அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

May 10, 2014

நோபல் பரிசு பெற்ற முதல் முஸ்லிம் டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கை.


நோபல் பரிசு பெற்ற முதல் முஸ்லிம் என்றப் பெருமையைப் பெற்றுத்தந்த அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாத்தின் ஒப்பற்ற தொண்டர் டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் வாழ்க்கையின் சில குறிப்புகளை இங்கு காண்போம். 

பிறப்பு: 

டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் பாகிஸ்தானில் சாஹிவால் (Sahiwal) என்னும் இடத்திலுள்ள சன்டோக்டாஸ் (Santokdas) என்னும் ஊரில் சௌதிரி முஹம்மது ஹுஸைன் அவர்களுக்கும் ஹாஜிரா பேகம் அவர்களுக்கும் 1926 ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள், 29ம் நாள் பிறந்தார்கள். டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் பிறப்பதற்கு முன்பே அதாவது 1914 ஆம் ஆண்டே அவர்களது தந்தை அஹ்மதிய்யத்தை ஏற்றுக் கொண்டார்கள். 

கல்வி: 

அப்துஸ் ஸலாம் அவர்கள் பிறந்தவுடன் அவர்களுடைய தந்தையார், அவர்களுக்குச் சிறந்த கல்வி அளிப்பதில் தங்களின் முழுக் கவனத்தையும் செலுத்தினார்கள். அப்துஸ் ஸலாம் அவர்களுக்கு இரண்டு வயது ஆகும் போதே அவர்கள் வசித்த நகரமான ஜங்கின் மிக ஆரோக்கியமான குழந்தைக்குரிய பரிசினைப் பெற்றார்கள். 

அப்துஸ் ஸலாம் அவர்கள் தங்களது ஆறரை வயதிலேயே நான்காவது வகுப்பில் சேர்ந்து படித்தார்கள். அந்த வகுப்பிலேயே அவர்கள் 40 ஆவது வாய்ப்பாடு வரை மனப்பாடமாக படித்திருந்தார்கள். அவர்கள் எட்டாவது வகுப்பு படிக்கும்போது மாவட்டத்திலேயே முதலாவதாக தேர்ச்சி பெற்று ஸ்காலர்ஷிப்பாக மாதம் ஆறு ரூபாய் பெற்றார்கள். 

அஹ்மதிய்யா ஜமாஅத் தனது ஐம்பதாம் ஆண்டின் நிறைவினையொட்டி 1939 இல் சிறந்த மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்குவதாக அறிவித்தது. 1940 ஆம் ஆண்டு அந்த ஸ்காலர்ஷிப் பெற்ற முதல் மாணவர் அப்துஸ் ஸலாம் ஆவார்கள். அவர்கள் 1942 ஆம் ஆண்டு லாகூர் அரசு கல்லூரி (Lahore Government College) யில் சேர்ந்தார்கள் அவர்கள் அந்தக் கல்லூரி நடத்திய பத்திரிக்கையின் ஆசிரியராகவும் கல்லூரி யூனியன் தலைவராகவும் பணியாற்றினார்கள். அவர்கள் B.A தேர்வில் பஞ்சாப் பல்கலைக்கழகத்திலேயே மிக அதிகமான மதிப்பெண்களைப் பெற்று முதல் மாணவராகத் தேர்ச்சிப் பெற்றார்கள். அவர்கள் தங்கள் M.A பரீட்சையிலும் முதல் மாணவராகக் கணிதத்தில் தேர்ச்சி பெற்று , கேம்பிரிட்ஜ் (Cambridge) ல் படிப்பதற்காகப் பஞ்சாப் அரசாங்கத்தால் மாதம் ரூபாய் ஐந்நூற்றைம்பது ஸ்காலர்ஷிப் பெற்றார்கள். 1943 ஆம் ஆண்டில் அவர்களின் முதல் கணிதக் கட்டுரை பத்திரிகையில் வெளியிடப்பட்டது. 

அப்துஸ் ஸலாம் அவர்கள் கேம்பிரிட்ஜிலேயே தங்கி படிக்கும்போது அவர்கள் படிப்பிற்காக ஒரு நாளைக்குப் பதினான்கு முதல் பதினாறு மணிநேரம் செலவழித்தார்கள். அவர்கள் கணிதத்தில் மட்டுமல்லாமல் இயற்பியல் பாடத்திலும் கவனம் செலுத்தினார்கள். மேலும் பல மத நூல்களையும் கற்றார்கள். தங்கள் மூன்றாண்டு படிப்பை இரண்டு வருடத்திலேயே முடித்துவிட்ட அவர்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்திய சிறப்புத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றார்கள். அவர்கள் தங்களது இரண்டாம் ஆண்டில் கதிர் இயக்கவியல் (Quantum Mechanics) மற்றும் சார்பியல் கோட்பாடு (Relativity) ஆகிய பாடங்களைப் படிக்கத் தொடங்கினார்கள். இவையே அவர்களது விசேஷ பாடங்களாக ஆனது. 

டாக்டர் பட்டம்: 

1949 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் திருமணம் முடித்துவிட்டு அவர்கள் மீண்டும் கேம்பிரிட்ஜிற்கு திரும்பினார்கள். Meson Theory யில் அவர்கள் ஆற்றிய பனி அவர்களுக்கு ‘டாக்டர்’ பட்டத்தை பெற்றுத் தந்தது. அவர்கள் இயற்பியல் (Physics) க்கு ஆற்றிய மகத்தான சேவைக்காக 1950ஆம் ஆண்டு ஸ்மித் பரிசு (Smith’s Prize) கேம்பிரிட்ஜில் இருந்து வழங்கப்பட்டது. 

1951 ஆம் ஆண்டில் அவர்கள் லாகூர் அரசு கல்லூரியில் கணிதத் துறை தலைவராக சேர்ந்தார்கள். 1953 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் அஹ்மதிய்யதிற்கெதிரான கிளர்ச்சியின் போது அவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி 1954 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்கள். இதன் மூலம் அந்தப் பல்கலைக்கழகத்தின் முதல் முஸ்லிம் பேராசிரியர் என்ற சிறப்பையும் பெற்றார்கள். 1957 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் அவர்கள் இம்பீரியல் காலேஜ் ஆப் ஸயின்ஸ் அன்ட் டெக்னாலஜி யில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்கள். அவர்கள் அந்தக் கல்லூரியில் இருந்த முதல் எட்டு ஆண்டுகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆராய்சிக் கட்டுரைகளை வெளியிட்டார்கள். அவர்கள் தங்கள் முப்பத்துமூன்றாம் வயதிலேயே (Royal Society of Scientist) என்ற அமைப்பின் பல்கலைகழக ஆட்சி உறுப்பினராக தெரிந்தெடுக்கப்பட்டார்கள். 1959 ஆம் ஆண்டு “சிதாரா-யே-பாகிஸ்தான்” என்ற பட்டம் அளிக்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். 

டாக்டர் அப்துஸ் ஸலாம் பெற்ற விருதுகள். 

டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்களின் ஆராய்ச்சிகள் வெளிவரத் தொடங்கி பல விருதுகளும் பட்டங்களும் அவர்களைச் தேடி வந்தன. அவர்கள் பெற்ற விருதுகளில் சில. 

Hopkins Prize of Cambridge University, 1957, Adams Prize, 1958, Maxwell Medal and award, 1961, Hughes Medal, 1964, Atom for Peace Medal, 1968, Oppenheimer Memorial Medal, 1971, Guthrie Medal, 1976, Sir Devaprasad Servadhikary Medal, 1977, Matteuci Medal, 1978, John Torrence Tate Medal, 1978, Royal Medal, 1978, Nobel prize, 1979, Einstein Prize, 1979, Shiri R.D Birla Award, 1979, Joseph Stephen Medal, 1980, Czechoslovak Academy of Sciences Medal 1981, Lomonosov Medal 1983, Dayemi International Peace Award, 1986. 

டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் அறிவியலுக்கு ஆற்றிய பணிக்காகக் கிடைத்த பரிசுகள், விருதுகள், பட்டங்கள் ஆகியவற்றின் பட்டியல் மிக நீண்டதாகும். அவற்றை இந்தச் சிறு கட்டுரையில் அடக்கிவிட முடியாது. ஆனால் அவர்கள் அறிவியல் உலகிற்கு ஆற்றிய மகத்தான சாதனைகளுள் சிலவற்றையாவது இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும். 

I.C.T.P யின் நிறுவுநர்


டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் தங்களுடைய இளம் வயதிலேயே தியரிடிகள் பிஸிக்ஸ் (Theoretical Physica) இல் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாய் திகழ்ந்தார்கள். இதனால் அவர்களுக்குப் பல விருதுகள் கிடைத்தன. ஆனால் இவை எல்லாவற்றையும் விட வளரும் நாடுகளில் உள்ள விஞ்ஞானிகளின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அவர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டார்கள். இதன் காரணமாக அவர்கள் 1960 ஆம் ஆண்டு “இன்டர் நேஷனல் பார் தியரிடிகள் பிஸிக்ஸ் (Internatinal Centre for Theoretical Physics) என்ற அமைப்பை நிறுவ முன் மொழிந்தார்கள். அவர்கள் தங்களுடைய விடா முயற்சியினால் தங்களது நீண்ட நாள் கனவுடன் நினைவாக்கும்வகையில் இத்தாலியில் அத்தகைய அமைப்பை நிறுவி 1964 ஆம் ஆண்டு அதன் இயக்குநராக பொறுப்பேற்றார்கள். வளரும் நாடுகளிலுள்ள நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளுக்கு ஒளிவிளக்காக விளங்கிய இந்த அமைப்பு, தற்போது உலகின் மிகச் சிறந்த விஞ்ஞானிகள் கூட அதனுடன் தொடர்பு கொள்வது தங்களுக்குக் கௌரவத்தை அளிக்கும் என்று என்னும் வகையில் உயர்ந்த – சிறந்த அந்தஸ்தைப் பெற்றுள்ளது. 

நோபல் பரிசு பெற்ற முதல் முஸ்லிம். 

லண்டன் டைம்ஸ் (London Times) என்ற பத்திரிகையின் கணிப்பின்படி டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் பௌதீக துறையில் நிகழ்த்திய மகத்தான சாதனைகளுக்காக அவர்களுக்கு 1957ஆம் ஆண்டிலேயே நோபல் பரிசு கிடைத்திருக்கவேண்டும். அன்று அவர்களுக்கு மறுக்கப்பட்ட இந்த அறிவியல் உலகின் மகத்தான சிறப்பு, இறுதியில் 1979ஆம் ஆண்டு அவர்களுக்கு கிடைத்தது. நோபல் பரிசு பெற்ற முதல் முஸ்லிம் என்ற சிறப்பு அவர்களுக்குக் கிட்டியது. 

1981 ஆம் ஆண்டு அவர்கள் இந்தியா வந்தபோது, பம்பாயில் பத்திரிகையாளர் ஒருவர் இவ்வாறு கேட்டார்: ‘நோபல் பரிசு கிடைத்த செய்தி உங்களுக்கு அறிவிக்கப்பட்ட போது அதை எப்படி பிரதிபலித்தீர்கள்? இதற்கு டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் கூறிய பதில் “அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன். செய்தி கேட்ட உடனேயே என்னுடைய இடத்திலிருந்து ஒரு மைல் தொலைவில் இருந்த மசூதிக்கு சென்று இறைவனுக்கு நன்றி செலுத்தித் தொழுதேன் என்று கூறினார்கள். 

ஸலாம் அவார்டு துவக்கம். 

நோபல் பரிசுக்கான தொகை 60,000 டாலர்கள் ஆகும். இந்தத் தொகை ஒருவருக்குள்ள பல நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றப் போதுமானதாகும். ஆனால் டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்களுக்கு இருந்த ஒரே ஆசை என்னவென்றால் முஸ்லிம் விஞ்ஞானிகள், தாம் இழந்து விட்ட பெருமைகளை மீண்டும் அடைவதைக் காண்பதே ஆகும். அதற்காகவே அவர்கள் ‘இன்டர்நேஷனல் சென்டர் பார் ஸயின்ஸ் (International Centre for Science) என்ற அமைப்பை ஏற்படுத்த ஒபெக் (OPEC) மாநாட்டில் யோசனை கூறினார்கள். அவர்கள் தங்களுக்குக் கிடைத்த நோபல் பரிசு தொகையான 60,000 டாலர்களையும் இந்த அமைப்பிற்குக் கொடுத்துவிட்டார்கள். இப்பொழுது அதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும், பாகிஸ்தானில் சிறந்த இயற்பியல் ஆய்வு துறை மாணவருக்கான ‘ஸலாம் அவார்டு” (Salam Award) என்னும் விருது வழங்கப்படுகிறது. 

பாகிஸ்தான் அரசின் பிரதம அறிவியல் ஆலோசகர். 

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி அய்யூப்கான் ஆட்சிகாலத்திலும் பின்னர் சுல்பிகார் அலி பூட்டோவின் ஆட்சிக் காலத்திலும் பாகிஸ்தானிய அரசின் பிரதம அறிவியல் ஆலோசகராக டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் இருந்து வந்தார்கள். 1974 ஆம் ஆண்டு பூட்டோ, அஹ்மதிகளை முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினர் எனப் பிரகடனப்படுத்திய பின்னர் அப்பதவியை ராஜினாமா செய்தார்கள். தமது தாய்நாட்டை அறிவியல் துறையில் முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்த டாக்டர் அப்துஸ் ஸலாம், தாம் சார்ந்ததுள்ள அஹ்மதிய்யா ஜமாத்தை முஸ்லிம் அல்லாதவர்கள் என்று பாகிஸ்தான் நேஷனல் அசம்பிலி பிரகடனப்படுத்திய போது தமது பதவியை துச்சமென மதித்து துறந்தார்கள். பதவியை துறந்தது மட்டுமல்லாமல், அந்த நாட்டை விட்டு வெளியேறி உலக அறிவியல் அரங்கில் மகத்தான சேவை புரிந்தார்கள். அவர்கள் சார்ந்துள்ள அஹ்மதிய்யா ஜமாத்தை முஸ்லிம் அல்லாதவர்கள் என்று பிரகடனப்படுத்திய பூட்டோ, 1979 ஆம் ஆண்டு நீண்ட சிறைவாசத்திற்குப் பிறகு தூக்கிலிடப்பட்டார், அதே ஆண்டு அவரால் முஸ்லிம் அல்லாதவர் என்று கூறப்பட்ட அப்துஸ் ஸலாம் அவர்கள் உலகிலேயே சிறந்த பரிசான நோபல் பரிசைப் பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்களின் சென்னை வருகை. 

டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் 12-1-1981 அன்று சென்னை அஹ்மதிய்யா பிரசார நிலையத்திற்கு வருகை தந்தார்கள். கூட்டத்தில் அவர்கள் உரை நிகழ்த்துகையில் கூறியது மறக்க முடியாத ஒன்று. அவர்கள் தமது உரையில், “அமதிய்யத்தே தாம் பெற்ற பரிசுகளில் எல்லாம் மிக மேலானது” என்று கூறினார்கள். மேலும் அவர்கள் தனது உரையில், கடந்த ஆண்டு தனக்கு நோபல் பரிசு கிடைத்ததைப் பாராட்டி ஸுவீடன் அரசின் தலைமையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், 

“இறைவனது படைப்பில் உம்மால் எந்தக் குறைபாட்டையும் காண இயலாது. மீண்டும் பார்ப்பீராக! (அதில்) ஏதேனும் குறைபாடு உமக்குத் தெரிகிறதா? 

பின்னர் நீர் மீண்டும் மீண்டும் (துருவித் துருவிப்) பார்ப்பீராக; இறுதியில் உமது பார்வை தோல்வியடைந்து களைப்படைந்தவாறு உம்மிடமே திரும்பிவிடும்.(திருக்குர்ஆன் 67:4,5) 

என்ற திருக்குர்ஆன் வசனங்களை எடுத்துக் காட்டி விளக்கினேன். திருக்குர்ஆன் இந்த வசனங்கள் இயற்கையின் இரகசியங்களையும் சட்டங்களையும் ஆராய்ந்தறிந்து அவற்றை மக்களுக்கு எடுத்துரைத்து இறைவன் இருக்கின்றான் என்பதையும் அவனது மகத்துவத்தையும் பொறுப்பு, விஞ்ஞானிகளுக்கு உண்டு என்பதை உணர்த்துகின்றன என்று கூறினேன்” என்று குறிப்பிட்டார்கள். 

டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் அறிவியல் துறையில் ஆற்றிய சாதனைகள் பல புரிந்திருந்தாலும் மார்க்கத் துறையிலும் ஆழ்ந்த கவனம் செலுத்தி வந்தார்கள். திருக்குர்ஆன் அல்லாஹ்வின் சொல்லும், விஞ்ஞானமும் அவனுடைய செயலும் ஆகும் என்றும், திருக்குரானும் விஞ்ஞானமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையல்ல என்றும் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துக் காட்டி வந்துள்ளார்கள். 

டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் அஹமதிய்யா ஜமாஅத்தின் தூய ஸ்தாபகர் இமாம் மஹ்தி (அலை) அவர்களுக்குக் கிடைத்த இறையறிவிப்புகளை உண்மைப்படுத்துபவராக விளங்கினார்கள். ஹஸ்ரத் இமாம் மஹ்தி(அலை) அவர்கள், 

“என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் உலகக் கல்வியில் உயர்ந்த இடத்தைப் பெறுவார்கள். மேலும் இறைவனைப் பற்றிப் புரிந்துக் கொள்வதில் மிகுந்த தேர்ச்சியையும் பெறுவார்கள். இதன் விளைவாக அவர்கள் உண்மையின் ஒளியை பெற்றவர்களாக ஆதாரங்கள் என்ற ஆயுதங்கள் தரித்தவர்களாக – இறை அடையாளங்களுடன் மற்றவர்களின் வாயை அடைத்து விடுவார்கள். இவர்கள் பெற்ற அறிவுத்திறன் என்ற இந்த ஊற்றிலிருந்து மற்ற தேசத்தவர்களும் நீர் அருந்துவார்கள்” என்று கூறியுள்ளார்கள். 

இந்த வாக்கை அஹ்மதிய்யத்தின் புதல்வர் டாக்டர் அப்துஸ் ஸலாம் அவர்கள் உலகின் உயர்ந்த பரிசான நோபல் பரிசினைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், மற்றும் பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்று மேற்கத்திய உலகமும் அவர்களை தலைசிறந்த விஞ்ஞானி என்று ஏற்றுக் கொள்ளும்படி செய்து நிறைவேற்றியுள்ளார்கள். 

இறைவன் அவர்களுக்கு மறுமையில் பேரின்ப வாழ்வு அளிக்க நாம் பிராத்தனை செய்வோம்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.