அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jul 28, 2012

ஜின்னும் மனிதர்களே - சிராஜ் அப்துல்லாவுக்கு பதில்


ஜின் இனத்தைப் பற்றி முஸ்லிம்களிடையே யுகங்களின் அடிப்படையில் தவறான கருத்துகள் நிலவி வருகின்றன. இதற்க்கு திருக்குரானில் எவ்வித சான்றும் இல்லை. திருக்குர்ஆன் இவர்களின் தவறான கருத்துக்கு நேர் மாற்றமான வகையில் ஜின் இனத்தைப் பற்றி கூறுகிறது. திருக்குரானில் கூறப்படும் ஜின் எனப்படுவோர் யார்? என்பதை திருக்குர்ஆன் அடிப்படையில் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். ஜின் என்பதற்குப் பல அர்த்தங்கள் இருந்தாலும் திருக்குரானில் இந்தச் சொல் 'இன்ஸ்' என்ற சொல்லுடன் சேர்த்துக் கூறப்பட்ட இடங்களில் எல்லாம் மனிதரில் ஒரு பிரிவினர் என்ற நிலையிலேயே கூறப்பட்டுள்ளது என்பதும் அற்புதச் சக்தியுடைய கண்களுக்குப் புலப்படாத தனிப்பட்ட ஒரு படைப்பினத்தைக் குறித்துக் கூறப்பட்டதல்ல என்பதும் திருக்குரானை ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவர்களுக்கு விளங்கும்.
 

ஜின்களில்நபிமார்கள்:-
 

மறுமையில் இறைவன் "ஜின் இன்ஸ் கூட்டத்தாரே! உங்களுக்கு எனது வசனங்களை ஓதிக்காட்டவும், இறுதி நாளின் சந்திப்பைப் பற்றி எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே தூதர்கள் உங்களிடம் வரவில்லையா?" (6:131) என்று கேட்பான்.
இந்த வசனத்தில் ஜின், இன்ஸ் கூட்டத்திலிருந்து தூதர்கள் அவர்களிடம் வந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இங்கு ஜின் என்று கூறப்பட்டிருப்பது, கண்ணுக்கு புலப்படாத தனிப் படைப்பு என்றிருந்தால், அந்தப் படைப்புகளிலிருந்து தனியாகத் தூதர்கள் வந்திருக்க வேண்டியது பற்றியும், அவர்களின் செயல் முறைகள் பற்றியும் அவசியம் திருக்குரானில் ஓரிடத்திலாவது கூறப்பட்டிருக்கவேண்டும். ஆனால் மனிதர்களாகிய தூதர்களைப் பற்றிய விஷயங்களே திருமறையில் காணப்படுகிறது. எனவே ஜின் என்று கூறப்பட்டிருப்பது, மனிதர்களில் ஒரு பிரிவினரைக் குறித்தே கூறப்பட்டிருக்கிறது என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும்.
'இன்ஸ்' என்றால் சாதாரண நிலையில் வாழ்க்கை நடத்தும் மனிதர்களாவர். இன்ஸ் என்பதற்கு அன்பு, நேசம் எனபது பொருளாகும். ஜின் என்பது, சாதாரண மக்களிலிருந்து விலகி வாழைக் கூடிய, மற்ற மனிதர்களுக்கு இலேகுவாகக் காண்பதற்கும், கண்டு பழகுவதற்கும் முடியாத பெரியவர்களை, தலைவர்களைக் குறித்தே கூறப்பட்டிருக்கிறது. ஏனெனில் 'ஜின்' என்பதன் பொருள் 'மறைந்திருக்கக்கூடியது என்பது பொருளாகும்.
இவ்விதம் ஜின், இன்ஸ் என்று கூறப்பட்டிருப்பது அரசனும், குடிமக்களும், எஜமானும், வேலையாளும், முதலாளியும், தொழிலாளியும், சர்வாதிகாரியும், சாதாரண மக்களும், ஆகிய பிரிவினர்களையே குறிக்கும் இரண்டு குணப்பெயர்களாகும் மேற்படி திருக்குர்ஆன் வசனங்களை தொடர்ந்து 'தூதர்களை அனுப்பாதவரை எந்த ஓர் ஊரையும் நாம் அழிப்பதில்லை. (6:131) என்று இறைவன் கூறியுள்ளதும் இதற்க்குச் சான்றாகும். இங்குக் கூறப்பட்டுள்ள ஜின்னும் இன்சும் ஓர் ஊரில் வாழக்கூடியவர்கள் என்பதனால் ஜின் என்று கூறப்பட்டவர்கள் அந்த ஊர்களில் உள்ள மனிதர்களில் ஒரு பிரிவினரையே குறிக்கும் என்பதும், தெளிவாகிறது.

 

ஜின்கள் வலிமைவாய்ந்தவர்கள்:-
 

மறுமையில் அல்லாஹ் ஜின்களை நோக்கி, ஜின்கள் கூட்டத்தினரே! நீங்கள் மனிதர்களில் அநேகரை வசப்படுத்தி உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்கள் அல்லவா? என்று கேட்பான். அதற்க்கு 'இன்ஸ்' கூட்டத்தினர் கூறுவர். 'எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரைக் கொண்டு பலன் அடைந்திருக்கின்றோம்' என்று கூறுவர். (6:129)
இந்த வசனத்திலிருந்து ஜின், இன்சை விட வலிமையுடையவர்கள் என்றும் இன்ஸ்களை வசப்படுத்துபவர்கள் என்றும் இருவரும் ஒருவருக்கொருவர் பலனடைந்துள்ளனர் என்றும் விளங்குகிறது. எனவே ஜின் எனப்படுபவர் மனிதர்கள் அல்லாமல் வேறொரு படைப்பினமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் இந்த வசனத்திலிருந்து தெளிவாகிறது. எவ்வாறெனில் சாதாரண மக்களை வசப்படுத்தி அவர்களைக்கொண்டு காரியங்களைச் சாதிக்கக் கூடியவர்கள் அரசர்களும், பெரிய முதலாளிகளும், தலைவர்களுமாகவே இருக்கிறார்கள். கண்ணுக்குப் புலப்படாத வேறொரு தனிப் படைப்பினர் அல்ல என்பது தெளிவு. மனிதர்களைவிட உயர்ந்தவர்களும், மனிதர்களை தனது வலையில் விழவைத்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது வேறொரு படைப்பைச் சேர்ந்தவர்களல்ல என்பதும் தெளிவு. இங்கு ஜின் என்றும் இன்ஸ் என்றும் இரு பெயர்கள் கூறப்பட்டிருந்தாலும், அவர்களின் செயல், நடை முறைகளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாக உள்ளது என்பதை எளிதில் விளங்கிக் கொள்ளமுடியும்.

ஜின்களில் நபிமார்களின் விரோதிகள்:-
 

திருக்குரானில் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்: "இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும் மனிதர்களிலும் (இன்சிலும்), ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக நாம் ஆக்கி இருந்தோம். அவர்களில் சிலர் மற்றவர்களை ஏமாற்றும் பொருட்டு அலங்காரமான வார்த்தைகளை இரகசியமாகக் கூறிக்கொண்டிருந்தனர்." (6:113) இந்த வசனத்தில் நபிமார்களின் எதிரிகள் இன்ஸ்களிலும், ஜின்களிலும் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மனிதர்களே நபிமார்களுக்கு விரோதிகளாக இருந்தார்கள்: அவர்களே பலவித அக்கிரமங்களும் அநியாயங்களும் துன்பங்களும் நபிமார்களுக்குக் கொடுத்து வந்துள்ளார்கள் என்றுமே திருக்குரானும் மற்ற கிரந்தங்களும் கூறுகின்றன. ஆனால் ஜின் என்றுக் கூறப்படக்கூடிய மறைவானப் படைப்பினங்கள் நபிமார்களுக்கு எதிராக யாதொரு தீங்கும் செய்ததாக எங்கும் கூறப்பட்டுள்ளதாகக் காண முடியவில்லை. ஜின்களும், இன்ஸ்களும் நபிமார்களுக் கெதிராக ஒருவருக்கொருவர் உதவி செய்து சதித் திட்டங்கள் தீட்டியதாகவும் ஏமாற்றும்பொருட்டு அலங்கார வார்த்தைகளை இரகசியமாகக் கூறிக்கொண்டிருந்ததாகவும் மேற்படி திருக்குர்ஆன் வசனத்தில் கூறப்பட்டுள்ளது. நபிமார்களின் எதிரிகளாகிய மனிதர்கள், ஜின்கள் என்ற கண்ணுக்குப் புலப்படாத ஒரு தனிப் படைப்போடு கூட்டு சேர்ந்து கொண்டு சதியாலோசனை செய்ததாகவோ அவர்களுடன் ஆலோசனை நடத்தி நபிமார்களுக்கு எதிராக வேலை செய்ததாகவோ எங்கும் கூறப்படவில்லை.
ஆதலால், நபிமார்களுக்கெதிராக சதி திட்டங்கள் தீட்டிய ஷைத்தான்கள் ஜின்னிலும் இன்சிலும் உட்பட்டவர்களாகிய மனிதர்கள் என்றே இவ்வசனத்திலிருந்தும் விளங்க முடிகிறது.
ஜின்களுக்கு உடலுண்டு:-
 

திருக்குரானில் இறைவன் ஓரிடத்தில் இவ்வாறு கூறுகிறான் : " இந்தக் குரானைப் போன்ற ஒன்றைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும்(இன்ஸ்) ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று) அவர்களில் சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும் இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வர முடியாது' என்று (நபியே!) நீர் கூறும். நிச்சயமாக இந்தக் குர்ஆனில் மனிதர்களுக்காக சகலவிதமான உதாரணங்களையும் (மிகவும் தெளிவாக) விவரித்துள்ளோம். எனினும் மனிதர்களில் பெரும்பாலானவர்கள். (இதை) நிராகரித்திருக்கவில்லை". ( 17:88,89)
இங்கு ஜின்னும் இன்சும் ஒன்று சேர்ந்து திருக்குரானைப் போன்ற ஒரு தெளிவான வேதத்தைக் கொண்டு வருவதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு முயற்சி செய்து பார்க்கட்டும் என்று இறைவன் சவால் விட்டுள்ளான். அது மட்டுமல்ல அப்படி ஒன்றை உண்டாக்குவதற்கு எதிரிகளில் ஒருவருக்கொருவர் உதவி செய்ய முடியுமேயல்லாமல் கண்ணுக்குப் புலப்படாத தனிப் படைப்பாகிய ஜின்களிலிருந்து அவர்களுக்கு உதவி செய்ய முடியாது. மேற்படி வசனத்தின் மூலம் ஜின்களும், இன்ஸ்களும் ஒருவருக்கொருவர் உதவி செய்யக் கூடியவர்களாகவே இருக்கின்றனர் என்றே விளங்குகிறது. இந்த உதவி மனிதர்கள் ஒருவருக்கொருவர் செய்வதல்லாமல், கண்ணுக்குப் புலப்படாத வேறொரு படைப்பினத்திற்கும் மனிதர்களுக்கும் இடையில் நடக்க வாய்ப்பில்லை. ஆதலால் இங்கு ஜின், இன்ஸ் என்று கூறப்பட்டது மனிதர்களில் உள்ள இரண்டு பிரிவினரைக் குறித்தே கூறப்பட்டுள்ளது என்றே விளங்க்கிக் கொள்ள முடியும். அதாவது திருக்குரானை நேரடியாக எதிர்க்கக் கூடியவர்களும், மறைந்திருந்து அந்த எதிர்ப்புக்கு தலைமை தாங்குபவர்களுமாவார்கள் அந்த இரு பிரிவினர். திருக்குரானில் இந்த வசனத்தைத் தொடர்ந்து, மனிதர்களுக்குத் தேவையான அனைத்துப் போதனைகளும் இதில் அடங்கியுள்ளதென்றும் ஆனால் பெரும்பாலானவர்கள் அதனை நிராகரிக்கக் கூடியவர்களாகவே உள்ளனர் என்றும் கூறப்பட்டது இதற்க்குச் சான்றாகும். அந்தப் போதனைகள் மனிதர்களுக்கே உரியதென்றும் அதை நிராகரிப்பவர்களும் மனிதர்களே என்றும் கூறப்பட்டுள்ளது. திருக்குரானை இறைவசனமில்லை என்று நிராகரிப்பவர்களும் , அதனால் அந்த நிராகரிப்பவர்களை நோக்கி இதைப் போன்ற ஒரு வேதத்தைக் கொண்டு வாருங்கள் என்று சவால் விடப்பட்டவர்க்களுமாகிய ஜின், இன்ஸ் இருவரும் மனிதர்களேயல்லாமல் வேறொரு படைப்பினமாக இருக்க வாய்ப்பில்லை என்பதும் இந்த 17:88,89 வசனங்களிலிருந்து சிந்திப்பவர்களால் விளங்கிக் கொள்ள முடியும்.
திருக்குரானில் ஓரிடத்தில் இறைவன் கூறுகிறான்: ' நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும் மனிதர்கள் (இன்ஸ்) களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம். அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெறமாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளை ) பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நர்போதனைகளைக்) கேட்க மாட்டார்கள். இத்தகையோர் கால் நடைகளைப் போன்றவர்கள். இல்லை. அவற்றை விடவும் வழிக்டர்கள் இவர்கள் தாம் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள். (7:179)
இந்த வசனத்தில் ஜின்கள் அநேகர் கண்கள் இருந்தும் காணாதவர்கள், காதுகள் இருந்தும், கேட்காதவர்கள், புத்தி இருந்தும் சிந்திக்காதவர்கள். என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இங்கு ஜின்களுக்கும், இன்ஸ் களுக்கும் உள்ளதாகப் பொதுவாகக் கூறப்பட்டுள்ள குணங்கள் மனிதர்களுக்கு மட்டுமே உள்ள குணங்களாகும். ஆகவே ஜின்கள் என்று இங்கு கூறப்பட்டது வலிமைவாய்ந்த பெரியமனிதர்கள் என்று எண்ணப்படக் கூடியவர்களே இங்குக் கூறப்பட்டுள்ளது என்றே விளங்கிக்கொள்ளலாம். இந்த வசனத்தில் ஜின்களையும், இன்ச்களையும் மிருகங்களுடன் ஒப்பிட்டு உவமானமாகக் கூறப்பட்டுள்ளது. பகுத்தறிவும் சிந்தனை செய்யக்கூடிய சக்தியும் வழங்கப்பட்ட மனிதர்கள் அவற்றைப் பயன்படுத்தாமல் ஒதுக்கிவிட்டு பௌதீக இச்சைகளுக்கு ஆளாகி மிருகத்திற்கு நிகராக வாழும் போதுதான் அவர்களை மிருகங்களுக்கு உவமானமாகக் கூறப்படுவதுண்டு. ஜின்கள் மனிதர்களில்லாமல் மறைவான உடலைக் கொண்டவர்களும் இந்த பௌதீகத்துடன் தொடர்பில்லாதவர்க்களுமாக இருந்தார்களென்றால் அந்த தனிப் படைப்பினரைக் குறித்து மிருகத்துடன் உவமானப்படுத்திக் கூறப்பட்டது அறிவுக்குப் பொருந்தாத ஒன்றாகும். அல்லாஹ் ஆதமிலிருந்து அவர்களின் சந்ததிகளை வெளியாக்கி அவர்களை நோக்கிக் "நான் உங்களின் இறைவனல்லவா" (7:172) என்று கேட்ட வசனத்தைத் தொடர்ந்தே (7:179) வசனத்தில் இவ்விதம் கூறியுள்ளான். 

இவ்விதம் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளவேண்டும் என்ற போதனை மனிதர்களுக்கே வழங்கப்பட்டதென்றாலும் அவர்களில் பலர் அந்தப் போதனைகளுக்க் மேர்மாற்றமாக நடக்கிறார்கள், நடப்பார்கள் என்ற விஷயத்தையும் கூறியதைத் தொடர்ந்தே, ஜின்களிலிருந்தும், இன்ஸ்களிலிருந்தும் பலர் நரகத்திற்குரியவர்களாவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே இந்த ஜின்னும், இன்சும் ஆதமின் சந்ததிகளைச் சார்ந்தவர்களாக இருந்தால்தான் இறைக்கட்டளைகைப் புறக்கணித்தவர்கள் என்ற வசனத்திற்கு ஆளாகமுடியும். ஆகவே ஜின்கள் ஆதமின் சந்ததிகளே என்பதால் அவர்களும் மனிதர்களில் ஒரு பிரிவினர் என்பதையே இவ்வசனமும் நமக்குத் தெளிவு படுத்துகிறது. 

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.