கூற முடியாது. கூறினால் அதற்கு அர்த்தம் இருக்காது. ஆட்சி அதிகாரம் முஸ்லிம்களின் கையில் வந்த பிறகு தான் இந்தச் சட்டத்தை போட முடியும். எனவே, மாறும் சூழ்நிலைக்கு ஏற்ப சட்டங்கள் வழங்குவதுதான் அறிவுடைமை. 

ஒரு நிகழ்ச்சி 2002 இல் நடந்தது எனக் கூறி விட்டு 1967 இல் அந்த நிகழ்ச்சி என்று இன்னொரு நாள் கூறக் கூடாது. ஏனெனில் இது வரலாறு. நடந்ததை மாற்ற முடியாது. இத்தகைய மாறுதல் ஏதும் திருக்குர்ஆனில் இல்லை. சில சட்டங்களில் மட்டுமே இத்தகைய நிலை உள்ளது. (பார்க்க திருக்குர்ஆன் 2:106, 13:39, 16:101) 

நம் விளக்கம்: 

1) திருக்குர்ஆனின் முன்பு வந்த சில சட்டங்களை பின்னர் வந்த சில சட்டங்கள் மாற்றி விட்டது என்று பி.ஜே கருதுகிறார். இவருடைய கணிப்பில் சில சட்டங்கள் திருக்குர்ஆனில் இருப்பதாக வைத்துக் கொண்டால் இமாம் ஸுயூத்தி (ரஹ்) நாஸிக் மன்சூக் வசனங்கள் 20 மட்டுமே என்று கருதுகிறார். சுமார் 500 சட்டங்கள் மாற்றப்பட்டிருப்பதாக முன்னோர்கள் கூறியுள்ளனர் என்று கூறுகிறார். (ஆதாரம்: ஜவாஹிருல் குர்ஆன் 2:106 வசனத்தின் அடிக்குறிப்பு) 

ஆக, 5 முதல் 500 வசனங்களில் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன எனலாம். வசனங்களை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் யாரோ சில மார்க்க அறிஞர்கள் இவை நீக்கிய சட்டங்கள், நீக்கப்பட்ட சட்டங்கள் இல்லை என்று குறைத்துக் கொண்டே வந்துள்ளார்கள். கடைசியில் ஐந்து வசனங்களில் வந்து முடிந்தது. இது எதை காட்டுகிறது என்றால் திருக்குர்ஆனின் வசனங்களுக்கு தவறான பொருளை கற்பித்து இந்த வசனம் மாற்றப்பட்ட வசனம், இது மாற்றிய வசனம் என்று யாரோ சிலர் செய்து விட்டார்கள் என்று தெரிகிறது. இந்த வசனங்கள் எல்லாம் அல்லாஹ்விடமிருந்து ஜிப்ரீல் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு வந்தவை. அவற்றை நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் எழுத்தாளர்களுக்கு அறிவித்தார்கள். எந்தெந்த வசனம் எங்கெங்கு வைக்கப்பட வேண்டும் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் கூற அதன்படி வைக்கப்பட்டது. 

திருக்குர்ஆனை ஒரே நூலாக தொகுக்கும் பணி நடைபெற்ற போது ஒவ்வொரு வசனமும் திருக்குர்ஆனின் வசனம் தானா என்று அக்காலத்தில் வாழ்ந்த ஒவ்வொரு நபித்தோழரிடமும் நன்கு விசாரிக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டு தொகுக்கப்பட்டது. இறைவன் இதைப் பற்றி இவ்வாறு கூறுகிறான். நிச்சயமாக இதனை தொகுப்பதும், இதனை ஓதிக் காட்டுவதும் எமது பொறுப்பாகும். (திருக்குர்ஆன் 75:18) 

அப்படி என்றால், இவர்களுக்குத் தெரிகின்ற இந்த நாஸிக் மன்சூக் வசனங்கள் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாதா? இந்தச் சட்டம் இந்தச் சட்டத்தை நீக்கிவிட்டது என்று அந்த வசனங்கள் வந்த போது நபி (ஸல்) அவர்கள் தெரிவித்ததாக திருக்குர்ஆனின் எழுத்தாளர்களும், அன்றைய நபித்தோழர்கள் எல்லாரும் ஏகமனதாகக் அறிவிக்கும் ஒரே ஒரு சான்றையாவது பி.ஜே போன்றோர்கள் கொண்டு வர முடியுமா? நபி (ஸல்) அவர்கள் கூறாத ஒரு கருத்தை இவர்கள் கூறுவதினால் அல்லாஹ்வின் மீதும் ரெசூலின் மீதும் இட்டுக்கட்டி கூறிய குற்றத்திற்கு ஆளாக நேரிடும். அல்லாஹ் நம்மை காப்பானாக. 

2) பி.ஜே எழுதியுள்ள வாதங்கள் எல்லாம் அப்படியே திருக்குர்ஆனுக்கு முந்தைய வேத வசனங்களில் உள்ள சட்டங்கள் திருக்குர்ஆனின் சட்டங்கள் மூலம் மாற்றப்பட்டுள்ளன என்பதற்கு அப்படியே பொருந்துவதைக் காணலாம். திருக்குர்ஆனுக்குள் மாற்றப்பட்ட, மாற்றிய வசனங்கள் உள்ளது என்பதற்குப் பொருந்தாது. 

3) திருக்குர்ஆனுக்கும் முந்தைய வேதங்களுக்கும் இடையில் குறைந்தது ஓரிரு ஆயிரம் ஆண்டுகள் இடைவெளி இருப்பதால் இச்சட்டம் மாற்றம் தேவைதான். ஆனால் இருபத்தி மூன்று ஆண்டுகள் என்பது குர்ஆனின் சட்ட மாற்றத்திற்கு தேவையில்லை. பி.ஜே கூறுவது போல், திருட்டுக்கு கையை வெட்டுதல் சட்டத்தை மக்காவில் இறக்காமல் மதினாவில் இறக்கியது நிலையான சட்டம்தான் திருக்குர்ஆனில் உள்ளது என்பதற்கும் மாறும் சட்டங்கள் திருக்குர்ஆனில் இல்லை என்பதற்கும் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். இவ்வாறே விபச்சாரத்திற்கு 100 சவுக்கடி தண்டனையும் நிலையான சட்டம் திருக்குர்ஆனில் இருப்பதனைக் காட்டுகிறது. இல்லை என்றால் மாக்காவின் சூழ்நிலைக்கு ஏற்ப சட்டத்தை ஏற்படுத்திவிட்டு மதீனாவில் அதனை ரத்து செய்து விட்டு நிலையான சட்டத்தைக் கொண்டு வந்திருக்கலாமே! தாய், குழந்தை உதாரணம், ஊரடங்கு உத்தரவு போன்ற உதாரணங்கள் திருக்குர்ஆனுக்கு முன்னர் வந்துள்ள வேதங்களின் வளர்ச்சிப் படிகளையும் அதிலுள்ள தற்கால சட்டம் திருக்குர்ஆனின் மூலம் மாற்றப்பட்டதையும் குறிக்கும். வரலாறு, வாக்குறுதி என்பவை சரீஅத் சட்டத்திற்கு பொருந்தாது. 

4) இதில் என்றென்றும் நிலைத்திருக்கும் கட்டளைகள் உள்ளன (98:4) என்று திருக்குர்ஆன் கூறுவதால் நிலையற்ற நாஸிக் மன்சூக் சட்டம் இல்லை என்பது தெரிகிறது. 

5) திருக்குர்ஆனில் நிக்கிய நீக்கப்பட்ட வசனங்கள் இருப்பதாக இருந்தால், அப்படியே நம்புகிறவர்க்கு திருக்குர்ஆனைப் படிக்கிற போது, இந்த வசனம் நீக்கிய நீக்கப்பட்ட வசனத்தில் இருக்குமோ என்ற சந்தேகம் எழ வாய்ப்புள்ளது. எனவே நாம் நீக்கப்பட்ட வசனத்தை நம்பி செயல்பட்டு மோசம் போய் விடக் கூடாதே என்ற தடுமாற்றத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும். இப்படிப்பட்ட ஒரு நிலையை அல்லாஹ் தன் திருமறைக்கு ஏற்படுத்தியுள்ளானா? (நவூதுபில்லாஹ்) 

6) திருக்குர்ஆனில் நீக்கிய நீக்கப்பட்ட வசனங்கள் உள்ளன என்று ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டால், நீக்கப்பட்ட வசனத்தின் அடிப்படையில் செயல்பட்ட ஒருவன் தன் அறியாமையின் காரணமாக வழிகெட வாய்ப்புள்ளது. திருக்குர்ஆன் அவரை வழிகெடுத்ததாக நம்ப வேண்டும். (நவூதுபில்லாஹ்) அல்லாஹ்வின் வேதம் மக்களை வழிகெடுக்கும் என்று பி.ஜே நம்புகிறாரா? 

7) நீக்கப்பட்டதாக தவறாக நம்பும் வசனங்களை நபி (ஸல்) அவர்கள் உடனுக்குடன் நீக்கியிருப்பார்களே. அப்படி அவர்கள் செய்யாததினால் அந்த வசனங்கள் திருக்குர்ஆனில் இல்லை என்பதை காட்டவில்லையா? நீக்கப்பட்டதாக நம்பும் வசனங்களை நபி (ஸல்) அவர்கள் ஏன் திருக்குர்ஆனில் நீக்காமல் வைத்திருக்க வேண்டும்? 

8) நபிமொழிகளில் பொய்யான நபிமொழிகள் உள்ளன. எனவே நாங்கள் நபிமொழிகளை நம்பத் தயாராக இல்லை. திருக்குர்ஆன் மட்டுமே உண்மை. அதில் எந்தத் தவறும் இல்லை. என்றும் வாதிக்கும் அஹ்லே குர்ஆன் காரர்கள், திருக்குர்ஆனிலும் இப்படிப்பட்ட நாஸிக் மன்சூக் குழப்பம் உள்ளதா? என்று தப்பான ஒரு எண்ணத்துக்கு வந்து திருக்குர்ஆனையும் கைவிட்டு விட்டு, அவர்கள் நாத்திகர்களாக மாறுவதற்கு இது வழிவகுக்கும். 

9) திருக்குர்ஆனில் 15:10 வசனம், திருக்குர்ஆனை நாமே இறக்கினோம்; இதனை நாமே பாதுகாப்போம் என்பதே உண்மை. எனவே, திருக்குர்ஆன் நாஸிக் மன்சூக்கிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. 

10) திருக்குர்ஆனின் ஒரு சட்டம் செய் என்றும் இதனையே ஒரு சட்டம் செய்யக்கூடாது என்றும் ஒரு கட்டளை ஓரிடத்தில் ஒரு விதமாகவும் இதையே மற்றொரு இடத்தில் வேறு விதமாகவும் கூறுகிறது என்றால் திருக்குர்ஆனில் முரண்பாடு இருக்கிறது எனலாம். திருக்குர்ஆன் 4:83 வசனம், அவர்கள் குர்ஆனை ஆழ்ந்து சிந்திக்கவேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்ததாக இருப்பின் நிச்சயமாக அவர்கள் இதில் பல முரண்பாடுகளைக் கண்டிருப்பார் என்று கூறுவதால், இந்த சட்டம் மாற்றங்கள் இல்லை என்பது தெளிவாகிறது. நாஸிக் மன்சூக் உண்டு என்போர் திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் இல்லை என்று நம்புவதாகும். 

11) திருக்குர்ஆனின் வசனங்கள் 10:64, 18:27, 6:34,116, அல்லாஹ்வின் வசனங்களை மாற்றுபவன் எவனுமில்லை என்று கூறுகிறது. சிலர் சட்ட மாற்றங்கள் உள்ளது என்று கூறலாம். அவர்களின் அக்கருத்துக்களைக் கொண்ட வசனங்கள் எதுவும் திருக்குர்ஆனில் இல்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.
Read more »

Jun 4, 2014

விபச்சாரமும், வெட்கக்கேடான செயலும். - (நாசிக், மன்சூக் திருக்குர்ஆனில் இல்லை.)


மாற்றிய வசனம் 24:2, மாற்றப்பட்ட வசனம் 4:15) 

பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

விபச்சாரம் செய்த பெண்களை மரணிக்கும் வரை வீட்டுக்காவலில் வையுங்கள் எனக் கூறும் வசனம் (4:15) அல்லாஹ் வேறு வழியைக் காட்டும் வரை தான் செல்லும் எனவும் கூறுகிறது. பின்னர் 24:2 வசனத்தில் வழியை இறைவன் காட்டினான். 

விபச்சாரம் செய்யும் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தண்டிக்கப்பட வேண்டும். கற்பு நெறி இருபாலாருக்கும் பொதுவானது. எனவே விபச்சாரம் செய்யும் நபர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இருவருக்கும் சமமான தண்டனை வழங்குமாறு கூறும் 24:2 வசனம் அருளப்பட்டவுடன் இச்சட்டம் மாற்றப்பட்டுவிட்டது. 

நம் விளக்கம்: 

4:16 வது வசனம் இவ்வாறு வருகிறது: 

உங்கள் பெண்களுள், வெளிப்படையான ஏதாவதொரு வெறுக்கத்தக்க செயலைச் செய்பவளுக்கெதிராக உங்களுள் நான்கு சாட்சிகளை அழைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அவர்கள் சாட்சியம் கூறினால், அவர்களுக்கு (அதாவது அந்தப் பெண்களை) மரணம் வரும் வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு (வேறு) ஏதாவதொரு வழியை ஏற்படுத்தும் வரை நீங்கள் அவர்களை (உங்கள்) வீடுகளில் தடுத்து வையுங்கள். 

24:2 வது வசனம் இவ்வாறு வருகிறது: 

விபச்சாரம் செய்பவள், விபச்சாரம் செய்பவன் ஆகிய (இருவர் மீதும் அக்குற்றச்சாட்டு நிரூபணமாகி விட்டால்) இருவருள் ஒவ்வொருவருக்கும் நீங்கள் நூறு கசையடி கொடுங்கள்....

திருக்குர்ஆனில் 4:15 வசனத்தின் சட்டத்தை பின்னர் வந்த 24:2 வசனத்தின் சட்டம் மாற்றி விட்டது என்று பி.ஜே கூறுகிறார். இதற்கு அவர் காட்டும் ஆதாரம் 4:15 வசனத்தின் அல்லாஹ் வேறு வழியைக் காட்டும் வரை தான் இச்சட்டம் செல்லும் என கூறுகிறது. பின்னர் 24:2 வசனத்தில் வேறு வழியை இறைவன் காட்டி விட்டதால் மாற்றபப்ட்டுவிட்டது என்று கூறுகிறார். 

1. இவருக்கு தெரிந்த இந்த ஆதாரம் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் போய் விட்டதா? அவர்கள் 24:2 வசனம் இறங்கும் போது 4:15 வசனத்தைக் காட்டி இது இதனை மாற்றிவிட்டது என்றும் 4:15 வசனத்தில் சொன்ன வேறு வழியை 24:2 வசனத்தில் காட்டி, முந்திய வசனத்தை இறைவன் ரத்து செய்து விட்டான் என்றும் கூறியதாக பி.ஜே நிரூபிக்க முடியுமா? 

2. 4:15,16 வசனங்களில் வெறுக்கத்தக்க, வெட்கக்கேடான செயல் என்றுதான் அல்லாஹ் கூறுகிறான். ஆனால் வசனங்களில் விபச்சாரம் என்று கூறுகிறான். 

3. வெட்கங்கெட்ட செயலுக்கும் (4:15) விபச்சாரத்துக்கும் (24:2) 4 சாட்சிகளைக் கேட்கும் சட்டம், தண்டனையைப் பொறுத்த அளவில் முன்னதற்கு 100 சவுக்கடி இல்லையே ஏன்? விபச்சாரத்திற்கு 100 சவுக்கடி கொடுப்பது ஏன்? இவ்விரண்டும் ஒன்றல்ல என்பதால் தான். 

விபச்சாரம் வெட்கக் கேடான செயல்தான். ஆனால் வெட்கக் கேடான செயல்கள் எல்லாம் விபச்சாரம் ஆகிவிடுமா? வெட்கக் கேடான செயல்கள் எல்லாம் விபச்சாரம் என்று பி.ஜே கருதினால் திருக்குர்ஆனில் வெட்கக் கேடான செயல் என்று வருமிடங்களில் விபச்சாரம் என்று பொருள் கொள்வாரா? விபச்சாரம் என்பது, ஒரு ஆண், தன் மனைவி அல்லாத வேறு ஒரு பெண்ணுடனோ, ஒரு பெண், தன் கணவன் அல்லாத மற்றவனுடனோ கொள்ளும் உடலுறவை மட்டும் குறிக்கும். ஆனால் வெட்கக் கேடான செயல் என்பது, விபச்சாரத்தையும் இன்னும் விரிவாகப் பல பொருள்களையும் தரும். எனவே இரண்டும் ஒன்றல்ல. 

ஒரு பெண் ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் விதத்தில் வெளியில் நடமாடுவதாக வைத்துக் கொள்வோம். இது வெட்கக் கேடான செயலா? விபச்சாரனமா? இன்று பெண்கள் கையில்லாத சட்டையும், குட்டைப்பாவாடையும் உடுத்திக் கொண்டு உலா வருவது வெட்கக் கேடான செயலா? விபச்சாரமா? இவ்வாறு விபச்சாரம் இல்லாத அதற்குக் குறைவான செயல்கள் எல்லாம் வெட்கக்கேடான செயல்களில் அடங்கும். 

திருக்குர்ஆன் 29:46 இல் தொழுகை வெட்கக் கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும் என்று வருகிறது. இதில் வெட்கக் கேடு என்பது விரிவான பொருள்களை தரும். விபச்சாரம் என்று பொருள் கொண்டால் விரிவான அந்த பொருள் விபச்சாரம் என்ற ஒன்று என்று சுருங்கி விடுகிறது. திருக்குர்ஆன் 53:32 வசனம் வெட்கக் கேடானவற்றிலிருந்து விலகுங்கள் என பற்பல வெட்கக் கேடுகளை கூறுகிறது. இதில் விபச்சாரம் என்று பொருள் கொண்டால், அந்த விரிவான பொருள் ஒன்று என்ற அளவில் சுருங்கி விடுகிறது. 

7:29 - அவர்கள் வெட்கக் கேடானதை செய்யும் போது எங்கள் முன்னோர்களை இப்படித்தான் செய்யக் கண்டோம். அல்லாஹ்வே இதை எங்களுக்கு கட்டளையிட்டான் என்று கூறுகின்றனர். 

இதில் வெட்கக் கேட்டுக்கு விபச்சாரம் என்று பொருள் கொள்ள முடியுமா? 33:31 நபியின் மனைவியரே! உங்களில் யாரேனும் மேலான நம்பிக்கைக்கு மாற்றமான வெட்கக் கேடானதைச் செய்தால் அவருக்கு இருமடங்கு தண்டனை வழங்கப்படும். இது விபச்சாரம் ஆகுமா? 

7:81 இல் லூத் நபி உலகில் உங்களுக்கு முன் யாரும் செய்திராத வெட்கக் கேடான காரியத்தையா செய்கிறீர்கள் என்று தன் சமுதாயத்திடம் கேட்டார். இதில் வெட்கக் கேடு என்பது ஓரினப் புணர்ச்சியைக் (ஆணும் ஆணும்) குறிக்கும். இதை விபச்சாரம் என்று பி.ஜே கருதுகிறாரா? 

இதே சம்பவம் 29:29 வந்து ஆண்களின் ஓரினப் புணர்ச்சியைக் குறிக்கிறது. திருக்குர்ஆன் 65:2 இல், அவர்கள் (தலாக் கூறப்பட்ட பெண்கள்) பகிரங்கமாக ஒரு அருவருக்கத்தக்க செயலைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள். அவர்களும் தாமாகவும் வெளியேற வேண்டாம் என்று வருகிறது. 

திருக்குர்ஆன் 4:15 வது வசனம், மானக் கேடான செயலை செய்த பெண்களை மரணிக்கும் வரை வீட்டுக்காவலில் வையுங்கள் என்று வருகிறது. 65:2 வசனம் தலாக் கொடுக்கப்பட்ட பெண்கள் மானக்கேடான செயலை செய்தால் வீட்டை விட்டு வெளியேற்றுங்கள் என்று வருகிறது. ஒரே செயல் அதாவது வெட்கக் கேடான செயலைத் தான் இரு இடங்களிலும் பெண்கள் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஓரிடத்தில் 4:15 இல் வெளியேற்ற வேண்டாம் எனவும் 65:2 வெளியேற்றவும் என்றும் வருவது ஏன்? அவ்விரு இடங்களிலும் வெட்கக் கேடு என்று பொருள் கூறப்பட்டிருப்பதற்கு பி.ஜே விபச்சாரம் என்று பொருள் கொள்கிறார் என்றால் அல்லாஹ் இப்படி வெவ்வேறு தீர்ப்பை கூறுவது ஏன்? 

அடுத்து 4:15-16 வசனங்களில், 

உங்கள் பெண்களில் வெளிப்படையான வெறுக்கத்தக்க செயலைச் செய்பவர்களுக்கு எதிராக 4 பேர் சாட்சி கூறினால் மரணம் வரும் வரை அல்லது அல்லாஹ் வேறு வழியை ஏற்படுத்தும் வரை நீங்கள் அவர்களை (உங்கள்) வீடுகளில் தடுத்து வையுங்கள் என்றும் உங்களுள் இரண்டு ஆண்கள் வெறுக்கத்தக்க செயலைச் செய்தால் நீங்கள் அவ்விருவரையும் துன்புருத்துங்கள், அவ்விருவரும் பாவமன்னிப்புக் கோரி திருந்தி விடுவார்களாயின் அவ்விருவரிடமும் கண்டும் காணாதது போன்று நடந்து கொள்ளுங்கள் என்றும் வருகிறது. 

1. இரண்டிலும் வெறுக்கத்தக்க செயல் என்றுதான் வருகிறது. விபச்சாரம் என்று அல்லாஹ் கூறவில்லை. எனவே இது விபச்சாரம் இல்லை என்றும் சமுதாயத்திற்கும், அமைதிக்கும் தீங்கு செய்யும் செயல் என்றும் விபச்சாரத்திற்கு குறைந்த ஒழுக்கக் கேடான வெறுக்கத்தக்க செயல் என்றும் தெரிகிறது. 

2. வெறுக்கத்தக்க செயலுக்கு பெண்களுக்கு சாட்சிகள் தேவை. சுதந்திரமாக அவர்கள் வீட்டிலிருந்து வெளியேறத் தடை என்ற தண்டனை வரையறை செய்யப்பட்டுள்ளது. 

3. ஆண்கள் இருவர் வெறுக்கத்தக்க செயலைச் செய்தால் அவர்களைத் துன்புறுத்த வேண்டும். அவர்கள் பாவ மன்னிப்பு கோரி திர்ந்தினால் விட்டுவிட வேண்டும் என்று இதிலும் தண்டனை வரையறை செய்யப்பட்டுள்ளது. 

4. உங்கள் பெண்கள் என்றும் இரண்டு ஆண்கள் என்றும் அச்செயல் பிரித்து கூரபப்ட்டுள்ளது. 

5. வெட்கம் கெட்ட ஒரு செயலுக்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு வேறு தண்டனை கூறப்பட்டுள்ளது. 

6. பெண்ணுக்கு மரணம் வரும் வரை அல்லது அல்லாஹ் வேறு வழியைக் காட்டும் வரை என்று கூறி, ஆணுக்கு அப்படி ஏதும் கூறாதது ஏன்? 

ஆனால், 24:3-4 வசனங்களில் 

1. விபச்சாரம் என்று அச்சொல் கூறப்பட்டுள்ளது. 

2. விபச்சாரி விபச்சாரனுடனோ, இணை வைப்பவனுடனோ உடலுறவு கொள்வாள் என்றும் விபச்சாரன் விபச்சாரியுடனோ, இணை வைப்பவனுடனோ உடலுறவு கொள்வான் என்றும் அச்சொல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 

3. 100 சவுக்கடி என்று ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே தண்டனை கூறப்பட்டுள்ளது. 

4. இத்தண்டனையை நம்பிக்கை கொண்டவர்களின் முன்னிலையில் நிறைவேற்ற வேண்டும். 

5. தண்டனையை நிறைவேற்றுவதில் இறக்கம் காட்டக் கூடாது. என்றும் தண்டனை தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. 

4:15 வது வசனம்
24:3,4 வது வசனம்
1.வெட்கக் கேடான செயல்
1.விபச்சாரம்
2.உங்கள் பெண்கள் என்றும், இரு ஆண்கள் என்றும் தனித்தனியே வருகிறது.
2.பெண்ணும் ஆணும் உடலுறவு கொள்ளுதல்
3.வீட்டை விட்டு வெளியேறத் தடை, துன்புறுத்துதல், பாவமன்னிப்பு
3.100 சவுக்கடி
4.4 சாட்சிகள் வேண்டும் என்று மட்டும் வருகிறது. 100 சவுக்கடி இல்லை.
4.4 சாட்சிகளை கொண்டு வராவிட்டால் அவ்வாறு அவதூறு கூறியவர்களுக்கு 80 சவுக்கடி.
5.இருவேறு தண்டனை
5.இருவருக்கும் ஒரே தண்டனை
6.உடலுறவு பற்றிக் கூறப்படவில்லை
6.உடலுறவு கொள்ளுதல் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, 4:15-16 வது வசனம் 24:2-3 வசனம் ஆகிய இவ்விரு வசனங்களிலும் சொல்லப்பட்டவை இருவேறு விசயங்கள் என்பதால் முந்தைய சட்டத்தை பிந்திய சட்டம் நீக்கி விட்டது என்று கூறுவதற்கில்லை.
Read more »

படைபலம் பற்றிய வசனங்கள்! (நாசிக், மன்சூக் திருக்குர்ஆனில் இல்லை.)


(மாற்றிய வசனம் 8:66 ; மாற்றப்பட்ட வசனம் 9:41) 

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 203 இல் குறைவாக இருந்த போதும் போர் கடமையா? என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

எண்ணிக்கை, படைபலம் குறைவாக இருந்தாலும் போரிடுவது கடமை என்று இவ்வசனம் (திருக்குர்ஆன் 9:41) கூறுகிறது. 

8:66 வசனம் எதிரிகளின் பலத்தில் பாதியளவு இருந்தால்தான் போர் கடமை எனவும் அதை விடக் குறைவாக இருந்தால் போர் கடமையில்லை எனவும் கூறுகிறது. இவ்விரண்டும் முரண்பாடு என எண்ணக் கூடாது.

ஏனெனில் திருக்குர்ஆன் 8:66 வசனத்தில் இப்போது அல்லாஹ் உங்களுக்கு எளிதாக்கி விட்டான் என்ற சொற்றொடரைக் கூறி விட்டுத் தான் எதிரிகளின் பலத்தில் பாதி இருக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகிறான். எனவே ஆரம்பத்தில் இருந்த நிலை இதன் மூலம் மாற்றப்பட்டது என்பதை அறியலாம். 

எனவே படைபலம் எவ்வளவு குறைவாக இருந்தாலும் போர் செய்யவேண்டும் என்பது முன்னர் இருந்த சட்டமாகும். குறைவாக இருந்தாலும் போர் செய்ய வேண்டும் என இவ்வசனம் கூறுவதாக வைத்துக் கொண்டாலும் குறைவு என்பது எவ்வளவு என்பதைக் கூறவில்லை. அந்த அளவை திருக்குர்ஆனின் 8:66 வசனம் விளக்குகிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம். 

நம் விளக்கம்: 

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இவ்வசனம் அவ்வசனத்தின் மூலம் மாற்றப்பட்டுவிட்டது என்று சொன்னதாக அனைத்து நபித் தோழர்களும் கூறிய சான்றைக் கொண்டுவராதவரை, மற்றவர்கள் இவ்வாறு கூறுவது தத்தம் சுயவிளக்கமேயாகும். திருக்குர்ஆன் 9:41வது வசனம் (நம்பிக்கை கொண்டவர்களே) நீங்கள் நலிவாகவோ, வலுவாகவோ இருப்பினும் (அறப்போருக்கு) புறப்படுங்கள். நீங்கள் உங்கள் பொருள்களையும் உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் வழியில் அறப்போர் செய்யுங்கள். நீங்கள் அறிந்திருந்தால் இது உங்களுக்கு மிக்க நன்மையாகும் என்று கூறுகிறது. இதில், 
  • ஈமானில் நலிவோ, வலுவோ இருப்பினும் போர் செய்க 
  • உங்கள் பொருள்கள், உயிர்கள் ஆகியவற்றை கொண்டு போர் செய்க 
  • அல்லாஹ்வின் வழியில் அறப்போர் செய்க 
  • இதுவே உங்களுக்கு நன்மை என்று பொத்தாம் பொதுவாக கூறுகிறது. 
8:66 இல், அதைவிடக் குறைவாக இருந்தால் போர் கடமை இல்லை. எனவும் இந்த வசனம் கூறுகிறது என்று பி.ஜே கூறுவது தவறாகும். அந்த வசனம் அப்படி எதுவும் கூறவில்லை. மேலும் வசனம் பாதியளவு இருந்தால் தான் போர் கடமை எனவும் கூறவில்லை. காரணம் முதற்போராம் பதர் யுத்தத்தில் தங்களை விட மூன்று மடங்கு எதிரிகளுடன் முஸ்லிம்கள் போரிட்டுள்ளனர். 

உறுதியான ஈமான் கொண்டவர்கள் 20 பேர் நிராகரிப்போர் 200 பேரையும், 100 பேர் ஓராயிரம் பேரையும் வென்று விடுவார்களே என்று வலுவான நிலைக்கு ஒரு அளவையும்,

8:67 இல், ஈமானில் பலவீனம் இருந்தால் உறுதியாக நிற்கக்கூடிய 100 பேர், காபிர்கள் 200 பேரையும், 200 பேர் இருந்தால் காபிர்கள் 1000 பேரையும் வென்று விடுவர் என்று நலிவான நிலைக்கு ஒரு அளவையும் அல்லாஹ் எடுத்துக் கூறுகிறான். 

அதாவது, நம்பிக்கையாளர்கள் நம்பிக்கையின் உயர் நிலையை அடைந்தால் ஒருவர் நிராகரிப்போரில் பத்து பேரை வெல்வர். ஆனால் இப்போது நம்பிக்கையின் உயர் நிலையை அடையாததால் நம்பிக்கையாளர்கள் காபிர்கள் இவரையே வெல்ல முடியும் என அடுத்த வசனம் கூறுகிறது. ஆக, நம்பிக்கையாளரின் குறைந்த பட்ச அளவையும் அதிகபட்ச அளவையும் இவ்விருவசனங்களும் வரையறை செய்துள்ளன என்பதே உண்மை. 

நம்பிக்கைக்கு ஏற்றவாறு ஆற்றலும் வளர்கிறது. 

ரோமானியர்கள் பாரசீகர் ஆகியோருடன் செய்த போர்களில் முஸ்லிம்கள் 10 மடங்கு என்ன 80 மடங்கு, 100 மடங்கு கொண்ட பகைவர்களைத் தோற்கடித்தனர். ஏனென்றல் அந்த முஸ்லிம்கள் நபித் தோழர்களின் காலத்தையும் நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் புதுப்புது அடையாளங்களையும் கண்டதனால் அவர்களின் நம்பிக்கை அவ்வளவுக்கு வளர்ந்திருந்தது. எனவே 9:41; 8:67 ஆகிய வசனங்கள் ரத்து, ரத்து செய்யப்பட்ட வசனங்கள் அல்ல என்பதை அறிகிறோம்.
Read more »

Jun 2, 2014

வாரிசுரிமைச் சட்டமும் மரண சாசனமும் (நாசிக், மன்சூக் திருக்குர்ஆனில் இல்லை)


(மாற்றிய வசனங்கள் 4:11,12; 4:178

மாற்றப்பட்ட வசனங்கள் 2:180, 2:240) 

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 45 இல் மரண சாசனம் என்ற தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

வாரிசுரிமை சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் மரண சாசனம் செய்வது கடமையாக்கப்பட்டிருந்தது. (திருக்குர்ஆன் 2:180, 2:240) 

பின்னர் எந்தெந்த உறவினர்க்கு எவ்வளவு சொத்துக்கள் கிடைக்கும் என்ற சட்டம் (4:11-12, 4:176) அருளப்பட்டபின் மரண சாசனம் எழுதுவது கடமை இல்லை என்று ஆகிவிட்டது. 

மரண சாசனம் செய்யும் கடமைதான் நீக்கப்பட்டுள்ளது. ஒருவர் விரும்பினால் தமது சொத்துக்களை குறித்து மரண சாசனம் செய்வதற்கு அனுமதி உள்ளது. 

திருக்குர்ஆன் 4:11-12 வசனங்களில் பாகப் பிரிவினை பிரிப்பதற்கு முன் மரண சாசனத்தை நிறைவேற்ற வேண்டும் என்று குறிபிடப்படுவதிலிருந்து இதனை அறியலாம். 

நம் விளக்கம்: 

அவர் குறிப்பிட்ட வசனங்கள் பி.ஜே யின் மொழியாக்கத்தின் படி கீழ்வருமாறு உள்ளது: 

உங்களில் ஒருவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அவருக்கு மரணம் நெருங்கும் போது பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும் சிறந்த முறையில் மரண சாசனம் செய்வது கடமையாக்கப்பட்டுள்ளது. (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை. (2:280) 

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் ஒரு வருடம் வரை அவர்கள் வெளியேற்றப்படாது, வசதிகள் வழங்கப்படவேண்டும். என மரண சாசனம் செய்யவேண்டும். தங்கள் விசயத்தில் நல்ல முடிவை மேற்கொண்டு அவர்களாக வெளியேறினால் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (2:240) 

இரண்டு பெண்களின் பாகம்.... (இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் நிறைவேற்றிய பின்னரே... இது அல்லாஹ் விதித்த கடமை. (4:11) 

உங்கள் மனைவியருக்கு குழந்தை..... செய்யப்பட்ட மரண சாசனம் மற்றும் கடனுக்குப் பிறகே பாகம் பிரிக்கப்பட வேண்டும்.... இது அல்லாஹ்வின் கட்டளை.....(4:12) 

கலாலா பற்றி (முஹம்மதே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு... நீங்கள் வழி தவறி விடாமல் இருக்க அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் அறிந்தவன். (4:176) 

1) ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள், 4:12-13 வசனம் இறங்கும் போது வசனத்தை குறிப்பிட்டு கடமை தான் நீக்கப்பட்டுள்ளது; ஆனால் அனுமதி உள்ளது என்று கூறவில்லை. திருக்குர்ஆனில் ஒரு வசனம் முற்றிலுமாக நீக்கப்பட்டாலோ அல்லது பி.ஜே சொல்வது போல் மரண சாசனம் செய்யும் கடமை தான் நீக்கப்பட்டுள்ளது, ஒருவர் விரும்பினால் அந்த சொத்துக்களைக் குறித்து மரண சாசனம் செய்வதற்கு அனுமதி உள்ளது என்றிருந்தாலோ அது குறித்து நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள். அவ்வாறு கூறவில்லை. எனவே, பிறர் எவரும் அது பற்றிக் கூறுவதற்கு உரிமையோ, தகுதியோ, இல்லை. ஒரு சில நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியிருக்கிறார்கள் என்று எடுத்துக் காட்டினாலும் ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஏன் என்றால் திருக்குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் இது திருக்குர்ஆனின் வசனம் தானா என்று நன்கு விசாரிக்கப்பட்டு, அதற்குரிய ஆதாரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தொகுக்கப்பட்டது. எனவே திருக்குர்ஆனின் ஒரு வசனம் கூறுகின்ற ஒரு சட்டம் பற்றி அனைத்து நபித்தோழர்களின் ஏக மனதான கருத்து இருந்தால் மட்டுமே நீக்கப்பட்ட வசனம் என்று ஏற்றுக் கொள்ளவேண்டும். 

2) ஒருவருக்கு மரணம் நெருங்கும் போது – என்றால் இந்த வசனத்துக்கு முன்பின் வசனங்களில் வந்துள்ளது போல் போரின் போது என்று பொருள்படும். அல்லது ஒரு விபத்தின் போது என்றோ, எதிர்பாராத நோயினாலோ எதிர்பாராத இடத்தில் வந்து மரணம் நெருங்கும் போது அவர் கூறும் இறுதி விருப்பம் என்று பொருள் கொண்டால் அப்போது வஸிய்யத் செய்வது கடமையாகி விடுமே தவிர அது நீக்கப்பட்டதாகாது. எப்படி என்றால் அவர் தான் வாங்கிய கடன், தன்னிடம் கடன் வாங்கியவர்கள், தான் செய்யும் தானதருமம் பற்றியும் அந்த வஸிய்யதில் கூறுவது கட்டாயக் கடமையாகும். 

3) 2:181 வசனம் பி.ஜே கூறுவது போல ஏதோ ஒரு வகையில் நீக்கப்படுகிறது என்றால் 4:12,13 வசனத்தில் இது கடமையில்லை. ஆனால் அனுமதி உள்ளது என்று கூறப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு அந்த வசனத்தில் கூறப்படவில்லை. 

4) 4:12 வசனத்தில், பாகப்பிரிவினை பற்றிக் கூறிய பின்னர் (இவையாவும்) அவர் செய்த மரண சாசனந்த்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே (நிறைவேற்ற வேண்டும்) என்றும் (இது) அல்லாஹ் விதித்த கடமை என்றும் அல்லாஹ் கூறுகிறான். 

4:12 வசனத்தில் அபாகப்பிரிவினை யார் யாருக்கு எவ்வளவு என்று கூறிய பின்னர்.... செய்யப்பட்ட மரண சாசனம் (வஸிய்யத்) மற்றும் கடனுக்குப் பிறகே (பாகம் பிரிக்கப்பட வேண்டும்). (இவையனைத்தும் யாருக்கும்) பாதிப்பு ஏற்படாத வகையில் செய்யப்பட வேண்டும். இது அல்லாஹ்வின் கட்டளை என்று அல்லாஹ் கூறுகிறான். (இது பி.ஜே யின் மொழிபெயர்ப்பாகும்) 

இந்த இரு வசனங்களிலும் வஸிய்யத் – மரண சாசனம் கடைமை என்றுதான் கூறுகிறது. அனுமதி என்று கூறவில்லை. மேலும் மரண சாசனத்தை நிறைவேற்றிய பின்னர் தான் பாகப் பிரிவினை செய்ய வேண்டும் (4:12-13) என்று கூறுவதிலிருந்து மரண சாசனம் வசனம் நீக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.

5) 2:180 வது வசனத்தில், உங்களில் ஒருவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அவருக்கு மரணம் நெருங்கும்போது போற்றோருக்குக்காகவும் உறவினருக்காகவும் சிறந்த முறையில் மரண சாசனம் செய்வது கடமையாக்கபப்ட்டுள்ளது. (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை என்று இறைவன் கூறுகிறான். 

· இந்த வசனத்தில் மனைவி மக்களைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை.

· பெற்றோரும் உறவினரும் மட்டும் கூறப்பட்டுள்ளனர்.

ஏன், நான் முன்பே கூறியது போல் போருக்கு செல்பவர்களுள் பெரும்பாலார் மணமுடிக்காத இளைஞர்கள். அவர்கள் வெற்றியோ, வீர மரணமோ அடையலாம். வீர் மரணம் அடைந்தால் அவர்களுடைய பெருஞ்செல்வம் பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் பிரிவினை சட்டத்தின்படி பிரித்துக் கொடுக்கவேண்டும். 

எனவே இவ்வசனம் பாகப்பிரிவினைக்குரிய கட்டளைகளினால் எவ்வகையிலும் ரத்துச் செய்யப்படவில்லை. இரண்டு சூழ்நிலைகளிலும் இத்தகு வஸிய்யதிற்கான கட்டாயம் ஏற்படுகின்றது. அவற்றுள் ஒன்று, இவ்வசனத்தில் கூறப்பெற்றது போன்று அதிகமான செல்வம் இருத்தலாகும். மற்றொன்று இவ்வசனத்திற்கு முன்னுள்ள வசனங்களிலிருந்து தெரிகின்ற (போர்ச்) சூழ்நிலையாகும். அதாவது இவ்வசனத்திற்கு முன்னுள்ள 155, 181 ஆகிய இரு வசனங்களிலும் போர் குறித்துக் கூறப்பெற்றுள்ளது. இவ்வசனதிற்குப் பின்னுள்ள 191 வது வசனத்திலும் இதனை அடுத்துள்ள வசனங்களிலும் போர் குறித்தே கூறப்பெற்றுள்ளது. எனவே, இங்கு போருக்குரிய கட்டளைகளைக் குறித்தும், இதற்கு நிகரான மற்ற நிலைகளைக் குறித்தும் கூறபெற்றுள்ளது. பொதுவாக போரில் வாலிபர்களே பங்கேற்கின்றனர். இவர்களுக்குப் பிள்ளைகள் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அவர்கள் சிறு குழந்தைகளாகவே இருப்பர். எனவேதான் பிள்ளைகள் குறித்துக் கூறாமல் பெற்றோர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும், வஸிய்யத் செய்யுமாறு கட்டளையிடப்பட்டுள்ளது. அதிகமான செல்வத்தைப் பெற்ற ஒருவர், (போர்க்களம் போன்ற) ஆபத்தான் இடத்தை நோக்கிச் செல்லும் போது, தமது உறவினர்களிடம், எனது மரணத்திற்குப் பிறகு நியாயமான முறையில் எனது செல்வம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்று வஸிய்யத்துச் செய்து விடுதல் வேண்டும். (ஆதாரம்: அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் தர்ஜுமா, 2:181 வசனத்தின் அடிக்குறிப்பு எண் 74)
Read more »

கிப்லா மாற்றம் - (நாசிக், மன்சூக் திருக்குர்ஆனில் இல்லை.)


மாற்றிய வசனங்கள் 2:142-145; 

மாற்றப்பட்டது புகாரி ஹதீஸ் எண் 399, 7252) 

பி.ஜே மொழியாக்கம் இரண்டாம் பதிப்பில் திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 39 இல் கிப்லா மாற்றம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்: 

திருக்குர்ஆனில் 2:142 முதல் 2:145 வரை உள்ள வசனங்களில் தொழுகையில் முன்னோக்கும் திசை மாற்றப்பட்ட செய்தி கூறப்படுகிறது என்றும், 

முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுவது குறித்து எந்தக் கட்டளையும் திருக்குர்ஆனில் இல்லை.... ஆனால் புகாரி (399, 403, 4686, 4644, 4488, 4490, 4491, 4492, 4493, 4494, 7251, 7252) ஆகிய ஹதீஸ்களிலும் காணப்படுகிறது. 

நம் விளக்கம்: 

திருக்குர்ஆனில் மாற்றிய சட்டங்கள், மாற்றப்பட்ட சட்டங்கள் உள்ளன என்று தவறாக நம்புவோர்க்கு கிப்லா மாற்றம் பற்றிய வசனம் அத்தகு கொள்கை தவறாகும் என்பதை தெளிவாக விளக்குகிறது. 

அல்லாஹ்வுக்கு கிப்லாவை 17 மாதங்களுக்குப் பிறகு மாற்றப் போவதும் நன்கு தெரியும். திருக்குர்ஆனில் ரத்து செய்யப்பட்ட சட்டமோ, ரத்து செய்த கட்டளையோ இருக்கக் கூடாது என்று இறைவன் விரும்புகிறான். நிலையான மாறாத சட்டங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது அவனது விருப்பமாகும். எனவே, நிலையற்ற 17 மாதங்களுக்கு மட்டும் உரிய தற்காலிகமான சட்டத்தைப் பற்றி திருக்குர்ஆனில் கூறவில்லை. மாறாக, நிலையான சட்டமாகிய மக்காவை நோக்கி தொழுவது பற்றித்தான் திருமறையில் கூறியுள்ளான். 

இதில் வேடிக்கை என்னவென்றால், கிப்லா மாற்றமும், நாசிக் மன்சூக் எனும் நீக்கிய, நீக்கப்பட்ட வசனங்களில் அடங்கும் என்று பி.ஜே போன்றோர் நம்புகின்றனர். திருக்குர்ஆனில் இருவகை வசனங்களும் இல்லை என்று தெரிந்தும் திருக்குர்ஆனில் நாசிக் மன்சூக் உள்ளது என்பதற்கு இதையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர். அதாவது, பைத்துல் முகத்தஸை நோக்கி நபி (ஸல்) அவர்கள் தொழுதது நபிமொழி புகாரியில் காணப்படுகிறது. தொழும் திசையை மக்காவை நோக்கி திருப்புவீராக என்ற கட்டளை திருக்குர்ஆனில் காணப்படுகிறது. 

ஒரு செய்தி நபிமொழியிலும் அது பற்றிய கட்டளை திருக்குர்ஆனிலும் காணப்படும் போது அது எப்படி திருக்குர்ஆனில் மாற்றப்பட்ட சட்டமும் மாற்றிய சட்டமும் உள்ளன என்று கூறமுடியும்? 

எனவே, இந்த கிப்லா மாற்றம் சம்பவம் திருக்குர்ஆனில் நாசிக் மன்சூக் இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டக் கூடியதாகும். 

ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாஸிக் மன்சூக் வசனம் என்று ஏதாவது ஒரு சட்டத்தைப் பற்றி கூறியதாக ஒரு சான்றை காட்டாதவரை இது மாற்றப்பட்ட சட்டம், இது மாற்றிய சட்டம் என்று கூறும் தகுதியும், உரிமையும் யாருக்கும் இல்லை.
Read more »

May 30, 2014

மது படிப்படியாக தடை செய்யப்பட்டதா? (நாசிக், மன்சூக் - திருக்குர்ஆனில் இல்லை.)


மாற்றிய வசனம் 5:90,91; மாற்றப்பட்ட வசனம் 2:219;4:43) 

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 116 இல் போதையாக இருக்கும் போது என்னும் தலைப்ப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

முதலில் அரபு மக்களுக்கு குடி தடுக்கப்படாமல் இருந்தது. (திருக்குர்ஆன் : 16:67) பின்னர் படிப்படியாக இது குறித்து தடைகள் இறங்கின. 

போதையாக இருக்கும் போது தொழக்கூடாது என்ற கட்டளை வந்தது. (திருக்குர்ஆன்:4:43) பிறகு குடிக்காமல் இருப்பதே நல்லது என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது (திருக்குர்ஆன்:2:219) அதன் பிறகு அறவே போதை கூடாது என்று முழுமையாகத் தடை செய்யப்பட்டது. (திருக்குர்ஆன்: 5:90-91) என்று எழுதியுள்ளார். 

நம் விளக்கம்: 

திருக்குர்ஆன் 5:90-91 வசனம், குடிக்கவே கூடாது என்ற சட்டத்தின் மூலம் அதற்கு முன்னர் வந்த குடி பற்றிய பிற சட்டங்களை ரத்து செய்து விட்டது என்றால் இதனைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, நபித் தோழர்கள் அனைவரும் கூறும் சான்று ஒன்றை உலகில் யாராவது எடுத்துக் காட்ட முடியுமா? முடியாது. 

குடிப்பழக்கம் படிப்படியாக குறைக்கப்பட்டு ஒரு கட்டத்தில் முழுமையாக தடை செய்யப்பட்டது என்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களே கூறாதிருக்கும் போது அவர்களுக்குத் தெரியாத ஒன்று இவர்களுக்குத் தெரிந்து விட்டதா? இது பற்றிய சட்டம் இஸ்லாம் புதிதாக அறிமுகம் ஆகும் ஒரு நாட்டில் இப்படித்தான் படிப்படியாக குறைக்கப்பட வேண்டுமா? அல்லது ஒரேயடியாக 5:90-91 வது வசனத்தின் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமா? 5:90-91 வசனமே நடைமுறைக்கு வரும் என்றால், அரபு நாட்டுக்கும் பிற நாட்டுக்கும் பாகுபாடு காட்டியது ஆகாதா? 

அரபு மக்கள் குடியில் மட்டுமா அப்படி இருந்தார்கள். விபச்சாரம், வட்டி போன்ற இதர தீய செயல்களிலும் எப்போதும் அப்படித்தானே இருந்தார்கள். அந்தத் தீய பழக்கங்களும் படிப்படியாகக் குறைக்கப்பட்டு ஒரு கட்டத்தில் முழுமையாக நீக்கப்பட்டதா? அதற்கு பி.ஜே கைவசம் ஆதாரங்கள் உண்டா? என்று பல கேள்விகள் எழும்!

பி.ஜே மேலே காட்டிய வசனங்கள் எல்லாம் அவர் கூறுவது போல் படிப்படியாக குடியைக் குறைக்கக் கூறியது அன்று. திருக்குர்ஆன் 16:68 - ஐக் காண்போம். திருக்குர்ஆன் 16:66-70வசனங்கள். 

1. மழை நீர் 2. பால் 3. கனிரசம் - உணவு . 4.தேன் பற்றிக் கூறப்பட்டுள்ளது. எனவே இது வெறும் மது பற்றிய போதனை இல்லை என்று தெளிவாகிறது. அதிலும். 

பேரீச்சை மற்றும் திராட்சைக் கனிகளிலிருந்து மதுவையும் அழகிய உணவையும் தயாரிக்கிறீர்கள். விளங்கும் சமுதாயத்துக்கு இதில் சான்று உள்ளது என்று அவ்வசனம் கூறுகிறது. மதுப்பழக்கம் என்றால் மதுவை மட்டும் கூறியிருக்க வேண்டும். அத்துடன் அழகிய உணவையும் தயாரிக்கிறீர்கள் என்று கூறப்பட்டுள்ளதால் குடிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று விளங்குகிறது. 

மழை நீரைப்பற்றிக் கூறும் போது, செவியேற்கும் மக்களுக்கு இதில் அடையாளம் உள்ளது என்றும், பாலைப் பற்றி கூறும் போது இதில் படிப்பினை உள்ளது என்றும், கனிரசத்தையும் அதன் உணவைப்பற்றியும் கூறும் போது செயலாற்றும் மக்களுக்கு இதில் அடையாளம் உள்ளது என்றும், தேனைப்பற்றிக் கூறும் போது செயலாற்றுபவர்களுக்கு இதில் ஓர் அடையாளம் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 

எனவே, இது மதுவுடன் சம்பந்தமில்லாதது என்று விளங்குகிறது. திருக்குர்ஆனில் சொர்க்கத்தில் நீராரும், பாலாரும், மது ஆறும், தேனாறும் ஓடுவதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே மறுமையில் சொர்க்கத்தில் ஓடும் அந்தந்த ஆறுகளிலிருந்து நீரையும், பாலையும், மதுவையும், தேனையும் மறுமையில் அருந்துபவர்கள் இவ்வுலகில் ஹலாலான நீரையும், பாலையும், பழரசத்தையும், உணவையும், தேனையும் அருந்தியிருக்க வேண்டும் என்பதால் 16:67 இல் கூறப்பட்டது ஹலாலானது என்று விளங்குகிறது. ஹலாலான கனிரசம் என்றும், மது இல்லை என்றும் விளங்குகிறது. 

திருக்குர்ஆன் 16:67 வது வசனத்தின் அடிக்குறிப்பில், 

இங்கு ஸகர் (மது) என்று குறிப்பிட்டிருப்பது போதை தரும் குடிப்பையல்ல; இது நபீது என்ற பானத்தையாகும். மது தயாரிப்பதற்காக பழச்சாற்றைப் புளிக்க வைக்கிறார்கள். ஆனால் நபீது தயாரிக்கும் விதம் வேறு. பழரசங்களைக் கொதிக்க வைத்து, அது மூன்றிலொரு பாகமாக வற்றியதும் நபீது கிடைக்கிறது. இது அனுமதிக்கப்பட்டிருக்கிறது. பெரியோர்கள் இதை அருந்தி இருக்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. 

ஸக்ரு என்பது பசி தீர்க்கும் உணவு என்று பொருள்படும் என அபூ உபைதா சொல்லியிருப்பதாக தப்ஸீர் காஸினில் குறிப்பிடப்பட்டிருக்கிறது (காஸின்: குர்துபீ, நஸயீ; மஆரிப்) 

முஸ்லிம் மன்னர்கள், அப்பாஸிய கலீபாக்கள் குடிக்கிறார்கள் என்று மேலை நாட்டினர் சித்தரித்துக் காட்டுவதெல்லாம் நபீது அருந்திக் கொண்டிருந்ததைத்தான். 

நபீது போதை தருவதல்ல; அதை அருந்துதல் ஹலால் என்று இமாமுல் அஹ்லமும், ஹஸ்ரத் அபூயூஸுபும் அறிவித்திருக்கிறார்கள். (நஸபீ - மதாரிக் - பக்கம். 161 மூன்றாம் பாகம்) ஆதாரம் : அப்துல் வஹ்ஹாப் குர்ஆன் தர்ஜுமா 16:67 வது வசனத்தின் அடிக்குறிப்பு எண் 153. 

பேரீச்சை மற்றும் திராட்சைப் பழங்களிலிருந்து பிழியப்படும் ரசங்களை ஆகுமாக்கப்பட்ட (ஹலாலான) வகையில் பருகுவதை இத்திருவசனங்கள் குறிப்பதாக ஹஸ்ரத் இப்னு ஜுபைர், நகஈ, சஅபீ, அபூதவ்ர் ஆகியோர் கூறுகின்றனர். (தப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன் 61:7 வசனத்தில் விரிவுரை) 

திராட்சை என்பதற்கு லத்தீன் மொழியில் என்ன சொல்லோ அதன் சாயலில் வந்த வார்த்தைதான் வைன். உண்மையில் இது பழரசம். அதை மெதுவாக மாற்றியது நம் தவறு. கி.மு. 5000-6000 ஆண்டுகளிலேயே மக்கள் வைன் பருகியிருக்கிரார்கள் என்கிறது விக்கிபீடியா இணையதளம். ஜார்ஜியாவில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வைன் கிடைத்திருக்கிறது. வாரம் இரு கிளாஸ் வைன் குடித்தால் ஆஸ்துமா வராது என்கிறது டென்மார்க் ஆராய்ச்சி நிறுவனம். 

என்ன சிக்கல் என்றால் இன்று வைனுடன் ஆல்கஹாலை அதிகப்படியாக கலந்து அதையும் மதுபான பட்டியலில் சேர்த்துவிட்டோம். இதனால் வைன் தரும் மருத்துவ பலன்களை பெருமளவு இழந்துவிட்டோம். புற்று நோய் வராமல் தப்பாது, இதய நோயை விரட்டுவது, வயதாகும் போது ஏற்படும் மூளை மந்தத்தை தருப்பது....என பல வேலைகளை வைன் செய்கிறது. (தினகரன் 26.05.2013, பக்கம் 11) 

இரண்டாவதாக, 4:44 இல், நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் கூறுவதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மயக்க நிலையில் இருக்கும் போது தொழுகையை நெருங்காதீர்கள் என்று வருகிறது. 

இவ்வசனத்தில் வரும் சுகாரா எனும் சொல்லுக்கு மயக்க நிலை என்று பொருளாகும். இது குடிபோதையை மட்டும் குறிக்காமல், கடுங்கோபத்திற்கு உள்ளானவன், காதல் போதைக்கு உள்ளானவன், அச்சத்தால் தாக்குண்டவன், தூக்க போதைக்கு ஆளானவன் என்றெல்லாம் பொருள் உண்டு. எனவே இத்தகைய நிலைகளில் தொழுகையை நெருங்காதீர்கள் என்று பொதுவாக கூறும் வசனமாகும். குடியை மட்டும் கூறி தடை செய்யும் வசனம் அன்று. 

மூன்றாவதாக 2:219 வசனத்தில், குடிக்காமல் இருப்பதே நல்லது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பி.ஜே கூறுகிறார். இதுவும் தவறாகும். 2:218, 2:219 ஆகிய வசனங்களில் அவர்கள் புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் வினவுகின்றனர் (2:219) என்றும். 

நம்பிக்கை கொனவர்களும், (தம் வீட்டைத்) துறந்து சென்று அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிபவர்களும் ஆகிய இவர்களே (2:219) என்றும் போரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. 

2:220 வசனத்தில் அவர்கள் உம்மிடம் மதுவைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் வினவுகின்றனர் என்று வருகிறது. 

எனவே, இது போருடன் சம்பந்தப்பட்ட கேள்வி என்று விளங்குகிறது. அக்கால மக்களிடம் போரில் மதுவும், உணவும் வழங்குவதற்கு பலர் முன்வருவார்கள். போரிடும் வீரர்களுக்கு மதுவையும், உணவையும் யார் வழங்குவது என்பாது பற்றி சீட்டுக் குலுக்கிப் போட்டு பார்த்து முடிவு எடுப்பது வழக்கம். இதுவே இங்கு சூதாட்டம் என்று கூறப்படுகிறது. இந்த சூதாட்டத்தில் யார் பெயர் வருகிறதோ அவர்கள் போர் வீரர்களுக்கு மதுவும் உணவும் வழங்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்படும். 

இவ்வாறு செய்வதில் கொஞ்சம் நன்மையையும் மிகுதியாக தீமையும் உண்டு என்று இவ்வசனம் கூறுகிறது. எனவே இவ்வசனம் குடியைப் படிப்படியாக குறைக்கும் வசனம் ஆகாது. 

முழுமையாகத் தடை செய்யப்பட்ட வசனம் 5:91, 5:92 என்பதே சரி. 

நம்பிக்கை கொண்டவர்களே! போதைப் பொருள்கள், சூதாட்டம், சிலைகள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியன அருவருக்கத்தக்கதும் சைத்தனின் செயலும் ஆகும். எனவே நீங்கள் வெற்றி பெரும் பருத்து அவற்றிலிருந்து (முற்றிலும்) விலகிக் கொள்ளுங்கள். இதில் நம்பிக்கை கொண்டவர்களே என்று அழைக்கப்பட்டுள்ளது. போதை தரும் மதுவும் சூதாட்டம், சிலை, குறிபார்க்கும் அம்புகள் என்று வருகிறது. முற்றிலும் விலகுங்கள் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

எனவே மதுவை தடை செய்த சட்டம் 5:90-91 என்பதே சரி இவ்வசனம் எதனையும் ரத்து செய்யவில்லை.
Read more »