அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jun 2, 2014

நரகம் நிரந்தரமன்று, தற்காலிகமானதே!


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 173 இல் அல்லாஹ் நாடியதைத் தவிர... என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு கூறுகிறார்; 

நிரந்தரமான நரகம் என்று கூறிவிட்டு அல்லாஹ் நாடியதைத் தவிர என்று இங்கே (6:128, 11:107-108) கூறப்பட்டதற்கு பலரும் பலவிதமாக விளக்கம் கூறுகின்றனர். அல்லாஹ்வுக்கு எல்லா அதிகாரமும் உள்ளது என்ற நம்பிக்கை உடையவர்களுக்கு இதில் குழப்பம் ஏற்படத் தேவையில்லை. நிரந்தரமான நரகம் என்று தீர்மானிக்கும் அதிகாரம் அவனுக்கு இருப்பது போல் சிலருக்கு அதில் விதிவிலக்கு அளிக்கவும் அதிகாரம் இருக்கிறது. அவனது விதிவிலக்கைப் பெறுவோர் யார் என்று மறுமையில்தான் தெரியும் என்று நம்பினால் எந்தக் குழப்பமும் ஏற்படாது. 

நம் விளக்கம்:

நரகம் நிரந்தரமானது இல்லை. தற்காலிகமானது என்பதைக் காண்போம். திருக்குர்ஆனில் சுவர்க்கத்தைப் பற்றி, நற்பேறு பெற்றோர் சுவர்க்கத்தில் இருப்பார்கள். உம்முடைய இறைவன் நாடினாலன்றி வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலம் வரை அவர்கள் அதில் வாழ்ந்து வருவர். (இது ஒரு போதும்) துண்டிக்கப்படாத அருட்கொடை ஆகும். என்று (11:108) இல் கூறுகிறது. இதில் சுவர்க்கம், 
  • இறைவனின் அருட்கொடை என்றும். 
  • அது ஒரு போதும் துண்டிக்கப்படுவதில்லை என்றும் நிரந்தரம் என்றும் அல்லாஹ் கூறுகிறான். 
  • இந்த துண்டிக்கப்படாத எனும் அடைமொழி சொர்க்கத்திற்கு மட்டுமே வருகிறது. நரகத்திற்கு எங்கும் வரவில்லை. 
அதாவது நரகம் ஒரு நாள் துண்டிக்கப்படக் கூடியது என்றும் விளங்குகிறது. 

இறைவன் சொர்க்கத்தின் கூலியைப் பற்றி நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோர்க்கு முடிவில்லாத கூலி உண்டு (41:9; 84:26; 95:7) என்று கூறுகிறான். எனவே நரகம் ஒருநாள் முடிவடையும் என்று தெளிவாகிறது. 

திருக்குர்ஆன் 11:120 இல், உம் இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர இதற்காகவே அவன் அவர்களைப் படைத்தான். ஜின்கள், மனிதர்கள் ஆகிய எல்லோரையும் கொண்டு நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன் என்ற உம்முடைய இறைவனின் வாக்கு கட்டாயம் நிறைவேறி விடும் என்று வருகிறது இவ்வசனத்தில் இறைவன் அருள்புரிந்தவர்களைத் தவிர என்றும் இதற்காகவே அதாவது அருள்புரிவதற்காகவே அவன் அவர்களைப் படைத்தான் என்றும் வருகிறது. 

எனவே படைப்பின் நோக்கம் அருள் புரிவதற்கு என்றால், அந்த அருள் எனும் குணம் நிரந்தர நரகிலிருந்து அவர்களைக் காப்பாற்றி விடும் அல்லாவா? நரகின் வாசல் ஏழு என்றும் சொர்க்கத்தின் வாசல் எட்டு என்றும் இஸ்லாம் கூறுகிறது. சொர்க்கத்தின் எட்டாவது வழியானது, இறைவனின் அருளாகும், அந்த அருள் சொர்க்கத்தையும் நரகத்தையும் சூழ்ந்துள்ளது. எனவே, இறைவன் இறுதியில் தன் அருளினால் நரகவாசிகள் எல்லாரையும் அதிலிருந்து வெளியேற்றி விடுவான்.

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் 99 பங்கைத் தம்மிடம் வைத்துக் கொண்டான். (மீதமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. எந்த அளவுக்கு என்றால் மிதித்து விடுவோமோ? என்ற அச்சத்தால் குதிரை தனது குட்டியை விட்டுக் கால் குளம்பைத் தூக்கிக் கொள்கிறது. (புகாரி 6000) 

உலகில் முதல் உயிரினம் முதல் இறுதி உயிரினம் வரை தன் குட்டியுடனும் பிறரிடமும் காட்டும் அன்பும் கருணையும் அல்லாஹ்வின் ஒரு பங்கு என்றால், மீதமுள்ள 99 பங்கு கருணை நம்மை நரகில் விட்டு வைக்குமா? நரகம் நிரந்தரம் என்றால் அவன் அளப்பரிய கருணையாளனா? மறுமையில் இறை கருணை, மக்களை நரகிலிருந்து ஒரு நாள் வெளியேற்றிவிடும். 

திருக்குர்ஆனில் 17:9 இல் நிராகரிப்பவர்களுக்கு நரகத்தைச் சிறைக்கூடமாக நாம் ஆக்கியுள்ளோம் என்று கூறுகிறது. சிறைத் தண்டனை என்பது அவனவன் செய்த குற்றத்திற்கு ஏற்ப குறைவாகவோ அதிகமாகவோ இருக்கும். அது நிரந்தரம் அன்று. என்றாவது ஒரு நாள் அவன் அதிலிருந்து விடுதலையாகி விடுவான். நரகம் நிரந்தரமன்று. 

இறைவன் சொர்க்கத்தின் கூலியைப்பற்றி நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு முடிவில்லாத கூலி உண்டு (41:9, 84:26, 95:7) என்று கூறுகிறான். எனவே நரகம் ஒரு நாள் முடிவடையும் என்று தெளிவாகிறது. 

திருக்குர்ஆன் 101:10 வது வசனம், நரகம் (உம்முஹு ஹாவியா) அவனுக்குத் தாயாகி விடும் என்று வருகிறது. 

தாயின் வயிற்றில் குழந்தை 9 மாதம் 10 நாள்கள் இருந்து முழு வளர்ச்சியடைந்த பிறகு அதிலிருந்து வெளியேறுவது போல் நரகில் புகுந்தவரும் தான் செய்த பாவத்திற்குரிய தண்டனை முடிந்தவுடன் வெளியேற்றப்படுகிறான். குழந்தைக்கு தாயின் கருப்பை தற்காலிகமானது போல் மனிதனுக்கும் நரகம் தற்காலிகமானதால் நரகம் அவனுடைய தாயாகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது. 

நபிமொழி: 

நரகத்திற்கு ஒரு காலம் வரும். அன்று நரகில் யாரும் இருக்கமாட்டார்கள். அதன் (ஜன்னல்) கதவுகள் ஒன்றுக் கொன்று அடித்துக் கொள்ளும். (ஆதாரம்: இமாம் அஹ்மது பின் ஹம்பல்) 

நரகம் நிரந்தரம் அன்று என்பதை திருக்குர்ஆனில் 99:8; 78:24; 21:48; 11:108; 7: 157; 40:8; 51:57; 89:30,31 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. 

அணுவளவு நன்மை செய்தாலும் அதையும் கண்டு கொள்வார். (99:8) 

இந்த அணுவளவு நன்மையை அவர் சொர்க்கத்தில் பெறுவார். எனவே நரகம் நிரந்தரமானதல்ல. 

அவர்களால் இந்த நெருப்பிலிருந்து வெளியேற முடியாது. (2:168) 

அவர்களால் வெளியேற முடியாது. ஆனால் அல்லாஹ் வெளியேற்றுவான். 

என் கருணை எல்லாவற்றையும் சூழ்ந்துள்ளது. (7:157) 

எனவே அல்லாஹ்வின் கருணை நரகையும் சூழ்ந்துள்ளது. அந்த கருணையின் மூலம் அவர்கள் நரகத்தை விட்டு வெளியேறுவர். 

நான் ஜின்களையும் மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே படைத்துள்ளேன். (51:57) 

அவர்கள் அல்லாஹ்வின் அடியாராக இருப்பதற்காக படைக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும் என்பது இறைநாட்டமாகும். 

தேர்ந்தெடுக்கப்பட்ட என் அடியார்களுக்கிடையே நுழைந்து விடுக. மேலும் என் ஜன்னத்தில் நுழைந்து விடுக. (89:30-31) 

இந்த இரு வசனங்களிலிருந்தும் அல்லாஹ்வுடைய அப்தாகமாறி சொர்க்கத்தில் நுழைவதுதான் மனித, ஜின்கள் படைக்கப்பட்டதன் நோக்கமாகும். எனவே நரகம் நிரந்தரமானதல்ல. 

கடைசி நரகவாசி: 

1. புகாரி 7511

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

சொர்க்கவாசிகளில் இறுதியாக சொர்க்கத்தில் நுழைபவரும் நரகவாசிகளில் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவரும் யாரென்றால் தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒரு மனிதராவார்..... அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) 

2. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.: 

சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் இடையே ஒருவர் மட்டுமே எஞ்சியிருப்பார். அவர் தாம் நரகவாசிகளிலேயே இறுதியாக சொர்க்கம் செல்பவராவார் – அறிவிப்பாளர் அபு ஹுரைரா (ரலி) அவர்கள் (7382-7383 இடையில் 29:42 வசனத்திற்கு விளக்கம்) 

மேற்கண்ட நபிமொழிகள் நரகம் ஒரு நாள் காலியாகிவிடும் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.