நஜாத் ஆசிரியர் தாமும் குழம்பி பிறரையும் குழப்புகிறார் 73 பிரிவு பற்றிய நபி மொழியில் "மன்ஹும்" என்றிருப்பதாக அவர் கூறியிருந்ததை தவறென சுட்டிக் காட்டி "மன்ஹிய" என்றே காணப்படுவதை எடுத்துக் காட்டியிருந்தோம். அதற்கு அவர் தமது இதழில் நாம் நமது இலக்கண அறிவைப் பயன்படுத்தி மக்களை வழிகெடுப்பதாக கூறி நம்மை சாடியிருக்கிறார்.
உள்ளதை, உள்ளபடி கூறுவது வழி கெடுப்பதா? அல்லது இல்லாததை இட்டுக் கட்டிக் கூறுவது வழி கெடுப்பதா? ஒன்றுக்கு பொருள் கூறுவதில் தவறு நேரலாம், கருத்து வேறுபாடு வரலாம். ஆனால் மூலச் சொல்லையே மாற்றி எழுதுவது அக்கிரமச் செய்யலல்லவா? இது மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி அவர்களை வழிகெடுபபதாகாதா?
73 பிரிவுகளில் ஒரு பிரிவு மட்டுமே இரட்சிப்புப் பெரும் என்று குறிப்பிட்ட நபி பெருமானார்(ஸல்) அவர்களிடம் "மன்ஹிய" அது எது ? என்றே கேட்கப்பட்டது. இதனை நஜாத் ஆசிரியர் கூறுவது போன்று, 'அறிவுடைமையாக' அந்தக் கூட்டத்தார் யார்? என்று எடுத்துக் கொண்டாலும் அது ஒரு தனிப்பட்ட கூட்டத்தாரை - ஜமாத்தைக் குறிப்பிடுமேயொழிய முழு முஸ்லிம் சமுதாயத்திலுள்ள தனி நபர்களை ஒரு போதும் குறிக்காது. ஏனெனில் இங்கு எடுத்துக் கொல்லப்பட்ட விஷயம் 73 பிரிவுகளைப் பற்றியது, தனி நபர்களைப் பற்றியதன்று. இந்த சாதாரண விஷயத்தைக் கூட நஜாத் ஆசிரியரால் புரிந்து கொள்ளயியலவில்லை என்றால் அவர் பெரிதும் குழம்பிப் போயிருக்கிறார் என்பதே அதற்குப் பொருள்.
73 பிரிவுகளில் ஒரு பிரிவு நேர்வழி பெரும் என்று கூறப்பட்டிருப்பதால் அந்தப் பிரிவு ஒரு தனி ஜமாஅத் தனி அமைப்பு எனக் கூறுவதே அறிவுடமையாகும். 73 பிரிவுகள் என்று ஆகிவிட்டதற்க்குப் பிறகு அவை யாவற்றிக்கும் தனித்தனிப் பெயர்கள் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாததாகும்.
முஸ்லிம்கள் 72 கூட்டமாகப் பிரிந்துவிட்ட நிலையில் அவர்களுக்கிடையில் பல்வேறு வேறுபாடுகள் பிறந்துவிட்ட நிலையில் அவர்களை நேர்வழியில் அழைக்க அவர்களை ஒன்றுபடுத்த ஓர் அமைப்பு உருவாகின்றது. அத்தகைய அமைப்பு ஏனைய 72 பிரிவுகளிலிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்ட தனக்கென ஒரு பெயரை வைத்துக் கொள்வது அதற்கு முற்றிலும் அவசியமாகிவிடுகிறது. அவ்வாறில்லாமல் அவர்கள் ஒரு தனிப்பிரிவாக, "ஜமாஅத்" தாக எவ்வாறு இயங்க முடியும்? இதனைச் சிந்திக்கின்ற எவராலும் புரிந்து கொள்ள முடியும்!
அத்தகைய அமைப்பு, 'முஸ்லிம்' என்ற பெயரைக் கைவிட்டு வேறொரு பெயரை தங்களுக்கென வைத்துக் கொண்டால்தான் அது தவறாகும். அவ்வாறில்லாமல் தங்களை முஸ்லிம்களென்று கூறிக் கொண்டு தாம் சார்ந்திருக்கும் அமைப்புக்கு ஒரு பெயரினை வைத்துக் கொண்டால் அது தவறாகாது. இது இவர்களுக்குப் புரியும்! ஆனால் பாமர மக்களை ஏமாற்ற இதை விட்டால் இவர்களுக்கு வழியில்லை இதுதான் முஸ்லிம்களை ஆலிம்களாக்குகின்ற வழியா?
இப்படி பெயர் வைக்க அனுமதியிருந்தால் நபி பெருமானார் (ஸல்) அவர்கள் அப்பிரிவின் பெயரையும் செயல்களையும் சுட்டிக்காட்டியிருப்பார்களே என இவர்கள் வாதிக்கின்றார்கள். அப்படி நபிபெருமானார் (ஸல்) அவர்கள் அந்தப் பிரிவின் பெயரைச் சொல்லியிருப்பார்களேயானால் இன்று முஸ்லிம்களிடையே உள்ள அனைத்துப் பிரிவினரும் அந்தப் பெயரை வைத்துக் கொண்டு தாமே ஈடேற்றம்பெரும் பிரிவு என்பதற்கு அதையே ஆதாரமாக் காட்டுவார்கள் அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் ஈடேற்றம் பெரும் பிரிவைப் பற்றிக் கேட்கப்பட்டபோது 'ம அன அலைஹி வ அஸ்ஹாபி' - 'நானும் எனது சஹாபாக்களும் போன்று இருப்பவர்கள்' என்று கோடிட்டுக் காட்டினார்கள்.
நபி (ஸல்) அவர்களும் அவர்களின் சஹாபாக்களும் இருப்பது போன்று இன்றிருக்கும் 'ஜமாஅத்' எது? நபி பெருமானார் (ஸல்) அவர்கள் ஆணையிட்டார்கள் சஹாபாக்கள் அதனை சிரமேற்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் முடிவு செய்தார்கள். சஹாபாக்கள் அதனை எவ்வித மறுப்பும் கூறாது அப்படியே ஏற்றார்கள். இப்படிப்பட்ட தன்மை, ஒரு இமாம் - ஓர் ஆன்மீகத்தளைமையின் கீழ் ஒன்று பட்டு செயல்படுகின்ற தன்மை இன்றைய முஸ்லிம் பிரிவுகளில் எதற்காவது உண்டா? "அஹ்லே சுன்னத்வல் ஜமாஅத்' என்று நீட்டி முழக்கி பெயர்வைத்துக் கொள்வதில் குறைவில்லை ஜமாஅத் என்றால் அதற்கு இமாம் இருக்க வேண்டும் என்பது நபி (ஸல்) அவர்கள் வகுத்த நியதி. இவர்களின் இமாம் யார்? பள்ளிவாசலின் இமாமைக் கூறுவார்கள். அங்கு கூட ஷாபிக்கு வேறு இமாம் ஹனபிக்கு வேறு இமாம்! இவற்றிலிருந்து வேறுபட்ட வஹ்ஹாபிகளுக்கு வேறு இமாம்!! இறைவனின் சந்நிதியில் கூட ஒன்றுபட்டு நிற்க இயலாத இவர்களா நபி(ஸல்) அவர்களைப் போன்று சஹாபாக்கள் போன்றும் இருப்பவர்கள்?
அல்லாஹ்வின் அருளினால் இந்த உயரிய தன்மை அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்திற்கு மட்டுமே இருக்கிறது. உலகெங்குமுள்ள அந்த ஜமாஅத் மட்டுமே ஒரே தலைமையின் - இமாமின் - கலீபாவின் ஆளுகைக்கு உட்பட்டு செயல்படுகிறது.
முஸ்லிம்கள் 73 பிரிவாக பிளவுபடுகின்றபோது ஏற்படுகின்ற நிலைபற்றியதே இந்த சர்ச்சை, அதற்கு முன்னாலுள்ள முஸ்லிம் சமுதாயத்தைப் பற்றியதன்று! பிற்கால முஸ்லிம்களைப் பற்றியதே இந்த முன்னறிவிப்பு, ஆரம்பகால முஸ்லிம்களைப் பற்றியதன்று! இதனைப் புரிந்தும் புரியாததுபோல், "எல்லாக் காலங்களிலும் வெற்றிப் பெரும் கூட்டத்தாரும் இருப்பார்கள் வழிகேடர்களும் இருக்கத்தான் செய்வார்கள்" என்று மேம்போக்காகக் குறிப்பிடுகிறார் நஜாத் ஆசிரியர். அவ்வாறானால் நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸை கூறியிருக்கவேண்டிய அவசியமேயிருக்காதே.
ஆரம்ப காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தில் பிளவுகள் இருக்கவில்லை. பின்னர் பிரிவுகள் ஏற்பட்டிருந்தாலும் அவை அதிகமாக இல்லை. அதிகமான பிரிவுகள் முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்பட்டுவிட்ட இக்காலத்தைப் பற்றியே நபி (ஸல்) அவர்கள் முன்னறிவித்தார்கள். எனவே முற்கால முஸ்லிம்களைப் பற்றிய சர்ச்சைக்கே இங்கு இடமில்லை.
இன்னுமொன்றை இங்கு குறிப்பிடவேண்டும். அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமது சமுதாயத்தின் எதிர் காலத்தைப் பற்றி மிக விளக்கமாக எடுத்தியம்பியுள்ளார்கள், அதாவது தமது காலத்திற்கு பிறகுள்ள மூன்று நூற்றாண்டுகள் நல்ல கால கட்டங்கள் எனவும் அதன் பிறகு அக்கிரமமும் பலாத்காரமும் பெருகிவிடும் எனவும் பின்னர் "நபித்துவத்" தின் வழியில் "கிலாபத்" ஏற்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளார்கள். (ஆதாரம்: மிஷ்காத்)
அஹ்மதிய்யா ஜமாஅத் வெறுமே 72 பிரிவுகளுக்குப் பிறகு 73 ஆவது பிரிவாக மட்டும் எருபடுத்தப்பட்டதன்று. மாறாக இறைவனின் திட்டத்தின்படி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் பல்வேறு முன்னறிவிப்புகளின் படி தோன்றிய இறையியக்கமாகும்.
அஹ்மத் என்பது நபி(ஸல்) அவர்களையும் அஹ்மதியா தரீக்க என்பது நபி (ஸல்) அவர்களின் தரீக்காவையுமே குறிக்க முடியுமென அந்-நஜாத் வாதிடுகிறது. இது போன்ற வாதங்கள் பாமரர்களின் வாதங்களாக இருக்க முடியுமே தவிர படித்தவர்களின் வாதமாக இருக்கயியலாது. விஷயமறிந்தவர்கள் இதுபோன்று வாதித்தால் அவர்கள் விஷயமரியாதவர்களை ஏமாற்ற நினைக்கிறார்கள் என்பதே அதற்குப்பொருள் 'அஹ்மத்' என்பது அண்ணலாரின் குணப்பெயரே தவிர பெற்றோர் இட்டப் பெயரன்று. திருக்குரானில் அவர்களின் பெயர் வரும் கீழ்காணும் இடங்களிலெல்லாம் 'முஹம்மத்' என்றே காணப்படுகிறது.
- 'முஹம்மதுர் ரெசூலுல்லாஹ்' (சூரா பாத்திஹா)
- 'நுஸ்ஸில அலா முஹம்மத்' (சூரா முஹம்மத்)
- மாகான முஹம்மதுன் அபா அஹதின் (சூரா அஹ்ஸாப்)
- வமா முஹம்மதுன் இல்லா ரெசூலுன் (சூரா ஆலு இம்ரான்)
அதுவுமில்லாமல், கலிமா, பாங்கு, சலவாத், இன்னும் தொழுகையில் செய்யப்படும் ஓதல்கள் யாவற்றிலும் முஹம்மத் என்ற அவர்களின் இயற்பெயரே இடம்பெற்றுள்ளது. அரசர்களுக்கு அவர்கள் அனுப்பிய கடிதங்களிலும் உடன்படிக்கையிலும் 'முஹம்மத்' என்றே அவர்களின் இயற்பெயர் காணப்பட்டது. இவ்வாறிருக்க அண்ணல் நபி (ஸல்) அவரளின் பெயர் 'அஹ்மத்' என்றும் திருக்குரானிலே 'இஸ்முஹு அஹ்மத்' - 'அவர் பெயர் அஹ்மத்' என்று காணப்படுவது நபி பெருமானாரையே குறிக்கும் என்று இவர்கள் கூறுவது உண்மையிலிருந்து மக்களை திசை திருப்புவதற்கேயாகும்.
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) போன்றவர்களோ அஹ்மது என்று பெயரிட்ட வேறு யாருமோ குர்ஆனில் அஹ்மத் என்று குறிப்பிடுவது என்னையே யாகும் என்று வாதிட்டதில்லை என்கிறது நஜாத்! நஜாத் ஆசிரியரின் பாஷையில் இதனைக் குறிப்பிடுவதென்றால் 'பே தனமான' வாதம் என்றே இதனைக் கூறவேண்டும். திருக்குரானில் காணப்படும், 'இஷ்முஹு அஹ்மத்' என்பது இவர்களை குறிக்காது இருக்கும்போது இவர்கள் ஏன் அவ்வாறு வாதிக்கப்போகிரார்கள்? இவர்கள் அவ்வாறு வாதிக்காததால் 'அஹ்மத்' என்பது நபி (ஸல்) அவர்களை குறிக்கும் என்று கூறுவதென்றால் அதைவிட சிறுபிள்ளைதனமான வாதம் எதுவுமிருக்க இயலாது.
ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் அவர்களின் பெயர் குலாம் அஹ்மத். அஹ்மத் அல்ல என்கிறது நஜாத். ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் தகப்பனார் பெயர் மிர்ஸா குலாம் முர்தஸா என்றும் சகோதரரின் பெயர் மிர்ஸா குலாம் காதிர் என்றும் படிக்கின்ற எவருக்கும் மிர்ஸா குலாம் என்பது குடும்ப வழக்கிலுள்ள பெயர் என்பதும் அஹ்மத் என்பதே அவர்களின் பெற்றோர் இட்ட பெயர் என்பதும் புலனாகும்.
73 பிரிவு பற்றிய ஹதீஸிற்கு விளக்கமாக 'மிர்காத் ஷரஹ் மிஷ்காத்தில்' வந்துள்ள 'அஹ்மதியா தரீக்கத்' என்ற சொற்றொடரும் பொதுவாக முஸ்லிம்களையே குறிக்கும் என நஜாத் வாதிடுகிறது. அப்படியானால், இந்த விளக்கவுரையில் குறிப்பிடும் வண்ணம் நாங்களும் அஹ்மதிய்யா தரீக்கவைச் சார்ந்தவர்களே என இவர்கள் தம்மைக் கூறுவார்களா? இந்த விளக்கவுரையில் "வல் பிர்கதுன்னாஜி பதுஹும் அஹ்லு சுன்னத்தில் பைலாயில் முஹம்மதிய்யதி வ தரீகது நகிய்யதுல் அஹ்மதிய்யத்" என வந்துள்ளது இது 73 பிரிவுகளில் இரட்சிப்புப் பெற்ற பிரிவைப் பற்றிக் கூறப்பட்டதாகும். "முகம்மதியா நடைமுறைகளை ஏற்று நடக்கும் 'அஹ்மதிய்யா தரீக்கத்' என்று இங்கு கூறப்பட்டதிலிருந்து இது பொதுப்படையாகக் கூறப்பட்டதன்று, குறிப்பாகக் கூறப்பட்ட ஒன்று, என்பது சிந்திக்கின்ற எவருக்கும் எளிதில் புலனாகும். ஆனால் 'நஜாத்' வேண்டுமென்றே குட்டையை குழப்புகிறது. எடுத்துக் கொண்ட விஷயம் 73 பிரிவு பற்றியதாக இருக்கும்போது 'அஹ்மத்' பற்றியும் 'இப்னுமர்யம்' பற்றியும் கூறி வாசகர்களை திசை திருப்புகிறது. இது உண்மையான நஜாத்தின் - இரட்சிப்பின் வழியாகாது.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.