மவ்லவி O.M. முஸ்ஸம்மில் அஹ்மத் H.A
ஹஸ்ரத் ஈஸா (அலை) 2000 ஆண்டுகளாக பௌதீக உடலுடன் வானத்தில் உயிருடன் இருக்கிறார்கள். அதே ஈஸா நபியே மீண்டும் இந்த உலகிற்கு இறங்கிவருவார் என்ற புரோகிதக் கொள்கையை திருக்குர்ஆன்,ஹதீஸ்களிலிருந்து நிரூபிக்க முடியுமா? என்று மௌலவிP.M. முஹம்மது அலி H.A அவர்கள் கேட்டிருந்த கேள்விக்கு அந்நஜாத் மே2011 இதழில் கொடுத்த பதிலை திருக்குர்ஆன் ஹதீஸ்களின் ஒளியில் அலசி ஆராய்வது இக் கட்டுரையின் நோக்கம்.
வழிகேடு என திருக்குர்ஆன் வர்ணித்துக் கூறும் இறுதி நபிக் கொள்கையை (40:35) ஆமோதித்து அந்நஜாத் எடுத்துவைக்கும் சான்று இதுதான்:
திருக்குர்ஆன் 2:4 - வது இறைவாக்கு உமக்கு அருளப்பட்ட அல்குர்ஆன் மீதும், முந்தைய நபிமார்களுக்கு அருளப்பட்டவை மீதும் அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்று அறிவிக்கிறதே அல்லாமல் உமக்கு பின்னர் அருளப்படுபவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள் என்று அறிவிக்கவில்லை.....
முத்திரை நபிக்குப் பிறகு ஒரு நபி வந்து, அந்த நபியை ஏற்று அவரது அறிவுரைகளின்படி நடப்பது மார்க்கமாக இருந்தால், முந்தைய நபிமார்களுக்கு அருளப்படுபவையையும் நம்பி ஏற்று நடக்க வேண்டும் என்று கட்டளையிடாமல் விட்டிருப்பானா? (அந்நஜாத் மே 2011 பக்கம்25)
இந்த வசனத்தின் படி இனி இறைவன் புறமிருந்து எவரும் வர முடியாது என்றால் ஈஸா நபியின் வருகையும் அடிபட்டுபோகின்றது. முத்திரை நபிக்கு பிறகு ஈஸா நபி வந்து அவரது அறிவுரையின் படி நடப்பது மார்க்கம் என்ற நம்பிக்கையும் உங்கள் கோணத்தில் அபத்தமானதாகிவிடுகின்றது. நஜாத்தில் அபத்தமாகிவிடுகின்றது. நஜாத்தின் கொள்கைப்படி ஈஸா நபி மீண்டும் வருவதாக இருந்தால் அவரை ஏற்று நடக்கவேண்டும் என்றால் அதைப் பற்றியும் இங்கு சொல்லாமல் விட்டிருப்பானா? என்பதையும் சிந்திக்கவேண்டும். ஈஸா நபி2000 ஆண்டுகளாக உயிருடன் இருக்கின்றார் என்ற ஷிர்க்கான கிறிஸ்தவக் கொள்கையை நஜாத் பிரிவினர் சிறிது நேரம் வெளியே எடுத்து வைத்து நடுநிலைமையோடு உள்வாங்கி சிந்தித்தால் அவர்களாலும் இந்த உண்மையை விளங்கிக் கொள்ள முடியும்.
இரண்டாவது நஜாத் பத்திரிக்கை திரித்துக் வளைத்து கூற முற்பட்டிருப்பது போன்று, 2:5 வசனத்தில் நபியின் வருகையைப்பற்றி அல்லாஹ் இங்கு கூறியிருந்தால் பின்னர் ஒரு நபி வருவதைப் பற்றியும் கூறியிருப்பான். ஆனால் அல்லாஹ் அந்த வசனத்தில், அவர்கள் உமக்கு அருளப்பட்டதன் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டதன் மீதும் நம்பிக்கை கொள்வார்கள் எனக் கூறுகின்றன் . ஆக அல்லாஹ் இங்கு முந்தைய நபிமார்களுக்கு இறக்கப்பட்ட வேதத்தையும் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதத்தையும் பற்றிக் கூறுகின்றானே தவிர நஜாத் கூறுவதுபோல் நபியின் வருகையைப் பற்றி அல்ல என்பதை நஜாத்தை இடைத்தரகராகவோ, புரோகிதராகவோ நம்பாமல் சுயமாக சிந்திப்பவர்கள் புரிந்து கொள்ளமுடியும்.
ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்தவொரு புதிய வேதமோ ஷரியத்தோ வரப்போவதில்லை என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இல்லாதபோது, இனி ஒரு வேதம் இறக்கப்படுவதைப் பற்றி இங்கு குறிப்பிடவில்லையே எனக்கூறுவது நஜாத்தின் அறிவீனத்தையே காட்டுகிறது.
அவ்வாறே, இன்று நான் உங்களுக்குகாக உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கியுள்ளேன் (5:4), நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (உண்மையான) மார்க்கம் இஸ்லாமாகும். இஸ்லாம் அல்லாத வேறு (ஏதாவது) மார்க்கத்தை (மேற்கொள்ள) விரும்புபவரிடமிருந்து (அது) ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது (3:86) ஆகிய வசனங்களை நஜாத் எடுத்தெழுதி இதன் மூலம் இனி எந்த நபியும் வர முடியாது என்ற சுயகருத்தை நிலைநாட்ட முற்பட்டிருக்கிறது. இந்த வசனங்களிலும் மார்க்கம் முழுமை அடைந்துவிட்டது. அது இஸ்லாம் தான் என்பதும்,எனவே இஸ்லாம் அல்லாத ஒரு புது மார்க்காத்தையோ, ஒரு புது ஷரியத்தையோ இனி எவரும் கொண்டு வர முடியாது என்பதுதான் நிரூபிக்கப்பட்டுள்ளதே
அல்லாமல் இறுதி நபிக் கொள்கை அல்ல என்பதையும் ஒருவரால் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும். இறுதி நபிக்கொள்கையின் மோகத்தினால் இனி எவரும் இறைவனிடமிருந்து வரவேண்டிய தேவை இல்லை என்று இதற்குப் பொருள் கொடுத்தால் ஈஸா நபியின் வருகையும் தேவையற்றது என்பதை நஜாத்தை இடைத்தரகராகக் கொள்ளாதவர்களால் புரிந்து கொள்ள முடியும்.
மிர்ஸா குலாம் அஹ்மது தன்னை ஒரு போதும் நபி என வாதிடவில்லை,அவரது இறப்பின் பொது சிறுவராக இருந்த மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூது அஹ்மதே அவர் கலீபாவாக ஆனா பின்னர் தன் தந்தை தன்னை நபி என சொன்னார் என லாஹூர் பிரிவை ஏற்படுத்திய முஹம்மது அலி M.A. LLBகூறியுள்ளார் என நஜாத் குறிப்பிட்டுள்ளது. (நஜாத் மே 2011 பக்கம் 26)
முஹம்மது அலி அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தை விட்டுப் பிரிந்து, லாகூர் பிரிவை ஏற்படுத்தினார் என்பதை உணர்ந்த அபூ அப்தில்லாஹ் அவரது கூற்றை சான்றாக எடுத்து வைத்திருப்பது எவ்வளவு பெதமைத்தனமானது! ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு கிலாபத் பதவி அலி (ரலி) அவர்களுக்குதான் கிடைக்க வேண்டும் என்ற ஷியாவின் கொள்கையை சான்றாக வைத்து ஹஸ்ரத் அபூபக்கர், உமர், உஸ்மான்(ரலியல்லாஹு அன்ஹும்) அவர்களின் கிலாபத்தை மறுக்கத் துணியும் மூடர்களைப் போன்ற செயலைத்தான் அபூ அப்தில்லாஹ் கையாண்டுள்ளார். புரோகிதர்களைப் புறக்கணிக்காதவரை முஸ்லிம்களுக்கு எழுச்சி இல்லை: நஜாத் இல்லை என வாய் கிழிய பேசும் அபூஅப்தில்லாஹ் புரோகிதப் பண்பை ஏன் கையாண்டார் என்பது எமக்குப் புரியவில்லை. ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் நபி என வாதிக்கவில்லை என்பது அபூஅப்தில்லாஹ்வின் வாதம் என்றால் அதனை அவர் அன்னாரின் நூலிலிருந்து எடுத்து வைத்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் மாற்றுக் கருத்துக் கொண்ட ஒருவரின் கூற்றை எடுத்து வைத்திருப்பது நஜாத் ஆசிரியரின் கையாலாகாதத்தனத்தையே காட்டுகின்றது. ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
"தற்போது முஹம்மதிய்ய நுபுவத்தைத் தவிர எல்லா நுபுவ்வத்துகளும் அடைக்கப்பட்டு விட்டது. ஷரீஅத்துடைய நபி எவரும் வரமாட்டார். ஷரீஅத் இல்லாமல் நபி தோன்றலாம். ஆயினும் எவர் முதலில் உம்மத்தீ ஆக இருக்கின்றாரோ அவர்தான் ஆக முடியும். எனவே இந்த வகையில் உம்மத்தீயுமாவேன், நபியுமாவேன்." (ரூஹானீ கஸாயின் தொகுதி20பக்கம் 412)
ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே நுபுவ்வத் எனும் அந்தஸ்தைப் பெற முடியும். அதற்க்கு அவர் முதலில் உம்மத்தீயாக இருக்க வேண்டும் என்ற கருத்தை ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) தெளிவாக தமது நூல்களில் இடங்களில் குறிப்பிட்டிருக்கும்போது நஜாத் பிரிவினர் அதை மறைத்துவிட்டு லாஹுர் பிரிவினரின் கூற்றை சான்றாக வைத்திருப்பது அறிவீனமாகும்!
அடுத்து, திருக்குர்ஆன் எளிதாக்கப்பட்டுள்ளது. அதில் கோணல்களோ,முரண்பாடுகளோ, புரிய முடியாதவைகளோ, நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு மனிதர்களில் யாரும் மேல் விளக்கம் கொடுக்கும் நிலையோ இல்லை என நஜாத் ஆசிரியர் எழுதியுள்ளார். அப்படியானால் அவர் ஈஸாவின் வருகை எதற்கு? உங்கள் விளக்கத்தின்படி ஈஸாவின் வருகை மனிதர்களில் மேல் விளக்கம் கொடுக்கும் நிலையில் அவர் இருக்கிறார் என்றாகிவிட்டதா?
திருக்குரானில் முரண்பாடுகளோ, புரியமுடியாதவைகளோ நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு மனிதர்களில் யாரும் மேல் விளக்கம் கொடுக்கும் நிலையோ இல்லை என்றால் திருக்குர்ஆனையே அறியாத ஈஸா நபி என்ன மேல் விளக்கம் கொடுப்பதற்காக வர இருக்கிறார்? அல்லது ஈஸாவை மனிதர்களுக்கு அப்பாற்பட்ட ஒரு படைப்பாக நஜாத் கூறப்போகிறதா? என்பதை வாசகர்கள் சிந்திக்கவேண்டும்.
அடுத்து 3:55 - ல் உம்மைக் கைப்பற்றுவேன் என்று அல்லா கூறுவதை மரணிக்க செய்து என காதியானிகள் திரித்துச் சொல்கிறார்கள் என நஜாத் சாடியுள்ளது. அந்த வசனத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
"ஈஸாவே! நிச்சயமாக உம்மை மரணிக்கச் செய்வேன். மேலும் உம்மை என்னளவில் உயர்த்துவேன்." (3:56)
இங்கு வந்துள்ள முத்தவப்பீக (உமக்கு வபாத்தை கொடுப்பேன்) என்ற சொல்லுக்கு எல்லா புரோகிதர்களையும் போன்று உம்மைக் கைப்பற்றுவேன் என அபூஅப்தில்லாஹ்வும் திரித்து வளைத்து சுயவிளக்கம் கொடுத்து தன் கருத்தை நிலைநாட்ட முற்பட்டிருக்கின்றார். மதகுருமார்களை சாடிப் பேசியும், எழுதியும் வரும் இவரும் மதகுருமார்களின் அதே பாணியையே பின்பற்றிவிட்டார்.
தவப்பா என்ற இந்தச் சொல் திருக்குரானில் ஈஸா (அலை) அவர்களைப் பற்றி 3:56, 5:118 ஆகிய இரு இடங்களில் வருகின்றது. அதற்கு ரூஹை கைப்பற்றுதல், மரணத்தைக் கொடுத்தல் என்ற பொருள் தானே தவிர முல்லாக்கள் கூறுவது போன்று உடலோடு உயர்த்துதல் என்ற பொருள் ஒருபோதும் இல்லை. திருக்குரானில் இந்தச் சொல் ( பிஸ்மில்லாஹ்வையும் ஒரு வசனமாகக் கணக்கிடும்போது) பின்வரும் 23 இடங்களில் வருகின்றது:
2;235, 2:241, 3:194, 4:16, 4:98, 6:62, 7:38, 7:127, 8:51, 10:47, 10:105, 12:102, 13:41, 16:29, 16:71, 22:6, 32:12, 40:68, 40:78, 47:28, 6:61, 39:43
திருக்குரானில் அல்லாஹ் பயன்படுத்தியுள்ள இந்த வசனங்களில் ஈஸா (அலை) அவர்களுக்காக 3:56, 5:118 வசனங்களில் பயன்படுத்திய தவப்பீ என்ற அதே சொல்லையே பயன்படுத்தியிருக்கிறான். மேலும் இந்த இடங்களில் ரூஹைக் கைப்பற்றுதல் மரணத்தைக் கொடுத்தல் என்ற பொருளிலேயே பயன்படுத்தியிருக்கின்றான். கடைசியில் குறிப்பிட்ட 6:61, 39:43 ஆகிய வசனங்கள் இவ்வாறு வருகின்றன:
"அவனே இரவில் உங்கள் உயிரைக் கைப்பற்றுகின்றான். பகலில் நீங்கள் செய்ததை அறிகின்றான். பின்னர் குறிப்பிட்ட காலம் நிறைவு செய்யப்படுவதற்க்காக உங்களை மீண்டும் எழுப்புகின்றான்." (6:61)
"அல்லாஹ் உயிர்களை அவற்றின் மரணத்தின் போதும்,மரணிக்காதவற்றை அவற்றின் தூக்கத்தின் போதும் கைப்பற்றுகின்றான். பின்னர் மரணம் முடிவாகி விட்டவற்றை அவன் (தன்னிடமே) நிறுத்தி வைத்துக் கொள்கின்றான். மற்றவற்றை குறிப்பிட்ட ஒரு காலத்திற்குத் (திருப்பி) அனுப்பிவிடுகின்றான். சிந்தனை செய்யும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அடையாளங்கள் உள்ளன." (39:43)
இவ்விரு வசனங்களில் கூட நஜாத் நிரூபிக்க விரும்புவது போன்று உடலைக் கைப்பற்றுகின்றான் என்ற பொருளிலோ, உடலையும் உயிரையும் சேர்த்து கைப்பற்றுகின்றான் என்ற பொருளிலோ வரவில்லை.மாறாக உயிர்களை கைப்பற்றுகின்றான் என்ற பொருளில்தான் வந்துள்ளது 39:43 - ல் உயிர்களை என வெளிப்படையான சொல்லிலேயே அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். 6:61- ல் உங்களைக் கைப்பற்றுகின்றான் என வந்திருந்தாலும் ஈஸா விசயத்தில் மூட நம்பிக்கை கொண்டிருப்பது போன்று உடலோடு தூக்கிக் கொள்கின்றான் என அறிவுள்ள எவரும் இதற்கு பொருள் கொடுப்பதில்லை. தூக்கத்தின் போது உடல் இங்கே கிடப்பதுதான் அது தற்காலிக மரணம் என்பதற்கு சான்று,ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களால் நீதி தீர்ப்பவராக முன்னறிவிக்கப்பட்டவராகவும் வாக்களிக்கப்பட்ட மஸீஹாகவும் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் இதனை கீழ்வருமாறு தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள்.
"திருக்குரானில் எல்லா இடங்களிலும் தவப்பீ என்பதன் பொருள், மரணம் மற்றும் ரூஹை கைப்பற்றுதல் என்பதேயாகும். கடைசியாக குறிப்பிட்ட இரு வசனங்கள் வெளிப்படையில் தூக்கம் பற்றியதாக இருக்கின்றன என்றாலும், இந்த இரு வசனங்களிலும் தூக்கம் என்ற கருத்துதான் கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால், இந்த இடத்திலும் உண்மையான நோக்கமும் குறிக்கோளும் மௌத்(மரணம்) தான்: மரணத்தில் ரூஹ் கைப்பற்றப்படுகிறது என்பதை வெளிப்படுத்துவது நோக்கமாகும், ...... மற்றபடி சந்தேகமின்றி உறுதியான முறையில் ஆரப்பத்திளிருந்து கடைசி வரை திருக்குர்ஆனின் சொல்வழக்கில் எல்லா இடத்திலும் தவப்பீ என்ற சொல்லுக்கு மரணம் என்றே பொருள் இருப்பது நிரூபிக்கப் பட்டிருக்கின்றது. பிறகு விவாதத்திற்குரிய இரு வசனங்களில் (3:56, 5:118) மட்டும் த்ரிருக்குரானின் சொல் வழக்கிற்கு மாற்றமாக சுயமாக ஒரு பொருளை இட்டுக்கட்டி கூறுவது மார்க்கமிழந்த நிலையம் திரித்து கூறுவதும் அல்லாமல் வேறு என்ன?"(ரூஹானீ கஸாயின் தொகுதி3 பக்கம் 269)
தவப்பீ என்ற சொல்லுக்கு ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மரணத்தைக் கொடுத்தல் என்ற பொருளையே கொடுத்துள்ளார்கள். ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:
"என் சமுதாயத்தில் சிலர் கொண்டு வரப்பட்டு, இடப்பக்கத் (திலுள்ள நரகத்) திற்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அப்போது நான், 'என் இறைவா! (இவர்கள்) என் தோழர்கள் எனக் கூறுவேன். அதற்க்கு,இவர்கள் உங்களு (டைய மரணத்து) க்குப்பின் என்ன புதுமையை உருவாக்கினார்கள் என்பது உமக்குத் தெரியாது' என்று கூறப்படும். அப்போது நான் நல்லடியாரான (ஈஸா அலை ஹிஸ்ஸலாம்) கூறியதைப் போன்று நான் அவர்களுடன் இருந்த வரையில் அவர்களைக் கண்காணித்தவனாக இருந்தேன்; நீ எனக்கு மரணத்தை தந்த போது நீயே அவர்களைக் கண்காணித்தவனாக இருந்தாய் என்று கூறுவேன். அப்போது (என்னிடம்) நீர் இவர்களை விட்டுப் பிரிந்ததிலிருந்து இவர்கள் தம் குதிக்கால்களின் வழியே மார்க்கத்தை விட்டு வெளியேறிவிட்டனர் எனக் கூறப்படும். ( புகாரி கிதாபுத் தப்ஸீர் 5:118)
இங்கு பலம்ம (நீ எனக்கு தவப்பைத்தனி மரணத்தை தந்த போது) என்ற வார்த்தையை ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் தமக்காகவும் பயன்படுத்திக் கூறியிருக்கிறார்கள். புகாரி தமிழ் மொழியாக்கம் பாகம் 5 பக்கம் 275 - ல்தவப்பைத்தனீ என்ற சொல்லுக்கு "நீ என்னை திரும்ப அழைத்துக் கொண்ட போது" என தவறாக திருத்திப் பொருள் கொடுத்துள்ளனர். இது திருக்குரானில் எங்குமே பயன்படுத்தாத ஒரு பொருளாகும்.
இங்கும் மரணத்திற்குப் பிறகுள்ள நிலைதான் என்பதற்கு சான்றே,உங்களு(டைய மரணத்து) க்குப் பின் என்ன புதுமையை உருவாக்கினார்கள் என்பது உமக்குத் தெரியாது என்ற வசனம்தான் இங்கு அனைவரும் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு என்றுதான் பொருள் கொடுக்கின்றனரே தவிர திரும்ப அழைத்துக் கொண்ட பிறகு என்று எவரும் பொருள் கொடுப்பதில்லை.
தவப்பீ (மரணத்தைக் கொடுத்தல்) என்ற இந்த சொல்லை அல்லாஹ் திருக்குரானில் நபிமார்களில் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களுக்காகவும்(10:47, 13:41, 40:78), ஹஸ்ரத் யூசுப் (அலை) அவர்களுக்காகவும் (10:102)பயன்படுத்தியிருக்கின்றான். அங்கெல்லாம் அனைவரும் நாம் எடுத்துரைக்கும் மரணம் என்ற பொருளையே கொடுக்கும் போது ஈஸாவுக்கு மட்டும் உடலோடு தூக்குதல் என்ற பொருளை கொடுப்பது திரித்துக் கூறுவது இல்லையா? என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.
3:56- ல் வந்துள்ள முதவப்பீக்க என்பதற்கு முமீத்துக (உம்மை மரணிக்க செய்வேன்) என்ற பொருளையே ஹஸ்ரத் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் கொடுத்திருப்பது நம் கூற்றுக்கு மேலும் சேர்ப்பதாக உள்ளது. ( புகாரி தமிழாக்கம் பாகம் 5 பக்கம் 273 காண்க)
அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒன்றுக்கு தீர்ப்பு வழங்கிவிட்டால், (அதன் பின்னர்) நம்பிக்கை கொண்ட எந்த ஆணுக்கும், நம்பிக்கை கொண்ட எந்த பெண்ணுக்கும் தங்கள் பிரச்னைக்கு தங்கள் விருப்பத்திற்கேற்ப தீர்ப்பளிப்பதற்கு உரிமையில்லை. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படாதவர் நிச்சயமாக மிகத் தெளிவான வழ்கேட்டில் சென்று விடுகின்றனர் என்ற (33:37) வசனத்தையே அந்நஜாத் பிரிவினருக்கு நாம் நினைவு படுத்துகிறோம்.
எனவே உம்மைக் கைப்பற்றுவேன் என்று அல்லாஹ் கூறுவதை மரணிக்கச் செய்வேன் என காதியானிகள் திரித்துச் சொல்கிறார்கள் என்று நஜாத் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது எவ்வளவு பேதமைத்தனமானது! இந்தக் குற்றச்சாட்டு அல்லாஹ்வின் மீதும் நபி(ஸல்) அவர்களின் மீதும் ஹஸ்ரத் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் மீதும் விழுகிறது என்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்வார்கள்.
அடுத்து, அல்குர்ஆனில் (4:155-159) வசனங்களை மற்ற சிந்தனைகளிலிருந்து காலியாக வைத்து விட்டு பார்க்கச் சொல்கிறார் நஜாத் ஆசிரியர். நாம் கூறுகின்றோம், அந்த வசனங்களை (3:56) வசனத்தின் சிந்தனையிலிருந்து காலியாக வைத்து விட்டுப் பார்க்காதீர்கள்4:159 - ம் வசனத்தை 3:56 வசனத்துடன் ஒப்பாய்வு செய்து பாருங்கள். அதில் அல்லாஹ் முதவப்பீக்க (உம்மை மரணிக்க செய்வேன்) என்று கூறிய பிறகுதான் வராபிவுக்க (மேலும் நான் உம்மை உயர்த்துவேன்) என்று கூறுகிறான். எனவே பல் ரபஅஹுல்லாஹு இலைஹி (எனினும் அல்லாஹ் அவரை தன் அளவில் உயர்த்திக் கொண்டான்) என்பது மரணத்திற்குப் பிறகு (ரூஹை கைப்பற்றிய பிறகு,உடலை அல்ல) நடந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் புரியவில்லையா? எனவே அல்லாஹ் ஈஸாவை பௌதீக உடலுடன் கைப்பற்றி வைத்திருக்கின்றான் என்று அந்நஜாத் ஆசிரியர் எழுதியிருப்பதெல்லாம் அவருடைய சொந்த கைச்சரக்குகளாகும். இதற்குப் பெயர்தான் புரோகிதம், இந்த வகையில் அந்நஜாத்தும் புரோகிதம்தான் என்பதில் அணுவின் முனையளவும் சந்தேகமில்லை!
அடுத்து சும்ம இலைய்ய மர்ஜிவுக்கும் (3:56) என்பதற்கு, பின்னர் நீங்கள் அனைவரும் என்னிடமே திரும்பி வர வேண்டியதிருக்கிறது என்ற சொற்றொடரை வைத்து அது ஈஸாவின் திரும்புதளைக் குறிப்பிடுகிறது: எனவே ஈசா உயிருடன் இருக்கிறார். திரும்ப பூமிக்கு வருவார். பிறகு மரணிப்பார் அதன் பின்னர் அவர் அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதைத்தான் இது தெரிவிக்கிறது எனக்கூறி மேலப்பாளையத்தில் எம்முடன் நடைபெற்ற கருத்துப்பரிமாற்றத்தின் போது அபூ அப்தில்லாஹ் தன் அறியாமையை வெளிப்படுத்தினார். அப்போது நாம் கூறினோம்: மர்ஜிவுக்கும் என்பதற்கு நீர் திரும்ப வேண்டியதிருக்கிறது என நீங்கள் ஒருமையில் பொருள் கொடுத்தது உங்கள் அறிவீனம். அது ஈசாவைக் குறிப்பிடுவதற்க்காக வந்திருந்தாள் மர்ஜிவுக்க (உமது திரும்புதல் என ஒருமையில் வந்திருக்கும்: ஆனால் அல்லாஹ் இங்கு மர்ஜிவுகும் (உங்களின் திரும்புதல்) என பன்மையில் குறிப்பிட்டுள்ளான் என்பதை நாம் சுட்டிக்காட்டிய பிறகுதான் அரபி மொழியறிவின்று தாம் கையும் களவுமாக மாட்டிக்கொண்டோம் என்பதைப் புரிந்து அபூஅப்தில்லாஹ் அசடு வழிந்தார்.
ஆயினும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல,மர்ஜிவுகும் என்பதில் உள்ள உங்களின் திரும்புதல் என்பது பன்மைச் சொல் என்றாலும் அதில் ஈசாவும் அடங்குவார் என்ற ஒரு சுயவிளக்கத்தைக் கூறினார். ஆனால் என் பக்கமே உங்களின் திரும்புதல் உள்ளது (3:56) என்பதில் ஈசா அடங்கமாட்டார். என்பதை அன்றே நாம் நிரூபித்துக் காட்டியிருந்தோம். ஏனெனில் அந்த வசனத்தை தொடர்ந்து அல்லாஹ், 'அப்பொழுது நான், நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றவற்றில் உங்களிடையே தீர்ப்பு வழங்குவேன்' எனக் கூறுகின்றான் (3:56) . நஜாத் கூறுவது போல நீங்கள் அனைவரும் என்னிடமே திரும்பி வருவீர்கள் என்பதில் ஈஸாவையும் சேர்த்து பொருள் கொள்ள இங்கு இடமில்லை. காரணம் ஒன்று அனைவரும் என்ற வார்த்தை அந்த வசனத்தில் இல்லை: அது நஜாத்தின் கைச்சரக்கு. இரண்டாவது உங்களின் திரும்புதல் என்பது ஈசாவைக் குறித்து அல்ல: மாறாக 3:35 - ல் குறிப்பிட்டபடி ஈஸாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய பகைவர்களைக் குறித்து ஆகும். அதில் ஈஸா அடங்கமாட்டார். ஈஸாவையும் சேர்த்து என்றால் 'நீங்கள் கருத்துவேறுபாடு கொண்டிருக்கின்றவற்றில்' என்பதிலும் ஈஸாவை சேர்க்கவேண்டியது வரும். ஆனால் கருத்து வேறுபாடு கொண்டவர்களில் ஈஸா அடங்கமாட்டார் என்பதை அற்ப அறிவுள்ளவரும் புரிந்து கொள்ள முடியும்.
அடுத்து, ஹஸ்ரத் ஈஸா நபி (அலை) மீண்டும் வரும்போது நபி பதவியை இழந்து விட்டு வந்து நிற்பார் என்ற அபத்தமான புரோகிதக் கொள்கைதான் அந்நஜாத்திடம் புரையோடிப்போயிருக்கிறது. இது மூட மூலவிகளின் கூற்றுதானே யொழிய ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் கூற்று அல்ல. ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் ஈஸா (அலை) அவர்களைப் பற்றி முன்னறிவித்துள்ள ஹதீஸில் அவரை நபியுல்லாஹ் என நான்கு முறை குறிப்பிட்டு கூறியிருக்கிறார்கள். (சஹீஹ் முஸ்லிம்) என்பதை நாம் முன்னரும் எடுத்து வைத்தோம். அந்த ஹதீஸை மறுக்க திராணியற்ற நிலையில் நஜாத்தும் மூட மௌலவிகளைப் போன்று ஒரு சப்பைக் கட்டு கட்டி தனது போலித்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது! மாவட்ட ஆட்சியாளராக இருந்து ஒய்வு பெற்ற ஒருவர் முன்னர் கலக்டர் பதவி வகித்தால் அவரை முன்னாள் கலெக்டர் என்றே மக்கள் கூறுவதால் அவர் பதவியிலுள்ள கலெக்டர் ஆகிவிடமுடியுமா? ஒரு போதும் முடியாது என்ற ஒரு சுயவிளக்கத்தைக் கொடுத்து, ஈசாவும் ஒரு ஒய்வு பெற்ற நபி என்ற ஒரு மட்ட ரகமான கொள்கையை எல்லா மௌலவிகளையும் போல எடுத்து வைத்துள்ளது.
முன்னாள் கலெக்டர் என்று மக்கள் கூறுவதால் அவர் கலெக்டர் ஆகிவிடமுடியாதுதான். எனினும் சாதாரண அறிவு படைத்த மக்கள் கூட அவரை முன்னாள் கலெக்டர் என்று தான் கூறுவார்களே அல்லாமல் கலெக்டர் என கூறிவிடமட்டார்கள் என்பதை நஜாத் ஒப்புக் கொண்டுள்ளது. சாதாரன அறிவுபடைத்தவர்களே முன்னாள் என்ற சொல்லை பயன்படுத்தும்போது ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களும் நபியுல்லாஹி சாபிகுன் (அல்லாஹ்வின் முன்னாள் நபி) என்ற சொல்லை அல்லவா பயன்படுத்தியிருப்பார்கள்? ஆனால் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களோ அல்லாஹ்வின் நபியாகிய ஈஸா என்றல்லவா கூறியிருக்கின்றார்கள்! வழி கெட்ட இறுதி நபிக் கொள்கையை மனதிலிருந்து வெளியே எடுத்து வைத்து விட்டு காலியாக சிந்தித்தால் இவர்களாலும் புரிந்து கொள்ள முடியும். அனால் இவர்களோ அப்படி சிந்தப்பதில்லை!
நஜாத்தைப் போன்றே இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைப்பதாக தம்பட்டம் அடித்துவந்த ஜமாஅத்தே இஸ்லாமி மௌலவி மௌதூதியும் இதே போன்று கீழ்த்தரமாக ஈஸாவை ரிடையர்டு நபியாக (ஒய்வு பெற்ற நபியாக) வருவார் என்றே குறிப்பிட்டிருந்தார். இனம் இனத்துடன் சேரும் என்பது குன்றின் மேலிட்ட விளக்கு போல் விளங்கவில்லையா?விளன்காதவர்கலாகிவிட்டீர்கள் என்பதே எமது வருத்தம்!
அடுத்து, இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், நாம் அபூஅப்தில்லாஹ் வீட்டிற்கு சென்று கருத்துப் பரிமாற்றம் செய்த போது அவரிடம் ஒரு கேள்வி கேட்டோம். சரி ஈஸா வருவர் என்றால் அவர் மீது ஈமான் கொள்ள வேண்டியது முஸ்லிம்களின் கடமையா? அதற்க்கு அவர் ஆம்: ஏனில்லை. கண்டிப்பாக நம் மீது கடமைதான் என்றார்
பிறகு இந்தக் கருத்தை (அவர் பாணியில் சொல்லப்போனால்) நம் உள்வாங்கிக் கொண்டு, ஈசாவின் மீது ஈமான் கொள்வது கண்டிப்பானது என்றால் அவர் நபி என்பதும் கண்டிப்பானதுதான் என்றோம். ஏனெனில் ஈமான் கொள்ளவேண்டிய ஆருவிஷயங்களில் மனிதர்களிலேயே நபியின் மீது மட்டும்தான் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் ஈமான் கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். வேறு எந்த மனிதர் மீதும் ஈமான் கொள்வதை ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கவில்லை. எனவே ஈசா (அலை) அவர்கள் மீது ஈமான் கொள்ள வேண்டியது கடமை என்றால் அவரும் அல்லாஹ்வின் நபிதான் என்பதை இந்த ஹதீஸின் மூலமும் தெளிவாக விளங்க முடிகிறது என்றோம். இந்த பதிலைக் கேட்ட அபூஅப்தில்லாஹ் திணறி வாயடைத்துப் போய்விட்டதை வாசகர்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
எனவே பழைய நபி, முன்னாள் நபி, ரிடையர்டு நபி என்பதெல்லாம் குர்ஆன், ஹதீஸில் இல்லாத சொந்த கைவரிசைகள். நஜாத் பாணியில் சொல்லப்போனால் இவற்றை எப்படிப்பட்ட மேதை, அல்லாமா, முப்தி சொன்னார்லும் அவை சுயவிளக்கம், மறுக்கப்படவேண்டியவை.
அடுத்து, ஈஸா(அலை) உணவு உண்ணாமல், பௌதீக உடலுடன் வாழ் முடியுமா? என்ற கேள்வியை எழுப்பி, அவ்வாறு வாழ முடியாது என எடுத்துரைக்கும் பின்வரும் வசனங்களில் அடிப்படையில் கூறியிருந்தோம்.
"நாம் அத்தூதர்களுக்கு உணவு உண்ணாத உடல்களை வழங்கவில்லை. அவர்கள் மிக நீண்ட நெடுங்காலம் வாழ்ந்ததுமில்லை." (21:9)
உமக்கு முன்னர் எந்த மனிதருக்கும் மிக நீண்ட வாழ்க்கையை நாம் வழங்கியதில்லை எனவே நீர் மரணித்து, அவர்கள் மிக நீண்ட காலம் உயிருடன் இருப்பதா?" (21:35)
திருக்குரானின் மேற்கண்ட வசனங்களின் படி ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களுக்கு முன் இறைவன் எந்த மனிதருக்கும் - இறை தூதருக்கும் மிக நீண்ட வாழ்க்கையை வழங்கவில்லை. எனவே ஈஸா (அலை) அவர்கள்2000 ஆண்டுகளாக உணவு உண்ணாமல் உயிருடன் இருக்கிறார் என்ற கிறித்தவக் கொள்கையை இவ்வசனங்கள் தவிடுபொடியாகிவிட்டன என நாம் கூறிவருகிறோம்.
ஆயினும் பிற முல்லாக்களைப் போன்றே கிறிஸ்தவர்களின் ஷிர்க்கான கொள்கைக்கு வரிந்து கட்டிக் கொண்டு ஒருவர் நீண்ட காலம் வாழ முடியும் என்றும் அது சாத்தியமானதே என்றும் நஜாத் எழுதியிருக்கிறது. அதற்க்கு நஜாத் எடுத்துவைத்திருக்கும் அதிமேதாவித்தனமான சான்று இதுதான்:
இப்லீஸ் ஆதமின் மக்களை வழிகெடுத்து நரகில் தள்ள அவகாசம் கேட்டான். இறைவனும் அவனுக்கு மிக நீண்ட ஆயுளை வழங்கினான். அதைப் பற்றிக் கூறும்போது உனக்கு அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் நீயும் ஒருவன் என்றே அல்லாஹ் கூறுகிறான்(7:15,15:37,38, 38:80,81காண்க) இதிலிருந்து பலருக்கும் நீண்ட ஆயுள் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. அப்படியானால் மனித இனத்திற்கு அது சாத்தியமில்லாமல் போகுமா? என்றும், ஆதத்திற்கு முன்னாள் படைக்கப்பட்ட சைத்தானுக்கு மெகா வாழ்வைக் கொடுத்த அல்லாஹ்வால் ஈசாவுக்கு நீண்ட வாழ்வை கொடுக்க முடியாத என்ற மெகா ஷிர்க்கான கேள்வியைக் கேட்டிருக்கிறார் அபூஅப்தில்லாஹ். (பார்க்க நஜாத் மே2011பக்கம் 27)
உங்கள் கருத்துப்படி, ஆதமுக்கு முன்னாள் படைக்கப்பட்ட சைத்தானைப் பற்றிதான் கால அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் நீயும் ஒருவன் என்று அல்லா கூறுகிறான் என்றால் அது சைத்தானுக்கு முன்னாள் படைக்கப்பட்ட (உங்கள் பாணியில்) மெகா படைப்புகளுக்கு வேண்டுமானால் பொருந்தலாமே தவிர ஆதமுக்கு பின்னால் படைக்கப்பட்ட ஈஸா (அலை)அவர்களுக்கு அது பொருந்தாது. உங்கள் மொழியாக்கப்படி கால அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் இப்லீசைப் போன்று பலரும் இருக்கலாம் என பொருள் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அதற்காக, இப்லீஸின் கூட்டத்தில் ஈஸா (அலை) அவர்களையும் நஜாத் சேர்த்திருப்பது எவ்வளவு மெகா அறிவீனம்!அநாகரீகம்!!
அடுத்து, இப்லீசுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டதாகத் தெரிகின்ற அதே திருக்குர்ஆன் தான் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னர் எந்த மனிதருக்கும் நீண்ட நெடுங்கால வாழ்வை வழங்கவில்லை என்றும், (21:35) இறை தூதர்களுக்கு உணவு உண்ணாத உடலை வழங்கவில்லை என்றும் (21:9) வரையறுத்துக் கூறுகிறது. ஈசாவை இறைதூதராகவும் மனிதராகவும் நம்பும் முஸ்லிம்கள் அவர் இறந்துவிட்டார் என்பதையும் நம்பித்தான் ஆகவேண்டும். அல்லாது நஜாத் பாணியில் சொல்லப்போனால் அவரை மனிதல் அல்லது இறைதூதருக்கு அப்பாற்பட்ட ஒரு மெகா படைப்பாக நம்ப வேண்டிவரும்.
ஈஸா (அலை) அவர்களை 2000 ஆண்டுகளாக உயிருடன் வைத்திருக்க அல்லது வானத்தில் வைத்திருக்க இறைவனால் முடியாத? இறைவனுக்கு வல்லமை இல்லையா? என நஜாத் பிற முல்லாக்களைப் போன்றே மீண்டும், மீண்டும் கேள்வி கேட்கிறது. அல்குர் ஆன் உங்களுக்கு விளங்காது: நாங்களே விளக்குகிறோம் என்று கூறும் மௌலவிகள் அல்லாஹ்வை விட நாங்களே விளக்கும் ஆற்றல் மிக்கவர்கள் என ஆணவம் பேசுகிறார்களே என்ற அந்நஜாத்தின் லோகோ (பார்க்க: நஜாத் மே 2011 பக்கம் 14) அந்நஜாத்திற்கே பொருந்தவில்லையா? இங்கு ஈசாவை பௌதீக உடலோடு உயர்த்தி, 2000 ஆண்டுகளாக உண்ணாமல் உறங்காமல் வைத்திருக்க இறைவனுக்கு வல்லமை இல்லையா என்பதல்ல கேள்வி, மாறாக அவ்வாறு செய்வது அல்லாஹ்வின் நடைமுறைக்கு மாறுபட்டது என்பதை 21:9, 21:35 ஆகிய வசனங்களின் மூலம் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். மேலும் அல்லாஹ்வின் நடைமுரையில் நீர் எந்த மாற்றத்தையும் காணமாட்டீர் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.(33:63,25:44, 47:24, 17:78 காண்க) மேலும், 'நாம் விரும்பியிருந்தால் உயர்த்தியிருப்போம்; ஆனால் அவர் பூமியின் பக்கம் சாய்ந்துவிட்டார்'என்ற 7:177 வசனத்தில் வானம் என்பதற்கு எதிர்ச்சொல்லான பூமியின் பக்கம் சாய்ந்துவிட்டார். என வந்தும் கூட மேலே உடலோடு தூக்குதல் என்ற பொருளை எவரும் கொடுப்பதில்லை. ரபஅ என்ற சொல் திருக்குரானில் ஓர் இடத்தில் கூட உடலோடு தூக்குதல் என்ற பொருளில் இறைவன் பயன்படுத்ததிருக்கும் போது, ஒரு நபிமொழியில் கூட உடலோடு உயர்த்துதல் என்ற பொருளில் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களோ,நபித்தோழர்களோ பயன்படுத்தாதிருக்கும் போது ஈஸா நபி விஷயத்தில் மட்டும் அந்தப் பொருளைக் கொடுப்பதிலேயே அடம்பிடிப்பதிலிருந்து அல்குர்ஆன, அல்ஹதீஸ் உங்களுக்கு விளங்காது;நாங்கள் விளக்குகிறோம் என்று கூறும் அகந்தை கொண்ட புரோகித மௌலவிகள்தான் நஜாத் பிரிவினர்களும் என்பதை முஸ்லிம்கள் விளங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.