அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Aug 8, 2014

இறந்தவர்கள் மீண்டும் உலகிற்கு வரமுடியாது


அபூ அப்தில்லாஹ்வின் அபத்தமான கூற்று.

அபூ அப்தில்லாஹ் தன்நூல் பக்கம் 36, 37-இல் திருக்குர்ஆன் 39:42 வசனத்தில் விளக்கியதற்கொப்ப, ஒருவரின் உயிரை 100 ஆண்டுகள் கைப்பற்றி வைத்திருந்து பின்னர் விடுவித்த விபரம் 2:259 வசனத்திலும் அதே போல் சிலருடைய உயிர்களை சுமார் 300 ஆண்டுகள் கைப்பற்றி வைத்திருந்து பின்னர் விடுவித்த விபரம் 18:25 வசனத்திலும் தெளிவுபடுத்தப் படுகின்றன. இதே அடிப்படையில் ஈஸா (அலை) அவர்களின் சில ஆயிரங்களோ பல ஆயிரங்களோ ஆண்டுகள் இறைவன் கைப்பற்றி வைத்திருந்து பின்னர் விடுவிப்பது பற்றி ஈமான் கொண்டவர்களுக்கு எவ்வித சந்தேகமும் எழாது என்று எழுதியுள்ளார். 

நம் பதில்: 

இந்த 5:117,118 வசனங்களில் கூறப்பட்டுள்ள கருத்திற்கும் 2:259, 18:25 என்ற வசனங்களைக் காட்டுவது பொருந்தாது. இப்போது இவ்விரு வசனங்களின் பொருளையும் விளக்கத்தையும் காண்போம். 

வசனம் 2:260 ன் பொருள்: அல்லது கூரை கீழாக விழுந்து கிடந்த ஒரு நகரத்தின் வழியாகச் சென்றவரைப் போல் ஆன ஒருவரைப் பற்றி நீர் கேள்விப்பட்டதில்லையா? அவர் இதன் அழிவிற்குப் பின்னர், இதனை எப்போது அல்லாஹ் உயிர்பிப்பான் என்று கேட்டார். பிறகு அல்லாஹ். அவரை எழுப்பி நீர் எவ்வளவு காலம் இந்நிலையில் இருந்தீர் எனக் கேட்டான். இதற்கு அவர் ஒருநாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதி நான் (இந்நிலையில்) இருந்தேன் என்றார். அதற்கு அவன் ஆனால் நீர் (இந்நிலையில்) 100 ஆண்டுகள் இருந்தீர். எனவே நீர் உமது உணவையும் உமது குடிநீரையும் பாரும். அது கெட்டுப்போகவில்லை. மேலும் உமது கழுதையைப் பாரும். நாம் உம்மை மக்களுக்கு ஓர் அடையாளமாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்துள்ளோம்). மேலும் எலும்புகளைச் சீராக இணைந்த பின்னர் அவற்றின் மீது தசையைப் போர்த்தியுள்ளோம். என்பதையும் பாரும் என்றான். எனவே அவருக்கு இது தெளிவாகிய போது. அவர் அல்லாஹ் எல்லாவற்றிற்கும் ஆற்றல் பெற்றவன் என்பதை நான் அறிவேன் என்றார். 

1. இமாம் பக்ருதீன் ராஸி (அத்தப்ஸீருல் கபீர்), இமாம் அதீருத்தீன் முஹீத் அபூ அப்தில்லாஹ் அபூ ஹைய்யானுள் உந்துலூலி, மௌலான அபுல்கலாம் ஆஸாத் ஆகியோம் 2:259 வசனத்தில் வரும் நூறு ஆண்டுகள் எனபது, நூறு ஆண்டு காலத்தைக் குறிக்காது என்றும், இது இஸ்ரவேல் தூதர் எசக்கியேலுக்கு காட்டப்பட்ட ஆன்மீகக் காட்சி என்றும் கூறுகின்றனர். 

மேலும் முகம்மது பிக்த்தால், மௌலவி முஹம்மது அலி, தாருல் இஸ்லாம் பத்திரிக்கை ஆசிரியர் தாவூத்ஷா ஆகியோர் தாங்கள் எழுதிய திருக்குர்ஆன் தர்ஜுமாக்களில் மேற்கூறிய கருத்துக்களையே கூறியுள்ளார்கள். 

2. அழிந்து கிடக்கும் நகரம் எப்போது உயிர் பெரும் என்று கேட்கிறார். அதற்குப் பதிலாகத் தான் இறைவன் 100 ஆண்டுகள் ஆகும் என்பதை அவரை கனவில் 100 ஆண்டுகள் மரணித்தவராக்கி உயிர்பித்துக் காட்டி அந்த நகரம் உயிர் பெற, மக்கள் வாழுமிடமாக மாற 100 ஆண்டுகள் ஆகும் என்று கூறுகிறான். 

இறந்தவர் மீண்டும் மறுமையில்தான் உயிர் பெறுவார் எனபதும் இவ்வுலகிற்கு மீண்டும் வர முடியாது எனபதும் திருக்குர்ஆன் கூறும் அடிப்படைச் சட்டமாகும். திருக்குர்ஆன் ஏறக்குறைய 16 இடங்களில் இதுபற்றி கூறுகிறது அவையாவன: 39:43, 23:101, 21:96, 44:57, 40:12, 36:32, 36:38, 6:28-29, 2:168, 26:103, 39:59, 32:13, 56:84-87, 36:51, 57:14, 23:17-18, இந்த வசனங்கள் தவிர நபிமொழி (திர்மிதி, இப்னு மாஜா) களிலும் இந்த அடிப்படைச் சட்டம் கூறப்பட்டுள்ளது. அதற்கு மாற்றமாக இறைவன் செய்யமாட்டன். எனவே 2:260 இல் கூறப்பட்ட சம்பவம் ஒரு கனவு என்பது தெளிவாகிறது. 

திருக்குர்ஆன் 21:96 “ஏதேனும் ஓர் ஊரை நாம் அளித்துவிட்டால், அவ்வூரில் வாழ்ந்து வந்தவர்கள் இவ்வுலகிற்குத் திரும்ப வரமாட்டார்கள் என்பது விதிக்கப்பட்டுள்ளது.”

திர்க்குறான் 23:16,17 “பின்னர் நீங்கள் அதற்குப் பிறகு நிச்சயமாக மரணமடைபவர்களே. பிறகு மறுமை நாளில் நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்.” 

திருக்குர்ஆன் 23:100,101 “அவர்களுள் ஒருவருக்கு மரணம் வந்துவிட்டால் அவர் கூறுவார்: என் இறைவா! என்னைத் திரும்ப அனுப்பி விடு. நான் விட்டு வந்த இடமாகிய (உலகத்தில்) நற்செயல்களை நான் செய்வதற்காக (என்னைத் திரும்பவும் அங்கு அனுப்பிவிடு) அது நடக்கக் கூடியதன்று. நிச்சயமாக அது அவன் பெரும் வெறும் பேச்சாகும். அவர்கள் மீண்டும் எழுப்பப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் ஒரு திரையுள்ளது.” 

எனவே இவ்வசனங்களிலிருந்து இறந்த ரூஹ் மீண்டும் உலகிற்கு வர முடியாது என்றும் இது இறைவனின் நியதி என்றும் விளங்குகிறோம். 

இதிலிருந்து நூறு ஆண்டுகள் அவர் மரணித்தவராக இருக்கவில்லை. என்றும் அவருக்குக் காட்டப்பட்ட கனவு, கஷ்பில் 100 ஆண்டுகள் மரணித்தவராகக் காணப்பட்டார் என்றும் விளங்கிக்கொள்கிறோம். 

ஹதீது 1: 

அப்துல்லாஹ் (ரலி) எனும் நபித்தோழர் போரில் வீர மரணம் அடைந்தார். அன்னாரைக் கனவில் கண்ட ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ்வின் மகன் ஜாபிர் (ரலி) அவர்களிடம் அது குறித்து கூறியதாவது. 

உன் தந்தையிடம் அல்லாஹ் உங்கள் விருப்பம் என்ன? கேளுங்கள் தருகிறேன் என்றான். அதற்கு அவர் தான் மீண்டும் உலகுக்குச் சென்று இறைவழியில் போரிட்டு மரணம் அடைய வேண்டும் என்று கூறினார். அதற்கு இறைவன் அது நடக்காது. இறந்தவர் மீண்டும் உலகிற்கு திரும்ப முடியாது என்று விதித்து விட்டேன் என்று கூறினான். (ஆதாரம்: இப்னுமாஜா – நஸயி) 

ஹதீது 2: 

தப்ஸீர் இப்னு கஸீரில் வருகிறது. உயிர்த் தியாகிகளின் உயிர்கள் பச்சை நிற பறவைகளின் வயிறுகளில் இருக்கும். அவை தாம் விரும்பியவாறு சொர்க்கத்தில் உண்டு கழிக்கும். பின்பு அவை அர்ஷின் கீழ் மாட்டப்பட்டுள்ள அலங்கார விளக்குகளில் வந்து அடையும். 

அப்போது உம்முடைய இறைவன் அவர்களைப் பார்த்து உங்களுக்கு ஏதேனும் தேவைகள் உள்ளனவா என்று கேட்பான். அதற்கு அவர்கள் எங்கள் இறைவா! உன் படைப்புகளுள் யாருக்கும் நீ வழங்காதவற்றை எல்லாம் எங்களுக்கு வழங்கியுள்ளாய். அதற்குப் பிறகு எங்களுக்கு என்ன தேவை என்று கூறுவார்கள். 

இவ்வாறு மீண்டும் மீண்டும் அல்லாஹ் கேப்பான். ஏதாவது கேட்காமல் விடமாட்டான் என்று உணர்ந்து எங்களை இவ்வுலகிற்கு (மீண்டும்) அனுப்பி வைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவ்வாறு அனுப்பி வைத்தால் மற்றொரு முறை உனக்காக கொல்லப்படும் வரை உன் வழியில் போராடுவோம் என்று அவர்கள் கூறுவார்கள். இறைவழியில் உயிர்த்தியாகம் புரிவதால் கிடைக்கும் பலன் என்ன என்பதை அவர்கள் கண்கூடாகக் கண்டதே அவ்வாறு அவர்கள் கேட்பதற்குக் காரணமாகும். அப்போது இறந்தவர்கள் மறுபடியும் உலகத்திற்கு அனுப்பபடமாட்டார்கள் என்று ஏற்கனவே நான் முடிவு செய்து விட்டேன் என்று அல்லாஹ் கூறுவான். (தப்ஸீர் இப்னு கஸீர் – பாகம் 2, பக்கம் 253) 

4. கனவு என்ற சொல் 2:260 வது வசனத்தில் இடம்பெறவில்லை என்று கூறுவதாக இருந்தால், கனவு பற்றி திருக்குரானிலும் ஹதீதுகளிலும் கூறப்பட்ட சில இடங்களில் அச்சொல் இடம்பெறவில்லை என்பதை கவனிக்க வேண்டும். 12:5 இல் யூசுப் தன் தந்தையிடம் கூறிய நேரத்தை (நினைத்துப் பார்ப்பீராக). “தந்தையே! நான், பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் கண்டேன். அவை எனக்கு சிரம்பணியக் கண்டேன். சிறையில் அவருடன் இரண்டு வாலிபர்களும் நுழைந்தனர். அவர்கள் ஒருவர் (அவரிடம் நான் என்னை திராட்சையைப் பிழிந்து கொண்டிருப்பதாகக் கண்டேன். (12:37) 

மேற்சொன்ன இரண்டு வசனங்களிலும் கனவு பற்றிக் கூறப்பட்டிருந்தாலும் கனவு என்ற சொல் இடம் பெறவில்லை. எனவே 2:260 வசனம் கனவுக் காட்சியாகும். 

5. அச்சம்பவத்தில் உணவும் நீரும் கேட்டுப் போகாததினால் உண்மையில் 100 ஆண்டுகள் என்பது இல்லை. கொஞ்ச நேரம் தான் என்பதும் கனவில்தான் 100 ஆண்டுகளாகக் காட்டப்பட்டது என்ற உண்மையும் புலனாகிறது. 

6. இந்த வசனத்தில் (2:260) மரணம் என பொருள் தரும் மௌத் என்ற சொல் வந்துள்ளதே எனக் கேட்டால் இந்த மௌத் என்ற சொல் தற்காலிகமாக உயிரைக் கைப்பற்றுதலாகிய தூக்கத்திற்கும் பொருந்தும் என 39:43 வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான். 

மேலும் மொழி வழக்கிலும் உறக்கம், சிறு மரணம் போன்றது என்று கூறப்பட்டுள்ளது. 

இவ்வாறே நபிமொழி வழக்கும் உண்டு1) துஆ பற்றி வரும் நபிமொழிகளிலும் உறங்கும் முன்பும் பின்பும் செய்யும் துஆக்களில் மௌத் என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு உறக்கம் என்ற பொருள். 2) உங்கள் வீடுகளை கபர்களாக (உறங்கும் இடமாக) ஆகிக் கொள்ளாதீர்கள். என்னும் நபிமொழியில் வீடு உறங்குமிடமாக மட்டும் இருக்கக்கூடாது. தொழுகைக்கு பயன்படவேண்டும் என்னும் கருத்து உள்ளது. எனவே 2:260 வசனத்தில் இடம்பெறும் மௌத் எனும் சொல்லுக்கு ‘அவரை தூங்கச் செய்து’ என்பதே பொருள். 

7. தூக்கம் என்பது குர்ஆன் ஹதீது அடிப்படையிலும் நம் அன்றாட அனுபவத்தின் அடிப்படையிலும் கொஞ்ச நேரம் தான் என்பது தெளிவு. 300 ஆண்டுகள் உறங்கியதாக தவறாய்ப் பொருள் கொள்ளப்படுவதால் இதன் உண்மை விளக்கத்தைப் பார்ப்போம். திருக்குர்ஆன் 18:19 இல் நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பதாக கருதுகிறீர். ஆனால் அவர்களோ தூங்கிக் கொண்டிருக்கின்றனர் என்று அல்லாஹ் கூறுகின்றான். 

இவர்கள் 300 ஆண்டுகளாக உறங்கினர் என்று திருக்குரானில் எங்கும் கூறப்படவில்லை. மாறாக 300 மற்றும் 309 ஆண்டுகள் தங்கி இருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தங்கியிருந்த காலத்தை இறைவனே நன்கறிவான் என்று 18:27 வசனம் கூறுகிறது. 

குர்ஆன் ஆகிய நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட மக்களின் உடல்கள் பூமியில் (இவ்வுலகில்) இருந்தன. அனால் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களின் உடலும் 2000 ஆண்டுகளாக பூமியில் இருந்திருக்கும் என்றால் ஒரு வாதத்திற்காக தூக்கம் என்று ஒப்புக் கொள்ளலாம். ஆனால் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களின் உடல் பூமியில் இல்லை. எனவே அவ்வாறு நம்புவதாகவும் இடமில்லை. 

மேலும் திருக்குர்ஆன் 18:19 இல் நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பதாகக் கருதுகிறீர். ஆனால் அவர்களோ தூங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதன் பொருள் சில தலைவர்கள் தமது சமுதாய மக்களை விழிப்புணர்வும், எழுச்சியையும் ஏற்படுத்துவதற்கா தூங்கியது போதும் விழித்தெழுங்கள் என்று கூறியது போலாகும். அக்குகைவாசிகளும் இன்னும் விழித்தெழவில்லை. தூங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதாகும். அதாவது அவர்கள் குகையிலிருந்து வெளியேறும் எண்ணமோ, எழுச்சியோ, இன்னும் உருவாகவில்லை என்பதனைத்தான் அவ்வசனம் உணர்த்துகிறதேயொழிய உடல் உறக்கம் அன்று.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.