நபி (ஸல்) அவர்கள் இறுதிகாலத்தில் தமது சமுதாயம் எவ்வாறு இருக்கும் என்பதைக் கீழ்வருமாறு முன்னறிவித்துள்ளார்கள்:-
"ஒரு ஜோடி காலனிகளுள் ஒன்றோடொன்று ஒத்திருப்பது போன்று இஸ்ரவேல் சமுதாயத்திற்கு நிகழ்ந்தது அனைத்தும் எனது சமுதாயத்திற்கும் நிகழும். இஸ்ரவேலர்கள் எழுபத்துஇரண்டு பிரிவுகளாகப் பிரிந்தனர். எனது சமுதாயமோ எழுபத்துமூன்று பிரிவுகளாகப் பிரியும் (அவற்றுள்) ஒரு பிரிவாரைதவிர ஏனைய பிரிவினர் அனைவரும் 'நரகை அடைவர்' இறை தூதரே! அந்த பிரிவு எது? என்று வினவப்பட்டபோது நானும் எனது சஹாபாக்களும் எவ்வாறிருப்பார்களோ அந்தப் பிரிவு என நபிபெருமானாரவர்கள் பதிலளித்தார்கள்"
இந்த நபிமொழியின் இறுதிப்பகுதியை அஹ்மத், அபூதாவூத் ஆகியோர் கீழ்வருமாறு அறிவித்துள்ளார்கள்:-
'எழுபத்து இரண்டு கூட்டமும் நரகிலும், ஒரு கூட்டம் சுவர்க்கத்திலும் நுழைவார்கள். அந்த ஒரு பிரிவு ஜமாத்தாக இருக்கும்" (மிஷ்காத்)
இந்த நபிமொழி இப்போது சில முஸ்லிம் பத்திரிகைகளில் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. அனாச்சாரங்களிலிருந்தும், ஆலிம்சாக்களின் பிடியிலிருந்தும் தம்மை சிறிது விடுவித்துக் கொண்ட சிலர் தாமே இந்த வெற்றிக்குரிய பிரிவு என தம்பட்டம் அடித்துக்கொள்ளவும் மற்றவர்கள் அதற்க்கு அருகதையற்றவர்கள் என்பதற்கு 'ஆதாரங்கள்' காட்டவும் முயல்கின்றனர். இது இவர்களின் அறியாமையையே பறைசாற்றுகிறது.
அந்-நஜாத் ஏடு, வெற்றிக்குரிய அந்தப் பிரிவு எது என்பதை ஆய்வு செய்வதற்க்குப் பகரமாக அந்தப் பிரிவைச் சாராதவர்கள் யார் என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. அந்-நஜாத் இதழில் இவ்வாறு காணப்படுகிறது:-
"நபி (ஸல்) அவர்களிடம் மன்ஹும் யாரசூலுல்லாஹ் என்றே கேட்கப்பட்டது, அதாவது அவர்கள் யார் என்றே கேட்கப்பட்டது. அவர்களின் பெயர் என்ன என்றோ? அவர்கள் என்ன அகீதாவில் இருப்பார்கள் என்றோ கேட்கப்படவில்லை. எனவே இஷ்டப்பட்ட பெயரை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்பவர்கள் விதண்டா வாதம் செய்கிறார்கள் என்பதே உண்மையாகும்"
மேற்கண்ட நபிமொழியில் "மன்ஹும்" (அவர்கள் யார்) என்று கேட்டதாக இல்லை. மாறாக மன்ஹிய (அது எது?) அதாவது அந்தப் பிரிவு எது என்றே கேட்கப்பட்டது. நஜாத் ஆசிரியர் தமது இஷ்டம்போல் ஹதீஸை மாற்றுகிறாரா?
முஸ்லிம் சமதாயத்தில் நபி(ஸல்)அவர்களையும் சஹாபாப் பெருமக்களையும் பின்பற்றுபவர்கள் வெற்றிக்குரியவர்கள் என்று இங்கு குறிப்பிடப்படவில்லை. அவ்வாறென்றால் எழுபத்துமூன்று பிரிவுகளிலும் அவ்வாறு நடப்பவர்கள் இருக்கலாம். இங்கு 'மன்ஹிய' - அந்தப் பிரிவு எது? என்று கேட்கப்பட்டு தாமும் தமது சஹாபாக்களும் இருப்பது போன்று இருப்பவர்களே என்று நபி(ஸல்) அவர்களால் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது. எனவே அவ்வாறு இருக்கும் ஒரு பிரிவாறே வெற்றிக்குரிய பிரிவார் என்றும் அப்படி ஒரு பிரிவார் இருந்தால் அவர்கள் தம்மை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்ட தமக்கு ஒரு பெயரை வைத்துக் கொள்ளவே வேண்டும் என்பதும் தெளிவாகிறது.
"நபி (ஸல்) அவர்களே எனது உம்மத்து எழுபத்துமூன்று பிரிவினர்களாகப் பிரிவார்கள் என்று சொல்லப்பட்டபின் அதை எப்படி நாம் மறுக்க முடியும்"(பக்கம் 13)
என்று கூறி முஸ்லிம் சமுதாயத்தில் பிரிவுகள் உண்டு என்பதை ஒப்புக் கொள்ளும் அந்-நஜாத் வெற்றிக்குரியவர்கள் ஒரு தனிப் பிரிவாறே என்பதை உணர்ந்துக் கொள்ளத் தவறுவது ஏன்?
மேலே குறிப்பிட்ட படி இந்த நபிமொழியில் மற்றொரு அறிவிப்பில் 'அந்தப் பிரிவு ஜமாத்தாக இருக்கும்" என்று கூறப்பட்டிருக்கிறது. இதிலிருந்து வெற்றிக்குரியவர்கள் தனி நபர்கள் அல்ல மாறாக அது ஒரு ஜமாஅத் என்பது புலனாகவில்லையா?
இஸ்லாம் தனிநபர் மார்க்கமன்று, அது கூட்டாகச் செயல் படுத்தப்படவேண்டிய மார்க்கம். இயக்கம் இல்லாமல் இஸ்லாம் இல்லை. இதனை 'நஜாத்' புரிந்துக் கொள்ளவேண்டும்.
இனி வெற்றிக்குரிய அந்தப் பிரிவு எது என்பதை ஆராய்வோம். அந்தப் பிரிவுக் குரிய இலக்கணம் இன்றைய முஸ்லிம்களில் பெரும்பாலோரிடத்தில் காணப்பட வில்லை. என்பதை அவர்களின் தலைவர்களே கூறுகின்றனர்.
மௌலானா மௌதூதி சாகிப் இவ்வாறு கூறுகிறார்:-
பெயரளவிலான இன்றைய முஸ்லிம் சமுதாயத்தை காணுகின்ற போது அதில் விதவிதமான முஸ்லிம்களைக் காணமுடியும். முஸ்லிம் சமுதாயம் இன்று ஒரு மிருகக் காட்சி சாலையாக காட்சி தருகின்றது. அதிலே பருந்து, காகம், கழுகு போன்ற ஆயிரக்கணக்கான பறவைகளையும் மிருகங்களையும் காணலாம். இன்று முஸ்லிம்களென்று சொல்லப்படும் மக்களின் நிலை எவ்வாறென்றால் அவர்களில் 1000 பேரில் 999 பேர் மார்க்க அறிவில்லாதவர்களாகவும் உண்மைக்கும் பொய்யிற்கும் உள்ள வேறுபாட்டினை உணராதவர்களாகவும் உள்ளனர். அவர்களின் எண்ணங்கள் இஸ்லாத்திற்கு முரண்பாடானவை. பரம்பரை பரம்பரையாக முஸ்லிம் என்ற பெயரை அவர்கள் பெற்றிருக்கிறார்களேயொழிய வேறொன்றும் அவர்களிடத்தில் இல்லை. (முஸல்மான் அவர் மௌஜூதா ஸியாசி கஷ்மகஷ் பக்கம் 44, 105-106)
மௌலானா அதாவுல்லா ஷாஹ் புகாரி இவ்வாறு கூறிறார் -
நாம் இஸ்லாத்தின் பெயரால் செய்வதனைத்தும் வெளிப்படையான குப்ராகும். நமது இதயங்கள் மார்க்க அறிவு இல்லாதவையாகவும் கண்கள் அகப்பார்வை (ஆன்மீகப் பார்வை) அற்றவையாயும் காதுகள் உண்மையை கேட்க மறுப்பவையாகவும் இருக்கின்றன. சிலைகள் (கப்ருகள்) மீது உங்களுக்குள்ள நம்பிக்கையும் அல்லாஹ் மீதுள்ள அவ நம்பிக்கையும் குப்ர் அல்லாமல் வேறென்ன? நாம் ஏற்றிருப்பது நபி (ஸல்) அவர்கள் கொண்டுவந்த இஸ்லாமா? நமது அமைப்புகள் அனைத்தும் குப்ரியத் ஆகும்........ (ஆஸாத், லாகூர்)
இப்படி ஒட்டு மொத்தமாக முஸ்லிம் சமுதாயம் - நபி பெருமானாரின் சீர்கெட்டு விட்டதென்றால் வெற்றிக்குரிய அந்தப் பிரிவுதான் எது? அதனை நபி(ஸல்) அவர்களே கோடிட்டுக் காட்டுகிறார்கள்:
"இந்தச் சமுதாயத்தின் சிறந்த காலக்கட்டங்கள் அதன் ஆரம்பத்திலும் இறுதியிலும் உள்ளவையாகும். ஆரம்பக் கட்டத்தில் நானும் இறுதி கட்டத்தில் வாக்களிக்கப்பட்ட மஸீஹும் இருப்பார்கள்." (கன்சுல் உம்மால்)
"நான் ஆரம்பத்திலும் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் இறுதியிலும் உள்ள ஒரு சமுதாயம் எவ்வாறு அழியும்" (இப்னு மாஜா)
இவற்றிலிருந்து வாக்களிக்கப்பட்ட மஸீஹை ஏற்பவர்களே அந்தச் சீர்கேட்டிலிருந்து தப்பியவர்கள் என்பதும் அவர்களே அந்த வெற்றிக்குரிய பிரிவார் என்பதும் புலனாகும்.
அடுத்து வெற்றிக்குரிய அந்த பிரிவார் ஒரு "ஜமாஅத்" ஆக விளங்கும் என மேற்கண்ட ஹதீதிலிருந்து தெளிவாகிறது. இங்கு ஜமாஅத் என்பது வெறும் கூட்டத்தைக் குறிக்காது.
"லைசல் ஜமாஅது இல்லா பி இமாமின்"
இமாம் இல்லாமல் ஜமாஅத் இல்லை.
என்பது நபி(ஸல்) அவர்களின் வாக்காகும். ஜமாஅத் என்றால் அது ஒரு தலைமையின் கீழ் இயங்கக்கூடியதொன்றாகும். இஸ்லாமிய சமுதாயம் தலைமையின் கீழ் இயங்கக்கூடியதாகும். தலைமை இல்லாத எந்தக் கூட்டமும் இஸ்லாமிய சமுதாயமாக அழைக்கப்பட இயலாது. அந்த அளவுக்கு தலைமை முக்கியத்துவம் வாய்ந்தது.
ஹஸ்ரத் இப்னு உமர் அவர்களின் ஓர் அறிவிப்பு இவ்வாறு காணப்படுகிறது:- யாராவது ஜமாத்திலிருந்து விலகி நிற்கிறார்கள் என்றால் அவர் இஸ்லாமிய வளையத்திலிருந்து வெளியேற்றப்படுவார். (திர்மிதி) ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் பையத் செய்தது எப்போது என ஹஸ்ரத் யாகூபிப்னு இப்ராஹிமிடம் வினவப்பட்டபோது, நபி(ஸல்) அவர்கள் மறைந்த அன்றே! ஹஸ்ரத் அபூபக்கர் அவர்களை இமாமாக ஏற்றார்கள். சஹாபாக்கள் ஒரு நாளில் ஒரு பகுதி கூட ஜமாத்தாக இல்லாமலிருக்க விரும்பவில்லை. என்றார்கள். (திப்ரி பாகம் 3 பக்கம் 301)
இவற்றிலிருந்து "ஜமாஅத்" "இமாம்" ஆகியன எத்துனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணரலாம்.
இந்த 'ஜமாஅத்" தும் இமாமும் தம்மிடத்தில் இல்லை என்பதை இக்கால முஸ்லிம் அறிஞர்கள் உணர்ந்தே இருக்கின்றனர்.
அல்லாமா சித்திக் ஹசன் அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்:-
"இன்றைய முஸ்லிம்களுக்கு ஒரு ஜமாத்தோ இமாமோ இல்லை. மாறாக இது இவர்கள் சின்னாபின்னமாயிருக்கும் காலகட்டமாக இருக்கிறது.(இக்திராபுஸஆ , பக்கம் 56)
ஜம்மியத்துல் உலமாயே ஹிந்தின் ஏடான அல்ஜம்மியத் (டெல்லி) தில் இவ்வாறு காணப்படுகிறது:-
"முஸ்லிம்சமுதாயமென்பது ஒரு சரடில் கோர்க்கப்பட்ட மாலை போன்ற கட்டுப்பாடுமிக்க ஓர் அமைப்பென்றால் இன்று முஸ்லிம் சமதாயம் என்ற ஒன்று இல்லவே இல்லை! சிதறிக் கிடக்கும் மணிகள் போலவும் இடையனில்லாத ஆடுகள் போலவும் முஸ்லிம்கள் இருக்கின்றனர்." (அல் - ஜம்மிய்யத் 14-4-31)
லாஹூரிலிருந்து வெளிவரும் ஸம்ஸம் எனும் ஏட்டில் இவ்வாறு காணப்படுகிறது.
அந்தோ பரிதாபம், உயிருள்ள ஓர் இமாம் இல்லாத சமுதாயம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து கொண்டிருப்பதை காண்கிறோம். சொர்கத்திற்குரிய வழி என்று எதனை எண்ணிக்கொண்டிருக்கிரார்களோ அது நரகத்தின் பாதையே யாகும். தலைமையற்ற ஒரு சமூகத்தின் தலை மீது வீழ்ச்சியின் மேகங்களே காணப்படும். (ஸம்ஸம் 11-5-39)
நம்பிக்கையிலும் நடைமுறையிலும் திருமறையின் கட்டளை பேணியும் அண்ணல் நபிபெருமாநாரை முழுக்க முழுக்க பின்பற்றியும் ஒரு இமாமின் கீழ் ஒன்றுபட்டு அல் ஜமாத்தாக இயங்கி வருவது இன்றைய உலகில் அஹ்மதியா இயக்கம் மட்டுமே
இத்தகைய ஒரு உன்னத ஜமாஅத் உருவாகுமென்றும் அதுவே நபிபெருமானார் முன்னறிவித்த அந்த வெற்றிக்குரிய பிரிவு என்றும் இஸ்லாமிய நல்லறிஞர்களும் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்துள்ளார்கள்.
மேற்கண்ட நபிமொழிக்கு விளக்கமாக ஹஸ்ரத் முஹிய்யுத்தீன் இப்னு அரபி (ரஹ்) அவர்கள் தமது மிர்காத் ஷரஹ் மிஷ்காத் எனும் ஹதீது விளக்கவுரை நூலில் இவ்வாறு வரைந்துள்ளார்கள்:
"எழுபத்திரண்டு பிரிவுகளும் நரகத்திற்காளாவார்கள். சுவர்க்கம் செல்லும் அந்த ஒரு ஜமாஅத் நபிபெருமானார் (ஸல்) அவர்களின் நடைமுறைகளைப் பேணும் 'அத்தரீத்துன் நக்கிய்யதுல் அஹ்மதிய்யது" புனித அஹ்மதிய்யா இயக்கத்தை சார்ந்தவர்களாக இருப்பார்கள். (மிர்காத் பாகம் 1 பக்கம் 201)
ஹஸ்ரத் முஜத்திது அல்பிஸானி (ரஹ்) அவர்கள் இவ்வாறு வரைந்துள்ளார்கள்: அக்காலத்தில் ஹக்கீகத்து முஹம்மதியாவின் பெயர் ஹக்கிகத்து அஹ்மதிய்யா என்றிருக்கும். அது (அஹமதிய்யத்) அல்லாஹ்வின் அஹத் (ஏகத்துவம்) எனும் குணயியல்பை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும். (ரிஸாலா மப்தக்மா ஆத் பக்கம் 58)
அஹ்மதியா இயக்கம் தோன்றுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னே அதன் பெயரை இந்த இஸ்லாமிய அறிஞர்கள் தெரிவித்திருப்பது அற்புதமும் இறைசெயலும் ஆகும். தனிப் பெயர் கொண்டவர்கள் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற கருத்தை கூறி மறைமுகமாக அஹ்மதிய்யா இயக்கத்தை தாக்க விழைகின்றவர்கள் இதனை தெரிந்துகொள்ளவேண்டும். இவர்களின் 'நஜாத்'திற்க்காகவும் இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காகவும் முஸ்லிம் சமுதாயத்தின் எழுச்சிக்காகவும் திறக்கப்பட்ட ஒரே வழி அஹமதிய்யா இயக்கமே என்பதையும் இவர்கள் உணரவேண்டும்.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.