அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jun 3, 2014

கனவுகள்


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 122 இல் கனவுகள் எனும் தலைப்பிலும், இதர நம்பிக்கைகள் – கனவுகள் எனும் தலைப்பிலும் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

இந்த அத்தியாயத்தில் (12 வது அத்தியாயத்தில்) யூஸுப் நபியின் கனவு, இரண்டு கைதிகளின் கனவு, மன்னரின் கனவு என பல கனவுகளும் அதற்கான விளக்கங்களும் கூறப்பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு சிலர் கனவுகளுக்கு விளக்கம் சொல்கிறோம் என்ற பெயரில் பல விதமாக உளறி வருகின்றனர். 

ஆனால் 12:37 வசனத்தில் யூஸுப் நபியவர்கள் கனவுகளுக்கு விளக்கம் கூறும் திறனை அல்லாஹ் தமக்குக் கற்றுத் தந்ததாகக் குறிப்பிடுகின்றார்கள். எனவே இது இறைவன் புறமிருந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதி என்பது தெரிய வரும் என்று எழுதுகிறார். 

இதர நம்பிக்கைகளில் கனவுகள் எனும் தலைப்பில், கனவின் பலன் அதற்கு எதிர்மறையானது அல்ல என்றும் 8:43 நபிமார்களின் கனவுகளும் இறைச் செய்தியே (37:102-105) என்றும், கனவின் விளக்கம் இறைவன் புறத்தில் உள்ளது 12:37 என்றும் எழுதியுள்ளார். 

நம் விளக்கம்: 

1) யூஸுப் நபியவர்கள் கண்ட கனவுகளும், பிற நபிமார்கள் கண்ட கனவுகளும், இரு கைதிகள் கண்ட கனவுகளும், மன்னர் கண்ட கனவும் எதைக் காட்டுகிறது? மனிதர்களுக்கு உண்மையான கனவுகளும் தோன்றும் என்றும் அவை எதிர் காலத்தில் நிகழப்போவதை எடுத்துக் காட்டும் என்றும் அக்கனவுகளின் விளக்கம் தெரிந்தவர்களிடம் கேட்டால் உண்மைக்கு மாற்றமான கருத்தைக் கூறிவிடுவர் என்றும், கைதிகள் போன்ற குற்றவாளிகளுக்கும் உண்மையான கனவுகள் தோன்றும் என்றும், கனவில் கண்டபடி நிகழலாம் என்றும், விளக்கம் கூறக்கூடிய உட்பொருள் கொண்ட கனவுகளும் தோன்றலாம் என்றும், எதிர்மறைப் பொருள் தரும் கனவுகளும் வரும் என்றும் நபிமார்கள் காணும் கனவு இறைக்கட்டளை என்றும் விளங்கிக் கொள்கிறோம். 

ஐம்புலனறிவு, சிந்தனை மூலம் பெரும் ஆறறிவு ஆகியவற்றை அறிவோம். உண்மையான கனவுகள் மூலம் பெரும் அறிவை எட்டா அறிவு எனலாம். ஏனென்றால் ஐம்புலனாலோ, ஆறறிவாலோ எட்டாத செய்திகள் கனவு மூலம் எட்டுவதினாலும், இறைவன் கனவு மூலம் அவற்றை எட்ட வைப்பதினாலும் அந்த கனவரிவை, அகக்கண் அறிவை எட்டா அறிவு எனலாமா? 

2) யூஸுப் நபியவர்கள் பதினோறு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும், தமக்கு சஜ்தா செய்வதாகக் கனவு கண்டார்கள். இதனை அறிவிலி ஒருவன், யூஸுப் நபி (அலை) அவர்கள் தன்னை இறைவன் என்று கூறுகிறார்கள் என்று கூறினால் அது எவ்வளவு மடத்தனம் என்று பாருங்கள். அல்லாஹ்வுக்கு மட்டும் செய்ய வேண்டிய சஜ்தாவை, அவை தனக்குச் செய்ததாக யூஸுப் நபியவர்கள் கனவில் கண்டார்கள் என்பதிலிருந்து கனவில் இவை போலும் காட்சிகளைக் காணலாம் என்றும், அதற்கு சொற்பொருள் கொள்ளக்கூடாது என்ற அடிப்படை ஞானம் கூட இல்லாதவர்களே இவை போலும் குற்றச் சாட்டுகளைக் கூறுவர். 

சமுதாயத்தை வழிகெடுக்கும் சிலர், அவர் கனவில் கண்டார் என்பதைக் கூறாமல் யூஸுப் நபி சூரியனும், சந்திரனும், பதினோரு நட்சத்திரங்களும் தனக்கு சஜ்தா செய்கின்றன என்று கூறுகிறார் என்று கூறி யூஸுப் நபி தன்னை இறைவனாக கூறுகிறார் என்று கூறினால் அது மக்களை வழிகெடுப்பதாக ஆகாதா? 

3) கைதி ஒருவர் தன் தலை மீது ரொட்டியைச் சுமந்து கொண்டிருப்பதாகவும் பறவைகள் அவற்றிலிருந்து தின்று கொண்டிருக்கின்றன என்றும் கனவு காண்கிறார்.

அதற்கு யூஸுப் நபி, அவர் சிலுவையில் அறைந்து கொல்லப்படுவார்; அவரது தலையைப் பறவைகள் சாப்பிடும் என்று விளக்கம் கூறுகிறார். இதே சொல்தான் ஈஸா நபிக்கும் அவர் சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை என்று வருகிறது. 

சிலுவைத் தண்டனைக்குரிய ஒரு குற்றவாளிக்கும் இறைவனிடமிருந்து உண்மையான கனவு தோன்றும் என்று விளங்குகிறோம். நபிமொழியில் உண்மையான கனவு என்பது வஹியில் நுபுவத்தில் ஒரு பங்கு என்று கூறப்பட்டுள்ளது. (ஆதாரம்: புகாரி) ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு ஆரம்பத்தில் வந்த வஹி கனவு வழியாகவே வந்தது. (ஆதாரம்: புகாரி) 

எனவே, உலகில் உண்மையான கனவை ஒருவன் காணுகின்ற வரை இறைவனுடைய பேச்சு, வஹி தொடரும் என்று அறிகிறோம். திருக்குர்ஆன் 42:52 இல் அல்லாஹ், திரைக்கு பின்னால் இருந்து மனிதருடன் பேசுகின்றான் என்று கூறப்பட்டுள்ளது. இது கனவு கஷ்ப் காட்சியின் மூலம் பேசுவதாகும். இப்ராஹீம் நபிக்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் காட்டப்பட்ட கனவுகள் இறைச் செய்திகளே ஆகும். 

பறவைகள் கொத்தி தின்றன என்பதிலிருந்து, செத்த பிணங்களைத்தான் பறவைகள் கொத்தித் தின்னும் என்றும், அவன் அக்கால வழக்கத்தின்படி சிலுவையில் தண்டனைக்கு ஆளானவர்களின் உடலைப் பறவைகள் கொத்தித் தின்னும் என்றும் யூஸுப் நபி அவர்கள் விளக்கம் கூறுகிறார்கள். இதில் அவர் சிலுவையில் அறையப்படுவார் என்ற சொற்றொடரே வருகிறது. எனவே சிலுவையில் அறையப்படுதல் என்றால் சிலுவையில் அறைந்து கொல்லப்படுதல் என்றே பொருள் என்பதையும் அறிகிறோம். 

சிலுவையில் அறையப்படவில்லை என்றால், சிலுவையில் அறைந்து கொல்லப்படவில்லை என்றே பொருள். 

4) மன்னர் தான் கண்ட கனவில் விளக்கத்தை அரசவை பிரமுகர்களிடம் கேட்கிறார். அவர்கள் இவை வீணான கனவுகள் என்றும், அதன் விளக்கம் தங்களுக்குத் தெரியாது என்றும் கூறினார். (12:45) 

இறைவன் காட்டுகின்ற உண்மையான கனவுகள் எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படும் ஏழு ஆண்டு பஞ்சத்தையும், அப்பஞ்சத்தைப் போக்கும் வழியையும் காட்டுகிறது. உருவமற்ற பஞ்சம் போன்றவற்றைக் கனவில் காண முடியும் என்றால் உருவமுடையவர்களையோ, உருவம் உடையவற்றையோ அல்லாஹ் கனவில் காட்டுவதற்கு ஆற்றல் உடையவன் என்பதையும் நம் கண்ணால் கண்டிராத இறந்த கால மக்களையும், எதிர்கால மக்களையும் அவனால் காட்ட முடியும் என்பதும் இதன் மூலம் விளங்குகிறது. ஏனென்றால் உண்மையான கனவு என்பது இறைவன் தன்னடியார்க்கு காட்டுகின்ற காட்சியாகும். இறைவன் தான் நாடுகின்றவர்களுக்கு இறந்தகால, எதிர்கால மக்களையும் காட்ட வல்லவன். 

5) கைதி ஒருவன் திராட்சை ரசம் பிழிவதாக கனவு காண்கிறான். இன்னொரு கைதி தனது தலையிலுள்ள ரொட்டியை பறவைகள் தின்பதாகக் கனவு கண்டுள்ளார். ரொட்டி எகிப்திய மக்களின் அன்றைய உணவாகும். உலகில் முதன் முதலில் ரொட்டி தயாரித்தவர்கள் எகிப்திர்யர்கள் என்பது வரலாற்று உண்மை. 

6) கனவின் பலன் அதற்கு எதிர்மறையானது அல்ல என்று 8:43 வசனத்தை பி.ஜே காட்டுகிறார். இதுவும் தவறாகும். அந்த வசனம், 

(முஹம்மதே) அல்லாஹ் உமக்கு உம்முடைய கனவில் அவர்களை குறைத்துக் காட்டியதை (நீர் நினைவு கூறுக) (நிராகரிப்பவர்களாகிய) அவர்களை அதிக எண்ணிக்கையினராகக் காட்டியிருந்தால் நிச்சயமாக நீங்கள் தடுமாற்றமடைந்து இது குறித்து உங்களுக்கிடையே விவாதம் செய்திருப்பீர்கள். 

மிகுதியான எதிரிகளின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டிருக்கிறது. கனவின் பலன் எதிர்மறை என்பதையே வசனத்தில் கூறப்பட்ட கனவு விளக்குகிறது. 

7) திருக்குர்ஆன் 48:28 இல் அல்லாஹ் ஒரு கனவின் மூலம் மக்கா வெற்றி பற்றிக் கூறுகிறான். நபிமார்களின் கனவும் இறைச்செய்தி என்றால் இக்கனவும் இறைச் செய்தியே. ஆனால் நபி (ஸல்) அவர்கள் தான் கண்ட கனவின் படி மக்கா செல்ல, மக்கத்துக் காபிர்கள் இவ்வருடம் வரக்கூடாது. திரும்பிச் செல்லுங்கள். அடுத்த வருடம் வாருங்கள் என்று கூறி ஹுதைபிய்யா உடன்படிக்கையும் செய்து விடுகின்றனர். அப்படி என்றால் நபி (ஸல்) அவர்கள் கண்ட கனவு தவறு என்றோ, நபி (ஸல்) அவர்கள் நபி இல்லை என்றோ, நபி (ஸல்)எ வர்கள் நபி இல்லை என்றோ பி.ஜே கருதுவாரா? உள்ளவாறு நிகழ்வதும் ஒரு உண்மை நபிக்கு அடையாளம் என்றும் அறிவுடையோர் விளங்கிக் கொள்வர். அதாவது மனித நபி ஒருவர் தன் கனவை தவறாகவும் விளங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிகிறது. 

திருக்குர்ஆன் 17:61 இல், நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு காட்சி காட்டப்பட்டதாகவும் அது மிஹ்ராஜ் என்றும் பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 267 இல் எழுதியுள்ளார். 

இதில் அல்லாஹ் எடுத்தாளும் சொல் ருஹ்யா என்பதாகும். இதனையே காட்சி என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இச்சொல் திருக்குர்ஆனில் 12:44, 12:6, 12:101, 37:106, 48:28 ஆகிய வசனங்களில் வந்து, கனவு எனும் பொருளைத் தான் தருகிறது. அதாவது அகக்கண் காணும் காட்சியாகும்.

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து பைத்துல் முகத்தஸ் வரை சென்ற இஸ்ரா பயனும், மக்காவிலிருந்து விண்ணுக்கு சென்ற மிஹ்ராஜ் பயணமும் அன்னார் கண்ட ஆன்மீகக் காட்சி என்பது இதிலிருந்து விளங்குகிறது. 

இவை இரண்டும் இரு வேறு காலத்தில் நடந்த இரு வேறு நிகழ்ச்சிகள் ஆகும். அதானால் தான் 17 வது சூரா இஸ்ரா பற்றியும் 53 வது சூரா மிஹ்ராஜ் பற்றியும் கூறுகிறது. இதில் நபி (ஸல்) அவர்கள் கடந்த கால நபிமார்களை எல்லாம் கண்டார்கள். எனவே கனவின் மூலம், நாம் நேரில் காணாதவர்களையும் காண முடியும் என்பது விளங்குகிறது. 

இன்னின்ன கனவுகளுக்கு இன்னின்ன பலன்கள் என்றெல்லாம் குர்ஆனிலோ நபிகள் நாயகத்தின் ஹதீஸ்களிலோ எந்தப் பட்டியலும் போடப்படவில்லை. கனவுகளுக்குப் பலன் சொல்பவர்கள் அவர்களாக கற்பனை செய்த பொய்களைத் தான் கூறிவருகின்றனர் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்று பி.ஜே கூறுகிறார். 

எம் கேள்வி என்னவென்றால், திருக்குர்ஆன் நபிமொழிகளின் மூலம் கிடைக்கின்ற ஞானத்தின் அடிப்படையில் கனவுகளுக்கு உண்மையான பொருள் கூற முடியாது என்றால், திருக்குர்ஆனில் எல்லாம் உள்ளன. அதில் இல்லாதது எதுவும் இல்லை என்று கூறுவதிலோ, நபிமொழி எனபது திருக்குர்ஆனின் ஞானம் என்று கூறுவதிலோ என்ன அர்த்தம் இருக்கிறது?

உண்மையான கனவு என்பது இறைவனிடமிருந்து வெளிப்படுவது. அதாவது அவன் தன் அடியார்களுடன் பேசும் முறைகளில் ஒன்று நபி (ஸல்) அவர்களுக்கு ஆரம்பத்தில் இறைச் செய்திகள் கனவுகளாக வெளிப்பட்டன. அப்படி என்றால் இறைவனின் பேச்சுக்களைக் கொண்ட திருக்குர்ஆன் மூலம் கனவுகளுக்கு ஏன் விளக்கம் கூற முடியாது? உங்களுக்கும் எனக்கும் அந்த ஞானம் இல்லாமல் இருக்கலாம். அனால் எவர்க்கும் இல்லை என்பது சரியா? 

திருக்குர்ஆனில், யூஸுப் நபியும், யாகூப் நபியும், இப்ராஹீம் நபியும், இஸ்மாயீல் நபியும், நபி (ஸல்) அவர்களும் கனவுகளுக்கு எப்படி பொருள் கூறினார்கள்? அவ்வளவு ஏன்? விஞ்ஞானிகளுள் சிலர், தான் கண்ட கனவின் அடிப்படையில் புதிய கண்டுபிடிப்புகளையும், விஞ்ஞானப் புதிர்களுக்கும் விடை கண்டுள்ளார்கள் எனபது அறிவியல் வரலாறாகும். 

இப்னு சீரீன் அவர்கள் கனவுகளுக்கு திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி ஆகியவற்றின் அடிப்படையில் அற்புதமாகப் பொருள் கூறியுள்ளார்கள். திருக்குர்ஆன் ஒளியில் அவர்கள் கூறிய விளக்கத்தை யாரும் மறுக்க முடியுமா?

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.