அஹ்மதியா இயக்கம் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்ற மிகப் பழமையான ஊசிப்போன குற்றச்சாட்டு இவர்களின் தாஜ்ஜாலியத்திற்கான (பொய்யர்கள்) சிறந்த உதாரணமாகும். அஹ்மதியா இயக்கத்தின் உலகளாவிய வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கண்டு பொறாமையும், காழ்புணர்ச்சியும் கொண்ட அல் அமீன் ஏட்டின் ஆசிரியர் இவ்வாறு கூறுகிறார்.
"காதியானி இயக்கம் என்ற ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் ஒரு மூலையில் ஆங்கிலேயர்களின் ஒத்துழைப்புடன் உருவானது".
இந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் முக்கிய ஆயுதமே பிரித்து ஆளுவதுதானே! அவர்களின் இந்த முயற்சி முஸ்லிம்கள் மத்தியில் ஒரு பிரிவை உண்டு பண்ணியதில் வெற்றியை தந்தது மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவரின் துணை கொண்டு இதனை செய்து முடித்தனர்."
இந்தக் கூற்றைக் கேட்கும் போது, ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுடைய வருகைக்கு முன்னுள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுபட்டு ஒரே இயக்கமாக இயங்கி வந்து கொண்டிருந்தார்கள் என்றும் ஆனால் ஆங்கிலேய ஆட்சியின் சூழ்ச்சியின் காரணமாக, ஹஸ்ரத் அஹ்மத் அவர்களே முஸ்லிம்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தினார்கள் என்றும் தெரிகின்றது இது கிணற்று தவளையின் கருத்தேயன்றி வேறில்லை. வரலாறு கூறும் உண்மைக்கும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்பிற்க்கும் நேர் மாற்றமான கருத்தாக இருக்கிறது.
எனது உம்மத் 72 கூட்டமாகப் பிரிந்துவிடும் என்று நபி பெருமானார் (ஸல்) அவர்கள் உரைத்த வண்ணம் அஹ்மதியா இயக்கம் உலகில் தோன்றுவதற்கு முன்பே முஸ்லிம் சமுதாயத்தில் 72 பிரிவுகள் இருந்தன. இவ்வியக்கம் தோன்றுவதற்கு முன்னர் இந்த முஸ்லிம் சமுதாயம் பிளவுபடாமலா இருந்தது? சுன்னிகள் என்றும், ஷியாக்கள் என்றும், காதிரிய்ய என்றும், ஷாதுலியா என்றும், வஹ்ஹபிகள் என்றும் எத்தனையோ பிரிவுகள் எத்தனையோ தரீக்கத்துகள், எத்தனையோ ஜமாஅத்துகள்.
இந்தப் பிரிவினைகளுக்கும், வேற்றுமைகளுக்கும் காரணம் என்ன?
காரணம் கொள்கை கோட்பாடுகளில் கருத்து வேறுபாடேயாகும். காரணகர்த்தாக்கள்: அக்கொள்கைகளை நிர்ணயிக்கும் முல்லாக்கள்; வானத்தின் கீழ் மிக கெட்ட ஜந்துக்கள் என்று நபி(ஸல்) அவர்களால் வருணிக்கப்பட்ட சீர்கெட்ட ஆலிம்சாக்கள்!!
இனி இவர் கூறிய குற்றச்சாட்டுக்கான பதிலைப் பார்ப்போம்.
ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் காலத்தில் ஆங்கிலேய அரசுக்கு வால்பிடித்த அக்கால ஆலிம்சாக்கள் அஹ்மதியா இயக்கத்தை ஒழித்துக் கட்ட அந்த அரசிடமே ஆதரவு தேடினார்கள் 26 மௌலவிகள் கொண்ட ஒரு தூதுக்குழு ஆங்கிலேய அரசிடம் சென்று இவ்வாறு முறையிட்டிருந்தது:
"இந்த அரசு அஹ்மதிய்யா இயக்கத்தை நம்பக் கூடாது. இந்த அரசிற்கு எதிராக அமைக்கப்பட்ட இந்த இயக்கத்தினால் அதிகமான கெடுதி இவ்வரசிற்கு ஏற்படும். (இஷா அத்து சுன்னா 11௨ பக்கம் 405)
அந்தக் காலத்து ஆலிம்களால் ஆங்கிலேய அரசிற்கு எதிராக அமைக்கப்பட்ட ஓர் இயக்கமாக வருணிக்கப்பட்ட அஹ்மதியா இயக்கம் இந்தக் கால ஆலிம்களாலும் அவர்களுடைய வாலில் தொங்கிக்கொண்டிருப்பவர்களாலும் அந்த ஆங்கிலேய அரசால் அமைக்கப்பட்ட ஓர் இயக்கம் என்று கூறப்படுகிறது. என்ன விந்தை இது.
ஆங்கிலேய ஆட்சிக்கு வால் பிடித்தவர்கள் யார் எனபதைப் பார்ப்போம்.
லாஹூரிலிருந்து வெளிவரும் சட்டான் என்னும் பத்திரிகையில் அஹ்லேசுன்னத்துகளைப்பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளது:
"இவர்கள் அங்கிலேயர்களைக் குறித்து 'உலளுள் அம்ரி' (அதாவது மக்கள் எவர்களுக்கு கட்டுப்பட வேண்டுமோ அவர்கள்) என்று கூறினார்கள். இந்த ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்யும் இந்த நாடு 'தாருஸ் ஸலாம்' (அமைதியான நாடு) என்றும் பத்வா (மார்க்கத் தீர்ப்பு) வழங்குகிறார்கள் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இவர்கள் குறிப்பிட்ட ஒரு காலத்திற்குப் பிறகு ஒரு மார்க்க இயக்கமாக மாறிவிட்டார்கள்". (சட்டான் 15-10-83 )
இதற்குப் பதிலளித்த தூஃபான் என்னும் பத்திரிக்கை கீழ்வருமாறு எழுதுகின்றது.
ஆங்கிலேயர்கள் மாபெரும் தந்திரத்துடனும் சாமார்த்தியத்துடனும் 'அஹ்லே ஹதீஸ்' என்னும் வஹ்ஹாபி இயக்கத்தை இந்தியாவிலும் உருவாக்கி தமது கைகளாலேயே அதற்க்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டி அதனை வளர்ச்சியடைய செய்தார்கள்.(தூஃபான். 7-11-83)
இவ்வாறு சுன்னிகளும் வஹ்ஹாபிகளும் அங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டவர்கள் என்றும் மேலும் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.
வஹ்ஹாபிகளின் நத்வதுல் உலமா என்ற நிறுவனம் அங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டதென்றும் இந்நிறுவனத்திற்கு ஆங்கிலேயர்களிடமிருந்து மாதந்தோறும் உதவித்தொகை கிடைத்துக்கொண்டிருந்ததென்றும் அதன் ஆலிம்கள் பிரிட்டீஸ் அரசிடமிருந்து சம்பளம் பெற்று வந்தார்கள் என்றும் கூறுகின்ற வரலாற்று உண்மையை எவராலும் மறுக்க முடியாது.
வஹ்ஹாபிகளின் ஆலிம்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் நத்வத்துல் உலமா என்னும் பள்ளிக்கூடத்தின் நோக்கம் ஆங்கிலேய ஆட்சியின் அருட்கொடைகளை நன்கறிந்து இந்த அரசின் மீது நம்பிக்கையை வளர்ப்பதற்குப் பாடுபடும் ஆலிம்களை உருவாக்குவதுமாகும். என்று அந் நத்வா என்னும் பத்திரிக்கை கூறுகிறது.
எனவே, ஆங்கிலேய ஆட்சியிலிருந்து சம்பளம் பெற்று அவர்களுக்கு வால் பிடித்த கைக்கூலிகளும், கைப்பாவைகளும் யார் என்பதை உண்மையை ஒப்புக் கொள்பவர்களால் உணர முடியும்.
அஹ்மதியா இயக்கம் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்ற மிகப் பழமையான ஊசிப்போன குற்றச்சாட்டு இவர்களின் தஜ்ஜாலியத்திற்கான சிறந்த உதாரணமாகும். ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் தமது வருகையின் நோக்கத்தைப்பற்றி இவ்வாறு அறிவிக்கின்றார்கள்.
"நான் சிலுவையை உடைப்பதற்கும் பன்றியை கொல்வதற்கும் அனுப்பப்பட்டுள்ளேன்." (பத்ஹே இஸ்லாம் பக்-17)
"கிறிஸ்தவர்களுடைய கடவுளை இனியாவது மரணிக்கச் செய்யுங்கள். எவ்வளவு காலம்தான் நீங்கள் அவரை கடவுளாக்கிக் கொண்டிருப்பீர்கள்? இதற்க்கு ஒரு முடிவே இல்லையா?"(இஸாலே ஔகாம் பக்-469)
சிலுவை கொள்கை என்பது கிறிஸ்தவர்களான ஆங்கிலேயர்களின் உயிரோடு ஒன்றிவிட்ட ஒன்று. அதனை தகர்க்க வந்துள்ளதாகக் கூறும் ஒருவர் அவர்களால் நியமிக்கப்பட்டவராகவோ, அவர்களுடைய ஆதரவாளர்களாகவோ எவ்வாறு இருந்திருக்க முடியும்?
மேலும் கிறிஸ்தவர்களுடைய கடவுளை மரணிக்கச் செய்ய வேண்டும் என்று கூறுபவர் எவ்வாறு ஆங்கிலேயர்களின் நண்பராக இருந்திருக்க முடியும்?
ஆங்கிலேய ஆட்சியின் போது கிருஸ்தவ பாதிரிமார்களை ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் தஜ்ஜால் என்று துணிந்து சொன்னார்கள். இத்தகைய ஒருவர் ஆங்கில அரசின் பிரதிநிதியாக இருந்திருக்க முடியும்? கிருஸ்தவ தெய்வமான இயேசு இறந்துவிட்டதாக ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அப்போதிருந்தே கூறி வருகின்றார்கள். அதற்க்கு மாறாக இயேசு ஈசா நபி -அவர்கள் வானத்தில் உயிருடன் இருக்கிறார் என்று இவர்கள் அப்போதிருந்தே கூறிவருகின்றார்கள். இப்போது இங்கு எழுகின்ற கேள்வி, கிறிஸ்தவர்களான ஆங்கிலேய ஏகாதிபத்திய வாதிகளின் கடவுள் இறந்து விட்டதாகக் கூறுகின்றவர் ஆங்கிலேயர்களின் ஆதரவாளர்களா? அல்லது அவர்களின் கடவுள் உயிருடன் வானத்தில் இருப்பதாக கூறும் இவர்கள் அவர்களின் ஆதரவாளர்களா?
தொடர்ந்து அல் அமீன் ஆசிரியர் எழுதுகிறார். "மிர்ஸாவின் எழுத்துக்களின் தரமும் தான் ஓர் இறை தூதுவர் என்று கூறும் பட்சத்தில் பொருந்தும்படியாக இல்லை. ஒரு சாதாரண நபர் எழுதுவது போல் அமைந்துள்ளது"
இவரிடம் நாம் கேட்க விரும்புவது, அவர் இறைவன் மீது ஆணையிட்டு தமது நெஞ்சத்தில் கைவைத்துக் கூறட்டும். ஹஸ்ரத் அஹமத்(அலை) உருது, பார்சி, அரபி மொழிகளில் எழுதிய புத்தகங்களில் ஏதாவது ஒன்றை அவர் வாசித்ததுண்டா? நிச்சயமாக கிடையாது. இவ்வாறிருக்க ஹஸ்ரத் நபிகள் நாயகத்திற்கு வேதம் கற்றுக் கொடுத்தவர் ஒரு யூதர்தாம்: பெருமானார் (ஸல்) அவர்களுக்கு எதுவுமே தெரியாது என்றுக் கூறிக்கொண்டிருக்கும் யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் பின்பற்றி நீர் எதற்க்காக இறைவனுடைய கோபங்களுக்கும், சாபங்களுக்கும் ஆளாகின்றீர்.
ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் கிரந்தங்களைப் படித்து ஆராய்ந்து மௌலான அபுல் கலாம் ஆசாத் இவ்வாறு வரைகிறார்கள்.
மர்ஹூம் (மறைந்த தலைவர்) மகத்துவம் மிக்கவராக விளங்கினார். அவருடைய நாவும், பேனாவும் மிகவும் சக்திவைந்தவையாகவும் மக்கள் உள்ளங்களை வசப்படுத்துபவையாகவும் இருந்தன. அவருடைய விரல்கள் மூலம் புரட்சிகள் தோன்றிக்கொண்டிருந்தன. அவருடைய இரண்டு கைகளும் சக்திவாய்ந்த மின்சாரக் கம்பிகளாக இருந்தன. மர்ஹூம் கடந்த முப்பது ஆண்டுகாலமாக மார்க்க உலகில் இத்தகு புரட்சியினை ஏற்படுத்தக்கூடிய இப்படிப்பட்ட பெரியவர்கள் உலகில் எல்லாக்காலங்களிலும் தோன்றுவதில்லை. ..... மர்ஹூம் மார்க்க உலகில் எவராலும் வெல்ல முடியாத மிகப் பெரும் வெற்றிவீரராக திகழ்ந்தார் என்பதை எம்மால் மறுக்க இயலாது. (வக்கீல் ஜூன் 1908)
மற்றொரு பேரறிஞரான அல்லாமா நியாஸ் பதஹ்பூரி இவ்வாறு எழுதுகிறார்:
"அஹ்மதியா இயக்கத்தின் தூய ஸ்தாபகர் அசாதாரமான அறிவும் ஞானமும் சிந்தனைத் திறனும் பெற்ற மனிதராக விளங்கினார். மிர்ஸா சாஹிபின் வாழ்க்கை வரலாறு அவருடைய போதனைகள், தத்துவங்கள், அவர் நிகழ்த்திய மாபெரும் ஆன்மீகப் புரட்சி, அவருடைய திருமறை ஞானம் கொள்கைகள் ஆகியவற்றை விளக்கமாகப் படித்து ஆராய்வதற்கு முழு மனித ஆயுளும் போதாது ஆனால் நான் இதுவரை செய்த ஆராய்ச்சியின் அடிப்படையில் பார்க்கும் போது ஹஸ்ரத் மிர்ஸா சாஹிப் ஓர் அசாதரணமான ஆன்மீக சக்தி பெற்ற ஒரு மாமேதையும், மஹ்தி என்று வாதம் புரிவதற்கு முழு தகுதியும் பெற்றவர் என்று என்னால் தைரியமாக கூற முடியும் (நிகார்)
உண்மை இவ்வாறிருக்க அல் அமீன் ஆசிரியர் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் மகத்துவமிக்க மாபெரும் கிரந்தங்களை கீழ்த்தரமாக எடைபோடுவது, தன்னை அறியாமையின் சிகரத்தில் அமர்த்தியிருக்கிறார் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டாகும்.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.