அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jun 5, 2014

நாஸிக் மன்சூக்


திருக்குரானில் நாஸிக் மன்சூக் 

பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 30 இல், இறைவசனம் மாற்றப்படுதல் என்னும் தலைப்பில் இவ்வாறு எழுதுகிறார்: 

இறைவன் அருளிய வசனத்தை இறைவன் ஏன் மாற்ற வேண்டும்? அவனுக்குத் தான் அனைத்தும் தெரியுமே? மாற்றுவதற்கு அவசியம் ஏற்படாத வகையில் சரியாகக் கூறி விட வேண்டியது தானே? என்று இவ்வசனங்களை வாசிக்கும் சிலர் நினைக்கலாம். 

இது இறைவனின் அறியாமையைக் குறிக்காது. அவனது அளவற்ற அறிவையே குறிக்கும் என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். 

வரலாறுகளிலும் வாக்குக் கொடுப்பதிலும் தான் முன் சொன்னதை மாற்றிக் கொள்ளக் கூடாது. சட்டதிட்டங்களைப் போடும் போது இருக்கின்ற சூழ்நிலைக்கு ஏற்பத்தான் சட்டம் போட வேண்டும். சூழ்நிலை மாறிய பின் சட்டத்தை மாற்றாவிட்டால்தான் அறியாமை ஆகும். 

நெருக்கடியான நேரத்தில் அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும். நெருக்கடி நீங்கியதும் ஊரடங்கை விளக்கிக் கொள்ளும். ஏற்கனவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அதையே தொடர்வதும் அறிவுடையமையாகாது அல்லது நெருக்கடியான நேரம் வரும் போதும் ஊரடங்கு போடா மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதும் விவேகமல்ல. 

ஒரு தாய் இரண்டு வயதுப் பாலகனுக்குச் சில உணவுகளை மறுப்பாள். சாப்பிடக் கூடாது எனத் தடுப்பாள். அதே குழந்தை 10 வயதை அடையும் போது முன்பு தடுத்த உணவை உண்ணுமாறு கூறுவாள். இவ்வாறு கூறும் நிலை ஏற்படும் என்பது அவளுக்கு ஏற்கனவே தெரியும். இங்கு குழந்தையின் நிலை தான் மாறியதே தவிர தாயின் அறிவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 

மக்காவில் வாழ்வதே பெரும் பிரச்சனையாக இருக்கும் போது திருடினால் கையை வெட்டுங்கள் எனக் கூற முடியாது. கூறினால் அதற்கு அர்த்தம் இருக்காது. ஆட்சி அதிகாரம் முஸ்லிம்களின் கையில் வந்த பிறகு தான் இந்தச் சட்டத்தை போட முடியும். எனவே, மாறும் சூழ்நிலைக்கு ஏற்ப சட்டங்கள் வழங்குவதுதான் அறிவுடைமை. 

ஒரு நிகழ்ச்சி 2002 இல் நடந்தது எனக் கூறி விட்டு 1967 இல் அந்த நிகழ்ச்சி என்று இன்னொரு நாள் கூறக் கூடாது. ஏனெனில் இது வரலாறு. நடந்ததை மாற்ற முடியாது. இத்தகைய மாறுதல் ஏதும் திருக்குர்ஆனில் இல்லை. சில சட்டங்களில் மட்டுமே இத்தகைய நிலை உள்ளது. (பார்க்க திருக்குர்ஆன் 2:106, 13:39, 16:101) 

நம் விளக்கம்: 

1) திருக்குர்ஆனின் முன்பு வந்த சில சட்டங்களை பின்னர் வந்த சில சட்டங்கள் மாற்றி விட்டது என்று பி.ஜே கருதுகிறார். இவருடைய கணிப்பில் சில சட்டங்கள் திருக்குர்ஆனில் இருப்பதாக வைத்துக் கொண்டால் இமாம் ஸுயூத்தி (ரஹ்) நாஸிக் மன்சூக் வசனங்கள் 20 மட்டுமே என்று கருதுகிறார். சுமார் 500 சட்டங்கள் மாற்றப்பட்டிருப்பதாக முன்னோர்கள் கூறியுள்ளனர் என்று கூறுகிறார். (ஆதாரம்: ஜவாஹிருல் குர்ஆன் 2:106 வசனத்தின் அடிக்குறிப்பு) 

ஆக, 5 முதல் 500 வசனங்களில் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன எனலாம். வசனங்களை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் யாரோ சில மார்க்க அறிஞர்கள் இவை நீக்கிய சட்டங்கள், நீக்கப்பட்ட சட்டங்கள் இல்லை என்று குறைத்துக் கொண்டே வந்துள்ளார்கள். கடைசியில் ஐந்து வசனங்களில் வந்து முடிந்தது. இது எதை காட்டுகிறது என்றால் திருக்குர்ஆனின் வசனங்களுக்கு தவறான பொருளை கற்பித்து இந்த வசனம் மாற்றப்பட்ட வசனம், இது மாற்றிய வசனம் என்று யாரோ சிலர் செய்து விட்டார்கள் என்று தெரிகிறது. இந்த வசனங்கள் எல்லாம் அல்லாஹ்விடமிருந்து ஜிப்ரீல் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு வந்தவை. அவற்றை நபி (ஸல்) அவர்கள் திருக்குர்ஆன் எழுத்தாளர்களுக்கு அறிவித்தார்கள். எந்தெந்த வசனம் எங்கெங்கு வைக்கப்பட வேண்டும் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் கூற அதன்படி வைக்கப்பட்டது. 

திருக்குர்ஆனை ஒரே நூலாக தொகுக்கும் பணி நடைபெற்ற போது ஒவ்வொரு வசனமும் திருக்குர்ஆனின் வசனம் தானா என்று அக்காலத்தில் வாழ்ந்த ஒவ்வொரு நபித்தோழரிடமும் நன்கு விசாரிக்கப்பட்டு, சரிபார்க்கப்பட்டு தொகுக்கப்பட்டது. இறைவன் இதைப் பற்றி இவ்வாறு கூறுகிறான். நிச்சயமாக இதனை தொகுப்பதும், இதனை ஓதிக் காட்டுவதும் எமது பொறுப்பாகும். (திருக்குர்ஆன் 75:18) 

அப்படி என்றால், இவர்களுக்குத் தெரிகின்ற இந்த நாஸிக் மன்சூக் வசனங்கள் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாதா? இந்தச் சட்டம் இந்தச் சட்டத்தை நீக்கிவிட்டது என்று அந்த வசனங்கள் வந்த போது நபி (ஸல்) அவர்கள் தெரிவித்ததாக திருக்குர்ஆனின் எழுத்தாளர்களும், அன்றைய நபித்தோழர்கள் எல்லாரும் ஏகமனதாகக் அறிவிக்கும் ஒரே ஒரு சான்றையாவது பி.ஜே போன்றோர்கள் கொண்டு வர முடியுமா? நபி (ஸல்) அவர்கள் கூறாத ஒரு கருத்தை இவர்கள் கூறுவதினால் அல்லாஹ்வின் மீதும் ரெசூலின் மீதும் இட்டுக்கட்டி கூறிய குற்றத்திற்கு ஆளாக நேரிடும். அல்லாஹ் நம்மை காப்பானாக. 

2) பி.ஜே எழுதியுள்ள வாதங்கள் எல்லாம் அப்படியே திருக்குர்ஆனுக்கு முந்தைய வேத வசனங்களில் உள்ள சட்டங்கள் திருக்குர்ஆனின் சட்டங்கள் மூலம் மாற்றப்பட்டுள்ளன என்பதற்கு அப்படியே பொருந்துவதைக் காணலாம். திருக்குர்ஆனுக்குள் மாற்றப்பட்ட, மாற்றிய வசனங்கள் உள்ளது என்பதற்குப் பொருந்தாது. 

3) திருக்குர்ஆனுக்கும் முந்தைய வேதங்களுக்கும் இடையில் குறைந்தது ஓரிரு ஆயிரம் ஆண்டுகள் இடைவெளி இருப்பதால் இச்சட்டம் மாற்றம் தேவைதான். ஆனால் இருபத்தி மூன்று ஆண்டுகள் என்பது குர்ஆனின் சட்ட மாற்றத்திற்கு தேவையில்லை. பி.ஜே கூறுவது போல், திருட்டுக்கு கையை வெட்டுதல் சட்டத்தை மக்காவில் இறக்காமல் மதினாவில் இறக்கியது நிலையான சட்டம்தான் திருக்குர்ஆனில் உள்ளது என்பதற்கும் மாறும் சட்டங்கள் திருக்குர்ஆனில் இல்லை என்பதற்கும் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். இவ்வாறே விபச்சாரத்திற்கு 100 சவுக்கடி தண்டனையும் நிலையான சட்டம் திருக்குர்ஆனில் இருப்பதனைக் காட்டுகிறது. இல்லை என்றால் மாக்காவின் சூழ்நிலைக்கு ஏற்ப சட்டத்தை ஏற்படுத்திவிட்டு மதீனாவில் அதனை ரத்து செய்து விட்டு நிலையான சட்டத்தைக் கொண்டு வந்திருக்கலாமே! தாய், குழந்தை உதாரணம், ஊரடங்கு உத்தரவு போன்ற உதாரணங்கள் திருக்குர்ஆனுக்கு முன்னர் வந்துள்ள வேதங்களின் வளர்ச்சிப் படிகளையும் அதிலுள்ள தற்கால சட்டம் திருக்குர்ஆனின் மூலம் மாற்றப்பட்டதையும் குறிக்கும். வரலாறு, வாக்குறுதி என்பவை சரீஅத் சட்டத்திற்கு பொருந்தாது. 

4) இதில் என்றென்றும் நிலைத்திருக்கும் கட்டளைகள் உள்ளன (98:4) என்று திருக்குர்ஆன் கூறுவதால் நிலையற்ற நாஸிக் மன்சூக் சட்டம் இல்லை என்பது தெரிகிறது. 

5) திருக்குர்ஆனில் நிக்கிய நீக்கப்பட்ட வசனங்கள் இருப்பதாக இருந்தால், அப்படியே நம்புகிறவர்க்கு திருக்குர்ஆனைப் படிக்கிற போது, இந்த வசனம் நீக்கிய நீக்கப்பட்ட வசனத்தில் இருக்குமோ என்ற சந்தேகம் எழ வாய்ப்புள்ளது. எனவே நாம் நீக்கப்பட்ட வசனத்தை நம்பி செயல்பட்டு மோசம் போய் விடக் கூடாதே என்ற தடுமாற்றத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படும். இப்படிப்பட்ட ஒரு நிலையை அல்லாஹ் தன் திருமறைக்கு ஏற்படுத்தியுள்ளானா? (நவூதுபில்லாஹ்) 

6) திருக்குர்ஆனில் நீக்கிய நீக்கப்பட்ட வசனங்கள் உள்ளன என்று ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டால், நீக்கப்பட்ட வசனத்தின் அடிப்படையில் செயல்பட்ட ஒருவன் தன் அறியாமையின் காரணமாக வழிகெட வாய்ப்புள்ளது. திருக்குர்ஆன் அவரை வழிகெடுத்ததாக நம்ப வேண்டும். (நவூதுபில்லாஹ்) அல்லாஹ்வின் வேதம் மக்களை வழிகெடுக்கும் என்று பி.ஜே நம்புகிறாரா? 

7) நீக்கப்பட்டதாக தவறாக நம்பும் வசனங்களை நபி (ஸல்) அவர்கள் உடனுக்குடன் நீக்கியிருப்பார்களே. அப்படி அவர்கள் செய்யாததினால் அந்த வசனங்கள் திருக்குர்ஆனில் இல்லை என்பதை காட்டவில்லையா? நீக்கப்பட்டதாக நம்பும் வசனங்களை நபி (ஸல்) அவர்கள் ஏன் திருக்குர்ஆனில் நீக்காமல் வைத்திருக்க வேண்டும்? 

8) நபிமொழிகளில் பொய்யான நபிமொழிகள் உள்ளன. எனவே நாங்கள் நபிமொழிகளை நம்பத் தயாராக இல்லை. திருக்குர்ஆன் மட்டுமே உண்மை. அதில் எந்தத் தவறும் இல்லை. என்றும் வாதிக்கும் அஹ்லே குர்ஆன் காரர்கள், திருக்குர்ஆனிலும் இப்படிப்பட்ட நாஸிக் மன்சூக் குழப்பம் உள்ளதா? என்று தப்பான ஒரு எண்ணத்துக்கு வந்து திருக்குர்ஆனையும் கைவிட்டு விட்டு, அவர்கள் நாத்திகர்களாக மாறுவதற்கு இது வழிவகுக்கும். 

9) திருக்குர்ஆனில் 15:10 வசனம், திருக்குர்ஆனை நாமே இறக்கினோம்; இதனை நாமே பாதுகாப்போம் என்பதே உண்மை. எனவே, திருக்குர்ஆன் நாஸிக் மன்சூக்கிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. 

10) திருக்குர்ஆனின் ஒரு சட்டம் செய் என்றும் இதனையே ஒரு சட்டம் செய்யக்கூடாது என்றும் ஒரு கட்டளை ஓரிடத்தில் ஒரு விதமாகவும் இதையே மற்றொரு இடத்தில் வேறு விதமாகவும் கூறுகிறது என்றால் திருக்குர்ஆனில் முரண்பாடு இருக்கிறது எனலாம். திருக்குர்ஆன் 4:83 வசனம், அவர்கள் குர்ஆனை ஆழ்ந்து சிந்திக்கவேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்ததாக இருப்பின் நிச்சயமாக அவர்கள் இதில் பல முரண்பாடுகளைக் கண்டிருப்பார் என்று கூறுவதால், இந்த சட்டம் மாற்றங்கள் இல்லை என்பது தெளிவாகிறது. நாஸிக் மன்சூக் உண்டு என்போர் திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் இல்லை என்று நம்புவதாகும். 

11) திருக்குர்ஆனின் வசனங்கள் 10:64, 18:27, 6:34,116, அல்லாஹ்வின் வசனங்களை மாற்றுபவன் எவனுமில்லை என்று கூறுகிறது. சிலர் சட்ட மாற்றங்கள் உள்ளது என்று கூறலாம். அவர்களின் அக்கருத்துக்களைக் கொண்ட வசனங்கள் எதுவும் திருக்குர்ஆனில் இல்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.