அபூ அப்தில்லாஹ் எழுதுகிறார்.
திருக்குரானில் குறிப்பிடப்படும் எந்த நபியும் அவர் இன்னாரின் மகன் என்று குன்யத்துப் பெயரால் அல்லாஹ் அழைக்கவில்லை. ஈஸா (அலை) அவர்களை மட்டும் இப்னு மர்யம் என்று குன்யத்துப் பெயரால் இறைவன் அழைப்பதன் மர்மம் என்ன? சுமார் 2000 வருடங்களுக்கு முன் அல்லாஹ் அளவில் உயர்த்தப்பட்ட அதே ஈசப்னு மர்யம் மீண்டும் உலகில் இறங்குவார் என்பதை மக்களுக்கு சந்தேகமற அறிவிக்கவே தனது திருமறையில் அவர்களைப் பற்றி குறிப்பிடும் இடங்களில் எல்லாம் ஈசப்னு மர்யம் என்றே குறிப்பிடுகின்றான்.
உலக நடைமுறையில் ..... சொத்துக்கள் பதியப்படும் போது நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்படும் போதும் இன்னாரின் மகன் என்று குரிப்ப்டப்படுவதைப் பார்க்கிறோம். அதற்கு அடிப்படைக் காரணம் ஆள்மாறாட்டம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்கே ஆகும். அதாவது இன்னாரின் மகன் இன்னார் என்று குறிப்பிட்டால் அது குறிப்பாக ஒரே ஒரு நபரைக் குறிக்கும் சொல்லாகும். இதன் காரணமாகவே முஹம்மது என்ற பெயரை மற்றவர்கள் வைத்துக் கொள்ள அனுமதித்த நபி (ஸல்) அவர்கள் தனது குன்யத்துப் பெயரான அபுல் காஸிம் என்ற பெயரை மற்றவர்களுக்கு வைப்பதைவிட்டும் தடுத்துள்ளார்கள். (ஆதாரம் புகாரி)
உலக வரலாற்றில் யாரும் ஈஸா (அலை) அவர்களைத் தவிர வேறு யாரும் தந்தையின்றி தாய்க்கு மட்டும் பிறந்தவர் அல்லர்.
காதியானிகள் சொல்வதுபோல் ஈசப்னு மர்யத்தைப் போன்ற குணாதிசியங்கள் உடைய இந்த உம்மத்தில் தோன்றும் ஒருவர் என்று ஒருபோதும் சொல்ல முடியாது. காதியானிகள் நபியாக ஒப்புக் கொண்டிருக்கும் பொய் நபி (நவூது பில்லாஹ் மின் தாலிக்) மிர்ஸா குலாமின் தாயார் பெயர் மர்யம் என்று இருந்தாலும் கூட இவர் தந்தையின்றி பிறக்காத காரணத்தால் மிர்ஸா குலாமை இப்னு மர்யம் என்று ஒருபோதும் சொல்லமுடியாது
ஹாதிம் தாய், அப்லத்தூன், எலியா என்னும் பெயர்களில் இன்னார் மகன் இன்னார் என்ற குறிப்பு இல்லை. ஆதலால் இப்பெயர்களை இன்னொருவருக்கு உவமையாகச் சுட்டிக்காட்டி குறிப்பிடுவதால் தவறில்லை. ஆனால் இப்னு மர்யம் என்று ஒருவரை உவமையாகக் குறிப்பிடக் கூடாது. காரணம் இன்னாரின் மகன் இன்னார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நம் பதில் :
இப்னு மர்யம் குறித்து அல்லாஹ் கூறும் போது இஸ்முஹுல் மஸீஹ் ஈசப்னு மர்யம் அவரின் பெயர் மஸீஹ் ஈசப்னு மர்யம் என்பதாகும் என்று 3:46 இல் கூறுகிறான். எனவே அல்லாஹ் அவருக்கு வைத்தக் முழுப் பெயரே மஸீஹ் ஈசப்னு மர்யம் என்பதாகும். அதன் ஒரு பகுதியைப் பிரித்து குன்யத்துப் பெயர் எனக் கூறி கற்பனைக் கதை புரியும் இவரை என்ன சொல்வது?
ஈசப்னு மர்யம் என்று குர்ஆனில் ஒரு சொல் வருகிறதென்றால் இறைவன் ஏன் இன்னாரின் மகன் இன்னார் என்று கூறினான் என்பதற்குரிய விடை குரானிலேயே இருக்கும் அல்லது ஹதீஸிலும் கிடைக்கும். அதைப் பற்றி ஆராயாமல் அபூ அப்தில்லாஹ் அச்சொல்லுக்கு தவறான ஒரு கருத்தை தந்துள்ளார். குர்ஆனில் எந்த நபியையும் அவர் இன்னாரின் மகன் இன்னார் என்று குன்யத்துப் பெயரால் குறிப்பிடாமல் ஈஸா (அலை) அவர்களை மட்டும் குறிப்பிடக் காரணம் என்ன? கிருஸ்தவர்கள் குரான் இறங்கும் கால கட்டத்தில் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களை கடவுள் என்றும் கடவுளின் குமாரன் என்றும் நம்பினர். எனவே அவர்களுடைய நம்பிக்கையை மறுக்கவே அவரை மர்யத்தின் மகன் ஈஸா என்று கூறுகிறது
இப்னு மர்யம் என்ற சொல் திருக்குரானில் 23 இடங்களில் வருகிறது. இவ்வாறு 23 முறை அல்லாஹ், ஈஸாவை மனித குமாரன், மர்யத்தின் மகன் என்று கூறுகிறான்.
குன்யத்து தொடர்பான நபிமொழியை காண்போம். அபூ அப்தில்லாஹ் அதற்க்கு எடுத்துக் காட்டும் தந்துள்ளதால் அதனை இங்கு எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.
முஹம்மது என்ற பெயரை பிள்ளைகளுக்கு சூட்டச் சொல்லிய ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபுல் காசிம் என்ற குன்யத்துப் பெயரை பிறருக்கு சூட்டுவதைத் தடுத்திருக்கிறார்கள் என்றாலும் அதற்கு அவர் கூறும் காரணம் ஆள்மாறாட்டம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாகும். குன்யத்துப் பெயர் என்றால் அது ஒரே ஒரு ஆளை மட்டுமே குறிக்கும் என்று அபூ அப்தில்லாஹ் கூறுகிறார். அப்துல்லாஹ் என்பவருக்கு முஹம்மது என்ற ஒரு மகன் இருந்தால் அப்துல்லாஹ் வின் மகன் முஹம்மது. அதாவது முஹம்மதிப்னு அப்துல்லாஹ் என்று கூறினால் ஆள்மாறாட்டம் ஏற்படாதா? எனவே அபூ அப்தில்லாஹ் காட்டும் ஆதாரம் அர்த்தமற்றதாகும். இது பற்றிய ஹதீஸை காண்போம்.
என் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளுங்கள் ஆனால் (அபுல் காசிம் என்ற ஏன் குறிப்புப் பெயரை சூட்டிக் கொள்ளாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி 3537)
இதிலிருந்து ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் காஸிமின் தந்தையாக இருப்பதனால் அபுல் காசிம் என்ற பெயரைச் சூட்டக் கூடாது என்ற பொருளில் கூறவில்லை. மாறாக காஸிம் அதாவது பங்கீடு செய்பவன் என்று தன்னை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளதால் அந்தப் பதவிப் பெயர் தனக்கு மட்டுமே உரியதால் அதனை பிறருக்கு வைக்க வேண்டாம் என்ற கருத்தில்தான் கூறியுள்ளார்கள். அபூ அப்தில்லாஹ் ஹதீஸைக் குறிப்பிடும் போது அரைகுறையாகக் குறிப்பிடுகிறார். அதிலேயே காணப்படும் கருத்தை மறைக்கிறார்.
உலக வரலாற்றில் ஈஸா (அலை) அவர்களை தவிர வேறு யாரும் தந்தையின்றி தாயாருக்கு மட்டுமே பிறந்தவர் அல்லர் என்ற கூறும் தகுதியும் ஞனமும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. அபூ அப்தில்லாஹ்வுக்கோ அல்லது வேறு எவருக்கும் அந்த தகுதி கிடையாது. ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் மட்டும்தான் அவ்வாறு பிறந்திருக்கிறார்கள். வேறு எவரும் அவ்வாறு பிறக்கவில்லை. இனிமேல் அவ்வாறு பிறக்கமாட்டார்கள் என்று குர்ஆனில் எங்கும் கூறப்படவில்லை. எனவே ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்கள் அல்லாமல் வேறு ஒருவர் மர்யம் என்னும் பெண்ணுக்கு பிறந்து, ஈஸா என்று பெயர் பெற்றிருந்தால் அவரை ஈசப்னு மர்யம் என்று கூறும் உரிமை எல்லாருக்கும் உண்டு.
மேலும் ஒருவரை மற்றவருக்கு உவமையாக ஒப்பிட்டுக் கூறும்போது இவருடைய பெற்றோர் பெயரும் ஒன்றுபோல் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இவ்விருவருக்கும் இடையில் எத்தனைப் பற்றி ஒப்பிட்டுக் கூறுகிறோமோ அது அவ்விருவருக்கும் இடையில் ஒன்றுபோல் இருந்தால் ஒப்பிட்டுக் கூறலாம்.
எடுத்துக்காட்டாக ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களை இப்னு அபீகப்சா அதாவது அபீகப்சாவின் மகன் என்று அபூ ஸுப்யான் (ரலி) அழைத்தார்கள். (புகாரி) நபித்தோழர் அபூ ஸுப்யான் (ரலி)அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய தந்தை தாய் பெயர் நன்றாக தெரியும் அபீகப்சா என்பவர் நபி (ஸல்) அவர்களின் தந்தை இல்லை என்பதும் தெரியும். இவ்வாறு இருந்தும் நபி (ஸல்) அவர்களை இப்னு அபீகப்சா என்று அபூ ஸுப்யான் (ரலி) அழைத்தார்கள்.
இதே விதத்தில்தான் ஈஸா (அலை) அல்லாத வேறு ஒருவர் இப்னு மர்யம் என்று ஹதீஸில் அழைக்கப்பட்டுள்ளார். திருக்குரானில் மர்யத்தின் மகன் உவமையாக எடுத்துரைக்கப்ப்படும் போது உமது சமுதாயத்தினர் அதனைக் குறித்து கூச்சலிடத் தொடங்குகின்றனர். இவ்வசனத்தில் இப்னு மர்யத்தை உவமையாக எடுத்துக் கூறப்படும். என்று அல்லாஹ்வே கூறியுள்ளான்.
ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் இப்னு மர்யமாக வந்து விட்டார்கள் என்று கூறும்போது அபூ அப்தில்லாஹ் போன்றவர்கள் போடுகின்ற கூச்சலைத்தான் அல்லாஹ் அதில் கூறியுள்ளான். எனவே இன்னாரின் மகன் இன்னார் என்று பெயர்களை உவமையாகக் கூறக் கூடாது என்ற அபூஅப்தில்லாஹ்வின் கூற்று அர்த்தமற்றதாகி விடுகிறது.
நபி மொழிகளில் இன்னாரின் மகன் இன்னார் என்று குன்யத்துப் பெயர்கள் ஒரு ஆளை மட்டும் குறிப்பிடுவதற்கோ ஆள் மாறாட்டம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்கோ தந்தையின்றி தாய்க்கு மட்டும் பிறந்தவர் என்பதை மட்டும் குறிக்கவோ வரவில்லை. உதாரணமாக, ஹுதைபிய்ய உடன்படிக்கையில் அப்துல்லாஹ்வைன் மகன் முஹம்மது என்று எதிரிகள் எழுதச் சொன்னது முஹம்மது ரசூலுல்லாஹ் (அல்லாஹ்வின் தூதர் முஹம்மது) என்பதை மறுப்பதர்க்காகத்தானேயொழிய ஆள் மாறாட்டம் ஏற்பட்டுவிடும் என்பதற்கல்ல. இதே விதத்தில் தான் ஈஸா கடவுளின் மகன் இல்லை. அவர் மர்யத்தின் மகன் ஆவார் என்று கிறித்தவ கடவுள் கொள்கையை மறுக்கவே இப்னு மர்யம் என்று கூறப்பட்டுள்ளது.
இவ்விடத்தில் இன்னொரு கருத்தையும் விளக்க விரும்புகிறேன். அபூ அப்தில்லாஹ் தனது நூலில் பக்கம் 12 இல் 4:157 அல்லாஹ் ஷுப்பிஹலஹும் (அவர்களுக்கு ஆள் மாறாட்டம் செய்யப்பட்டது) என்று குறிப்பிடுகிறான் (காதியானிகளோ அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது என பொருள் கொள்கின்றனர்) என்று எழுதியுள்ளார். அதாவது சிலுவையில் அறையப்பட்டவர் ஈஸா (அலை) இல்லை என்றும் யாரோ ஒரு அப்பாவி இரையாக்கப்பட்டான் என்றும் அபூ அப்தில்லாஹ் நம்புகிறார்.
இதற்க்கு நபிமொழி வரலாற்று சான்றுகள் எதுவும் தரவில்லை. இது ஒருபுறம் இருக்கட்டும். குன்யத்துப் பெயர் பற்றி அபூ அப்தில்லாஹ் மேலே எழுதியிருப்பதில் ஆள்மாறாட்டம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்குத்தான் அல்லாஹ் ஈசப்னு மர்யம் என்று – இன்னாரின் மகன் இன்னார் என்று பெயர் வைத்துள்ளான். என்று பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார். அதாவது ஆள் மாறாட்டம் ஏற்படுவதை ஒரு சொல்லின் மூலம் அல்லாஹ் தடுத்துவிட்டான் என்கிறார் அவர்.
அல்லாஹ் ஆள்மாறாட்டம் ஏற்படக் கூடாது என்று கருதியே ஈசப்னு மர்யம் என்று குன்யத்துப் பெயர் வைத்தான் என்று நம்பும் அபூ அப்தில்லாஹ், அல்லாஹ் தன் செயல் மூலம் ஆள்மாறாட்டம் செய்வான். என்றும் அதனை ஷுப்பிஹலஹும் (அவர்களுக்கு ஆள் மாறாட்டம்) செய்யப்பட்டது என்ற சொல் விளக்குகிறது என்றும் நம்புவது முரண்பாடாக இல்லையா?
ஆள்மாறாட்டம் என்பது உலகில் எத்தனை பெரிய குற்றம். அவமானம், தலை குனிவு, அச் செயலை அல்லாஹ் செய்துள்ளான் என்று நம்பும் அபூ அப்தில்லாஹ்களை அல்லாஹ்தான் மன்னிக்க வேண்டும். அல்லாஹ்வுக்கு இதனை விட அவமானும் களங்கமும் கேவலமும் (நவூதுபில்லாஹ்) இருக்கமுடியுமா?
அச்சொல்லுக்கு அவருடைய நிலைமை சந்தேகத்திற்கு உரியதாய் ஆக்கப்பட்டுவிட்டது, என்று மௌதூதியும் அவர்கள் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்பட்டு விட்டனர் என்று அப்துல் ஹமீது பாக்கவியும் நாங்கள் கொண்ட பொருளையே கொண்டுள்ளனர். இதுவே சரியான பொருள் அல்லது “But he was made
to appear to them as such” – (Mohammed Ali) என்று பொருள் கொள்ளலாம்.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.