அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Aug 18, 2011

இயேசு பிசாசினால் சோதிக்கப்பட்ட கதை

தம் இன மக்களுக்குப் போதித்து நல்வழிகாட்டும் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் முன்னர் அனேகமாக அனைத்து தீர்க்கதரிசிகளும் இறையடியார்களும் தனிமையை நாடிச் சென்றதாகவும், விரதமிருந்து ஏக இறைவனை வழிபாட்டு வருவதிலேயே தம் நேரத்தை செலவிட்டதாகவும் நாம் அறிவோம். மோசே தீர்க்கதரிசி சீனாய் மலைக்கும், புத்த பிரான் ஒரு போதி மரத்துக்கும், இஸ்லாம் தந்த நபிகள் நாயகம் மக்கா அருகில் உள்ள ஒரு மலைக் குகைக்கும் சென்று இறைவனை தியானித்ததை இங்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம். தினசரி குடும்ப வாழ்வின் சிக்கல்களிலிருந்தும், தொல்லைகளிலிருந்தும் தூர விலகிச் சென்று எவருடைய இடையூறுமின்றி இறைவணக்கத்தில் தம்மை ஈடுபடுத்தி இறைவனின் தொடர்பைப் பெற்றுக் கொள்வதற்கு இத்தகைய தனிமையும் அவர்களுக்கு மிகவும் அவசியமே. இதைப் போன்றே யோர்தான் நதிக்கரையில் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டவுடன் இயேசுநாதரும் யூதேயாவின் வனாந்திரத்திற்குச் சென்று விட்டார் என அறிகிறோம். 'அவர் இரவும் பகலும் நாற்ப்பது நாள் உபவாசம் இருந்த பின்பு, அவருக்கு பசி உண்டாயிற்று' என மத்தேயு 4:2 கூறுகிறது. ஆனால் தேவகுமாரனாகிய - ஏன் தேவனாகிய - இயேசுவுக்கு இத்தகையா தனிமையும், வணக்க வழிபாடும் தேவைதானா?

இயேசு சரியாக நாற்ப்பது பகல்கள், நாற்ப்பது இரவுகளும் தொடர்ந்து நோன்பு நோற்றார் என்பதை விவிலியச் சொல் வழக்குப் படி நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் நாற்பது என்ற எண் பைபிளில் ஒரு நீண்ட காலத்தைக் குறிப்பதற்காகவே கையாளப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, நாற்பது நாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை பொழியச் செய்து வெள்ளப் பெருக்கினை ஏற்ப்படுத்தியதாகவும் (ஆதியாகமம் 7:4). யூதர்கள் நாற்பது ஆண்டுகள் வனாந்திரத்தில் அலைந்து திரிந்ததாகவும் (எண்ணாகமம் 14:33) மோசே தீர்க்கதரிசி நாற்பது நாள் இரவும் பகலும் சீனாய் மலையில் தங்கி நோன்பிருந்ததாகவும் (உபாகமம் 9:9) எலியா நாற்பது நாள் இரவு, பகல் தேவனுடைய பர்வதம் மட்டும் நடந்து போனான் என்றும் (1இராஜாக்கள் 19:8) பைபிளில் பரவலாக கூறப்பட்டிருப்பதைக் காண்கின்றோம்.

நாற்ப்பது நெடிய நாட்கள் இயேசு ஏதும் உண்ணாமலும் பருகாமலும் தம் நாட்களைக் கழித்தார் என்றும் கூறுவதே நம் வியப்பைத் தூண்டும் போது சுவிசேசகர்கள் இயேசுவுக்கு வனாந்திரத்தில் கிடைத்த அனுபவத்தைக் குறித்து கூறுகையில் நாம் மேலும் அதிர்ச்சிக்குள்ளாகிறோம். வனாந்திரத்தில் இயேசுவைப் பிசாசு சந்தித்துத் தனது சாத்தானிய வழியில் அவரை நடத்திச் செல்லும் பொருட்டு பேச்ச்சு வார்த்தையை எவ்வாறு தொடங்கினான் எனக் காணுங்கள். தன்னை யாரென அறிமுகப் படுத்திக் கொள்ளாமலும், தான் இயேசுவிடம் டுத்தொத வந்த கருத்தை நேரிடையாகக் கூறாமலும் அவன் இயேசுவைப் பார்த்து இவ்வாறு கேட்டான்.

'... நீர் தேவனுடைய குமாரனேயானால் இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படிச் சொல்லும்...' பிசாசின், இந்த சவாலுக்குரிய பதிலாக இயேசு தம்மை தேவகுமாரன் என்று நிரூபிக்கத்தக்க ஒரு சொல்லைக் கூட அவனுக்கு எடுத்துக் காட்டவில்லை. இந்தச் சம்பவம் நிகழும் காலக்கட்டத்தில் நாட்டில், நகரில் போது மக்களுக்கு மத்தியில் அவரைத் தேவ குமாரன் என்று யாரும் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. குறைந்த பட்சம், யாரும் அவரை தேவகுமாரன் என அறிந்து கொள்ளவோ அடையாளம் கண்டுகொள்ளவோ இல்லை. உண்மையாதெனின் கிருஸ்தவ பெருங்குடிமக்களின் அபிலாஷைக்கு முரணாக புதிய ஏற்பாட்டின் எந்தப் பகுதியிலும். எந்த ஓர் இடத்திலும் இயேசுவின் திருவாயிலிருந்து தம்மை தேவ குமாரன் என வாதிடும் ஒரு வார்த்தை வெளிப்பட்டதாக சிறு குறிப்புக் கூட இல்லை. மற்றவர்களே அவர் மீது அவருக்குச் சற்றும் பொருத்தமில்லாத இந்த தெய்வீகப் போர்வையைப் போர்த்தி வைக்கக் காண்கின்றோம். இக்குறிப்பிட்ட சம்பவத்திலும் இப்பதவி , இந்த அந்தஸ்து அவருக்கு சிறிதும் பொருந்தவில்லை என்பதையும் இந்த அந்தஸ்த்தை ஏற்றுக் கொள்ளும் விதமாக இயேசு ஏதும் கூறவில்லை எனவும் நாம் அறிந்து கொள்ளும்போது வியப்பு மேலிடுகிறது.

கல்லுகளை அப்பங்களாக மாற்றுதல் இயேசுவால் இயலாத செயல் அன்று. ஏனெனில் உண்மையிலேயே பின்னொரு காலத்தில் தேவை ஏற்ப்பட்டபோது ஒன்பதாயிரத்திற்கும் அதிகமானோருக்குப் போதிய அளவு அவர் அப்பத்தையும் மீனையும் வெறும் காற்றிலிருந்தே அவர் உருவாக்கிக் காட்டியுள்ளார். ஆகவே கல்லிலிருந்து அப்பத்தை உண்டாக்குவது இயேசுவுக்கு ஒரு பெரிய காரியம் ஆகாது. ஆனால் லூசிபர் என்னும் அந்தப் பொல்லாப் பிசாசை திருப்திப்படுத்தும் அளவுக்குக் தன தரத்தை தாழ்த்திக் கொள்ள இயேசுவுக்கு இஷ்டம் இல்லை போலும். எனிவே மிகுந்த கெட்டிக்காரத்தனத்துடன், 'மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். ..... (உபாகமம் 8:3) என மோசே தீர்க்க தரிசியை மேற்கோள் காட்டி சாத்தனுடைய வாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

தேவகுமாரனுடன் பிசாசு பேச்சுவார்த்தை நடத்தி அவரைச் சோதனைக்குல்லாக்கிய இடம் ஜெரிக்கோவின் எல்லைப் பகுதி என கிறிஸ்தவ பாரம்பரிய ஏடுகள் பகர்கின்றன. இதனை அடுத்து இயேசுவை 'பரிசுத்த நகரத்திற்க்குச் கொண்டு போய் தேவாலயத்தின் உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி : நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்....' (மத்தேயு 4:5-6) என்று பிசாசு தனது அடுத்த சோதனையை இயேசுவின் மேல் வைத்தது. இவ்வளவு அதி உயரமான உப்பரிகையின் மேல்மட்டத்திலிருந்து ஒரு மனிதன் கீழே குதிப்பது மிகவும் ஆபத்தானது. அவ்வாறு குதிப்பவனின் எலும்புகள் நொறுங்கிப் போய்விடும் என்பதில் ஐயமில்லை. ஆனால் தேவகுமாரனும் சாதாரண மனிதனும் ஒன்றாவாரோ?

இயேசுவுக்குத் தெய்வீகத் தன்மை உண்டு என்பதற்கான ஆதாரத்தைக் கெட்ட பிசாசின் செயல் அற்ப்பமானதென்றோ, அபத்தமானதென்றோ, அறிவுப்பூர்வமற்றதென்றோ நாம் கொள்ள முடியாது. ஏனெனில் தொடர்ந்து இயேசுவிடம் பிசாசு எடுத்துக் கூறிய சொற்கள் வேதாகமத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதாவது, 'தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடராத படிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதை எழுதியிருக்கிறது....' (மத்தேயு 4:6) என்ற வேதாகம வாக்குறுதியைப் பிசாசு எடுத்துக்காட்டி இயேசுவுக்குத் தகுந்த தருணத்தில் ஞாபகமூட்டியது தவறாகுமா? இருப்பினும் பிசாசு கேட்டபடி இந்த அபாயகரமான சோதனையை நிகழ்த்திக் காட்டி பிசாசை வென்று தமது தெய்வீகத்தன்மையை நிரூபிக்க இயேசு துணியவில்லை. ஒரு வேலை மேற்சொன்ன வேதாகம வசனத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு-அதாவது தேவ தூதர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக் கொண்டு போவார்கள் என்ற உறுதிமொழி தம்மைப் பற்றித்தானா? அல்லது யாரைப் பற்றிக் கூறப்பட்டது - என்ற விஷயத்தில் அவருக்கு உறுதிப்பாடு இல்லாதிருக்கக்கூடும். எனவே இம்முறை இயேசு, '....உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்ச்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே.....' (மத்தேயு 4:6) என்று கூறி பிசாசு விடுத்த சவாலை ஏற்க்க மறுத்துவிட்டார்.

இறுதியாக, '....மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின் மேல் கொண்டு போய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்கு காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்து கொண்டால், இவைகளை எல்லாம் உமக்குத் தருவேன்....' என்று பிசாசு இயேசுவுக்கு ஆசை காட்டியுள்ளது. முந்தைய இரு சோதனைகளைக் காட்டிலும் பிசாசின் இந்த சோதனை நம்மை மேலும் அதிர்ச்சி அடையச்செய்கிறது. ஏனெனில் தேவகுமாரனான இயேசுவே உலகத்தின் சகல ராஜ்யங்களுக்கும் அவற்றின் மகிமைக்கும் அதிபதியாக இருக்கும்போது, இருளின் அதிபதியாக இருக்கும்போது, இருளின் அதிபதியான பிசாசு இயேசுவுக்கு இவற்றையெல்லாம் தருவதாக சொவது வியப்புக்குரியது அல்லவா? பிசாசு தன முன்னால் இயேசு சாஷ்டாங்கமாய் விழுந்து தன்னைப் பணிய வேண்டும் என்று கூறியதோடு நில்லாமல், உலகத்தின் சொத்துகளையெல்லாம் தேவகுமாரனுக்கு இலஞ்சமாக தர முன் வந்ததையும் நம்மால் ஜீரணிக்க முடியவில்லை.

மேற்கண்ட நிகழ்வுகளில் அடங்கியுள்ள ஆன்மீகக் கருத்து என்ன? இக்கதை புகட்டும் பாடம்தான் என்ன?

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.