அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jun 8, 2014

ஜின்கள் யார்?


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 154 இல், மனிதராக மாற்றித்தான் அனுப்புவான் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்: 

தங்களைப் போலவே உண்டு பருகி குடும்பம் நடத்தும் ஒருவரை இறைவனின் தூதர் என்று நம்புவது மனிதர்களுக்குக் கஷ்டமாக இருந்தது. எனவே, வானவர்களைத் தூதராக அனுப்ப வேண்டியதுதானே? எனக் கேட்டனர். 

வேதத்தைக் கொண்டு வந்து மக்களிடம் ஒப்படைத்துச் செல்வதாக இருந்தால் வானவரை அனுப்பலாம். வேதத்திற்கு விளக்கம் கூறி நடைமுறைப்படுத்திக் காட்டத்தான் தூதர்கள் அனுப்பப்பட்டனர். 

எனவே, மனிதர்களுக்கு மனிதர்களைத் தான் தூதராக அனுப்ப முடியும். வானவரை அனுப்புவதாக வைத்துக் கொண்டாலும் அவரையும் மனிதராக மாற்றித்தான் அனுப்புவேன் என்ற இறைவாக்கிலிருந்து (திருக்குர்ஆன் 6:9, 17:95) இதை அறியலாம். 

நம் விளக்கம்: 

1) வானவர்கள் வேறு, மனிதர்கள் வேறு. வானவர்கள் ஒளியாலும், மனிதர்கள் மண்ணினாலும் படைக்கப்பட்டவர்கள். எனவே வேதத்துக்கு விளக்கம் கூறி நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும் என்றால் மனிதனுக்கு மனிதன்தான் தூதராக வர வேண்டும். வானவர்கள் வரமுடியாது. அப்படியே வானவர்கள் வருவதாக இருந்தாலும் அவ்வானவரையும் மனிதராக மாற்றித்தான் இறைவன் அனுப்புவான். இதை நன்கு நெஞ்சில் நிறுத்துங்கள். 

அப்படி என்றால் ஜின் என்பது நெருப்பினால் படைக்கப்பட்டது. மனிதனோ மண்ணால் படைக்கப்பட்டவன். ஜின்னுக்கு வேதத்தின் விளக்கம் கூறி நடைமுறைப்படுத்த மனிதன் வர முடியாது. அப்படியே மனிதன் ஜின் இனத்துக்குத் தூதராக அனுப்பபட்டாலும் அவனை ஜின்னாக மாற்றித்தான் அல்லாஹ் அனுப்புவான் என்பது உறுதியாகிறது. இதிலிருந்து ஜின்னுக்கு அவர் தூதராக அனுப்பப்பட்டார். இவர் நபியாக அனுப்பப்பட்டார் என்று மனித நபிமார்களைப் பற்றி நம்புவது தவறு என்று விளங்கவில்லையா? அப்படியே மனிதர்கள் தூதராக ஜின்னுக்கு அனுப்புவதாக இருந்தாலும் அந்தத் தூதர்கள் மனிதராக அனுப்பப்பட மாட்டார்கள் என்பதும், அவர்கள் ஜின்களாக மாற்றித்தான் அனுப்பப்படுவார்கள் என்பதும் தெளிவாகிறது. அவ்வாறு எனின், ஜின்னுக்குத் தூதராக அனுப்பப்பட்ட ஜின்தூதர் யார்? அவ்வாறு யாரும் இல்லை என்றால், திருக்குர்ஆனைக் கேட்பதற்கு வந்த ஜின்கள், மனிதர்கள் என்பதும், அந்த மனிதர்கள் ஜின் எனும் பெயரால் அழைக்கப்பட்டனர் என்பதும் தெளிவாகிறது. 

அதாவது, புறக்கண்ணுக்கு சாதாரணமாகத் தெரியாதவற்றை ஜின் என திருக்குர்ஆனும் நபிமொழியும் அழைக்கிறது. பாம்புகள் மறைந்து வாழ்வதால் (27:11) திருக்குர்ஆன் பாம்புகளை ஜான்னுன் எனக் கூறுகிறது. மரங்களின் நெருக்கத்தால் கண்ணால் பார்க்கமுடியாதபடி மறைக்கப்பட்டிருப்பதால் சொர்க்கம் தோட்டம் ஆகியவை ஜன்னத் என்று அழைக்கப்படுகிறது. (2:26) அறிவு மறைக்கபப்பட்டவன் அதாவது பைத்தியம் ஜின் என அழைக்கப்படுகிறான். அவர்களின் தோழருக்கு எந்தப் பைத்தியமும் இல்லை. ஜன்னதுன் (7:185) என்று திருக்குர்ஆன் கூறுகிறது. 

திருக்குர்ஆன் 63:3 இல், போர் ஆயுதங்களால் தாக்கப்படுவதைத் தடுக்கும் போர்க் கருவியாகிய கேடயம் ஜின் என்று அழைப்படுகிறது. இருள் மூடி பார்க்க முடியாதவற்றை ஜனன எனத் திருக்குர்ஆன் கூறுகிறது. (6:77) 

வயிற்றில் உள்ள கரு அஜின்னதுன் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது (53:33) எலும்புகளும், விலங்குகளின் விட்டைகளும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய கிருமிகளால் தின்னப்படுவதால் அவற்றை ஜின்களின் உணவு என நபிமொழி கூறுகிறது. 

பிறருடைய கண்களில் படாமல் மறைவாக வந்து சிலர் திருக்குர்ஆனைக் கேட்டுச் சென்றனர் என்று அறிகிறோம். அவர்கள் யூதர்கள் என்தால்தான், மூஸாவுக்குப் பின்னர் வந்த ஒரு வேதத்தை (திருக்குர்ஆனைக்) காது கொடுத்து மறைந்திருந்து கேட்டதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது. (46:30, 72:2) 

திருக்குர்ஆன் மனிதர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அதனை மனிதத் தூதர் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களே வழிக்காட்டுவதற்குக் கொண்டு வந்தார்கள். எனவே அதனைக் கேட்டு தம் இனத்திடம் கொண்டு செல்லும் ஜின்களும் மனிதர்களே என்பது இதிலிருந்து தெளிவாகிறது. 

ஹஸ்ரத் சுலைமான் நபியின் அவையில் வேதத்தைப் பற்றிய ஞானம் பெற்ற ஒரு ஜின் இருந்திருக்கிறது (27:41) ஜின்களுக்கு வந்த வேதம் எது? ஜின்களுக்கு வந்த தூதர் யார்? அவர்கள் மனிதர்களே ஆவர். மனித இனத்தில் ஜின்கள் ஆற்றல் பெற்றவர்களாக இருந்துள்ளனர். அந்த ஆற்றல் மிக்கவர்களைக் கொண்டு (27:39-40) சுலைமான் நபி தன் பணிகளை விரைவாகச் செய்தார். கண்மூடித் திறப்பதற்குள் இருந்த இடத்திலிருந்து எழுவதற்குள் என்று கூறும் அளவில் மிக விரைவாக தன் பணிகளைச் செய்யும் ஆற்றல் பெற்றவர்கள். அதாவது சுலைமான் நபி ஓரிடத்தில் பாசறை அமைத்திருந்தால் அங்கு படைகள் தங்கி ஓய்வு எடுத்தது. அதிலிருந்து புறப்பட்டுச் செல்வதற்கு முன் சபா ராணியின் சிம்மாசனத்தை (ப் போல் ஒன்றைச் செய்து) கொண்டு வருவேன் என்றும், கண் மூடித்திறப்பதற்குள் என்றால், சுலைமான் நபி தூங்கி ஓய்வு எடுத்து புறப்பட்டுக் செல்வதற்குள் சபா ராணியின் சிம்மாசனத்தை(ப் போல் ஒன்றைச் செய்து) கொண்டு வருவேன் என்றும் கூறின. ஒரு நபியாகிய பேரரசர் அடுத்த நாட்டு ராணியின் சிம்மாசனத்தைத் தூக்கிக் கொண்டு வரச்சொல்வார் என்று நம்புவது எவ்வளவு அறிவீனம்? ஒரு நபியைப் பற்றி தரக் குறைவாக எண்ணுவதிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக. 

சாதரணமாக வெளி உலகத்துக்குத் தெரியாத, மக்கள் கண் முன் காணப்படாத மாபெரும் அறிஞர்கள், விஞ்ஞானிகள் ஜின்கள் எனப்பட்டனர். அவர்கள் விண்ணில் சென்று வானில் தம் ஆராய்ச்சியைச் செய்யக் கூடியவர்கள். வான் மண்டலத்தின் பாதுகாப்பு, கோள்களின் தன்மை ஆகியவை பற்றிக் கூறக்கூடியவர்கள் அவர்களை ஜின்கள் என்று திருக்குர்ஆன் (72:9-10) வசனங்கள் கூறுகின்றன. 

இறைத்தூதர்களுக்கு தீய மனிதர்களே எதிரிகளாக இருந்தனர் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. அவர்களுக்கு தீய ஜின்கள் இன்னார் இன்னார் பகைவர்களாக இருந்தனர். இந்த ஜின்கள் இப்படிப்பட்ட தீய செயல்களை நபிமார்களுக்கு எதிராகச் செய்தனர் என்று திருக்குர்ஆனும் நபிமொழியும் கூறவில்லை. மனிதர்களிலும் ஜின்களிலும் உள்ள செய்த்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம் என்று (6:113) வசனம் கூறுகிறது. எனவே இந்த ஜின் சைத்தான்கள் என்போர் மனிதர்களில் மறைந்திருந்து, பிற சாதாரண மனிதர்களைத் தூண்டி, நபிமார்களுக்கு எதிராக தீயவை செய்பவர்கள் ஆவர். அவர்கள் ஆற்றலும் அறிவும் மிக்கவர்கள் என்பதால் அவ்வாறு பிரித்துக் கூறப்படுகின்றனர். உதாரணமாக இன்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக ஒரு தீயவன் குறும் படம் எடுக்கிறான். ஒரு தீய சல்மான் ருஷ்டி தீய நூல் எழுதுகிறான் என்றால் இவர்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு இவர்களைத் தூண்டி இந்த இழி செயலைச் செய்யும் மறைவானவன் ஜின், சைத்தான் ஆவான். இவ்வாறு மனிதர்களும், ஜின்களும் என்று திருக்குர்ஆனில் வருமிடங்களில் மனிதர்கள் என்போர் சாதாரண மனிதர்கள் என்றும் ஜின்கள் என்போர் அசாதாரண மனிதர்கள் என்றும் அறிகிறோம். அதாவது தொழிலாளி முதலாளி, அஞ்ஞானி விஞ்ஞானி, ஆளப்படுபவன் ஆள்பவன், காட்சிக்கு எளியவன் (எளிதாகக் காணக் கூடியவன்) காட்சிக்கு அரியவன் (சாதாரணாமாக காண முடியாதவன்) ஆகியோர் ஆவர். 

இரண்டாவதாக, வேதத்துக்கு விளக்கம் கூறி நடைமுறைப்படுத்திக் காட்டத்தான் தூதர்கள் அனுப்பப்பட்டனர் என்பதாகும். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் முழுவதற்கும் விளக்கம் கூறிச் செல்லவில்லை. அன்னாரின் இறுதிப் பேருரையில் நான் கூறுபவற்றை எடுத்துச் சென்று பிறரிடம் கூறுங்கள். அவர்கள் உங்களை விட அதனை நன்கு அறிவார்கள் என்று கூறினார்கள். அதாவது அன்னார் கூறிய வேத வசனங்களுக்கும் நபி மொழிகளுக்கும் பிற்காலத்தில் உள்ளவர்கள் சிறந்த விளக்கத்தைக் கூறுவார்கள் என்பதாகும். ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒட்டகம், குதிரை, கோவேறு கழுதை போன்றவைகளே வாகனங்கள் ஆகும். பிற்காலத்தில் நாம் வாழும் காலத்தில் நபித்தோழர்கள் எண்ணிப் பார்த்திராத வாகனங்களாகிய இரயில், விமானம், பேருந்து போன்றவை வந்துள்ளன. இதனைத்தான் திருக்குர்ஆன் நீங்கள் அறியாத வாகனங்கள் என்று கூறுகிறது. (16:9) இந்த வசனம் நமக்குப் பொருந்தும். எதிர் காலத்தில் நாம் அறியாத வாகனங்கள் வரும். எனவே திருக்குர்ஆனுக்கும் நபிமொழிக்கும் விளக்கம் கூறி அதனை விளக்க அவர்களுக்குப் பின்னரும் தூதர் வருவார் என்பது இதிலிருந்து விளங்குகிறது. 

ஜின்கள் தனி படைப்பு என்றால், அவர்களுக்கு மனிதனைப் போல எல்லா உறுப்புகளும் இருக்கின்றன என்றால், அவர்கள் எங்கு வாழ்கின்றனர்? எவற்றை உண்ணுகின்றனர்? எவற்றை உடுக்கின்றனர்? இல்லற வாழ்க்கையை எவ்வாறு நடத்துகின்றனர்? அவர்கள் எந்த வேதத்தை படிக்கின்றனர்? அது என்ன மொழியில் உள்ளது? அதைக் கற்றுக் கொடுத்தது, விளக்கி தூய்மைப்படுத்தி, நல்வழிப்படுத்த வந்த ஜின் நபிமார்கள் யார் யார்? அவர்கள் எப்படி மரணிக்கிறார்கள்? மரணிக்கின்றவர்களை எரிக்கின்றார்களா? புதைக்கின்றார்களா? அப்படியே ஒரு குறிப்பிட்ட இடத்தில் விட்டு விடுகின்றார்களா? அவர்கள் மனித இனத்துடன் எப்படி வணிகம் போன்ற உறவுகளைக் கொண்டுள்ளனர்? இவ்வாறு எழும் எல்லாக் கேள்விகளுக்கும் ஆதார பூர்வமான பதில் உண்டா? 

எனவே புறக்கண்ணுக்குத் தெரியாத உயிர்களை ஜின்கள் என்று திருக்குர்ஆனும் நபிமொழியும் கூறுகின்றன. திருக்குர்ஆன் மனிதர்களும் ஜின்களும் என்று கூறுமிடங்களில் வரும் ஜின்கள், மனித இனத்தின் ஒரு பிரிவாகும். மக்களின் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து வாழ்ந்த மனிதர்களும் ஜின்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.