அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jun 14, 2014

அவரவர் தம் மார்க்கத்தை சுதந்திரமாக பின்பற்றும் நிலை ஏற்படும் வரை போரிடுங்கள்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 54 இல் கலகம் இல்லாதொழிந்து என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

திருக்குர்ஆனின் 2:193, 8:39 ஆகிய இரு வசனங்களில் கலகம் இல்லாதொழிந்து தீன் அல்லாஹ்வுக்கு ஆகும் வரை போரிடுங்கள் என்று கூறப்படுகிறது. இவ்விரு இடங்களிலும் தீன் என்ற சொல்லுக்கு மார்க்கம் என்று பலரும் விளக்கம் கொடுத்துள்ளனர். 

இந்த விளக்கத்தின்படி மற்றவர்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்ய வேண்டும் என்ற கருத்து ஏற்படுகின்றது. ஆனால் திருக்குர்ஆனின் பல இடங்களில் மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை என்று மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. (திருக்குர்ஆன் 2:256, 10:99, 9:6, 109:6) 

அவ்வாறிருக்க மதமாற்றம் செய்யும் வரை போரிடுங்கள் என்று பொருள் கொள்ளவே முடியாது. மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் முஸ்லிமல்லாதவர்கள் குறிப்பாக யூதர்கள் கிறித்தவர்கள் யூத கிறித்தவர்களாகவே வாழ்ந்து வந்தனர். இதன் காரணமாகவும் இவ்வாறு பொருள் கொள்ள முடியாது. இவ்விரு வசனங்களிலும் அதிகாரம் என்று மொழி பெயர்ப்பதுதான் சரியானது. போர் என்று வந்து விட்டால் அதிகாரம் கைக்கு வரும் வரை போரிட வேண்டும் என்பதுதான் இதன் கருத்தாகும். 

நம் விளக்கம்: 

போர் என்று வந்துவிட்டால் அதிகாரம் கைக்கு வரும் வரை போரிட வேண்டும் என்று பி.ஜே எழுதியுள்ளார்! இது சரியா? சரி இல்லை. திருக்குர்ஆன் இக்கருத்தை மறுக்கிறது. திருக்குர்ஆன் 22:40-41 வசனங்களைப் பார்ப்போம். 

எவர்கள் மீது போர் தொடுக்கப்பட்டுள்ளதோ அவர்களுக்குப் (போரிட) அனுமதி வழங்கப்பட்டுளளது. ஏனெனில் அவர்கள் மீது அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு உதவ ஆற்றல் உள்ளவனாவான். எங்களின் இறைவன் அல்லாஹ் என்று சொன்னதற்காக மட்டும் அநியாயமாக அவர்களின் வீடுகளிலிருந்து விரட்டப்பட்டவர்களுக்கும் (போரிட அனுமதி உண்டு). இந்த வசனத்தின் அடிப்படையில் முஸ்லிம்கள் மக்கத்து மாக்களால், 
  • தங்கள் இறைவன் அல்லாஹ் என்று சொன்னதற்காக மட்டும் முஸ்லிம்கள் அநியாயத்திற்கு ஆளாக்கப்பட்டனர். 
  • அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 
  • மக்காவிலிருந்து வெளியேறி மதீனாவில் அடைக்கலம் புகுந்தும் அவர்களை விடாமல் அவர்கள் மீது போர் திணிக்கப்பட்டது. 
  • எனவே தான், எவர்கள் மீது போர் திணிக்கப்பட்டதோ அவர்களுக்கு (போரிட) அனுமதி வழங்கப்படுகிறது என்று அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான். 
இவ்வாறு முஸ்லிம்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநியாயங்கள் எல்லாம் இல்லாது ஒழிந்து உண்மையான மத சுதந்திரம் கிடைத்து அல்லாஹ்வின் மார்க்கத்தை அப்படியே பின்பற்றி வாழும் நிலை ஏற்படும் வரை அவர்களுடன் தற்காப்பு யுத்தம் செய்யுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். 

எனவே, முஸ்லிம்களை கட்டாயபப்டுத்தி அவர்களின் மத வழிபாட்டைச் செய்ய விடாமல் தடுக்கின்ற அணியாயத்தையே இது சுட்டிக்காட்டுகிறது. 

திருக்குர்ஆன் 22:41 வசனத்தின் தொடர்ச்சியைக் காண்போம். 

மேலும் “அல்லாஹ் சில மனிதர்களுக்கு மற்றவர்களைக் கொண்டு பதிலடி கொடுக்க வைக்கவில்லையாயின் கோயில்களும், ஆலயங்களும், மடங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாக நினைவு கூரப்படும் பள்ளிவாசல்களும் தரைமட்டமாக்கப்பட்டிருக்கும்.
  • முஸ்லிமகள், பிற மத மக்கள் அவரவர்களின் மத வழிபாட்டை சுதந்திரமாக செய்ய உதவ வேண்டும் என்றும் கட்டளையிடுகின்றான். 
  • இந்த சமய கோயில்களும், கிறித்தவ ஆலயங்களும், யூத மடங்களும், முஸ்லிம் பள்ளிவாசல்களும் பாதுக்காக்கப்பட முஸ்லிம்கள் பாடுபட வேண்டும் என்றும் கட்டளையிடுகிறான். இதனையே அல்லாஹ் உதவுவதாக கூறுகின்றான். 
  • இவ்வாறு உலகின் மத சுதந்திரத்துக்கு யார் பாடுபடுகிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் உதவுவதாகவும் கூறுகிறான். 
  • இதற்கு மாற்றமாக செயல்படுபவர்களுக்கு மற்றவர்களைக் கொண்டு பதிலடி கொடுப்பதாகவும் அல்லாஹ் கூறுகிறான். 
ஆனால் பி.ஜே போன்றோர், ஈஸா நபி கியாமத் நாளில் வருவார் என்றும் அவர் சிலுவையை முறிப்பார் என்றும், பன்றிகளைக் கொல்வார் என்றும் நம்புகிறார்கள். கிறித்தவ ஆலயங்களில் உள்ள சிலுவைகளும், கிறித்தவ ஆடவர், பெண்கள், சிறுவர் சிறுமியர் கழுத்தில் அணிந்திருக்கும் சிலுவைகளையும் பறித்து அதனை முறிக்க வேண்டும் என்றும் நம்புகிறார்கள், இந்த இழிசெயல் பிற மத வழிபாட்டில், பிற மத மக்களின் சுதந்திரத்தில் தலையிட்டு, தன் கருத்துகளை அவர்கள் மீது திணிக்கும் செயல் அல்லவா? சிலுவை என்றால் அது மரத்தினாலும், உலோகத்தாலும் செய்யப்பட்ட சிலுவை என்று எண்ணுகின்றனர். அது சிலுவைக் கொள்கை என்றும் அக்கொள்கையை தவறு என்று நிரூபிப்பதன் மூலம் அக்கொள்கையை முறித்தலையே சிலுவையை முறித்தல் என்பதை உணரத் தவறிவிட்டனர். 

இவ்வாறே பன்றி என்றால் அல்லாஹ்வின் படைப்பாகிய பன்றி என்னும் உயிரினம் என்றும் அதனைக் கொல்லவே ஈஸா நபி வருகிறார் என்றும் நம்புகின்றனர். அப்படி எனில் அல்லாஹ் எதற்குப் பன்றியைப் படைத்தான்? பன்றி படைக்கப்பட்ட நாள் முதல் பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகளாக அது கொல்லப்படவில்லையே? இப்போது மட்டும் ஏன் கொல்லப்படவேண்டும். ஈஸா நபி அதனைக் கொல்வார் என்றால் ஒரு உயிரினத்தைக் கொன்றதாக ஆகாதா? தனி மனிதர்க்கும், நாட்டுக்கும் உடைமையாக வளர்க்கப்படும் அப்பன்றிக் கூட்டத்தை கொன்று குவித்தால் அச்செயல் அவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாகவும், தன் மதக்கருத்துக்களை அவர்களின் மீது வலிந்து திணிப்பதாகவும் ஆகாதா? இஸ்லாம் இனிய மார்க்கம் என்பது இதுதானா? மேலும் உயிரினச் சங்கிலியால் ஒரு உயிரினம் முழு உலகிலும் கொல்லப்படுவதன் மூலம் பிற உயிரினத்திற்கு ஏற்படும் அழிவுக்கு ஈஸா நபியும் முஸ்லிம்களும் பொறுப்பாக மாட்டார்களா? பன்றியைக் கொல்வதற்கு ஒரு நபி வர வேண்டுமா? ஒரு நபி பன்றியைக் கொல்வதற்காக துப்பாக்கியும் கையுமாக அவற்றைத் துரத்தித் திரிவாரா? இது மனிதனுக்கு ஏற்ற மார்க்கமா? காட்டுமிராண்டி மார்க்கமா? பி.ஜே யின் இப்படிப்பட்ட நம்பிக்கை நகைப்பிற்கிடமாக உள்ளது. பன்றி என்றால் ஊரில் சுற்றித் திரியும் பன்றிகள் இல்லை. பன்றிக் குணம் கொண்ட மனிதர்களிடம் காணப்படும் தீய பண்புகளைக் கொல்லவே ஈஸா நபி வருவார் என்று அவர்கள் உணரத் தவறியதே காரணம். 

இறுதியாக இவ்வாறு ஈஸா (அலை) அவர்கள் வந்து பன்றியைக் கொல்வார், சிலுவையை முறிப்பார் என்று பி.ஜே நம்புவது திருக்குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முற்றிலும் மாற்றமானதாகும். 

பன்றிகளை விட்டுவிடுவோம். மனிதர்களுள் அவர்களின் (ஈஸா நபியின்) பெருமூச்சு இறை மறுப்பாளர் மீது பட்டால் அவர் மரணிக்காமல் இருக்க மாட்டார். அவர்களின் பார்வை எட்டும் தொலைவுக்கு அவர்களின் பெருமூச்சு செல்லும் என்று முஸ்லிம் அல்லாதவர்களையும் தன் பெருமூச்சினால் அழிப்பார் என்று நம்புகிறார். 

வன்முறை சிந்தனையை தூண்டும் இது போன்ற தவறான கொள்கையை பி.ஜே கைவிடுவதே முஸ்லிம் சமுதாயத்திற்கு அவர் செய்யும் சேவையாக இருக்க முடியும். 

இவ்வாறு சிலுவைகளை முறிக்கின்ற பன்றிகளைக் கொல்கின்ற காபிர்களைக் கொல்கின்ற கொலை வெறியும். இரத்த வெறியும் கொண்ட ஒரு மஸீஹை தலைமுறை தலைமுறையாக இந்த பி.ஜே – க்கள் கூட்டம் எதிர்பார்த்து வருவதால்தானோ இந்த சமுதாயத்தில் சிலர் தீவிரவாத சிந்தனைக்கு ஆளாகிவிட்டனரோ என்று எண்ணத் தோன்றுகிறது! அல்லாஹ் நன்கறிவான்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.