நபிபெருமானார் (ஸல்) அவர்களின் திருமணம்.
நபி(ஸல்) அவர்கள் மீது குற்றம் சாற்ற முயன்றவர்கள் எல்லோருமே அம்மாநபி உலகுக்கு தந்த உயரிய போதனைகளிலோ குற்றம் காண முடியாத நிலையில் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை, குறிப்பாக, அவர்கள் பல திருமணங்கள் செய்ததை குறை கூறுகின்றனர். 'விஜயபாரதம் ஏட்டின் ஆசிரியரும் இதற்க்கு விதிவிலக்காக இல்லை. நபி பெருமானார் அவர்கள் பல திருமணங்கள் செய்திருந்ததை இவர் எள்ளி நகையாடுகிறார்.
பூகோள ரீதியில் மட்டுமல்லாது பண்பாட்டிலும் நாகரீகத்திலும் கூட பாலைவனமாக இருந்த அந்த அரபு நாட்டு மண்ணில் அண்ணல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் செய்திருந்த பெரும் புரட்சியை சமுதாயச் சீரமைப்பு, அவர்கள் உலகுக்கு சொன்ன உயரிய நன்னெறிகள், அரசியலமைப்பு தத்துவங்கள், உலகுக்கே வழிகாட்டக்கூடிய ஓர் உன்னத சமுதாயத்தை ஒரு குறுகிய காலத்தில் உருவாக்கியிருந்த அவர்களின் சாதனை இவையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு அந்த மாநபி செய்திருந்த திருமணங்களை அவற்றுக்கான காரணங்களை கூட தெரிந்து கொள்ளாத நிலையில் குறை சொல்லும் இததகையோரின் குறுகிய மனப்பான்மையை, எதிலும் குற்றம் காணும் மனப்போக்கை என்னவென்று சொல்வது.
நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்திருந்த காலத்தில் அந்த அரபு சமுதாயத்திலே தரங்கெட்ட வாழ்க்கை புரையோடிருந்தது. தந்தையின் மனைவி அவரின் மறைவுக்கு பின் தனயனின் மனைவியாவது அங்கு சர்வ சாதாரணமாக நடை முறையில் இருந்தது. தாய்க்கும் தாரத்திற்கும் வேறுபாடு தெரியாதிருந்தது. வைப்பாட்டிகள் வைத்திருப்பது பெருமைக்குரியதாக கருதப்பட்டது. முறையான திருமணங்கள் அங்கு குறைவாகவே இருந்தது. இத்தகைய
காட்டு மிராண்டித்தனமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த அந்த அரபுச் சமுதாயத்திலே தான் நபிபெருமாநாறும் வாழ்ந்திருந்தார்கள்.
ஆயினும் நபிபெருமானாரின் வாழ்க்கை இளமைப்பருவம் முதல் அப்பழுக்கற்ற வாழ்க்கையாக இருந்திருந்தது. அவர்கள் தம்மை இறைவனின் தூதுவராக பிரகடனப் படுத்திக் கொண்டபோது அங்கிருந்த மக்கள் அவர்களைப் பொய்யன் என்று தூற்றினார்கள். அப்போது அந்த மாநபி "நான் உங்கள் மத்தியிலே ஒரு நீண்ட காலம் வாழ்ந்திருந்தேன் என்னிடத்தில் ஏதேனும் குறையினை நீங்கள் கண்டதுண்டா?" என்று கேட்டார்கள். அன்றைய தினம் அங்கு மௌனம் நிலவியது. அதுவே நபிபெருமானாரின் அப்பழுக்கற்ற வாழ்க்கைக்கு அத்தாட்சியாக விளங்குகின்றது.
நபி (ஸல்) அவர்கள் தமது இருபத்தைந்தாவது வயதில் நாற்பது வயதான கதீஜா அவர்களை மணம்முடித்தது மட்டுமல்லாது ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் அவர்களுதேனேயே இல்வாழ்க்கை நடத்தி வந்தார்கள். கதீஜா அவர்களின் மறைவுக்கு பின்னரே நபி(ஸல்) அவர்கள் வேறு மனங்களை செய்திருந்தார்கள். அவைகளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும் இஸ்லாத்தின் உயரிய இலட்சியங்களை உலகறியச் செய்வதர்க்காக்கவுமேயாகும்.
பல திருமணங்கள் செய்ததினால் நபி பெருமானார்(ஸல்) அவர்கள் உலக இன்பங்களில் ஆர்வம் உள்ளவர்களாய் இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் தமது கொள்கைகளை விட்டுவிடுவார்கலேயானால் அவர்களுக்கு பொன்னும் பொருளும் மட்டுமல்ல அழகிய பெண்களையும் தருவதாக அன்று அக்குரைசித் தலைவர்கள் சொன்னார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்களோ அவற்றை ஏற்க்\கவில்லை இத்தகைய ஒரு மனிதப் புனிதரை உலக ஆசை மிகுந்தவர் என்று எவ்வாறு கூற இயலும்.
அண்ணல் நபிபெருமானார் அவர்கள் தமது ஐம்பதாவது வயதிற்கு பிறகு பல திருமணங்கள் செய்திருந்தார்கள். அவை பற்றிய விவரங்களை இங்கு தருவது தப்பெண்ணம் கொண்டிருப்பவர்கள் தம்மைத்திருத்திக் கொள்ள வழியாக அமையும் .
நபி(ஸல்) அவர்களால் திருமணம் முடிக்கப்பட்டவர்களில் ஆயிஷா (ரலி) அவர்களைத் தவிர மற்றவர்களெல்லாம் விதவைகளும் விவாக விலக்கு பெற்றவர்களுமே ஆவார்கள்.
கதீஜா நாயகியின் மறைவிற்கு பிறகு நபி பெருமானார் சவ்த நாயகியை மணமுடித்தார்கள். இவர்கள் சக்கறான் பின் அம்ர் என்பவரின் மனைவியாக இருந்தவர். சக்கறான் பின் அம்ர் அவர்கள் ஆரம்பகாலத்தில் இஸ்லாத்தை தழுவியவர்களில் ஒருவர். இவருடைய திடீர் மரணத்தால் சவ்தா நாயகி விதவையானது மட்டுமல்லாமல். அவர் முஸ்லிம் ஆனதால் உறவினர்களாலும், நண்பர்களாலும் கைவிடப்பட்டு நிற்கதியாக நின்றிருந்தார்கள். மனிதத்துவத்திற்கு இலக்கணமாக திகழ்ந்திருந்த நபிபெருமானார்(ஸல்) அவர்கள் சவ்தா நாயகியை மணமுடித்து அவர்களுக்கு ஆதரவு தந்தார்கள்.
அடுத்து நபித்தோழர்களில் முதன்மையானவரும் நபிபெருமானாருக்கு மிக நெருங்கியவருமான அபூபக்கர்(ரலி) அவர்கள் தமது மகளான ஆயிஷா நாயகி அவர்களை மிகவும் கட்டாயப்படுத்தி நபி(ஸல்) அவர்களுக்கு மணமுடித்து தந்தார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு பதிமூன்று அல்லது பதினான்கு வயதிருக்கும். இதன் காரணமாக இஸ்லாத்தின் எதிரிகள் பலர் இத்திருமணத்தை விமர்சித்து வருகின்றனர். ஆனால் நபிபெருமானார் செய்திருந்த திருமணத்தால் இஸ்லாமிய சமுதாயம் பெரும்பலனைப்பெற்றது .
அறிவாற்றலும், புத்திசாலித்தனமும் மிகுந்த ஆயிஷா நாயகி அவர்களுடன் ஏறத்தாள எட்டு வருடங்கள் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்திருந்தார்கள் ஒரு சமூக சீர்திருத்தவாதி என்ற நிலையிலே சமூகத்தில் சரிபாதியான பெண்ணினத்திற்கு இஸ்லாத்தின் கொள்கை கோட்பாட்டை எடுத்துச் சொல்லவும் அவர்களை சீர்திருத்தவும் வேண்டிய பொறுப்பு நபிகள் நாயகத்திற்கு இருந்தது. இதனை திறம்பட நிறைவேற்றுவதில் அண்ணல் நபிபெருமானாருக்கு ஆயிஷா நாயகி பெரிதும் உதவி இருந்தார்கள். அதுமட்டுமல்ல, நபி(ஸல்) அவர்களின் உயரிய நடைமுறைகள் பல அன்னை ஆயிஷா நாயகியின் மூலமாக இஸ்லாமிய சமுதாயத்திற்கு தெரிய வந்தது. ஹதீஸ்களில், நபிமொழிகள் சரிபாதிக்கு மேல் ஆயிஷா நாயகியே அறிவித்துள்ளார்கள். "நீங்கள் மார்கத்தை ஆயிஷாவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்." என நபி(ஸல்) அறிவித்திருப்பது அன்னை ஆயிஷா நாயகியின் சிறப்பியல்பை எடுத்துக்காட்டுகிறது. இவற்றிலிருந்து வெறும் குடும்ப வாழ்க்கைக்காக மட்டும் நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா நாயகியை திருமணமுடிக்கவில்லை. மாறாக அதற்க்கு மேற்சொன்ன உயரிய நோக்கம் இருந்தது என்பது புலனாகும்.
ஹஸ்ரத் குனைஸ் (ரலி) அவர்கள் ஆரம்ப கால் முஸ்லிம்களில் ஒருவர். இவர் பதர் யுத்தத்தின் போது படுகாயமுற்று சஹீது ஆனார்கள். இதனால் விதவையான ஹப்ஸா நாயகியை அவருடைய தந்தையான உமர்(ரலி) அவர்கள் நபிபெருமானாருக்கு மணமுடித்து தந்தார்கள்.
அடுத்து நபிபெருமானாரால் மனமுடிக்கப்பட்ட உம்முசல்மா நாயகியும் ஒரு விதவையே. இவருடைய கணவர் உஹத் போரில் இறைவனடி சேர்ந்தார்கள். அதன் காரணமாக உம்முசல்மா அனாதையானார்கள். இவரை திருமணம் செய்ததன் காரணமாக நபிபெருமானார் அவர்கள் விதவை விவாகத்திற்கு ஊக்கமளித்தார்கள்.
நபி(ஸல்) அவர்களின் திருமணங்களில் அதிக விமர்சனத்திற்கு உள்ளானது அவர்கள் அவர்களின் வளர்ப்பு மகனாக இருந்த செய்து அவர்களால் விவாக விலக்கு அளிக்கப்பட ஜைனப் நாயகியை திருமணம் முடித்திருந்ததுதான். ஹஸ்ரத் செய்து அவர்கள் அடிமையாக விற்கப்பட்டவர். நபிபெருமானார் கதீஜா நாயகியை மணமுடித்தபோது சைத அவர்களுக்கு விடுதலை தந்தார்கள். ஆனால் சைத அவர்களோ நபிபெருமானார் அவர்களை பிரிய சம்மதிக்கவில்லை. அவருடைய பெற்றோர் அவரை அழைத்தபோது கூட அவர்களுடன் செல்லாது அவர் நபி பெருமானாருடனேயே இருந்து விட்டார். நபி(ஸல்) அவர்களும் அன்னவரை தமது வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார்கள்.
அதுமட்டுமல்ல இஸ்லாத்தில் இனவேறுபாடு ஏற்றத்தாழ்வு இவைகளுக்கு இடமே இல்லை என்பதை உணர்த்தும் வகையிலே உயர் குலத்தை சார்ந்தவரும் தமது தாயாரின் சகோதரி மகளுமான ஜைனப் அவர்களை அடிமையாய் இருந்த சைதிற்கு நபி(ஸல்) அவர்கள் மணமுடித்து வைத்தார்கள், சைய்து சிறுவயது முதலே அடிமையாய் இருந்த காரணத்தால் அவரிடத்திலே தாழ்வு மனப்பான்மை வேரூன்றி இருந்தது. இதனால் உயர் குலப்பெண்ணான ஜைனப் அவர்களுடன் அவருக்கு ஈடுபாடு இல்லாதிருந்தது. இந்தத் திருமணம் ஒரு உன்னதமான நோக்கத்தின் அடிப்படையில் செய்து வைக்கப்பட்ட திருமணம் எனினும் அவர்கள் இருவருக்கும் இடையில் மனப்பொருத்தம் ஏற்படாத காரணத்தினால் விவாக விலக்கு ஏற்பட்டது . இந்தத் திருமணத்தை நபி(ஸல்) அவர்களே முன்னின்று நடத்தியதால் அது முறிந்து விட்டதில் அவர்களுக்கு பெரும் சங்கடம் ஏற்பட்டது. இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்டவே நபி பெருமானார் அவர்கள் ஜைனப் நாயகியை திருமணம் செய்தார்கள்.
ஓர் அடிமையால் விவாக விலக்கு அளிக்கப்பட்ட ஒரு பெண்ணை திருமணம் செய்வதென்பது சிறுமையான ஒரு காரியமாக அரபுமக்களால் கருதப்பட்டிருந்தது நபிபெருமானார் ஜைனபை மணந்தது ஆண்டான் அடிமை என்ற பேதம் இஸ்லாத்தில் இல்லை என்பதை உறுதிப்படுத்தியது.
நபிபெருமானாருடைய மற்றொரு மனைவி ஜுவைரியா ஆகும். இவர் ஒரு யுத்தத்தில் கைதியாகப் பிடிக்கப்பட்டவர். மேலும் இவர் ஒரு விதவை இவரை நபிபெருமானார் திருமணம் முடித்த காரணத்தால் இவருடைய தந்தையும் உறவினர்களும் இஸ்லாத்தில் இணைந்தனர்.
உம்மு ஹபீபா நாயகி அக்காலத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு பெரும் எதிரியாக இருந்த அபூசுப்யானின் மகளும் ஆரம்பகால முஸ்லிம்களில் ஒருவராயிருந்த உபைதுல்லாஹ் என்பவரின் மனைவியாகவும் இருந்தார். உபைதுல்லாஹ் இஸ்லாத்தை விட்டு வழிதவறி கிறிஸ்தவராக மாறினார். கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி அகால மரணமடைந்தார். ஆனால் உம்மு ஹபீபா நாயகி இஸ்லாத்தை விட்டுவிடாமல் உறுதியான நம்பிக்கையோடு இருந்தார். இவர்களுக்கு ஆதரவு தர இவர்களை நபிபெருமானார் அவர்கள் மணமுடித்தார்கள். இதன் பயனாக இஸ்லாத்தை எதிர்த்திருந்த அபூசுப்யானின் மனம் மாறி அதனை ஏற்று முஸ்லிமானார்கள்.
நபி(ஸல்) அவர்கள் செய்திருந்த திருமணங்கள் உயரிய நோக்கங்களின் அடிப்படையில் அமைந்தவை ஆகும். மனித இனத்திற்கு ஒரு அழகிய முன்மாதிரி என்ற வகையிலே நபி(ஸல்) அவர்கள் செய்திருந்த திருமணங்கள் பெரும் படிப்பினைகல் அடங்கியுள்ளன. சமுதாயத்திலே பெண்களுக்கு உயர்ந்த இடம் அளிக்கும் வகையிலும் விதவைகளுக்கும், விவாக விலக்கு பெற்றவர்களுக்கும் மறு வாழ்வு அளிக்கும் வகையிலும் அத்திருமணங்கள் முமாதிரிகளாக அமைந்துள்ளன.
நபி(ஸல்) அவர்கள் செய்த திருமணங்கள் பற்றி பாஸ்வொர்த் ஸ்மித் என்ற ஐரோப்பிய வரலாற்றாசிரியர் இவ்வாறு எழுதுகின்றார்.
முஹம்மத் செய்திருந்த திருமணன்களுக்கு தகுந்த காரணங்கள் இருந்தன. அவர் மணமுடித்திருந்த பெண்களின் பரிதாப நிலை அதில் ஒன்ரூ. அதில் பெரும்பாலானோர் விதவைகள், அனாதைகள் ஆவார்கள். அழகும் செல்வமும் அவர்களிடத்தில் இருக்கவில்லை. மாறாக அதற்க்கு நேர் எதிராக அவர்கள் நிலை இருந்தது. கதீஜாவுடன் அவருடைய இறப்பு வரை முஹம்மத் நம்பிக்கை மிக்க கணவராக இருந்தும் ஐம்பது வயது வரை ஒரே மனைவியோடு வாழ்ந்திருந்ததும் அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை பொருளற்றதாக்கிவிடுகின்றது. (முஹம்மத் அண்ட் முஹம்மதிசம், பக்கம் ௧௩௬)
நபிபெருமானார்(ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்திருந்ததை ஆட்சேபிக்கின்ற விஜயபாரதம் ஆசிரியர் திரு இராமகோபாலன் போன்றோர் இந்து மத இதிகாசங்களை திரும்பி பார்க்க வேண்டும். அங்கு அவதார புருஷர்களும் ரிஷிகளும் முனிவர்களும் கூட ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரைக் கொண்டிருந்தனர் என்பதற்கான சான்றுகள் காணக்கிடக்கின்றன. அவர்களெல்லாம் அந்தந்த காலத்திலிருந்த சூழ்நிலைகளுக்கேற்ப தமது மணவாழ்க்கையை அமைத்திருந்தனர். அவற்றை, அந்த சூழ்நிலைகளை உணராத நிலையில் ஆட்சேபிப்பது அறிவுடமையாகாது. அப்பழுக்கற்ற அவர்கள் மீது அவதூறு சொல்வது இறையோனின் கோபத்திற்கு நம்மை ஆளாக்கிவிடும்.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.