அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Aug 18, 2011

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் கொள்கையினை குறித்து சிராஜ் அப்துல்லாஹ்வின் அறியாமை


இக்காலத்தில் எல்லா இஸ்லாமிய பிரிவுகளும் பிற இஸ்லாமிய பிரிவுகளை குறைக் கூறிக் கொண்டு அவர்கள் இஸ்லாத்திற்கு முரணாக செயல்படுகிறார்கள், எனவே நாங்களே சரியான பிரிவு என்று ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு பிரிவை ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் ஏனைய இஸ்லாமிய பிரிவுகளை போல் சுயமாக ஒரு பிரிவை ஏற்ப்படுத்தவில்லை. அல்லாஹ்தான் இக்கால மக்களை சரி செய்வதற்காக தன் புறமிருந்து ஒருவரை அனுப்பியுள்ளான். அவர் அல்லாஹ் மற்றும் ரசூலால் முன்னறிவிக்கப்பட்ட இமாம் மஹ்தியும் மஸீஹும் ஆவார். அவரை பின்பற்றுவதன் மூலமே குழப்பங்களுக்கு தெளிவும் வழிகேட்டிலிருந்து நேர் வழியும் கிடைக்கும்.எனவே இறைவனால் ஏற்ப்படுத்தப்பட்ட அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தே இக்காலத்தில் உண்மையானதாகும்.கடந்த காலத்தில் மக்கள் வழி தவறிய போது அல்லாஹ் தன் புறமிருந்து நபிமார்களை அனுப்பியுள்ளான். இதனை அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்: 

நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள், தீயவர்களை விட்டு விலகுங்கள் என்ற கட்டளையுடன் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நிச்சயமாக நாம் தூதர்களை அனுப்பினோம்.(16:36) 

முஸ்லிம்கள் திருக்குர்ஆனையும், ஹதீஸயும் புரியாமல் தாமும் குழம்பி பிறரையும் குழப்பி பொய் படுத்தும்போது அவர்களுக்கு உண்மையை விளக்கி காட்டுவதற்காக அல்லாஹ் தன் புறமிருந்து தூதர்களை அனுப்புவதாக நபி (ஸல்) அவர்களிடம் உடன்படிக்கை செய்துள்ளான். இறைவன் குர்ஆனில் இதனை இவ்வாறு கூறுகின்றான்: 

அல்லாஹ் எல்லா நபிமார்களின் மூலம் உறுதிமொழி வாங்கிய நேரத்தை (நினைத்து பாருங்கள்) வேதம், ஞானம் ஆகியவற்றிலிருந்து நான் உங்களுக்கு கொடுத்திவிட்டு பின்னர் உங்களிடம் உள்ளதை மெய்ப்பிக்க கூடிய ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரிடம் நீங்கள் நம்பிக்கை கொண்டே ஆகவேண்டும். இன்னும் அவருக்கு உதவியும் செய்ய வேண்டும்............நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என்று அவர்கள் கூறினார். இப்போது நீங்கள் சாட்சியாக இருங்கள். நானும் உங்களுடன் சாட்சியாக இருக்கிறேன். (3:81) 

இன்று அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தின் கொள்கையினை குறித்தும் அதனுடைய இமாமினைக் குறித்தும் அவதூறாக அறியாமையினால் பேசி வரும் சகோதரர் சிராஜ் அப்துல்லாஹ் தான் எந்த அமைப்பினையும் சாராதவர் என்று தன்னை அறிமுகம் படுத்தியுள்ளார். இது போன்ற அவல நிலைகளுக்கு காரணம் அல்லாஹ் இக்காலத்தில் அனுப்பியுள்ள இமாமை அடையாளம் கண்டு கொள்ளாததே ஆகும். மற்ற எல்லா பிரிவுகளின் அவல நிலையை கண்டு அதில் தன்னை இணைத்துக் கொள்வதை அசிங்கமாக கருதுவதனால்தான் தான் எந்த பிரிவினையும் சாராதவர் என்று தன்னை பற்றிக் கூறியுள்ளார். இவர் நபி(ஸல்) அவர்களின் போதனை படி ஏன் நடக்க வில்லை என்பது நமக்கு ஆச்சரியமாக உள்ளது. ஒரு சமயம் அவருக்கு அந்த போதனை தெரியாமல் இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன். ஹஸ்ரத்  நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள கூறுகின்றார்கள்: 

ஹுதைபா பின் அல் யமான் (ரலி) அவர்கள் வினவ ........ ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) பதிலளித்தார்கள்...... நீ முஸ்லிம்களின் ஜமாஅத்தையும் அவர்களுடைய இமாமையும் பற்றிக் கொள். என்று பதிலளித்தார்கள். அதற்க்கு நான் அவர்களுக்கு ஒரு கூட்டமைப்போ ஒரு இமாமோ இல்லை(பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறார்கள்) என்றால்(என்ன செய்வது) என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள் அந்த பிரிவுகள் அனைத்தையும் விட்டு (விலகி) ஒதுங்கி விடு, ஒரு மரத்தின் வேர் பாகத்தை பற்களால் நீ கவ்வி பிடித்திருக்க நேர்ந்து அதே நிலையில் மரணம் உன்னை தழுவி கொண்டாலும் சரி (எந்த பிரிவோடும் சேர்ந்துவிடாதே) என்று பதிலளித்தார்கள். (புகாரி :ஹதீஸ்:3606 ,7084 ) 

இந்த நபி மொழியை பார்த்த பின்பாவது இமாமுடன் செயல்படும் ஒரே ஜமாஅத் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் என்பதை அறிந்து, புரிந்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் கட்டளைப்படி அதில் இணைந்து செயல்பட முன்வருவீர்கள் என்று நம்புகின்றேன். இல்லையெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது போன்று "இமாம் (ஐ ஈமான் கொள்ளாமல்) மரணிக்கிறாரோ அவரின் மரணம் ஜாஹிலான மரணமாகும்" (முஸ்னத் அஹ்மத் பின் ஹம்பல்: பாகம் 4 : பக்கம்: 96 ) 

இந்த ஹதீஸிற்கு ஏற்ப நீங்கள் ஜாஹிலானா மரணத்தை அடைய நேரிடும்.அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியினை வழங்குவானாக. ஆமீன்….. 

சிராஜ் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில்

அவரின் கேள்வி:

1) அல்லாஹ் தன்னை வல்லமை மிக்கவன் என்றும், ஞானமிக்கவன் என்றும், ஈஸா நபியை தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்றும் கூறுவதை நிராகரிப்பதனால் காதியானியாகிய நீங்கள் அல்லாஹ்வுக்கே அந்த வல்லமை ஞானம் இல்லை என்று நீங்கள் கூறுகின்றீர்களா? 

நமது பதில்: 

ஈஸா நபியை இறைவன் தன்னளவில் உயர்த்தவில்லை என்று நாங்கள் கூறவில்லை. அல்லாஹ்வுடைய வல்லமையும், ஞானத்தையும் நாங்கள் மறுக்கவில்லை. அவ்வசனத்தில் எங்காவது அல்லாஹ் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களை பூத உடலோடு உயர்த்தினான் என்று வந்துள்ளதா? அல்லாஹ் சொல்லாத ஒன்றை தாமாக கூறுவது இட்டுக் கட்டுவதாகும். இவ்வாறு இட்டுக்கட்டி கொண்டு அல்லாஹ்வுடைய வல்லமை, மற்றும் ஞானத்தை புரியாமல் இழிவுபடுத்தியுள்ளீர்கள். 

மனிதனை அல்லாஹ் உயர்த்தியதாக வரும் இடங்களிலெல்லாம் பதவி, அந்தஸ்த்து உயர்வையை குறித்துதான் திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளில் வந்துள்ளது. திருகுர்ஆனில் இவ்வாறு வருகின்றது: 

"உங்களுள் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் ஞானம் வழங்கப் பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான்" (58:11) 

ஹதீஸில் இவ்வாறு வருகின்றது: ஹஸ்ரத் ரசூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

"அடியான் பணிவினை மேற்கொள்ளும்போது அல்லாஹ் அவனை ஏழாவது வானத்திற்கு உயர்த்துகின்றான்" (கன்சுல் உம்மால், பாடம் அல் அவ்வலு பில் இக்லாக், தவாலுஉ என்ற தலைப்பின் கீழ், பாகம்:3, பக்கம்:110) 

மேலும் ஒரு ஹதீஸினை உங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன். மீராஜில் நபி (ஸல்) அவர்கள் ஏழு வானத்தை கடந்து உயர்ந்த போது மூஸா(அலை) கூறியதாக வந்துள்ளது: 

.......என் இறைவா! எனக்கு மேலே வேறு ஒருவர் உயர்த்தப் படுவார்என்று நான் எண்ணி இருக்கவில்லை. பிறகு நபி(ஸல்) அவர்களுடன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் அதற்க்கு மேலேயும் ஏறினார்,.......(புகாரி பாகம் 7, ஹதீஸ் 7517 பக்கம் :881) 

மேலும் ஹஸ்ரத் இத்ரீஸ் (அலை) அவர்களை அல்லாஹ் உயர்ந்த இடத்திற்கு உயர்த்தினான் என அதிகாரம் 19:57 ல் கூறியிருக்கிறான். இதை குறித்து நபி (ஸல்) அவர்கள் இத்ரீஸ் (அலை) அவர்கள் நான்காவது வானத்திற்கு உயர்த்தப்பட்டதையே குறிக்கும் என மீராஜின் நிகழ்ச்சியின் போது கூறினார்கள். (ஆதாரம் முஸ்லிம்: ஹதீஸ்: 259) 

மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து அல்லாஹ் ஒருவரை உயர்த்தினான் என்று வந்தால் அதற்க்கு பொருள் பதவி, அந்தஸ்த்து உயர்வுதான் என்பது தெளிவாகியுள்ளது. மீராஜ் நிகழ்ச்சி நபிமார்களுடைய அந்தஸ்து உயர்வை ஏழு படித்தரங்களாக நம்முன் படம் பிடித்துக் காட்டியுள்ளது. ஈசா(அலை) அவர்களும் இரண்டாவது வானத்தில் இருப்பதால் அதுவும் அவர்களின் பதவி உயர்வையே குறிக்கும். 

ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களின் உயர்வை குறித்து திருக்குர்ஆனில் மற்றொரு இடத்தில் இவ்வாறு வருகின்றது: 

"ஈஸாவே நாம் உமது உயிரை கைப்பற்றுவோம், இன்னும் எம்மளவில் உம்மை உயர்த்திக் கொள்வோம். (3:55) 

இவ்வசனத்தில் உயர்வுக்கு முன் அல்லாஹ் உயிரை கைப்பற்றுவதாக கூறியுள்ளான். ஈஸா (அலை) அவர்கள் உயர்த்தப் பட்டு விட்டார்கள் என்றால் அவர்கள் இறந்த பிறகே உயர்த்தப்பட்டுள்ளார். அல்லாஹ் கூறிய வரிசையில் நாம் மாற்றத்தை ஏற்ப்படுத்த முடியாது. இங்கு உயிரை கைப்பற்றுதல் என்பதற்கு வந்துள்ள அரபி வாசகம்,"முதவப்பீக" என்பதாகும். "முதவப்பீக" என்பதற்கு ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்: 

"உம்மை இறக்கச் செய்வேன்"(புகாரி:பாகம் 5, பக்கம்:253) 

என்ற பொருளையே வழங்கியுள்ளார்கள். எனவே ஈசா(அலை) அவர்களை குறித்து வந்துள்ள உயர்வு என்பது அவரின் மரணத்திற்குப் பின்பு வந்த உயர்வையே குறிக்கும். 

அடுத்து வல்லமை மற்றும் ஞானம் குறித்து நாங்கள் ஒன்றும் மறுக்க வில்லை. ஆனால் அல்லாஹ்வின் வல்லமை மற்றும் ஞானம் குறித்து அறியாத நீங்கள், நாங்கள் அல்லாஹ்வின் வல்லமை, ஞானத்தை மறுப்பதாக கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. 

அல்லாஹ்வின் வல்லமை, ஞானம் குறித்து வரும் திருக்குர்ஆனில் பிற இடங்களை நீங்கள் படித்து பாருங்கள் அல்லாஹ்வின் வல்லமை,ஞானம் உங்களுக்கு புரியும். இன்ஷா அல்லாஹ். ஈசாவை அல்லாஹ் உடலோடு உயர்த்தாமல் இருக்கும்போது அல்லாஹ் செய்யாத ஒன்றை அவன் மீதே திணித்து அது அல்லாஹ்வுடைய வல்லமை என்று சொல்வது வேடிக்கையாக இருக்கின்றது. அல்லாஹ்வுக்கு வல்லமை இருக்கிறது என்பது வேறு, அவன் செய்ய மாட்டான் என்பது வேறு. இவ்விரண்டையும் குழப்பக் கூடாது. இறைவன் திருமறையில் கூறுகின்றான்: 

"நீர் வானத்திற்கு ஏறிச் செல்ல வேண்டும். நாங்கள் படிக்கத்தக்க நூலை எங்களுக்கு கொண்டு வராத வரை நீர் வானத்திற்கு சென்றதையும் நாங்கள் நம்ப மாட்டோம். நீர் கூறுக என் இறைவன் சுப்ஹான் (தூயவன்) ஆக இருக்கின்றான். நான் ஒரு மனிதனாகிய தூதரே அன்றி வேறில்லை."(17:93) 

வல்லமை, ஞானம் பற்றி பிதற்றிய நீங்கள் இவ்வசனத்தில் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் வானத்திற்கு உயர்த்துவதற்கு வல்லமை இல்லை என்று கூறப் போகின்றீர்களா? இறைவன் தன்னுடைய நடைமுறைக்கு மாறாக விண்ணிற்கு ஒருவரை உயர்த்துவதை தன் தூய்மைக்கு கலங்கமாக மேற்கண்ட வசனத்தில் தெளிவுபடுத்தியுள்ளான். 

அவரின் கேள்வி:

காதியானி அமைப்பை சார்ந்த சபர் அவர்களே உங்கள் கருத்துப்படி ஈஸா (அலை) அவர்கள் கொல்லப் பட்டார் என்றால் அவரை கொன்றது யார்? 

நமது பதில்: 

ஈஸா(அலை) அவரகளை யாரும் கொல்லவும் இல்லை.அல்லாஹ் உடலோடு வானத்திற்கு உயர்த்தவும் இல்லை. மாறாக அவர்கள் தன்னுடைய 120 ஆவது வயதில் இயற்கையாக மரணமடைந்தார்கள்.(ஆதாரம்: கன்சுல் உம்மால்: பாகம் 11,பக்கம் 479,பதகுல் பயான்:பாகம்2,பக்கம் 247) இது திருக்குர்ஆன் மற்றும் நபி மொழியின் அடிப்படையில் எங்களின் உறுதியான நம்பிக்கையாகும். இவ்வாறு இருக்க ஈஸா (அலை) கொல்லப்பட்டதாக நாங்கள் நம்புவது போல் அரைகுறையாக நீங்கள் ஏன் எழுதியுள்ளீர்கள். ஒன்றை குறித்து தெளிவாக தெரியவில்லை என்றால் மனையிச்சையினபடி எல்லாம் யூகம் செய்யக் கூடாது. சம்பந்தம் பட்டவர்களிடம் அது குறித்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். சரி போகட்டும் இனியாவது இவ்வாறு எழுதி வருவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். 

சிராஜின் கருத்து:

ஈஸா (அலை) அவர்கள் கொல்லப்படவுமில்லை,சிலுவையில்அறையப் படவுமில்லை. மேலும் இயற்கையாக இன்னும் மரணிக்கவுமில்லை. என்று அல்லாஹ் அருள்மறைக் குர்ஆனில் சாட்சி கூறுகின்றான். 

விளக்கம்: 

அல்லாஹ் திருமறையில் இவ்வாறுக் கூறுகின்றான்: 

"நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதர் மர்யமின் மகன் ஈஸா மசீஹை கொன்று விட்டோம், என்ற அவர்களின் கூற்றினாலும் (இத்தண்டனை அவர்களுக்கு கிடைத்தது) ஆனால் அவர்கள் அவரை கொலை செய்யவுமில்லை, அவர்கள் அவரை சிலுவையில் அறைந்து கொல்லவுமில்லை.மாறாக அவர்களுக்கு அது சந்தேகத்திற்குரியாதாக ஆக்கப்பட்டது."(4:157) 

மேற்க கண்ட வசனத்திலிருந்து ஈஸா (அலை) அவர்கள் கொல்லப் படவில்லை என்று தெளிவாக தெரிகிறது ஆனால் சிராஜ் அவர்கள் கூறியது போல் இயற்கையாக இன்னும் மரணிக்கவில்லை என்று எங்கும் வர வில்லை. நீங்கள் கூறும் வசனம் திருக்குர்ஆனில் எங்கே இருக்கிறது?குர்ஆனின் மீது இட்டுக் கட்டுவதற்கு எவ்வாறு உங்களுக்கு துணிச்சல் வந்தது? யூதர்கள் ஈஸா(அலை) அவர்களை கொன்று விட்டோம் என்றும்,சிலுவையில் அறைந்து கொன்றுவிட்டோம் என்றும் கருதி வந்தனர். அதற்க்கு அல்லாஹ் அவரை கொல்லவுமில்லை, சிலுவையில் அறைந்து கொல்லவுமில்லை, என பதில் அளித்துள்ளான். அதனால் அவர் இறக்கவே இல்லை என்று பொருள் கொள்ள முடியாது. ஒருவரை குறித்து அவர் விபத்திலும் இறக்கவில்லை, யாரும் அடித்தும் கொல்லவில்லை, குத்தியும் கொல்லவில்லை என்று கூறினால் அவர் இறக்கவே இல்லை என்று பொருள்படாது. மேற்கண்ட வகையில்தான் கொல்லப்படவில்லை என்றுதான் பொருள்படும். 

சிலுவையில் அறையப்படவுமில்லை என நீங்கள் "மா ஸலபுஹு"என்ற வார்த்தைக்கு தவறான பொருளை கொடுத்துள்ளீர்கள். "ஸலபு"என்றால் ஒருவரை சிலுவையில் ஏற்றி எலும்புகளை முறித்து கொல்வதை குறிக்கும்.(ஸலபு) இத்துடன் "மா"(இல்லை) என்ற சொல் வரும்போது சிலுவையில் அறைந்து கொல்லவில்லை என்றுதான் பொருள்படும். மாறாக சிலுவையில் அறையவில்லை என்று பொருள்படாது. திருக்குர்ஆன் அகராதியிலும் இதே பொருள்தான் வழங்கப்பட்டுள்ளது. திருக்குர்ஆனில் கீழ்க் கண்ட இடங்களில் "ஸலபு"என்ற சொல் காணப்படுகின்றது. 
(5:33,7:124,12:41,20:71,26:49,86:7) 

இவ்வசனங்களில் சிலுவையில் அறைவேன் என்றும், சிலுவையில் அறைந்து எலும்புகளை முறித்தல் என்றும் வந்துள்ளதால் கொல்லப்படுவதாக எங்கே வந்துள்ளது என வீணாக எண்ணி விட வேண்டாம். சிலுவையில் அறைவதன் நோக்கமே அவரை கொல்வதுதான். சிலுவையில் அறைந்து அழகு பார்ப்பதற்கு அல்ல. 

தமிழில் சிலுவையில் அறைந்து கொல்லுதல் + இல்லை இவற்றை சேர்த்து படித்தால் சிலுவையில் அறைந்து கொல்லவில்லை என்பதுதான் பொருள். மாறாக சிலுவையில் அறையவில்லை என்பதல்ல. இதே இலக்கணம்தான் அரபியிலும் கையாளப்படுகின்றது. "சலபு" என்ற சொல்லுடன் "மா" சேரும்போது சிலுவையில் அறைந்து கொல்லவில்லை என்றே வருமே தவிர சிலுவையில் அறையவில்லை என்று பொருள் வராது. சிலுவையில் அறையவில்லை என்பதுதான் பொருள் என நீங்கள் பிடிவாதம் பிடித்தால் சிலுவையில் அறைந்து கொல்லவில்லை என்பதற்கு அரபியில் என்ன வார்த்தை வரும் என்பதை தெரிவிக்கவும். 

உலகில் தோன்றிய நபிமார்களுக்கெல்லாம் கஷ்டங்களும்,சோதனைகளும் வந்துள்ளன. அவர்கள் ஏச்சு பேச்சு அடி உதை வெட்டு குத்து போன்ற துன்பங்களுக்கும் இலக்காகியுள்ளார்கள். ஏன், முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வீட்டினை எதிரிகள் சுற்றி வளைத்து அவர்களின் தலைக்கு வெகுமதி வைத்த போது அல்லாஹ் அவர்களை உடலோடு விண்ணிற்கு உயர்த்தவில்லை, ஏன், மக்காவிலிருந்து மதீனா வரைக் கூட தூக்கிச் சென்று விடவில்லை. இன்னும் சொல்லப் போனால், நபி(ஸல்) அவர்கள் உஹது போரில் காயங்கள் பலமாக ஏற்ப்பட்டு மயக்கமுற்று கீழே விழுந்தார்கள். அப்போது கூட அல்லாஹ் அவர்களை உயிரோடு வானத்திற்கு உயர்த்தவில்லை. இவ்வாறான கஷ்டங்களையும்,துன்பத்தினையும் அனுபவித்தப் பிறகே அல்லாஹ் அவர்களுக்கு உதவியையும், வெற்றியையும் வழங்கினான். அல்ஹம்துலில்லாஹ்...இதுவே எல்லா நபி மார்களோடு அல்லாஹ்வின் நடைமுறையாகும். 

அவரின் கேள்வி:

ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் இயற்கையாக மரணமடைந்தார்கள் என்றால், அதற்க்கான குர்ஆன் ஆதாரம் எங்குள்ளது?காட்டவும். 

நமது பதில்: 

உலகில் தோன்றிய அனைத்து மக்களும் ஏன், நபிமார்கள் கூட மரணித்து வருவதே இயற்க்கை. இதை உணராமல் இயற்க்கைக்கு முரணாக ஈஸா நபி உயிரோடு இருப்பதாக கூறிக் கொண்டு மரணித்ததற்கு ஆதாரம் கேட்டிருப்பது வியப்பாக உள்ளது. இருந்த போதிலும் குர் ஆனின் தெளிவுகளை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற அடிப்படையில் சில ஆதாரங்களை கீழே தருகிறோம்: 

ஆதாரம்:1 

"மர்யமின் மகன் ஈஸாவே! நீர் மக்களிடம் அல்லாஹ்வை அன்றி என்னையும் என் தாயாரையும் இரண்டு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று கூறினீரா? என அல்லாஹ் கேட்ட பொழுது அவர் நீ தூயவன், எனக்கு தகாததை நான் கூறியதில்லை. நான் அவ்வாறு கூறியிருப்பின் நிச்சயமாக நீ அதனை தெரிந்திருப்பாய். என் உள்ளத்திலுள்ளதை நீ அறிவாய் உன் உள்ளத்திலுள்ளதை நான் அறியேன். நிச்சயமாக நீயே மறைவானவற்றை நன்கு அறிந்தவனாவாய். நீ எனக்கு கட்டளையிட்டப்படி என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வே வணங்குங்கள் என்பதையே நான் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களுடன் இருந்த காலம் வரை அவர்களுக்கு நான் சாட்ச்சியாக இருந்தேன், ஆனால் நீ என் உயிரை கைப்பற்றிய பின் நீயே அவர்களை கண்காணித்தவனாக இருந்தாய். மேலும் நீயே எல்லாவற்றிற்கும் சாட்சியாளனாக இருக்கிறாய் என்று கூறினார்.(5:116,117) 

மேற்க்கனட வசனத்தில் ஈஸா (அலை) உயிருடன் இருந்த காலம் அவரின் உயிர் கைப்பற்றப்பட்டக் காலம், ஆகிய இரண்டு காலம் குறித்து வந்துள்ளது. அவர் உயிருடன் இருந்த காலம் வரை அவரை யாரும் வணங்கவில்லை. அதற்கு அவர் சாட்சியாக இருப்பது தெரிகிறது. உங்களின் நம்பிக்கை படி அவர் இன்னும் உயிரோடு இருப்பதாக இருந்தால் அவர் மீண்டும் இவ்வுலகிற்கு வரும்போது மக்கள் தன்னை வணங்குவதை கண்டிருப்பார். அதை கண்டித்து அறிவுறுத்தியிருப்பார். இதை குறித்து அல்லாஹ்விடம் நான் மீண்டும் உலகிற்கு செல்லும்போது மக்கள் என்னை வணங்கி கொண்டிருப்பதை கண்டேன். அவர்களை கண்டித்து உண்மையை கூறினேன். என அவர் கூறியிருப்பது குர்ஆனில் இடம்பெற்றிருக்கும். அவர் உயிருடன் இருந்தால் அவர் மீண்டும் உலகிற்கு வருவது குறித்தும் , தன்னை யாரும் வணங்க வேண்டாம் என அறிவுறுத்தியது ஏன் இடம்பெறவில்லை. மேற்கண்ட வசனத்தில், நான் உலகில் இருந்த காலம் வரை மக்கள் அல்லாஹ்வைத்தான் வணங்கினார்கள். என்னை யாரும் வணங்கவில்லை அதற்க்கு தானும் சாட்சி, அல்லாஹ்வும் சாட்சி என கூறியுள்ளார். தனது உயிரை கைப்பற்றிய பின் என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது அல்லாஹ்வே நன்கு அறிவான் என்பதை விளக்கியுள்ளார். இவ்வசனத்தில் இடம்பெற்றுள்ள"தவப்பைத்தனி" என்பதற்கு " நீ என் உயிரை கைப்பற்றிய பின்"என்று பொருளாகும். 

"தவப்பா" என்ற சொல் திருக்குர்ஆனில் அனைத்து இடங்களிலும்உயிரை கை பற்றுதல் என்ற பொருளில்தான் கையாளப்பட்டுள்ளது. அல்லாஹ் ஒரு மனிதனை கை பற்றியதாக வந்தால் அதற்க்கு மரணம் என்பது மட்டுமே பொருளாகும். நீங்கள் கூறுவது போல் உடலோடு கை பற்றுதல் என்ற ஒரு பொருள் இருக்குமேயானால் அதற்கு ஏதேனும் ஒரே ஒரு ஆதாரம் திருகுர்ஆன் நபி மொழிகளிலிருந்து காட்ட முடியுமா? இந்த சொல் வந்துள்ள அதே வசனத்தை (5:117) நபி (ஸல்) தனக்காகவும் பயன்படுத்தியுள்ளார்கள்: 

"என் தோழர்களில் சிலர் வலப் பக்கமும் இடப் பக்கமும் கொண்டு செல்லப் படுவார்கள். நான் இவர்கள் என் தோழர்கள் என்று கூறுவேன். இவர்களை விட்டு நீங்கள் பிரிந்ததிலிருந்து இவர்கள் தன் கால் சுவடுகளின் வழியே திரும்பி சென்று கொண்டிருந்தார்கள்." என்று சொல்லப்படும் அதற்கு நான் நல்லடியாரான மர்யமின் மகன் ஈசா (அலை) அவர்கள் சொன்னது போன்றே நான் இவர்களிடையே வாழ்ந்து வந்த வரை நான் இவர்களை கண்காணித்து கொண்டிருந்தேன். நீ என் உயிரை கைப்பற்றிய போது நீயே இவர்களை கண்காணிப்பாளனாக இருந்தாய் ............(புஹாரி 3447,4625) 

மேற்கண்ட நபிமொழியில் நபி (ஸல்) அவர்கள் ஈசா நபி தனக்காக என் உயிரை கைப்பற்றிய பின் என்று பயன்படுத்திய "தவப்பைதனி"என்ற சொல்லையே பயன்படுத்தயுள்ளர்கள். இச்சொல்லுக்கு இரு வேறு பொருள் கொடுக்க முடியாது. 

இச்சொல் திருக்குர்ஆனில் (3:55) ஈசா நபி (அலை) அவர்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. அச்சொல்லிற்கு ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இறப்பு என்ற பொருளையே கொடுத்துள்ளார்கள். (புஹாரி பாகம் 5 பக்கம் 273 ) 

மேற்கண்ட ஆதாரங்களில் இருந்து ஈசா (அலை) அவர்களின் மரணம் உங்களுக்கு தெளிவாகி இருக்கும் என்று நினைக்கிறோம். 

ஆதாரம்:2 

முஹம்மது ஒரு தூதர் மட்டுமே ஆவார். அவருக்கு முன் தோன்றிய தூதர்கள் மரணமடைந்து விட்டனர். (3:144) 

மேற்கண்ட வசனத்தில் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன் தோன்றிய தூதர்கள் அனைவரும் இறந்து விட்டனர். உயிருடன் ஒருவரும் இல்லை என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. 

நபி (ஸல்) அவர்கள் உஹது போரில் மயக்கமடைந்து விழுந்த போது முஹம்மது (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்ற வதந்தி பரவியது. இதனால் பலர் நபி எப்படி இறப்பார் எனக்கருதி இஸ்லாத்தை விட்டு வெளியேறினர். அதற்கு பதில் அளிக்கும் வகையில் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன்னுள்ள தூதர்கள் அனைவரும் இறந்து விட்டனர் என்று அல்லாஹ் உறுதி செய்துள்ளான். ஈசா (அலை) அவர்கள் உயிருடன் இருந்தால் அல்லாஹ் முன்னுள்ள தூதர்கள் அனைவரும் இறந்து விட்டனர் என எவ்வாறு கூறுவான். ஈசா (அலை) அவர்கள் உயிருடன் இருந்தால் அங்கு இருந்த நபித்தோழர்கள் ஈசா (அலை) இன்னும் உயிருடன் இருக்கும் போது நபி (ஸல்) எப்படி இறப்பார்கள் என கேள்வி எழுப்பி இருப்பார்கள். எனவே இச்சம்பவத்திலிருந்து ஈசா (அலை) உட்பட எல்லா நபிமார்களும் இறந்து விட்டது தெளிவாகிறது. 

முஹம்மது (ஸல்) அவர்கள் இறந்த போது ஹஸ்ரத் உமர் அவர்கள் நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை உயிருடன் உள்ளார்கள் என வாளேந்தி  நின்ற போது ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் மேற்கண்ட திருக்குர்ஆன் வசனத்தை ஒதி நபி (ஸல்) உட்பட அவருக்கு முன்தோன்றிய எல்லா நபிமார்களும் இறந்து விட்டதை உறுதி செய்தார்கள் அந்த நபிமொழி: 

"அபூபக்கர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வை புகழ்ந்து விட்டு எவர் முஹம்மது(ஸல்) அவர்களை வணங்கிக்கொண்டிருந்தாரோ அவர் முஹம்மது(ஸல்) இறந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். எவர் அல்லாஹ்வை வணங்கிக்கொண்டிருந்தாரோ அவர் அல்லாஹ் உயிருடன் இருப்பவன் இறக்கமாட்டான் என்பதை புரிந்து கொள்ளட்டும். மேலும் நபியே நீங்கள் இறக்க இருப்பவர்தாம். அவர்களும் இறக்கக்கூடியவர்களே.(39:30) எனும் வசனத்தையும் முஹம்மது ஒரு இறை தூதரே அன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் இறை தூதர்கள் காலம் சென்று விட்டார்கள். எனவே அவர் இறந்து விட்டாலோ அல்லது கொல்லப்பட்டுவிட்டாலோ நீங்கள் உங்கள் குதி கால்களில் திரும்பி சென்று விடுவீர்களா?.........(3:144) வசனத்தை ஓதினார்கள். ( புகாரி ஹதீஸ்: 3667,3668 ) 

மேற்கண்ட நபி மொழியிலிருந்தும் நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் போது முஹம்மது(ஸல்) அவர்களுக்கு முன்னுள்ள தூதர்கள் இறந்து விட்டனர். அது போல் முஹம்மத்(ஸல்) அவர்களும் இறந்து விட்டார்கள் என்று ஆதாரத்தை எடுத்து வைத்தார்கள். அங்கிருந்த சஹாபாக்களில் ஒருவர் கூட ஈஸா (அலை) உயிரோடு இருக்கும்போது முஹம்மது(ஸல்) அவர்கள் எப்படி இறப்பார்கள் என்ற கேள்வியை எழுப்பவில்லை.

இந்நிகழ்ச்சிகளிலிருந்து சஹாபாக்களின் ஏகோபித்த கருத்து (இஜ்மா) ஈஸா(அலை) உட்பட அனைத்து தூதர்களும் இறந்து விட்டனர் என்பதாகும். 

இந்நபி மொழியில் கவனிக்கவேண்டிய முக்கியமான் குறிப்பு ஒன்று உள்ளது. அக்காலத்தில் நபி (ஸல்) அவர்களை யாரும் வணங்கவில்லை. ஆனால் ஹஸ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்கள் முகம்மதை (ஸல்) யார் வணங்கினாரோ அறிக! முஹம்மது(ஸல்) இறந்து விட்டார். என்ற அறிவிப்பு நமக்கு புரிய வைப்பது என்னவென்றால், இறந்து விட்ட ஒருவரை உயிருடன் இருப்பதாக கருதுவது அவரை வணங்குவது போன்ற செயலாகும். ஆம், அது இணை வைத்தலே ஆகும். இறந்து விட்ட ஈசா(அலை) அவர்களை உயிருடன் இருப்பதாக இன்றும் நீங்கள் நம்பி வருவது அவரை வணங்குகின்ற இணைவைக்கின்ற செயலாகும். 

நபி(ஸல்) அவர்களுடன் விவாதம் செய்ய நஜ்ரானிலிருந்து கிறிஸ்தவ குழு வந்திருந்தபோது நபி(ஸல்) அவர்கள் அம்மக்களை நோக்கி இவ்வாறு கூறினார்கள்: எங்களின் இறைவன் உயிருள்ளவன், மரணிப்பவன் அல்ல. ஆனால் ஈஸா(அலை) இறந்து விட்டார்கள். (அஸ்பாப் அன்னுசூல்: பக்கம் 68) 

மேற்கண்ட ஆதாரங்களிலிருந்து ஈஸா(அலை) அவர்கள் இறந்து விட்டார்கள் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது. இன்னும் ஏராளமான ஆதாரங்கள் திருக்குர்ஆன் நபி மொழிகளில் இருந்த போதும் உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைத்து இத்துடன் முடிக்கிறோம். 

அவரின் கேள்வி: 

அட காதியானி எனும் அடி முட்டாள்களே விண்ணுலகில் மரணித்த நபிமார்கள் இருந்தார்கள். உயிருள்ள ஈஸா(அலை) நபியும் இருந்திருக்கிறார்கள். என்பதை நபிகளார் (ஸல்) அவர்கள் தாம் உயிருடன் இருக்கும்போது பார்த்துள்ளார்கள். இதை மறுப்பீர்களா? புரியவில்லையா? 

நமது பதில்: 

காதியானிகள் எனும் அடி முட்டாள்களே என்ற வார்த்தைகளை போன்று இன்னும் பல வார்த்தைகளால் வசைபாடி உள்ளீர்கள். நாங்கள் பின்பற்றும் திருக்குர்ஆனும், நபி மொழியும் எங்களுக்கு உங்களை போன்ற வசைபாட அனுமதி வழங்கவில்லை. இக்காலத்தில் நேர்வழி காட்ட அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இமாம் மஹ்தி மஸிஹ் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களும் அவர்களை தொடர்ந்து வரும் கலீபாக்களும் எங்களுக்கு இவ்வாறு பேசுவதற்கு எவ்விதத்திலும் அனுமதி வழங்கவில்லை. எனவே நாங்கள் உங்களை போன்று பேச முடியாது. அல்லாஹ் கூறுகின்றான்: 

"நீர் என் அடியாரிடம் கூறுக: அவர்கள் மிகச்சிறந்ததையே பேச வேண்டும்" (17:33) 

மேலும் 

நபி (ஸல்) அவர்களை நோக்கி ஒரு யூதர் அஸ்ஸாமு அழைக்கும் உங்களுக்கு நாசம் உண்டாகட்டும், வ அலைக்கு உங்கள் மீதும் என்று மட்டுமே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹழ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த யூதரை ஏசியபோது, ஆயிஷா (ரலி) அவ்வாறு ஏசாதே. நான்தான் அவருக்கு பதில் கூறிவிட்டேனே"(புகாரி) என்ற ஒரு அழகிய முன்மாதிரியை அன்றும், இன்றும் எங்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் கற்று தந்துள்ளார்கள். படிப்பினை பெறுவோருக்கு இது போதுமானது.

இப்போது நாம் தங்களின் கேள்வி பக்கம் வருகின்றோம், ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில்தான் மீராஜில் அனைத்து நபிமார்களையும் இறந்த நிலையில் பார்த்தார்கள் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அனைத்து நபிமார்களும் மரணித்தவராக இருக்க ஈஸா(அலை) மட்டும் உயிருடன் இருந்தார்கள் என்று நீங்கள் கூறியிருப்பது எங்களுக்கு புரியவில்லை. மீராஜில் ஹழ்ரத் ஈஸா(அலை) அவர்களை நீங்கள் உயிருடன் இருப்பதாக கருதினால் அதற்க்கு அந்நிகழ்ச்சிகளிலிருந்து சான்றுகள் தந்திருக்க வேண்டும். ஏன் தரவில்லை? 

மீராஜில் அனைத்து நபிமார்களும் இறந்திருக்க, ஒருவர் மட்டும் உயிருடன் இருந்தால் நபி(ஸல்) அவர்கள் அவரை ஈஸா நபிதான் இவர் என எளிதாக அடையாளம் கண்டிருப்பார்கள். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. மேலும் நீங்கள்தானே ஈசா, அல்லாஹ் உங்களை உயிரோடும் உடலோடும் வானத்திற்கு உயர்த்திவிட்டான். இது குறித்து அல்லாஹ் திருமறையில் கூறியிருக்கின்றான். நீங்கள் கியாமத் நாளில் வரவிருக்கின்றீர்கள். இது போன்ற உரையாடலை நபி(ஸல்) அங்கு செய்திருப்பார்கள். அவ்வாறு செய்யாததிலிருந்து ஒன்று ஈஸா நபி இறந்து விட்டார் என்றும் இரண்டாவது கியாமத்திற்கு முன்பு வரவிருப்பவர் வேறொருவர் என்பதும் உங்களுக்கு புரியவில்லையா? 

ஈஸா(அலை) அவர்களை பார்த்து நபி (ஸல்) அவர்கள் இவர் யார்? என வினவினார்கள். அதற்க்கு ஹஸ்ரத் ஜிப்ராயில் (அலை) அவர்கள் மறுமொழி கூறியபோதுதான் இவர் ஈஸா என நபி(ஸல்) அவர்கள் அறிந்து கொண்டார்கள். 

ஈஸா(அலை) அவர்களை அல்லாஹ் தன்னிடத்தில் பூத உடலுடன் உயர்த்தி இருப்பதாக (உங்களின் கருத்துப்படி) கூறியிருக்க, அதற்கு மாறாக அவர் இரண்டாவது வானத்திற்கு எவ்வாறு வந்தார்? 

இறைவன் தன்னிடத்தில் ஈஸா நபியை உயர்த்தியதாக கூறியிருப்பது வானத்தைதான் குறிக்கும் என நீங்கள் கருதினால், அனைத்து நபிமார்களும் வானத்திலிருப்பதுப்பதிலிருந்து அவர்களையும் அல்லாஹ் தன்னிடத்தில் உயர்த்தியுள்ளான் என்பதை உங்களால் ஏன் புரிய முடிவதில்லையா? 

மீராஜில் நபி (ஸல்) உடலோடு உயிருடன் விண்ணுக்கு சென்றதாக தாங்கள் கருதுவது எங்களுக்கு தெரிகிறது. நபி(ஸல்) அவர்கள் உடலுடன் விண்ணுக்கு செல்லவில்லை அவர்கள் தூக்கமும், விழிப்பும் அற்ற நிலையில் பூமியில் இருந்தவாறே அக்காட்சியை கண்டார்கள். அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்: 

"அந்த உள்ளம் தான் கண்டதை குறித்து பொய்யுரைக்கவில்லை" (53:11) 

நபி (ஸல்) அவர்கள் மீராஜை உள்ளத்தால் கண்டார்கள் என்பதை மேற்கண்ட திருமறை வசனம் தெளிவாக எடுத்து கூறியுள்ளது. 

இதற்கு ஆதாரமாக நபிமொழியில் இவ்வாறு வருகின்றது: 

".............அடுத்த இரவில் நபி(ஸல்) அவர்கள் தமது உள்ளம் பார்கின்ற நிலையில் (உரக்க நிலையில்) அம்மூவரும் வந்தபோதுதான் அவர்களை கண்டார்கள். நபி(ஸல்) அவர்களின் கண் மட்டுமே உறங்கும். அவர்களது உள்ளம் உறங்குவதில்லை. இறை தூதர்கள் நிலை இவ்வாறுதான். அவர்களின் கண்களின் மட்டுமே உறங்கும். அவர்களின் உள்ளங்கள் உறங்காது............"(புகாரி: பாகம்7,ஹதீஸ்:7517) 

இதே நபிமொழியின் இறுதி பகுதியில் பக்கம் 844 ல் இவ்வாறு வருகிறது:

".........அப்போது ஜிப்ராயில் (அலை) அவர்கள் (நபியே!) அல்லாஹ்வின் திருப் பெயரால் இறங்குங்கள் என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் விழித்தார்கள். மஸ்ஜிதுல் ஹராமில் இருந்தார்கள்......." 

மேற்கண்ட குர்ஆன் மற்றும் ஹதீஸின் ஒளியில் நபி(ஸல்) அவர்கள் உறக்கத்தின்போது உள்ளத்தால் மீராஜ் எனும் ஆன்மீக காட்ச்சியை கண்டார்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. 

அவரின் கேள்வி:

காதியானிகளே முத்திரை என்றால் உங்களுக்கு என்னவென்று தெரியுமா? 

நமது பதில்: 

சிராஜின் இக்கேள்விகளிலிருந்து முத்திரையை பற்றி அவருக்கே தெரியவில்லை என்பது எங்களுக்கு தெரிய வந்தது. 

திருக்குர்ஆனில் அல்லாஹ் உள்ளங்களில் முத்திரையிட்டுள்ளான் என்று வந்துள்ள "கதம" என்ற வார்த்தையையும் "காத்தம்" என்ற இரு வேறு சொற்களை பிரித்தாலத் தெரியாமல் சிராஜ் குழம்பி இருக்கின்றார். இவ்விரு சொற்களுக்கு தமிழில் விளக்குவதாக இருந்தால் தமிழ் தெரியாதா ஒருவருக்கு "மாணவி" "மனைவி" என்ற சொற்கள் ஒருபோல் தெரிவது போல் சிராஜ் அவர்களுக்கு "கதம்" "காத்தம்" ஒருபோல் தெரிகிறது. 

"காத்தம்" என்ற சொல் திருக்குர்ஆனில் ஒரு இடத்தில் மட்டுமே கையாளப்பட்டுள்ளது. "காத்தமுன் நபிய்யீன்" என்ற சொல்லுக்கு"நபிமார்களின் முத்திரை" தலைச் சிறந்தவர் என்பது பொருளாகும்."காத்தம்" என்ற சொல் பன்மை சொல்லுடன் கையாளப்படும்போது அதுசிறப்பை குறிக்கும் என்பது அரபி மொழியின் சொல்வழக்காகும். உதாரணமாக: நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களை நோக்கி கூறுகின்றார்கள்: 

"எனது சச்சாவே! நான் எவ்வாறு "நபிமார்களுக்கெல்லாம் காத்தமாக இருக்கின்றேனோ, அவ்வாறே தாங்கள் முஹாஜிர்களுக்கெல்லாம் காத்தமாக இருக்கின்றீர்கள்" ( கன்சுல் உம்மால்: பாகம் 13, பக்கம் 519) 

இதே போன்று ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களை குறித்து "காத்தமுல் அவுலியா" என கூறியுள்ளார்கள். (தப்சீர் ஷாபி: சூரா அஹ்சாப் எனும் அதிகாரம்,) 

"காத்தம்" என்ற சொல்லுக்கு "இறுதி" என்ற பொருள் கொண்டால் ஹஸ்ரத் அப்பாஸ் (ரலி) அவர்கள் "இறுதி முஹாஜிர்" என்றும், ஹழ்ரத் அலி (ரலி) அவர்கள் "இறுதி வலி" என்றும் நம்ப வேண்டியது வரும். இதனால் ஹழ்ரத் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு பின் எந்த முஹாஜிரும் இல்லை என்றும் இஸ்லாமிய சான்றோர்கள் செய்த அனைத்து ஹிஜ்ரத்துகளும் மறுக்கப்பட்டு வீண் செயலாகிவிடும். இதை போன்று ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களுக்குப் பின் எந்த இறைநேசரும் வர மாட்டார் என்றும் இஸ்லாமிய சமுதாயத்தில் ஒருவர் கூட இறை நேசராக வரவில்லை என்ற அவ சொல்லுக்கு ஆளாக வேண்டியதுவரும். 

நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஹழ்ரத் ஆயிஷா(ரலி) அவர்கள் "காத்தமுன் நபிய்யீன்" என்ற சொல்லுக்கு இவ்வாறு விளக்கம் அளிக்கின்றார்கள்: 

"நபி (ஸல்) அவர்களை காத்தமுன் நபிய்யீன் என்று சொல்லுங்கள், ஆனால் அவர்களுக்கு பிறகு எந்த நபியும் வர மாட்டார் என கூறாதீர்கள்.(துர்ரே மன்சூர் : பாகம் 5, பக்கம் 386) 

ஹழ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்றிலிருந்து "காத்தமுன் நபிய்யீன்" என்பதற்கு இறுதி நபி இனி எந்த நபியும் இல்லை என பொருள் கொள்வது தவறு எனத் தெரிகிறது. நபி (ஸல்) அவர்கள் எனக்குப்பின் ஹஸ்ரத்  ஆயிஷாவிடமிருந்து மார்க்கத்தை கற்றுக் கொள்ளுங்கள். என கூறியிருப்பது இவ்விடம் குறுப்பிடத்தக்கதாகும். 

முத்திரை நபி என்று சொன்னவுடன் நபித்துவம் முடிந்து விட்டது என தவறாக கணக்கு போட்டு விட்டீர்கள். முத்திரை என்றால் "சீல்"ஒன்றை மூடிவிடுவது என நினைப்பது தவறான பொருளாகும். ஒரு கடிதத்தில் அரசாங்கம் முத்திரை வைக்கிறது என்றால் அந்த கடிதம் சரியான முறையில் ஸ்டாம்ப் ஓட்டப் பட்டு தபால்முறை சட்டங்களுக்கு உட்பட்டு இருக்கிறது என அரசு அங்கிகாரம் சான்று வழங்குவதை குறிக்கும். இதுபோல் தான் உணவு பண்டங்களின் மீது ஐ.எஸ்.ஐ முத்திரை வைப்பது போன்ற முத்திரைகள் தரச்சான்றுகளுக்காக அரசு வைப்பதாகும்.இவைகளில் எங்குமே முடிந்து விட்டது என்ற பொருள் இல்லை. 

இது போன்று தான் நபிமார்களின் முத்திரை என்பது இனி நபி(ஸல்) அவர்களின் முத்திரை இல்லாமல் யாரும் முஸ்லிம் மற்றும் மூமினாக முடியாது. மேலும் முஹம்மது (ஸல்) அவர்களின் முத்திரை இல்லாமல் எந்த நபியும் எந்த ரசூலும் இனி வரமுடியாது. கடந்த காலத்தில் வந்த நபிமார்களும் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் முத்திரையினால் தான் நபிமார்கள் என்றும் பரிசுத்தவான்கள் என்றும் அடையாளம் காணப்பட்டார்கள். 

நபி(ஸல்) அவர்களுக்கு பின் இமாம் மஹ்தியும், மசிஹும் வர இருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் இறுதி நபி என்று எவ்வாறு சொல்ல முடிகிறது. இவ்வும்மத்தில் வரக்கூடிய ஈஸா(அலை) அவர்களை குறித்து நபி (ஸல்) அவர்கள் அவர் அல்லாஹ்வின் நபியாவார், அவருடன் சஹாபாக்களும் வருவார்கள். என்று ஒரே நபி மொழியில் நான்கு முறை கூறியுள்ளார்கள். (ஆதாரம்: முஸ்லிம்: பாகம் 4, ஹதீஸ்: 5629) 

அவ்விருவரையும் (இமாம் மஹ்தி, ஹழ்ரத் ஈஸா (அலை))வெவ்வேறாக கருதிவிடவேண்டாம். அவர்கள் இருவரும் ஒருவரே என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: இப்னு மாஜா: பாகம்:2பக்கம்:1341) 

வரக்கூடிய மஹ்தி மஸிஹ் அவர்கள் நபியாக இருப்பார்கள் என்பதை நாம் மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து தெளிவாக அறிந்தோம்.எனவே தனது உள்ளத்திலையே முத்திரையிடப்பட்டுள்ளதை அறியாது பிறரை பார்த்து முத்திரையிடப்பட்டதாக கனவு காணும் சிராஜ் அவர்களே! இனியாவது உங்கள் உள்ளத்தின் முத்திரையை துடைத்து விட்டு நபிகளார் (ஸல்) இட்ட முத்திரையை விளங்கி உங்கள் உள்ளத்தில் அதை சுமந்திடுவீர்கள் என நம்புகிறோம். இன்ஷா அல்லாஹ்..... 

அவரின் கருத்து:

காதியானிகளே அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். காபிர்களாக மரணித்துவிடாதீர்கள். 

நமது விளக்கம் : 

சிராஜ் செய்துள்ள தமாஷை பார்த்து சிரிப்பத அழுவாத என தெரியவில்லை. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என அவர் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. இன்று உலகில் காணப்படும் எந்த இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது. TNTJ வா? INTJ வா? JAQH வா? TMMK வா? MMK வா? இது போன்று இன்னும் ஏராளம் தாராளம். இவ்வாறு சிதறுண்டு கிடக்கும் ஆங்கில எழுத்துக்களில் எப்பிரிவை இஸ்லாம் என்று கூறுகின்றீர்கள். அவைகளில் உடன்பாடு இல்லாததால் தான் நான் எந்த பிரிவினையும் சார்ந்தவனல்ல, நான் தனி மரம் என்று கூறி தவியா தவிக்கின்றீர்கள். எங்களையும் அவ்வாறு தவிக்க அழைக்கின்றீர்களா?மேற்கண்ட எந்த எழுத்தில் சேர்ந்தாலும் அவர்களை பிற எழுத்துக்களை சார்ந்தவர்கள் இஸ்லாம் என ஒப்புக்கொள்வதில்லை. எனவே அவைகளில் எவற்றில் இணைந்தாலும் இஸ்லாம் இல்லை என்ற அவப்பெயரைத்தான் பெற வேண்டியது வரும். இன்று தமிழகத்தில் உள்ள பெயர்தாங்கி முஸ்லிம்களின் நிலை உங்களுக்கு பாடம் புகட்டவில்லையா? தொப்பியை கழற்றுவதும், விரலை உடைப்பதும் மட்டுமல்லாது ஒரே பள்ளிவாசலில் பத்து வேலை தொழுகை நடப்பதும் இரு ஜும்ஆக்கள் நடப்பதும் துப்பாக்கி ஏந்தும் கலாச்சாரமும் பில பிரிவுகளை காபிர், முர்த்தத் என பத்வாக்களை விழாக்கால சலுகையாக வழங்குவதும் உங்கள் சிந்தனையை தூண்டவில்லையா? எந்த சிந்தனையில் நீங்கள் இவ்வாறு எங்களை நோக்கி கூறினீர்கள்? 

முஸ்லிம்கள் என்றால் யார்? என்பதை பற்றி உங்களுக்கு தெளிவு படுத்தினால் எங்களை காபிர் என வசைபாடுவதிலிருந்து தௌபா செய்வீர்கள் என நினைக்கின்றேன். நபி(ஸல்) அவர்கள் கலிமா கூறியவரை முஸ்லிம் என அங்கீகரித்துள்ளார்கள். ஒரு முஸ்லிமை நோக்கி இவர் கொண்டுள்ள ஈமான் போலியானது என ஒருவர் கூறுவாரேயானால், நபி(ஸல்) அவர்கள் உசாமா பின் சைத் (ரலி) அவர்கள் ஏன் வாளுக்கு பயந்து இவர் கலிமா சொன்னார் என கூறியபோது, அவர் உள்ளத்தை பிளந்தா பார்த்தீர் என மிகவும் சிவந்த முகத்துடன் கேட்டது மட்டுமல்லாமல் இனி ஏன் முன் வராதே எனக் கூறியதுபோல் எங்கள் ஈமானை குறை கூறுபவர்களிடம் நபிகளாரின் வார்த்தைகளை முன்வைத்து கேட்க்கின்றோம்....சிராஜ் அவர்களே! எங்களை காபிர் என கூறுபவர்களே! நீங்கள் எங்கள் உள்ளத்தை பிளந்து பார்த்துவிட்டீர்களா?உள்ளத்திலுள்ளதை அறிபவன் அல்லாஹ் மட்டுமே..இவ்வாறு கூறுபவர்கள் எப்போது அல்லாஹ்வானார்கள்? 

ஓர் முஸ்லிமுக்கு இலக்கணமாக ஹஸ்ரத் எம்பெருமானார் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்: 

"யார் நாம் அறுப்பதை போல் அருப்பாரோ, கிப்லாவை முன்னோக்கி தொழுவாரோ அவர் முஸ்லிம் என்பதற்கு அல்லாஹ்வும் நானும் பொறுப்பேற்றுள்ளோம். அதற்க்கு நீங்கள் மாறு செய்யாதீர்கள்" (முஸ்லிம்) 

இவ்வாறு தெளிவான நபி மொழி இருந்தும் கூட இஸ்லாமிய சமுதாயம் பிறரை நோக்கி காபிர் என கூறுவது வேதனை அளிப்பதாக உள்ளது. 

அல்லாஹ்வின் அருளால் நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அறுத்ததை போல் அறுத்து புசிக்கின்றோம். கிப்லாவை முன்னோக்கி தொழுகின்றோம். நாங்கள் முஸ்லிம் என்பதற்கு அல்லாஹ்வும் ரசூலும் பொறுப்பேற்றுள்ளார்கள். இதற்கு பிறகும் எங்களை நோக்கி முஸ்லிம்களின் அனைத்து பிரிவுகளும் ஒன்று கூடி மக்காவில் ராபிததுல் ஆலமீன் சபை காபிர் என பத்வா வழங்கிவிட்டது என யார் கூச்சலிட்டாலும் நாங்கள் அதை பொருட்படுத்துவதில்லை. அந்த வீனர்கள் அல்லாஹ் மற்றும் ரசூல் (ஸல்) ஏற்றுக் கொண்ட பொறுப்பின் மீது கை வைக்கத் துணிந்துவிட்டார்கள் என்ற வேதனைதான் எங்களுக்கு எஞ்சியுள்ளது. 

நபி(ஸல்) அவர்களின் ஒரு எச்சரிக்கையை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்: 

"யார் ஒரு முஸ்லிமை காபிர் என கூறுவாரோ அவ்வாறு கூறியவர் காபிராகிவிடுவார்"(ஆதாரம்: முஸ்லிம் 6045) 

இந்த நபிமொழிக்கிணங்க இன்று எங்களை காபிர் என யார் கூக்குரல் இடுகின்றார்களோ, அவர்கள் தங்களின் முடிவினை குறித்து அல்லாஹ்வுக்கு அஞ்சி கொள்ளட்டும். 

இஸ்லாமிய பிரிவுகள் ஏனைய இஸ்லாமிய பிரிவுகளை நோக்கி காபிர், முர்த்தத் என்று வழங்கியுள்ள பத்வாக்கள் இஸ்லாமிய வரலாற்றை கரைபடிந்ததாக ஆக்கியுள்ளது. சிராஜ் அவர்களே! மற்றவர்கள் முஸ்லிம்கள் என்றால் அவர்களை காபிர் என கூறும் இஸ்லாமிய பிரிவுகள் எவ்வாறு முஸ்லிம்களாக இருக்க முடியும்? காபிர் பத்வாவிற்கு தப்பிய எந்த இஸ்லாமிய பிரிவும் உலகில் இல்லை. ஒன்று பத்வாவால் காபிர் ஆகிவிட்டார்கள். அல்லது பத்வா கொடுத்து காபிராகிவிட்டார்கள். நீங்கள் எங்களை கூறியதுபோல் காபிர்களாக மரணித்துவிடாமல் இருக்க வேண்டுமானால் இறைவன் அனுப்பிய இமாமை ஏற்றுக் கொள்வதுதான் ஒரே வழியாகும். 

நபி(ஸல்) அவர்கள் தனது உம்மத் 73 பிரிவுகளாக பிரிந்து விடும் என்றும் அதில் ஒன்றை தவிர ஏனைய பிரிவினர் நரகம் செல்வர் என்று கூறியுள்ளார்கள்(மிஷ்காத்) இன்று அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தை அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் ஒன்று கூடி காபிர் என பத்வா வழங்கியதிலிருந்து சுவர்க்கம் செல்லும் ஒரு பிரிவை அவர்கள் அடையாளம் இட்டுக் காட்டியிருப்பது உங்களுக்கு புரியவில்லையா? சுவர்க்கமும், நரகமும் எவ்வாறு ஒன்று சேரும்? சுவர்க்கவாசிகளோடு ஒரு போதும் நரகவாசிகள் இணைந்திருக்க மாட்டார்கள் என்பது இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் செயல் உங்களுக்கு உணர்த்தவில்லையா? 

சுவர்க்கம் செல்லும் அந்த பிரிவு என்னையும் என் ஸஹாபாக்களையும் போல் இருப்பார்கள் என நபி(ஸல்) கூறியதிலிருந்து அந்த பிரிவு யார் என்று உங்களுக்கு தெரியவில்லையா?இன்று நபி(ஸல்) மற்றும் அவர்களின் ஸஹாபாக்கலைபோல் ஒரே தலைமையின் கீழ் ஒரு கிலாபத்தின் கீழ் செயல்படும் ஜமாஅத் உலகில் எங்களை தவிர வேறு எங்குமுண்டா? என்னையும் என் ஸஹாபாகளையும் என்ற வார்த்தைகளிலிருந்து நபியும் சஹாபாக்களும் (கலீபாக்களும்) கொண்ட ஒரு ஜமாஅத் உலகில் செயல்படும் அவர்களே சுவர்கவாசிகள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பது உங்கள் சிந்தனையை வருடவில்லையா? 

சொர்க்கம் செல்லும் பிரிவு குறித்து முல்லா அலியுல் காரி (ரஹ்) அவர்கள் அந்த பிரிவு தரீகத்துல் அஹ்மதிய்யா (அஹ்மதிய்யா இயக்கத்தை) சார்ந்தவர்கள் எனக் கூறியுள்ளார்கள்.(மிர்காத் ஷரஹ் மிஷ்காத்: பக்கம்:204) மேற்கண்ட ஆதாரங்களில் இருந்து உண்மையான முஸ்லிம்கள் யார்? காபிர்கள் யார்? என்பதை தாங்கள் அறிந்து இருப்பீர்கள். 

சிராஜ் அவர்களின் கருத்து:

காதியானிகள் இப்லீஸை ஏதோ உதாரணப்பொருள் என்றும் உவமை என்றும் தான் நம்புகின்றனர்.............. ஜின்களும் இப்லீஸின் இனம் தான் ஆதமை எவ்வாறு அல்லாஹ் படைத்தானோ அது போல் தான்............இப்லீஸையும் அல்லாஹ் படைத்தான். 

நமது விளக்கம் : 

அல்லாஹ் தன் திருமறையில் இப்லீஸை குறித்து அவன் ஜின்களை சார்ந்தவனாக இருந்தான். (18:50) என அல்லாஹ் கூறியிருக்க இறை வசனத்திற்கு எதிராக தலைகீழாக ஜின் இப்லீஸை சார்ந்தவனாக இருந்தான் என்று சிராஜ் அவர்கள் கூறியிருக்கிறார். இது அவரின் அறியாமை அல்லது குர்ஆனின் ஞானமின்மையை வெளிப்படுத்துகின்றது. அல்லாஹ் இப்லீஸை ஜின்னை சார்ந்தவனாவான் என கூறும்போது இல்லை இல்லை ஜின்கள் இப்லீஸை சார்ந்தவர்களாவர் என கூறுவது இறைவன் கூறிய வரிசையை மனோயிச்சைபடி மாற்றுவது தவறான விளக்கத்துக்கு வழி கோரும். 

இப்லீஸ் என்பது பெருமை அடித்தல், அகம்பாவம் கொள்ளுதல் போன்ற பண்புகளை உடையவர்களை குறிக்கும் என்று நாங்கள் கூறுவது உண்மைதான். அதற்க்கு மேற்கண்ட வசனமே விளக்கமளிக்க போதுமானது. இப்லீஸ் என்பவன் ஜின்னை சார்ந்தவன்தான். தனி படைப்பு ஒன்று மல்ல என்று அவ்வசனம் எடுத்து வைத்துள்ளது. அவன் ஜின்னை சார்ந்தவனாக இருக்கும்போது அவனை தனி படைப்பு என்றும் அல்லாஹ் அவனை படைத்தான் என்றும் உங்களுக்கு ஆதாரம் காட்ட வேண்டுமா? என்றெல்லாம் நீங்கள் வீர வசனம் எவ்வாறு கூறினீர்கள்.? 

நீங்களே ஓரிடத்தில் இவ்வாறு கூறியிருக்கின்றீர்கள், அதாவது இப்லீஸை நெருப்பால் படைக்கப் பட்டதன் பொருள் என்னவென்றால் நெருப்பு என்பது அகங்காரம் தற்பெருமை எனும் பண்பை குறிக்கும் என எழுதிவிட்டு, இப்லீஸை எவ்வாறு தனி படைப்பு என்றும், இப்லீஸை உவமையாக கூறுவதை எவ்வாறு கேலி செய்கின்றீர்கள்? இது உங்களையே நீங்கள் கேலி செய்வதை போல் உள்ளது. உங்கள் கேலிக்கு நீங்களே விடை தேடிக் கொள்ளுங்கள். அல்லாஹ் நபிமார்களை குறித்து திருக்குர்ஆனில் இவ்வாறு கூறியுள்ளான்: 

"பூமியில் வானவர்கள் அமைதியாக நடந்து திரிந்து வாழ்ந்திருந்தால் நாம் அவர்களுக்கு நிச்சயமாக வானத்திலிருந்து ஒரு வானவரையே தூதராக இறக்கியிருப்போம்" (17:95) 

இவ்வசனத்தில் அந்தந்த கூட்டத்தினரிடம் அவர்களிலிருந்தே அல்லாஹ் நபிமார்களை அனுப்புகிறான் என்பது தெளிவாகிறது. பூமியில் மனிதர்கள் வாழவே அல்லாஹ் மனிதராகிய ஆதமை நபியாக அனுப்பி வைத்தான். அல்லாஹ் தன்னுடைய வார்த்தைக்கு மாறாக எவ்வாறு செயல்படுவான். மனிதராகிய ஆதமை மலக்குகள் மற்றும் இப்லீசிடம் அனுப்பி வைத்து ஆதமுக்கு சஜ்தா செய்யுங்கள் என்று எவ்வாறு கட்டளையிடுவான்? இந்த கட்டளையானது மனிதர்களுக்கு இட்ட கட்டளையே ஆகும். அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்படிந்து ஆதமுக்கு கட்டுப் பட்டவர்களை மலக்குகள் என்றும் கட்டு படாமல் பெருமை அடித்தவர்களை இப்லீஸ் என்றும் அல்லாஹ் இங்கு இனம் பிரித்து காட்டியுள்ளான். இன்றைய மானிதர்களில் சிலர் சிலரை குரங்கு என்றும் பன்றி, நாய், சிங்கம் என்றும் தங்கமானவன் என்றெல்லாம் இகழ்ந்தும்,புகழ்ந்தும் பேசி வருகின்றனர் இதற்க்கு அவர்கள் அவ்வாறே ஆகி விட்டார்கள் என்பது பொருளல்ல. அவற்றின் பண்புகளை இவர்களிடம் பிரதிபலிக்கும்போது இவ்வாறு இகழவும், புகழவும் செய்கின்றனர். ஆக அல்லாஹ் தனது திருமறையில் இப்லிசை குறித்து கூறியிருப்பது உவமையே என்பதை தாங்கள் புறிந்திருப்பீர்கள் என நம்புகிறோம். 

சிராஜின் கருத்து:

சுவர்கத்தில் காதியானிகள் எருமை மாடுகள் இருப்பதாக கூறுகின்றார்கள். 

நமது விளக்கம்: 

ஒருவர் என்ன கூறுகின்றார் என்பதை புரியக் கூடிய அறிவு முதலில் வேண்டும் இல்லையெனில் வாயை மூடி இருக்க வேண்டும். வாய்க்கு வந்ததெல்லாம் பேசவும் எழுதவும் கூடாது. சுவர்கத்தில் பாலாறுகளும் , தேனாறுகளும் ஓடுகிறது என்று திருக்குர்ஆனில் வருகிறது, இதை வைத்து சுவர்கத்தில் எருமை மாடுகளின் கூட்டமும்,தேனீக்களின் கூட்டமும் இருக்கிறது என்று கூறுவார்களா? என்ற கேள்வியை எழுப்பி எருமை மாடுகளின் கூட்டம் சுவர்கத்தில் இல்லை என்பதை மறுத்துதான் இருக்கிறார். ஆனால் நீங்கள் எங்களின் மீது சிந்திக்காமல் அபாண்டத்தை சுமத்தியிருப்பது பரிதாபமாக உள்ளது. இனியாவது சொல்ல வந்த கருத்தை அறிந்து புரிந்து எழுதவும்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.