அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

May 17, 2014

அந் நஜாத் ஏட்டின் சிந்தனைக்கு - எம். பஷாரத் அஹ்மது.


அந்நஜாத் ஏட்டின் டிசம்பர் மாத இதழில் 18 ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

“அல் குர்ஆனின் எந்த வசனத்தில் எந்த சமூகம் செய்த தவறு சுட்டிக் காட்டப்பட்டிருந்தாலும் அந்த தவறை முஸ்லிம்களும் கண்டிப்பாகச் செய்யக்கூடாது; மீறிச் செய்தால் அந்த சமூகத்தினர் அடைந்த தண்டனையை இவர்களும் அடைய வேண்டிவரும் என்பதே சரியாகும்.

உதாரணமாக அல்குர்ஆன் 7:81 இல் “மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள். நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராக இருக்கின்றீர்கள்” என்று கடுமையாக எச்சரித்துள்ளான் அல்லாஹ்.

இந்த 7:81 இறைவாக்கை ஓதிக் காட்டி முஸ்லிம்கள் ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடக்கூடாது என எச்சரித்தால், அதை மறுத்து இந்த 7:81 வசனம் லூத் (அலை) அவர்களின் கௌமுகள்(சமூகம்) பற்றி இறங்கிய வசனம், இதைப் போய் முஸ்லிம்களாகிய எங்களிடம் ஓதிக் காட்டி இந்த தவறை நாங்கள் செய்யக் கூடாது என எச்சரிப்பது என்ன நியாயம்? என்று கேட்பார்களா? புரோகித மௌலவிகள் ஒருகால் இப்படியும் வாதிடலாம்......

என்று எழுதியுள்ளார்.

உண்மையில் திருக்குர்ஆனின் எந்த வசனத்தில் எந்தச் சமூகம் செய்த தவறு சுட்டிக் காட்டப்பட்டிருந்தாலும் அந்தத் தவறை முஸ்லிம்களும் கண்டிப்பாகச் செய்யக்கூடாது. மீறிச் செய்தால் அந்தச் சமூகத்தினர் அடைந்த தண்டனையை இவர்களும் அடைய வேண்டி வரும் என்று குறிப்பிடப்பட்டிருப்பது சரியானதே! தெளிவான கருத்தே!

இப்போது எமது கேள்வி என்னவென்றால் திருக்குர்ஆனில் அல்மூமின் அதிகாரத்தில் 34 வது வசனம்.

"இதற்க்கு முன்னர் யூசுப் தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். ஆனால் அவர் உங்களிடம் கொண்டு வந்தது குறித்து நீங்கள் சந்தேகத்தில் இருந்தீர்கள். அவர் மரணமடைந்தபோது, அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒருபோதும் அனுப்பமாட்டான் என்று நீங்கள் கூறினீர்கள். "இவ்வாறே அல்லாஹ் வரம்புமீறுபவர்களையும், (இறை அடையாளங்களில்) சந்தேகம் கொள்பவர்களையும் வழிகேடர்கள் என்று தீர்மானித்து விடுகின்றான்". ( 40:35 )

"(வழி கேடர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் தொடர்பாக (அல்லாஹ்விடமிருந்து) தங்களிடம் வந்த எந்தச் சான்றுமின்றி வாக்குவாதம் செய்கின்றனர். இது அல்லாஹ்விடமும் நம்பிக்கை கொண்டவர்களிடமும் மிக வெறுக்கத்தக்கதாகும். இவ்வாறே ஆணவமும், அகங்காரமும் கொண்ட ஒவ்வொரு உள்ளத்திலும் அல்லாஹ் முத்திரைடுகின்றான்". (40:36 )

இந்த வசனத்தில் ஹஸ்ரத் யூஸுப்(அலை) அவர்களின் சமுதாயத்தினர், யூஸுப் நபி மரணமடைந்தபோது, அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒரு போதும் அனுப்பமாட்டான் என்று கூறியதாகச் சுட்டிக்காட்டி அவ்வாறு கூறுபவர்களை வழிதவறியவர்கள் என்று திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது: இது ஒரு படிப்பினை.

அந்நஜாத் ஏட்டில் குறிப்பிட்டபடி “திருக்குரானில் எந்த சமூகம் செய்த தவறு சுட்டிக் காட்டப்பட்டிருந்தாலும் அந்தத் தவறை முஸ்லிம்களும் கண்டிப்பாகச் செய்யக்கூடாது.” அதாவது யூஸுப் நபியின் சமுதாயம் “அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒரு போதும் அனுப்பமாட்டான்” என்று கூறியது தவறு என்று மேற்சொன்ன திருக்குர்ஆன் வசனம் கூறுகிறது. இந்தத் தவறை அந்நஜாத் உட்பட முஸ்லிம்கள் பலர் செய்கின்றனரே! ஒரு சமுதாயம் செய்த தவறை முஸ்லிம்கள் கண்டிப்பாக செய்யக் கூடாது என அந்நஜாத் ஏடே குறிப்பிட்டுவிட்டு அவர்களே இந்தத் தவறை செய்யலாமா! யூசுப் நபியின் சமுதாயம் கூறியது போல், முஸ்லிம்களும் எந்தத் தூதரையும் அல்லாஹ் இனி ஒருபோதும் அனுப்ப மாட்டான் என்று கூறுவது திருக்குர்ஆன் கூற்றின்படி தவரல்லவா! அந்நஜாத்தின் உபதேசம் ஊருக்கு மட்டும்தானா! அவர்களுக்கு இல்லையா??

இவ்வாறு எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒருபோதும் அனுப்பமாட்டான் என்று கூறுபவர்களை வழி தவறியவர்கள் என்று மேற் சொன்ன திருக்குர்ஆன் வசனம் கூறுகிற போது அவ்வாறு கூறி, (அதாவது நபிக்கு பின் இனியொரு நபியை இறைவன் அனுப்பமாட்டான் என்று கூறி) மேற்சொன்ன நிலைக்கு ஆளாக வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறுவது தவறு என்பதை அந்நஜாத் உணரட்டும்.

மேற்சொன்ன திருக்குர்ஆன் வசனம் (40:34) முஸ்லிம்களுக்குப் பொருந்தாது என்று அந்நஜாத் கூறுமேயானால் அவர்கள் எழுதியதற்கு அவர்களே முரண்படுகிறார்கள் என்றே பொருள். அந்நஜாத் சிந்திக்கட்டும்; தெளிவு பெறட்டும்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.