அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Nov 14, 2014

கெண்டைக்கால் திறத்தல் என்பதன் விளக்கம்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 249 இல் கெண்டைக்கால் திறக்கப்பட்டு என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

இவ்வசனத்தில் (திருக்குர்ஆன் 68:42) கெண்டைக்கால் திறக்கப்பட்டு என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது.

இறைவன் இவ்வுலகில் உள்ள மனிதர்கள் யாருடைய கண்களுக்கும் தென்பட்டதில்லை என்பதை இஸ்லாம் கூறுகிறது. ஆனால் அதற்காக இறைவன் ஒன்றுமில்லாத சூனியம் என்று கூறவில்லை.

மாறாக, மனிதன் திரும்ப உய்ர்ப்பிக்கப்பட்ட பின் மறுமை நாளில் இறைவனைக் காண முடியும் என்றும் கூறுகிறது.

மறுமையில் விசாரணை நடத்துவதற்காக வானவர்கள் புடை சூழ இறைவன் வருவான் என்றும் கூறப்பட்டுள்ளது. (திருக்குர்ஆன் 89:22)

அவ்வாறு வரும்போது தன் காலில் விழுந்து பணியுமாறு மக்களுக்கு உத்தரவு விடுவான். அதுதான் இங்கே கூறப்பட்டுள்ளது.

கெண்டைக்கால் திறக்கப்படும் நாளில் என்றால், இறைவன் தனது கெண்டைக் காலில் விழுந்து மக்களை பணியச் செய்வான் என்று பொருள்.

இவ்வுலகில் இறைவனுக்கு பணிவதை யார் வழக்கமாகக் கொண்டிருந்தார்களோ அவர்கள் பணிவார்கள்: மற்றவர்கள் இறைவன் காலில் விழ முடியாது. இது நபிகள் நாயகம் அளித்த விளக்கம். (புகாரியில் 4919 வது ஹதீஸில் இதைக் காணலாம்)

நம் விளக்கம்:

இறைவன் இவ்வுலகில் உள்ள மனிதர்கள் யாருடைய கண்களுக்கும் தென்படவில்லை. என்பதை இஸ்லாம் கூறுகிறது என்பது தவறாகும். இவ்வுலகில் இறைவனைப் புறக்கண்ணால் காண முடியாது. ஆனால் அகக் கண்ணால்  காண முடியும் என்பது இஸ்லாத்தின் கொள்கையாகும். நபி (ஸல்) அவர்கள் இறைவனை தம் அகக் கண்ணால் இருமுறை கண்டது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கெண்டைக்கால் திறக்கப்படும் நாளில் என்றால், இறைவன் தனது கெண்டைக்காலில் விழுந்து மக்களைப் பணியச் செய்வான் என்று பொருள் என்று பி.ஜே எழுதியுள்ளார். கெண்டைக்கால் திறக்கப்படும் நாள் என்றால் உண்மை வெளிப்படும் நாள் என்றுதான் பொருள்படும்.

உண்மை வெளிப்படுத்தப்படும் நாளில் சிரம்பணிந்து வணங்குவதற்காக அவர்கள் அழைக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் (அதற்கான) ஆற்றல் பெற்றிருக்க மாட்டார்கள் என்றுதான் பொருள். (திருக்குர்ஆன் 68:43)

2) காலில் விழுந்து வணங்குதல் என்பதுதான் சொல் வழக்காகும். கெண்டைக்காலில் விழுந்து வணங்குதல் என்பது சொல் வழக்கன்று.

3) சிரம்பணிந்து வணங்குவதற்கு கெண்டைக்கால் திறந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. கெண்டைக்கால் திறக்காவிட்டாலும் காலில் விழுந்து வணங்கலாம்

4) 68:42 வசனத்திற்கு, M.அப்துல் வஹ்ஹாப் தன் திருக்குர்ஆன் தர்ஜுமாவின் அடிக்குறிப்பு எண் 385 இல் கெண்டைக்கால் வெளியாக்கப்படுவது என்பது அரபு இலக்கிய வழக்காற்றில் எந்தவித திரை மறைவின்றி ஒன்றின் கடுமையான தன்மை வெளியாக்கப்படும் போது என்று பொருள்படும். இது சர்வசாதாரணமாக அரபி மொழியில் வருகிறது. கஷ்பில் அம்ரு அன்ஸாகிஹி கெண்டைக்கால் முற்றிலும் தெரிந்தது – அதாவது ஒன்றின் நிலை சந்தேகத்துக்கு இடமின்றி முழுவதாகத் தெரிந்தது – என்று இமாம் குர்துபீ ஓர் உதாரணம் கொடுக்கிறார்கள்.

கியாமத் நாளைச் சந்திக்கும் வரை மனிதர்கள் அதைப் பற்றிய அறிவை செவி வழிச் செய்தியாகவோ, எழுத்தின் வாயிலாகவோ ஓரளவுதான் தெரிந்திருப்பார்கள். ஆனால் அதை நேரெதிரே பார்க்கும் போதுதான் அதன் பயங்கரத் தன்மையை உணர்வார்கள் என்று எழுதுகிறார்.

5) தமிழ் தர்ஜுமாக்களில், மௌதூதி, தப்ஸீருல் ஹமீது ஆகியோரும், ஆங்கில மொழியாக்கங்களில் யூசுப் அலி, இப்னு கஸீர், M.H ஸாகிர், வஹீதுத்தீன் கான், மௌலவி முகம்மதலி ஆகியோரும் கெண்டைக்கால் என்பதற்கு அல்லாஹ்வின் கெண்டைக்கால் என்று எழுதவில்லை. மறுமையின் கடுமையான நிகழ்வுகள் வெளிப்படுதல், மறுமையில் உண்மைகள் வெளிப்படுதல் என்றுதான் விளக்கம் தந்துள்ளனர். பாகவியோ திரை அகற்றப்பட்டு விடும் நாள் என்று எழுதியுள்ளார். மௌலவி முகம்மதலி தன் கருத்துக்கு பைழாவி, ஜம்ஹஷ்ரி ஆகிய திருக்குர்ஆன் விரிவுரைகளை மேற்கோள் காட்டுகிறார்.

திருக்குர்ஆன் 89:23 வசனத்தில், வானவர்கள் அணியணியாக நிற்கும் நிலையில் உமது இறைவன் வருகை தருவான் என்று வருகிறது. விசாரணைக்காக வருவான் என்று பி.ஜே கூறியிருப்பது தவறாகும். அல்லாஹ்வும் அவனுடைய வானவர்களும் நிராகரிப்பவர்களிடம் வருகின்றனர் என்றால். அவர்கள் தண்டனையைக் கொண்டு வருகின்றனர் என்று பொருள் என திருக்குர்ஆன் விளக்குகிறது. (இது குறித்து 59:3; 2:211 - ஆகியவற்றில் காண்க) அதுவே இப்போதும் ஏற்படும். இறைவனுடைய வருகையும், வானவர்களின் வருகையும் நிராகரிப்பவர்களுக்கு அழிவு ஏற்படப் போகிறது என்பதைத் தெரிவிக்கிறது. வரலாறுகளில் வானவர்களைக் கண்டனர்: வானவர்கள் அவர்களை எதிர்த்துப் போர் செய்து கல்மாரி பொழிந்தனர். அந்த வானவர்களைக் கண்டதால் ஏற்பட்ட உறுதிப்பாட்டினால், பின்னர் அவர்கள் முஸ்லிம்களைச் சந்தித்த போது, பத்ருப் போரில் உங்கள் அருகில் இவ்வகையான போர்க் கருவிகள் அணிந்த குதிரைபடை வீரர்கள் போர் செய்து கொண்டிருந்தனர் என்றார்கள். இதற்கு நபித்தோழரும், ஆம்: நானும் கண்டேன் எனக் கூறி அதனை உண்மைப்படுத்தினர். பத்ருப் போரின்போது நிராகரித்தவர்களும் நம்பிக்கை கொண்டவர்களும் வானவர்களைக் காணும் அளவிற்கு அந்த ஆன்மீகக் காட்சி பொதுவாகவும், தெளிவாகவும் நிகழ்ந்தது என்று இதிலிருந்து புலனாகிறது. (அடிக்குறிப்பு எண் 5, அஹ்மதிய்யா முஸ்லிம்ஜமாஅத் திருக்குர்ஆன் தமிழ் மொழியாக்கம், பக்கம் 1358)

பி.ஜே யின் தவறான விளக்கம்: 89:23 வசனத்துக்கு புகாரி 4919 நபிமொழியை பி.ஜே தவறாக எடுத்துக் காட்டியுள்ளார். ஆனால் புகாரி இமாம் அவர்கள் இந்த நபிமொழிக்கு 68:42 வசனத்தைத் தான் எடுத்துக் காட்டியுள்ளார்கள். இதற்கு ஒன்றின் நிலை சந்தேகத்திற்கிடமின்றி முழுவதுமாக தெரிகிறது என்ற இமாம் குர்துபி தரும் விளக்கமே சரியாகும்.

ஹதீஸ் எண் 4910 ன் படி, இறைவனுக்கு மூமின்கள் சஜ்தா செய்வார்கள் என்றும், மற்றவர்களால் சஜ்தா செய்ய முடியாது என்றுதான் கூறப்பட்டுள்ளது.
Read more »

Nov 11, 2014

ஹஸ்ரத் இப்ராஹீம் நபிக்கு பி.ஜே செய்த அவமரியாதை


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 336 இல் நான் நோயாளி எனக் கூறினார் என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

இப்ராஹீம் நபி அவர்கள் ஊர் மக்களெல்லாம் திருவிழாவைக் கொண்டாட வெளியேறிய பின் சிலைகளைத் தகர்ப்பதற்காக தாம் நோயாளி என்று கூறி திருவிழாவுக்குச் செல்வதை தவிர்த்துக் கொண்டார்கள் (37:89)

இது போல் ஒரு கொள்கையை நிலைநாட்டுவதற்காக நல்ல விளைவை ஏற்படுத்துவதற்காக கூறப்படும் பொய் குற்றமாகாது என்பதை இதிலிருந்து அறியலாம் என்று எழுதியுள்ளார். மேலும் சத்தியப் பிரச்சாரத்தின் போது இது போன்ற வழிமுறைகளை கையாளுவது தடுக்கப்பட்டதல்ல என்றும் கூறியுள்ளார். (திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 432)

நம் விளக்கம்:

இந்த வசனத்தில் 37:90 இப்ராஹீம் நபி பொய் கூறினார் என்பதை திருக்குர்ஆன் அல்லது நம்பத்தகுந்த நபிமொழியில் இருந்து பி.ஜே நிரூபிக்க முடியுமா?

அல்லாஹ்வும் ரஸுலும் கூறாத ஒன்றை பி.ஜே இட்டுக்கட்டி கூறியுள்ளார் என்பதை அவரால் மறுக்க முடியுமா?

நான் நோயாளி என்று ஒரு நபி கூறுகின்ற போது அவர் நோயாளி இல்லை என்று கூறுகின்ற அதிகாரம் பி.ஜே க்கு எப்படி வந்தது?

இப்ராஹீம் நபி ஒரு உண்மையான நபியாக இருந்தார் என்று அல்லாஹ் கூறுகிறான். (19:42) ஆனால் பி.ஜே இப்ராஹீம் நபி பொய் கூறினார் என்று கூறுகின்றார். அல்லாஹ்வின் வார்த்தையை மறுக்கின்ற பி.ஜே தவ்ஹீதுவாதியா?

ஒரு நபி பொய் சொல்லமாட்டார்: பொய் சொல்லக் கூடியவர் நபியாக இருக்கமாட்டார் என்ற ஒரு நபியைப் பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களை எவ்வாறு அழைப்பது.?

இப்ராஹீம் நபியின் இந்த சம்பவத்திலிருந்து ஒரு கொள்கையை நிலைநாட்ட பொய் கூறலாம் என்று பி.ஜே கூறுகிறார். இதிலிருந்து தவ்ஹீது ஜமாஅத்தின் கொள்கைகள் பொய்யினால் நிலைநாட்டப்பட்டுள்ளன என்பது நிரூபணமாகவில்லையா?

நல்ல விளைவை ஏற்படுத்துவதற்கு பொய் சொல்லலாம் என்று கூறுகிறார். ஆனால் திருக்குர்ஆனோ பொய்யர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக(3:62) என்றும் ஒவ்வொரு பொய்யரின் மீதும் சைத்தான் இறங்குகின்றனர் (26:223) என்றும் கூறுகிறது. இப்படிப்பட்ட நல்ல விளைவை (!) ஏற்படுத்தும் எத்தனை பொய்களை பிறரை ஏமாற்ற பி.ஜே கூறினாரோ! அல்லாஹ்வே நன்கறிவான்.

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் இல், 432 இப்ராஹீம் நபி பொய் சொன்னது ஏன்? எனும் தலைப்பில் இவ்வாறு எழுதியுள்ளார்:

திருக்குர்ஆன் 21:63 இல், இப்ராஹீமே, நீர் தாம் எங்கள் கடவுள்களை இவ்வாறு செய்தீரா? என்று கேட்டனர். இல்லை அவற்றில் பெரிய சிலை தான் செய்தது என்று தமிழாக்கம் செய்துவிட்டு விளக்க அட்டவணையில் பெரிய சிலைதான் உடைத்தது என்று கூறினார்கள்... ஆனால் அவர் கூறியது உண்மையல்ல.

நம் விளக்கம். பி.ஜெக்கு ஒரு நபியின் இலக்கணமும் தெரியவில்லை. பொய்யின் இலக்கணமும் தெரியவில்லை. ஒரு கூற்று பொய் என்பதற்கு நிபந்தனை, அது பிறரை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லாதது சொல்லப்பட்டிருக்க வேண்டும், சிலை உடைப்பு விசயத்தில் ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) அவர்கள் தம்மை ஏமாற்றுவதற்காக அவர்களது சமுதாயத்தினர் துளியும் கருதவில்லை. காரணம் இச்செயலை செய்தவர் ஒருவர் உண்டு, யார் என்று பெரிய சிலையிடம் கேளுங்கள் என்று கூறினார். எனவே அவர்கள் வெட்கத்தால் தலைகுனிந்தவர்களாக, திரும்பிச் சென்றதாக அடுத்து வரும் வசனங்கள் கூறுகிறது. (21:65,66) எனவே ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) கூறியது பொய் அல்ல. alim.org இல் மாலிக் அவர்கள் திருக்குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பில் இந்த வசனத்தை இவ்வாறு மொழி பெயர்த்துள்ளார்.  He replied, "Surely someone has done it; the chief of them, that is! Ask them, if they can speak!" மேல் உள்ள லிங்கை கிளிக் செய்யவும். ஆனால் சிலை வணங்கிகளாக இருந்த அந்த சமுதாயத்தினர் சுமத்தாத குற்றச் சாட்டை பி.ஜே ஹஸ்ரத் இப்ராஹீம் (அலை) மீது சுமத்துகின்றார் இல்லை என்று பொய் கூறியதுடன் பெரிய சிலை மீது அக்குற்றத்தைப் போட்டதாக எழுதியுள்ளார். இதனை நியாயப்படுத்த திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 432 இல் அவர் கூறுவதாவது, சொல்பவருக்கும் பொய் சொல்கிறோம் என்று தெரிகிறது. கேட்பவருக்கும் வேறு ஒரு அர்த்தத்தில் சொல்லப்படுகின்ற பொய் என்று தெரிகிறது அப்படியிருந்தால் இது பொய் வடிவில் அமைந்த மெய் என்றுதான் கூற வேண்டும் என்று பி.ஜே எழுதுகிறார்.

அதாவது இப்ராஹீம் நபிக்கும், அந்த மக்களுக்கும் அது பொய் என்று தெரிகிறதாம். இப்படியிருந்தால் அது பொய் வடிவில் அமைந்த மெய்தான் என்கிறார். பி.ஜே.

நான் கேட்கிறேன்: இன்று ஏதோ சில அமைப்புகள் செய்கின்ற தீவிரவாத செயல்களுக்கு, ஊடகங்கள் இஸ்லாமிய தீவிரவாதம் என்றும் முஸ்லிம் தீவிரவாதி என்றும் கூறுகின்றன. இதனை பி.ஜே மேலே சொன்ன அளவுகோலின் அடிப்படையில், முஸ்லிம் தீவிரவாதி, இஸ்லாமிய தீவிரவாதம் என்பதை பொய். பொய் வடிவில் அமைந்த மெய் என்று ஏற்றுக் கொள்வார் போலும். உண்மையை வேறு வடிவில் கூற வேண்டுமே ஒழிய பொய்யை எந்த வடிவில் யார் கூறினாலும் அது பொய் தான். மெய்யாகாது. எனவே பி.ஜே எதிர்காலத்தில், பொய்க்கு வரிந்து கட்டிக் கொண்டு வக்காலத்து வாங்குவதை விட்டு விட வேண்டும். என்பதுதான் நம் வேண்டுகோள்.
Read more »

மலக்குகளைப் பற்றிய தவறான விளக்கம்.


ஈமான் கொள்ள வேண்டியவற்றுள் ஓர் அம்சம் மலக்குகள் மீது ஈமான் கொள்வதாகும். மலக்குகளைப்பற்றி பி.ஜே தன் திருக்குர்ஆன் விளக்கம் எனும் நூலில் பில்லி சூனியம் என்ற தலைப்பில் இவ்வாறு எழுதுகிறார்:

மனிதனின் தகுதியைப்பற்றி முன்பே விமர்சனம் செய்து அந்த விமர்சனம் தவறு என்று இறைவன் விளக்கிய பிறகு தவறு என்று ஒப்புக் கொண்டவர்கள் வானவர்கள்.

இத்தகைய இயல்பு படைத்த வானவர்கள் இன்னொரு முறை எப்படி இறைவனிடம் ஆட்சேபனை செய்திருப்பார்கள்? மலக்குகள் ஆரம்பத்தில் ஆட்சேபனை செய்தபோது அவர்களுடன் செய்த்தான் இருந்தான். மேற்கண்டவாறு ஆட்சேபனை செய்யுமாறு அவர்களை அவன் தூண்டி விட்டிருக்க முடியும்?

செய்த்தான் அவர்களை விட்டும் வெளியேற்றப்பட்ட பிறகு முதல் ஆட்சேபனைக்காக ஏற்கனவே சூடுபட்டிருந்த மலக்குகள் எப்படி மறுபடியும் ஆட்சேபனை செய்திருப்பார்கள்?

நம் விளக்கம்:


சொர்க்கத்தில் மலக்குகளுடன் சைத்தானும் இருந்தால் ஆதமின் படைப்பு பற்றி ஆட்சேபனை செய்யுமாறு அவர்களை அவன் தூண்டி விட்டிருக்க முடியும்
– என்று பி.ஜே எழுதுகிறார்.

இந்த அபத்தமான கருத்துக்கு பி,ஜே.


1. திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி ஆதாரம் தரமுடியுமா?

2. அல்லாஹ் அவர்களுக்கு (மலக்குகளுக்கு) எதைக் கட்டளை இடுகின்றானோ அதற்கு அவர்கள் மாறு செய்யமாட்டார்கள். (திருக்குர்ஆன் 66:6) என்ற இறைவசனத்திற்கு மாற்றமாக சைத்தானின் தூண்டுதலுக்கு இரையாகி மலக்குகள் ஆட்சேபனை செய்து சூடுபட்டார்கள் என்று பி.ஜே யினால் எப்படி என்ன முடிகிறது?

இரண்டாவதாக கலைச் சொற்கள் (அரபி) எனும் தலைப்பில் இப்லீஸ் எனும் சிறு தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

முதல் மனிதர் ஆதம் படைக்கப்படுவதற்கு முன் நல்லோரில் ஒருவனாக இருந்தால் இப்லீஸ்

நம் விளக்கம்:

இவருடைய இக்கூற்றுக்கு, திருக்குர்ஆன், நபிமொழி ஆதாரங்களை இவர் காட்ட முடியுமா? அவன் (ஏற்கனவே) நிராகரிப்பவர்களைச் சேர்ந்தவனாக இருந்தான். (2:35) என்று திருக்குர்ஆன் கூறுகிறது. எனவே இப்லீஸ் நல்லவனாக இருந்தால் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவன் நிராகரிப்பவனாகவே இருந்தான் என்றும் இவ்வசனம் கூறுகிறது.

மூன்றாவதாக வானவர்கள் – மலக்குகள் நம்புதல் எனும் தலைப்பில் வானவர்கள் நரகின் காவலர்கள் எனும் சிறு தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

வானவர்கள் சொர்க்க வாசிகளுக்குப் பணிவிடை செய்வார்கள். – 13:23, 15:46, 21:103, 41:31

நம் விளக்கம்:

பி.ஜே குறிப்பிட்டுள்ள திருக்குர்ஆன் வசனங்களை நாம் பார்க்கின்ற போது மலக்குகள் பணிவிடை செய்தார்கள் என்று எங்கும் வரவில்லை. மாறாக, அவர்கள் சொர்க்கத்தில் நுழைந்து சுவர்க்கவாசிகளுக்கு ஸலாம் ச்கூருவார்கள் என்றும் சொர்க்கவாசிகளுக்கு கிடைக்கக்கூடிய அருட்கொடைகளை எடுத்துக்கூறுவார்கள் என்றுமே வருகிறது. எனவே பி.ஜே கூறியுள்ள மலக்குகள் பணிவிடை செய்வார்கள் என்பது தவறான கருத்தாகும்.

நான்காவதாக, மரணத்தின் போது ரூஹைக் கைப்பற்றும் மலக்குகளை மலைக்குள் மௌத் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

பி.ஜே சுயமாக தரும் விளக்கத்தின் அடிப்படையில், ஈஸா நபி இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்தார் என்றால், மலைக்குள் மௌத்தால் கைப்பற்றப்பட்ட உயிர்களைத் திரும்ப அவர்களின் உடலில் புகுத்தும் மலக்கின் பெயர் என்ன? அந்த மலைக்கு அப்படி ஒரு செயலைச் செய்வார் என்பதற்கு திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி ஆதாரம் உண்டா?
Read more »

Nov 10, 2014

இவ்வுலகில் இறைவனை காணமுடியும்!


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 21 இல் பி.ஜே இறைவனைக் காண முடியுமா? என்னும் தலைப்பில் இவ்வாறு எழுதியுள்ளார்:

இறைவனை இவ்வுலகில் காண முடியாது என்ற கருத்தை வலியுறுத்தி எழுதியுள்ளார்.

அவனை பார்வைகள் அடைய முடியாது. அவனோ பார்வைகளை அடைகிறான். என்று அல்லாஹ் கூறுகிறான். (திருக்குர்ஆன் 6:103)

நம் விளக்கம்:

இறைவனை இவ்வுலகில் யாரும் புறக்கண்ணால் காண முடியாது அவனோ அகக்கண்ணின் மூலம் பார்வைகளை அடைகிறான். மறுமையில் அல்லாஹ்வை காண முடியும் என்று நபிமொழி மூலம் அறிகிறோம். இம்மையில் குருடராக இருப்பவர் மறுமையிலும் குருடராகவே இருப்பார் (17:73) என்ற திருக்குர்ஆன் வசனம். இம்மையில் யார் தம் அகக்கண் மூலம் அல்லாஹ்வை காணவில்லையோ அவர்கள் மறுமையிலும் காண முடியாது என்பதை விளக்குகிறது.

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 21 இல், திருக்குர்ஆன் 6:104 வசனத்துக்கு அவனைப் பார்வைகள் அடையாது; அவனோ பார்வைகளை அடைகிறான் என்று பொருள் கூறும் பி.ஜே தன் தர்ஜுமாவில்,

அவனைக் கண்கள் பார்க்காது: அவனோ கண்களைப் பார்க்கிறான் என்று தவறான பொருளைக் கூறியுள்ளார். இவ்வாறு தவறான பொருளை பி.ஜே கூறுவதன் காரணம் இவ்வுலகில் இறைவனை அகக்கண்ணாலும் காண முடியாது என்ற தன் கருத்தை தவறான பொருளின் மூலம் நிலை நாட்ட முயன்றுள்ளார்.

ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், புறத்தில் இறைவனைப் பார்க்க முடியாதே தவிர அகத்தில் இறைவனைப் பார்க்க முடியும் என்று கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது அகத்தால் இறைவனை இரண்டு முறை பார்த்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்கள். (முஸ்லிம் 285) இது அகக்கண்ணால் அல்லாஹ்வை பார்க்க முடியும் என்பதை உறுதி செய்கிறது. பி.ஜே கூறுகிறார். இவ்வுலகில் இறைவனைக் காண முடியும் என்ற நம்பிக்கையினால் மனித குலத்துக்கு கேடுதான் ஏற்படும் நன்மை ஏற்படாது என்று எழுதுகிறார். இது தவறான வாதமாகும். நாத்திகர்கள், இறைவன் உண்டு; மறுமை உண்டு என்ற நம்பிக்கையினால் மனித குலத்துக்கு கேடு தான் ஏற்படும். நன்மை ஏற்படாது என்று கூறுவதற்கும் பி.ஜே கூறுவதற்கும் அணுவளவும் வித்தியாசம் இல்லை.

இறைவனை இவ்வுலகில் அகக்கண்ணால் காண முடியும். என்று ஒருவன் நம்பி அவனைக் கண்டறிவதே அறிவுடைமையாகும்.

திருக்குர்ஆன் 17:73 வசனம். இந்த இ(ந்த உலகத்)தில் குருடராக இருப்பவர், மறுமையிலும் குருடராகவே இருப்பார் என்று கூறுகிறது. இந்த வசனம் இவ்வுலகில் இறைவனை காண முடியும் என்றும். அகக்கண்ணால் இவ்வுலகில் இறைவனைக் காணாதவர்கள் மறுமையில் குருடராகவே இருப்பார்கள் என்றும் கூறுகிறது.

பி.ஜே எழுதுகிறார்:

தாம் இறைவனைப் பார்த்ததாக எத்தனையோ ஆன்மீகவாதிகள் மக்களை ஏமாற்றி விடுகின்றனர். இறைவனை எவரும் காண முடியாது என்று மக்கள் நம்பினால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பெருமளவிலான மோசடியை ஒழித்து விடமுடியும் இது பி.ஜே யின் வாதம்.

இறைவன் இருப்பதாக கூறி எத்தனையோ ஆன்மீகவாதிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இறைவன் இல்லை என்று மக்கள் நம்பினால் ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் பெருமளவிலான மோசடியை ஒழித்து விட முடியும் என்று இறை மறுப்பாளர்கள் கூறுவதற்கும், பி.ஜே யின் வாதத்திற்கும் இடையில் இம்மியளவும் வேறுபாடில்லை.

இறைவனை அகக்கண்ணால் காண முடியும் என்பது உண்மையா? பொய்யா? என்பதைக் காண வேண்டும். உண்மை என்றால் நன்மைதான் விளையும். பொய் என்றால் கேடுதான் விளையும் என்று நம்புவதே அறிவுடையோரின் செயலாகும்.

கனவும் இறைச் செய்தியும்.

1) நபி (ஸல்) அவர்களுக்கு துவக்கத்தில் இறைச் செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போலத் தெளிவாக இருக்கும். (புகாரி ஹதீஸ் எண் 3)

ஹஸ்ரத் இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் தன் மகனை அறுப்பது போல் கண்ட கனவும் ஓர் இறைச் செய்தியே. அதனால்தான் இஸ்மாயீல் (அலை) அவர்கள் தந்தையே! அல்லாஹ் உங்களுக்கு இட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள் என்று கூறி தந்தை கண்ட கனவி இறை கட்டளை என்று கூறுகிறார்.

புறக்கண்ணை விட அகக்கண்ணுக்கு ஆற்றல் மிகமிக அதிகம் என்பதினாலும் இறைவன் தன் கட்டளைகளையும், வஹியையும், இறைக் காட்சியையும் அகக்கண்ணால் இரு முறை கண்டதைத் திருக்குர்ஆன் கூறுகிறது. (53:12,14) ஹஸ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதனையே (முஸ்லிம்285) கூறியுள்ளார்கள்.

எனவே இம்மையில் இறைவனை அகக் கண்ணால் காண முடியும் என்று திருக்குரானும் நபிமொழியும் கூறுகிறது. இவ்வாறு கூறுபவர்கள் வறுபட்ட கருத்தைக் கூறுகின்றனர் என்பது தெளிவு.

மேலும் மூஸா நபி, என் இறைவா! நான் உன்னைப் பார்க்கும் பொருட்டு நீ (உன்னை) எனக்குக் காட்டுவாயாக என்று வேண்டினார் இதற்கு அவன் உம்மால் என்னை ஒரு போதும் காணவியலாது.(7:144) என்று கூறுகிறான். அதாவது புறக்கண்ணால் தன்னைக் காணவியலாது என்றே இறைவன் கூறுகிறான். அதனை நிரூபிக்க மலையைத் தவிடுபொடியாக்கிக் காட்டுகிறான். அவ்வளவு ஏன்? நம் புறக்கண்ணால் சூரியனின் ஒளியைக் காணும் போது கண் கூசுகிறது. எனவே, ஒளிமயமான இறைவனைப் புறக்கண்ணால் காண முடியாது. அகக்கண்ணால் காண முடியும் என்பதையே அந்த உள்ளம் தான் கண்டதைக் குறித்துப் பொய்யுரைக்கவில்லை. அவர் பார்த்தது குறித்து நீங்கள் அவருடன் வாக்குவாதம் செய்கிறீர்களா? நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார் (53:12-14) இந்த வசனங்கள் கூறுகின்றன.

உள்ளம் கண்டது என்றும், மறு முறையும் அவனைக் கண்டார் என்றும், இறைவனை நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜில் தன் அகக் கண்ணால் இருமுறை கண்டது கூறப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அவருடன் வாக்குவாதம் செய்தது மிஹ்ராஜ் சம்பவத்தைத்தானே தவிர, ஜிப்ரீல் (அலை) அவர்களைச் சந்தித்தது பற்றி அன்று, இச்சம்பவங்கள் மிஹ்ராஜ் சம்பவங்கள் என்பதை நபிமொழியுடன் ஒப்பு நோக்கிப் பார்த்தால் தெளிவாகும். திருக்குர்ஆன் முதல் வசனம் இறங்கும் போதே நபி (ஸல்) அவர்கள், ஜிப்ரீல் (அலை) அவர்களை ஹிரா குகையில் கண்டுவிட்டார்கள். அதன் பின்னர் பல முறை அவர்களைக் கண்டு விட்டார்கள். எனவே மிஹ்ராஜின் போது நபி (ஸல்) அவர்கள் தன் மனக்கண்ணால் கண்டது இறைக்காட்சியைத் தவிர ஜிப்ரீல் (அலை) அவர்களை அல்ல.

மேலும் மிஹ்ராஜ் பயணத்தின் இறுதியில் அல்லாஹ்வின் பெயர் கூறி இறங்குங்கள் என்று ஜிப்ரீல் கூற ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் புனித பள்ளியின் விழித்து எழுந்தார்கள். (புகாரி 7517) என்று நபிமொழியில் காணப்படுகிறது.

புனிதப்பள்ளியில் விழித்து எழுந்தார்கள் என்பதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் தூங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதும். அல்லாஹ்வின் பெயர் கூறி இறங்குங்கள் என்பது தூக்கத்தின் போது அல்லாஹ்வைக் கண்டது ரூஹ் என்பதும் மிஹ்ராஜின் இருமுறை அல்லாஹ்வை கண்டது ரூஹ் ஆகிய ஆத்மா புறக்கண் இல்லை என்றும் தெளிவாகிறது.
Read more »

வானத்தில் வாசல் திறத்தல் – பி.ஜே யின் தவறான விளக்கம்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 177 இல் வானத்தின் வாசல் திறக்கப்பட மாட்டாது என்னும் தலைப்பில் பி.ஜே திருக்குர்ஆன் 7:40 வது வசனத்திற்கு இவ்வாறு எழுதுகிறார்.

இறைவசனங்களை மறுத்துப் பெருமையடித்தவர்கள் இவ்வுலகில் வாழும் போது செய்யும் பிராத்தனைகள் வானத்தை அடையாது. இவ்வுலகிலும் நஷ்டமடைவார்கள்: மறுமையில் நரகத்தையும் அடைவார்கள் எனபது தான் இதன் கருத்தாக இருக்க முடியும்.

நம் விளக்கம்:

திருக்குர்ஆன் 7:40 வது வசனத்தின் பொருள் பி.ஜே தன் தமிழாக்கத்தில்,

நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளைத் தண்டிப்போம். இந்த வசனத்தில் சொர்க்கமும் நரகமும் எடுத்துக் கூறப்படுகிறது. இதற்கு முன் பின் வசனங்களும் (7:39; 7:41) சொர்க்கம் நரகம் பற்றியே கூறுகின்றன. எனவே இங்கு வானத்தின் வாசல் என்பது சொர்க்கத்தின் வாசல் என்றே பொருள்படும். மேலும் 7:40 வது வசனத்தை 7:36 வது வசனத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். 
 
திருக்குர்ஆன் 7:40 வது வசனம்
திருக்குர்ஆன் 7:36 வது வசனம்
1) நமது வசனங்களைப் பொய் எனக் கருதி
1) நமது வசனங்களைப் பொய் எனக் கருதி
2) அதைப் புறக்கணிப்போருக்கு
2) அதைப் புறக்கணிப்போர்
3) வானத்தின் வாசல் திறக்கப்படமாட்டாது.
3) நரகவாசிகளே

 
இதிலிருந்து வானத்தின் வாசல் திறந்தால் சொர்க்கம் என்றும், திறக்கவில்லை என்றால் நரகம் என்றும் வெள்ளிடை மலைபோல் விளங்குகிறது.

நபி (ஸல்) அவர்கள், எனக்கு முன்னர் வந்த இஸ்ரவேல் சமுதாயத்தினர் 72 பிரிவுகளாகப் பிரிந்தனர். என் சமுதாயம் 73 பிரிவுகளாகப் பிரியும், அந்த 72 பிரிவுகளாகப் பிரியும். அந்த 72 பிரிவுகளும் என்னைச் சேர்ந்தவர்கள் இல்லை. நான் அவர்களைச் சேர்ந்தவனும் இல்லை. அவர்கள் நரகிற்கு உரியவர்கள். அந்த ஒரு பிரிவு யார் என்றால், நானும் என் தோழர்களும் எப்படி இருக்கிறோமோ அப்படி அவர்கள் இருப்பார்கள் என்று கூறியுள்ளார். இதில் சொர்க்கத்திற்கு உரிய ஜமாஅத்தும், நரகிற்கு உரிய 72 பிரிவுகளும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பைசல் மன்னர் காலத்தில் இஸ்லாத்தின் 72 பிரிவுகளும் அவரது தலைமையில் ஒன்றுகூடி காதியானிகள் முஸ்லிம்கள் இல்லை என்று தீர்ப்பு வழங்கியதும், பூட்டோ தலைமையில் பாகிஸ்தானில் 72 பிரிவுகளும் காதியானிகள் முஸ்லிம்கள் இல்லை என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதும் அந்த 72 பிரிவுகள் யார் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டு விளக்கி விட்டது.
Read more »

ராட்சச பறவை என்பது பி.ஜே யின் கற்பனைக் கதையாகும்.


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 416 இல் ராட்சதப் பறவை என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதியுள்ளார்;

இவ்வசனத்தில் (22:31) இணை கற்பிப்பவனுக்கு உதாரணம் கூறும் போது, பறவைகளால் தூக்கிச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டவனைப் போல் என்று கூறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) காலம் முதல் இன்று வரை எந்தப் பறவையும் மனிதனைத் தூக்கிக் கொண்டு சென்று வேறு இடத்தில் போடுமளவுக்குப் பெரிதாக இருக்கவில்லை.

மனிதனை விட பன்மடங்கு பெரிதாகவும் வலிமைமிக்கதாகவும் ஒரு பறவை இருந்தால்தான் இது சாத்தியமாகும்.

இது போன்ற பறவைகளை நாம் காணாவிட்டாலும் இத்தகைய பறவைகள் இருந்துள்ளன எனபதைப் படிமங்களை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

யானையை விடப் பெரிய அளவிலான பறவையின் எலும்புகள் புதையுண்டு கிடந்ததைக் கண்டு பிடித்துள்ளனர்.

இப்பறவைகளின் மரபணுக்கள் கிடைத்துவிட்டால் அதைக் கொண்டு மீண்டும் அப்பறவைகளை உண்டாக்கவும் முடியும்.

கடந்த காலத்தில் இத்தகைய பறவை இருந்தது என்பதாலும், மரபணு கிடைத்து விட்டால் எதிர்காலத்தில் அவை மறு உற்பத்தி செய்யப்பட வாய்ப்புண்டு என்பதாலும்தான், பறவைகளால் தூக்கிச் செல்லப்பட்ட மனிதன் போல் என்று இறைவன் உதாரணம் காட்டியுள்ளான்.

நம் விளக்கம்:

திருக்குர்ஆன் 22:32 வசனம் வானத்திலிருந்து விழுந்தவனைப் போல் ஆவான். அவனைப் பறவைகள் பறித்துச் செல்கின்றன என்று கூறுகிறது. ஆனால் பி.ஜே பறவைகளால் தூக்கிச் செல்லப்பட்டு வீசி எறியப்பட்டவனைப் போல் என்று தலைகீழாக விளங்கிக் கொண்டு அதன் அடிப்படையில் ஒரு கற்பனை விளக்கத்தைக் கூறி படிப்பவர்களை தவறான கருத்தின் பக்கம் இழுத்துச் செல்கிறார்.

இறந்து கிடக்கின்றவற்றின் உடலைப் பறவைகள் கொத்தித் தின்பதை நீங்கள் டிஸ்கவரி சேனலில் தெளிவாகக் காணலாம். அதுதான் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

வானத்திலிருந்து விழுந்தவனைப் பறவைகள் பறித்துச் செல்கின்றன என்று பறவைகள் என்பது பன்மையில் வந்திருப்பதால் மனிதனை தூக்கிச் செல்லக்கூடிய ஒரு ராட்சதப் பறவை என்பது தவறு என்று தெரிகிறது. தூக்கிச் செல்லும் அப்பறவை அவனை ஏன் வீசி ஏறிய வேண்டும்? நடமாடித்திரியும் மனிதர்களை தூக்கிச் சென்று வானத்திலிருந்து வீசி எறிந்து விளையாடும் செயலைத்தான் அப்பறவை செய்யுமா? பூமியில் கிடக்கும் உணவையும், எலி, முயல் போன்றவைகளையும் பறவைகள் தூக்கிச் சென்று தின்று தீர்க்கின்றன. இதுவே பறவைகள் இயல்பாகும். பி.ஜே யின் கற்பனை ராட்சதப் பறவை வீசி எறிந்து விளையாடும் போலும்.

திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன், எல்லாம் அறிந்த இறைவனால் அருளப்பட்ட வேதம். அதில் கூறப்படும் கருத்து அன்றும் இன்றும் என்றும் பொருந்தும் வண்ணம் அமைந்திருக்கும் என்பதை அறிவுடையோர் அறிவர். ஒரு மனிதனை ஒரு ராட்சதப் பறவை வானில் தூக்கிச் சென்றது என்று அன்று கூறப்பட்டிருந்தால் அவ்வசனம் ஏளனத்திற்கு ஆளாகியிருக்கும். அவ்வாறு ஆகவில்லை. என்பதிலிருந்து அது அப்படி ஒரு பொருளைத் தராது என்று அறிதல் வேண்டும். இரண்டாவதாக எதிர்காலத்திற்கும் ஏற்புடையதாக – பொருந்துவதாக இருக்கவேண்டும். மனிதர்களை தூக்கிச் செல்லும் ராட்சதப் பறவைகளை மனிதனே உருவாக்குவான் என்பது எவரும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். ஒரு வாதத்திற்காக இந்தக் கற்பனையை நாம் ஏற்பதாக இருந்தால் அவ்வாறு உருவாக்கப்படும் ராட்சதப் பறவையினால் ஏற்படும் விளைவுகளை அவர்கள் சிந்தித்துப் பின்னர் தான் அதனைச் செயல்படுத்துவார்கள். அப்பறவையால் மனித குலத்துக்கும் பிறவற்றுக்கும் தீங்கு விளையும் என்றால் அதனைச் செய்யமாட்டார்கள் என்பதையாவது புரிந்து கொள்ளவேண்டும்.
Read more »

ஓரங்களில் குறையும் பூமி என்பது கடல் அரிப்பில்லை


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 243 – இல் ஓரங்களில் குறையும் பூமி என்னும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு வருவதை சமீப காலத்தில்
விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பு, கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது.

எனவே நிலப்பரப்பு ஓரங்களில் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முன்பு திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதற்கு இவ்வசனங்கள் (13:41, 21:44) தெளிவான சான்றாக அமைந்திருக்கின்றன.

நம் விளக்கம்:

திருக்குர்ஆனின் வசனங்களுக்கு நாம் பொருள் கூறி விளக்கும் போது முன் பின் வசனங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு முன்பின் வசனங்களை கருத்தில் கொள்ளாவிட்டால் அல்லாஹ் எக்கருத்தை வலியுறுத்த நினைக்கின்றானோ அக்கருத்து திசை திருப்பப்பட்டோ, மாற்றப்பட்டோ போய்விடும். என்பதற்கு இவ்விருவசனங்களும் சான்றாகும். நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வந்துள்ளது என்பது உண்மை. என்றாலும் இவ்விரு வசனங்களும் அதைக் குறித்துக் கூறவில்லை என்பதை அவ்விரு வசனங்களுக்கு முன்னர் உள்ள வசனங்களை கருத்தூன்றி படிப்போர் அறியலாம்.

13:41 வசனத்தில், தூதுச் செய்தியை தெரிவிப்பது மட்டுமே உம்மீது (பொறுப்பாக) உள்ளது. (அவர்களிடம்) கேள்விக் கணக்குக் கேட்பது எம்முடைய போருப்பெயாகும் என்றும்,

13:42 இல் நாம் (அவர்களின்) நிலத்தை அதன் எல்லைகளிலிருந்தும் சுருக்கிக் கொண்டே வருவதை அவர்கள் கண்டதில்லையா? மேலும் அல்லாஹ்வே தீர்ப்பு வழங்குகிறான். அவனுடைய தீர்ப்பை மாற்றுபவர் எவரும் இல்லை. மேலும் அவன் விரைவில் கணக்கெடுப்பவன் ஆவான் என்றும்.

13:43 இல், இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் திட்டங்கள் தீட்டினர். ஆனால் (நிறைவேறும்) திட்டங்கள் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரியன. ஒவ்வொரு மனிதனும் செய்வதனை அவன் அறிகின்றான். வரவிருக்கின்ற அந்த வீட்டின் (நல்ல) முடிவு எவருக்கு உரியதாகும் என்பதை அந்த நிராகரிப்போர் விரைவில் அறிவர் என்றும் வருகிறது.

அதாவது, அல்லாஹ்வின் தூதர் தன் சமுதாய மக்களிடம் தன் தூதுச் செய்தியைக் கூறி அம்மக்களை இறைவழியில் அழைக்கிறார். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரை ஏற்றுக் கொள்கின்றனர். இவ்வாறு நிராகரிக்கும் அம்மக்களின் நாடு சுருங்கிக் கொண்டே வருகிறது. இதுவே கடந்த கால வரலாறு, நிராகரிப்போர் இதனை நன்கு அறிவார்கள் என்ற கருத்து கூறப்படுகிறது.

21:45 நாம் அவர்களுக்கும் அவர்களின் மூதாதையர்களுக்கும் ஒரு நீண்ட காலம் வரை மிகுதியான வசதிகளை வழங்கியிருந்தோம். நாம் அவர்களின் நாட்டை அதன் எல்லா எல்லைகளிலிருந்தும் சிறிதாக்கிக் கொண்டே வருவதை அவர்கள் காணவில்லையா?

21:46 நீர் அவர்களிடம்.... கேட்க முடியாது.

21:47 உம்முடைய இறைவனது தண்டனையின் வெப்பக் காற்று அவர்களைத் தீண்டினால், அவர்கள் எங்களுக்கு அழிவுதான், நாங்கள் அநீதியே இலைத்துக் கொண்டிருந்தோம் எனக் கட்டாயம் கூறுவர்.

இவ்வாறு திருக்குர்ஆன் நெடுகிலும் முழு உலகுக்கும் பல்வேறு காலகட்டங்களில் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டு, ஓரிறைக் கொள்கை மூலம் மக்கள் ஈர்க்கப்பட்டு அவர்கள் ஏற்றுக் கொண்டதையும் இவ்வாறு நிராகரிப்பவர்களின் நிலப்பகுதி சுருங்கியதையும் எடுத்துக் கூறப்படுகிறது. இதனையே நீங்கள் பூமியில் பயணம் செய்து (நபிமார்களைப்) பொய்ப்படுத்தியவர்களின் முடிவினைப் பாருங்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (திருக்குர்ஆன் 16:37, 3:138, 6:12, 12:110, 22:47, 35:45, 47:11)

நாம் வாழ்கின்ற இந்த நூற்றாண்டிலும் ஏகத்துவக் கோட்பாட்டை அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத் முழு உலகிலும் பரப்பி வருவதையும், ஏறக்குறைய 200 நாடுகளில் 20 கோடி மக்கள் அதனைத் தழுவி உண்மையான முஸ்லிம்களாகி நிராகரிப்பவர்களின் எல்லைகள் சுருங்குவதையும் அறிவுக்கண்ணுடையவர் காணலாம். மேலும் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்களை பொய்ப்படுத்தியவர்களுக்கு ஏற்பட்ட தீய முடிவையும் காணலாம். உண்மையான நபிமார்களை பொய்ப்படுத்தியவர்களை அல்லாஹ் வெள்ளப்பெருக்கு, கொள்ளை நோய், பூமி அதிர்ச்சி, புயல் காற்று போன்றவற்றை அனுப்பி அளித்துள்ளான். அப்பேரழிவுகள். இன்று நாளும் நடப்பது மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) ஒரு உண்மையான தூதர் என்பதற்கு அடையாளங்களாகும்.
Read more »