அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jan 30, 2014

ஆதம் நபி வாழ்ந்தது இவ்வுலக சொர்க்கமா? மறுமை சொர்க்கமா?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 12 இல் சொர்க்கம் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

ஆதம் நபி மறுமையில் நல்லோர்க்கு இறைவன் வழங்கவுள்ள சொர்க்கச் சோலையில் தங்க வைக்கப்பட்டு இறைக் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்டார் என்று பலர் கூறுகின்றன.

நம் விளக்கம்:

திருக்குர்ஆன் 2:36 இல் ஆதமே! நீரும் உம் மனைவியும் இத்தோட்டத்தில் குடியிருங்கள்.... என்று கூறினோம் என்று வருகிறது. இதே கருத்து 7:20 வசனத்திலும் வருகிறது. பூமியிலுள்ள எல்லா குடியிருக்கும் இடங்களும் அதாவது வாழும் இடங்களும்...... இதில் வாழும் இடங்கள் என்று எந்த அடைமொழியும் இன்றியே திருக்குர்ஆனில் வருகிறது. ஆனால் சொர்க்கத்தில் உள்ள குடியிருக்கும் இடத்தை வாழும் இடத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது, தூய, பரிசுத்தமான வாழுமிடம் என்று தூய என்று அடைமொழியுடன் சேர்த்துக் கூறுகிறான். திருக்குர்ஆனில் 9:72; 61:13 ஆகிய வசனங்களில்,

அல்லாஹ் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கு பெண்களுக்கும் சுவர்க்கங்களை வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அவர்கள் அவற்றில் என்றென்றும் வாழ்வர். மேலும் நிரந்தரமான சுவர்க்கங்களில் தூய்மையான இல்லங்களை(யும் வாக்களித்துள்ளான்) (9:72) என்று கூறுகிறான். மேலும்,

நீங்கள் அல்லாஹ்விடத்தும் அவனது தூதரிடத்தும் நம்பிக்கை கொண்டு உங்கள் பொருள்களையும் உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் வழியில் கடுமையாக உழைப்பதே (அந்த வாணிபம் ஆகும்) (நீங்கள் அவ்வாறு செய்தால்) அவன் உங்கள் பாவங்களை மன்னித்து, தோட்டங்களில் நுழையச் செய்வான். அவற்றுக்கிடையே ஆறுகள் ஓடுகின்றன. மேலும் என்றென்றும் நிலைத்திருக்கும் தோட்டங்களிலுள்ள தூய்மையான இன்பமான இருப்பிடங்களில் (அவன் உங்களை வாழச் செய்வான்) (61:13)

எனவே ஆதம் நபி வாழ்ந்த இடம், தூய வாழுமிடம் என்று வராததினால், அவர் வாழ்ந்த இடம் பூமியிலுள்ள ஜன்னத் என்று தெளிவாகிறது. அதாவது மறுமையில் கிடைக்கும் சொர்க்கம் இல்லை.

இரண்டாவதாக, மறுமையில் உள்ள சொர்க்கத்தைப் பற்றி வருமிடங்களில் ஆறுகள் ஓடும் என்ற வருணனை வருகிறது. ஆதம் நபி வாழ்ந்த இடத்தில் ஓடும் ஆறுகளைக் காண முடியவில்லை. அந்த ஆறுகள் எங்கே ஓடி ஒளிந்து கொண்டன? எனவே ஆதம் நபி வாழ்ந்த இடம் மறுமையிலுள்ள சொர்க்கம் இல்லை என்றும், பூமியிலுள்ள ஜன்னத் என்றும் நாம் விளங்கிக் கொள்கிறோம்.

மூன்றவதாக, திருக்குர்ஆனில்  அல்லாஹ் மறுமையில் கிடைக்கும் சொர்க்கத்தைப் பற்றிப் பல பெயர்களில் அழைக்கிறான்.

1) மறுமை வீடு (2:103)
2) அதன் எனும் சொர்க்கம் (9:72)
3) பிர்தவ்ஸ் (18:108)
4) மஹ்வா எனும் சொர்க்கம் (32:20)
5) நயீம் எனும் சொர்க்கம் (5:66)
6) தாருல் குல்து (25:16)
7) ஆலியா (69:23)
8) அல்ஹுஸ்னா (4:96)
9) இறுதி இல்லம் (28:84)
10) தாருல் ஸலாம் (6:178)
11) தாருல் கரார் (40:40)
12) இறையச்சம் உடையவர்களின் இல்லம் (16:31)
13) நிலையான தங்கும் இல்லம் (35:36)
14) சுவனப் பூங்காக்கள் (142:23)
15) பூங்கா (30:16)
16) தூபா (மிக நல்ல) (13:30)
17) இல்லிய்யூன் (83:20)
18) பழ்ல் (கிருபை) (33:40)
19) வலப்புறம் (56:28)
20) மகாமுல் அமீன் (44:52)

இவை மறுமையில் கிடைக்கும் சொர்க்கத்தின் பெயர்கள். இப்பெயர்களில் எதுவும் ஆதம் நபி வாழ்ந்த பூலோக ஜன்னத்திற்குக் கூறப்படவில்லை. எனவே ஆதம் நபி வாழ்ந்தது மறுமையில் கிடைக்கும் சொர்க்கம் இல்லை என்று தெளிவாகிறது.

நான்காவதாக, நான் மறுமை நாளில் சென்று அதைத் திறக்கும்படிக் கோருவேன். அப்போது அதன் காவலர், நீங்கள் யார் என்று கேட்டார். நான் முஹம்மது என்றேன்.அதற்கு அவர் உங்களுக்காகவே நான்  கட்டளையிடப்பட்டுள்ளேன். உங்களுக்கு முன் வேறு யாருக்காகவும் (சொர்க்க வாசலை) நான் திறக்கக் கூடாது (எனப் பணிக்கப்பட்டுள்ளேன்) என்று கூறுவார். (அறிவிப்பாளர் ஹஸ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் நூல்: முஸ்லிம் 333)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் வேறு யாருக்காகவும் சொர்க்க வாசல் திறக்கப்படவில்லை என்றால், ஆதம், ஹவ்வா, இப்லீஸ், சைத்தான் போன்றவர்கள் எப்படி மறுமை சொர்க்கத்தில் நுழைந்திருக்க முடியும்? எனவே அவர்கள் வாழ்ந்தது இம்மையில் உள்ள ஜன்னத் என்று விளங்குகிறது.
ஐந்தாவது, சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் ரய்யான் என்றழைக்கப்படும் வாசலொன்று உள்ளது. அதில் நோன்பாளிகளைத் தவிர வேறெவரும் நுழைய மாட்டார்கள். (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅத் நூல் புகாரி 3257: முஸ்லிம் 212)

இதில் நோன்பு போன்ற நற்செயல்களை அல்லாஹ்வுக்காக செய்தவர்கள் அந்த வாசல் வழியே நுழைவார்கள் என்றால், ஆதமும் ஹவ்வாவும் படைக்கப்பட்டதே அங்கு என்பது எப்படிப் பொருந்தும். அதாவது நற்செயலின் கூலி தான் மறுமை சொர்க்கம் என்றால் ஆதமும் ஹவ்வாவும் அங்கு எப்படிப் படைக்கபப்பட்டிருப்பார்கள்? எந்த வாசல் வழியாக நுழைந்தார்கள்? அது சரி, இப்லீஸும் சைத்தானும் எந்த நற்செயல் செய்ததற்காக எந்த வாசல் வழியாக சொர்க்கத்தில் நுழைந்தார்கள்?

ஆறாவது, சொர்க்கவாசிகள் அல்லாஹ் அழகிய மாளிகைகளை வழங்குகிறான் என்று திருக்குர்ஆனும் நபிமொழியும் கூறுகின்றன.

குர்ஆனில் 66:12 வசனத்தில், பிர்அவ்னின் மனைவி, என் இறைவா! உன்னிடத்திலே ஜன்னத்தில் நீ எனக்காக ஒரு வீட்டைக் கட்டுவாயாக! என்று கேட்கிறார். மறுமை சொர்க்கத்தில் மாளிகைகள் வழங்கப்படும் என்று திருக்குர்ஆனில் 39:21; 34:38; 25:76 ஆகிய வசனங்களில் காண்கிறோம்.

இப்லீஸும் சைத்தானும் இருக்கட்டும்; ஆதம் நபியும் ஹவ்வாவும் எந்த மாளிகையில் இருந்தார்கள்? திருக்குரானில் அவர்களின் மாளிகையைப் பற்றி பேச்சே இல்லையே! ஏன்?

ஏழாவது, மறுமை சொர்க்கத்தில் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட ஹூர் எனும் கன்னியவராவர் (55:72) ஆதம் நபி வாழ்ந்த ஜன்னத்தில் ஹூர் எனும் கன்னியரின் காட்சி பற்றி காட்டப்படவில்லையே ஏன்?

எட்டாவதாக, மறுமையில் கிடைக்கும் சொர்க்கத்தில், அவர்களுக்கு தங்கக் காப்புகள் அணிவிக்கப்படும். ஸுந்தூஸ், இஸ்தப்ரக் என்னும் பச்சைப் பட்டாடைகள் அவர்கள் அணிவார்கள். (திருக்குர்ஆன் 18:30) என்று கூறப்பட்டுள்ளது. ஆனால்,

ஆதம் நபியின் சொர்க்கத்தில், அவ்விருவரும் அம்மரத்தின் கனிகளை சுவைத்தபோது அவர்களின் வெட்கத்தலங்கள் அவர்களுக்குத் தெரிந்தன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையினால் தம்மை மூடிக் கொள்ள முயன்றனர். (திருக்குர்ஆன் 7:22) என்று வருகிறது.

அவர்கள் அந்த பச்சைப் பட்டாடைகளை அணியவில்லை என்பதாலும், மரத்தின் இலைகளே ஆடையாக கிடைத்தன என்பதாலும் இரண்டும் வெவ்வேறு இடங்கள் என்பது தெரியவில்லையா?

ஒன்பதாவது, திருக்குர்ஆனில் ஆதம் நபியைப் பற்றிக் கூறும் இடங்களில் எல்லாம் இப்லீஸும், சைத்தானும் கூறப்படுகிறான்.

நம் கேள்வியாவது, அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு தொழுகையை நிலை நிறுத்தி ரமலானில் நோன்பு நோற்ற மனிதரை சொர்க்கத்தில் புகச்செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகி விட்டது. அவர் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தாலும் சரி, அவர் பிறந்த பூமியில் உட்கார்ந்து கொண்டாலும் சரி என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி). புகாரி 2790: முஸ்லிம் 3829)

இப்லீஸும், சைத்தானும் மேலே சொல்லப்பட்ட நற்செயல்களைச் செய்ததினால்தான் தான் அவர்களை அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்தியுள்ளானா?

பத்தாவது, (சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்த பின்னர்) பொது அறிவிப்பாளர் ஒருவர், (இனி) நீங்கள் ஆரோக்கியத்துடனேயே இருப்பீர்கள். ஒருபோதும் நோய் ஏற்படாது. நீங்கள் என்றென்றும் உயிருடன்தான் இருப்பீர்கள். ஒருபோதும் உங்களுக்கு மரணம் ஏற்படாது, இளமையோடுதான் இருப்பீர்கள். ஒருபோதும் முதுமையடைய மாட்டீர்கள். நீங்கள் இன்பத்தோடுதான் இருப்பீர்கள். ஒருபோதும் துண்பம் அடைய மாட்டீர்கள் என்று அறிவிப்புச் செய்வார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 5457)

ஆனால் ஆதம் நபி வாழ்ந்த ஜன்னத்தில் சைத்தான், இந்த மரத்தினை நெருங்கினால் நீங்கள் வானவர் ஆகி விடுவீர்கள்: நிரந்தர வாழ்வைப் பெறுவீர்கள் என்று ஆதம் நபியிடம் கூறுகிறான். (7:21) இதிலிருந்து இரண்டும் வெவ்வேறு இடங்கள் என்று தெரியவில்லையா? அதாவது, இரண்டும் இரண்டு விதமாக உள்ளன.

பதினொன்றாவது, இனிமையான சொர்க்கச் சோலைகளில் அவர்களுக்கு அறியப்பட்ட உணவும், கனிகளும் உண்டு. அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். (அல்குர்ஆன் 37:42-44)

சொர்க்கத்தில் அவர்கள் எச்சில் துப்பவும் மாட்டார்கள். மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி 3327: முஸ்லிம் 5450)

ஆனால் ஆதம் நபி வாழ்ந்த ஜன்னத்தில் அவர்கள் அறியாத ஒரு மரம் காணப்படுகிறது. அதனை நெருங்க வேண்டாம் என்ற தடையும் உள்ளது. அதனை உண்டதனால் அவர்களின் மனம் வெளியாகி விட்டது எனத் திருக்குர்ஆன் கூறுகிறது.

இவ்வாறாக இரு வேறு முரண்பட்ட நிலைகளை சொல்லப்படுவதால் ஆதம் நபி மறுமைக்குப் பின் உள்ள சொர்க்கத்தில் வாழவில்லை என்பது உறுதியாகின்றது.

திருக்குர்ஆன் 2:31 இல், அல்லாஹ் தன் கலீபாவை பூமியில் ஏற்படுத்தப் போகிறேன் என்றுதான் கூறியுள்ளான். பூமியில் வாழ்ந்த ஆதம் நபியை சொர்க்கத்திற்கு உயர்த்தியதாகத் திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ கூறப்படவில்லை. எனவே அவர் வாழ்ந்தது பூமியிலுள்ள ஜன்னத்தே ஆகும்.

இதுபற்றிய மேலும் பல கருத்துக்களை ஹஸ்ரத் மஸீஹ் ஈசப்னு மர்யம்(அலை) அவர்களின் மரணம் எனும் நூலில் பக்கம் 46 இல் ஆதம் (அலை) அவர்கள் வாழ்ந்தது பூவுலக சொர்க்கம் எனும் தலைப்பில் காண்க)

உண்மை இவ்வாறிருக்க, ஆதம் நபி வாழ்ந்தது மறுமைக்குப் பின்னர் கிடைக்கும் சொர்க்கமே என்று பலர் கூறுகின்றனர். இரண்டில் எதை ஏற்றாலும் இஸ்லாத்தின் அடிப்படைக்கோ இந்நிகழ்ச்சியில் இருந்து பெற வேண்டிய பாடத்துக்கோ பாதிப்பும் ஏற்படாது என்று பி.ஜே எழுதுகிறார்.


நம் கேள்வியாவது, திருக்குரானும் நபிமொழியும் கூருவனவற்றுள் ஏதாவது ஒன்றுதான் உண்மையாக இருக்க வேண்டும். மற்றொன்று தவறானதுதான். திருக்குரானும் நபிமொழியும் எதனை உண்மை எனக் கூறுகிறதோ அதனை ஏற்பதே இஸ்லாம் ஆகும். 

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.