அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Nov 5, 2011

சப்மிட்டர்ஸ் அஸோஸியேஷனின் கூற்றுக்கு பதில் (அஹ்லே குர்ஆன்)

சென்னை சப்மிட்டர்ஸ் அஸோஸியேஷனின் நிர்வாகி அவர்களுக்கு நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் உறுப்பினர் முஹம்மது அலி எழுதிய கடிதம் அஸ்ஸலாமு அலைக்கும்,வரமத்துல்லாஹி வபரக்காத்துஹு.


நான் 2010 ஏப்ரல் மாத இறுதியில் சென்னைக்கு வந்திருந்தேன். அது சமயம் எண்கள் அஹ்மதி சகோதரர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர், சில தினங்களுக்கு முன் தாங்கள் எண்கள் ஜமாஅத் சகோதரர்களை கருத்து பரிமாற்றத்திற்கு அழைத்ததால் சில சகோதரர்களுடன் தங்களை சந்தித்து பேசிய விபரங்களை என்னிடம் கூறினார்கள்.


தாங்கள் தங்கள் தலைவர், ரஷாது கலீபா கம்ப்யூட்டர் மூலம் திருக்குர்ஆனை ஆய்வு செய்து அத்தௌபா என்ற அத்தியாயம் 128 வது வசனம் இடைச் செருகல் என்று கண்டுபிடித்ததாக கூறியிருக்கிறீர்கள். மேலும் அந்த வசனத்தில் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களை ரவூபுர் ரஹீம் என்று கூறப்பட்டிருக்கிறது. ரவூபுர் ரஹீம் என்ற பண்பு அல்லாஹ்விற்கு மட்டும் உரியது. அதை ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களுக்கு இருப்பதாக அந்த வசனத்தில் வருவதால் அது ஷிர்க் என்ற இணை வைத்தல் ஆகும். எனவே அந்த வசனம் இடைச்செருகல்தான் என்றும் கூறியிருக்கிறீர்கள். தாங்கள் இவ்வாறு கூறியதாக எனது சகோதரர் என்னிடம் கூறியதும் நான் மிகப் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். நான் மட்டுமல்ல, உலகில் உள்ள எந்த முஸ்லிம் சகோதரரும் அதிர்ச்சி அடைவதுடன் மனவருத்ததிற்கும் உள்ளாவார் என்பது உறுதி.


திருக்குரானில் இருந்து ஒரு கேள்வி எழுந்தால் திருக்குரானிலிருந்தே அதற்கான பதில் கிடைக்கும் என்பது அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்திற்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது. அதே போன்று எங்கள் சகோதரர் அதிலிருந்து அழகான ஒரு வசனத்தை உங்களிடம் எடுத்துக் கூறினார். இன்னா நஹ்னு நஸ்ஸல்னத் திக்ர வ இன்னா லஹு லஹாபிழூன் (15:10) நாமே இந்த குர்ஆனை இறக்கியிருக்கிறோம். நிச்சயமாக நாமே இதை பாதுகாத்து வருவோம்.


இந்த இறைவசனத்தின்படி இறுதிகாலம் வரை திருக்குரானை பாதுகாத்து வருவதாக அல்லாஹ் கூறியிருப்பதால் இதில் இடைச்செருகல் இப்போதும் கிடையாது. இனி எப்போதும் எவராலும் நுழைக்கவும் முடியாது ஏனென்றால் திருக்குர்ஆன் அல்லாஹ்வின் பாதுகாப்பில் இருப்பதால் அதனுடைய பரிசுத்ததன்மைக்கும், மகிமைக்கும் இறுதிகாலம் வரை பொறுப்பு ஏற்று அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். என்று எங்கள் சகோதரர் கூறியிருக்கிறார். தாங்கள் அந்த வசனத்தை ஏற்றுக் கொண்டாலும் அவருடைய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் நீங்கள் கூறிய விளக்கம், திருக்குர்ஆன் அல்லாஹ் இறக்கிய இறுதி வேதம் என்றும் இதற்குப் பின் வேறு மார்க்கமும் இல்லை. வேறு வேத நூலும் இல்லை. திருக்குர்ஆன் இறுதி காலம் வரை ஜீவித்திருக்கும் வேத நூல் ஆகும். ஆகவே இந்த குர்ஆனை இறுதி காலம் வரை நாமே பாதுகாத்து வருவோம் என்று நாம் அறிந்து கொள்வதற்காக இந்த இறை வசனத்தை இறக்கியிருக்கின்றான் என்று கூறியிருக்கிறீர்கள்.


அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தின் உறுதியான நம்பிக்கை யாதெனின்,ஹஸ்ரத் கத்தமுன்னபியீன் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் இறுதி காலம் வரை இறங்கிய இறை வசனங்களால் அவர்களின் காலத்திலேயே பரிபூரணமாக்கப்பட்ட பரிசுத்த வேதநூலாகிய திருக்குர்ஆனுக்கும், இன்று நம்முடைய நடைமுறையில் இருக்கும் திருக்குரானுக்கும் ஒரு மாற்றமும் இல்லை, அதாவது ஒரு எழுத்துக்கூட, ஒரு புள்ளி கூட அதில் சேர்க்கப்படவில்லை: எடுக்கப்படவுமில்லை. அல்லாஹ்வின் வார்த்தைப்பாடாகிய (15:10) இறைவசனத்தின் ஒளியில் திருக்குரானின் இடைச்செருகல் இல்லவேயில்லை என்று நாங்கள் உறுதியாக நம்பிக்கை வைத்துள்ளோம்.


அல்லாஹ் கூறுகிறான்: "நிச்சயமாக நாம் குரானை(மனிதர்கள்) நினைவு கூர்ந்து அறிவுரை பெரும் பொருட்டு எளிதாக ஆக்கியுள்ளோம். எனவே அறிவுரையினைப் பெறுபவர் எவரேனும் உண்டா? (54:18)


மேற்கண்ட வசனத்தைப் பாருங்கள், மனிதர்கள் சிந்தித்து ஆராய்ந்து நல அறிவுரியாயினைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறுகிறது. ஆகவே நீங்கள் தக்வா என்னும் இறை அச்சத்துடன் (15:10) வசனத்தை சிந்தித்து ஆராய்ந்து பாருங்கள். அப்பொழுது குர்ஆனுடைய மகிமையும்,பரிசுத்தத்தன்மையும் எத்தனை அற்புதமானது என்பதைப் புரிந்து கொள்வீர்கள். மேலும் திருக்குரானில் இடைச்செருகல் இல்லை என்பதையும் ஏற்றுக்கொள்வீர்கள். இறைவனுடைய படைப்பில் சிந்திக்கக்கூடிய தகுதியைப் பெற்றிருப்பது மனிதர்கள் மட்டுமே,மனிதர்கள் உருவாக்கிய எந்திரமகிய கம்ப்யூட்டரால் நிச்சயமாக சிந்திக்கமுடியாது என்பதை நியாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். சுமார்1400 வருடத்திற்கு மேலாக திருக்குர்ஆன் அத்-தௌபா அத்தியாயத்தின்128 வது வசனம் நிரந்தரமாக இருந்து வருகிறது. ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் காலத்திற்கு பிறகு பல்லாயிரக்கணக்கான இறைநேசர்கள்,அல்லாஹ்வுடன் தொடர்புகொண்ட வலிமார்கள் தோன்றியிருக்கிறார்கள். அவர்களில் எவரும் இந்த வசனத்தை இடைச் செருகல் என்று கூறவில்லை. ஆனால் தங்களுடைய தலைவர் கம்ப்யூட்டர் மூலம் இந்த 9:128 வசனம் இடைச் செருகல் என்று கண்டுபிடித்துள்ளார் என கூறுகிறீர்கள்.


எனவே இப்போது உங்கள் முன் ஒரு கேள்வியை வைக்கிறேன். திருக்குர்ஆன் 15:30 இல் உள்ள, நிச்சயமாக திருக்குரானை நாமே பாதுகாத்து வருவோம் என்ற வார்த்தைப்பாட்டின்படி இடைச்செருகல் ஏற்படாதபடி திருக்குரானின் மகத்துவத்தை அதனுடைய புனித தன்மையை அல்லாஹ் பாதுகாத்து வருகிறான் என்று நம்புகிறீர்களா?நீங்கள் குர்ஆன் 15:18 ஆயத்தின்படி சிந்தித்து ஆராய்ந்து திருக்குரானின் மகத்துவம், புனிதத் தன்மைக்கு இழிவு ஏற்படாத நல்ல முடிவுக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.


அடுத்து ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் பண்பாகிய ரவூபுர் ரஹீம் என்று கூறப்பட்டிருப்பது ஷிர்க் என்னும் இணைவைத்தல் ஆகும். எனவே, இந்த வசனம் இடைச்செருகல் என்று கூறியிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் படைப்புகளில் மனிதானைப் போன்ற சிறந்த படைப்பு வேறு இல்லை. "லகது ஹலக்னல் இன்ஸான பீ அஹ்ஸனி தக்வீம் மனிதனை நாம் சிறந்த முறையில் படைத்துள்ளோம் என்று அல்லாஹ் கூறியிருக்கிறான். (95:5)


அதைப் பற்றி சிறிது ஆராய்ந்து பார்க்கலாம் (ஹதீது குத்ஸியாக இவ்வாறு வருகிறது) ஹஸ்ரத் முஹம்மது நபி(ஸல்)அவர்களிடம் அல்லாஹ் கூறுகிறான்: " நான் மறைவானப் புதையல் போன்று இருந்தேன், அதற்காக நான் மனிதனைப் படைத்தேன்". (மிஷ்காத்) மேலும் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் தங்களின் உம்மத்திற்கு கட்டளையாகக் கூறுகிறார்கள்.


"நீங்கள் அல்லாஹ்வின் அழகிய ஸிபத் என்னும் நற்பண்புகளை ஏற்று நடக்க வேண்டும்." (மிஷ்காத்). நற்பண்புகள் பற்றி நாம் அறிந்து அதனை நாம் ஏற்று நடக்க வேண்டும்.


திருக்குரானில் அல்லாஹ் தன்னுடைய சுமார் 100 சிபத்துக்கள் பற்றி அறிவித்திருக்கின்றான். அந்த பண்புகள் சிறப்பு பண்புகள் என்றும்,நற்பண்புகள் என்றும் இரண்டு விதமாக உள்ளன. இதில் நற்பண்புகள் என்ற அழகிய பண்புகளை ஏற்று நடந்து இறை நேசர்கள் ஆகுவதற்கு தகுதியனவர்களாக மனிதர்களை அல்லாஹ் படைத்திருக்கின்றான். ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அழகிய பண்புகள் அனைத்தையும் முழுமையாக ஏற்று மனித குளம் அனைத்திற்கும் முன் மாதிரியாக நடந்து காட்டியிருப்பதால், அல்லாஹ் அவர்களை ரவூபுர் ரஹீம் என்று மேன்மைப்படுத்தி கூறியிருக்கிறான். ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உம்மத்தியாகிய நாமும் அந்த நற்பண்புகளை ஏற்று நடந்து உண்மையான நம்பிக்கையாளர்களாக, உண்மையான நல்லடியார்களாக ஆகுவதற்கு முயற்சி செய்யவேண்டும். மனிதர்கள் அந்த நற்பண்புகளை எவ்வளவு முழுமையாக ஏற்று நடந்தாலும் அது எல்லைக்கு உட்பட்டதே ஆகும். ஆனால் அல்லாஹ்விடம் அந்த பண்புகள் எல்லையற்றதாகும் என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


அடுத்து அல்லாஹ்வின் சிறப்புப் பண்புகளை அல்லது வேறு படைப்பினங்களுக்கோ இருப்பதாக கூறுவது 'ஷிர்க்' என்னும் இணைவைத்தல் ஆகும். உதாரணமாக, அல்லாஹ் ஹையுல் கையூம். இதில் அல்ஹை, 'அல்-கையூம்' என்ற சிறப்புப் பண்புகள் இருக்கின்றன. அல்ஹய்யு என்றால் அல்லாஹ் என்றென்றும் ஜீவித்திருப்பவன். அல் கய்யூம் என்றால் மாற்றமே இல்லாமல் நிலைத்திருப்பவன். இந்த அல்ஹையும் என்ற சிபத்துகளை எவருக்கு கொடுத்தாலும் நிச்சயமாக அது ஷிர்க் ஆகிவிடும். அடுத்து அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவன் என்ற அல் - அலீம் என்ற பண்பையும் எவருக்கு கொடுத்தாலும் அது ஷிர்க் ஆகும். இதைப் போன்ற சிறப்புப் பண்புகள் பல உள்ளன. அவற்றை அல்லாஹ்வை தவிர எவருக்கு கொடுத்தாலும் அது இணை வைத்தல் ஆகிவிடும். அடுத்து திருக்குரானில் ஒரு கேள்வி எழுந்தால் அதற்கு திருக்குரானில் இருந்தே பதில் கிடைக்கும் என்று கூறியிருக்கிறேன். அதற்க்கான சில எடுத்துக் காட்டுகளை கூறுகிறேன். அல்லாஹ்வின் நற்பண்புகளில் ஒன்று அல்-ஹலீம், இதன் பொருள் அல்லாஹ் இரக்கமானவன், மென்மையானவன்,அமைதியானவன் என்பதாகும். அத்-தௌபா அதிகாரத்தின் 114 வது வசனத்தைப் பாருங்கள். அதில் ஹஸ்ரத் இப்ராஹீம்(அலை) அவர்களை ஹலீம் என்ற பண்பு உள்ளவராக இருக்கிறார் என்று அல்லாஹ் கூறுகிறான். (9:114) தங்களுடைய கூற்றின்படி இந்த வசனத்தை ஷிர்க் என்று கூறி நீக்கிவிடுவீர்களா? (நவூதுபில்லாஹ் மின்ஹா)


அடுத்து, அல்லாஹ் அல் -அஹ்ப்வு என்ற பண்பு உடையவன், அடியார்கள் எவ்வளவு பாவம் செய்திருந்தாலும், திருந்தி, மனம் உருகி மன்னிப்பை வேண்டினால், அல்லாஹ் இந்த அஹ்ப்வு என்ற பண்பின் மூலம் மன்னிக்கின்றான். நீங்கள் அல்-அஹ்ராப் 200 வது வசனத்தைப் பாருங்கள்.


அதில் ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் அல்லாஹ் கூறுகிறான். (நபியே நீர்) அஹ்ப்வு என்ற (சிபத்தாகிய) மன்னிப்பை கடைபிடிப்பீராக என்று கூறப்பட்டிருப்பதை கவனியுங்கள். (7:200) இந்த வசனத்தை ஷிர்க் என்று கூறுவீர்களா? மேலும் அஸ்-ஸபூர், அதாவது அல்லாஹ் பொறுமையாளன். நம்பிக்கையலர்களுக்கான ஒரு இறை கட்டளையாக பொறுமையையும், தொழுகையையும் மேற்கொண்டு (அல்லாஹாவிடம்) உதவி தேடுங்கள் (2:46) என்று வருகிறது. அல்லாஹ்வின் பண்பாகிய பொறுமையை ஏற்று நடக்காதவன் சிறந்த மனிதனாக, ஸாலிஹீனாக இருக்க முடியுமா? மேலும் அல்லாஹ்வின் நற்பண்பில் இருக்க முடியுமா?மேலும் அல்லாஹ்வின் நற்பண்பில் ஒன்று அல்-அத்ல் என்பதாகும். இதன் பொருள் அல்லாஹ் நீதியானவன். திருக்குரானில் சில இடங்களில் இந்த அத்ல் என்ற பண்பை நம்பிக்கையாளர்கள் ஏற்று நடக்க வேண்டும் என்ற கட்டளை இருக்கிறது.


இவ்வாறு இன்னும் பல ஆதாரங்கள் திருக்குரானில் எடுத்துக் காட்டலாம். ஆனால் மேலே குறிப்பிட்ட சான்றுகள் உங்கள் கருத்துக்களை மாற்றுவதற்கு போதுமானவையாக இருக்கும் என்ற அபிப்ராயத்துடன் எனது நிருபத்தை நிறைவு செய்கிறேன். மேலும் உங்களிடம் பணிவுடன் ஒரு செய்தியைக் கூறுகிறேன். அதாவது நபி (ஸல்) அவர்கள் மூலம் நமக்கு கிடைத்த இஸ்லாம் மார்கத்தின் மகிமை, புனிதத் தன்மை அழகு பற்றி தெளிவாக அறிந்து கொள்ள அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்துடன் தொடர்புகொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். வஸ்ஸலாம் முஹம்மது அலி, சங்கரன் கோயில்

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.