இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இஸ்ரவேலர்களுக்காக மட்டும் அனுப்பப்பட்ட ஈசா நபி (அலை) அவர்கள் இன்று வரை மரணிக்காமல் வானத்தில் இருப்பதாகவும் கடைசிகாலத்தில் அவரே வானத்திலிருந்து இறங்கி வந்து உலகெங்குமுள்ள பன்றிகளைஎல்லாம் கொன்று உலகில் காணப்படும் எல்லாச் சிலுவைகளையும் உடைத்துக் கடைசியில், ஒரு கழுதையின் மேல் ஏறி வரும் தஜ்ஜாலைக் கொன்று, பின்னர் உலகெங்கும் இஸ்லாத்தின் வெற்றிக்கொடியை பறக்கச் செய்வார் என்ற மூட நம்பிக்கையைத் தற்கால முஸ்லிம்கள் பலர் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் ஹஸ்ரத் ஈசா நபி (அலை) அவர்களுக்கொப்பான மஸீஹ் தோன்றி விட்டார்கள் என்றும் அவர்கள் தஜ்ஜாலை கொன்று சிலுவைக் கொள்கையின் பொய்யை அம்பலமாக்கி இஸ்லாத்தின் உண்மையை உலகில் நிலை நாட்டி மிக வெற்றியுடன் இவ்வுலகை விட்டுச் சென்றார்கள் என்றும் அஹ்மதியா ஜமாஅத் நம்பிக்கை கொண்டிருக்கிறது.
தஜ்ஜால் என்பது கிருஸ்தவ பாதிரிமார்களின் கூட்டமென்றும் தஜ்ஜாலின் கழுதை என்பது கிருஸ்தவர்களால் உருவாக்கப்பட்ட வாகனம் என்றும் அறிவு பூர்வமாக ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் பல்வேறு சான்றுகள் மூலமாக நிரூபித்து காட்டினார்கள். ஆனால் இன்றும் முஸ்லிம்கள் தஜ்ஜாலையும் அந்தக் கழுதையையும் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.
ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் இசாலே ஔகாம் என்னும் தங்களுடைய நூலில் தஜ்ஜாலைப் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தபின் தஜ்ஜாலின் கழுதையைப் பற்றிப் பின் வருமாறு கூறுகிறார்கள்:
"தஜ்ஜாலுடைய அடையாளங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது தஜ்ஜாலுடைய கலுதையாகும். அதன் இரண்டு காதுகளுக்கிடையில் எழுபது கஜம் நீளமிருக்கும். அது மேகத்தைப் போன்று இயங்கும்"
இரயில் வண்டியின் நீளம் ஏறக்குறைய இவ்வளவு இருக்கும். அது நீராவியின் சக்தியில் மேகத்தைப் போன்று இயங்குகின்றது இந்த முன்னறிவிப்பில் நபி ஸல் அவர்கள் தெளிவான முறையில் இரயில் வண்டியைப் பற்றிதான் கூறி இருக்கின்றார்கள். இது கிருஸ்தவர்களால் கண்டு பிடிக்கப்பட்டதன் காரணமாகத்தான் தஜ்ஜாலின் கழுதை என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இந்தக் கிறிஸ்தவர்களுடைய ஏமாற்றம், பொய், வஞ்சகம் இவைகளால் இஸ்லாத்திற்கு இதற்க்கு முன் என்றும் இல்லாத அளவிற்கு தீங்கு ஏற்ப்பட்டிருக்கிறது. இவர்களிடத்தில் தான் மேகம் காற்றின் வேகத்தால் இயங்கு கின்றதைப் போன்று நீராவியின் சக்தியினால் இயங்கும் வாகனமாகிய இரயில் வண்டி இருக்கின்றது. தஜ்ஜாலின் கழுதை இதுவே ஆகும். (இசாலே ஔகாம்)
தஜ்ஜாலைப் பற்றியும் தஜ்ஜாலின் கழுதையைப் பற்றியும் ஹசரத் மஹ்தி மஸீஹ் பற்றியும் உள்ள விளக்கத்தை உண்மையின் எதிரிகள் அன்றும் இன்றும் எதிர்த்தும் ஏளனம் செய்தும் வருகின்றனர்.
ஆனால் உண்மையை விரும்புகின்ற பகுத்தறிவாளர்கள் ஹசரத் மஸீஹ் (அலை) அவர்கள் கூறும் தஜ்ஜாலின் விளக்கத்தை ஏற்று அதனை ஆதரித்து ஏளனம் செய்கின்ற போலி ஆலிம்களின் கருத்தை மறுத்துக் கொண்டிருக்கின்றனர்
உதாரணமாக பாகிஸ்தானிலுள்ள இஸ்லாமாபாத்திலிருந்து வெளிவரும் கியாமத் என்னும் கலாச்சார மாத ஏடு தீ வண்டியின் முகச் சித்திரம் கொடுத்து "தஜ்ஜாலின் கழுதை" என்னும் தலைப்பில் பின்வருமாறு எழுதியுள்ளது:
"ஹசரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹசரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
தஜ்ஜால், ஒளிவீசும் விளக்குகள் அமைந்த கழுதையின் மேலேறி வருவான். அந்தக் கழுதையின் இரண்டு காதுகளுக்கிடையில் எழுபது கஜம் நீளம் இருக்கும்.
தஜ்ஜாலுடைய கழுதை நீராவியால் இயங்கும்.
தஜ்ஜாலுடைய ஒரு காலடிக்கும் அடுத்த காலடிக்கும் இடையில் ஓர் இரவு ஒரு பகலுடைய தூரம் இருக்கும்.
தஜ்ஜாலுடைய கழுதை உரக்க சத்தம் போட்டு மக்களை அழைக்கும்
தஜ்ஜாலுடைய கலுதையிலுள்ள விளக்குகள் ஒலி வீசும். அதில் ஏராளமான வாயில்களும் ஜன்னல்களும் இருக்கும்.
அது நீர் நெருப்பின் மூலம் உருவாகும் நீராவியால் கார்மேகம் போல் இயங்கும். சில சமயம் பகலில் பயணம் மேற்கொண்டு இரவில் நின்று விடும். சில சமயம் இரவிலும் பகலிலும் இயங்கி கொண்டிருக்கும்.
.
அதனை அணுகுபவர்களை அது விழுங்கி விடும். (அதாவது தன்னுள் இடம் கொடுக்கும்)
அது தரையிலும் நீரிலும் இயங்கும் . கடல் நீர் அதன் கால் முட்டுகள் வரை இருக்கும் .
தஜ்ஜாலுடைய கழுதையின் காலத்து நாடுகளுக்கிடையில் இருப்புப்பாதைகள் விரிக்கப்படும்.
தஜ்ஜாலுடைய கழுத்தின் நெற்றியில்தான் கண்ணிருக்கும்.(மிஷ்க்காதுள் மஸாபீஹ், கன்சுல் உம்மால், பிஹாருல் அன்வார் ஆகிய ஹதீத் நூல்களிலிருந்து எடுக்கப்பட்டது)
தஜ்ஜாலின் அடையாளங்களைக் குறிப்பிட்டதன் பின்னர் கியாமத் மாத ஏடு பின்வருமாறு எழுதியுள்ளது:
"விரிவான இந்த அடையாளங்களையும், தெளிவுகளையும் படித்ததன் பின்னரும் எவராவது தஜ்ஜாலின் கழுதையை, சாதரணமான நான்கு கால்களோடு காணப்படும் கழுத்தைத் தான் என்று கூறுகிறார்கள் என்றால் ஐயத்திற்கு இடமின்றி அவர் ஒரு கழுதையாகத்தான் இருப்பார்."
"இன்றிலிருந்து ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன்னால், அறிவுத் திறனும் முதிர்ச்சியும் இல்லாத அந்த மக்களுக்கு, தஜ்ஜாலின் விஞ்சானக் கண்டுபிடிப்புகளை விளக்க வேண்டுமென்றல் அன்று காணப்பட்ட பொருட்களோடு அவற்றை ஒப்பிட்டுத்தான் கூறவேண்டியிருந்தது...
" மாறாக, தஜ்ஜாலைப் பற்றி இறை அறிவிப்பு கிடைத்த பின்னர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தஜ்ஜாலின் கழுதையை இரயில் வண்டி என்றும், விமானம் என்றும், ஜெட் என்றும் அதே போன்று தஜ்ஜால் வானத்தில் எய்யும் அம்பை ராக்கெட் என்றும், அதன் இரண்டு காதுகளை பற்றி தொலைப்பேசி என்றும் கூறியிருந்தால் அதனை அம்மக்களால் எவ்வாறு புரிந்து கொள்ளமுடியும்?"
"இறை நூல்களில் உவமானங்களாலும் உதாரனங்களாலும் ஒரு கருத்தை விளக்குவது பொதுவான வழக்கம். சுவர்கத்தின் அருட்க்கொடைகளைப் பற்றி அது மனிதனால் கற்பனை செய்ய இயலாத, எந்த ஒரு கண்ணும் கண்டிராத, எவரும் சுவைத்தரியாதஒன்று என்று கூறப்பட்டிருந்தும் சொர்க்காதில் பால், தேன் ஆகியவற்றின் ஆறுகள் ஓடும் என்று நாம் கூறுகின்றோம். அதனால் அங்கே தேனீயின் கூடுகளும் எருமைகளின் மந்தைகளும் ஏராளமாக இருக்கும் என்று பொருளல்ல. ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உவமானங்கள் மூலம் முன்னறிவித்த விஷயங்கள் நிறைவேறுவது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் உண்மைக்கான சான்றும் ஆதாரமும் ஆகும். பகுத்தறிவாளர்கள் அதன் உண்மையை புரிந்து நம்பிக்கை கொள்வார்கள். ஆனால் அறிவில்லாதவர் களான மூடர்கள் பல்வேறு சாக்குப் போக்குகளையும் விதண்டவாதங்களையும் கூறி நாங்கள் நம்பமாட்டோம் என்று விலகி விடுவார்கள்." கியாமத் மே)
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.