அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jan 10, 2014

அஹ்மது எனும் பெயரைக் கொண்ட தூதர்


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 25 இல் முகம்மது நபியைப் பற்றிய முன்னறிவிப்பு என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

தவ்ராத், இன்ஜீல் வேதங்களில் முஹம்மது நபியைப் பற்றி முன்னறிவிப்பு இருந்தது. (பார்க்க திருக்குர்ஆன் (7:157, 48:29, 61:6) என்று எழுதியுள்ளார்.

நம் விளக்கம்:

திருக்குர்ஆன்  61:7 வசனத்தில் மர்யமின் மகன் ஈஸா தன் தமுதாயத்திடம் இஸ்ராயீலின் மக்களே! நிச்சயமாக நான் எனக்கு முன்னர் தவ்ராத்தில் கூறப்பட்டதை நிறைவேற்றக் கூடியவனாகவும் எனக்குப் பின்னர் அஹ்மது எனும் பெயரைக் கொண்ட ஒரு தூதரைப் பற்றி நற்செய்தி வழங்குபவனாகவும் உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன் என்று கூறிய நேரத்தை (நினைத்துப் பாருங்கள்). பின்னர் அ(த்தூது)வர் தெளிவான சான்றுகளுடன் வந்த பொது இது மிகத் தெளிவான சூனியம் என்று அவர்கள் கூறினார்.

இவ்வசனத்தில் அஹமத் எனும் பெயர் கொண்ட ஒரு தூதர் என்பது முஹம்மது நபியைப் பற்றிய முன்னறிவிப்பு என்று பி.ஜே கருதுகிறார். நபி (ஸல்) அவர்களின் பெயர் முஹம்மது என்றிருக்க அஹ்மத் எனும் பண்புப் பெயரைக் குறிப்பிட்டு ஈஸா நபி முன்னறிவித்ததாக எண்ணுகிறார். இதனால், ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் இந்த அஹ்மது என்பது தன்னைக் குறித்து கூறப்பட்ட முன்னறிவிப்பு என்று கூறியபோது பி.ஜே போன்றோர் அன்னாரை மறுத்தனர். இச்செயல், ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைக் குறித்து தவ்ராத்தில் வந்த முன்னறிவிப்பை யூதர்கள் அது முஹம்மது நபிக்குப் பொருந்தாது என்று கூறியதைப் போன்றதாகும். அதாவது உபகாமம் 18:18-20 இல்,

இந்த வசனத்தில் கர்த்தர் மூஸா நபியிடம், உன்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன், நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.

என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.

சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்க தரிசியும் சாகக்கடவன் என்று வருகிறது. இதில்,

1) ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களைக் குறித்து கூறப்பட்டுள்ளது. அவர் மூஸா நபியைப் போன்ற ரஸுல் என்று (திருக்குர்ஆன் 73:16 வசனம்) கூறுகிறது.

2) அவர் இஸ்ரவேலர்களின் சகோதரர் இஸ்மவேலர்களிலிருந்து அதாவது இஸ்மாயீல் நபி (அலை) அவர்களின் சந்ததியில் இருந்து வருவார்.

3) அவர்க்கு திருக்குர்ஆன் எனும் வேத வஹி வரும்.

4) அவ்வேதத்தில் பிஸ்மில்லாஹ் என்று அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு அதன் அத்தியாயங்கள் காணப்படும்.

5) அவர் எந்தச் செயலையும் அல்லாஹ்வின் பெயரைக் கூறியே செய்வார்.

இவ்வாறு தெளிவாகக் காணப்பட்டும் யூதர்கள், அந்தத் தீர்க்கதரிசி, மூஸா நபியின் சகோதரர்களாகிய இஸ்ரவேலர்களிலிருந்து வரவேண்டும். முஹம்மதோ, இஸ்மவேலர்களிலிருந்து வந்துள்ளார் என்று கூறி மறுத்து விட்டனர்.

இதைப் போன்றே முஸ்லிம்களும் அஹ்மத் என்பது முஹம்மது நபியைத் தான் குறிக்கும் என்று கூறி, இஸ்லாத்தின் பின்னாளில் முஹம்மது நபியைப் பின்பற்றி வரும் அன்னாருடைய அஹ்மத் என்னும் பண்பைக் கொண்ட உம்மத்தி நபியாகிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களை மறுத்து வருகின்றனர்.

61:7 வசனத்தில் வரும் அஹ்மத் என்பவர், முஹம்மது நபியின் உம்மத்தில் பிற்காலத்தில் வரக்கூடியவர் என்பதைக் கான்போம்.

1) நம்பிக்கை கொண்டோர் என்பது திருக்குரானில் முஸ்லிம்களை மட்டுமே குறிக்க வருகிறது. இச்சொல், அந்த அத்தியாயத்தில் 3 இடங்களில் வந்து முஸ்லிம் சமுதாயத்தில் பிற்காலத்தில் வருபவரைப் பற்றியும் முஸ்லிம்கள் செய்யாததைச் சொல்லக் கூடாது என்றும் துன்பத்திலிருந்து காப்பாற்றும் ஒரு வியாபாரம் பற்றியும் முஸ்லிம்களிடம் எடுத்துச் சொல்கிறது.

2) மூஸா நபி முதல் ஈஸா நபி காலம் வரை யூதர்கள் அந்தந்த கால நபிமார்களிடம் நடந்து கொண்டது போல் உங்களிடம் வந்துள்ள அஹ்மத் எனும் தூதரிடம் நடக்கக் கூடாது என்று முஸ்லிம்களிடம் வசனத்தில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

3) 61:8 வசனத்தில் அஹ்மத் என்னும்  தூதரை நீங்கள் இஸ்லாத்திற்கு வருமாறு அழைப்பீர்கள் என்றும்: அவர்க்கு அநீதியிழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான் என்றும் முஸ்லிம்களிடம் 61:6-7 அல்லாஹ் கூறுகிறான்.

4) 61:9 இல் அஹ்மத் நபி கொண்டு வரும் அந்த இறையொளியை தம் வாய்களால் பத்வா கூறி அணைக்க முயல்வார்கள். ராபிதத்துல் ஆலமீன், பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் போன்ற அமைப்புகள் பத்வாக்களை கூறி அஹ்மதின் இறை ஒளியை அணைக்க முயல்பவர்களை காபிர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

5) அன்னார் அனைத்து மார்க்கங்களையும் வெற்றி கொள்வதற்காக வந்து, நேர்வழியையும், உண்மை மார்க்கத்தையும் நிலை நாட்டுவார் என்று 61:10 வசனம் கூறுகிறது. இது எதிர்காலத்தில் வரும் மஹ்தியின் காலத்தில் நடக்கும் என்று திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறுகின்றனர். (தப்ஸீர் இப்னு ஜரீர், தப்ஸீர் ஜாமிஉல் பயான் தொகுதி 29)

6) 61:11-12 வசனம், பிற்காலத்தில் வியாபாரம் கொடி கட்டிப்பறக்கும் என்றும் அச்சமயத்தில் முஸ்லிம்கள் செய்ய வேண்டிய வியாபாரம் பற்றியும் அதனால் கிடைக்கும் கூலி பற்றியும் கூறுகிறான்.

7) 61:15 வசனத்தில் மூஸா நபியைப் போன்ற முஹம்மத் நபியின் உம்மத்தில், ஈஸா நபியின் சமுதாயத்தைப் போன்று ஒரு சமுதாயம் உருவாகும் என்றும் அவர்கள் ஈஸா நபியைப் போன்ற அஹ்மத் நபியைப் பின்பற்றுவோர் என்றும் மற்றொரு பிரிவினர் அவரை மறுத்து விடுவர் என்றும் கூறுகிறது.

8) 61:7 வசனம் ,

அ) ஈஸா நபி இஸ்ரவேல் சமுதாயத்திற்கு மட்டும் அனுப்பப்பட்ட ஒரு தூதர், அன்னார் முழு உலகுக்கோ, முஸ்லிம் சமுதாயத்திற்கோ வர முடியாது.

ஆ) ஈஸா நபி தவ்ராத்தை மெய்ப்பிக்க வந்த ஒரு தூதர், அவர் திருக்குரானை மெய்ப்பிக்க வந்த  தூதறல்ல.

இ) எனக்குப் பின்னர் என்று ஈஸா நபி கூறுவதினால், ஈஸா நபியின் மரணத்திற்குப் பிறகுதான் அஹ்மத் நபி தோன்றுவார்.

ஈ) மூஸா நபியும் முஹம்மது நபியும் வேதம் கொண்டுவந்த நபிமார்கள் என்றும் ஈஸா நபி தவ்ராத்தை அஹ்மது நபி திருக்குரானையும் மெய்ப்பிக்க வந்த தூதர்கள் என்றும் இவ்வசனம் கூறுகிறது.

61:1 வசனம், வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வைத் துதித்தன என்று வருகிறது. அல்லாஹ்வின் துதி இல்லாத காலத்தில் அத்துதியை மீண்டும் உண்டாக்கி அஹ்மத் – புகழக் கூடியவர், துதிக்கக் கூடியவர் வருவார் என்று கூறுகிறது.

தான் முழுக்க முழுக்க திருக்குரானையும், ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் பின்பற்றியதால்தான் இறைவன் எனக்கு இந்த உம்மத்தி நபி என்ற பதவியைத் தந்தான், அதனை விட்டு விட்டு மலையளவு நல்ல அமல்களைச் செய்திருந்தாலும் இப்பதவி எனக்குக் கிடைத்திருக்காது. என்று ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் கூறியுள்ளார்கள். அன்னார் தன் வாழ்நாள் முழுவதும் அல்லாஹ்வின் புகழையும், நபி (ஸல்) அவர்களின் புகழையும் போற்றிப் புகழ்வதில் செலவிட்டார்கள்.

எனவே, பிற்காலத்தில் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களே இங்கு இஸ்முஹு அஹ்மத் என்று கூறப்பட்டவராவார்.

காரணம் 61 வது சூரா மூமின்களாகிய முஸ்லிம்களைக் குறித்து மட்டுமே பேசுகிறது. எனவே அஹ்மத் எனும் பெயர் முஸ்லிம்களில் தோன்றும் ஒரு தூதரைக் குறிக்குமே தவிர, முஸ்லிம்களுக்காகத் தோன்றும் தூதரைக் குறிக்காது. முஸ்லிம்களுக்காகத் தோன்றிய தூதர் முஹம்மது என்று திருக்குர்ஆன் நான்கு இடங்களில் கூறப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர் இல்லை என்று கூறுவதற்காகத்தான் அவர் பெயர் என்று கூறி அஹ்மது என்று அழைத்துள்ளான். அவர் பெயர் என்று யஹ்யா நபியுடனும் (3:45) ஈஸா நபியுடனும் (19;8) வந்து, நற்செய்தி என்றும் கூறப்பட்டுள்ளது. இதர் நற்செய்தியைத் தான் ஈஸா நபி பிற்காலத்தில் இஸ்லாத்தில் தோன்றும் ஒருவராகிய அஹ்மது நபிக்கும் கூறுகிறார். எனக்குப் பின்னர் என்பது ஈஸாநபியின் மரணத்திற்குப் பிறகு என்பதைக் குறிப்பதால், அன்னார் மரணித்து விட்டார் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால், ஈஸா மீண்டும் வந்து மரணித்த பிறகு ஒருவர் வருவார். அவர்தான் அஹ்மத் என்று எண்ணி ஏமாற வேண்டும்.

இந்த அதிகாரத்தின் இறுதியில் அல்லாஹ் ஒரு கட்டளையிட்டுள்ளான். ஈஸா நபி, தமது சீடர்களிடம் அல்லாஹ்வுக்காக எனது உதவியாளர்கள் யார் என்று கேட்ட போது நாங்கள் அல்லாஹ்வுக்காக உதவி செய்பவர்களாக இருக்கிறோம் என்று அந்த சீடர்கள் பதிலளித்தது போன்று நம்பிக்கை கொண்டவர்களே நீங்களும் பதிலளிக்க வேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. அதே வேளையில் இந்த கருத்து திருக்குர்ஆனில் 3:53 இல் செய்தியாக மட்டுமே வருகிறது. ஆனால் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹமத் (அலை) அவர்களின் வருகையைக் குறிப்பிடும் போது நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு கட்டளையாகவே இடப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.