அவதூறுகளும், குற்றச்சாட்டுகளும் அஹ்மதிகள் மீது கூறப்படுவது புதிதானதன்று.
எனினும் அஹ்மதிய்யா ஜமாஅத்திற்கெதிராக கூறப்படும் நச்சுக் கருத்துக்களை மறுப்பதும் மக்களுக்குத் தப்பெண்ணம் ஏற்பட்டுவிடாது தடுப்பதும் எங்கள் கடமையாகும்.
அலட்டலுக்கும் வெறும் ஆவேசப் பேச்சுகளுக்கும் பேர் போன முன்னால் அரசியல்வாதி ஒருவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கும் ஓர் ஏடு நம்மைப் பற்றி புதிதாக ஒரு புரளியை ஏற்படுத்தியுள்ளது.
ராமர் கோயில் கட்டுவதற்கு அஹ்மதி இளைஞர்கள் துணை போனார்கள் என்ற அப்பட்டமான ஒரு பொய்யை அது வெளியிட்டுள்ளது.
அஹ்மதிய்யா ஜமாத்தின்மீது இது போன்ற அவதூறுகளை கூறி முஸ்லிம்களின் இதயத்தில் அது பற்றிய தப்பெண்ணத்தை விதைத்து அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்திவிடலாம் என இறையச்சமற்ற சில குழப்பக்கார கும்பல்கள் மனப்பால் குடிக்கலாம்.
ஆனால், அஹ்மதியா ஜமாஅத் இத்தகைய எதிர்ப்புகளுக்கிடையேயும் 194 நாடுகளில் வேரூன்றி இருபது கோடி அங்கத்தினர்களை கொண்டு வேகமாக பரவி வருவதையும், படித்த பண்பட்ட மக்களின் நல்லாதரவைப் பெற்று வருவதையும் இவர்களின் குருட்டுக் கண்கள் காண்பதே இல்லை!
அதுமட்டுமன்று. பொய்யும், புரட்டும் நிலைப்பதில்லை, அது அழிவையே அடையும் பொய்யர்களை அல்லாஹ்வின் சாபம் தொடரும் என்பன போன்ற திருக்குரானின் நியதிகளுக்கேற்ப இவர்கள் தோல்வியையும் அழிவையுமே இறுதியில் சந்திக்கின்றனர்.
அஹ்மதிய்யா ஜமாத்தின் வெற்றிப் பாதையில் இவர்களின் கல்லறைகளே மைல் கற்கள்
அடுத்தவர்கள் மீது அநியாயமாகப் பழிசுமத்துவது உண்மை முஸ்லிம்களின் இயல்பன்று. 'முஹ்மின்கள், முஜாஹித்கள் இவர்களின் செயலுமல்ல. மாறாக அது 'முனாபிக்' எனும் நயவஞ்சகர்களின் செயலேயாகும். ஆதாரமின்றி பிறர்மீது அவதூறு கூறுவது அல்லாஹ்வின் ஆக்கினைக்கு வழிவகுக்கும்! அக்கிரமக்காரர்களாக, காலம் அவர்களை அடையாளம் காட்டும்!!
'எரிகிற வீட்டில் பிடிங்கியது லாபம்' என்பது போல முஸ்லிம்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் எழும்போது தாம் தான் சமுதாயக் காவலர்கள் எனத் தம்பட்டம் அடித்து அதன் மூலம் தம்மை வளர்த்துக் கொள்ளும் கும்பல்கள், அடையாளம் கண்டு கொள்ளப்படும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
உண்மையில் முஸ்லிம்களின் காவலன் அல்லாஹ்வேயாகும். உறுதியான ஈமானும் நன்னடத்தையுமே அவர்களைக் காக்கும் கவசன்ப்கள்! இதயத்தின் ஆழத்திலிருந்து எழுகின்ற 'துஆ' க்களே எதிரிகளை அழிக்கின்ற அவர்களின் ஆயுதங்கள்! எல்லாம் வல்ல இறைவனுடன் தொடர்புள்ள தலைமையின் கீழ் ஒன்றுபட்டிருப்பதே அவர்களின் பலம்! 'தக்வா' என்னும் வாலேந்தியவர்களே அவர்களின் படை!
இதை விடுத்து கருப்புச்சட்டையும், காட்டுக் கத்தலும், கையில் வாளும் அவர்களுக்கு பயன்தராது! மாறாக இவையனைத்தும் கலகக்காரர்களின் பட்டியலில்தான் அவர்களை இடம்பெற செய்யும்.
தூய இஸ்லாமே அஹ்மதி முஸ்லிம்களின் உயிர்மூச்சு ! அதன் உலகளாவிய வெற்றியே அவர்களின் இலக்கு! அண்ணல் மாநபி (ஸல்) அவர்களுக்காக மக்களின் உள்ளங்களை வெல்லுவதே அவர்களின் செயல் திட்டம்! முஸ்லிம்களின் எழுச்சியும் சமுதாயத்தின் மறுமலர்ச்சியுமே அவர்களின் குறிக்கோள்!!
அஹ்மதிகள் இந்தியாவில் வாழ்ந்தாலும், இஸ்ரேலில் வாழ்ந்தாலும் இஸ்லாதிற்க்ககவே வாழ்கிறார்கள்!
இஸ்லாமியச் சமுதாயத்திற்கு ஓர் இம்மியளவு இழப்பு ஏற்படுத்தும் வகையில் அவர்கள் செயல்பட்டதாக யாராலும் எந்த ஆதாரத்தையும் காட்டிட இயலாது! பாகிஸ்தானில் பல ஆண்டுகள் பல்வேறு கொடுமைகளுக்கு இலக்காகி இருந்தும் அவர்கள் அங்கு, அந்த நாட்டு அரசுக்கு எதிராக எப்போதும் செயல்பட்டதில்லை.
முஸ்லிம்களின் உரிமைகள் எங்கேயாவது பறிக்கப்பட்டால் அதற்கெதிராக முறையாக முதலில் குரல் எழுப்புவது அஹ்மதிகலேயாகும். ஆனால் ஆர்ப்பட்டமும் அலட்டலும் அடுத்தவரின் பாராட்டுதலுக்காகச் செய்வதும் அஹ்மதிகள் அறியாதது!
இனத்துரோகம் என்பது பணத்திற்குப் பல்லிளிப்பவர்களிடம் இருக்குமேயொழிய இறைவனுக்காக இருந்ததையெல்லாம் விட்டு வந்த அஹ்மதிகளிடம் இருக்க வாய்ப்பில்லைஅப்பழுக்கற்ற உள்ளங்கள் இதனை நிச்சயம் உணரவே செய்யும்!
Blog RSS Feed
Via E-mail
Twitter
Facebook
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.