டிசம்பர் 25 ஆம் நாளைக் கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறந்த நாளாக - கிறிஸ்மஸ் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள். ஆனால் இயேசுவின் பிறந்த நாள் டிசம்பர் 25 அல்ல!
இயேசு டிசம்பர் மாதத்தில் பிறக்கவில்லை என்பதற்குப் பைபிளிலேயே ஆதாரம் இருக்கிறது. லூக்கா 2:8 இல் இயேசு பிறந்த நிகழ்ச்சியை விவரிக்கையில், "அப்போது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல் வெளிகளில் தங்கி இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இயேசு பிறந்த யூதேயா நாட்டில் டிசம்பர் மாதம் குளிர்காலமாகும். இக்காலத்தில் இரவில் பனி கொட்டும். அதனால் இரவில் வயல் வெளிகளில் தங்க இயலாது. எனவே இயேசு பிறந்த நாட்களில் மேய்ப்பர்கள் வயல் வெளிகளில் தங்கினார்கள் என்றால், அது டிசம்பர் மாதமாக இருக்க இயலாது.
லூக்காவின் இந்த வசனம் குறித்து, பிஷப் பார்ன்ஸ் என்பவர் தமது 'ரைஸ் ஆப் கிறிஸ்டியானிட்டி' (Rise of chiristianity) என்ற நூலில் 79 - ஆம் பக்கத்தில் கீழ்க்காணுமாறு வரைந்துள்ளார்:
"டிசம்பர் 25 -இல் தான் இயேசு பிறந்தார் என்ற நம்பிக்கைக்கு எந்த அடிப்படையுமில்லை! லூக்காவின் இயேசு பிறந்த கதைக்கு நாம் முக்கியத்துவம் தந்தாள், பெத்தலகம் அருகில் உள்ள வயல் வெளிகளில் இரவில் மேய்ப்பர்கள் மந்தையைக் காத்தது குர்லிகாலத்தில் நிகழ வாய்ப்பில்லை. யூதேயா நாட்டின் மலைப்பிரதேசமான இப்பகுதியில் இரவில் பனி கொட்டும். இதனால் இயேசு குளிர் காலத்தில் பிறந்திருக்க முடியாது என்ற முடிவிற்கே வர வேண்டியதிருக்கிறது. மிகுந்த சர்ச்சைக்களுக்குப் பிறகு கி.பி. 300-இல் நமது கிறிஸ்மஸ் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இது குறித்து "என்சைக்ளோ பீடியா பிரிட்டானிக்கா" வில் 'கிறிஸ்மஸ்' என்ற தலைப்பில் கீழ்க்காணுமாறு காணப்படுகிறது:
"கிரிஸ்து பிறந்த சரியான நாளும் ஆண்டும் திருப்திகரமாகத் தீர்மானிக்கப்படவில்லை. ஆயினும் கி.பி. இல் திருச்சபையினர் இந்தக் கொண்டாட்டத்திற்காக ஒரு நாளைத் தீர்மானித்தார்கள். மக்களின் மனதில் ஆழப் பதிந்திருந்த பனிக்காலத்தில் மிகப் புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுத்தார்கள்."
(15 ஆம் பதிப்பு, பாகம் 5, பக்கம் 642)
சேம்பர்ஸ் என்சைக்ளோ பீடியாவில் இது குறித்து கீழ்க்காணுமாறு காணப்படுகிறது:
"......... மேலும் ரோமாபுரியில் டிசம்பர் 25 ஆம் நாள், நாட்டுப் புற மக்களின் பண்டிகை நாளாகும். கிறிஸ்தவ திருச்சபையினரால் இந்தப் பண்டிகையை மக்களின் பழக்கத்திலிருந்து அகற்ற முடியவில்லை. இதனால் அதையே புனிதப்படுத்தி விட்டார்கள்."
இந்த இரண்டு என்சைக்ளோ பீடியாக்களின் கருத்தையும் பீக் என்பவரின் பைபிள் விரிவுரை ஆதரிக்கிறது. அவர் தமது விரிவுரை நூலில் 727 ஆம் பக்கத்தில் கூறுவதைப் பாருங்கள்:
"(இயேசு பிறந்த) அந்தக் காலம் டிசம்பர் மாதம் அல்ல. நமது கிறிஸ்மஸ் மேலை நாட்டவரால் பிற்காலத்தில் ஏற்ப்படுத்தப்பட்டதொன்றாகும்.
இவற்றிலிருந்து இயேசு டிசம்பர் மாதத்தில் பிறக்கவில்லை என்பது உறுதியாகிறது.
கிறிஸ்த்துவத்தின் தோற்றம் பற்றி வரலாற்று ஆய்வு மற்றும் லூக்காவின் மேற்கண்ட கூற்று இவற்றைக் கண்ட பிறகும் இயேசு டிசம்பர் மாதத்தில் பிறந்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்பி வருவது விநோதமாக இருக்கிறது. ஆதாரமற்றவற்றில் நம்பிக்கை கொள்வதுதான் கிறிஸ்தவமா?
லூக்காவின் மேற்கண்ட கூற்றுப் படிப் பார்த்தால் இயேசு கோடைக் காலத்திலேதான் பிறந்திருக்க வேண்டும். கோடைக் காலத்தில்தான் லூக்கா கூறுவது போன்று இரவில் வயல் வெளிகளில் மந்தையை விட இயலும். எனவே இயேசுவின் பிறப்பு, ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தான் நிகழ்ந்திருக்க வேண்டும்.
இதனையே திருக்குர்ஆன் உறுதிப்படுத்துகின்றது. இயேசுவின் பிறப்பு நிகழ்ந்த போது மரியாளிடம் (மரியம் (அலை) அவர்களிடம்) மலைக்கு என்னும் வானவர் கீழ்க்காணுமாறு கூறியதாகத் திருக்குரானில் காணப்படுகிறது.
"(உமக்குப் பக்கத்திலுள்ள) பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உமது பக்கமாகக் குளுக்குவீராக. அது உம்மீது புத்தம் புதிய பழங்களை உதிர்க்கும்." (19:26)
யூதேயா நாட்டில் பேரீச்சம்பழம் கோடைக்காலமான ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலேயே கிடைக்கும். டாக்டர் டி, டேவிஸ் என்பவர் தமது "டிக்ஷனரி ஆப் தி பைபிள்' (Dictionary of the bible) என்னும் நூலில் 'ஆண்டு' என்ற தலைப்பின் கீழ் பேரிச்சம்பழம் யூத மாதமான 'எலுல்' மாதத்திலேயே கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பீக் என்பவரின் கமெண்டரி ஆன் தி பைபிள் ' (commentary on the bible) என்ற நூலில் 117 ஆம் பக்கத்தில் யூத மாதமான எலுல் ஆகஸ்ட், செப்டம்பரில் தான் வரும் எனக் கூறியுள்ளார்.
இவற்றிலிருந்து திருக்குர்ஆன் கூறுவது போன்று, பேரிச்சம்பழம் கிடைக்கும் கோடைக்காலமான ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திலேயே இயேசு பிறந்திருக்க வேண்டும் என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.
Blog RSS Feed
Via E-mail
Twitter
Facebook
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.