அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Sep 21, 2014

அல்லாஹ் என்ற சொல்!


கிறிஸ்த்துவர்களில் பலரும் முஸ்லிம்களில் சிலரும் இஸ்லாத்தின் உண்மை நிலையை அறியாது பல்வேறு கருத்துக்களை பாமர மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். அதில் ஒன்று “அல்லாஹ்” என்ற சொல்லுக்கு பொருள் உண்டு என்று கூறுவதாகும். இவர்கள் கூறும் வாதம், “அல்லாஹ்” என்ற சொல் “இலாஹ்” பதத்திலிருந்து வந்த சொல் ஆகும். இதன் பொருள் “இறைவன்” என்பதாகும் என்பதே இவர்களின் ஆதாரமற்ற வாதமாக இருக்கின்றது. “அல்லாஹ்” என்ற சொல்லுக்கு பொருள் உண்டா? என்பதையும், இந்த சொல் வேறு சொல்லிலிருந்து உருவானதா இல்லையா? என்பதை நாம் கீழே விரிவாக காண்போம். 

அல்லாஹ் என்பது ஆதியும் அந்தமும் இல்லாதவனும் தானும் உயிருடன் இருந்து மற்றவர்களை உயிருடன் வைக்கின்றவனும், எஜமானனும், படைப்பாளனும், எல்லா படைப்பினங்களையும் படைத்து காத்தோம்புபவனாகிய ஏக இறைவனுக்குரிய பெயர் ஆகும். அல்லாஹ் என்பது இடுகுறிப்பு பெயராகும்; பண்பு பெயர் அன்று. படைத்து காத்தோம்புகின்ற, எல்லாவற்றிற்கும் எஜமானனாகிய இறைவனுக்கு அரபு மொழியை தவிர வேறு எந்த மொழியிலும் சொந்தமான தனிப் பெயர் காணப்படவில்லை. அரபியில் மட்டுமே அல்லாஹ் என்ற தனிப்பெயர், சொந்த பெயர் இறைவனுக்கென்று உள்ளது. அது ஒரே இறைவனுக்கு கூறப்படுகின்றது. அதுவும் பெயர் என்ற அளவில் கூறப்படுகிறது.

அல்லாஹ் என்ற சொல் ஜாமித் ஆகும். முஷ்தக் அல்ல. அதாவது, அல்லாஹ் என்ற சொல் வேறு எந்த சொல்லிலிருந்து உருவாகவுமில்லை. இதிலிருந்து வேறு எந்த சொல்லும் உருவாகவுமில்லை. அல்லாஹ் என்ற இச்சொல், “லாஹ”, “எலீஹு” என்பதிலிருந்து தோன்றியது எனச் சிலர் கூறுகின்றனர். அதன் பொருள் உயர்வு என்பதாகும். (பார்க்க: அக்ரப் அகராதி) ஆனால் இது சரியன்று. அல்லாஹ் என்பது லாஹ – யலூஹு என்பதிலிருந்து தோன்றியதாகும் என இன்னும் சிலர் கூறுகின்றனர். அதன் பொருள், பிரகாசித்தல் என்பதாகும். மேலும் “லாஹல்லாஹுல் கல்க” என்றால், அல்லாஹ் படைப்பினங்களை படைத்தான் என்று பொருள். ஆனால் லிசானுல் அரபி அகராதியில் எழுதப்பட்டிருப்பது என்னவென்றால், இந்த பொருள் சரியன்று. எனவே அல்லாஹ் என்ற சொல் லாஹ, யலூஹு என்பதிலிருந்து வந்தது என்ற அனுமானம் முற்றிலும் தவறாகும்.
 
சிலர் இதனை வேற்று மொழியாக குறிப்பிட்டு, இது சுர்யாணி மொழிச் சொல்லாகிய “லாஹா” என்பதிலிருந்து தோன்றியது எனக் கூறுகின்றனர். ஆனால் இதுவும் முழுக்க முழுக்க தவறாகும். இன்னும் சொல்லப் போனால் சுர்யாணி மொழியைப் பற்றிய அறியாமையின் விளைவாகும். ஏனெனில், அரபி சொல்லாகிய இலாஹ என்பது ஆரம்ப வேர்ச் சொல்லுக்கு மிகவும் அண்மையில் இருக்கிறது என்பது ஐரோப்பிய ஆய்வாளர்களின் கருத்தாகும்.
 

ஜெர்மன் அறிஞராகிய Noldeke எழுதுகிறார்: “அரபியிலுள்ள “இலாஹ்” என்ற சொல்லும், எபிரேய மொழியிலுள்ள “யேல்” என்ற சொல்லும் பண்டைக் காலத்திலிருந்து தொடர்ந்து உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. எபிரேய மொழி, அரபு மொழியிலிருந்து பிரிவதற்கும் முன்னரே இந்த சொல் சாமி மொழியில் உபயோகிக்கப்பட்டு வந்திருக்கிறது”. (என்ஸைக்லோ பீடியா பப்ளிகா தொகுதி 3 Names என்ற தலைப்பின் கீழ்)
 
அல்லாஹ் என்ற சொல் இஸ்மே முஷ்தக் ஆகும் என்பது சிலரது கருத்து என்பதை மேலே கூறியிருந்தோம்......(இன்னும் சொல்லப்போனால்) அல்லாஹ் என்பது “அலம்” வகையை சார்ந்தது, முஷ்தக் (பிற சொல்லிலிருந்து தோன்றியது) அல்ல என சீபவிய்யா, கலீல் ஆகியோர் கூறுகின்றனர். (பார்க்க தஃப்சீர் கபீர் தொகுதி 1 பக்கம் 156)
 
பல்வேறு அறிஞர்கள் இதற்குக் கொடுத்த சான்று என்னவென்றால், இந்த சொல் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்காகவும் உபயோகிக்கப்படவில்லை. அரபு நாட்டிலுள்ள இணை வைப்பவர்களும் வேறு எந்த கடவுளுக்காகவும் (அல்லாஹ் என்ற) இந்த சொல்லைக் கூறியதில்லை. “அல்” மற்றும் “இலாஹ்” என்பதிலிருந்தோ “அல்” மற்றும் “லாஹ” என்பதிலிருந்தோ (அல்லாஹ் என்ற) இந்த சொல் உருவாகியிருக்குமானால் இந்த சொற்கள் உபயோகிக்கப்படுவது போன்று அல்லாஹ் என்ற சொல்லும் உபயோகிக்கப்பட்டிருக்கும். ஆனால் அரபிகள் அல்லாஹ் என்ற சொல்லை அப்படி ஒரு போதும் உபயோகப்படுத்தியதில்லை.
 
மற்ற இறை பண்புகள் எல்லாம் அல்லாஹ்வுக்கு பண்புப் பெயராகவே உபயோகிக்கப்படுகின்றன. ஆனால் அல்லாஹ் என்ற சொல் எந்தப் பெயர்ச் சொல்லுக்கும் பண்புப் பெயராக உபயோகிக்கப்படுவதில்லை. (அல்லாஹ் என்ற) அச்சொல் ‘அலம்’ (Proper noun – இயற்பெயர்) என்பதற்கு இதுவே அடையாளம் ஆகும்.
 
சிலர் சூரா இப்ராஹீமில், அல் அசீஸில் ஹமீதில்லாஹி” என்று வருகிறது (14:3) இதில் அல்லாஹ் என்பது பண்புப் பெயராக உபயோகிக்கப்பட்டுள்ளது எனக் கூறுவார்கள். ஆனால் அது சரியல்ல. இங்கு பண்புப் பெயராக உபயோகிக்கப்படவில்லை அதஃப் பயான் என்ற வகையில் உபயோகிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் ‘அலமை’ (இயற்பெயர்) உபயோகிப்பது ஆகுமானதாகும். உதாரணமாக, ஹாதிஹித் தாருல் மில்குன் லில் ஆலிமில் ஃபாழிலி ஸைதின் (இந்த வீடு அறிஞரும் கற்றுத் தேர்ந்தவருமாகிய மன்னர் ஸைதின் வீடாகும்) அந்த மாதிரியான இடங்களில் சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காக ‘அலம்’ (இயற்பெயர்) உபயோகிக்கப்படுகிறது. வசனத்தின் பொருள், அசீஸ், ஹமீத் என்று நாம் சொல்வதன் கருத்து நமது அல்லாஹ் என்பதாகும்.
 
ஹுவல்லாஹு ஃபிஸ்ஸமாவாத்தி வல் அர்ல் (அவனே வானங்களிலும், பூமியிலுமுள்ள அல்லாஹ் ஆவான் (6:4)) என்ற வசனத்திலிருந்து அல்லாஹ் என்பது அலம் (இயற்பெயர்) வகையை சார்ந்தது என நிரூபணமாகிறது என்று சிலர் கூறுகின்றார்கள்.
 
அதற்குரிய விடை என்னவென்றால், ஒரு பெயர்ச்சொல் தனது பண்புடன் புகழ் பெற்றதாகி விட்டால், பிறகு அந்தப் பெயர்ச் சொல்லும் பண்புப் பெயராக பயன்படுத்தப்படத் தொடங்கி விடுகின்றது. உதாரணமாக, “ஹாதிம்” தாராள குணத்திற்க்காகவும், ருஷ்தம்” தைரியத்தைக் குறிப்பிடுவதற்காகவும் புகழ் பெற்றுவிட்டது. இப்போது தாராள குணம் கொண்டவருக்காக ஹாதிம் என்ற சொல்லும், தைரியம் கொண்டவருக்காக ருஷ்தம் என்ற சொல்லும் பயன்படுதப்படுகின்றது. உதாரணமாக, இன்னவர் ருஷ்தம் ஆவார், இன்னவர் ஹாதிம் ஆவார் எனக் கூறுகிறார்கள்.
 
அவ்வாறே அல்லாஹ் என்ற சொல், தான் பண்புகளுடன் முழுமை கொண்டவனுக்காகக் குறிப்பிடப்பட ஆரம்பித்துவிட்டது. எனவே, வானங்களிலும், பூமியிலுமுள்ள அல்லாஹ் அவனே என்று கூறுவது ஆகுமானதாகி விட்டது. அதாவது எல்லா பண்புகளிலும் முழுமை பெற்ற அல்லாஹ் என்ற பெயர் கொண்டவன் ஒருவனே. அவனுடைய இந்தப் பெயரில் வேறு எவரும் இணையில்லை; அவனுடைய செயலிலும் எவரும் இணையில்லை.
 
அல்லாஹ் என்ற இந்தச் சொல் ‘ஃபஃஆலுன்’ என்ற எடையில் வந்துள்ளது. எனவே இதில் தன்வீன் (அதாவது அல்லாஹுன் என) வர வேண்டும். ஆனால் எழுதும் போது தன்வீன் வரவில்லை எனக் கூறுகின்றார்கள். எனவே அல்லாஹ் என்பதிலுள்ள ‘அல்’ என்பது அதன் மூல வடிவத்திலுள்ள சொல் அல்ல; மாறாக ‘அல்’ என்பது இங்கு சிறப்பைக் குறிக்க வந்துள்ளது. எனவே இச்சொல் இரு சொற்களால் இணைந்ததாகும் என்றும் சிலர் கூறுகின்றனர்.
 
இதற்குரிய விடை என்னவென்றால், எல்லா விதிகளிலும் விதிவிலக்கு உண்டு. அல்லாஹ் என்ற சொல்லில் தன்வீன் (தோ பேஷ் - அதாவது அல்லாஹுன் என) வராததும் ஒரு விதிவிலக்கான நிலையாகும். இதற்குரிய சான்று, ‘அல்’ என்பதற்கு முன்னால் “ஹர்ஃபே நிதா” (விளிச் சொல்) வந்தால் அதற்கு பிறகு ‘அய்யுஹா’ என்ற சொல் அதிகமாக்கி கூறப்படும். உதாரணமாக, “அன்னாசு” (இதில் ‘அல்’ உள்ளது) என்பதை அழைக்க வேண்டுமென்றால் “யா அய்யுஹன்னாசு” (மக்களே!) என்று கூறுவார்கள். ஆனால் “யா அய்யுஹல்லாஹு” என்று கூறப்படாது. இதுவே அல்லாஹ் என்பதிலுள்ள ‘அல்’ அதில் உள்ள அசல் சொல்லாகும். விளிவேற்றுமையைக் குறிக்கும் ‘அல்’ அல்ல என்பதற்கு சான்றாகும்.
 
இன்னும் சிலர் அல்லாஹ் என்ற சொல்லிலுள்ள ஹம்ஸா என்ற எழுத்து வஸ்லீ வகையை சார்ந்தது. இதிலிருந்து இது அஸலீ ஹம்ஸா அல்ல, சாயித் (மிகுதியான ஒரு சொல்) ஆகும் எனக் கூறுகிறார்கள். அல்லாஹ் என்பதற்கு முன்னால் ‘லாம்’ என்ற எழுத்து வரும்போது அதாவது “லில்லாஹ்” என்று எழுதும் போதும் அல்லாஹ் என்பதிலுள்ள ‘அலிஃப்’ நீங்கி விடுகிறது. இது அஸலீ ஹம்ஸா (மூலச் சொல்லில் உள்ள ஹம்ஸா) அல்ல என்பதற்கு இதுவும் சான்றாகும் எனக் கூறுகிறார்கள். 

இதற்குரிய விடையாவது, ஹம்ஸா (இன்னொரு சொல்லுடன் இணையும் போது) நீங்கி விடுதல், அந்த ஹம்ஸா மிகுதியானது என்பதற்கு அடையாளமன்று. உதாரணமாக இஸ்ம், இப்ன் போன்ற சொற்களில் உள்ள ஹம்ஸா மிகுதியான எழுத்து அல்ல, மாறாக இன்னொரு எழுத்துக்கு பதிலாக வந்தவையாகும். ஆனால் அதுவும் இன்னொரு சொல்லுடன் இணையும் போது நீங்கி விடுகிறது. பிஸ்மில்லாஹ் என்பதில் ‘இஸ்ம்’ என்ற சொல்லில் உள்ள ஹம்ஸா (அதாவது பி + இஸ்மில்லாஹ் = பிஸ்மில்லாஹ் – என்பதில் ‘இ’ என்பது) நீங்கிவிட்டது. ஆனால் அந்த ஹம்ஸா மிகுதியாக வந்ததல்ல; மாறி வந்ததாகும். எனவே, ஒரு ஹம்ஸா வஸ்லீ வகையை சார்ந்திருப்பதோ அல்லது இணைக்கும் போது நீங்கி விடுவதோ அந்த ஹம்ஸா மிகுதியானது என்பதற்கு ஆதாரமன்று. 

சுருக்கமாக, இஸ்லாமிய காலத்திலும் இஸ்லாம் தோன்றுவதற்கு முந்தைய காலத்திலும் அல்லாஹ் என்ற சொல் பயன்படுத்தப்பட்ட விதத்திலிருந்து அல்லாஹ் என்ற அந்தச் சொல் ‘அலம்’ (இடுகுறிப்பெயர்) மற்றும் முஷ்தக் அல்லாதது (அதாவது அச்சொல் எதிலிருந்தும் பிறந்தது அல்ல; அச்சொல்லிலிருந்து வேறு சொற்கள் தோன்றவும் செய்யாது) என்பதை குறிப்பிடுகின்றது. இதன் சில சிறப்புத்தன்மைகளின் காரணமாக அது முஷ்தக் வகையை சார்ந்தது என்பதற்கு எடுத்து வைக்கப்பட்ட சான்றுகள் சரியானவை அல்ல. இன்னும் சொல்லப்போனால், மற்ற உதாரணங்களின் மூலமாக அவை தவறு என நிரூபனமாகிறது. (சூரா பாத்திஹா விளக்கவுரையிலிருந்து எடுக்கப்பட்டது.)
Read more »