ஈசா நபி மரணித்துவிட்டார்கள் என்று திருக்குர்ஆன், நபிமொழி அடிப்படையில் ஆதாரங்களைக் காட்டி நிரூபித்துவரும் அஹ்மதி முஸ்லிம்களின் வாதத்தை மறுக்க முடியாத சில மௌலவிகள் தற்போது குரான், நபிமொழியை ஒருபுறம் வைத்துவிட்டு ஹஸ்ரத் ஈசா(அலை) அவர்களை உடலுடன், உயிருடன் வானத்திற்கு உயர்த்துவதற்கு இறைவனுக்கு வல்லமை இருக்கிறது: அஹ்மதிகள் இறைவனின் வல்லமையை மறுக்கின்றனர்: அவர்களுடன் பேசாதீர்கள் என்று கூற ஆரம்பித்துள்ளனர். அது மட்டுமல்ல ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக மரணிக்காமல் வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறி வந்தவர்கள் இப்போது அவர் சூன்யமாகி விட்டார் என்று கூறத்தொடக்கி விட்டனர்.
திருச்சியிலிருந்து வெளிவரும் நஜாத் என்ற இதழ் இவ்வாறு கூறுகிறது.
எதனையும் உருவாக்க, உண்டாக்க "குன்" ஆகுக! என்பது எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு மட்டுமுள்ள தனி விதி அல்லாஹ்வின் தனிப்பெரும் வல்லமையை குறிக்கும் விதி.
இது நமது பகுத்தறிவு, அறிவியல் ஞானங்களுக்கு அப்பாற்பட்டது. இவ்விதி முடிந்து விட்டதல்ல. முடிவுற்றது. பிறந்து, வளர்ந்து, மறித்து, மண்ணாகி விட்டவனையோ, அல்லாஹ் தனது தனிப்பெரும் வல்லமையைக் கொண்டு இவ்விதிப்படி "குன்" = ஆகுக! என உயிப்பிக்க முடியும் என்பதை அனைவரும் அறிவோம். அதேப்போல் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து அல்லாஹ்வின் தனிப்பெரும் சக்தியால் உயர்த்தப்பட்டு விட்ட அல்லது சூன்யமாகிவிட்ட ஈசா (அலை) அவர்களையும் இத்தனிப் பெரும் வல்லமையைக் கொண்டு-இவ்விதிப்படி - "குன்"- ஆகுக! என உருவாக்க முடியும் என்பதை காதியானிகள் கவனிக்கக் கோருகிறோம். என்று எழுதியுள்ளது.
ஹஸ்ரத ஈசா (அலை) அவர்கள் சூன்யமாகி விட்டார் என்று எழுதும் அந்-நஜாத் திருக்குர்ஆன், நபிமொழி அடிப்படையில் ஆதாரங்களைக் காட்டி அதனை நிரூபிக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் குரான், ஹதீஸ் ஆதாரங்கள் இருக்கிறதா? என்று கேட்கும் இவர்கள். இதற்க்கு ஏன் குரான் ஹதீஸ் ஆதாரம் காட்டவில்லை. "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்." என்று சொல்வார்கள். இவர்கள் நிலையம் இப்படித்தான் இருக்கிறது. திருக்குர்ஆன், நபிமொழி அடிப்படையில் ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் இன்றும் மரணிக்காமல் உடலுடன் வாழ்கிறார்கல் என்பதை நிரூபிக்க முடியாதவர்கள் இப்போது அவர் சூன்யமாகி விட்டார் என்று புதுக்கதையை அவிழ்த்து விட ஆரம்பித்திருக்கிறார்கள். ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களின் மரணம் குறித்து நாம் வைக்கும் அடுக்கடுக்கான வலுவான ஆதாரங்களை மறுக்க முடியாததனால் தான் இந்தப் புதுக் கதையைக் கூறத் தொடங்கியுள்ளனர்.
ஆனால் இன்றைய இளைஞர்கள் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். திருக்குர்ஆன், நபிமொழிப்படி ஹஸ்ரத் ஈசா (அலை) மரணித்து விட்டார்கள் என்பதற்கு நாம் காட்டுகின்ற ஆதாரங்களைச் சிந்திக்க தொடக்கி விட்டனர். இஸ்ரவேல் சமுதாயத்தினருக்கு மட்டும் வந்த அதே ஈசா மீண்டும் வருவதாகக் கூறுவது திருக்குர்ஆன் நபிமொழி கூற்றுக்கு மாற்றமானதும் அறிவுக்கு அப்பாற்பட்டதும் பகுத்தறிவுக்குப் பொருந்தாததுமாகும். என்று கூற ஆரம்பித்துவிட்டனர். சிந்திக்க இளைஞர்கள் மத்தியில் இவர்களின் சூன்யக் கதை எடுபடாது.
'காதியானிகள் கவனிக்கக் கோருகிறோம்.' என்று எழுதும் அந்-நஜாத், தனது அடுத்த ஈசா நபி சூன்யமாகிவிட்டார் என்ற கூற்றுக்கு சரியான ஆதாரம் காட்ட வேண்டும். இல்லையெனில் மூடநம்பிக்கைகல் உங்களின் மூலையில் குடிகொண்டிருக்கின்றன என்றே உங்கள் வாசகர்கள் முடிவு செய்வார்கள்.
இறைவன் வல்லமைமிக்கவன், தான் நாடியதை செய்யக்கூடியவன், படிக்கக் கூடியவன், ஆற்றல் மிக்கவன் என்பதை நாங்கள் மறுக்கவில்லை ஆனால் இறைவன் தனது செயல் முறைக்கு (சுன்னத்துல்லாஹ்வுக்கு) மாற்றமாக எதனையும் செய்யமாட்டான். இதனையே திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:
"அல்லாஹ்வின் செயல் முறையில் எந்த மாற்றத்தையும் உம்மால் ஒருபோதும் காண முடியாது. (33:63;48:24)
"அல்லாஹ்வின் செயல் முறையில் எந்த வேற்றுமையையும் நீர் ஒருபோதும் காணமாட்டீர்" (35:44)
"நம் நடைமுறையில் எந்த வேறுபாட்டையும் நீர் காணமாட்டீர்." (17:78)
மேற் கூறப்பட்ட வசனங்களிலிருந்து அல்லாஹ்வின் செயல் முறையில் ஒரு போதும் மாற்றமில்லை என்று தெரிகிறது. அல்லாஹ்வின் செயல் முறைகளுள் ஒன்றைத் திருக்குர்ஆன் கீழ்க்காணுமாறு கூறுகிறது.
"இதே பூமியில் நீங்கள் வாழ்வீர்கள். இதிலேயே நீங்கள் மரணிப்பீர்கள், இதிலிருந்தே நீங்கள் எழுப்பப்படுவீர்கள்." (7:26,20:56,71:18,19)
இந்த வசனத்தில் எம்மனிதனும் இந்த பூமியை விட்டு வெளியே சென்று வாழமுடியாது என்று கூறப்பட்டுள்ளது. எனவே ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் வானத்திற்குச் சென்று அங்கே வாழ்ந்து வருகிறார்கள் என்ற தவறான கருத்தை ஏற்ப்பதாயின் ஒன்று இவ்வசனம் தவறு என்று கூற வேண்டும். அல்லது ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் மனிதர் அல்ல என்று கூறவேண்டும். ஏனெனில் மனிதரைக் குறித்துதான் இங்கேயே வாழ்ந்து, இங்கேயே மரணித்து, இங்கிருந்தே எழுப்பப்படுவர் என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. இது அல்லாஹ்வின் செயல் முறை இதற்க்கு ஹஸ்ரத் ஈசா (அலை) உட்பட எவரும் விதிவிலக்கல்ல.
அன்றைய மக்கத்து நிராகரிப்பாளர்கள் ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் பின்வருமாறு கூறியதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது:
"நீர் வானத்திற்கு ஏறிச் செல்ல வேண்டும், நாங்கள் படிக்கத்தக்க ஒரு நூலை எங்களுக்கு கொண்டு வராதவரை நீர் வானத்திற்கு சென்றதை நாங்கள் நம்பமாட்டோம்." என்றனர்.
நீர் கூறுவீராக: "ஏன் இறைவன் தூயவன். நான் ஒரு மனித தூதரேயன்றி வேறில்லை."
மேற்கூறப்பட்ட வசனம் உணர்த்துவது என்னவென்றால் ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பார்த்து, நீர் இறைவனால் அனுப்பப்பட்ட உண்மையான தூதர் என்றால் நீர் உடலுடன் வானத்திற்குப் போய் நாங்கள் படிக்கத்தக்க ஒரு நூலை கொண்டுவந்தால்தான் நாங்கள் உம்மை நம்புவோம் கூறியபோது, அவ்வாறு உடலுடன் வானத்திற்குப் போய் ஒரு நூலை கொண்டுவராமல், அந்த நிராகரிப்பாளர்களின் கேள்விக்கு விடையாக, "நான் ஒரு மனிதனாகிய தூதரே அன்றி வேறு இல்லை" என்ற பதிலைச் சொல்லுமாறு இறைவனே ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு கட்டளையிட்டான் இறைவனால் ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை வானத்திற்கு உயர்த்துவதற்கு வல்லமையுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவன் தனது செயல் முறைக்கு மாற்றமாக எதனையும் செய்ய மாட்டான். எவரையும் உடலுடன் வானத்திற்கு கொண்டு போவது இறைவனது செயல் முறையில் உள்ளதல்ல எனபதைப் புரிய வைப்பதற்காகவே அவன் " நான் மனிதனாகிய தூதரேயன்றி வேறு அல்லன்" என்று கூறுமாறு கட்டளையிட்டான். எவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரு மனிதராகிய தூதராதலால் வானத்திற்கு உடலுடன் செல்ல முடியவில்லையோ, அவ்வாறே ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்களும் ஒரு மனிதராகிய தூதராதலால் அவராலும் நிச்சயமாக வானத்திர்க்குச் செல்ல முடியாது. இது இறைவனுடைய வல்லமையைப் பொறுத்த விஷயமல்ல. மாறாக அவனுடைய செயல் முறையைப் பொறுத்த விஷயம். அவனது செயல் முறைக்கு மாற்றமாக வானத்திற்கு உடலுடன் உயர்த்துவது அவனது பரிசுத்த தன்மைக்கு மாற்றமானது என்பதாலேயே இவ்வசனத்தில் "சுப்ஹான ரப்பி - இறைவன் தூய்மையானவன்" என்று கூறுமாறு கூறினான்.
எனவே இறைவனுடைய செயல் முறைக்கு மாற்றமாக ஹஸ்ரத் ஈசா (அலை) அவர்கள் உடலோடு உயர்த்தப்பட்டார்கள் அல்லது சூன்யமாகி விட்டார்கள் என்று கூறும் நஜாத், மற்றும் தௌஹீது வாதிகள் என்றுக் கூறிக்கொள்பவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொள்ளும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.