அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Mar 7, 2012

மௌலானாவின் கலப்பட மார்க்கம் - பிரிட்டீஸ் ஆட்சியும் அஹ்மதியா இயக்கமும்


அஹ்மதியா இயக்கத்திற்கெதிராக பொய்யானதும், மக்களை ஏமாற்றுவதற்கும் அடிக்கடி எதிரிகளால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் அஹ்மதியா இயக்கம் ஆங்கிலேயர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்பதும் ஆகும். 

"இஸ்மி" இதழின் "மௌலானா" இதே குற்றச்சாட்டை இவ்வாறு வெளிப்படுத்துகின்றார்:-

"ஆங்கிலேயர் தேசத்தைக் கைப்பற்றிய போது இந்துக்கள் ஆங்கிலேயருக்கு உடனே அடங்கிப் போய்விட்டனர். முஸ்லிம்களோ பணிந்து அடிமை வாழ்வு வாழ விரும்பவில்லை. ஆங்கிலேயரை எதிர்த்து போராடுவதற்கு என்ற நோக்கில் முஸ்லிம்களிடையே பல இயக்கங்கள் தோன்றின. முஸ்லிம்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்பட்டுவிட்டது என்பதற்கு இது எடுத்துக் காட்டாக இருந்தது"........................

"இப்படியான நிலையில் ஆங்கிலேயருக்கு ஒரு புத்தி தோன்றியது. தங்களுக்கு முஸ்லிம்களை அடிமைப்படுத்துவதற்கும் ஒரு நபியை தோன்றுவிக்க முனைந்தனர். ஒரு நபியின் வார்த்தை மட்டுமே முஸ்லிம் சமுதாயத்தில் செல்லுபடியாகும் என ஆங்கிலேய அரசு நம்பியது..... அதைத் தொடர்ந்து அஹ்மதியா - காதியானி இயக்கம் ஆங்கிலேயரின் முழு ஆதரவுடன் உண்டாக்கப்பட்டது."

இஸ்மி மௌலானாவின் இந்த அற்புதமான வரலாற்று ஆராய்ச்சியைப் பற்றி வரலாற்று அறிஞ்சர்களும் சிந்தனையாளர்களும்தான் போற்றி பாராட்ட வேண்டும்.

"இந்துக்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டுவிட்டார்களாம்! முஸ்லிம்கள் இந்துக்கள் போல் அடிமை வாழ்வு வாழ விரும்பவில்லையாம்." 

ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு விடுதலை பெற தங்களது உயிர், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து போராடி வெற்றி பெற்ற இந்திய தேசீய காங்கிரசும் மற்றும் விடுதலை இயக்கங்களும்தான் இந்த ஆராய்ச்சிக்கு பதிலளிக்க வேண்டும்.

கட்டுரை ஆசிரியருடைய இந்த வரலாற்று அறிவிலிருந்தும் அவருடைய அறிவும் உண்மையை மறைத்து திரித்துக் காட்டக் கூடிய திறமையும் எப்படிப்பட்டது என்பதை உணர முடிகிறது. மீண்டும் அவரது மகத்துவமிக்க ஒப்பற்ற ஆராய்ச்சி இவ்வாறு தொடர்கிறது:-

"முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட விழிப்புணர்ச்சியைப்போக்கி அவர்களைத் தூங்க வைப்பதற்கு ஒரு நபியால்தான் இயலும், எனவே மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களை ஒரு நபியாக தோன்ற வைத்து அஹ்மதியா இயக்கத்தை தோற்றுவித்தனர்.

இந்த வரலாற்று ஆராய்ச்சியைப் புகழ்ந்து இவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்க மறந்துவிட்ட பல்கலைக்கழகங்கள் அவர் அறிவுத்திறனுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க முன்வருமாறு வேண்டுகிறேன்.

இறுதி நபிக் கொள்கையை தவறான முறையில் அடிப்படைக் கொள்கையாக கடைபிடித்துவரும் முஸ்லிம்களை ஒரு நபியின் வார்த்தைகளின் மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். எனவே அவர்களை திசை திருப்ப ஒரு நபியை ஆங்கிலேயர்கள் தோற்றுவித்தார்கள் என்று கூறுவது "மௌலானாவுடைய மடத்தனத்தையும் அறியாமையையும் படம் பிடித்துக் காட்டுகின்றது.

ஹஸ்ரத் அஹ்மத்(அலை) அவர்கள் எதற்காக ஆங்கிலேய ஆட்சியைப் புகழ்ந்தார்கள்?

ஆங்கிலேயர் ஆட்சி ஏற்படுவதற்கு முன் இந்தியாவில் குறிப்பாக பஞ்சாபில் முஸ்லிம்கள் மிகவும் அவதிக்குள்ளாகியிருந்தனர். பஞ்சாபில் அப்போது சீக்கியர்களுடைய ஆட்சி நடைபெற்றது. அவர்கள் முஸ்லிம்களை கொன்று குவித்தனர். பள்ளிவாயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. பஞ்சாபில் பாங்கு சொல்லக்கூட அனுமதி இருந்ததில்லை.

சீக்கிய ஆட்சியில் முஸ்லிம்கள் அனுபவித்துக் கொண்டிருந்த பயங்கரமான கொடுமைகளை பற்றி இந்து அறிஞ்சர் துளசிராம் என்பவர் 1872 இல் வெளியிட்ட தமது 'ஷேரே பஞ்சாப்' என்னும் நூலில் இவ்வாறு வரைந்துள்ளார்:- 

"ஆரம்ப காலத்தில் சீக்கியர்கள் மிகவும் பயங்கரமான கொலைகளும் கொள்ளைகளும் செய்துவந்தனர். தங்களது கைகளுக்கு கிடைத்த எல்லாவற்றையும் கொள்ளையடித்து தங்களுக்கிடையே பங்கு போட்டுக் கொண்டிருந்தனர். சீக்கியர்கள் முஸ்லிம்கள் மீது கடுமையான பகைமை கொண்டிருந்தனர். முஸ்லிம்கள் பாங்கு சொல்வதற்கு அவர்கள் அனுமதியளிக்கவில்லை. மஸ்ஜித்களை ஆக்கிரமித்துக் கொண்டு அவற்றில் தம்முடைய குருகிரந்த் எனும் நூலைப் படித்துக் கொண்டிருந்தனர்."

மேற்கண்ட நூலில் கூறப்பட்ட நிலைமைகளிலிருந்து ஆங்கிலேயர்கள்தான் முஸ்லிம்களைக் காப்பாற்றினர்.

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் ஆங்கிலேய ஆட்சியைப் தாம் பாராட்டியுள்ளதற்கான காரணங்களை கீழ்க்கண்டவாறு தெளிவு படுத்தியுள்ளார்கள்:-

"நான் ஆங்கிலேய அரசை மகிழ்விப்பதற்காக எதுவும் கூறவில்லை. எனினும் இந்த ஆட்சி, முஸ்லிம்கள் தமது கடமைகளை செய்வதில் எவ்விதத்தடையும் செய்வதில்லை. தமது மார்க்கத்தை இறைவனுக்காக மட்டும் அர்ப்பணம் செய்யும் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த ஆட்சி வாளெடுக்கவில்லை. இவ்வாறான ஆட்சியை வாளெடுத்து யுத்தம் செய்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. நான் ஆங்கிலேய ஆட்சியை மகிழவைக்கவோ அல்லது நான் பயனடையவேண்டும் என்ற எண்ணத்துடனோ இவ்வாறு கூறவில்லை" 

அஹ்மதிகளை பிரிட்டிஷ் ஆட்சியின் ஏவலர்கள் என்று புளுகும் 'மௌலான' தான் சார்ந்திருக்கும் ஜமாத்துகளையும் தங்களுடைய மதிப்பிற்குரிய ஆலிம்சாக்களையும் பற்றி ஆராய்ந்து பார்த்தால் பிரிட்டிஷ் ஆட்சியின் ஏவலர்கள் அவர்கள்தாம் என புரிந்து கொள்ள முடியும்.

தாருல் உலூம் நத்வதுல் உலமாவின் மாதப்பத்திரிகையான 'அன்னத்வா' இவ்வாறு எழுதியிருந்தது.

"இந்த தாருல் உலூமிலிருந்து வெளிவரும் ஆலிம்களுடைய மிகப் பெரிய கடமை ஆங்கிலேய ஆட்சியின் குணங்களையும் அருட்களையும் நன்குணர்ந்து நாட்டுமக்களுக்கு அதனுடைய குணங்களை எடுத்துக்காட்டி அதற்கு கீழ்படிய வேண்டியதன் அவசியத்தை பரவசெய்யவேண்டும் என்பதாகும்." (அந் நத்வா : லக்னோ ஜூலை 1908)

அஹ்ராரி இயக்கத்தின் தலைவர் மௌலான சபர் அலி கான் தன்னுடைய பத்திரிகையான ஜமீந்தார் இல் இவ்வாறு எழுதியுள்ளார்:-

"ஜமீந்தார் பத்திரிகையும் அதனைச் சார்ந்தவர்களும் பிரிட்டிஷ் ஆட்சியை இறைவனுடைய நிழல் என்று நினைக்கிறார்கள். ஒரு வினாடி கூட இந்த அரசாங்கத்திற்கெதிராக முஸ்லிம்களால் தப்பெண்ணம் கொள்ளவே முடியாது. துர்பாக்கியமான எந்த ஒரு முஸ்லிமும் இந்த அரசாங்கத்திற்கெதிராக செயலாற்ற நினைத்தால் அவனொரு முஸ்லிமே அல்ல வென்று முரசு கொட்டி நாங்கள் அறிவிப்போம் நம்முடைய அரசின் நெற்றியிலிருந்தும் வடியும் ஒருதுளி வேர்வைக்குப் பதிலாக முஸ்லிம்கள் தங்களுடைய உடலின் இரத்தத்தை சிந்தத்தயாராக இருக்கின்றனர் இந்தியாவிலுள்ள எல்லா முஸ்லிம்களின் நிலையம் இதுவேயாகும். ( ஜமீந்தர் 11-11-1911)

அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தின் பெரும் விரோதியான முஹம்மது ஹுசைன் பட்டாலவி ஆங்கிலேய ஆட்சி பற்றி கீழ்வருமாறு எழுதியுள்ளார்:-

"முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் பிரிட்டிஷ் ஆட்சி பெருமைக்குரியதாகத் திகழ்கிறது. குறிப்பாக அஹ்லே ஹதீஸிற்கு இந்த அரசு தற்போதைய எல்லா இஸ்லாமிய அரசுகளை விடவும், ரோம், ஈரான், குரோசான் ஆகியவற்றிலுள்ள அரசுகளை விடவும் மிகவும் அருளுக்குரியதாக உள்ளது. இவ்வரசாங்கத்தின் சமாதானக் கொள்கைகள் காரணமாக இவ்வரசாங்கம் தங்களுக்கு அருளப்பட்ட ஒரு இறையருள் என்றே அஹ்லே ஹதீஸ் பிரிவினர் கருதுகின்றனர். இந்த அரசாங்கத்தின் கீழ் குடிமக்களாக வாழ்வது இஸ்லாமிய அரசின் கீழ் குடிமக்களாக வாழ்வதைவிடவும் மேலானதென்று கருதுகின்றனர். இஷா அதுஸ் ஸுன்னா பாகம் : 6, பக்கம் 10 )

அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் பெரும் விரோதியான தேவ்பந்தி அஹ்லே ஹதீஸ் என்னும் பிரிவினரின் தலைவராக இருந்த மௌலவி நதீர் அஹ்மத் கீழ்க்கண்டவாறு வரைந்துள்ளார்:-

"இந்திய மக்கள் மீது ஆட்சி புரிவதற்கு இந்துவோ, முஸ்லிமோ அல்லாத வெளிநாட்டரசர் ஒருவர்தான் வரவேண்டும். அதில்தான் இந்த மக்களுக்கு நன்மை இருக்கிறது. ஐரோப்பாவில் உள்ள அரசுதான் இங்கு ஆட்சி புரிய வேண்டும். இங்கு ஆங்கிலேய அரசு ஆண்டுகொண்டிருப்பது இறைவனுடைய மாபெரும் கிருபையாகும். இந்த ஆங்கிலேய ஆட்சி தாயை விடவும். மேலான அன்பும் இரக்கமும் கொண்டதாகும். பர்மா, நேபாளம், ஆப்கானிஸ்தான், எகிப்து, அரபு நாடுகள் ஆகியவற்றிலுள்ள அரசர்களுள் எவரும் இந்தியாவை ஆளுவதற்குரிய தகுதிபடைத்தவர்கள் என நான் கருதவில்லை. இந்தியாவை ஆளத் தகுதிபெற்றவர்கள் ஆங்கிலேயர் மட்டும்தான. இந்த ஆட்சி நீண்ட காலம் இருக்கவேண்டும் என்பதுதான் எனது துஆவும் விருப்பமுமாகும்."

'மௌலான' அவர்கள் மிகவும் பெருமையுடன் எடுத்துக் காட்டியிருக்கும் கவிஞ்சர் அல்லாமா இக்பால் ஆங்கிலேய ஆட்சிபற்றி என்ன கூறியிருக்கிறார் என்று பாருங்கள்.

விக்டோரியா மகாராணியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அவர் இவ்வாறு கவிதை எழுதியுள்ளார். "மகாராணியின் சடலம் பெருமதிப்புடன் செல்கிறது. நான் பறந்து சென்று அந்த சடலம் செல்லும் வழியில் என்னையே நான் அர்ப்பணம் செய்ய நாடுகிறேன். இவர் மரணமடைந்த இந்த மாதத்திற்கு நான் முஹர்ரம் என்று பெயர் சூட்டுகிறேன். இன்று பெருநாளாக இருக்கிறது. ( ஒரு பெருநாளன்றுதான் அரசி மரணமடைந்தார்.) ஆனால் இந்த பெருநாள் வருவதைவிட மரணம் வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். இந்திய துணைக்கண்டமே! உனது மீதிருந்த இறைவனுடைய நிழல் மறைந்துவிட்டது. மகாராணியே! உங்களது மறைவால் இறைவனுடைய சிங்காசனமே நடுங்கிக்கொண்டிருக்கிறது.

பாருங்கள் இன்று அஹ்மதியா ஜமாத்தைப் பற்றி குற்றம் சாட்டுகின்ற மௌலானாவின் முன்னோர்களும், தலைவர்களும் ஆங்கிலேய அரசாங்கத்திடம் வைத்திருந்த நம்பிக்கையின் ஒருசில உதாரணங்கள் மட்டும்தான் இங்கு தரப்பட்டுள்ளன. 

அஹ்மதியா ஜமாஅத் ஆங்கிலேய அரசாங்கத்திடமிருந்து சலுகைகள் பல பெற்றுக் கொண்டிருந்தது என்று குற்றம் சாட்டும் மௌலானாவினால் இதனை நிரூபித்துக் காட்டவே முடியாது.

வாக்க்களிக்கப்பட்ட மசீஹின் இரண்டாவது கலீபாவாகிய ஹஸ்ரத் மிர்ஸா பசீருத்தீன் மஹ்மூத் அஹ்மத் அவர்கள் அஹ்மதியா ஜமாஅத் பிரிட்டிஷ் அரசிடமிருந்து ஒரு சல்லிக்காசாவது பெற்றதாக எவராலும் நிரூபித்துக் காட்ட முடியுமா என்று சவால் விட்டார்கள் இந்த சவாலை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எவராலும் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

இறுதிநாள் வரை எந்த மௌலானாவும் எந்தக் கூட்டத்தினரும் இதனை நிரூபிக்க முடியாது?

ஆனால் மௌலானாவின் முதியோர்களும், முன்னோர்களும், அவர்களுடைய ஜமாத்துகளும் ஆங்கிலேய அரசிடமிருந்து என்னென்ன சலுகைகள், நன்கொடைகள் பெற்றார்கள் என்பதற்கான சான்றுகள் எம்மிடம் உள்ளன.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.