அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jul 3, 2014

ஆதம் நபி முதல் மனிதர் இல்லை.!


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 46 இல் கலீஃபா எனும் சொல்லுக்குப் பொருள் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்: 

கலீஃபா எனும் அரபி சொல் ஒருவர் இறந்த பின் அல்லது அவர் செயலற்றுப் போனபின் அவரது இடத்தைப் பெறுபவர் என்ற பொருளில் திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

ஒரு பெண்ணின் கணவர் இறந்த பின் இன்னொருவரை அப்பெண் மணந்தால் இரண்டாம் கணவரை முதல் கணவரின் கலீஃபா எனலாம். முதல் கணவரின் இடத்தை அவர் நிறைவு செய்வதால் இவ்வாறு அழைக்கப்படுகிறார். ஹதீஸ்களிலும் இதற்கு சான்று உண்டு. (நூற்கள் முஸ்லிம் 1525 அஹ்மத் 25417) 

மனிதன் வழிவழியாகப் பெருகி வருகிறான். இவ்வாறு வழிவழியாகப் பெருகுபவர் என்ற பொருளிலும் கலீஃபா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களை கலீஃபா எனக் கூறியது இந்தக் கருத்தில்தான்.... எனவே ஆதம் (அலை) அவர்களைப் பற்றி கூறும் இடங்களில் வழிவழியாகப் பல்கிப் பெருகுபவர் (தலைமுறை) என்ற பொருளிலும் மற்றவர்களைக் குறித்து கலீஃபா என்ற சொல் பயன்படுத்தப்படும் போது முந்தையவர்களின் இடத்தை நிரப்பியவர்கள் என்ற பொருளிலும் புரிந்து கொள்ள வேண்டும் என்று எழுதியுள்ளார். 

நம் பதில். 

திருக்குர்ஆனில் அல்லாஹ், மக்காவை, முதல் இல்லம் (2:97) என்று குறிப்பிடுகின்றான். இவ்வாறு ஆதம் நபியை, முதல் மனிதர் என்று எங்காவது குறிப்பிட்டுள்ளானா? நபிமொழிகளிலாவது முதல் மனிதர் என்று ஆதம் நபி கூறப்பட்டுள்ளாரா? இருந்தால் எடுத்துக் காட்டுங்கள். 

திருக்குர்ஆன் 7:81 இல், உலகில் உங்களுக்கு முன் யாரும் செய்திராத வெட்கக் கேடான செயலைச் செய்கிறீர்கள் என்று தமது சமுதாயத்திடம் லூத் நபி கேட்டார். இதிலிருந்து முதன் முதலில் இந்த இழி செயலை இவர்கள் தான் செய்துள்ளனர் என்று தெரிகிறது. இதனால்தானே, இவர் பிறந்த கூறாகிய சோதோம் என்ற சொல்லிலிருந்து SODAMY எனும் சொல் உருவாயிற்று போலும் இது போல் ஆதம் நபிக்கு முன்னால் எந்த மனிதரும் படைக்கப்பட்டதில்லை. என்றாவது திருக்குர்ஆனிலோ? நபிமொழிகளிலோ கூறப்பட்டுள்ளதா? 

ஆதம் நபி அவர்களைப் பற்றிக் கூறிய கருத்து சரியா? என்பதே நம் கேள்வி. மனிதன் வழிவழியாகப் பல்கிப் பெருகுபவன் என்ற பொருளிலும் கலீஃபா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்களைக் கலீஃபா எனக் கூறியது இந்தக் கருத்தில்தான் என்பதற்கு 

திருக்குர்ஆனிலிருந்து ஒரே ஒரு சான்றையாவது பி.ஜே தர முடியுமா? 

நபிமொழிகளிலிருந்து சில சான்றுகளை தர முடியுமா? 

அரபி இலக்கியங்களிலிருந்து சில சான்றுகளைத் தர முடியுமா? அவ்வாறு தராத வரை அக்கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது? 

ஆதம் நபி கலீஃபா என்றால் அவருக்கு முன்னால் ஒரு மனித இனமே இருக்கிறது என்று பொருளாகும். அம்மக்களின் பிரதிநிதியாக ஆதம் வந்துள்ளார். இதிலிருந்து ஆதம் நபி முதல் மனிதர் இல்லை என்று தெளிவாகிறது. 

ஆதம் நபிக்கு முன்னால் ஒரு காட்டுமிராண்டித்தனமான, அநாகரிக மனித இனத்திலிருந்து ஆதம் நபியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதாவது அரபுகளிலிருந்து நபி (ஸல்) அவர்கள் நபியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் போலாகும். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆதம் நபியிலிருந்து அவரைப் பின்பற்றி ஒரு புதிய மனித இனம் உருவாகின்றது. அது வழிவழியாகப் பல்கிப் பெருகுகிறது என்ற பொருளில் ஆதம் நபி கலீஃபா என்றால் அது சரிதான். 

இதனால்தான் வானவர்கள், பூமியில் குழப்பம் விளைவித்து இரத்தம் சிந்தக்கூடியவர்களை ஏற்படுத்தப் போகிறாயா? என்று கேட்கின்றனர். மனித வடிவில் விலங்குகளைப் போல் வாழ்ந்த அந்த இனத்திற்கு நாகரிகமும் பண்பாடும் ஒழுக்கமும் கற்பிக்க ஆதமாகிய நபி வந்தால் இரத்தம்தானே சிந்த நேரிடும் என்பதையே வானவர்கள் கூறினார். ஆனால் அல்லாஹ் அதன் இன்னொரு பக்கத்தைப் பார்க்கிறான். வானவர்கள் கண்டது இதன் இருட்டுப் பகுதி. அதனால்தான் அல்லாஹ் கூறுகிறான். நீங்கள் அறியாதவற்றைப் நான் அறிவேன் (2:31) மலக்குகள் இரத்தம் சிந்துதலைக் கண்டனர். அல்லாஹ் நிர்வாணம் இல்லாத, மழையிலும் வெயிலிலும். நாடோடியாக அலைந்து திரியாத, நிலையாக ஓரிடத்தில் வாழ்ந்து வரும் நாகரிகமான ஒரு மனித இனத்தைக் கண்டான். ஆதம் நபி அம்மனித இனத்துக்கு நீங்கள் ஆடை அற்றவராகவோ, பசித்தவராகவோ, தாகித்தவராகவோ, வெயிலில் காய்பவராகவோ இருக்கக் கூடாது என்ற ஒழுக்கப் போதனையை முதன் முதலில் கற்பிக்கிறார். (திருக்குர்ஆன் 20:119-120) 

ஆதம் நபி வாழ்ந்த அந்த நிலப்பகுதியில் காணப்பட்ட அனைத்துப் பெயர்களையும், தான் பெற்ற இறை ஞானத்திலிருந்து அம்மக்களுக்கு கற்றுக் கொடுக்கிறார். இதனையே திருக்குர்ஆன் 2:32 வசனம் கூறுகிறது. 

இவ்வாறு பூவுலக சொர்க்கத்திலிருந்து நபியும் அவரைப் பின்பற்றி வாழும் கூட்டமும் வாழும் போது ஆதம் நபிக்குக் கட்டுப்படாத இப்லீசும், குழப்பம் விளைவிக்கும் சைத்தானும் தோன்றுகின்றனர். அதாவது நபி (ஸல்) அவர்களின் தோழர்களைப் போன்ற ஒரு ஜாமாஅத்தும், அபூஜஹீல் அபூலஹபைப் போன்று ஒரு கூட்டமும் தோன்றினார்கள். 

அல்லாஹ் ஆதம் நபியின் வரலாற்றை நபி (ஸல்) அவர்களுக்கு கூறி இந்த நிலையே உன் வாழ்விலும் ஏற்படும் என்று உணர்த்துகிறான். நீங்கள் (இங்கிருந்து) வெளியேறிவிடுங்கள் உங்களுள் சிலர் சிலருக்குப் பகைவர் ஆகிவிடுவீர்கள் என்று 2:37 இல் அல்லாஹ் கூறுகிறான். இது, அங்கு இருவர் மட்டும் அல்ல பலர் கொண்ட ஒரு கூட்டமே இருந்திருந்தது என்பதையும் அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர் என்பதையும் படம் பிடித்துக் காட்டுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் ஹிஜ்ரத் ஏற்படும் என்பதை இதன் மூலம் அல்லாஹ் அறிவுறுத்துகிறான். 

மீண்டும் இதனை, நீங்கள் எல்லாரும் இதிலிருந்து வெளியேறுங்கள் என்று 2:39 இல் கூறுகின்றான். இவ்வசனம் ஆதம் நபியுடன் ஒரு மனித சமுதாயம் வாழந்துள்ளது என்று தெரிவிக்கிறது. 

சுருக்கமாக, ஆதம் முதல் மனிதர் இல்லை. முதல் நபியாவார். அவர் தனக்கு முன்பு வாழ்ந்த மனித இனத்தின் பிரதிநிதி என்ற பொருளில் கலீஃபாவாக இருக்கிறார். அவர் தனக்குப் பின்னர் ஒரு புதிய மனித இனத்தை உருவாக்கி தன்னைப் பின்பற்றி வழிவழியாக வாழும் ஒரு தலைமுறையை உருவாக்குகிறார். இதனால் அவரை கலீஃபா என்று அல்லாஹ் கூறுகிறான்.

அண்மைக்கால ஆய்வுகளின்படி மனிதஇனத்தில் வயது பத்து லட்சம் ஆண்டுகளாகும். (என்சைக்ளோபிடியா பிரிட்டானிக 14 ஆம் பதிப்பு) இதிலிருந்து 6000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கூறப்படும் ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்கள் முதல் மனிதராக இருக்க வாய்ப்பில்லை. எனவே. திருக்குரானின் அடிப்படையிலும் நவீன ஆய்வுகளின் அடிப்படையிலும் ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்கள் முதல் மனிதர் என்ற முஸ்லிம், கிறிஸ்தவ நம்பிக்கை அடித்தளமற்றது என திட்டவட்டமாகக் கூறலாம்.

இது தொடர்பாக, அஹ்மதிய்யா முஸ்லிம் ஜாமத்தை தோற்றுவித்த ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்கள் கீழ்வருமாறு கூறியுள்ளார்கள்.

"ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்கள் தோன்றிய நாளிலிருந்து உலகம் ஆரம்பமாகியது என்ற பைபிளின் கூற்றை நாம் ஏற்கவில்லை அதற்க்கு முன்னால் ஒன்றுமே இருக்கவில்லை. இறைவன் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்தான் என்று நாங்கள் நம்பத் தயாராக இல்லை. இன்று உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் அனைவருமே ஹஸ்ரத் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகள் என்று நம்புவதற்கும் நாம் தயாராக இல்லை. இதற்க்கு மாறாக இந்த ஆதம் நபி முதல் மனிதர் அல்ல என்று நாம் கூறுவோம். அவருக்கு முன்னாலும் மனித இனம் உலகில் இருந்தது. இதனைத் திருக்குர்ஆன் உறுதிப்படுத்துகிறது. 'நான் எனது கலீபாவை உலகில் ஏற்படுத்தப் போகிறேன்' என இறைவன் ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்களைக் குறித்துக் கூறுகின்றான். 'கலீபா' என்பது பின்தொடருபவரைக் குறிக்கும். இதிலிருந்து ஹஸ்ரத் ஆதம்(அலை) அவர்களுக்கு முன்னாலும் இவ்வுலகில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது" (அல்-ஹகம் மே 30, 1908 இதழ்)

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.